Advertisement

கனவுக்குள் காவல் – ௰௪

மதி கூறியதை கேட்ட ரகுவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க அவளுக்கு குழப்பமாக இருந்தது. சிறிது நேரம் அவனை கூர்ந்து பார்க்க, மிக மெலிதாக அவன் முகத்தில் கோபம் படர்ந்து இருப்பது அவளுக்கு உரைத்தது.

“இது உனக்கு எப்படி தெரிஞ்சது மதி”,  ரகு கேட்க

“நேத்து கார்மெண்ட்ஸ் வந்தப்போ, ரெஸ்ட் ரூம் போயிருந்தேன்ல திரும்பி வரும்போது இரண்டு பேர் பேசிட்டு இருந்ததை கேட்டேன்.  அது யாருன்னு எனக்கு தெரியல.

ஆனா அவங்க குரல் மட்டும் எனக்கு நல்லா கேட்டுச்சு.  அதனாலதான் உங்ககிட்ட விசாரிச்சுட்டு அவங்கள போய் பார்க்கலாம்னு நினைச்சேன்.

ஆனா நேத்தும் இன்னக்கு காலைலயும் நீங்க கேட்கிற நிலைமையில் இல்லையே. அதனாலதான் சரின்னு விட்டுட்டேன்.   ஆனா அது என் மண்டைக்குள்ளது ஓடிட்டே இருந்ததா.

உங்ககிட்ட போன்ல விசாரிக்கலாம்ன்னு நினைச்சு உங்களுக்கு கால் பண்ணேன். ஆனா நீங்க ஃசூட்டிங்ல இருந்ததால ரவி தான் எடுத்தாரு.  அவர்கிட்ட மேலோட்டமா விசாரிச்சேன்.  ஆனாலும் நான் கேட்டதை வச்சே அவருக்கு கொஞ்சம் புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்.

ஆமா நீங்க என்ன ரியாக்சன் இல்லாம இருக்கீங்க உங்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியுமா?” என விரிவாக கூறி முடித்தாள்.

“தெரியாது மதி. ஆனா இவன் என்னைக்காவது இந்த மாதிரி  செய்யலாம்னு எனக்கு தோணுச்சு”

“ஆமா அங்கிள் சொன்னாங்க. நீங்க எப்பவும் அவர் மேல ஒரு கண்ணு இருக்கட்டம்னு சொல்லி இருக்கீங்கன்னு. ஆனா இந்த கல்யாணம், உங்க வேலைன்னு  நீங்க பிசியா இருந்ததால உங்க கிட்ட எதுவும் அவரால சொல்ல முடியல.  அது மட்டும் இல்ல பரத் அத்தான் அவர வாட்ச் பண்ற மாதிரி இருக்கின்னு சொன்னாரு.”

“அங்கிள் அப்பாவுக்கு ரொம்ப விசுவாசமா இருந்தவரு. முன்னாடி இவன் தப்பு பண்ணல.  அதனால அவரை கவனிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது, இப்ப தப்பு பண்றான் இல்ல. “

ரகு எளிதாக இதை கூறினாலும் அவன் முகத்தில் இருந்த அமைதியும், மெலிதான கோபமும், மதிக்கு வருத்தத்தை அளிக்க,

“ஒன்னும் இல்ல ரகு சரியாயிடும். அவரை நம்ம வான் பண்ணலாம்.  இனிமே இதை பண்ண மாட்டாரு”, என கூறினாள்.

“இல்ல மதி இவனுக்கு சித்தப்பா மாதிரி பேராசை எல்லாம் கிடையாது.  இவன் எதுலையோ சிக்கியிருக்கான்னு  எனக்கு தோணுது.  நாளைக்கு ஆடிட்டர் கிட்ட இவனோட தனி அக்கவுண்ட்ஸ் எல்லாம் எதுவும் ட்ரான்ஸாக்ஷன் நடந்து இருக்கான்னு ஒரு தடவ செக் பண்ண சொல்லணும்.

