Advertisement

கைப்பாவை இவளோ 6

                           சாஷாவிடம் விடைபெற்ற பீஷ்மன் தன் தாத்தாவை தேடிச்செல்ல, பேரனை எதிர்பார்த்து ஏற்கனவே காத்திருந்தார் சத்யநாராயணன். அவர் சோஃபாவில் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் இருந்த ஒற்றைஸோஃபாவில் அமர்ந்து கொண்டான். 

                         சத்யா எதுவும் பேசாமல் அவனைப் பார்வையிட “உனக்கு மொத்த விஷயமும் வந்து சேர்ந்திருக்கும் சத்யா. அதுதான் என் ஹாஸ்பிடல்ல என்னை வேவு பார்க்க ஸ்பை வச்சிருக்கியே.. அப்புறம் ஏன் அமைதியா இருக்க..”

                         “மீனாவைப் பத்தி நீ பேசாதடா.. அவளைப்பேச உனக்கு அதிகாரம் இல்ல. உன் விஷயம் என்ன?? எதுக்கு என்னை தேடி வந்த. அதை மட்டும் சொல்லு.” என்றார் சத்யன்.

                         “என் விஷயம் என்ன. நான் சாஷாவைக் கல்யாணம் செய்யப் போறேன். அதற்கு உன்னை கூப்பிடத்தான் வந்தேன்.” என்றான் அறிவிப்பாக 

                         “ஓ… பெரிய  செய்துட்டு அதை என்கிட்டே சொல்லிட்டுப் போக வந்திருக்கியா… பரவாயில்ல. அதுவரைக்கும் கல்யாணத்தை முடிச்சுட்டு சொல்லாம, இப்போவே சொல்ல நினைச்சியே..” என்று குத்தினார் மனிதர்.

                    “அவளை கட்டி வைங்க னு சொன்னால், நீயும், உன் மருமகளும் அப்படியே உடனே கட்டி வச்சுடுவீங்க… நான் உங்ககிட்ட சொல்லாம திருட்டுக்கல்யாணம் பண்ண போறேன்.. நீ வேற ஏன் சத்யா காமெடி பண்ற.”

                   “இதுல  முடிவெடுக்க எல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. கட்டிக்கப் போறேன். உன்னால வர முடியுமா?? முடியாதா??… ” என்று பேரன் துடுக்குடன் பேச 

 

               “உன் அப்பனும் அம்மாவும் வராம நான் வரமாட்டேன். உனக்கு உண்மைக்கும் அவளைக் கல்யாணம் செய்துக்கற எண்ணம் இருந்தால், உன் அம்மாகிட்ட அவளை கூட்டிட்டு போ. உன் விருப்பத்தை மீறி உன் அம்மா எதுவும் செய்யமாட்டா.. கொஞ்சம் சத்தம் போடலாம். ஆனா, உன்மேல உள்ள பாசத்துல ஒத்துக்க வாய்ப்பிருக்கு.”

               “அதை விட்டுட்டு இப்படி நீ பண்ணப்போற திருட்டுக் கல்யாணத்துக்கு என்னை சாட்சியாக்குற வேலை எல்லாம் வேண்டாம்.. ஏற்கனவே உன் அம்மா என்னால தான் நீ கெட்டுப் போறதா சொல்லிட்டு இருக்கா. இன்னும் நான் வேற தலைமை தாங்கி உன் கல்யாணத்தை நடத்தி வச்சா, அவ்வளவுதான்.” என்று கழன்று கொண்டார் மனிதர்.

                “நீ என் கல்யாணத்தைப் பற்றி எதுவும் சொல்லலையே..”

               “நீ என்னை ஏதாவது கேட்டியா… உனக்கு பெண்ணை பிடிச்சிருக்கா தாத்தா… எனக்கு கல்யாணம் செய்து வைப்பியா. அவளை கூட்டிட்டு வரவா?? இப்படி ஏதாவது கேள்வி கேட்டியா நீ.. நீ தகவல் சொன்ன… அதற்கு நான் பதில் சொல்லணும்ன்னு என்ன இருக்கு.”

