தன்மகள் தன்னிடம் பேச மாட்டேன் என்று கூறியும் அலட்சியமாக, நானும் பேசமாட்டேன் என்று கூறிவிட்டு,
தன் கையில் இருந்த அந்த தொலையியக்கியை வைத்து தொலைக்காட்சியில் தனக்கு விருப்பமான பழைய பாடலை வைத்து பார்த்துக் கொண்டிருந்தார் தந்தை.
சண்டையிட்ட மகள் கோபமாக அவரை பார்த்த வண்ணம் அமர்ந்து இருப்பதை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல், அவர் பாடலில் கவனமாக இருந்தார்.
மற்ற இரு மகள்களில் ஒருவள், அத்தனை நேரம் இவர்கள் இருவரும் இட்ட சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்படியும் தொலையியக்கியை தன்னுடைய அக்கா வாங்கிவிடுவாள் என நம்பி இருக்க, அவள் அது கிடைக்காமல் தோற்றுப் போக
இப்போது தங்கை தந்தையிடம், “அப்பா இது போர் அடிக்குது. அந்த படத்தையே வைங்கப்பா” என்று கேட்க,
“பாப்பா இப்ப நான் தரமாட்டேன் இது என்னோட டைம்”, என்று கூறி அவர் பழைய பாடலில் மூழ்கி இருந்தார்.
அச்சமயம் அப்பெண்களின் தாய் கையில் ஒரு தேனீர் கோப்பையை எடுத்துக் கொண்டு வந்து கணவனிடம் கொடுக்க, அவர் வலது கையில் வைத்திருந்த அந்த தொலையியக்கியை இடது கையில் மாற்றும் சில நொடிகளுக்குள் அருகில் இருந்த மகள், சட்டென்று அதை பறித்துக் கொண்டு அவருக்கு ஆள்காட்டி விரலை மடக்கி நிமிர்த்தி வக்கனை காட்டினாள்.
“என்ன பாப்பா இப்படி பண்ற? செல்லம்ல remoteஅ குடுடா”, என்று இவ்வளவு நேரம் அசால்டாக பேசிக்கொண்டு இருந்தவர் பணிவாக கேட்டார்.
அவள் அதனை கண்டு கொள்ளாமல் தனக்கு பிடித்த படத்தை வைத்துவிட்டு அந்த தொலையியக்கியை சோபாவில் போட்டுவிட்டு அதன் மேலே அமர்ந்து கொண்டாள்.
அவள் அப்படி செய்ததும் அவளுடைய தந்தை, ” “போங்க, எனக்கு டீயே வேணாம்” என்று கோபமாக டீபாய் மேல் தேநீர் கோப்பையை வைத்துவிட்டு அமர்ந்துவிட்டார்.
அதனை பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய தாய் “ஏண்டி இப்படி பண்ற? நீங்களும் சின்ன பிள்ளையாட்டம் பண்றது” என்று கோபமாக கூறி, அந்த தொலையியக்கியை வாங்கி அவள் தந்தையிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இப்போது தந்தை, மூன்று மகள்களுக்கும் அதே போல் வக்கனை காட்டி விட்டு தொலைக்காட்சியில் ஓடிய பாட்டில் மூழ்கி போனார்.
அத்துடன் அந்த காணொளி முடிவுக்கு வந்திருக்க, அந்த காணொளி ஓட ஆரம்பத்தில் இருந்து சிரிப்பை அடக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த ரகு, அது முடிந்ததும் பலமான சத்தத்துடன் சிரிக்க ஆரம்பித்தான்.
இவ்வளவு நேரம் அவன் கண்ட தந்தை மகள் காட்சி, அவன் மனைவியும் அவள் தந்தையும் செய்த சேட்டைகளில் ஒன்றை தான்.
அதிலிருந்த இன்னொரு பெண் சக்தி, அந்த காணொளியை பதிவு செய்துக் கொண்டிருந்தவள் ஜீவா.
ஜீவா சிற்றடக்கியில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்த காணொளி காட்சிகள் தான் அவை
இப்படி பல காணொளிகள் அதில் பதிவு செய்திருக்க, இது 15 வது காணொளி. இன்னும் அதில் எக்கச்சக்கமாக நிறைய இருந்தது. குறைந்தது ஐம்பது அல்ல அறுபதாவது இருக்க வேண்டும் என்று அவன் எண்ணியிருந்தான் ரகு.
