Advertisement

கனவுக்குள் காவல் – எ

அலைப்பேசி ஒலியை நிறுத்தி காதுக்கு கொடுத்த ஜீவா, “என்னப்பா வேணும் உனக்கு” என்று மென்மையாகப் பேச ஆரம்பித்தாள்.

அந்தப் பக்கம் என்ன சொல்லபட்டதோ சட்டென்று,”அடேய் வந்தேன்னு வச்சிக்க பிச்சுருவேன் உன்னை. என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசில. நான் வர மூனு நாள் ஆகும். வரும் போது உனக்கு இருக்கு. இப்ப ஃபோன வை டா.” என்று சரமாரியாக பேசிவிட்டு வைத்து விட்டாள்.

அந்த உணவருந்தும் மேஜையில் அமர்ந்து இருந்த மதி, சக்தியை தவிர்த்து மற்ற அனைவரும், உணவை மறந்து அவளைப் பார்த்து இருந்தனர்.

கல்யாண களைப்பில் உறங்கச் சென்று அனைவரும் மாலை எழுந்து விட்டனர்.   அதன் பின் மாலை நேர சிற்றுண்டி பின் கலகலப்பான பேச்சு என்று பொழுது கழிய இப்பொழுது இரவு உணவிற்காக உணவு மேஜையில் கூடியிருந்தனர்.

தேவி, “ஜீவா, என்னாச்சு டா. உன்னை யாரது தொந்தரவு பண்ணறாங்களா”, என்று கரிசனத்தோடுக் கேட்டார்.

“ஆமா சின்ன அத்தை..” என அவள் இழுக்கும் போதே அவள் ஏதோ விளையாட போகிறாள் என அனைவருக்கும் விளங்கிவிட்டது.  எனவே அனைவரும் தங்கள் உணவு தட்டுகளை கவனிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் தேவிதான் அதை உணராமல், “யாருன்னு மட்டும் சொல்லு டா உங்க அத்துக்கிட்ட சொல்லி அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்.” என தீவிரமாக கூறிக் கொண்டு இருந்தார்.

“அவன் என்ன எல்லாம் பண்றான் தெரியுமா அத்தை?சொல்றேன் கேளுங்க.” என பட்டியலிட ஆரம்பித்தாள்.

“நான் கேண்டின் போனா அவனும் வரான்.  சாப்பாடு நிறைய ஆர்டர் பண்ணி அவனே எல்லாத்தையும் சாப்பிட்றான். அதுவும் எனக்கு குடுக்காம. ஆனா எக்ஸாம் எழுதும் போது அவனுக்கு நான் ஆன்சர்ஸ் காட்டனுங்கிறான்.

அவன் லீவ் போட்டா சொல்லவே மாட்டீங்கறான்.  ஆனா நான் மட்டும் அவனுக்கு ஃபுல்லா அப்டேட் பண்ணனும்னு சொல்றான்.  இதெல்லாம் நியாயமா நீங்களே சொல்லுங்க, சின்ன அத்தை.” என தனக்கு ஏதோ பெரிய தீங்கு நடப்பது போல் வெகு தீவிரமாக கூறி முடித்தாள்.

அவள் சின்ன அத்தைக்கு அவள் ஆரம்பித்த சில நொடிகளுக்கு பின் தான் புரிந்தது அவள் விளையாட்டு.

“டேய் பாருடா ரகு, இவளுக்கு ஏதோ பிரச்சினை போலன்னு நினைச்சு நான் கேட்டா, இவ என்னை கிண்டல் பண்றா” என் கோபம் போல் கேட்டார்.

அவர் கேட்ட தோரணையில் அந்த உணவு கூடம் சிரிப்பலைகளால் நிறைந்துவிட்டது.

“அவ ஆரம்பிக்கும் போதே உங்களுக்கு தெரியலையா சித்தி” என சிரிப்பின் ஊடே கூறிய ரகு, “சரி விடுங்க சித்தி, ஏதோ சின்ன பிள்ளை விளையாட்டுக்கு பண்றா ” என்றான்.

“உனக்காக விட்றேன் டா இவளை”

“அப்போ எனக்கு நியாயம் வாங்கி தர மாட்டீங்களா சின்ன அத்தை” ஜீவா பாவமாக முகத்தை வைத்து கொண்டு மீண்டும் தொடர,

“உன்னை இப்ப என்ன பண்றே பாரு” என்று வேகமாக கரண்டியை உயர்த்தினார் தேவி.

