Advertisement

கனவுக்குள் காவல் – ௰௩

காலையில் எழுந்ததிலிருந்து ரகுவின் முகம் யோசனையை சுமந்தபடியே இருந்தது.  அடிக்கடி மதியின் முகத்தை திரும்பி  பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மதி இவனை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை.  முதல் நாள் இரவு மதியின் மடியில் படுத்தி உறங்கிக் கொண்டிருந்தவன்.

காலையில் எழுந்து பார்க்கும் போது தலையணையில் படுத்து இருப்பது தெரிந்தது.  உடனே எழுந்து அறையை சுத்தி முத்தி பார்க்க மதி எங்கும் தென்படவில்லை.

உள்ளே  குளியலையில்  சத்தம் கேட்க, அவள் அங்கு தான் இருப்பாள் என எண்ணிக்கொண்டு அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

வெளியே வந்தவள், ரகுவை காணாமல் கண்ணாடி பக்கம் திரும்பி, ஈரமாக இருந்த தலை முடியை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

நேற்றிரவு தான் கூறிய செய்தியில் மதி தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என தெரிந்து கொள்ள நினைத்தான் ரகு.

வெகு நேரமாக தன்னை திரும்பி பார்ப்பாள் என அமர்ந்து இருந்தவன், அவள் திரும்பிப் பார்க்காமல் இருக்கவும் அவளிடம் பேச வாயெடுக்க, அச்சமயம் அவன் கைபேசி ஒலி எழுப்பி  அவனை திசை திருப்பியது.

அலைபேசியில் ரவி இன்று முக்கியமான வேலை இருப்பதால், சீக்கிரம் கிளம்பி வரும்படி அவனுக்கு நினைவூட்டிட, அதற்கு மேல் மதியிடம் பொறுமையாக பேசிக் கொள்ளலாம் என நினைத்து வேகமாக குளியல் அறைக்கு சென்று கிளம்ப தயாரானான்.

மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது மதி தனக்கு தேவையான பொருட்களை அவளுடைய பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கவும்  மதியை திரும்பி பார்க்கவும் என மாறி மாறி செய்து கொண்டிருந்தவன்,    காலையில் இருந்து அவனிடம் ஒன்றும் பேசாத மதி அவனை பார்க்காமலேயே  அறையிலிருந்து வெளியேறிவிட அசையாமல் அங்கே நின்று விட்டான்.

ரகுவிற்கு தன் தந்தையின் இறப்பிற்கு தானே முக்கிய காரணம் என குற்ற உணர்ச்சி, பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.

தந்தையின் இறப்பு குடும்பத்தாரின் ஒதுக்கும் என அனைத்தும் அவனை சூழ்ந்து இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அதனை பழகிக்கொண்டவனுக்கு, குற்ற உணர்ச்சி மட்டும் மாறாமல் மனதின் ஓரம் இருக்க தான் செய்தது.

ஆனால் இப்பொழுது மதியின் இந்த ஒதுக்கம் அவனை மலையளவு வேதனை அடையச் செய்தது.

அவன் அசையாமல்   சில நொடிகள் அப்படியே நிற்க , சட்டென்று கதவை திறந்து கொண்டு மதி  அவன் அருகில் வந்து நின்றவள்,

“நமக்கு பிடிச்சவங்க நம்ம கிட்ட பேசாம போனா, ஏன் பேசலன்னு கேட்கணும்.  இப்படி அசையாம நிக்க கூடாது”, எனக் கூறிய மறுநொடி அவன் அணைப்புக்குள் இருந்தாள்.

“பயந்துட்டேன் டி”

“பயபுட்டீங்களா? எதுக்கு பயப்படனும்? காலையில எந்திரிச்சல இருந்து ஏதோ யோசனைல இருந்தேன். அதான் உங்களுக்கு குட் மார்னிங் கூட சொல்லல. அப்புறம் என்னடா காலைல இருந்து ரூம் அமைதியா இருக்கேன்னு நெனச்சா.

