Advertisement

கைப்பாவை இவளோ 08

                              காலையில் சாஷா கண்விழித்த நேரம் பீஷ்மன் அவள் அருகில் இல்லை. “நைட் இங்கேதானே இருந்தான்…” என்று யோசனையுடன் அவள் விழிகளால் அறையை வட்டமிட, அவளுக்கு முன்பே அவள் பிள்ளை விழித்துக் கொண்டது போல.

                               கட்டிலில் இருந்து இறங்கும்போதே லேசாக தள்ளாடினாள் சாஷா. “இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறதே..” என்று பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மீண்டும் கட்டிலில் அமர்ந்துவிட்டாள். தலை சுழலுவதைப் போல் இருக்க, கைகளால் தலையைப் பற்றிக் கொண்டு அமர்ந்துவிட்டாள் அவள்.

                 சில நிமிடங்களில் உடல் இயல்புக்கு திரும்ப, மெல்ல முயற்சி செய்து எழுந்து கொண்டாள். பற்பசையை வாயில் வைக்கவுமே, உமட்டிக் கொண்டு வர, மொத்தமாக துவண்டு போனாள் சாஷா. ஒருவழியாக அவள் குளியலறையில் இருந்து வெளியே வர, பீஷ்மன் அப்போதுதான் அறைக்குள் நுழைந்தான்.

              சாஷாவின் வாடிய முகத்தைக் கண்டு வேகமாக அவளை நெருங்கினான் பீம். “என்ன பண்ணுது சாஷா..” என்றவன் அவளை அணைத்து பிடிக்க, அவனை மறுக்கவில்லை சாஷா. அவன் தோளில் சாய்ந்து கொண்டவளை பீஷ்மனே தூக்கி வந்து கட்டிலில் கிடத்தினான்.

              “என்ன செய்யுது… ஹாஸ்பிடல் போவோமா..” என்று பீஷ்மன் கேள்வி எழுப்ப, மறுப்பாக தலையசைத்து படுத்துக் கொண்டாள் சாஷா. சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டவள் மீண்டும் உறங்கிப் போக, பீஷ்மன் அவளை விட்டு நகராமல் அமர்ந்திருந்தான்.

                கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கழித்து அவள் மீண்டும் கண்விழிக்க, அப்போதும் அவள் அருகில் தான் அமர்ந்திருந்தான் பீஷ்மன். சாஷா மெல்ல எழுந்து அமர, “இப்போ ஓகே வா..” என்றான் அவளிடம். முகத்தில் பெரிதாக உணர்வுகள் இல்லை.

               சாஷா அமைதியாக தலையசைத்து அமர்ந்து கொள்ள, அவளுக்கான உணவு வந்தது. அவளை எழுந்து கொள்ள விடாமல் உணவுத்தட்டை தானே வாங்கி வந்து பீஷ்மன் அவள் கையில் கொடுக்க, அவனை எட்டாம் அதிசயம் போல் பார்த்தாள் சாஷா.

                 பின்னே, அவனுக்கு தண்ணீர் வேண்டும் என்றால்கூட, சாஷாதான் எடுத்துக் கையில் கொடுக்க வேண்டும்.. அப்படியிருக்க, அவன் சஷாவுக்கு உணவை எடுத்துக் கொடுத்தால் அவளும் என்ன நினைக்க முடியும்.

                 சாஷாவின் சிந்தனையை கலைக்கும் விதமாக, “உன்கூடவே தான் இருக்கப்போறேன். நிதானமா ரசிக்கலாம்.. சாப்பிடு..” என்றான் பீஷ்மன். முகத்தில் ரசனையாக ஒரு புன்னகை.

                அவன் புன்னகையின் அர்த்தம் புரியாமல் போனாலும், அவன் ரசிக்க சொன்னதில் கடுப்பாகிவிட்டது அவளுக்கு. எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொள்ள, “சீக்கிரம் சாப்பிடு… நாம கிளம்பனும்.” என்றான் பீஷ்மன்.

                “எங்கே..” என்று கேள்வி எழுந்தாலும், அவனிடம் கேட்க மனதில்லாமல் அவள் மௌனமாக, பீஷ்மனும் “நீ கேட்காமல் சொல்லப் போவதில்லை..” என்று நினைத்துக் கொண்டு சட்டமாக அமர்ந்துவிட்டான். அவள் நிதானமாக உண்டு முடிக்க, தன் அலைபேசியில் இருந்து மணிக்கு அழைத்தான் பீஷ்மன்.

