Advertisement

கைப்பாவை இவளோ 07

                  தன் கன்னத்தை அழுத்தமாக தீண்டிய பீஷ்மனின் விரல்களின் தீண்டலில் தான் கண்களைத் திறந்தாள் சாஷா. பீஷ்மனின் பார்வை அவளை விடாமல் தீண்ட, சோர்வுடன் மெல்லச் சிரித்தது பொம்மை. அதற்குமேல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அவள் கட்டிலில் படுத்துக்கொள்ள முற்பட, அவளை விடாமல் பிடித்து அமர்த்தினான் பீஷ்மன்.

                “இன்னும் என்ன பீம். அடுத்து யாரைப் பார்க்க போகணும்… நீ எங்கே கூப்பிட்டாலும் வரேன். ஆனா, இப்போ ரொம்ப டயர்டா இருக்கு.. ப்ளீஸ் என்னை தூங்கவிடு..” என்றாள் சாஷா. அவள் முகம் அழுததில் வீக்கம் கண்டிருக்க, மொத்தமாக சோர்ந்து போயிருந்தாள்.

                 “படுத்துக்கலாம்.. முதல்ல எழுந்திரு. முகத்தை கழுவிட்டு ஜூஸை குடிச்சுட்டு தூங்கு.. “என்றான் பீஷ்மன்.

                 “எனக்கு எதுவும் வேண்டாம். என்னை தூங்க விடு… ப்ளீஸ்.” என்று அவள் மீண்டும் படுக்க முற்பட,

                 “சொல்லிட்டே இருக்கேன்ல சாஷா… உன் குழந்தையைக் கூட யோசிக்கமாட்டியா.. அதுவும் உன்னோட பட்டினியா இருக்கட்டுமா.. பரவாயில்லையா உனக்கு..” என்று பீஷ்மன் கடினத்துடன் அதட்ட

                   “பாப்பாக்கு பசிக்கும்ல…” என்றவள் உடனே எழுந்து கொண்டாள். அவளைக் கண்டு பீஷ்மனுக்கே பாவமாகிப் போக, மீண்டும் அவள் கைகளைப் பிடித்து இழுத்து தன்னெதிரில் அமர்த்தினான் அவன்.

                    “ஏன் இப்படி இருக்க சாஷா நீ..” என்று பீஷ்மன் தளர்ந்து போனவனாக அவளிடம் பேச்சு கொடுக்க

                “எப்படி இருக்கேன்…” என்றாள் சாஷா.

                 பீஷ்மன் பதில் எதுவும் கொடுக்காமல் அவளை வெறிக்க, “நான் இப்படி இருக்கறதுக்கு நீங்க எல்லாம் தான் காரணம் பீம். நீங்க எல்லாரும் தான் என்னை இப்படி மாத்தி வச்சிருக்கீங்க. ஆனா, இதுவும் நல்லது தான். நான் இப்படி இருக்கறதால தான் நீ நினைக்கிறபடி எல்லாம் உன்னால என்னை வளைக்க முடியுது.”

               “உன் அம்மா பேசினதுல கூட எனக்கு பெருசா கோபமெல்லாம் வரல. என்ன இப்போ?? அவங்க என்ன பொய்யா சொல்லிட்டாங்க. வேசி தானே நான். என்ன இருந்தாலும் உன் பணத்துக்காகவும், உன் மூலமா கிடைச்ச படவாய்ப்புகளுக்காகவும் தானே உன்னோட இருந்தேன். அவங்க சொன்னது எப்படி தப்பாகும்..”

              “இது நான் கோபப்படக் கூட எனக்கு தகுதி இல்ல. அவங்க என்ன பேசினாலும் வாங்கிக்க வேண்டிய இடத்துல தான் நான் இருக்கேன். ஏன்னா, நான் உன்னை வச்சிருக்கேனே. அவங்களோட பிள்ளையை மயக்கி வச்சுருக்கேன். ஆனா, உன் அம்மாவுக்கு உன்மேல ரொம்ப பாசம் இல்ல. நீ என்ன செய்தாலும் உனக்கு அவங்க சப்போர்ட் பண்ணுவாங்க..”

