Advertisement

சத்யாவின் அறிவுறுத்தலில் தன் பகைமை மறந்து அவரிடம் பேசி ஒப்புக்கொள்ள செய்திருந்தான் பீஷ்மன். ரேகாவிடமும் பீஷ்மனின் மாற்றத்தை குறித்து பரமேஸ்வரன் எடுத்துக்கூற, ஜெய்ராம்கிருஷ்ணாவும், சத்யாவும் கூட பீஷ்மனுக்காக பேசியிருந்தனர்.

                  அவர்களின் பேச்சில் இருந்து பீஷ்மனின் மீது ஒரு நல்லெண்ணம் வந்திருக்க, இதோ அந்த அறக்கட்டளையில் தானும் ஒரு அங்கமாக இணைந்திருந்தார் ரேகா. இப்போதும் “நீங்க தொடங்கி வைங்க மேடம்..” என்று பீஷ்மன் அழைக்க, தயக்கத்துடன் தன் கணவரைப் பார்த்தார் ரேகா.

                 பரமேஸ்வரன் சிரிப்புடன் தலையசைத்த பின்னரே அடுத்த அடி எடுத்து வைத்தார் அவர். பூஜை முடித்து குத்து விளக்கேற்றி அவர் தொடங்கி வைக்க, அடுத்தடுத்து சாஷா, மீனு, தெய்வநாயகி என்று பெண்களால் நிறைந்தது அந்த இடம்.

                 சாஷா மொத்தமாக உணர்ச்சிப்பிழம்பாகத் தான் நின்றிருந்தாள் அங்கே. எந்த நொடியிலும் பீஷ்மனை கட்டிக்கொண்டு அழுதுவிடும் அபாயம் இருந்ததால் அவனை நெருங்காமல் தள்ளியே நின்றாள். ஆனால், பீஷ்மன் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்க, “வரவே முடியாது..” என்று மறுத்து சத்யாவுடன் கீழே நின்றுவிட்டாள்.

                 அந்த கட்டிடத்தின் முன்னே இருந்த சிறிய மேடை போன்ற அமைப்பின் மீது ஏறி நின்றவன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க, ஏகப்பட்ட கேள்விகள். எதற்கும் பதில் கூறாமல் நின்றவன் “முதல்ல நான் பேசி முடிச்சிடறேன்… தென்… நிதானமா உங்க கேள்விகளுக்கு பதில் சொல்றேன்..” என்று நிறுத்தினான் பீஷ்மன்.

                 அந்த இடம் சட்டென அமைதி கொள்ள, “சாஷா அறக்கட்டளை… ஆதரவற்ற குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எங்களால் முடிந்த ஏதோ ஒரு நல்லதை செய்யுறது தான் எங்களோட நோக்கம். பாதுகாப்பு மட்டுமில்லாமல் அவர்களின் படிப்பு, எதிர்காலம், மருத்துவம் என்று அத்தனையும் இங்கே கிடைக்கும்..

                 “என் மனைவி சாஷா இந்த அமைப்போட நிறுவனர்… நடிப்பின் வழியா அவங்க சம்பாதிச்ச அத்தனை சொத்துகளையும் இந்த நிறுவனத்துக்காக அர்பணிச்சு இருக்காங்க… அவங்க மட்டுமில்லாமல் திருமதி ரேகா பரமேஸ்வரன்… அவங்களும் இந்த அமைப்போட ஒரு அங்கமா நம்மோட இணைஞ்சிருக்காங்க..  அவங்களை பற்றி நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்ல.. அவங்களுக்கு அறிமுகமும் தேவையில்ல…”

                 “இப்படியான அமைப்புகள் எதுவும் இல்லாத காலத்தில் இருந்தே நிறைய நல்ல விஷயங்கள் செய்துட்டு வர்றாங்க.. அடுத்து டாக்டர் மீனலோச்சனி.. தன்னோட வாழ்க்கையையே தான் வளர்ந்த ஆசிரமத்து பிள்ளைகளுக்காக அர்பணிச்சவங்க.. அவங்களும் இங்கே ஒரு உறுப்பினர். அடுத்து அன்புக்கரங்கள் இல்லத்தோட நிறுவனர்.. தெய்வநாயகி.. இவங்களோட சேவை என்னன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்..”

                  “ஆக, இதுதான் இந்த நிறுவனத்தோட அமைப்பு.. இதுல இருக்க யாருக்கும் டிஹை வச்சு பணம் பண்ற நோக்கமில்லை… இவங்க நாலு பேருமே தங்களுக்கான துறையில நிறைய சாதிச்சவங்க தான். இந்த நிறுவனத்தின் வழியா பணமோ, புகழோ தேடறது இவங்களோட எண்ணமில்லை..”

                   “இந்த நாலு பெண்களும் சேர்ந்து, வழி தெரியாம தடுமாறி நிற்கிற பல பெண்களுக்கு வழி காட்டத்தான் இந்த அமைப்பு.. இந்த நிறுவனத்துக்கும் பீஷ்மனுக்கும் எப்பவும் எந்த சம்பந்தமும் இருக்காது… இது என் வாழ்க்கையை மாற்றி அமைத்த இந்த பெண்ணுக்கு  நான் கொடுக்கற மரியாதை…” என்று முடித்துக் கொண்டான் பீஷ்மன்.