               மணி அடுத்த நிமிடம் கையில் ஒரு பையுடன் அறைவாசலில் வந்து நிற்க, அவனிடம் இருந்த பையை வாங்கி கொண்டு அவனை அனுப்பி வைத்தான் பீஷ்மன். சாஷாவிடம் தன் கையில் இருந்த பையை நீட்டியவன் “சீக்கிரம் கிளம்பு…” என்றுவிட, அந்த பையை கையில் வாங்காமல் “எங்கே..” என்றாள் அவள்.

                 “எங்கே கூப்பிட்டாலும் வரேன் ன்னு சொன்ன..” என்று பீஷ்மன் அவளை மடக்க, அவன் கையிலிருந்த பையை ஒரு முடிவுடன் வாங்கிக் கொண்டாள் அவள்.

                   கட்டிலில் தன்னருகில் அந்த பையை வைத்துவிட்டு அவள் அமைதியாக அமர்ந்திருக்க, “ஒன்பது மணிக்கு முகூர்த்தம்.. இன்னும் ஒருமணி நேரம் இருக்கு…” என்று தகவல் சொன்னான் பீஷ்மன்.

                      சாஷா அவன் வார்த்தைகளில் அதிர்ச்சியுடன் அவன் முகம் பார்க்க, “நமக்குதான்.. கிளம்பு..” என்றான் சட்டமாக

                  “பீம்..” என்றவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று புரியவில்லை. “பேசினால் மட்டும் என்ன?? உன் வார்த்தையை மதிக்கவா போகிறான்..” என்று அதுவும் சேர்ந்து கொள்ள, அவன் பொம்மை அந்த நிமிடம் முதல் நிஜ பொம்மையாகவே மாறிப் போனது.

                  அதற்குமேல் பீஷ்மனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை சாஷா. தனக்குள் இறுகியவளாக, அந்த பையை எடுத்துக் கொண்டு, உடைமாற்றும் இடத்திற்கு சென்றவள் அடுத்த பதினைந்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டாள்.

                  அவள் வரவும், பீஷ்மன் ரசனையான பார்வை ஒன்றை அவள் மீது செலுத்த முற்பட்டாலும், முடியவில்லை அவனால். வழக்கம்போல அவனின் தீராத மோகம் தான் வெளிப்பட்டு தொலைத்தது. அவன் கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தை அவன் பொம்மையும் கண்டுகொள்ள, அதற்கும் எதிர்வினை ஏதும் இல்லை பொம்மையிடம்.

                   பீஷ்மன் எழுந்துஅவளை நெருங்கியவன் அவள் ஒரு கன்னத்தை கையில் ஏந்த, அவன் செய்கையை உணர்ந்தவளாக, பின்னால் நகர்ந்தாள் சாஷா… பீஷ்மன் அவளை சட்டென முறைக்க, “மேக்கப் கலைஞ்சிடும்…” என்றாள் சாஷா..

                 “எனக்கு அதைப்பற்றி கவலையே இல்ல..” என்றவன் மீண்டும் நெருங்க,

               “ஆனா, எனக்கு கவலை இருக்கு.. வேஷம் போடறவளாச்சே.. கல்யாணம் முடியுறவரைக்கும்  அதற்கேற்ப வேஷம் போடணும் இல்லையா..” என்றவள் மீண்டும் பின்னடைய, இப்போது ஒரு ரசிப்புடன் அவளைத் தாழவியது அவன் பார்வை.

               “நிறைய பேச கத்துகிட்ட சாஷா.. இதுவும் நல்லாதான் இருக்கு. பட், எனக்கு இப்போ கிஸ் வேணும். ” என்று நின்றான் அவன்.

                 சாஷா “இவனை என்ன செய்வது..” என்று பார்க்க, “ஒரே ஒரு கிஸ்..” என்று இதழைக் குவித்தான் பீஷ்மன்.

                 சாஷா மறுப்பாக தலையசைக்க, “அப்போ என்னை அலோவ் பண்ணு..” என்றவன் அவளை நெருங்க,

                 “டைம் ஆகலையா..” என்று நினைவுபடுத்தினாள் அவள்.

                 “ஒரு கிஸ்க்கு என்ன நேரமாகிடும்.. கொடுத்திடு கிளம்பலாம்…” என்றான் அடமாக.

                “என்னால முடியாது…” என்று முதல்முறையாக பீஷ்மனிடம் வாய்திறந்து தன் மறுப்பை அழுத்தமாக பதிவு செய்தாள் சாஷா.

