Advertisement

கனவுக்குள் காவல் -௬

எனக்கென இருந்தது

ஒரு மனசு அதை உனக்கென

கொடுப்பது சுகம் எனக்கு..

எனக்கென இருப்பது ஒரு

உசுரு அதை உனக்கென

தருவது வரம் எனக்கு..

நீ மறந்தால்

என்ன மறுத்தால் என்ன

நீதான் எந்தன் ஒளி விளக்கு

என்றும் நீதான் எந்தன் ஒளி

விளக்கு (எங்கே எந்தன் வெண்ணிலா – வருசமெல்லாம் வசந்தம்)

ரகு மாடியில் இருந்து ஓடி வந்தவன், படிக்கட்டில் காலை வைத்து விட்டு திரும்பி பார்த்தான். மதி தன்னை துரத்தி வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, ஒரு பெருமூச்சுடன் கீழே வரவேற்பு அறையை பார்த்தான்.

அங்கு வீட்டினர் மட்டும் மொத்தமாக அமர்ந்து இருந்தனர். “நல்ல வேளை நம்ம ஓடி வந்தத யாரும் பாக்கலை”, என்று எண்ணியவாறு, கீழே என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே படிக்கட்டில் இறங்கி வந்தான்.

அவன் படிக்கட்டில் கால் வைத்ததில் இருந்து இறங்கி வரும் வரை அந்தப் பாடலின் வரிகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது கூடவே இருவர் வாய் சண்டை இடுவதும் தெரிந்தது.

கடைசி படியில் இருக்கும் போதே, “எல்லாரும் என்ன பண்றீங்க” என்று அழைத்துக் கொண்டே வந்தான்.

“அத்து, இந்த வீடியோலை, இந்த போட்டவ ஆட் பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னா இவ கேட்கவே மாட்றா.  நீங்களே என்னன்னு கேளுங்க”

“இவ சொல்றத கேட்காதீங்க அத்து. அந்த பிக்சர் ஆட் பண்ணா நான் டவுன்லோட் பண்ண ஸாங் சைஷ் விட வீடியோ பெரிசா இருக்கு.  இவ சொன்னா கேட்கவே மாட்றா “

ரகு அவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டுவிட்டு, மற்றவர்களைப் பார்த்தான். எல்லோர் முகமும் இவர்களை சமாளிக்க முடியாத பாவனையும், கூடவே அவர்கள் செயலால் தோன்றிய புன்னகையையும் காட்டியது.

“இவங்களுக்கு தீர்ப்பு நம்ம தான் சொல்லனும் போல” என ரகு எண்ணிக் கொண்டு இருக்க,  “அத்து….” என்று இருவரும் ஒரே நேரத்தில் கத்தி அவன் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பினர்.

“கூல் டா. பாப்பா’ஸ்.  உங்க ப்ராப்ளம நான் ஸால்வ் பண்றேன். உன் ஃபோன என்கிட்ட குடு”, என்று வாங்கி, அந்தப் பாடலை சற்று மெதுவாக இயங்குவது போல் மாற்றினான்.  இப்போது அதன் நேரம் அதிகமாகி விட, இன்னொரு புகைப்படத்தையும் அதில் பொருத்தி,  அந்த கானொளியை இருவருக்கும் திருப்தியாக அமைத்துக் கொடுத்தான்.

“நீங்க சூப்பர் அத்து”, அவன் கண்ணத்தைப் பிடித்து கிள்ளிவிட்டு கானொளியில் மூழ்கி விட்டனர்.

“இது ரொம்ப மோசம்.  இதே ஐடியாவை தான நானும் கொடுத்தேன். அப்ப ரெண்டு பேரும் என் பேச்சைக் கேட்க மாட்டேனீங்க.” ரவி கோபம் போல் கேட்க

“நீங்க எப்ப சொன்னீங்க. எனக்கு கேட்கவே இல்லையே. ஏன் செல்லம் உனக்கு கேட்டுச்சு ” என்று ஜீவா கேட்க “இல்லையே செல்லம்” என  சக்தி கூறினாள்.