               “அதோட என்னை கல்யாணத்துக்கு கூப்பிட்ட.. நான் மறுத்துட்டேன்.. அவ்வளவுதானே..” என்றார் மனிதர்.

                 “சத்யா உனக்கு அவளை பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். ஆனா, என்னால அவளை விட முடியாது. ப்ளீஸ்..” என்று பீஷ்மன் மீண்டும் பேச 

                 “நான் உன்னை தப்பு சொல்லலையே பீஷ்மா.. உன் முடிவுகளுக்கு நான் எப்போதும் தடையா இருந்ததில்லையே… இப்பவும் நான் அப்படித்தான் இருப்பேன். ஆனா, என் மகனும் மருமகளும் பாவம். அவங்களை மீறி நான் உன்னோட நிற்க முடியாது. நிற்கவும் மாட்டேன்.” என்றதுடன் பேச்சை முடித்துக் கொண்டு எழுந்துவிட்டார் அவர்.

                  அதற்குமேல் அவரை நிறுத்தி வைத்து பேசவோ, அவரைத் தொடர்ந்து சென்று பேசவோ பீஷ்மனின் அகங்காரம் தடுத்துவிட, அவனும் அங்கிருந்து கிளம்பிவிட்டான். ஆனால் மனம் தாத்தாவின் பேச்சை அசைபோட, அவன் தாய் பார்கவியின் நினைவும் அவனை தாக்கியது.

                   மகன் தவறே செய்தாலும், அவனை எங்கும் விட்டுக் கொடுக்காத உன்னத தாய் அல்லவா. அவரின் உலகமே பீஷ்மன் தானே. அவன் சொல்வது அத்த்னையும் சரி.அது ஒன்றுதான் வேதம் என்று மகனை நம்பும் பாவப்பட்ட ஜீவன் அவர். 

                    இது அனைத்தும் தெரிந்ததால் தானே, பீஷ்மனும் தன் விருப்பப்படி எல்லாம் பெற்றவர்களை வளைத்து கொண்டிருக்கிறான் இன்றுவரை.  சென்று அவர் முன் சென்று  நின்றாலும், அன்னை தன் விருப்பத்தை மறுக்கமாட்டார் என்று தோன்ற, சாஷாவை வீட்டிற்கு அழைத்து செல்ல நினைத்தான் அவன்.

                 சாஷாவைப் பிடிக்காது என்றாலும் தன் முகத்திற்காக தன் அன்னை அவளை ஏற்றுக் கொள்வார் என்று அவன் மனம் உறுதியாக நம்ப, அடுத்த ஒருமணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தான் அவன். சாஷாவை அவன் தயாராக சொல்ல, ஒப்புக்கொள்ளவில்லை அவள்.

                  “எங்கேயும் வருவதற்கில்லை.” என்று உறுதியாக அவள் மறுக்க, “நீ வந்தே ஆக வேண்டும்..” என்று தன் பிடிவாதத்தில் நின்றான் பீஷ்மன்.

                   “என்னால அவங்களை பேஸ் பண்ண முடியாது பீம் புரிஞ்சிக்கோ.. என்னை இப்படிபட்ட சூழல்ல நிறுத்தாத. அவங்களுக்கு என்னைப் பார்க்க பிடிக்காது. நிச்சயமா ஏதாவது பேசிடுவாங்க..” என்று புலம்பினாள் அவள்.

                   “உன்னை தனியா போக சொல்லலையே நான். என்னோட தானே கூட்டிட்டு போறேன். என் முன்னாடி உன்னை எதுவும் பேசமாட்டாங்க.. என்னோட வா..” என்றவன் அவளை பதில் பேசவே விடவில்லை.