இன்னும் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் இதுவரை பார்த்தவற்றை மனக்கண்ணில் புன்னகையுடன் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
காலையில் சுகுமாரன் பிரச்சனைக்கு பிறகு படப்பிடிப்புக்கு சென்றவன் இருட்ட தொடங்கியதுமே வேலையை முடிந்த அளவு வேகமாக முடித்துக் கொண்டு வந்துவிட்டான்.
சற்று நேரத்துக்கு முன்பாக தான் மதியும் அவனுக்கு அழைத்து இன்று வர தாமதமாகும் அதனால் அவனை முன்பாக உறங்கி விடுமாறு கூறியிருந்தாள்.
இதுதான் சரியான தருணம் என எண்ணி தான், தன் மடிக்கணினியில் சேமித்து வைத்த அனைத்து காணொளிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.
ஒவ்வொன்றிலும் தன் மனைவியின் குறும்புகள் நிறைந்து வழிந்தது. சில சமயம் இப்படி தந்தையுடன் சண்டை போட்டாள்.
சில சமயம் தங்கைகளுடனும் சண்டையிட்டாள். சில சமயம் தாயுடன் வம்புக்கு நின்றாள், ஒரு முறை காலை உறங்கி கொண்டிருந்தவளை தட்டி எழுப்ப அவர்களை கடித்து தின்பவள் போல் காச்மூச்சு என்று கத்தி வைத்தாள்,
ஒரு முறை பாதி தூக்கத்தில் தலையணையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வரை சென்றிருந்தாள், ஒரு முறை தோட்டத்திற்குள் செடி நடும்போது அங்கிருந்த மண்ணை எடுத்து தங்கை மேல் பூசி விளையாடினாள்,
இன்னும் நிறைய காட்சி இப்படி அந்த பதினைந்து காணொளிகளிலேயே அவளின் அத்தனை குறும்புகளும் இருந்தது.
இன்னும் மீதி இருப்பதிலும் நிறைய இருக்கும் என்று அவனுக்கு தெரியும். ஆனால் மூன்று மணி நேரத்தில் வெறும் 15 தான் அவனால் பார்க்க முடிந்தது. ஏனெனில் ஒவ்வொன்றையும் அவன் தான் பலமுறை பார்த்தானே.
அவள் விளையாட்டு முகமும், தூக்கம் கலக்கத்தில் இருந்த பிள்ளை முகமும், கோபத்தில் கத்திய சண்டைக்காரி முகமும் அவனை அவளின் ரசிகனாக மாற்றியது.
அவன் முழுக்க அவள் சிந்தனையில் இருக்க யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க, கதவு திறந்து இருந்ததால் உள்ளே வருமாறு அழைத்தான்.
ரவி தான் வந்திருந்தான். வந்தவன் ரகுவிடம், “டேய் நீ சொன்ன மாறியே செஞ்சிட்டேன் டா. அந்த சுகுமாரனுக்கு இப்போதைக்கு நம்மள பத்தி யோசிக்கலாம் டைம் இருக்காது”, என்று கூறியபடியே உள்ளே நுழைந்தான்.
“ஓகே டா.. ரிசப்ஷன் வரைக்கும் மதி பத்தி வெளிய தெரிய கூடாது. இவன் வேற எதையாவது கிளப்பி விடக்கூடாது. அதுக்கு தான் இப்படி பண்ண சொன்னேன்.
அது மட்டும் இல்லாம காலைல மதிய பத்தி பேசி என்கிட்ட ஒரு குத்து கூட மூஞ்சில வாங்காம போய்ட்டான்ல, அதுக்கும் சேர்த்து தான் உன்னை இந்த ஏற்பாடு செய்ய சொன்னேன்”
“அதுவும் சரிதான். சரி வா சாப்பிட போகலாம்”
“இல்லடா நான் கொஞ்சம் லேட்டா சாப்பிடறேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”
“எனக்கு தெரியாம என்னடா நீ வேலை பாக்குற”
“அதான் வேலை இருக்குன்னு சொல்றேன்ல”
எனக் கூறியவாறு தன் மடிக்கணினியில் கவனம் வைக்க,
“அது என்ன எனக்கு தெரியாம வேலை?” என்று சட்டென மடிக்கணியை தன் பக்கம் திருப்பி அதை பார்க்க, அதில் மதி தன் தந்தையின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
“டேய் இந்த வேலை தான் பாத்துட்டு இருக்கியா. ஆமா உனக்கு எப்படி இந்த வீடியோ கிடைச்சிச்சு?