“ஐயோ !தாய் குலமே சரண்டர்” என் இரண்டு கைகளையும் தூக்கி காட்ட,

“அந்த பயம் இருக்கனும் ” என செல்ல மிரட்டல் இட்டு விட்டு மதியிடம் திரும்பி, “ஏன் டா மதி, இவ இவ்ளோ சேட்டை பண்றாளே எப்படி இவளை நீங்க சமாளிக்கிறீங்க “. என்றார்.

“இப்ப நீங்க எப்படி சமாளிச்சீங்களோ அதே மாதிரி தான் அத்தை.   என்ன நீங்க ஆக்ஷன் மட்டும் பண்ணீங்க நாங்க முதுகுல ரெண்டு போட்றிவோம். அவ்ளோதான்.”

“கரக்ட்டு.  இவளை அப்படிதான் சமாளிக்கனும்”

உடனே ரகு, ” ஏய் மதி என்ன பாப்பாவ அடிப்பேன்னு சொல்ற.  இனிமே அவ மேல நீ கையெல்லாம் வைக்கக் கூடாது.  என் பாப்பாக்கு யாரும் சப்போர்ட் இல்லைன்னு நினைச்சீங்களா? நான் இருக்கேன்” என்று ஆதரவு கரம் நீட்டினான்.

“கமான் அத்து.  இப்ப என்னை அடிங்க பாக்கலாம், ஹ்ம் ம்ம்” என எல்லாரிடமும் ஒரு பெருமையான பார்வை பார்த்து வைத்தாள்.

“டேய் ரகு .. ” என  தேவி மீண்டும் ஆரம்பிக்க, “போதும் தேவி சின்ன பிள்ளைக்கிட்ட என்னை வம்பு உனக்கு அமைதியா சாப்பிடு” என கௌதமி அவரை மேலும் பேசவிடாமல் தடுத்து அடக்கினார்.

ஜீவா அவருக்கு பலிப்பு காட்ட, அது கௌதமி கண்களில் பட்டு விட்டது. “உனக்கும் அதே தான்.   பெரியவங்க கிட்ட இப்படி தான் நடந்துப்பியா?”, இப்போது ஜீவா கப்சிப்.

தேவி, ஜீவா இருவரை தவிர மற்ற அனைவரும் வாய்க்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தனர்.

அதன் பின் உணவு நேரம் அமைதியாக முடிவுற்றது.  உணவை முடித்து விட்டு அனைவரும் வரவேற்பறையில் வந்து அமர, ரவி ஜீவாவிடம்,   “ஆமா ஜீவா, ரொம்ப நேரமா யாரோ அவனைப் பத்தி பேசுனியே யார் அவன்?” என்று அவள் உரைத்த நபர் குறித்து கேள்வி எழுப்பினான்.

“ப்ரோ நீங்க என்ன கேட்கிறீங்கன்னு எனக்கு தெளிவா புரியுது. அவன் என் நண்பன் ஜேம்ஸ்.  இந்த பதில் போதுமா? இல்லை இன்னும் வேற எதாவது டீடெயில்ஸ் தேவைப்படுதா?”

“இல்லை மா தங்கம். எனக்கு இதுவே போதும்.  இதுக்கு மேல கேட்டா உங்க அத்து என்னைப் போட்டு தள்ளிடுவான்னு நினைக்கிறேன். ஏன்னா அவன் பார்வை ரொம்ப பயங்கரமா இருக்கு. நம்ம வேற பேசுவோம்.”

இந்த சம்பாசனையின் முடிவில் மீண்டும் ஒரு சிரிப்பலை அங்கே.  சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டு இருக்க, இடையில் கௌதமி நாளை கோவிலுக்கு போக வேண்டும் என்பதை நினைவு படுத்தினார்.

மேலும் காலையில் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்னென்ன பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை அலசி விட்டு அனைவரையும் உறங்க போக சொன்னார்.

அனைவரும் கௌதமியின் அதட்டலான பேச்சைக் கேட்டு அமைதியாக உள்ளே சென்று விட்டனர், ரகு மதியை தவிர.

அவர்கள் இருவர் மட்டும் அங்கே அமைதியாக அமர்ந்திருக்க கௌதமியும் அவர்களை எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.

“மதி நீ பகல்ல சரியா தூங்கலன்னு நினைக்கிறேன்.  நீ தூங்கவன்னு தானே உன்னை ரூம்ல தனியா விட்டுட்டு வந்தேன்.  என்னாச்சு மதி உனக்கு தூக்கம் வரலையா?”