                   “நீ வர்றியா.. இல்லையா ன்னு கேட்கல சாஷா. நீ என்னோட வந்தாகணும்.. மறுக்கிற வாய்ப்பை நான் உனக்கு கொடுக்கவே இல்லையே..” என்று பீஷ்மன் அழுத்தமாக கூறிவிட, அதற்குமேல் அவனை மறுக்கும் தைரியம் ஏது அவன் பொம்மைக்கு. கண்ணை திறந்து கொண்டே  கிணற்றில் விழ தயாரானது அவன் பொம்மை.

                 அவள் உடையை மாற்றிக் கொண்டு வர, அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் பீஷ்மன். வாசலில் இருந்த காவலாளி வணக்கம் வைத்து கேட்டை திறந்துவிட, அவன் வீட்டு போர்டிகோவில் சென்று நின்றது அவனது கார்.

                கார்ச்சத்தம் கேட்கவும், பார்கவி மகனாக இருக்குமோ என்று ஆவலுடன் வாசலுக்கு வர, காரிலிருந்து இறங்கியது அவர் மகனே தான். “பீஷ்மா..” என்று அவர் வீட்டின் படியில் இறங்க, மறுபுறம் இறங்கிய சாஷாவைக் காணவும், இரண்டாம் படியிலேயே நின்றுவிட்டார்.

             பீஷ்மன் தாயின் அதிர்ச்சியைக் காணாதவன் போல் வந்து சாஷாவின் அருகில் நிற்க, நெஞ்சு கலங்கியது பார்கவிக்கு. இதுவரை இலைமறை காயாக மகனின் விஷயத்தை கேள்விப்பட்டு இருந்தாலும், இப்படி அவரின் கண்முன்னே வந்து நின்றவனில்லை பீஷ்மன்.

            சாஷாவைப் பற்றிய பேச்சுக்கூட, பார்கவியின் முன்னே அவன் வாயில் இருந்து வராது. ஆனால், இன்று இத்தனை நிமிர்வுடன் மகன் அவளை அழைத்து வந்து வாசலில் நிற்க, மகனை நன்கறிந்த அந்த தாய்க்கு அடிவயிற்றில் ஏதோ சுழன்றது.

               அவர் பயந்ததுக்கு ஏற்ப, மகனும் “உள்ளே வா..” என்று அவள் கையைப் பிடிக்க, அப்படியே பின்வாங்கினார் பார்கவி. வீட்டின் வாசலில் வழியை மறித்து நின்றார் அவர். மகன் கேள்வியாக அன்னையை ஏறிட, “இது குடும்பம் நடத்துற வீடு.. இங்கே கண்ட கழிசடைக்கெல்லாம் இடமில்ல.” என்றார் அழுத்தமாக 

                 சாஷாவை மொத்தமாக சாய்க்க அவரின் அந்த ஒரு வார்த்தை போதுமாக இருக்க, அடுத்த அடி எடுக்கவே இல்லை அவள். பீமனின் கையில் இ ருந்த தன் கையை விடுவித்துக் கொள்ள அவள் முயற்சிக்க, இன்னும் அழுத்தமாக அவள் கையைப் பற்றினான் அவன்.

               பார்கவியின் பார்வை கோர்த்திருந்த அந்த கரங்களின் மீது விழ, இன்னும் கொதித்து போனது அவருக்கு. அவர் ஒரு முடிவுடன் நிற்க, மகன் பேசினான். “அம்மா.. உள்ளே போய் பேசுவோம்…” என்றான் தனது அழுத்தமான குரலில். 

பார்கவி மகனின் அழுத்தத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் “முடியாது. நான் வாழ வந்த வீடு இது. இங்கே யார் வரணும். வரக்கூடாது.. நான் தான் முடிவு பண்ணனும். இவளை மாதிரி வேசிக்கெல்லாம் என் வீட்ல..” என்று அவர் பேசும்போதே 

                “அம்மா..” என்று ஒற்றைவிரலை நீட்டி அவரை அடக்கி இருந்தான் பீஷ்மன். 