“ஜீவா உபயம்”
என்று கூறி மடிக்கணினி பக்கம் தன் பார்வையைத் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தான்.
“அந்த குட்டி சாத்தான் வேலையா? அது செஞ்சிருக்கும். கல்யாணத்துக்கு வந்த அப்பவே இருக்கிற எல்லாத்தையும் வீடியோ எடுத்துக்கிட்டே இருந்துச்சு”
“டேய் அவளை குட்டிச்சாத்தான்னு சொல்லாதன்னு பல தடவை சொல்லி இருக்கேன். அவன் என் செல்ல ஜிவ்வு குட்டி டா. இன்னொரு தடவ சொன்ன மண்டையிலேயே நறுக்குன்னு கொட்டி புடுவேன்”, என்று மடிக்கணியில் இருந்த தன் பார்வையை விளக்காமல் ரகு கூறினான்.
“ஆமாம் குட்டிசாத்தான்ன குட்டிசாத்தான்னு சொல்லாம, வேற எப்படி சொல்லுவாங்க. போடா…. சரி நீ உன் பொண்டாட்டியை பாத்திட்டே இருந்த உனக்கு பசியே எடுக்காது. நான் அப்படி இல்லை கெத்தான சிங்கள். எனக்கெல்லாம் சாப்பாடுதான் பஸ்ட். நான் போய் சாப்பிடுறேன்”
என்று கூறினாலும் நகராமல் அங்கேயும் அமர்ந்து ரகுவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு ரகு இப்படி சிரிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
காலையில் சுகுமாரன் வந்து சென்ற பிறகு அவன் மனம் எப்படி இருக்குமோ என்று தவித்ததற்கு மாறாக, அவன் தாயும் மனைவியும் இன்னும் அவன் மகிழ்ச்சியை கூட்டி விட்டதாகவே அவனுக்கு தோன்றியது.
அவனுடைய நண்பன் அவன் மனைவியின் முகத்தை ரசிக்க, இவன் நண்பனின் முகத்தை ரசித்த வண்ணம் இருந்தான்.
ரவி சில நிமிடங்கள் அவனை பார்த்துக் கொண்டிருந்தவன், பின் அவனையும் சாப்பிட சிறிது நேரம் காத்திருந்து அழைத்துச் செல்லலாம் என்று தன் கைபேசியில் ஏதோ வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
ரகு கடைசியாக பார்த்த காணொளியை அமர்த்திவிட்டு, திடீரென ஏதோ சிந்தனை வரப்பட்டவன் ஆக அமர்ந்து வண்ணம் இருந்தான்.
அவனை பார்த்துக் கொண்டிருந்த ரவி தொலைபேசியில் இருந்து பார்வையை அவன் பக்கம் திருப்பி, “என்னடா ஆச்சு? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த” என்று கேட்க “ஒன்னும் இல்லடா, ஒரு சின்ன யோசனை”, என்றான் அவன்.
அவனும் ரகுவின் முகத்தையே கவனித்த வண்ணம் இருக்க, ரகு முகம், முதலில் யோசனை பின் குழப்பம் பின் வருத்தம் என மாறிமாறி உணர்வுகளை காட்டிக் கொண்டிருந்தது.
இதனை பார்த்த ரவி அவனை குலுக்கி, “என்னடா ஆச்சு? எதுக்கு இப்படி இருக்க?” என்றான்.
“ரவி எனக்கு மட்டும்தான் இப்படி தோனுதான்னு தெரியல. நீ ஒரு நிமிஷம் இதை பாரேன்”, என்று அதிலிருந்து அந்த காணொளியை காண்பித்தான்.
அதில் மதி தன் தந்தையின் மடியில் படுத்து உறங்கும் காட்சிதான் மீண்டும் ஓடிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்த ரவி ரகுவின் முகத்தை மிகுந்த குழப்பத்துடன் பார்த்தான்.
ரகு இன்னொரு காணொளியை இயக்கி அதனையும் காட்ட, அதிலும் மதி உறங்கிக் கொண்டிருக்க அவளை யாரோ தட்டி எழுப்பவும் இவள் அவர்களை கத்தும் காட்சி ஓடியது.
“என்னடா ஆச்சு மதி தூங்கிட்டு இருக்கா இதுல என்ன இருக்கு”
“இல்லடா உனக்கு புரியல. எப்படி சொல்றது எனக்கு தெரியல? இன்னும் சிலதை பாரேன்”, என்று வேறு சில காட்சிகளை போட்டு காட்டினான்.