                “ஏன்..” என்று அவன் ஒற்றைவார்த்தையில் கேட்க, பதில் வரவில்லை.

                “ஏன் முடியாது கேட்டேன்..” என்று பீஷ்மன் வார்த்தையை அழுத்த

                அவனை நிமிர்ந்து பார்த்த சாஷா, பதில்கூறாமல் அவனை வெறித்து நோக்கினாள். அவள் பார்வையின் பொருளை உணரமுடியாமல் “வா..” என்று அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான் பீஷ்மன்.

                குறைந்தபட்சம் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறி என்னவென்று அவளை விசாரித்திருக்கலாம் அவன். அப்படி செய்திருந்தால், பின்னால் நிகழவிருந்த பல அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், பீஷ்மனின் கட்டங்கள் உச்சத்தில் இருக்க, யாரைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தன் கையில் கிடைத்த பொம்மையை வைத்து விளையாடத் தொடங்கி இருந்தான் அவன்.

             அவளை அழைத்துக் கொண்டு, சென்னையின் மையப்பகுதியில் இருந்த அவனுக்கு சொந்தமான நட்சத்திர விடுதிக்கு அவன் வந்து சேர, அதன் ஒருபகுதியில் பிரத்யேகமாக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பூக்களைக் கொண்டு மேடை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க, அந்த அரங்கு முழுவதுமே பூ வேலைப்பாடுகள் சாஷாவுக்கு பிடித்த பிங்க் வண்ணத்தில் மின்னிக் கொண்டிருந்தது.

                மணி, சஷாவின் மேனேஜர், பீஷ்மனின் உதவியாள், இன்னும் அவனின் பௌன்சர்கள் என்று மிகச்சிலர் மட்டுமே இருந்தனர் அந்த அரங்கில்.

மேடையில் ஐயர் ஒருவரும் காத்திருக்க, இறுதியாக அந்த அரங்கில் நுழைந்தது பீஷ்மனும், சாஷாவும் தான். சாஷா எதையும் மனதில் ஏற்றாமல், பீஷ்மனின் அசைவுக்கு ஏற்ப சுழன்று கொண்டிருந்தாள். பீஷ்மன் அவள் கைபிடித்தது, அவளை அழைத்துச் சென்று மேடையில் அமர்த்தியது எதுவுமே மனதில் பதியவில்லை சாஷாவுக்கு.

                     ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க, பீஷ்மன் சாஷாவை அவ்வபோது கவனித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். ஐயர் பூக்களை இருவரிடமும் நீட்டி கடவுளை வணங்க சொல்ல, சாஷாவுக்கு அவர் கூறியது காதிலேயே விழவில்லை. அவள் தான் மொத்தமாக செயலிழந்து போயிருந்தாளே.

                  நிச்சயம் பீஷ்மனுடனான திருமணத்தை கனவில் கூட கற்பனை செய்ததில்லை சாஷா. இறுதிவரை  உடன் வைத்துக் கொள்வான் என்று நம்பிக்கை இருந்தாலும், திருமணம் செய்து கொள்வான் என்று சிந்தித்ததில்லையே.

                  உண்மையில் இந்த திருமணத்தை நினைத்து பூரித்துப் போயிருக்க வேண்டும் அவள். காதலித்தவனின் கைப்பிடிப்பதை எண்ணி கரைந்திருக்க வேண்டும். காதலுடன் ஒவ்வொரு சடங்கிலும் அவன் கைபிடித்து கண்சாடை பேசியிருக்க வேண்டும்.

                 ஆனால், அவள் மனம் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவள் மனம் ஸ்ரீகாவை தேவையில்லாமல் நினைவுபடுத்த, எதிரில் எரிந்து கொண்டிருந்த நெருப்பின் கனல் அவள் நெஞ்சில் வீசியது.

                  ஏனோ, ஸ்ரீகா  உறுத்திக் கொண்டே இருந்தாள் சாஷாவிற்குள். அத்தனை எளிதில் பீஷ்மன் தள்ளி வைத்ததை ஏற்க முடியவில்லை அவளால். அவன் பிள்ளையை இழக்க முடியாமல் தவிப்பவள் தான்… ஆனால், அவனை ஏற்றுக் கொள்ள மறுத்தது மனம்.

