Advertisement

 கனவுக்குள் காவல் – ௪

பூச்சூட பூ வேணுமா

பூ இங்கே நீதானம்மா

அடி கல்யாண ஊா்கோலமா

இனி எப்போதும் காா்காலமா……!(காதலுக்கு மரியாதை).

     “உங்களுக்கு 90s ஷாங்ஸ்னா ரொம்ப பிடிக்குமோ?, மதி பின்னணியில் இசைத்துக் கொண்டிருந்த பாடலை கவனித்து கேள்வி எழுப்பினாள்.

    “80s, 90s ரெண்டும்”, ரகு தன் முகத்தில் இருந்த ஈரத்தை பூந்துவாலையால் துடைத்தவாறு பதிலளித்தான்.

   “அன்னைக்கி கேரவன் உள்ளே நாங்க வரும்போதும் கேட்டுச்சு, அப்புறம் ஹோட்டல்ல, இப்ப இங்க எல்லா இடத்திலையும்  நான் பாக்கும் போது 90s ஷாங்ஸ் தான் ஓடுது அதான் கேட்டேன்.”

   “நான் நிறைய பேசுற ஆளு, இப்ப கொஞ்ச வருஷமா நான் ஃப்ரீயா பேசுறதே கம்மி ஆகிடிச்சா. அதான் எப்பவும் பாடல்களோட நேரத்தை போக்குறேன்.”

  “ஓ..”

மதி அப்படி சொன்னதும் ரகு நகைக்க ஆரம்பித்து விட்டான்.  அதற்கு மதி என்ன என வினவ, “எப்பவும் இந்த “ஓ”வ விடமாட்டியா?”.

    “மாட்டேன்”, மதி புருவத்தை உயர்த்தி கூறினாள். ரகு முகத்தில் புன்னகை குறையவே இல்லை.

   “சரி, நீ ட்ரெஸ் சேன்ஜ் பண்ணலையா?”

   “பண்ணனும். கொஞ்சம்  டையடா இருக்கு”

   “முகூர்த்தம் காலையில் ஆறு மணிக்கு வச்சா அப்படி தான் இருக்கும்.  நீ  ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்து படுத்து நல்லா தூங்கு. உன்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. டின்னர் சாப்பிட எந்திருச்சா போதும்.”

     “அப்ப மட்டும் தூக்கம் வந்திருமா?” தனக்குள் பேசுவதாக நினைத்து சற்று சத்தமாக கூறிவிட்டாள்.

    ” ஏன் தூக்கம் வராது? டையடா இருக்குன்னு சொன்ன?”

   “அது….. ஒன்னுமில்லை…..புது இடம்ல.  அது மட்டும் இல்லாம திடீர்னு ஒரு நாள் நீங்க என் முன்னாடி வந்து பேசுனீங்க. அதுல ஆரம்பிச்சு எல்லாம் வேகம் தான். ஏன் இந்த கல்யாணம் கூட ரொம்ப வேகமா முடிஞ்சிடிச்சு.  அதான் சொன்னேன்”

     “மதி, நம்மளவிட சின்ன பசங்க எல்லாம் இந்த வயசில அவுங்க குழந்தைய ஸ்கூல்க்கு அனுப்பிட்டு இருப்பாங்க. நமக்கு இப்போதான் கல்யாணமே ஆகிருக்கு. நீ என்னன்னா இதையே வேகம்னு சொல்ற”, என்றவன் தலைமேல் சட்டென ஒரு  தலையனை வந்து விழுந்தது.

விழுந்த நொடி அறையை விட்டு வெளியேறி கதவை அடைத்துக் கொண்டான்.  அவன் வெளியேறியதும் அவனை துரத்தைத் தயாரான மதி மீண்டும் கட்டிலில் அமர சென்ற நேரம், “மதி…….” என பலமான சத்தத்தில் பதறி எழுந்து நின்றுவிட்டாள்.

“இப்ப எதுக்கு கத்திறீங்க?” நெஞ்சில் கை வைத்து சற்று படபடப்பு குறைய கேட்டாள்.