             “நீ ஆசைப்படற எல்லா விஷயங்களும் அப்படித்தான் இல்லையா. ஒருவேளை எனக்கும் அவங்களை மாதிரி அம்மா கிடைச்சு இருந்தால், நானும் நல்லவளாக வாழ்ந்திருப்பேனோ என்னவோ.. யாருக்கு தெரியும்??” என்று சாஷா உடைந்தவளாக பேசிக் கொண்டிருக்க

                  “நீ அவங்களைவிட நல்லவ சாஷா. உன்னை ஜட்ஜ் பண்ண அவங்க யாரு?? ஏன் அவங்க பேச்சுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கற??” என்று பீஷ்மன் அமைதியாக கூற

                  “ஏன்னா. அவங்க உன்னோட அம்மா இல்லையா.. ” என்றாள் ஒரே பேச்சாக. உன்னை வைத்துதான், உன்னைக் கொண்டுதான் அவர்கள் முக்கியம் எனக்கு என்று ஒரே வார்த்தையில் அவள் புரியவைத்துவிட, பீஷ்மன் ஒரு கையால் அவள் கன்னம் தாங்கி, மறுகன்னத்தில் இதழ் பதித்தான்.

                 அவள்அசைவில்லாமல் அமர்ந்திருக்க, “என்னை கல்யாணம் பண்ணிக்கோ.” என்றான் மீண்டும் ஒருமுறை.

                 “நான் உனக்கு வேண்டாம் பீம். நீ உன் அமாம் சொல்றதை கேளு. அவங்க பார்க்கிற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ. நான் எந்த வகையிலும் உன் வாழ்க்கையில இடையிட மாட்டேன். நீ அவங்க பேச்சைக் கேளு.” என்று சாஷா கிடைத்த இடைவெளியில் அவனிடம் பேச்சுவார்த்தையை தொடங்க, அவளைப் பேசவிடாமல் அவள் இதழ்களை சிறைபிடித்தான் அவன்.

               அவன் செயலில் சாஷா அமைதியாக, ஒரு முழு நிமிடத்திற்கு பிறகு அவனாகவே விடுவித்தான் அவளை. அவள் அப்போதும் மௌனம் காக்க, மேசையில் இருந்த ஜூஸை எடுத்து அவள் கையில் கொடுக்க, “இல்ல.. கொஞ்சநேரம் கழிச்சு..” என்று தொடங்கியவள் அவன் பார்வையில் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

                பீஷ்மன் அந்த பழச்சாறை கையில் வாங்கி அவனே அவளுக்கு புகட்டிவிட, அவள் குடித்து முடிக்கவும் “படுத்துக்கோ..” என்று தான் விலகி வழிவிட்டான்.

                  சாஷா “குளிச்சுட்டு வரேன் பீம்..” என்று விலக,

                 “அப்புறம் குளிக்கலாம். எனக்கு தூக்கம் வருது.. வா..” என்று அவளை விடாமல் இழுத்துக் கொண்டவன் தானும் அவள் அருகில் படுத்துக் கொண்டான்.

                 அவன் செயலில் சாஷா உள்ளுக்குள் அதிர்ந்து போக, அவள் அதிர்ந்த அளவுக்கெல்லாம் யோசிக்கவே இல்லை பீஷ்மன். அமைதியாக படுத்தவன் விட்டத்தை பார்த்தபடி இருக்க, சாஷா மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

                 ஆனால், அவள் கண்களை மூடிய இரண்டாவது நிமிடம் “சாஷா..” என்று ஆழ்ந்தக்குரல் அவள் முதுகுக்கு பின்னே ஒலிக்க, சாஷாவுக்கு நெஞ்சுக்கூடு காலியானது. அவளால் அவனது இந்தக்குரலை மறுக்க முடியாது… ஆனால், இந்த நேரத்தில் இது சரியானதா, இல்லையா என்று அதுவேறு ஒருபுறம் குழப்பியது.

                   செய்வதறியாமல் அவள் படுத்திருக்க, பீஷ்மனே அவளைத் தன் கைகளால் திருப்பிக் கொண்டான். அப்படியே அலுங்காமல் ஒரு பெண் பொம்மையை திருப்புவதைப் போலத்தான் ரசனையுடன் அவளைத் திருப்பினான் பீஷ்மன். சாஷா பயந்து கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக் கொள்ள,

                  “நீ இப்படிக் கண்ணை மூடும்போது தான் இன்னும் அதிகமா என்னன்னவோ செய்யத் தோணுது…” என்று அவள் தாடையைப் பிடித்து கொஞ்சினான் அவன். வெகுநாட்களுக்குப் பிறகான அவனது கொஞ்சும் குரல், சாஷாவை சற்று நிம்மதியாக்கியது.

                 “அவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன் “மொத்தமா எல்லாம் விலகியிருக்க முடியாது. இப்படியே தூங்கு. ” என்று அவளைத் தன் கைவளைவில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். சாஷா “இது பீஷ்மனா…” என்று வியப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள்.