“ஆமா ரகு எனக்கு தூக்கம் வரல.  சரி நீங்க ஏன் ரொம்ப டயர்டா இருக்கீங்க.  நீங்களும் தூங்கலையா?   சக்தி ஜீவா கூட சேர்ந்து அரட்டை அடிச்சிட்டு இருந்தீங்களா?”

“என்ன கேள்வி மதி இது?  சக்தியும் ஜீவாவும் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போய்டுவாங்க.  அப்புறம் எப்ப நான் அவங்ககிட்ட பேசுறது. இப்பதானே டைம் இருக்கு பேச”

“அது சரி.  அவங்க ரெண்டு பேரும் ஊருக்கு வந்த அன்னைக்கி உங்களை பத்தி சொன்ன உடனே அவ்வளவு கோவப்பட்டாங்க. அதுக்கப்புறம் நீங்க வந்து ஒரு பத்து நிமிஷம் தனியா பேசி இருப்பீங்களா?.

அப்ப இருந்து நீ கட்டி கிட்டா அவரதான் கட்டிக்கணும்னு எனக்கே கட்டளை போடுற அளவுக்கு ரெண்டும் உங்க ஃபேன் ஆகிடுச்சுங்க.  என்னதான் விஷயம்னு கேட்டா ரகசியம்ன்னு சொல்றீங்க. இப்பவாது சொல்லுங்களேன் ப்ளீஸ் அன்னைக்கு என்ன தான் ஆச்சு.”

“அதுவா மதி…. அது ரகசியம் சொல்றதுக்கு இல்ல”

ரகு இவ்வாறு கூறியதும் அவனைப் பார்த்து மதி முறைத்துக் கொண்டே இருந்தாள்.  “சரி சரி கோச்சிக்காத அதான் ரகசியம்னு சொல்றேன் இல்ல.  அதை அப்படியே விட்றேன்” என்றவன் சாய்வு இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்‌.

பின் மதியின் பக்கமாக தன் வலக்கரத்தை நீட்டி அவளையும் எழுப்பி விட்டு அவள் கைகளோடு தன் கைகளை கோர்த்துக்கொண்டு படிக்கட்டில் ஏற தொடங்கினான்.

இருவருக்கும் இடையே அமைதி மட்டும் நிலவியது. ரகு கடந்த கால சிந்தனையில் இருந்தான்.

—————————————————————————

மதி அன்று தரண் மாளிகையில் கௌதமியை சந்தித்தபோது திருமண விஷயம் இப்போதைக்கு வெளியே தெரிய வேண்டாம் என்பதையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஏனெனில் மதி சென்னைக்கு வந்ததே ஒரு முக்கிய வேலையின் காரணமாக தான்.

ரகு ஒரு பிரபலமான இயக்குனர் மேலும் தரன் குழுமம் மிகவும் பெரிய பெயர் பெற்ற ஸ்தாபனம்.  இப்படி இருக்கையில் ரகுவிற்கும் மதிக்குமான திருமணம் வெளியில் தெரிந்தால் மதியால் தன் வேலையை சுதந்திரமாக செய்ய முடியாமல் போகலாம்.

அந்த காரணத்திற்காக இத்திருமணம் சிறிது நாட்களுக்கு ரகசியமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாள்.

மற்றவர்களுக்கும் அது சரியெனப் பட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின் கௌதமி திருமணம் தரண் மாளிகையிலேயே நடைபெறட்டும் என கூறியவர்.  மேலும் வக்கீலை சாட்சியாக வைத்து திருமணத்தை நடத்தலாம் என்றும், அன்றே அதனை சட்டபூர்வமாக பதிவு செய்திடவும் வேண்டும் என்றும் கூறினார்.

முழு திருமணத்திட்டத்தையும் போட்ட பின் தான் மதி அங்கிருந்து கிளம்பினாள்.

மதி அன்று தரண் மாளிகையில் இருந்து திரும்பியதுமே ஜெனிஃபர் மற்றும் ஜெய் இடம் மேலோட்டமாக தனக்கும் ரகுவிற்கும்மான திருமண விஷயத்தை பகிர்ந்து இருந்தாள்.

ரகு வீட்டினரிடம் என்ன கதையை சொன்னாலோ அதையே இவர்கள் இருவரிடத்திலும் சொன்னாள்.

அதன் பின் திருமண விஷயத்தை இருவரும் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என உறுதியும் வாங்கிக் கொண்டாள்.

மறுநாள் காலை விடியலிலேயே சக்தியும் ஜீவாவும் வந்து இறங்கி விட்டனர்.  அவர்கள் இருவரையும் தனியே அழைத்து ஒன்று விடாமல் அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டாள் மதி.

Advertisement