      “பயந்திட்டியா? ஸாரி, நல்லா தூங்கு. ஸ்வீட் ட்ரீம்ஸ். இதுக்கு அப்புறம் நீ நல்லா தூங்குவ. இதை சொல்ல தான் மறுபடியும் வந்தேன்”, என்றவனை முறைத்து பார்க்க, மீண்டும் கதவடைத்து விட்டு ஓடிவிட்டான்.

ரகுவின் செயலால் உதட்டில் படர்ந்த புன்னகையுடன் உடை மாற்ற உள் அறைக்கு சென்றாள் மதி.  அங்கு இருந்து ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை சில நிமிடங்கள் பார்த்தவாறு நின்றுவிட்டாள்.

சிவப்பிற்கும்  இளஞ்சிவப்பிற்கும் இடையே ஓர் நிறத்தில் இருந்தது அந்த பட்டுச்சேலை. தங்க சரிகையால் ஆன ஓரங்கள் எல்லாம் அன்னப்பறவையின் வீற்றிடமாக ஒளிர்ந்தது.

இரண்டே நாட்களில் வடிவமைப்பை உறுதி செய்து புடவையை நெய்யும் இடத்தில் இருந்து கையோடு வாங்கி வந்திருந்தார், கௌதமி.

அதன் விலையை விட அதற்காக அவர் மேற்கொண்ட சிரமம் தான் பெரிதாக தெரிந்தது மதிக்கு. புடவை மட்டுமல்ல உச்சி முதல் உள்ளங்கால் வரை அவள் அணிந்து இருந்த ஆபரணங்கள் அனைத்திற்கும் பின்னும் ஓர் கதை இருந்தது.

அதிலும் குறிப்பாக, மதியின் இரண்டு கைகளிலும் மின்னிக் கொண்டு இருந்த அந்த வைரம் பொருந்திய வளையல்கள். அவை அந்த நிகழ்வை நினைவு படுத்தியது.

கௌதமி ஒவ்வொரு ஆபரணத்தையும் தொட்டு தடவி அத்தனை பரிவோடு மதி கையில் கொடுத்தார்.  ஆனால் அந்த வளையல்களை மட்டும்,  கையில் எடுக்கும் போதே அவர் கண்கள் கலங்கி விட்டிருந்தது.

அவரையே பார்த்து இருந்த மதி, “நீங்க ஆல்ரெடி ஒரு செட் வளையல் குடுத்திட்டீங்க. இது வேற ரொம்ப கணமா இருக்கமாதிரி இருக்கு, இதை நீங்களே போட்டுக்கோங்களேன்”,  என்றாள்.

அதற்கு கௌதமி, “இது எங்க அப்பா அவர் பேத்திக்கு வாங்கினது. அதாவது உனக்கு வாங்கினது”, என்றவாறு அவரே மதியின் இரண்டு கைகளிலும் அதனை அணிவித்தார்.

புடவை, வளையல் என பார்த்துக் கொண்டு இருந்த மதியின் பார்வை இப்போது கழுத்தில் இருந்து நீண்டு மார்புக்கு சற்று கீழே தொங்கிக் கொண்டு இருந்த அந்த மாங்கல்யத்தில் விழுந்தது.

அதைக் கையில் எடுத்து பார்த்தவளின் நினைவு அதைக் கட்டியவனிடம் சென்றது. அவனுடன் ஏற்பட்ட சந்திப்புகளும் நினைவில் ஊஞ்சல் ஆடியது.

                 ———————————————————————–

  அன்று தன் உடன் பணி புரியும் சாம்மின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் பேட்டி எடுக்கவிருந்த ரகுவை மதி பேட்டி எடுக்க சென்றாள். அவள் பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தான் செல்ல வேண்டி இருந்தது.

  அதனால் சற்று கடுப்புடன் தான் வந்தாள்.  அங்கு செல்ல நேரம் எடுத்தாலும், வேலை விரைவிலேயே முடிந்துவிட்டது.