                ஆனால், உடலின் களைப்பு ஓய்வுக்கு கெஞ்ச, அடுத்த பத்து நிமிடங்களில் அவளும் உறங்கிப் போயிருந்தாள். முதல்முறையாக சாஷாவின் படுக்கையில் காமமில்லாமல் அவளோடு கூடியிருந்தான் பீஷ்மன். ஏனோ அவனுக்கும் வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு ஆழ்ந்த உறக்கம்.

                  இருவருமே மதியம் படுத்தவர்கள் அன்று இரவு வரை உறங்கி எழ, சாஷாவின் மனமும் ஓரளவுக்கு சமன்பட்டிருந்தது. பீஷ்மன் அசந்து உறங்கிக் கொண்டிருக்க, சாஷா முதலில் விழித்து எழுந்தாள். அவள் தனது இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து வெளியேற, அதற்குள் பீஷ்மன் விழித்து அமர்ந்திருந்தான்.

                   குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் அவன் சாஷாவைப் பார்க்க, மெல்லிய சாட்டின் இரவு உடையில் வெளியே வந்தாள் அவள். பீஷ்மனின் பார்வை அவள்மீது அழுத்தமாக படிய, ” ட்ரெஸ்ஸ சேஞ்ச் பண்ணு சாஷா..” என்றான் அழுத்தமாக

                 சாஷாவுக்கு அந்த நிமிடம் அவன் அப்படி சொன்னது பிடிக்கவில்லை. “ஏன் இவன் திருமணம் செய்து கொள்ளப்போவதால் நான் இப்படிபட்ட உடைகளை அணியக்கூடாதா.. இவன் மனைவி என்ற வார்த்தைக்கு மரியாதை கொடுக்க வேண்டுமா..” என்று அவள் மனம் கோபம் கொண்டது.

                  ” ஏன் இந்த ட்ரஸ்க்கு என்ன..??” என்று அவள் பீஷ்மனிடம் கேள்வி கேட்க, பீஷ்மனின் புருவங்கள் உயர்ந்தது. அவன் பார்வையில் சாஷா தலையைக் குனிய, பீஷ்மன் எழுந்து கொண்டான். அவன் மெல்ல சாஷாவை நெருங்க, பின்னடைந்தவள் குளியலறைக் கதவில் மோதி நின்றாள்.

                  பீஷ்மன் அவளுக்கு நெருக்கமாக நின்று தன் மூச்சுக்காற்றால் அவள் உடலின் குளிர்ச்சியை உறிஞ்சிக் கொள்ள, சாஷா “பீம்..” என்று பயத்தில்  திணறினாள்.

                    “பொம்மைக்கு வாய் அதிகமா போச்சுல்ல..” என்றவன் அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான். அவள் இரவு உடையின் கோட்டை அவன் கழட்டி விட முயற்சிக்க, “பீம்..” என்றவள் அவன் கையைத் தட்டிவிட்டாள்.

                    “இந்த ட்ரஸ்க்கு என்ன ன்னு கேட்ட இல்ல. இந்த ட்ரெஸ்ல உன்னைப் பார்த்தால் எனக்கு இதுதான் தோணுது. இப்படித்தான் நடந்துக்க முடியுது.. ” என்றவன் அவளைத் தன்னோடு சேர்த்தணைக்க,”பீம்..” என்று முனகினாள் சாஷா.

                     அவள் குரலை சட்டை செய்யாமல் முன்னேறியவன் அவள் கன்னம், இதழ்கள், கழுத்து என்று கிழிறங்க, அவன் கிரங்கிய நேரம் “பீம்..” என்று தன் முழுபலத்துடன் அவனை தள்ளி விட்டாள் சாஷா. பீஷ்மன் இரண்டடி தள்ளி நின்றவன் “சொல்லு.. டிரஸ் மாத்துவோமா.. வேண்டாமா..??” என்று இதழ்பிரிக்காமல் சிரிக்க, அவனை முறைத்து நின்றாள் சாஷா.

                   அவளைக் கண்டு கொள்ளாமல் “நான் வர்றதுக்குள்ள ட்ரெஸ்ஸை மாத்தி இருக்கணும். இல்ல.. இன்னிக்கு நைட்க்கு நான் பொறுப்பில்ல..” என்று குளியலறைக்குள் நுழைந்தான் பீஷ்மன்.

                    சாஷா அவனை எதுவும் செய்ய முடியாமல் கோபத்தில் பற்களை கடித்தவள், கால்களை தரையில் உதைத்துக் கொண்டு உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தாள் சாஷா. அவன் வருவதற்குள் அவள் உடையை மாற்றிக் கொண்டு அமர்ந்திருக்க, பீஷ்மன் மெல்லியதாக சிரித்துக் கொண்டான்.