                மகனின் சத்தத்தில் பார்கவி அதிர்ந்து நிற்க, அவன் தன்னை விரல் நீட்டி மிரட்டியதை தாங்க முடியவில்லை அவரால். கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அவர் நிற்க,அதற்குள் வீட்டிற்குள் இருந்த சங்கரநாராயணன் ஓடி வந்தார். 

              மனைவியின் கண்ணீரும், மகனின் கோபமும் அவர்கள் பார்வையிலேயே புரிந்துவிட, சாஷாவை அவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சங்கரநாராயணன் மனைவியிடம் “என்ன பாரு. வாசல்ல வச்சு என்ன சத்தம்..” என்று கேட்க, பேசவே முடியவில்லை அவரால். கண்களில் கண்ணீர் வழிய, வீட்டிற்குள் சென்று அமர்ந்து கொண்டார்.

               சங்கரநாராயணன் “உள்ளே வா பீஷ்மா..” என்று மகனை அழைக்க 

               சாஷாவின் கையை விடாமல் பற்றிக் கொண்டு அவன் படியேற, சாஷா இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. பீஷ்மன் அவளை திரும்பி நோக்க, மறுப்பாக தலையசைத்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பீஷ்மனுக்கு அவளின் கண்ணீர் என்னவோ போலாக, அவளைக் காரில் அமரவைத்து லாக் செய்தபிறகே தன் தந்தையுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

               அன்னை கண்ணீருடன் அமர்ந்திருப்பதை பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் தந்தையின் முகம் பார்த்து நின்றவன் “நான் சாஷாவைக் கல்யாணம் பண்ணப் போறேன். எனக்கு அம்மா, அப்பா இருப்பதா நினைச்சு தான் இந்த வீட்டுக்கு வந்தேன். ஆனா, அப்படி யாருமே இல்லன்னு சொல்லிட்டாங்க இவங்க.”

              “நான் அவளைத்தான் கட்டிக்க போறேன். அவ இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது ன்னு சொன்னா, நானும் வரக்கூடாது இல்லையா. நான் வேற அவ வேற இல்லையே.. இனி நானும் எப்போதும் இந்த வீட்டுக்குள்ள வரமாட்டேன். ” என்றவன் அவன் அறைக்கு செல்ல முற்பட 

               “பீஷ்மா.. ஏன் திடிர்னு  இந்த முடிவு.. இப்போவே சேர்ந்து தானே இருக்கீங்க. இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசியம்.” என்று தந்தை விசாரிக்க 

               “சாஷா கன்சிவா இருக்காப்பா.. என் பிள்ளையை சுமந்துட்டு இருக்கா..” என்றான் அவர் முகம் பார்த்து. தவறு செய்த பாவனை எள்ளளவும் இல்லை அவனிடம்.

                சங்கரநாராயணன் யோசனையுடன் அமைதியாக, “முதல்ல அது இவன்பிள்ளை தானா ன்னு உறுதி படுத்திக்க சொல்லுங்க… ஊர்ல இவன் மட்டும் இல்லையே..” என்று குரூரமாக பார்கவி கூற, சங்கரநாராயணன் “பார்கவி..” என்று அழுத்தமாக அதட்டினார்.

                ஆனால், மகன் பதறாமல் அன்னையை நெருங்கியவன் “இவங்க கர்ப்பமா இருக்கேன் ன்னு சொன்னப்போ, நீங்க எப்படிப்பா உறுதிபடுத்திக்கிட்டிங்க..” என்று தந்தையைப் பார்த்து கேட்க, பார்கவி முதல்முறையாக தன் மகனின்மீது கையை நீட்டி இருந்தார்.

               மகன் அவர் அடித்ததை கண்டுகொள்ளாமல் நிற்க, “அவளுக்காக என்னை அசிங்கப்படுத்துவியாடா நீ.. என்னைவிட அவ பெருசா போய்ட்டாளா உனக்கு. அப்படி மயக்கி வச்சிருக்காளா.. என்ன வார்த்தை பேசினடா நீ..” என்று அவர் ஆத்திரத்தில் தடுமாற 

              “நீங்களும் இதையே தானே கேட்டிங்க அவளை.” என்றான் மகன்.