பேட்டி முடிந்து கிளம்ப தயாரான நேரம், “இவ்வளவு நேரம் நீங்க என்னைக் கேள்வி கேட்டீங்க, இப்ப நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?”, என்றான் ரகு‌.

“என்ன கேள்வி சர்?”, மதி புன்னகையுடன் கேட்டாள்.

“உங்க பேர் என்ன மேடம்?”, மதி ரகுவை கேட்ட அதே தோரணையில் கேட்டான் ரகு.

மதி சட்டென்று சிரித்து விட்டாள். பின் “மேகமதி ஞானவேல்”, இப்போது ரகுவின் தோரணை மதியிடம் வந்திருந்தது.

அங்கு இருந்த நால்வரும் இப்போது மொத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.  சிரிப்பின் முடிவில்  மதி,”ஸாரி சர், வந்ததும் உங்ககிட்ட இன்ட்ரோ ஆகிருக்கனும். பட் ஜெய் பண்ண அலம்பல்ல அத மறந்திட்டேன்” என்றாள்.

அதன் பின், மதி மற்றும் ஜெய் இருவரும் மற்ற இருவரிடமும் முறையாக விடைப்பெற்று அங்கிருந்து கிளம்பினர்.

மதி வெளியே வந்து வாகனத்தில் ஏறும் போது தான் தன் கழுத்தில் இருந்த வெள்ளி சங்கிலியை காணவில்லை என்பதை உணர்ந்தாள். ஜெய்யிடம் உரைத்து விட்டு கடைசியாக எப்பொழுது சங்கிலியை பார்த்தோம் என நினைவு கூற முயற்சி செய்து கொண்டே மீண்டும் கேரவன் அருகில் சென்றாள்.

கீழேப் பார்த்து கொண்டே சென்றவள், கேரவன் அருகிலேயே சங்கிலி கிடப்பதைக் கண்டு அதை எடுத்துக் கொண்டு திரும்பும் நேரம், ரகு யாரிடமோ கத்தும் சத்தம் கேட்டது.

கேரவனில் இருந்து சற்று தள்ளி நின்று, யாரோ ஒருப் பெண்ணைத் திட்டிக்கொண்டு இருந்தான். முகத்தில் அத்தனை கோபம். அவன் இவளை கவனிக்கவில்லை.  ஆனால் மதிக்கு அவன் முகம் நன்றாக தெரிந்தது.

“இப்ப இப்படி சொன்னா என்னம்மா அர்த்தம். நான் உன்கிட்ட நீ  ஜாயின் பண்ணும் போதே என்னம்மா சொன்னேன்?  பாதில போறதா இருந்தா ஜாயின் பண்ணாதீங்கன்னு சொன்னேன்ல?  இப்ப…” மேலே ஏதும் கூறாமல் பாதியில் நிறுத்திவிட்டு, ரவியின் கையில் இருந்த தண்ணீர் குடுவையை வாங்கி அதில் இருந்த நீரை அருந்தினான்.

பின் சற்று குரலை இறக்கி, “இப்ப கடைசியா என்ன சொல்ற பிரியா?” அமைதியாக அந்த பெண்ணிடம் வினவினான்.

சரியாக அப்போது மதியின் கையில் இருந்த  அலைப்பேசி அதிர் வலைகளை ஏற்படுத்த, அதை காதுக்குப் குடுத்துக்  கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அதன் பின் மதி அவனை அன்று இரவு அந்த விடுதியில் தான் சந்தித்தாள்.  அங்கு,  தான் பேட்டி எடுக்க வந்தவரின் அறையைக் கண்டறிந்து, தன் பணியைத் தொடங்கிய அரை மணிநேரத்தில் அழைப்பு மணி ஓசை எழுப்பியது.

அந்த அழைப்பிற்கு சொந்தக்காரன் ரகு தான். மதி பேட்டி எடுக்க வந்திருந்த நபரின் மனைவி தான் சென்று கதவை திறந்தார். திரும்பி வரும் போது ரகுவும் உடன் வந்தான். வந்தவன் மதியிடம் அவசரமாக பேச வேண்டும் என்றான்.

