Advertisement

இப்போது நினைத்துப் பார்க்கையில் பார்கவிக்கும் செல்வோமா என்ற எண்ணம் வர, அடுத்தநாள் பூஜைக்கு செல்ல முடிவெடுத்துக் கொண்டார் அவர். இங்கு சாஷாவும் வீட்டிற்கு வந்தவள் சத்யாவுடன் சேர்ந்து கொண்டு அவர் சொல்ல சொல்ல ஒவ்வொன்றாக பூஜைக்கு தேவையான விஷயங்களை தயார் செய்ய தொடங்கிவிட்டாள்.

                 “எத்தனைப் பெரிய காரியம் செய்திருக்கிறோம்.. கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாளே…” என்று கடுப்பான பீஷ்மனும் அதற்குமேல் வீட்டில் இருக்காமல் வெளியே கிளம்பியிருந்தான்.

                  ஒருவழியாக அந்தநாள் கடந்து அடுத்தநாளும் பிறந்துவிட, இன்னும் விளக்கேற்றாமல் காத்திருந்தாள் சாஷா. வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இருந்ததால் அதற்கான தெய்வ பொம்மைகளை வாங்கி அழகாக முறைப்படுத்தி வைத்திருந்தவள் அதையும் இன்னும் படிகளில் அடுக்காமல் அமர்ந்திருந்தாள்.

                 சத்யா “என்னம்மா..” என்று கேட்டதற்கும், “கொஞ்சம் வெய்ட் பண்ணுவோம் தாத்தா..” என்று அமர்ந்திருந்தாள் பேத்தி.

                 அடுத்த அரைமணி நேரத்தில் காரின் ஹார்ன் சத்தம் கேட்க, ஆளுக்கு முன்னதாக வெளியே எட்டிப் பார்த்தாள். பார்கவி முறைப்புடன் காரில் இருந்து இறங்க, அவரை வாவென்று அழைக்கவே இல்லை அவள். “எதற்கு.. கூப்பிட்டாலும், என் வீட்டுக்குள்ள என்னையே கூப்பிடுவாயா.. என்று நிற்பார்..” என்று ஒதுங்கியே நின்றாள் அவள்.

                ஆனால், பார்கவி அவளை கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்தார். பூஜைக்காக அவள் செய்திருந்த ஏற்பாடுகளை மெச்சுதலாக பார்த்துக் கொண்டவர் “ஏன் மாமா.. நல்ல நேரம் போயிட்டு இருக்கே.. பூஜையை தொடங்க வேண்டியது தானே..” என்றார் விரைப்பாக.

                  “அதுதான் நீ வந்துட்டியேம்மா.. எப்போதும் நீ செய்றது தானே வழக்கம்.. நீயே தொடங்கி வை..” என்று பார்கவியைக் குளிர வைத்தார் அவர்..

                  “நான் ஏன் வைக்கணும்.. அதுதான் புது மருமகளை கூட்டிட்டு வந்திருக்கிங்களே.. அவளை நல்லா வேண்டிக்கிட்டு எடுத்து வைக்க சொல்லுங்க..” என்றார் பார்கவி.

                  அவரின் பேச்சை சாஷா அதிசயமாக பார்த்து நிற்க, சத்யாவும் சிரித்துக் கொண்டவர் “அதுதான் உன் அத்தையே சொல்லிட்டாங்களேம்மா.. எடுத்து வை..” என்றார் சாஷாவிடம்.

                  சாஷா இன்னும் தயங்கிய நிற்க, “அதுதான் சொல்றாங்க இல்ல எடுத்து வை..” என்று அவளை அதட்டியபடியே ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார் பார்கவி. பெரிதாக ஒட்டுதலெல்லாம் இல்லை அவர் குரலில்.

                    ஆனால், பீஷ்மனின் மீதான அவரது பாசம் சாஷாவுடன் லேசாக ஒட்ட வைத்தது அவரை.

                  பார்கவி முறைத்துக்கொண்டே அத்தனையையும் சாஷாவுக்கு சொல்லிக்கொடுத்தாலும், புன்னகையுடன் கேட்டுக் கொண்டவள் அவர் சொன்னபடியே அத்தனையும் செய்து முடித்தாள்.

                பார்கவி எல்லாம் முடித்தவர் “எங்கே உன் புருஷன்..” என்று கேட்க,

                 “தூங்கிட்டு இருக்காங்க..” என்று அதே குரலில் பதில் கொடுத்தாள் சாஷா.

               “அவனைத் தூங்க வச்சுட்டு நீ பூஜை பண்ணுவியா.. போ.. போய் எழுப்பி கூட்டிட்டு வா..” என்று சாஷாவைத் துரத்தினார் பார்கவி.

                சாஷா சிரிப்புடன் தன்னறைக்குச் சென்று பீஷ்மனை எழுப்ப, அவள்மீது இருந்த கடுப்பில் “போடி..” என்று மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டான் அவன்.