               ஆனால், மனதில் நினைத்ததை வெளிப்படையாக பீஷ்மனிடம் உரைத்து விட்டால் அவள் பொம்மை இல்லையே. அவன் நினைப்பதை அப்படியே தனது முடிவாக ஏற்றுக் கொள்பவள் தானே எப்போதும். இபோது மட்டும் மாறிவிடவா போகிறது என்று ஒரு விரக்தி மனநிலை.

                  அசைவற்று அவள் அமர்ந்திருக்க, அவள் கைபிடித்து அங்கே நிறுத்தப்பட்டிருந்த கலசத்திற்கு பூஜையை செய்து முடித்தான் பீஷ்மன். அடுத்தடுத்து மந்திரங்கள் ஓதி, ஐயர் பொன்தாலியை பீஷ்மனிடம் கொடுக்க, பீஷ்மன் கரங்கள் நெருங்கும்போது தான் உயிர்வந்தது சாஷாவுக்கு.

                கலங்கிய கண்களுடன் அவள் பீஷ்மனை ஏறிட, அவள் கண்ணீரை கண்டுகொள்ளாமல் அவள் கழுத்தில் தாலியை அணிவித்து, அவள் நெற்றியில் பொட்டிட்டான் பீஷ்மன். சாஷாவின் கண்களில் என்ன முயன்றும் கண்ணீர் வடிந்துவிட, அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டு அவளை மெல்ல அணைத்துக் கொண்டான் பீம்.

                 மேலும், “மேக்கப் கலைஞ்சிடும்..” என்று மெல்லிய குரலில் அவள் காதில் முணுமுணுக்க, அவன் பார்வையை சந்திக்கவே இல்லை சாஷா. மணியும் அங்கிருந்த மற்றவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள, சாஷா பெயருக்கு ஒரு புன்னகையை கொடுத்தாள்.

                 பீஷ்மன் அந்த விடுதியில் இருந்த அவனது தனிப்பட்ட அறைக்கு சாஷாவை அழைத்து செல்ல, அங்கும் பொம்மையாகவே நின்றாள் அவள்.

                   பீஷ்மன் பொறுக்க முடியாமல்  “என்ன ஓடுது உன் மண்டைக்குள்ள.. என்ன யோசிச்சுட்டு இருக்க..” என்றான் அதட்டலாக. சாஷா பதிலேதும் கூறாமல் அவனை வெறித்து நோக்க,

                   “அறைஞ்சிடுவேன் சாஷா..” என்று கையை ஓங்கிவிட்டான். அடித்துவிடுவானோ என்று பயத்தில் அவள் கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ள, அடிக்க மனம் வருமா பீஷ்மனுக்கு.???

                   அடிக்க கையோங்கியவன் அடுத்த கையால் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள, மெல்லிய குரலில் விசும்பத் தொடங்கியது அவன் பொம்மை. மெல்லிய குரலாக ஆரம்பித்த அழுகை, விம்மி வெடித்துவிட, அவன் நெஞ்சில் சாய்ந்து பத்து நிமிடங்கள் முழுதாக அழுது தீர்த்தாள் அவள்.

                  எதற்கு அழுகிறாள் என்பது புரியாமல் அவன் மண்டை காய, “கல்யாணம் பிடிக்கலையா.. இல்லை என்னை பிடிக்கலையா..” என்றான் இறுதியாக

                  சாஷா அவன் நெஞ்சில் இருந்து விலகி கட்டிலில் அமர்ந்துவிட, அவள் அருகில் அமர்ந்தான் அவன். “என்ன சாஷா.. சொன்னாதானே தெரியும்..அழறதை விட்டு ஏதாவது பேசு..” என்று பீஷ்மன் மென்மையாகவே கூறினாலும், பதில் பேசவில்லை அவள்.

                 ‘விட்டால் அழுதே கரைவாள்’ என்று அவளைப் புரிந்தவனாக எண்ணமிட்டவன் “எழுந்துக்கோ.. ரெடியாகு… பிரஸ் மீட் இருக்கு.. இன்னும் ஒருமணி நேரம் தான் இருக்கு..” என்று தகவல் கொடுத்தான் அப்போதும்.

                   சாஷா “பீம்.” என்று பயத்துடன் கத்த, “என்னை மீறி யாரும் உன்னை நெருங்க முடியாது..” என்றவன் வாயிலில் கேட்ட அழைப்பு மணியின் ஓசையில் எழுந்து வாசலுக்கு சென்றான். அங்கே அவர்களுக்கான உணவு வந்திருக்க, வாசலோடு பணியாளை அனுப்பிவைத்து, உணவுடன் அறைக்குள் வந்தான் அவன்.