நீங்க என்னை பாத்துட்டே இருக்கீங்க, எனக்கு புரிஞ்சிடிச்சு என்ன யோசிக்கிறீங்கன்னு.  சரி நீங்களே என்கிட்ட பேசுவீங்கன்னு நினைச்சா, நீங்க பேசவே இல்ல பாத்ரூம்குள்ள போயிட்டீங்க.

அப்புறம் மறுபடியும் வெளியே வந்தவாவது பேசுவீங்கன்னு பார்த்தா அப்பவும் பேசல.   சரி நான் வெளியே போனா என்ன கூப்பிடவாது செய்வீங்கன்னு நெனச்சேன்.

அப்பவும் இப்படி நிக்கிறீங்க.  உங்களை என்னதான் சொல்றது.   நான் ஒதுங்கி போனால் நீங்களும் இப்படி ஒதுங்கி இருக்கக் கூடாது.  புடிச்சு நிறுத்தி என்ன ஏதுன்னு பேசணும் புரியுதா?”

என குழந்தைக்கு கூறுவது போல் அவன் அணைப்புக்குள் இருந்தவாறே கூற, அவனுக்கு எங்கு அவை  எல்லாம் கேட்டது.

மதி தன்னை தவறாக நினைக்கவில்லை என்பது மட்டும் அவன் நினைவில் இருக்க,  அவளை இறுக்கி அணைத்தவாறு எதற்கும் பதில் சொல்லாமல் அப்படியே நின்று இருந்தான்.

“ரகு?”

“ம்ம்ம்?”

“உங்ககிட்ட தான் சொல்றேன்”

“எனக்கு எதுவும் கேட்கல.  கேக்கவும் மாட்டேன் போடி”

 “அதஎல்லாம் கேட்பீங்க.  சரி போதும் ரகு விடுங்க”

“நான் உன் மேல் கோபமா இருக்கேன். நீ என்கிட்ட எதுவும் பேசாத”

“கோபப்பட்டுக்கோங்க யார் வேணாம்னு சொன்னா.  தள்ளி நின்னு கோபப்பட்டுக்கலாம் இல்ல?”  என்றவள் அவனை தள்ளி நிறுத்திவிட்டு, “காலையில் கிளம்பி ரெடி ஆகி, இப்படி சட்டையை கசக்கி வைக்கணுமா?”

“ஆமா”

“போதும் போய் ஷட் மாத்திட்டு வாங்க சாப்பிட போகலாம்”, எனக்கூறியதும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு போய் சட்டையை மாற்றிக்கொண்டு வந்தான்.

“சரி கிளம்பலாமா”, என மீண்டும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, மதி அவன் அருகே சென்று சட்டை காலரை சரி செய்துவிட்டவள்,

அவன் உயரத்திற்கு எக்கி சட்டென்று அவன் கன்னத்தில்  முத்தமிட்டுவிட்டு, “கிளம்பலாம்”, என கூறியவாறு அவன் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

ரகு அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே அவனை தர தரவென இழுத்து வந்து உணவு மேஜையில் அமர்த்தி விட்டாள்.

கூடவே அவளும் அருகில் அமர்ந்து,  அங்திருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு காலை வணக்கத்தை வைத்துவிட்டு அவனுக்கு தட்டில் சப்பாத்தி எடுத்து வைத்தவள், தானும் எடுத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.

இன்னும் தன் மனைவி கொடுத்த அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்த ரகு ரவியின், “குட்மார்னிங் ரகு” என்ற அழைப்பில் தெளிவடைந்தான்.

அங்கு எப்போதும் போல், கௌதமி பரத்துடைய தொழில் பற்றிய பேச்சும், தேவி ரவியுடன் வளர்த்துக் கொண்டு இருந்த வம்பும் என அந்த நேரம் எப்பொழுதும் போல் போய்  கொண்டிருந்தது.