அனைவரும் இப்போது இவர்கள் இருவரையும் ஆச்சரியமாக பார்த்தனர். இத்தனை நேரம் இவர்கள் போட்டு கொண்ட சண்டை என்ன இப்போது கொஞ்சிக் கொள்வது என்ன.

ரவி “எப்படி டா மச்சான். உன்னை மாதிரியே இருக்காங்க உன் மச்சினிச்சீஸ்” என்றான்.

“டேய் போடா. கண்ணு வைக்காத.” ரகுவின் பதிலில் இருவரும் ரவிக்குப் பலிப்பு காட்டிவிட்டு மீண்டும் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

“அட பாவிகளா”.

இவர்கள் பேச்சின் முடிவில், ரகு கௌதமியின் பார்வை மாடிக்கு செல்வதை கண்டு மதி உறங்குவதாகக் கூறினான்.

அதைக் கேட்டு கொண்டவர் மற்றவர்களைப் பார்த்து, “எல்லாரும் கொஞ்ச நேரம் தூங்குங்க போங்க” என்றார்.

ஜீவாவும் சக்தியும் தங்கள் அத்துவுடன் சிறிது நேரம் பேச விரும்புவதாக கூற,  அம்மூவரை தவிர அனைவரும் கிளம்பினர்.

ரவியும் கிளம்ப, ரகு அவனை தன்னுடன் அமர வைத்துக் கொண்டான்.

நால்வரும் கீழே ஓர் அறையை ஆக்கிரமித்துக் கொண்டு கட்சேரியை ஆரம்பித்து விட்டனர். இடையில் ஜீவா கேட்டாள்,

“அத்து, எனக்கு ஒரு டவுட். அத்தையை நீங்களும் அக்காவும் எப்படி சமாளிச்சீங்க. அத்தை வெளிய பாக்க விறப்பா இருந்தாலும் சாஃப்ட் நேச்சர் தான்.  அதே சமயம் ரொம்ப ஸ்மாட்டாவும் இருக்காங்க. அதான் அவங்க கிட்ட உன் லவ் லை(lie) எப்படி வொர்க் அவுட் ஆச்சின்னுக் கேட்கிறேன்?”

“உங்க அத்து எங்க சமாளிச்சாரு. எல்லாம் உங்க அக்கா தான் மாஸ்டர் மைன்ட்”

“நிஜமாவா ப்ரோ?”

“ஆமா”

“எப்படி கொஞ்சம் சொல்லுங்களே”

“அன்னைக்கி இவன் உங்க அக்காவ கூட்டிட்டு வரும் போது நானும் இவங்க கூடாதா வந்தேன்……..”

———————————————————–

தரண் மாளிகை முன் வண்டியை நிறுத்தியதும் மதி இறங்க விளைய, ரகு தடுத்தான்.

“மதி”

“என்ன? சொல்லுங்க?”

“நான் நேத்து அம்மா பத்தி சொன்னேன். ஆனா என் ஃபேமிலில இன்னும் சிலர் இருக்காங்க. என் சித்தி தேவி, அவங்க பையன், என் அண்ணன் பரத், அப்புறம் அண்ணி தீப்தி.

சொன்னேன்ல என் சித்தப்பா ஒன் இயர் முன்னாடி இறந்திட்டார்ன்னு, அதுக்கு முன்னாடி வர என் சித்தியும் என்கிட்ட பேசாமதான் இருந்தாங்க.

அப்புறம் என்ன நினைச்சாங்களோ என்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டாங்க. பரத் அப்பவும் இப்பவும் அளவாதான் பேசுவான். அண்ணி.. மத்தவங்க சரியா பேசாதப்போ அவங்க மட்டும் எப்படி நல்லா பேசுவாங்க. பட் ரொம்ப நல்லவங்க. மத்தபடி எந்த பேச்சு வார்த்தையும் இருக்காது.