அப்படி நடந்து இருந்தா, இவன் பணத்துக்காக தான் பண்ணியிருக்கணும். அப்படி இல்லன்னா  எதுலயாவது மாட்டி இருக்கணும். அப்படி இவனுக்கு  எதுவும் பிரச்சனைனா நான் கண்டிப்பா அதுக்கு  வருத்தம் படணும் இல்ல.”

“உண்மைதான்”, என்றவள் அவனைப் பார்த்த வண்ணமே  இருந்தாள்.

ஆனால் ரகு தன் மனைவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல், அவள் கூறிய செய்தியிலேயே உழன்று கொண்டிருந்தான்.

மதி நேற்று கேட்ட குரல், அங்கு பல காலமாக பணிபுரிந்து வரும் நாராயணன் உடையது.

நேற்று இவர்கள் அனைவரும் சந்தித்துக் கொண்ட அந்த தளம் குடும்பத்தார் மட்டும் பிரத்தேகமாக வந்து செல்லும் தளமாகும்.  அங்கு மற்ற நபர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம் முக்கியமானவர்களாக தான இருக்க வேண்டும்.

அதை யோசித்து தான் ரகுவிடம் அதைப்பற்றி கேட்க நினைத்தாள். ஆனால் ரகுவின் அலைபேசி ரவியின் கையில் இருந்ததால் அவனிடமே எதார்த்தமாக விசாரிப்பது போல் கேட்டு தெரிந்து கொண்டாள்.

நாராயணன் அங்கு பல காலமாக பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.   அந்த கார்மெண்ட்ஸில் பரத் ஏதோ தவறாக செய்து கொண்டிருந்தான். அது மற்ற ஊழியர்களுக்கு கூட தெரியாமல் நிகழ்ந்து கொண்டிருந்தது.

இதனை எப்படியாவது ரகுவிடம் தெரிவிக்கவே அவரும் அவரின் நம்பிக்கையான உதவியாளரும் அங்கு வந்திருந்தனர்.  ஆனால் ரகுவை தனியாக சந்திக்க இயலாத காரணத்தால்,  தங்களுக்குள் பேசிக்கொண்டே  திரும்பி சென்றவர்களின் குரலைத்தான் மதி கேட்டிருந்தாள்.

குரலை மட்டும் கேட்டவள், அவர்கள் யார் என்பதை ரவியின் மூலம் அறிந்து கொண்டு நாராயணனின் இல்லத்திற்கே சென்று  பேசி விட்டு வந்தாள்.

அவரிடம் பேசியபோது ரகு தான் ஏற்றுமதி செய்யும் உடைகளுடன் சேர்த்து தங்கத்தையும்  கடத்துவது அவளுக்கு தெரிய வந்தது.

இதனை தான் ரகுவிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

ரகு யோசனையாக இருந்தவன் ஏதோ முடிவெடுத்தவனாக தன் சிந்தனையில் இருந்து வெளிவந்தான்.

திரும்பி தன் மனைவியின் முகத்தை பார்த்தவனுக்கு மனமும் முகமும் பிரகாஷம் அடைந்தது.  கொஞ்சமும் தன் நினைவு இன்றி, மொத்தமாக தன் மனதையும் பார்வையையும் கணவன் மேல் வைத்திருந்த  மதியின் இடையில் கை கொடுத்து அவளை தன் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டான் ரகு.

அவன் நெஞ்சின் மேல் வந்து விழுந்தவள், அவன் இழுத்த வேகத்திலேயே நினைவு மீண்டிருந்தாள்.

“ரகு..”, என சினுங்களாய் ஒரு மெல்லிய அலறல் அவளிடத்தில்.

“ஹே பொண்டாட்டி, காலைல சித்திக் கேட்ட நல்ல சேதி சொல்லாம்னு முடிவு பண்ணிட்டியா?, என அவளை அழுத்தி பிடித்தவாறு கேட்க,

அவளோ தன் முகத்தை அவனுக்கு காட்டாமல், அவனிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தவாறு,”விடுங்க ரகு” என்றாள் அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல்.