அப்போது பரத்திடம் கௌதமி, “பரத் தீப்திக்கு டேட் நெருங்கிவிட்டா, நீ அவ கூடவே இருக்கிற மாதிரி இருக்கும். அதனால இப்பவே உன்னுடைய எல்லா வொர்க்கையும் முடிச்சுட்டு மத்த பொறுப்பெல்லாம் யார்கிட்டயாவது  கொடுத்துட்டு, நீ அவ கூட ஒரு ஒன் மன்த் ஸ்டே பண்ணிக்கிற மாதிரி பாத்துக்கோ சரியா”, என்றார்.

உடனே தேவி, “ஆமாம் டா பரத் நான் உன்கிட்ட ஒரு வாரமா சொல்லணும்னு நினைச்சுட்டு இருக்கேன். உன்னை கையில பிடிக்க முடியல. அக்கா சொன்ன மாதிரியே இப்பவே வேலை எல்லாம் முடிச்சிடு”, என்றார்.

“சரிங்கமா, நீங்க சொன்ன மாதிரியே பண்றேன். ஏற்கனவே ஒன் வீக் லீவ் எடுத்துக்கிற ஐடியால தான் இருந்தேன். இப்ப ஒன் மந்த் ஃப்ரீப் பண்ணிக்கிற மாதிரி பாத்துக்கிறேன்”, என்றான், பரத்.

அடுத்த சில நிமிடங்கள் உணவு வேளை அமைதியாக தொடர, திடீரென யோசனை வந்தவராக தேவி, “அக்கா கொஞ்ச நாள்ல தீப்தி குழந்தையோட வீட்டுக்கு வந்துருவா.   அடுத்து மதியும் நல்ல செய்தி சொல்லிடுவா. அப்பறம் இன்னொரு வளைகாப்பு, அடுத்து வீட்ல ஒரே குழந்தைங்க  சத்தம் தான் இல்ல அக்கா. என்ன மதி நான் சொல்றது கரெக்ட் தான?” என்றதும்,

உண்ட உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ள இரும்பும் நிலை ஆனது.  மதிக்கல்ல ரகுவிற்கு. ரகு பொறை ஏறி இரும்ப மதி அவன் தலையை தட்டி விட்டாள்.

ஆனால் அவள் முகத்தில் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை புன்னகைத் தவிர.

அதை கண்ட தேவி “உனக்கு ஏன்டா பொறை ஏறுது?” என்றார்.

“சம்பந்தப்பட்டவன் நான் தானே. எனக்கு தானே பொறை ஏறும்”

“நான் வளைகாப்பு, நல்ல செய்தின்னு பேசிட்டு இருக்கேன்.  அதெல்லாம் பொம்பளைங்க விஷயம் டா. உனக்கு என்ன இதுல சம்பந்தம் இருக்கு”

அவரைப் பார்த்து முறைத்து விட்டு உணவில் கவனம் செலுத்துவது போல் ஓரக்கண்ணால் மதியிடம், “நான் சம்பந்தம் படாம இந்த வளைகாப்பு, நல்ல செய்தி எல்லாம் உனக்கு எப்படி நடக்கும்.  இந்த சித்திக்கு என்ன ஆச்சு இன்னைக்கு”, என்றான் முனுமுனுப்பாக.

மதி அவனைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு, உணவை முடித்துக் கொண்டவளாக, உடனே எழுந்து கொண்டாள்.

“சரி அப்போ நான் கிளம்புறேன். எனக்கு நேரமாச்சு” என்று  அனைவரிடமும் பொதுவாக சொல்லிவிட்டு, ரகுவிற்கு தலையசைப்பையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தேவிக்கும் கௌதமிக்கும் மதி முகத்தில்   வெறும் புன்னகை மட்டும் இருக்க, அவர்கள் இருவருக்கும் அது குழப்பத்தை கொடுத்தது.

ஆனால் ரகுவிற்கு அந்த புன்னகைக்கு பின் ஒளிந்திருக்கும் வெட்கம் நன்றாக விளங்க அமைதியாக தனக்குள் சிரித்துக் கொண்டான்.