                     “சார்.. உங்க மனைவிக்காக நீங்க இவ்ளோ பெரிய விஷயம் செய்திருக்கிங்க.. ஆனா, இதைப்பற்றி எதுவுமே தெரியாத அவங்களால எப்படி இதை சரியா செய்ய முடியும்..?” என்று ஒரு நிருபர் கேள்வியெழுப்ப,

                     “ரொம்ப சரியா கேட்டிங்க.. என் மனைவிக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது.. அதனால அவளுக்கு வழிகாட்டத்தான் இந்த மூணு பேரும்… இவங்க மூணு பேருக்குமே பொதுசேவை புதுசு இல்ல… அதோட என் மனைவியும் இவங்க மூணு பேரோட அறிவுறுத்தல்களை கேட்டுத்தான்  செயல்படுவாங்க எப்போதும்..” என்றான் பீஷ்மன்.

                      “சார்.. கொஞ்சம் பர்சனல் கொஸ்டின்தான்.. அதென்ன வாழ்க்கையை மாற்றி அமைச்சதா சொல்றிங்க..” என்றார் மற்றொருவர்.

                       “முன்னடியிருந்த பீஷ்மனுக்கு பணத்தை தவிர வேற எதுவும் பெருசா தெரியாது.. இப்போ மற்றவர்களோட உணர்வுகள் புரிய தொடங்கியிருக்கு.. இது மாற்றமில்லையா..?” என்றான் அவன்.

                        “சார் அதென்ன சாஷா அறக்கட்டளை. சமூக சிந்தனையாக தானே அறக்கட்டளை தொடங்கி இருக்கீங்க.. யாரவது  பெரியவங்களோட பெயர் வைத்திருக்கலாமே..” என்று அடுத்த கேள்வி வர,

                         “நிச்சயமா வச்சிருக்கலாம்.. ஆனா, எனக்கு என் மனைவிதான் பெரிய மனுஷியா தெரியுறா. அடுத்தவங்களுக்கு தீங்கு நினைக்காம, தன்னல முடிஞ்சா உதவியை அடுத்தவங்களுக்கு செய்துட்டே இருக்க அத்தனைப் பெரும் பெரிய மனுஷங்கதான்.. அந்த வகையில என் மனைவி ரொம்ப பெரிய மனுஷி..”

                     “தன்னோட வாழ்க்கையிலும் நிறைய போராட்டங்களை சந்திச்சு அதையெல்லாம் கடந்து தான் இந்த நிலைக்கு வந்திருக்காங்க.. ஏன்.. நாங்க காதலிச்ச காலத்தில் இருந்தே அவங்களை பத்தி நிறைய அவதூறுகள், ஏளனங்கள் எல்லாமே இருந்திருக்கு..”

                    “ஆனா, எதையும் பெருசா எடுத்துகிட்டதே இல்லை அவங்க.. இதுவரைக்கும் அவங்களோட குறிக்கோள் அவங்களோட தொழிலா இருந்தது… இப்போ முழுமனசோட நடிப்பு வேண்டாம்ன்னு சொல்லி இதுல இறங்கியிருக்காங்க.. நிச்சயமா இதையும் அசத்துவாங்க..” என்று புன்னகையுடன் பதில் கூறினான் பீஷ்மன்.

                    “சார்.. நடிக்கக்கூடாதுன்னு நீங்க எதுவும் கண்டிஷன் போட்டு இருக்கீங்களா..” என்று பெண் கேட்க.

                    “அடுத்த மூணு வருஷத்துக்கு என் கம்பெனியோட படங்கள்ல நடிச்சு கொடுக்கறதா காண்ட்ராக்ட் இருக்கு.. என்னால நடிக்க முடியாது, உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோன்னு சொல்லிட்டாங்க… அவங்க நடிக்கிறதை நிறுத்தினது எனக்கும் வருத்தம்தான்…” என்றான் சிரிப்புடன்.

                   இதே ரீதியில் அடுத்தடுத்து கேள்விகள் படையெடுக்க, ஓரளவுக்கு பதில் கொடுத்தவன் அத்துடன் முடித்துக்கொண்டு கீழே இறங்க, கண்ணீருடன் அங்கிருக்கும் அத்தனைப் பேரையும்  மறந்தவளாக பாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள் சாஷா.

                    பீஷ்மன் அவளது செயலில் இனிமையாக அதிர்ந்து நிற்க, அங்கிருந்த கேமராக்கண்கள் அவர்களை அழகாக படமாக்கிக் கொண்டது. இருநிமிடங்கள் அவர்களின் அந்த நிலை நீடிக்க, சுற்றியிருந்தவர்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

                      மணி மெல்ல அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்த, பீஷ்மனும் தங்கள் நிலையுணர்ந்தவனாக மெல்ல சாஷாவை விலக்கி, தன் அருகில் நிறுத்திக் கொண்டான். சாஷாவுக்கும் அப்போதுதான் தன் செயல் பிடிபட, அங்கிருப்பவர்களை பார்க்க முடியாமல் தலைகுனிந்து நின்றாள் அவள்.