நேத்து உன்னை பத்தி கேட்கிற எக்ஸைட்மென்ட்ல இதலாம் சொல்லாம விட்டுட்டேன்‌, அதான்…”

“ம்ம்ம்…நல்லா மறந்தீங்க. இப்ப போலாமா?”

“போகலாமே…”

மூவரும் இறங்கி உள்ளே வந்தனர்.  தரண் மாளிகை தன் மாளிகை என்ற பெயருக்கேற்ற அத்தனை பொருத்தமும் பெற்று ஜொலித்தது.

மதிக்கு ரகுவின் செல்வநிலை தெரிந்திருந்தாலும், அந்த நொடி அந்த பிரமிப்பு ஓரு அசௌகர்யத்தைக் கொடுக்கத்தான் செய்தது.

உள்ளே வந்தவர்கள் கண்டது, அத்தனை நேரம் இவர்கள் வரவுக்காக காத்திருந்த அந்த வீட்டின் மூத்த பெண்மணிகள் இருவரும் மதியை வரவேற்கும் விதமாக எழுந்து நின்ற காட்சியைத் தான்.

ரகுவிற்கு இந்த காட்சி அத்தனை மகிழ்ச்சியைத் தந்தது. அவனைப் போல் மதியும் இங்கு நடத்தப்படுவாளோ என்ற பயம் அவனுக்கு இருந்தது. அது இப்போது காணாமல் போகும் போது இன்பம் கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன?

“வாம்மா மதி ” என இருவரும் புன்னகை முகமாய் வரவேற்றனர்.

“ரெண்டு பேருக்கும் என்னோட வணக்கம் அத்தை”, மதியும் நெகிழ்வாகக் கூறினாள். அவளுக்கு உள்ளே வந்த போது இருந்த உணர்வு இப்போது மொத்தமாக காணாமல் போய் இருந்தது.

“உட்காருமா” என்று எதிர் இருக்கையைக் காட்ட அமர்ந்து கொண்டாள். ஆனால் ரகு அவள் அருகில் அமராமல், எதிரில் தன் சித்தி அருகில் அமர்ந்துக் கொண்டான் அவளைப் பார்த்தவாறு.

ரவி அவனை என்ன செய்கிறான் என பார்த்து இருக்க, அவனோ மதி தன் பக்கம் பார்வையை திருப்பியதும் சட்டென்று ஒரு கண்ணை மட்டும் சிமிட்டிக் காட்டினான்.

மதி அவனிடம் இருந்து சட்டென்று பார்வையை பெண்கள் பக்கம் திருப்பிக் கொண்டாள். ரவி “பக்கத்தில ரெண்டு தாய்மார்கள வச்சிட்டு உக்காந்திருக்கான். ஆனா இப்பவும் இவன் பாக்கிற வேலையைப் பாரு” என்று எப்போதும் போல் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

விருந்தோம்பல் எல்லாம் முடிந்த பின் தான் தாய்மார்கள் இருவரும் பேச்சை ஆரம்பித்தனர்.

தேவி, “மேகமதி, உன் பேரு ரொம்ப நல்லா இருக்கு டா. ஆமா நீயும் ரகுவும் லவ் பண்றீங்களாமே? இவன் என்கிட்ட எதுவும் சொல்லல. எனக்கு உங்க லவ் ஸ்டோரி சொல்லேன்” என்றார்

கௌதமி,”சொல்லுவாங்க தேவி. என்னமா சொல்லுவ தான? எனக்கும் கேட்க ரொம்ப ஆசையா இருக்கு சொல்லேன்” என்றவர் குரல் கனீர் என்று இருந்தது.

“சொல்றேன் அத்தை..நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்ன மாதிரி நாங்க மதுரைல மீட் பண்ணோம். அப்புறம் ஃபோன்ல மட்டும் தான் பேச முடிஞ்சிது. ஒரு 2, 3 மாசம் அப்படியே தான் போச்சு. மூனு மாசம் கழிச்சு ஒரு நாள் இவர் எனக்கு கால் பண்ணாரு.