                 “வா.. சாப்பிடு.” என்று அவன் கையை நீட்ட, அவன் கையைப் பிடிக்காமல் எழுந்து முன்னே நடந்தாள் அவள். அன்று இரவு உணவுக்கு பின் மீண்டும் மாத்திரைகளின் தயவில் சாஷா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட, அவள் உறக்கத்தை தழுவிய மறுநிமிடம் அவளைவிட்டு விலகி எழுந்து கொண்டான் பீஷ்மன்.

                அந்த பெரிய ஹாலின் சோஃபாவில் அமர்ந்து கொண்டு தன் அலைபேசியில் இருந்து சிலருக்கு அழைத்து அவன் பேச, அந்த இரவு நேரத்தில் அவன் கட்டளைகள் வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிக் கொண்டிருந்தது. இரவு மணி மூன்றை நெருங்கும் நேரம், தன் வேலையை முடித்து அவன் படுக்கைக்கு வர, நல்ல உறக்கத்தில் இருந்தாள் சாஷா.

           பீஷ்மன் அவள் அருகில் படுத்தவன் அவள்மீது கையை வைக்க, உடலை குறுக்கி லேசாக வளைத்து கண்களைத் திறந்தாள் அவள். மெல்லியத் தொடுகைக்கே அவள் விழித்துக் கொண்டது பீஷ்மனுக்கு வியப்பாக இருக்க, “படுத்துக்கோ..” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு தன் நெஞ்சில் அவளை சாய்த்துக் கொண்டான் அவன்.

              சாஷா மீண்டும் மெல்ல உறக்கத்திற்கு சென்றுவிட, பீஷ்மனின் இரவு உறக்கம் பறிபோனது.

                சாஷா நிர்மலமாக படுத்திருந்தாலும் அவள் அத்தனை நிம்மதியாக உறங்கவில்லை என்பது பீஷ்மனுக்கு புரிய, இத்தனை நாட்களில் இதை எல்லாம் கவனித்ததே இல்லை அவன். அவன் தேவை தீர்ந்ததும், அவள் மீதே ஆனந்தசயனம் கொள்பவன் தானே அவன்.

                  எத்தனை நாட்கள் இப்படி உறங்காமல் விழித்தே கிடந்திருப்பாள். அதுவும் இரவில் தூக்கத்தில் அதிகம் உருண்டு புரள்பவன் அவன். அப்படியிருக்க, எத்தனை நாட்கள் அவள் உறக்கத்தை தொலைத்திருப்பாள் என்று நினைக்கையில் அவனை நினைத்தே அசிங்கமாக உணர்ந்தான் பீஷ்மன்.

                   கையில் இருப்பவளை என்ன கணக்கில் சேர்ப்பது என்று புரியாதவனாக குழம்பிக் கொண்டிருந்தான் பீஷ்மன். இந்த நிமிடம் வரை அவள் மீது காதல் என்று ஏதாவது இருக்கிறதா ?? என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை அவனுக்கு. ஆனால் கலங்கி கொண்டே இருக்கும் அந்த கண்களும், ஏக்கம் சுமந்த முகமும் அவனை விடாமல் துரத்த அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இதோ அதற்கான ஏற்பாடுகளையும் முடித்துக் காத்திருக்கிறான்.

                 ஆனால், இந்த நிமிடம் “உனக்கு என்னை தெரியாது..?” என்று அவனுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறாள் அவன் பொம்மை. ஆனால், இதற்குமேல் அவளை விடுவதாக இல்லை அவன். அவளின் கண்ணீர் தன்னை இந்த அளவுக்கு பாதிக்கும் என்பதே இந்த இரண்டு நாட்களாகத் தான் தெரியும் அவனுக்கு./

               அதே சமயம் அவள் கூறிய காதலும், தன் மீதான அவளின் உணர்வுகளும் சத்தியமான உண்மை என்பதும் முன்பே அவனுக்கு தெரிந்தவை தானே.

           அவளது காதலையும், தன் சிசுவின் மீது அவள் கொண்ட அன்பையும் மட்டுமே நம்பி அவளை முழுதாக தன்னுடன் இணைத்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறான் அவன். அவள் காதல் தன்னை எப்போதும் கைவிடாது என்று அவன் நம்பியிருக்க, அந்த நம்பிக்கையை அவளுக்கு கொடுக்க தவறிப் போனதை ஏனோ அவன் உணரவே இல்லை.

          

                

            

Advertisement