மதி எழுந்து சென்றதும் ரகுவும் அதற்கு மேல் அங்கு அமராமல் எழுந்து கொண்டான்.

வேகமாக கை கழுவி விட்டு, தன் அலுவலக பையை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியே சென்றவள், அனைவர் கண்களில் இருந்தும் மறைந்ததும், அதுவரை இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள்.

“ப்பா, என்ன இன்னைக்கு ஆளாளாக்கு சோதிக்கிறாங்க? முடியல”,  என தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், மனதின் படபடப்பு குறைந்ததும் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் இப்படித்தான் ஏதாவது செய்வாள் என நினைத்த ரகு, வேகமாக அவள் பின்னாலேயே வெளியே வந்தவன், தூரமாக அவள் கண்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று கொண்டு,  அவள் செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் புன்னகை இன்னும் விரிந்த வண்ணம் இருந்தது.

———————————————————————–

“டாடி, இந்த தடவ ட்ரிப்புக்கு, நம்ம எங்க போலாம்னு நான் பிளான் பண்ணிட்டேன்.  நம்ம இந்த தடவ ஸ்விஸ் போகலா. உங்களுக்கு ஓகே தான டாடி?”

“………”

“டாடி உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.  என்ன டாடி ஆச்சு. சொல்றது கேக்குதா?

“என்னமோ என்ன சொன்ன?” என்றவாறு தன் யோசனையிலிருந்து வெளிவந்து மகளிடம் தன் கவனத்தை திருப்பினார் ஜெகநாதன், ஜான்வியின் தந்தை.

“எனக்கு என்ன ஆச்சா.  நான் உங்ககிட்ட கேட்டுட்டு இருக்கேன்.  உங்களுக்கு என்ன ஆச்சு. ஏன் அமைதியா இருக்கீங்க”

“ஒன்னும் இல்லம்மா நான் ஒரு யோசனையில் இருந்தேன்.”

“அதான் என்ன யோசனை?சொல்லுங்க.”

“அவன் இருக்கானே, அதான் அந்த உம்னாமூஞ்சி, அவன் நம்ம வேலையெல்லாம் நிறுத்தி வைக்க சொல்றாமா. அதான் யோசனையா இருக்கேன் “

“ஏன் நம்ம டீலிங் கேன்சல் பண்ணிட்டானா? எல்லாத்தையும் மறந்துட்டானா என்ன?” என படபடப்பாக பேசினாள் ஜான்வி.

“அட அதில்லம்மா.  அவன்  கேன்சல் பண்ண சொல்லல.  இந்த வேலையெல்லாம் கொஞ்ச நாளைக்கு தள்ளி வையுங்க. இப்ப பண்ணீங்கன்னா மாட்டிப்பீங்க  அப்படிங்கிறான்.  அதான் என்னன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என மகளை அமைதிப்படுத்தும் விதமாக பொறுமையாக கூறினார்.

“அவ்ளோ தான டாடி. நான் கூட பயந்துட்டேன். இதுல என்ன இருக்கு. இப்படி அவன் சொல்றானா ஏதாவது ஒரு காரணம் இருக்கும். கொஞ்ச நாளைக்கு நம்ம அமைதியா இருப்போமே. அந்த டைமுக்குள்ள நம்ம ஸ்விஸ் ட்ரிப் போயிட்டு வந்துடலாம். சிம்பில்”

“நீ ஈஸியா சொல்லிட்ட மா.  இந்த டைம்ல அனுப்புறோம்னு அந்த வெள்ளைக்காரன்ட்ட டீல் போட்டு வச்சிருக்கோமே.  அவன் வேற அங்க இருந்துகிட்டு ஏன் அனுப்பல. எதுக்கு அனுப்பலனு கேட்டு  கத்திக்கிட்டு இருப்பான்.