மதுரைல எடுத்த மூவி சக்ஸஸ் ஆகிடிச்சுன்னு சொன்னார். நான் விஷ் பண்ணே. அப்புறம் ஏதோ முக்கியமான விசயம் என்கிட்ட கேட்கனும் அப்படின்னு சொன்னாரு.  நானும் என்னன்னு கேட்டேன்.

உடனே என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா கேட்டுட்டுட்டாரு. எனக்கு அதிர்ச்சல பேச்சே வரல.

நேர்ல மீட் பண்ணும்போது சொல்லலாம்னு நினைச்சேன். பட் எப்ப அது நடக்கும்னு தெரியல.  அதான் இப்பவே சொல்லிட்டேன்.

உனக்கு அப்படி எதுவும் இல்லைன்னாலும் பரவாயில்ல. ஆனா பேசாம மட்டும் இருக்காதன்னு  சொல்லிட்டு கட் பண்ணிட்டாரு.

ஆனா என்னால அதுக்கு அப்புறம் இவர்கிட்ட சரியா பேச முடியலை. நான் அப்போ எந்தப் பதிலும் சொல்லல. இவர் மேலே அப்போ எனக்கு எந்த ஃபீலிங்ஸ் உம் இல்லைன்னு தான் நானும் நினைச்சேன்.

பட் என் வாழ்க்கைல நடந்த அந்த சம்பவம் என் மனசுல இவர் இருக்கார்ன்னு புரிய வச்சிடிச்சு” என்று மதி அமைதியாகி விட்டாள்.

இப்போது மதி என்ன சொல்ல போகிறாள் என ரகுவிற்கு விளங்கி விட, எழுந்து அவள் அருகில் அமர நினைத்தான்.

மதி”வேண்டாம் ரகு அங்கேயே இருங்க ” என்க,

அவன் கேட்காமல் அவள் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான். பார்வையை திருப்பாமல் அவளை மட்டும் பார்த்தவாறு.

இப்போது மதி எந்த தயக்கமும் இல்லாமல், “என் அம்மா அப்பா ரெண்டு பேரும் ஒரு ஆக்சிடன்ட்ல இறந்திட்டாங்க ஒரு ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி.

அப்போதான் எனக்கு புரிஞ்சிது இவர் என் வாழ்க்கைக்கு எவ்ளோ முக்கியம்னு.  நான் இவர்கிட்ட எந்த விசயத்தையும் சொல்லல.

நடுவுல இவர் எனக்கு கால் பண்ணாரு, நான் கொஞ்ச நாள் கழிச்சு பேசுறேன்னு சொல்லி வச்சுட்டேன்.

எனக்கு ரெண்டு தங்கச்சி இருக்காங்க அத்தை.  சக்தி, ஜீவா.  அவங்கள தனியா விட முடியாது இல்ல அந்த காரணத்துக்காக தான் இவர்கிட்ட எதையுமே நான் சொல்லல.

ஆனா நான் சென்னைக்கு வர மாதிரி சூழ்நிலை அமைஞ்சிடுச்சு. வந்த இடத்துல இவரை மீட் பண்ண சான்ஸ் கிடைச்சாலும் தெரியாத மாதிரி இருந்துகிட்டேன்.

நேத்து ஹோட்டல்ல மீட் பண்ணும் போது இந்த வாரத்துக்குள்ள எனக்கு கல்யாணம் நடக்கணும் நீ என்ன பதில் சொல்ல போறேன்னு கேட்டாரு.

இவரை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க எனக்கு மனசு வரல. அதனால என் மனசுல இருக்குற உண்மைய இவர்கிட்ட ஒத்துக்கிட்டேன். அப்போதான் அம்மா அப்பா விசயத்தையுமே சொன்னே.

அதுக்கப்புறம் நடந்தது  எல்லாம் உங்களுக்கே தெரியுமே அவ்வளவுதான் அத்தை. “

“சாரிமா எங்கள மன்னிச்சுடு உங்க அம்மா அப்பா பத்தி எங்களுக்கு தெரியாது”.