அனைத்திலும் மதி மிக சுறுசுறுப்பாக நிறைய குறும்புகள் செய்த வண்ணம் பயங்கர சேட்டைக்காரி என பெயர் வாங்கும் பெண்ணாக சுற்றிக் கொண்டிருந்தது ரவிக்கு புரிந்ததுதான்.
ஆனால் இதே போன்ற துறுதுறுப்பை இப்போது மதியிடம் அவன் கண்டதில்லை.
ஒருவேளை தன் தாய் தகப்பனின் இழப்பினால் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு,
“நீ சொல்றது எனக்கு புரியுதுடா.. ஒருவேளை மதி அவங்க அப்பா அம்மா இறந்ததால இப்படி இருக்கலாம் இல்ல.”
“அது மட்டும் காரணம் இல்ல. இது… வேற ஏதோ இருக்குடா. இங்க பாரு, மதி இப்படி தூங்கி நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லடா”
“என்ன சொல்ற? தூங்கி பாத்ததில்லையா? கல்யாணம் முடிஞ்சுது முதமுறை வேலைக்கு போன ஒரு வாரமும் மதி நான் வரதுக்கு முன்னாடி தூங்கிடுறான்னு சொன்ன?”
“ஆமாடா ஆனா அப்ப தூங்குற மாதிரி எனக்கு தோணுச்சு. ஆனா இதுல பாரு இதுல இவ முகம் எவ்ளோ அமைதியா இருக்கு. இதே மாதிரி அவ அமைதியா தூங்கி நான் பார்த்ததே கிடையாது.
ஏன் வீட்டில வைத்து ஒரு வாரம் அவ கண்ணம் வீங்கி இருக்குன்னு பாத்துக்கிட்டேனே அப்ப கூட, அவ இப்படி தூங்கி நான் பார்த்ததே இல்லடா”
“அதுமட்டுமில்லடா கொஞ்ச நாளாவே ரொம்ப சோர்வா இருக்கா. அம்மா கூட நேத்து கேட்டாங்க என்ன ஆச்சு?ஏன் சோர்வாகவே தெரியிறன்னு?
அப்ப கூட அவங்க கிட்ட ஏதோ சொல்லி சமாளிச்சுட்டு இருந்தா. நான் உன்கிட்ட பேசிட்டு இருந்ததால அவங்க பேசுறது எனக்கு சரியாவே கேட்கல.
கண்ண சுத்தி கருவளையம் வேற. சரியா இப்ப கொஞ்ச நாளா சாப்பிடறதும் இல்லை. திடீர்னு பார்த்தா தலைய பிடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கா, ஏதோ மலையையே புரட்டுன மாதிரி டயர்டா வரா.
என்னன்னு நம்ம போய் கேட்டோம்னா சிரிச்சு பேசி சமாளிக்கிறா. அவ சிரிப்ப பார்த்தாலே நல்லாதான் இருக்கா போலன்னு தோன ஆரம்பிச்சுடுது.
கிட்டத்தட்ட ஒரு மூணு வாரமா இப்படியே இருக்க மாதிரி எனக்கு தோனிட்டே இருக்குடா”
“டேய் ரகு, நீ அவ கிட்ட சாதாரணமா தெரியுற சோர்வு தான் அதிகமா நெனச்சு பேசுறியோன்னு எனக்கு தோணுது டா”
“ரவி உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா? ஏதோ இருக்குனு சொல்றேன் புரிஞ்சுக்காம பேசாத”, என்று பல்லை கடித்துக் கொண்டு ரகு கூறியவன்,
தொடர்ந்து, “டேய் ரவி அவ சோர்வா தெரியும்போதே, நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்கணுமோ. ரொம்ப நாள் கடத்திட்டேனோ? இப்பதான் எனக்கு புத்தியே வருது.
இத்தனை நாள் என் கண்ணு முன்னாடியே சோர்வா இருந்தாலும் சரி ஆயிடுமா சரியாயிடுவான்னு நினைச்சுட்டே இருந்து இருக்கேன். நான் என்னடா புருஷன்.
அப்பா விஷயத்தில் நடந்த மாதிரி இவ விஷயத்திலையும் நடந்துச்சுன்னா சத்தியமா என்னால தாங்க முடியாது டா” என்று கூற,
ரவி “டென்ஷன் ஆகாது ஒன்னும் இருக்காது. இப்ப என்ன உனக்கு மதிக்கு எதாவது ஹெல்த் ப்ராப்ளமான்னு தெரியனும் அதான. நாளைக்கே டாக்டர் கிட்ட போய் செக் பண்ணலாம்” ன்று சமாதான படுத்த முயன்றான்.
அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே ரகுவிற்கு முதல் நாள் மதி ஏதோ “பிரச்சினை அதிலிருந்து மீண்டு வருவேன்” என்று கூறிய வார்த்தைகள் காதில் எதிரொலித்தது.
சட்டென்று அங்கிருந்த மதியின் அலமாரியை திறந்து, அதில் அவள் வைத்திருந்த கோப்புகள் வைக்கும் பகுதியில் எதையோ தேட, அனைத்து கோப்புகளுக்கும் அடியில் கடைசியாக அவனுக்கு ஒரு கோப்பு கிடைத்தது.
அதை கை நடுங்க பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. இத்தனை நேரம் என்ன தேடுகிறான் என அவனைப் பார்த்துக் கொண்டு கடைசியாக அவன் கையில் எடுத்ததையும் பார்த்த ரவிக்குமே ஏதோ தவறாக பட தான் செய்தது.
ரகு வேற எதுவும் சிந்திக்காமல் அந்த கோப்பையின் உள்ளே திருப்ப, தான் நினைத்தது அனைத்தும் உண்மை என அதில் இருக்கும் அடர்த்தியான மையால் அச்சிடப்பட்டிருந்த எழுத்துக்கள் அவனுக்கு விளக்கியது.
அந்த கோப்பில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் அவன் மண்டைக்குள் சென்று அதன் அர்த்தத்தை உரைக்க, நின்ற இடத்திலேயே அப்படியே கீழே விழுந்திருந்தான்
நண்பன் அப்படி விழுந்ததும் சட்டென்று அவன் அருகே வந்த ரவி “டேய் என்னடா ஆச்சு?என்ன ஆச்சு?” என்று அவனை குலுக்கி பார்க்க அவன் அசைவதாக தெரியவில்லை.
உடனே அவன் கையில் இருக்கும் கோப்பை வாங்கி, அவனும் அதில் இருப்பவற்றை படித்து பார்த்தவன் கருவிழிகளும் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டன.
ரவி அவனை பலமுறை குலுக்கி பார்த்தும் அவனிடம் ஒரு அசைவம் தெரியவில்லை. தன் தந்தையைப் போல் தன் மனைவியையும் இழந்து விடுவோமோ என்று அஞ்சுகிறான் என்பதை புரிந்தது ரவிக்கு.
புரிந்த பின் அவன் அருகே நன்றாக நெருங்கி அமர்ந்து கொண்டு மெதுவான குரலில்,
“ரகு அப்பா உன்னை விட்டு போனாரு உண்மைதான். அவர காப்பாத்த உன்கிட்ட வாய்ப்பே இல்லை. ஆனா மதிய காப்பாத்த உன்கிட்ட வாய்ப்பு இருக்குடா. அவளை காப்பாத்திடலாம் டா”, என்று கூற
‘அப்பா’ என்று வார்த்தையே அவனின் சுயநினைவை மீட்டுக் கொண்டு வந்திருக்க, அடுத்து அவன் கூறிய அனைத்து வார்த்தைகளும் தற்போதைய சூழ்நிலையை புரிய வைத்தது. நிதானமாக எழுந்தவன், முகத்தை தன் கை கொண்டு அழுத்தமாக துடைத்தான்.
ரவியும் அவனுடனே எழுந்து நிற்க அவன் கையில் இருந்த கோப்பை வாங்கியவன், அதில் எதையோ தேடி கண்டு கொண்டவன், தன் அலைபேசியை தேடி எடுத்து அதன் மூலம் கோப்பில் கண்டறிந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
சில நொடிகளில் எதிர்ப்புறம் இருந்து “ஹலோ, டாக்டர். நிரஞ்சனா ஸ்பீக்கிங்”,என்று பெண்ணின் குரல் கேட்டது. அதை கேட்டதும் ரகு,
“ஹலோ நான் ரக்.. என்னோட பேரு ரகுநந்தன். என்னோட வைஃப் உங்ககிட்ட ட்ரீட்மென்ட் வந்துட்டு இருக்காங்க. அவங்கள பத்தி நான் பேசணும் அதுக்கு தான் கால் பண்ணேன்”
“உங்கள வைஃப் நேம் என்ன?”