“பதில் சொல்லு டி”

“முடியாது போடா”

“ஓஹோ, சொல்லமாட்டியா. சரி சொல்லாத”, என்றவன் ஒரு கை இடுப்பை அழுத்தி பிடித்து இருக்க, மறு கை அவள் முகத்தில் இருந்த முடியை ஒதுக்கி விட்டு, ஒரு விரல் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகத்தில் கோடு இழுத்து கொண்டிருந்தது.

மதி திமிறலை மெது மெதுவாக நிறுத்தியவள், அவன் நெஞ்சில் முகத்தை இன்னும் அழுத்திக் கொண்டாள்.

“மதி….”

“ம்ம்”

“குழந்தை பெத்துக்கலாமா?”

“ம்ம்”

“நிஜமாவா?”, ரகு சற்று சத்தமாக கேட்க, சட்டென்று சுயம் பெற்றவளாக,  அவனிடத்தில் இருந்து விலகி அமர்ந்து கொண்டாள்.

“மதி”, என்று அவன் மீண்டும் அவளை இழுக்க முயற்சிக்க,  நகராமல் சற்று அழுத்தமாக அமர்ந்து கொண்டாள் அவள்.

அவனும் அவளை ஒன்றும் அத்தனை வேகமாக இழுக்கவில்லை.  அதையே இருவரும் சிறிது நேரம் விளையாட்டாய் விளையாடிக் கொண்டு இருக்க, விளையாட்டின் ஊடே ரகு, “மதி, எனக்கு ரொம்ப எல்லாம் வேணாம். ஒரு நாலு குழந்தைங்க போதும்”, என்றதும்,

“ஆசைதான்.  அதெல்லாம் இல்லை, ஒன்னு தான்.”

“நோ மதி. உன் மாமனார், என் மாமனார் மாமியார் மொத்தம் மூனு பேர்.  அப்புறம் நம்ம ரெண்டு பேர் ஜாடை கலந்த மாதிரி ஒன்னு. டோட்டலா நாலு. “

“மொத நீங்க கைய விடுங்க”, கோபம் போல் சொல்ல, மெல்ல கையை விட்டவன், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.

உண்மையில் மதிக்கு மாமனார் பற்றி பேசியதும், காலையில் நாராயணன் கூறிய வேறு சில விசயங்கள் ஞாபகம் வந்தது. அதைப் பற்றி ரகுவிடம் பேச எண்ணினாள்.  அதனால் விளையாட்டை கைவிட்டவளாய் அவன் முகம் பார்த்தாள்.

“ரகு”

“நான் பேச மாட்டேன்”, என அவள் முகம் பார்க்காமல் திரும்பிக் கொள்ள, அவன் நாடியில் கை வைத்து  அவன் முகத்தை தன் பக்கமாக திருப்பி, “பேசனும்” என்றாள்.

அவள் குரலில் தெரிந்த தீவிரத்தில், இவனும் என்னவென்று அவள் முகம் பார்க்க, “ரகு”, என ஒரு நொடி நிறுத்தி தன் மூச்சை இழுத்து விட்டவள்,

“ரகு, மாமாவோட மரணத்தைச் பத்……….”

“நோ மதி”, அதற்கு மேல் அவளை பேசவிடாமல் வேகமாக கூறினான்.

“அதை பத்தி பேச வேணாம்.  நேத்து இதைப் பத்தி நான் உன்கிட்ட பேசினது, ரொம்ப நாளா மனசில வச்சிருக்க விசயத்தை உன்கிட்ட சொல்லனும்னு தான். ஆனா இதுக்கு மேல இதைப்பத்தி பேச வேணாம் மதி. பேசாத ப்ளீஷ் “

“நான் சொல்றத ஒரு தடவ…..”

“நான் சொல்றது உனக்கு புரியலையா மதிமா”, இப்போது குரல் மிக அழுத்தமாக மாறி இருந்தது ரகுவிற்கு.