                 “பீம்.எழுந்து வாங்க…” என்று அவனை விடாமல் நச்சரித்து அவள் கீழே அழைத்துவர, அப்போதுதான் தன் அன்னை வந்திருப்பதே தெரியும் அவனுக்கு.. “அம்மா..” என்று அவன் அருகில் செல்ல, மகனின் முகத்தில் தெரிந்த தனக்கான பாசத்தில் நெகிழ்ந்து நின்றார் பார்கவி.

                 பீஷ்மன் அன்னையை கட்டியணைத்தபின்பே மனைவியிடம் திரும்ப அவனை முறைத்து நின்றாள் அவள். சத்யா அவன் நிலை கண்டு சிரிக்க, மகனின் கையை விடாமல் பற்றிக்கொண்டார் பார்கவி.

                “போ.. போய் விளக்கேத்து..” என்று மருமகளையும் அவர் அதிகாரம் செய்ய, பீஷ்மனை முறைத்துக்கொண்டே பூஜையறையில் சென்று விளக்கேற்றி கண்மூடி நின்றாள் சாஷா.

                 பீஷ்மன் அமைதியாக வந்து அவள் அருகில் நிற்க, இருவரும் சேர்ந்தே அன்றைய பூஜையை முடித்தனர். சத்யாவின் காலில் இருவரையும் விழுந்து எழ சொல்லியவர், தானும் தன் மகனையும், மருமகளையும் வாழ்த்தி முடிக்க, என்னவோ முதல்முறையாக கலங்கி நின்றார் பார்கவி.

                 “ம்மா..”என்று பீஷ்மன் லேசாக அவரை அணைக்க, மகிழ்வுடன் அவர்களை பார்த்து நின்றாள் சாஷா. “என் மகனை ஒழுங்கா கவனிச்சுக்கோ.. இனி இந்த வீட்டுக்கும் நீதான் பொறுப்பு.. பொறுப்பா இருக்கணும்..” என்று அதட்டலாகவே பார்கவி கூற, அவரின் பாவனையில் சிரிப்பு வந்தது சாஷாவுக்கு.

                சிரிப்பை அடக்கிக்கொண்டு அவள் தலையசைக்க, “என்ன சிரிக்கற..” என்று அதற்கும் அதட்டினார் அவர்.

                அவர் கேள்விக்கு மறுப்பாகத் தலையசைத்தவள் “சாப்பிட வாங்க..” என்ற அழைப்புடன் நகர்ந்து கொண்டாள். பார்கவி உணவை முடித்துக் கொண்டு பூஜை முறைகளை விளக்கிக்கொடுத்து அங்கிருந்து புறப்பட, சத்யா நெகிழ்வுடன் தன் பேத்தியை தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார்.

                 “நல்ல காரியம் செய்தேம்மா.. அவ வராம போயிருந்தாலும் மனசெல்லாம் இங்கேதான் இருந்திருக்கும்.. இப்போ நிம்மதியா இருப்பா.. இதுதான் உன் மாமியார். அவளுக்கான முக்கியத்துவத்தை நீ கொடுத்திட்டா, நீ அவகிட்ட காரியம் சாதிச்சுக்கலாம்..” என்று சொல்லிக்கொடுத்தார் பெரியவர்.

 

                 சாஷா புன்னகையுடன் தலையசைத்து தனது அறைக்கு வர, அவள் பின்னோடு அறைக்கு வந்து சேர்ந்தான் பீஷ்மன். மனைவியைப் பின்னிருந்து அணைத்தவன் அவள் கன்னத்தில் முத்தம் வைக்க, “ஈவினிங் பூஜை இருக்கு பீம்..” என்று நினைவூட்டினாள் மனைவி.

 

                 “ஈவினிங் தானே குளிச்சுக்கலாம்..” என்று இலகுவாக அவன் வழி சொல்ல,

                  “நோ.. உங்கம்மா சொல்லிட்டுப் போயிருக்காங்க.. சுத்தமா இருக்கணும்..” என்று முகம் சுருக்கினாள் மனைவி.

                   அவள் அன்னையை நினைவுபடுத்தவும், அவளை இழுத்து வந்து கட்டிலில் அமர்த்தியவன் அவள் எதிரில் அமர்ந்தான். “என்ன பண்ண.. அம்மா எப்படி வந்தாங்க..” என்று விசாரிக்க, அவரிடம் பேசியதை தெரிவித்தாள் சாஷா.

                   மனைவியின் வார்த்தைகளில் உவகை கொண்டவன் மெல்ல எட்டி அவள் நெற்றியில் இதழ் பதித்து மீண்டும் தன்னிடத்தில் அமர்ந்து கொண்டான். சாஷா சிறு புன்னகையுடன் அவனை நோக்க, “இப்படியெல்லாம் பார்த்து வைக்காதடி.. பக்கத்துல வேற விட மாட்டேன்னு சொல்லிட்ட..” என்று அதட்டினான் அவன்.

                  அவன் கவலையில் சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் அவள்.

               பீஷ்மன் அப்போதும் அவளைவிட மனமில்லாமல் அவள் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ள, “பீம்..” என்று சிணுங்கினாள் அவள்.