“மேகமதி.. மேகமதி ரகுநந்தன்”
“ஓ..எஸ். சார், உங்க கிட்ட நான் பேச நினைச்சேன். உங்க வைஃப்க்கு ப்ராப்ளம் கொஞ்சம் சிவியரா இருக்கு. நான் கண்டிப்பா உன்கிட்ட பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அவங்க யாரையுமே கூட்டிட்டு வரல. தனியாக வந்தாங்க. நீங்க நாளைக்கே என்னை மீட் பண்ண முடியுமா?”
“இன்னைக்கே மீட் பண்ண முடிஞ்சா?நல்லா இருக்கும்”,
“சார், எனக்கு ஒரு இம்பாட்டன்ட் வொர்க் இருக்கு. அதனாலதான் டியூட்டி டைம் முன்னாடியே கிளம்புற சுச்சுவேஷன்ல இருக்கேன். நாளைக்கு கண்டிப்பா மார்னிங் மீட் பண்ணலாம். நீங்க டைம் சொல்லுங்க. நான் அப்பாய்ன்மென்ட் பிக்ஸ் பண்ணிடுறேன்”
அழைப்பை துண்டித்து விட்டு அங்கிருந்து மெத்தையின் மேல் அமர்ந்து கொண்டவன், கண்களை மூடி அப்படியே அமர்ந்திருக்க, ரவி அவன் தோள்களில் கை வைத்து,
“சரியாகிடும் கவலைப்படாத” என்று ஆறுதல் கூறினான்.
“டாக்டர்ஸ் அவங்க எல்லா பேசன்ட்டையும் ஞாபகம் வச்சிக்க தேவையில்லை. அதுவும் பேரக் கேட்டதும் அவங்களுக்கு மதிய தெரியிது. அப்படின்னா என்ன அர்த்தம். மதிக்கு பிரச்சனை சீரியஸா இருக்கன்னு தானே அர்த்தம்” என்று அவன் கேட்க,
“டேய் இவ்வளவு யோசிக்காத. என்ன பிரச்சனை இருந்தாலும் அதை உன்னால சால்வ் பண்ண முடியும். ரகுவால முடியாதுன்னு எதுவும் இல்லடா”, என்று ரவி கூற,
சரியாக யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.
அங்கு மதி நின்று இருந்தாள்.
“ஹேய், ரவிண்ணா ஏதாவது முக்கியமா பேசிட்டு இருந்தீங்களா?நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று அவள் கேட்க அவர்கள் இருவரும் பேசாமல் அவளையே பார்த்த வண்ணம் இருந்தனர்.
“என்னாச்சு?” என்றவள் முன்னேறி அவர்கள் இருவரின் அருகே வர, அருகில் வந்தவளுக்கு ரகுவின் கையில் இருந்த அந்த கோப்பு கண்ணில் பட்டது.
இதை பார்த்ததும் அவளுக்கு சகலமும் புரிந்துவிட, அவன் முகம் பார்த்தாள். அவன் மதி வந்ததும் அவளை நிமிர்ந்து ஒரு முறை நன்றாக உற்றுப் பார்த்தவன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
உண்மையில் அவளைப் பார்ப்பதற்கு முன்பாக அவளின் நிலையை நினைத்து வேதனையில் தவித்தவன், அவளை பார்த்த நொடி தன்னிடம் இத்தனை முக்கியமான ஒன்றை மறைத்து இருக்கிறாளே என்று கோபம் கனன்று கொண்டிருந்தது.
ரவி அவர்கள் இருவரின் நிலையும் புரிந்தவன் ரகுவின் தோளில் ஒரு முறை அழுத்திக் கொடுத்துவிட்டு, மதியை பார்த்து இடப்புறமாக தலையசைத்து விட்டு வெளியேறினான்.
மதிக்கு இச்சூழலை எப்படி கையாள வேண்டும் என்று தெரியவில்லை உண்மையில் மனதளவில் நொந்து போய் இருந்தவள், உடலளவிலும் அதிக பாதிப்பில் இருந்தவள்,
ரகு ஒருவனால் மட்டும் தான் சற்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தாள்.
ஆனால் அவன் இப்படி சோர்ந்து அமர்ந்திருப்பது அதுவும் தன்னால் என்னும் போது, அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
இத்தனை நாள் இருந்ததெல்லாம் சோர்வே இல்லை, இன்று தான் உண்மையான சோர்வையே காண்கிறாய் என்பது போல் உணர்ந்தது உடலும் மனமும்.