“எனக்கு நல்லாத் தெரியும் என் அப்பாவோட மரணத்துக்கு நான் தான் காரணம்னு.  அதை திருப்பி திருப்பி தோண்டி துருவி, அதைப் பத்தி பேசி…. எனக்கு வேண்டாம். புரிஞ்சிக்கோ மதிமா.” என்றவன் கண்கள் கோபமும் வேதனையும் பிரதிபலிக்க,

மதிக்கு அதற்கு மேல் அவனிடம் எப்படி பேச எனத் தெரியவில்லை. அமைதியாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ரகு அவள் அசையாமல் இருப்பதை கண்டு கொள்ளாமல் திரும்பி படுத்து கொள்ள, மதி சில நொடிகள் அப்படியே இருந்தவள், அவளும் படுத்துக் கொண்டாள் அவனை பார்த்தவாறு.

அவள் படுத்ததும் அதனை உணர்ந்து கொண்டவன், தன் அருகில் இருந்த விடி விளக்கை அமர்த்தி விட்டு கண்களை மூடிக் கொண்டான்.

ரகு தன்  தந்தையை இழந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டது.  ஆனால் இன்னும் அவனுக்குள் இருக்கும் குற்ற உணர்ச்சி மட்டும் மாறாமல் அவனை வாட்டியது.

சில நேரம் தன்னை எண்ணியே கோபம் கொள்வான், சில நேரம் தந்தை இழப்பை எண்ணி வேதனைக் கொள்வான், சில நேரம் குற்ற உணர்வு அவன் மனம் எங்கும் தலை விரித்து ஆடும்.

அனைத்தையும் தன்னுள் வைத்துப் போராடுபவன்,  தன் தந்தை மரணத்தை பற்றி பேசும் போது, அவை எல்லாம் எங்கு வெளிப்பட்டு விடுமோ என அஞ்சி அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றிடுவான்.

இதுவே பத்து ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருந்தது.  ஆரம்பத்தில் நாராயணன் கூட அவனிடம் ஏதோ கூற முயற்சிக்க,  அதை எதையும் அவன் கேட்காமல் அவரையும் அதற்கு மேல் அதை பற்றி பேசவிடாமல் செய்து விட்டான்.

எப்போதும் விலகி செல்பவனால், இன்று மதியை விலகி செல்ல முடியவில்லை. அவளை விலகுவதும் விலக்குவதும் அவனால் இயலாத காரியம் ஆகிற்றே. அதனால் தான் இன்று அனைத்திற்கும் மாறாக அவன் கோபம் வெளி வந்து விட்டது.

ரகுவின் கோபத்தை மீறி மதியால் அவனை குற்ற உணர்ச்சியில் இருந்து மீட்க முடியுமா என்பதை பொறுத்து இருந்து தான் காண வேண்டும்.

காலை எழுந்ததும் ரகு மதியைத் தேட, அங்கிருந்த நிசப்தத்தில் அவனுக்கு புரிந்து விட்டது, அவள் அறையில் இல்லை என்று.  திரும்பி கடிகாரத்தைப் பார்க்க அது ஆறு என்றது.

“அதுக்குள்ள கிளம்பிட்டாளா? டேய் ரகு உன் பொண்டாட்டி செம்ம கோபத்தில் இருக்கா போல.  எப்படிடா சமாதானப் படுத்தப்போற?” என தனக்கு தானே சொல்லிக் கொண்டு கண்ணத்தில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

அவன் அலைப்பேசி எழுப்பிய சத்தத்தில் என்னவென்று பார்த்தவன், அதில் மதியின் எண்ணில் இருந்து வந்திருந்த குறுஞ்செய்தி, அவன் முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது.

‘எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதான் நான் சீக்கிரம் கிளம்பிட்டேன்.  அத்தைக்கும் மெசேஜ் போட்டுட்டேன். எழுந்துட்டீங்கன்னா ரெடி ஆகிட்டு சாப்பிட்டு கிளம்பிங்க. நேத்து மாதிரி உம்முன்னு மூஞ்சி வச்சிட்டு உக்காந்திருக்காதீங்க.’

என்று அனுப்பியிருந்தாள். அதை பார்த்ததும் தான் உண்மையில் அவனுக்கு மனம் அமைதி அடைந்தது.  இல்லை என்றால் நேற்று காலை போல் சோகமாக திரிந்திருப்பான்.