அது மட்டும் இல்ல நாள் கொஞ்சம் அதிகமாச்சினாலும்  நம்மளுக்கு கொடச்சல் குடுக்க ஆரம்பிச்சிடுவான். உனக்கே தெரியும் இல்ல”, என்றார் வேகமாக மகளுக்கு புரிய வைக்கும் நோக்கில்.

“இவ்வளவுதானா அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல. அவன் கிட்ட நான் பேசிக்கிறேன். அவன் கிட்ட எப்படி பேசுனா எப்படி காரியம் நடக்கும்னு எனக்கு தெரியும். அது  உங்களுக்கு தெரியும் இல்ல. இதை என்கிட்ட விட்ருங்க”,

என்றவாறு தான்  அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவள் மீண்டும் அவர் புறம் திரும்பி,

“அப்புறம் டாடி ஒன் வீக்ல நம்ம ஸ்விஸ் போற மாதிரி ஏற்பாடு பண்ணிருங்க.  அந்த சரக்கையும் இந்த ஒன் வீக்குள்ள அனுப்பிரலாம்”,  என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஜான்வி.

ஜெகநாதன் போகும் மகளை பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தார்.  அவருக்குத்தான் தெரியுமே இந்த வேலையை அவள் சிறப்பாக செய்து விடுவாள் என்று.

—————————————————————-

இரவு தன் அறையில் சாய்வு இருக்கையில்  அமர்ந்திருந்த மதிக்கு, தன் கையில் இருந்த புத்தகத்தில் மனம் செல்லாமல்,  நேற்று கார்மெண்ட்ஸில் தான் கேட்ட குரலும், அது சொன்ன செய்தியிலும் சுற்றி கொண்டு இருந்தது.

நேற்றே ரகுவிடம் பேச எண்ணியவளால், ரகு பேச ஆரம்பித்ததும்  பேச முடியாமல் போனது. மேலும் அவனிடம் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றால் நேற்று போல்  இன்றும் பழைய நினைவுகளில் வேதனை கொள்வானோ என யோசித்து கொண்டு இருந்தாள்.

இவள் யோசனையில் இருக்கும்போதே வீடு திரும்பிய ரகு அறைக்கு உள்ளே வந்தவன், “ஹாய் மதி”என்று விட்டு, “சாப்பிட்டியா?  என கேட்க, அவள் இல்லை என் தலையசைத்தாள்‌.

“சரி நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன், நம்ம ரெண்டு பேரும் கீழே போய் சாப்பிடலாம்” என்றவாறு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவன், மதியுடன் கீழே உணவு மேஜைக்கு சென்றான். செல்லும் வரையிலும் ரகு மட்டுமே பேசிக் கொண்டிருக்க, மதி அமைதியாகவே வந்தாள்.

அதனைப் பார்த்த ரகு, காலையில் உணவு மேஜையில் நடந்த பேச்சுவார்த்தையினால் தன் முகம் பார்த்து பேச முடியாமல் தயங்குகிறாளோ என  தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டவன்,

அப்படியெல்லாம் இவள் செய்ய மாட்டாளே என தன் கேள்விக்கு தானே பதில் அளித்துவிட்டு மதியை நன்றாக உற்றுப் நோக்கினான்.

முகபாவம் தயக்கத்தில் இல்லாமல் யோசனையில் இருக்க, “என்னாச்சு மதி? ஏன் ஒரு மாதிரி இருக்க ?” என கேட்க, “இல்ல இப்ப நீங்க சாப்பிடுங்க. நாம சாப்பிட்டு முடிச்சிட்டு மேலே போய் பேசலாம்” என்று  கூறினாள்.

இதை கேட்ட ரகு, அவள் முகத்தில் இருந்த தீவிர பாவத்தை கண்டு, “சரி அவளை சொல்லுவா” என மனதோடு எண்ணிக்கொண்டு உணவு உண்ண ஆரம்பித்தான்.

காவல் புரிவா(ள்)ன்….

மகா ஆனந்த் ✨

Advertisement