“மன்னிப்பெல்லாம் வேண்டாம் அத்தை என் அப்பா அம்மா என்ன விட்டுப் போகும்போது எனக்கு என் வாழ்க்கை எதுன்னு காட்டிட்டு தான் போயிருக்காங்க.

நான் சந்தோஷமா இருந்தாலே அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க.  அதுவே எனக்கு போதும்”.

“தங்கச்சிங்க இப்ப என்னம்மா பண்றாங்க?”

“மதுரையில தான் இருக்காங்க அத்தை. அவங்களுக்கான பாதுகாப்பு செஞ்சிட்டு தான் இங்க வந்தேன்.

அவங்களுக்கு இன்னும் விஷயம் தெரியாது.  நேத்து கால் பண்ணி ஒரு வாரம் லீவு எடுத்துக்கிட்டு வர சொன்னேன்.   நாளைக்கு காலையில இங்க வந்துருவாங்க.  அதுக்கப்புறம் தான் உண்மைய சொல்லணும்.”

“அவங்களுக்கு நானே எடுத்து சொல்லி புரிய வைக்கிறேமா நீ கவலைப்படாத”

 “இல்லத்த அவங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் தான் பேசணும் அதுதான் சரியா இருக்கும்.

அப்புறம் அத்தை ஒரு முக்கியமான விஷயம் என் தங்கச்சிங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிற பொறுப்பு என்னோடது அதனால…..”

“நீ இப்படி பேசுறதுக்கு தயங்குற ஆள் மாதிரி தெரியல என்ன சொல்ல வந்தியோ சொல்லி முடி”

“ஒன்னும் இல்ல அத்தை.  அவங்கள பார்த்துக்கிற விஷயத்துல நீங்க எந்த தடையும் சொல்லக்கூடாது.  அவ்ளோதான்.”

“இங்க பாருமா எனக்கு ரெண்டு பசங்க அந்த ரெண்டு பசங்களும் ரெண்டு மகள்களை  எனக்கு கூட்டிட்டு வருவாங்கன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்.

ஆனா இப்போ எனக்கு உன் உபயத்துல நாலு மகள்கள் கிடைக்க போறாங்க. நீ என்னடானா என் மகள்கள் விஷயத்துல தலையிடக்கூடாதுன்னு சொல்ற”

மதி அவர் பேச்சை கேட்டதும் சின்ன நகைப்போடு, ” உங்க பிள்ளை மாதிரியே பேசுறீங்க அத்தை”, என்றாள்.

இவ்வளவு நேரம் மதியின் ஒவ்வொரு பேச்சிற்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகளால் வயப்பட்டு கொண்டிருந்த ரகு, அவளின் கடைசி வாக்கியத்தில் தாயை திரும்பி பார்த்தான்.

ஆனால் கௌதமியின் பார்வை மதியைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை.

அச்சூழலில் நிறைந்திருந்த அமைதியை சற்று மாற்றும் விதமாக கௌதமி தன் குரலை செறுமி கொண்டு பேச ஆரம்பித்தார்.

“இன்னைக்கே கல்யாண தேதி மத்த விஷயத்தை பத்தி எல்லாம் உன்கிட்ட பேசலாம்னு நினைச்சேன்.  ஆனா, இப்போ உன் தங்கச்சிங்க இங்க வந்ததுக்கு அப்புறம், நம்ம இந்த விஷயத்தை பத்தி எல்லாம் பேசலாம் தோணுது.

நீ ஒன்னு பண்ணு காலையில உன் தங்கச்சிங்க இங்க வந்த உடனே அவங்க கிட்ட பேசிட்டு,  மதியத்துக்கு மேல கிளம்பி இங்க வா.  அதுக்கப்புறம் நம்ம பேசிக்கலாம் சரியா.

எல்லாருக்கும் இது சம்மதம் தானே?”.