அதன் பின் மனைவி சொல்லை தட்டாத கணவனாக, விரைவாக கிளம்பி கீழே சென்று சரியாக மணி ஏழு பதினைந்து என காட்டும் வேளை உணவு மேஜையில் அமர்ந்து கொண்டான்.

ஆனால் பாவம் இன்னும் உணவுதான் தயாராகவில்லை.  தான் மட்டும் அங்கு அமர்ந்திருக்க, “கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுடோம் போல”, என மனதிற்குள் எண்ணிக் கொண்டு, அலைப்பேசியை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.

அச்சமயம் தன்னை யாரோ பார்ப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க, அங்கு பரத் நின்றிருந்தான்.

பரத் பார்வையில் ஆச்சர்யம் இருக்க, அவனை மறு பார்வை பார்த்து இருந்த ரகுவின் பார்வையில் ஆராய்ச்சி இருந்தது.

“இவன் எதுலை மாட்டிட்டு இருக்கான்னு கண்டு பிடிக்கனும்” என எண்ணிக் கொண்டான் ரகு.

அவன் அப்படி யோசித்துக் கொண்டிருந்த நேரம், எப்போதும் தன்னை கண்டாலும் பெரிதாக பேசிடாத பரத் தன்னிடம் பேச முனைவதைக் கண்டான்.

“எதாது சொல்லனுமா பரத்?”

“ஒன்னுமில்லை” எனறவன், “இல்லை இன்னக்கி என்ன இவ்ளோ சீக்கிரம் கிளம்பி வந்திருக்க?” எனக் கேட்டான்.

“மதி முக்கியமான வேலையா சீக்கிரம் கிளம்பி வேண்டி இருந்திச்சு.  அதான் நானும் சீக்கிரம் கிளம்பிட்டான்”

“ஓ..மதி போயாச்சா?”

“ம்ம், அவ அப்பவே கிளம்பிட்டா”, என்றவன் ஒரு நொடி அவனை அமைதியாக பார்த்து விட்டு,

“உனக்கு என்கிட்ட வேற எதாவது சொல்லனுமா? எனக் கேட்க, அதற்கு

“அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றான் பரத்.

உண்மையில் பரத்திற்கு ரகுவின் கேள்வி விளங்கவில்லை.  அவன் கேள்வி விளங்கினாலும் அவன் பதில் கூறப் போவதில்லை என ரகுவிற்கு தெரியும்.  இருந்தும் அண்ணன் என்ற எண்ணத்தில் அவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் தம்பியிடம் சொல்ல மாட்டானா என்று தான் கேட்டது.

பரத் அதற்கு மேல் நிற்காமல் அங்கிருந்து நகர்ந்து விட, நேரம் கடந்தது.

சிறிது நேரத்தில் ரவி இவனை ஆச்சரியமாக பார்த்தவாறே வந்தவன்,  அவன் அருகில் அமர்ந்து, “என்னடா, நான் கூப்பிட்டதுக்கு அப்புறம் தான் கிளம்பி வருவ, இன்னைக்கி என்ன இவ்ளோ சீக்கிரம் வந்திட்ட?”

“சும்மா”

“மதி எங்க டா?”

“ஒரு முக்கியமான வேலைன்னு கிளம்பிட்டா.  அவளுக்கு தான் சாப்பிட்டாளான்னு கேட்டு மெசேஜ் போட்டிட்டு இருக்கேன்”

“ஓ.‌…ஓகே….ஏன்டா நண்பா?”

“என்ன டா நண்பா?”

“கல்யாணம் ஆனதில இருந்து உன் மூஞ்சி டெய்லி ஒரு வாட் பிரைட்னெஸ் அதிகமாகிட்டே போகுதே எப்படி? கல்யாணம்னாலே மூஞ்சி பிரைட் ஆகிடுமா?”

“இல்லைவே இல்லை மச்சான்.  மதி மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டுந்தான் அதெல்லாம் நடக்கும்.  அதுவும் மூஞ்சி மட்டும் இல்லை லைஃப்பும் செம்ம பிரைட் ஆகிடும்”, என அலைப்பேசியில் இருந்து கண்ணை எடுக்காமல் பதில் அளித்தான்.