             சாஷா கட்டிலில் அமர்ந்திருக்க, தட்டில் உணவை எடுத்து வைத்து அவளை நெருங்கியவன் தட்டை அவளிடம் நீட்டி, அவள் அருகில் அமர்ந்தான்.

               சாஷா உணவை மறுப்பதற்காக வாயைத் திறக்க, “ஊட்டிவிடு..” என்றான் அந்த ராட்சசன்.

                சாஷா “இவனை என்ன செய்தால் தகும்??” என்று பார்க்க, “பசிக்குது சாஷா.. நேற்று நைட் உன்னோட சாப்பிட்டது தான்..” என்று ஒரே வரியில் அவளை சரிக்கட்டி விட்டான். மற்ற அனைத்தும் பின்னுக்கு போக, சிரத்தையுடன் அவனுக்கு உணவை ஊட்டத் தொடங்கினாள் சாஷா.

               பீஷ்மன்  உண்டு முடித்து மீண்டும் தட்டை நிரப்ப, சாஷா மறுப்பதற்குள் “உன் பாப்பாவுக்கு பசி வந்திருக்கும்.. சாப்பிடு..” என்றான். அதற்குமேல் மறுக்கமுடியாமல் அவள் உண்டு முடித்து கையைக் கழுவிக் கொண்டு வர,

               “கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ.. அப்புறம் கிளம்புவோம்..” என்றான் பீஷ்மன். சாஷாவுக்கும் உடல் ஓய்வு கேட்க, படுத்துவிட்டாள். பீம் அவள் அருகில் படுத்துக் கொண்டவன் நேற்று இரவு போலவே அலுங்காமல் அவளைத் தன் கைவளைவில் வைத்துக் கொண்டு உறங்கத்

தொடங்கினான் பீஷ்மன்.

                சாஷாவும் மெல்ல உறக்கத்திற்கு சென்றுவிட, மீண்டும் இருவரும் கண்விழித்தபோது நேரம் கிட்டத்தட்ட மதியத்தை நெருங்கி கொண்டிருந்தது. பீஷ்மனுக்கு அப்போதுதான் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு  செய்தது நினைவுக்கு வந்தது. அவன் அவசரமாக மணியை அழைக்க “லஞ்ச் அரேஞ்சு பண்ணிட்டேண்ணா. சாப்பிட்டுட்டு இருக்காங்க.. நீங்க பொறுமையா வாங்க…” என்றான் மணி.

               அவன் பேச்சில் திருப்தியுற்றவன் அடுத்து சாஷாவை எழுப்ப, உடனே எழுந்து கொண்டாள் அவள். பீஷ்மன் இப்போதும் பையை அவளிடம் நீட்ட, அவளுக்கான உடை ஒன்று தயாராக இருந்தது.இப்போது அணிந்திருந்தது போல பட்டுசேலை அல்லாமல் விலையுயர்ந்த வெள்ளைநிற ஷிபான் சேலை. பூக்களை வாரியிறைத்தது போல் அத்தனை அழகுற அமைந்திருந்தது அந்த சேலை.

               பீஷ்மனை அவள் கேள்வியாகப் பார்க்க, சீக்கிரம் சாஷா. டைம் இல்ல..” என்று அவசரப்படுத்தினான் அவன். அடுத்த அரைமணி நேரத்தில்  பீஷ்மனும், சாஷாவும் தம்பதியாக பத்திரிக்கையாளர்கள் முன்பு நிற்க, அன்றைய முக்கிய செய்திகளில் இடம் பிடித்தனர் இருவரும்.

                 பீஷ்மன் -சாஷாவின் திருமணம் திரைத்துறையில் பெரிதாகப் பேசப்பட, அடுத்தடுத்து வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணமே இருந்தது . ஆனால், அந்த வாழ்த்துக்களுக்கு பதிலாக பெற்ற மகளை சபித்துக் கொண்டிருந்தார் சாஷாவின் அன்னை.

                    தங்கமுட்டையிடும் வாத்து கையை விட்டு போன ஆத்திரம் அவருக்கு. அவள் தம்பி அன்னைக்கும் மேலாக இருக்க, எப்படி சாஷாவை மீண்டும் தங்கள் கைக்குள்  கொண்டு வருவது என்று சிந்திக்க தொடங்கி இருந்தான் அவன்.

                    இவர்களின் திட்டம் சாஷாவை என்ன செய்ய காத்திருக்கிறதோ ???

          

.

                

                

                           

Advertisement