அவன் முகமே அவனுக்கு அவசரமாக ஏதோ உதவி தேவை என்பதை உணர்த்த, தன் பேட்டியை பத்து நிமிடத்தில் முடித்துக் கொண்டு அவன் அறைக்கு வந்து சேர்ந்தாள், மதி.

ரகு ஆரம்பித்ததும் முதல் கேள்வியாக, ” என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?” என்று தான் கேட்டான்.  மதி அப்போது அமைதியானவள், வெகு நேரத்திற்கு பிறகு தான் பேச ஆரம்பித்தாள்.

அதன் பின் ரகு திருமண செய்ய கேட்ட காரணங்கள் அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு,  யோசித்துக் கொண்டு இருந்த சமயம் தான் அந்த மூவரும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.

கௌதமி முதலில் மதியை கண்டு, “யார் இந்த பொண்ணு ரவி?” என்று தான் கேட்டார்.

அதற்கு ரகு, “எனக்கு தெரிஞ்சவங்க, ஒரு வேலை விசயமா இங்க வந்திருந்தாங்க. நான் தான் கூப்பிட்டு பேசிட்டு இருந்தேன்”, என்றான்.

அந்த பதில் கௌதமிக்கு பிடிக்கவில்லை என்பது அங்கிருந்த அனைவருக்கும் அவர் முக பாவனையிலேயே தெரிந்தது.

இப்போது மதி, “வணக்கம் ஆன்ட்டி, நான் மேகமதி, ஜெர்னலிஸ்ட். நான் இங்க ஒருத்தர பேட்டி எடுக்க வந்தேன். முடிஞ்சு வெளிய வரும் போது இவர பாத்தேன். அதான் பேசிட்டு இருந்தோம்”, என்றாள்.

கௌதமி வேறெதுவும் பேசாமல், “ரவி, நான் அவன்கிட்ட முக்கியமான விசயம் பேசணும் இப்பவே”, என்றார்.

“பேசுங்க”, ரகு கூற, “ஃபேமிலி விசயம் ரவி” என்றார் அவர்.

“மதி இருக்கும் போது நீங்க எந்த ஃபேமிலி விசயமா இருந்தாலும் பேசலாம்.  பேசுங்க.” ரகு இவ்வாறு கூறவும் அனைவரின் பார்வையும் ஒரே நேரத்தில் மதியிடம் சென்று மீண்டும் ரகுவிடம் திரும்பியது.

         மூவரும் இக்கூற்றில் ஆளுக்கு ஒன்றை ஊகித்துக் கொண்டனர். கௌதமி இப்போது வேறு எதைப்பற்றியும் பேசாமல் நேராக விசயத்திற்கு வந்தார்.

         “ரவி, இவன் ஒரு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணத்தைப் பத்தி பேசும்போது நான் எந்தப் பொண்ண சொன்னாலும் கட்டிக்கிறேன்னு சொன்னான். இப்ப நான் ஜான்விய இவன் கட்டிக்கனும்னு சொல்றேன் கட்டிப்பானா?”

“அது ஒரு வருஷத்துக்கு முன்னாடி, இப்பவும் அத சொல்லி ஒரு பொண்ணக் கட்டிக்க சொன்னா எப்படி முடியும்?”

“நான் ஏதோ ஒரு பொண்ணக் கட்டிக்க சொல்லல ரவி, அவன் முன்னாடி விரும்பினப் பொண்ணதான் கட்டிக்க சொல்றேன்”.

“அதான் நீங்களே சொல்லிடீங்களே முன்னாடி விரும்பினப் பொண்ணுன்னு, இப்ப ஜான்வி மேல எனக்கு எந்த இன்ட்ரஸ்டும் இல்லை “

“இது நான் உனக்கு பாத்திருக்கிற பொண்ணு,  இப்ப அப்படி மட்டும் நினைச்சுக்கோ. இந்த கல்யாணத்தில உனக்கு சம்மதமா? இல்லையா ? அத மட்டும் சொல்லு”

“எனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம் இல்லை”, எனத் தெளிவானக் குரலில் மதியிடம் இருந்து பதில் வந்தது.