எல்லோருடைய சம்மதமும் பெற்ற பின்,  இரண்டு மாமியார்களும் சேர்ந்து தங்கள் மருமகளுக்கு ஒரு பெரிய விருந்து வைத்த பின்னே அவளை அனுப்பி வைத்தனர்.

————————————————————–

   “இதுதான் அன்னைக்கு நடந்துச்சு. இதுல உங்க அத்துவோட ரோல் என்ன இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்?” என்று ரவி முடிக்க,

ஜீவா அந்த முக்கியமான சந்தேகத்தை கேட்டாள், “ஆமா இந்த சீன்ல நம்ம பரத் மாமாவும் தீபி அக்காவும் எங்க போனாங்க”

இதனைக் கேட்ட ரவி மேல்முச்சு கீழ் மூச்சு வாங்க அவளை முறைக்க ஆரம்பித்து விட்டான்.

“ஏன் ப்ரோ என்னை இவ்ளோ பாசமா பாக்குறீங்க?” என பவ்யமாக கேட்டாள் ஜீவா.

“உனக்கு நான் சொன்ன இவ்ளோ பெரிய பிளாஷ்பாக்ல இந்த டவுட்டு தான் வந்துச்சா”

“சொல்லுங்க ப்ரோ”

“தீப்தி அண்ணி வளைகாப்பு முடிஞ்சு அவங்க அம்மா அப்பா வீட்ல தான் இருந்தாங்க.  இப்ப கல்யாணத்துக்கு தான் இங்க வந்திருக்காங்க.

பரத் அண்ணே எப்போவும் ஆபீஸ்ல தான் இருப்பாரு.”

“ஓஹோ..சரி சரி.”

“உன் மச்சினிச்சிக்கு கொழுப்பை பார்த்தியா டா ரகு”

இவர்கள் இருவரின் உரையாடலையும் கவனித்துக் கொண்டிருந்த ரகுவும் சக்தியும் பலமாக சிரித்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் இருவரின் சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்த மற்ற இருவரும் கூட சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

சிரித்து முடிக்கையில் சக்தியின் முக பாவம் சற்று தீவிரமாக மாறியது. “அத்து உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். சொல்லட்டா?”.

“என்ன கேள்வி இது?  சொல்லுடா”

“அக்காக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் வாய்விட்டு சொல்லி பழக்கமே இல்லை.  அப்பா அம்மா இறந்தப்ப கூட அவ பெருசா அழுத மாதிரி நான் பாக்கல.  அதனால அவளை கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க அத்து.”

அவளைத் தொடர்ந்து ஜீவாவும் “ஆமா, அத்து அவ மனசுல எதையோ போட்டு உருட்டிக்கிட்டு இருக்கா. அது என்னன்னு தான் சுத்தமா புரியல.  நீங்க அது என்னன்னு கொஞ்சம் பாருங்க” என்றாள்.

“ஹே!.. மை டியர் பாப்பா’ஸ் அவள பாத்துக்குறது மட்டும் இல்ல,  உங்கள பாத்துக்கிறதும் என் பொறுப்பு தான்.  அதெல்லாம் கவலையே படாதீங்க மூணு பேரையும் நான் ரொம்ப நல்லா பாத்துக்குறேன், ஓகே?”

“ஓகே…” இருவரும் ஒன்று போல் கூறினர்.

“சரி, ஓகே… நமக்கு இந்த சீரியஸ் மோட்லாம் செட் ஆகாது. நம்மை நிறைய வீடியோஸ் எடிட் பண்ணலாம்.  அந்த வீடியோஸ் எல்லாத்தையும் ரிசப்ஷன் அப்போ பிக் ஸ்கிரீன்ல பார்க்க செம்மையா இருக்கும்”

இப்படி அந்த திருமணநாள் அவர்களுக்குக் கொண்டாட்டமாக நகர்ந்தது.

காவல் புரிவா(ள்)ன்.

மகா ஆனந்த் ✨

Advertisement