              “அவளும் நானும் ஒண்ணா..கேவலம் உடம்பைக் காட்டி..” என்று அவர் மேலும் ஏதோபேசவர, சங்கரநாராயணன் மனைவியை கைநீட்டி அடித்திருந்தார். 

              இத்தனை ஆண்டுகால திருமண வாழ்க்கையில் பார்கவி வாங்கிய முதல் அடி அது. அவர் தன் கணவரைப் கண்ணீருடன் பார்க்க, “உள்ளேப் போ.” என்றார் மனிதர்.

              அவரின் அந்த வார்த்தைக்கு மறுத்து எதுவும் கூறாமல் பார்கவி விலகிச் சென்றுவிட, “உன் அம்மா பேசியது தப்பாகவே இருக்கட்டும் பீஷ்மா. ஆனா, நீ இப்படி பேசி இருக்க வேண்டாம். உன் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவ எப்போதும் தாங்கமாட்டா. அவ உலகமே நீதான்.”

              “இனி இப்படி பண்ணாத.” என்றவர் “உன்னோட கல்யாணத்துக்கு வாழ்த்துகள். ரெண்டு பெறும் ஒற்றுமையா இருங்க எப்போதும். ஆனா, இப்படி வார்த்தைக்கு வார்த்தை வலிக்கும்படி சாஷாகிட்டயும் பேசாத..”:என்று அறிவுறுத்தி அவனை அனுப்பி வைத்தார் சங்கரநாராயணன்.

           எங்கோ வெறித்துப் பார்த்தபடி கார்கண்ணாடியில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள் சாஷா. அவள் கண்களில் கண்ணீர் வழிந்து காய்ந்து போயிருந்தது. பீஷ்மன் காரின் கதவைத் திறக்கவும் அவள் நிமிர்ந்து அமர்ந்து கொள்ள, எதுவும் பேசாமல் காரை எடுத்தான் அவன்.

               கார் நேராக அவளின் கடற்கரை பங்களாவுக்கு வந்து நிற்க, வாசலில் நின்றிருந்தான் மணி. கார் அவனைத் தாண்டி சென்று நிற்க, வேகமாக வந்து கார்கதவை திறந்துவிட்டான். சாஷா அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க, “அக்கா..” என்று பின்னால் ஓடிவந்தான் மணி.

               “நீதானே..” என்று குற்றம் சுமத்தும் பார்வை ஒன்றை அவள் வீச, “சத்தியமா நான் இல்லக்கா… நீங்க இவரைக் கேளுங்க.. ண்ணா சொல்லுண்ணா..” என்று சிறுபிள்ளையாக பிடிவாதம் பிடித்து நின்றான் அவன். 

சாதாரண நேரமாக இருந்திருந்தால் சாஷா பதிலுக்காக நின்றிருப்பாள். ஆனால் அப்போது இருந்த மனநிலையில் அவள் பேசாமல் அமைதியாக படிகளில் ஏறி, தன்னறையில் தஞ்சமடைந்து கொண்டாள். ஏனோ மனம் மிகவும் பாரமாக இருப்பதுபோல் தோன்ற, அமைதியாக கண்களை மூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள் சாஷா. 

                  பீஷ்மன் அவளைத் தொடர்ந்து அறைக்கு வர, அவனுக்கு பின்னால் ஜூஸ் வந்து சேர்ந்தது. பீஷ்மன் ஜூஸை வாங்கி கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையில் வைத்து அவள் அருகில் அமர, கண்களை திறக்கவில்லை சாஷா.

                     பீஷ்மன் தனது வலது கையின் பெருவிரலால் அவள் கன்னத்தை அழுத்தமாக துடைத்துவிட, அப்போதுதான் உணர்வு வந்தது அவன் பொம்மைக்கு. 

              

Advertisement