அனைவரும் அவளை குழப்பமும் அதிர்ச்சியுமாய் பார்த்தனர் ஒருவனை தவிர. ரகு திரும்பி மதியைக் பார்த்தான். அவள் கண் அசைவிலேயே ஏதோ கூற விளங்கிக் கொண்டான்.

“நீ ஏன்மா இந்த கல்யாணத்திக்கு சம்மதம் சொல்லனும்?” கௌதமி அதிர்ச்சியில் இருந்து விலகி கேள்வி எழுப்பினார்.

“உங்கப் பையன கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு நான் தாங்கிற பட்சத்தில, நான் தான  சம்மதமா, இல்லையான்னு சொல்ல முடியும்”

“ரகு என்னைத் தவற யாரையும் லவ் பண்ணது இல்லை”, முதல் முறையாக ஜான்வி வாய் திறந்தாள்.

“உங்களுக்கு எப்படித் தெரியும் மிஸ்.ஜான்வி, ரகு யாரையும் லவ் பண்ணலன்னு?”

“அது…நான் அவரை நாலு வருஷமா ஃபாலோ பண்றேன். எனக்கு நல்லாத் தெரியும் எனக்கு அப்புறம் அவர் லைஃப்ல யாரும் இல்லைன்னு “

“முத நான் உங்ககிட்ட ஒரு விசயத்தை க்ளியர் பண்ணனும் ஜான்வி, ரகு முதல்ல உங்கள லவ்வே பண்ணலை. அது அந்த வயசுல வர ஒரு ஈர்ப்பு அவ்ளோதான். ரகு நீங்க விட்டிட்டு போனதுக்கு அப்புறம் உங்களை எப்பவும் மிஸ் பண்ணதில்லை. வேணும்னா கேட்டுப் பாருங்க”

ரகுவிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது, “நான் உன்னை எப்பவும் மிஸ் பண்ணதில்லை ஜான்வி. எனக்கு உன் மேல லவ் இல்லைன்னு சீக்கிரமே எனக்கு புரிஞ்சிடிச்சு. அதனால தான் நீ திரும்பி வந்தப்பக் கூட நான் தெளிவா உன்கிட்ட எனக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னே”.

ஜான்வி மீண்டும், “இல்லை ரகு, நான் நம்ப மாட்டேன்.  நீ என் மேல் இருக்கக் கோவத்தில பொய் சொல்ற. அது மட்டும் இல்லை நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிருக்கவே முடியாது. அப்புறம் எப்படி லவ் பண்ண முடியும். “

“கூல் மிஸ். ஜான்வி. அமைதியா இருங்க. நாங்க எப்படி மீட் பண்ணோம்னு சொல்றேன். கேட்டிட்டு பேசுங்க.” என மதி ஆரம்பித்தாள்.

“சிக்ஸ் மந்த்ஸ் பேக், ரகு மதுரைக்கு ஒரு சூட் வந்தாரு.  அப்போதான் நான் இவரை மீட் பண்ணேன். ஒரு ரிப்போர்ட்டர் அன்ட் டைரக்டர்க்கு இடையில் நடக்குற ஒரு சாதாரண மீட்டிங்‌ தான் அது. நம்பர் கூட ஸேர் பண்ணிக்கிட்டோம்.

அதுக்கு அப்புறம் ரகு அங்கிருந்து கிளம்பிட்டார். ஆனா,  அடிக்கடி எனக்கு கால் பண்ண ஆரம்பிச்சாரு. அப்படிதான் நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சோம். மொத்தமே மூனு தடவைதான் மீட் பண்ணிருக்கோம். அதனாலதான் யாருக்கும் தெரியலை”

இப்போது ஜான்வி கண்கள் கலங்க, “இப்பக் கூட என்னால நம்ப முடியலை. பட் ஒரு விசயம் மட்டும் எனக்கு தெளிவா புரிஞ்சிடிச்சு. ரகு இனிமே என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்” என கூறிவிட்டு, கௌதமியிடம் திரும்பி,

“சாரி ஆன்ட்டி, இதை விட்டா எனக்கு ரகுவைக் கல்யாணம் பண்ணிக்க வேற சான்ஸ் கிடைக்காதுன்னு தான் இவ்ளோ அவசரமா உங்களை மீட் பண்ணி சம்மதம் வாங்கினேன்.