               “என்ன பண்ணேன் இப்போ..” என்று அலுத்துகொண்டவன் அவள் கையை எடுத்து தன் தலையில் வைக்க, புன்னகையுடன் அவன் தலையைக் கோதினாள் மனைவி.

                 அவள் கைகளின் இதத்தில் அவன் கண்மூட, மெல்ல அவன் நெற்றியில் முத்தமிட்டாள் மனைவி. பீஷ்மன் கண்திறக்காமல் “எதுக்கு இது..” என்று கேட்க,

                 “எதற்கோ..” என்று சிரித்துக் கொண்டாள் அவள்.

                 “எதுவுமே சொல்லமாட்ட இல்ல..” என்று பீஷ்மன் கண்திறந்து முறைக்க,

                 “சொல்லித்தான் தெரியுமா உங்களுக்கு…” என்று அவனைப்போலவே புருவம் உயர்த்திக் காட்டினாள் சாஷா.

                   “போடி..” என்று அவன் மீண்டும் கண்மூட, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டவள் “எனக்கு தெரியும் பீம்.. நான் வெறுத்த சாஷாவுக்காகத் தான் இதெல்லாம்.. சாஷாவோட அடையாளத்தை மாற்றத்தானே இது அத்தனையும்..” என்றாள் அவன் காதில்.

                   பீஷ்மன் சட்டென கண்திறக்க, “ஏன் இதெல்லாம்..” என்றாள் அவனிடம்.

                  “எனக்கு என் சாஷாவை ரொம்ப பிடிக்கும்.. உன்னை காதலிக்கிறேன்னு உணர்வதற்கு முன்னாடியே…. உன்னை முதல்முதலா ஸ்டுடியோ வாசல்ல வச்சு பார்த்தப்பவே பிடிக்கும். என் பொம்மையோட பேர் கூட அப்படித்தான். உன்னை பிடிச்ச அதே அளவுக்கு பிடிக்கும்..”

                   “அதெப்படி அந்த பெயரை நீ கீழா நினைக்கலாம்.. எனக்கு தெரிஞ்ச என் சாஷாவே புனிதமானவ தான்.. அவளைவிட பெட்டரா யாரையும் யோசிக்கக்கூட முடியல என்னால.. அப்படியிருக்க, உன்னை நீயே கீழே இறக்கிப்பியா சாஷா..”

                 “எப்படி விட முடியும் என்னால.. அதனால்தான்.. இப்போப்பாரு.. சாஷா பல பேரோட கனவுகளுக்கு திறவுகோல். பல குழந்தைகளோட வாழ்க்கைக்கு நீ ஒளியேத்த போற.. அவங்க அத்தனைப் பேரும் என் சாஷாவை ரொம்ப உயர்வா தான் நினைப்பாங்க..”

                 “எனக்கு என் சாஷாவைப் பிடிக்கும்.. அவ எப்படி இருந்தாலும் பிடிக்கும்.. உனக்கும் அப்படித்தான் இருக்கணும்… உனக்கும் என் சாஷாவை பிடிக்கணும்.. எனக்கு தெரியவே தெரியாத சாகித்யா வேண்டாம் எனக்கு.. என்னோட சாஷாதான் வேணும்..” என்றவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவன் இதழ்களை மூடியிருந்தாள் சாஷா..

                  சில நிமிடங்களில் இருவரும் விலக, “பூஜையிருக்கு.. சுத்தபத்தமா இருக்கணும்..” என்று அவளைப்போலவே சொல்லிக்காட்டினான் அவன்.

 

                  “பரவால்ல.. இது சைவம்தான்.. இதுக்கு குளிச்சுக்கலாம்..” என்று அவனுக்கு வெட்கம் வர வைத்தாள் மனைவி.

                  “அடிப்பாவி.. லிப்லாக் சைவமா.. ரொம்ப கெட்டுப் போய்ட்ட சாஷா..”

                 “ஆமா, உங்களோட சேர்ந்து தான்.. நீங்க அடிக்கிற மத்த கூத்தெல்லாம் வச்சு பார்த்தால் இது சைவம்தான்..” என்று கண்சிமிட்டினாள் மனைவி..

                   பீஷ்மன் சிரித்துக்கொண்டே “அப்போ எனக்கு ஒரு சைவ முத்தம் வேணும் மறுபடியும்..” என்று அவள் இதழ்களை நெருங்க மீண்டும் சில நொடிகள் மௌனம் அங்கே.

                  நீண்ட முற்றுகைக்குப் பின் அவளை விட்டு விலகியவன் “இப்போ சொல்லு.. உன் பேர் என்ன..?” என்று அதட்டலாக கேட்க

                  பெருமிதத்துடன் சிரித்தவள் “சாஷா.. சாஷா சாந்தனு பீஷ்மா..” என்று நிறுத்தி, நிதானமாக அழுத்தத்துடன் ஒவ்வொரு வார்த்தையாக அவள் உச்சரிக்க, அவளை பொங்கிய காதலுடன் அணைத்துக் கொண்டான் பீம்.

                   “பீம்……” என்ற அவள் வார்த்தைகள் எப்போதும்போல் அவனுள் அடங்கியது….

தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா……

                  ————–முற்றும்……………

Advertisement