“டேய் மச்சான்.  அப்போ மதிகிட்ட அவளை மாதிரியே ஒரு பொண்ண எனக்கு பாக்க சொல்றியா?” என ரவி கேட்க, நிமிர்ந்து அவன் முகம் பார்த்து ஏதோ கூற வரும் முன்,

“உனக்கு மதி மாதிரி பொண்ணு இல்லைடா, ஜீவா மாதிரி பொண்ணு தான் கிடைக்கும்” என தேவி வந்து நின்றார்.

“இப்ப எதுக்கு அந்த குட்டி சாத்தான ஞாபகப் படுத்துரீங்க, சித்தி?” என்றவனை,

“டேய், என் பேபி உனக்கு குட்டி சாத்தானா டா? போன்ல அவ முன்னாடி குட்டி தங்கச்சின்னு சேவ் பண்ணிட்டு அவ கிளம்பினதும், குட்டி சாத்தன்னு மாத்தி வச்சிருக்க. அவ வரும்போது இருக்குடா உனக்கு” என்றான் ரகு.

“அந்த குட்டி சாத்தான் பண்ண வேலை அப்படி.  இங்கிருந்து கிளம்பிறதுக்குள் நீயும் அவளும் சேந்து பண்ணதெல்லாம் மறக்கலை டா.  உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நாள் வச்சிருக்கேன்.”

“டேய் போடா” இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே கௌதமி வந்து விட, ரகு அமைதியாகி விட்டான்.  அதற்குள் உணவும் மேஜையில் அடுக்கப்பட்டு இருக்க,  உண்ண ஆரம்பித்தான்.

உணவு அனைத்தும் அவனுக்கு பிடித்ததாக இருக்க, நன்றாக உண்டான்.  உணவு வகைகளைப் பார்த்த கௌதமி, உணவில் முழு கவனம் வைத்து உண்ணும் மகனை ஒரு நொடி பார்த்தவர், தேவியிடம் திரும்பி,

“தேவி, இன்னைக்கு நீதான் என்ன சமைக்கனும்னு சொன்னியா?  ஏன்னா ராணி எப்பவும் வெள்ளி கிழமை மட்டும் என்னை கேட்டு தான் சமைப்பா.  ஆனா இன்னைக்கு கேட்கவே இல்லை.”

“என்கிட்ட கேட்கலையே கா”

“அப்படியா?…ராணி”, என்றதும் அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணி வந்து நின்றார்.

“என்னமா. சொல்லுங்க?”

“ராணி, இன்னைக்கு யாரு மெனு குடுத்தா?”

“மதி மா தான் குடுத்தாங்க மா.  இன்னைக்கு நீங்க தான் சொல்லுவீங்கன்னு சொன்னே.  அவங்க சொன்னதா சொன்னா நீங்க ஒன்னும் சொல்ல மாட்டிங்கன்னு சொன்னாங்க மா”

“சரி தான், என் மறுமக சொன்னது. சரி நீ போ” என்றவர் உணவை சுவைக்க ஆரம்பித்தார்.

அவர் இத்தனைக் கேள்வி கேட்க ஒரு காரணம் இருந்தது.  பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது அந்த வீட்டில் ரகுவிற்கு பிடித்த உணவுகள் சமைக்கப்பட்டு.

இன்று அனைத்தும் அவனுக்கு பிடித்ததாக இருக்க, சமைக்க சொல்லியது யார் என தெரிந்து கொள்ளதான் இத்தனை கேள்வி கௌதமியிடம்.

மதி தான் சமைக்க சொல்லியது என்று அறிந்ததும், ரகுவிற்கு உணவு இன்னும் சுவை கூடியதாக இருந்தது.  ஆனால் எதையும் மற்றவர்கள் அறியும் வண்ணம் முகத்தில் காட்டாமல் உணவை முழு திருப்தியோடு உண்டு முடித்தவன், ரவி உண்டு முடித்ததும் அவனுடன் கிளம்பி சென்றான்.

காவல் புரிவா(ள்)ன்…..

மகா ஆனந்த்✨

Advertisement