      ரகு கிட்ட கேட்கிறேன்னு நீங்க சொல்லவும், அதையும் உடனே பண்ண வைக்க இங்க கூட்டிட்டு வந்தேன். பட் ரகு எப்பவும் என்னை மன்னிக்க மாட்டார்ன்னு எனக்கு புரிஞ்சிடிச்சு. உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்க சாரி ஆன்ட்டி”, என்றாள்.

       “மன்னிப்பு எல்லாம் வேண்டாம் மா. நீ ரொம்ப நல்ல பொண்ணு. உன்னை கட்டிக்க அவனுக்கு தான் குடுத்து வைக்கலை. “

       “சரி ஆன்ட்டி, நீங்க பேசிட்டு வாங்க. நான் கிளம்பிறேன்.”

     “இல்லை மா. நான் தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். நானே உன்னை வீட்டில் ட்ராப் பண்றேன்.”

    “இல்லை ஆன்ட்டி, நீங்க இவங்க கூட பேசனும்ல. நீங்க பேசிட்டு வாங்க.”

“நான் நாளைக்கு இவங்க கிட்ட பேசிக்கிறேன்.  ரவி, இந்த பொண்ண அவ தங்கியிருக்க இடத்தில பத்திரமா ட்ராப் பண்ண சொல்லு. இந்த நேரத்தில் எதுவும் பேச வேண்டாம். காலைல இவன் வேலைய முடிச்சிட்டு வரும் போது இந்தப் பொண்ணையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லு.” என்று ரவியிடம் கூறியவர்,

“அப்புறம்  மேகமதி,  நாளைக்கு கண்டிப்பா வீட்டுக்கு வா கல்யாணத்தைப் பத்தி பேசனும். உன்  அம்மா அப்பா கிட்டேயும் நான் பேசனும்.  அவங்களை மீட் பண்ணவும் ஏற்பாடு பண்ணுமா. சரி நான் வரேன்.” என்று மதியிடமும் கூறிவிட்டு சென்றார்.

கௌதமி ஜான்வியுடன் வெளியேறியதும், ரவி ரகுவை பார்த்து முறைக்க ஆரம்பித்து விட்டான். ஆனால் ரகு அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக மதியிடம், “மதி வா நான் உன்னை ட்ராப் பண்றேன்” , என்று கூறிக் கொண்டு இருந்தான்.

அதற்கு ரவி, “டேய், இப்ப நீ இவங்களை கூட்டிட்டு வெளிய போனா  மீடியா கிட்ட மாட்டிப்ப? என்று எச்சரித்தான்.

“ஆமா, அது வேற இருக்குல்ல..என்ன பண்ணலாம்…ம்ம்ம்…..உன் கார் கீ குடு”, என்றவாறு ரவி கையில் இருந்ததைப் பறித்துக் கொண்டு கதவை திறக்க சென்றான்.

இதனைக் கண்ட மதி ரவியிடம், “மிஸ்டர். ரவி, அவர் திரும்பி வந்து உங்க கிட்ட எல்லாம் சொல்லுவார். வெயிட் பண்ணுங்க. நாங்க ரெண்டு பேரும் இந்த ட்ராவல் டைம்ல தான் சில விசயங்கள் பேச முடியும். வரோம். மீட் யூ டுமாரோ” என்றாள்.

ரவி சற்று கோபம் தனிந்து, இவர்கள் இருவரும் கதவு வழி வெளியேறுவதைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

                                                                                      காவல் புரிவா(ள்)ன்.

                                                              மகா ஆனந்த் ✨

Advertisement