                       பீஷ்மன் அவள் கைகளை விடாமல் பற்றி தன்னருகிலேயே நிறுத்திக் கொண்டான் அவளை. பரமேஸ்வரனும்,ரேகாவும் சிரிப்புடன் இவர்களைப் பார்த்து நிற்க, மீனலோச்சனிக்கு இவர்களின் நிலை நிம்மதியைக் கொடுத்தது.

               சத்யா அவ்வபோது பேத்தியை சிரிப்புடன் பார்த்திருக்க, “தாத்தா..” என்று சிணுங்கி கொண்டாள் அவள். சாஷாவைத் தன்னருகில் அழைத்தவர் பரமேஸ்வரனிடமும், ரேகாவிடமும் அவளை அறிமுகம் செய்துவைக்க, அழகாக கைகூப்பி வணக்கம் தெரிவித்தவளை மிகவும் பிடித்துப் போனது ரேகாவுக்கு.

                ஏற்கனவே கணவர் வழியாக அவளைப்பற்றி கேள்விப்பட்டு இருக்க, இப்போது பார்க்கையில் இன்னும் பிடித்தது. பொதுவாக பேசிக் கொண்டிருந்தவர்கள் மதியத்திற்குமேல் அங்கிருந்து கிளம்ப, வந்தவர்களை எல்லாம் வழியனுப்பிய பிறகே பீஷ்மனும், சாஷாவும் அங்கிருந்து புறப்பட்டனர்.

                   ரேகா செல்லும்போதும் மறக்காமல் சாஷாவிடம் சொல்லிக்கொண்டே கிளம்பியிருந்தார். இதோ கணவனும், மனைவியும் காரில் தங்கள் வீட்டிற்கு கிளம்பியிருக்க, அத்தனைபேர் மத்தியில் கட்டியணைத்தவள் இப்போது வெளியே வேடிக்கைப் பார்த்து அமர்ந்து இருந்தாள்.

                   பீஷ்மன் சிறு சிரிப்புடன் காரை செலுத்த, “இப்போ எதுக்கு சிரிச்சிட்டே இருக்கீங்க…” என்று சண்டைவேறு அவனிடம்.

                   பீஷ்மன் அதற்கும் சிரிக்க, அவன் முகம் பார்க்க முடியாமல் வழக்கம்போல் அவன்மீதே சாய்ந்து கொண்டாள் அவள்.

                     அதே நேரம் இவர்கள் இருவர் கட்டியணைத்தபடி நின்ற காட்சி தொலைக்காட்சி செய்திகளில் முக்கிய இடம் பிடித்திருக்க, மகன் முகத்தில் தெரிந்த உணர்வுகளைத் தான் ஆழ்ந்து பார்த்திருந்தார் பார்கவி. எத்தனைப் பணமிருந்தபோதும் அவனின் இந்த அவதாரம் சாஷாவைச் சேர்ந்தபின் தானே என இடித்துரைத்தது மனது.

                   ஏனோ, முதல்முறையாக சாஷா- பீஷ்மனின் நெருக்கம் தவறாகப்படவில்லை அவருக்கு. மகனின் முகத்தில் தெரிந்த நிறைவிலும், அவனது இன்றைய செயலிலும் அவன் வாழ்வில் சாஷாவுக்கான இடத்தை அறிந்து கொண்டார் அவர்.

               அதுவும் இரண்டு நாட்களாக சாஷா அவரை அலைபேசியில் விடாமல் அழைத்துக் கொண்டிருப்பதும் சிறுமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆம்.. சத்யா வீட்டில் நடக்கும் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி பேத்தியிடம் எடுத்துச் சொல்லியிருக்க, தன் மருமகள் கடைபிடிக்கும் விரதங்களையும், அவரது பக்தியையும் கூட கூறி வைத்தார் பேரன் மனைவியிடம்.

               சாஷாவுக்கும் பார்கவியை முறைத்துக்கொண்டே திரியும் எண்ணமில்லையே. எப்போதும் அவள் குணம் ஒன்றுதானே. அதுவும் கடைசியாக அவரைப் பார்த்த நாளில் கலங்கியவராக அவர் வெளியேறியது இன்னமும் கண்களில் நிற்க, தன் கணவனுக்காகவும், தன் தாத்தாவுக்காகவும், வரப்போகும் தன் பிள்ளைகளுக்காகவும் என்ற நினைவுடன் அவரிடம் பேசியிருந்தாள் அவள்.

               முதலில் சாஷாவின் தொலைபேசி எண்ணே தெரியவில்லை பார்கவிக்கு. யாரோ என்று அவர் அழைப்பை ஏற்க, சஷாவின் குரலை கேட்கவும் அதிர்ச்சிதான். அழைப்பைத் துண்டித்துவிட அவர் கையெடுக்க, “ப்ளீஸ் கட் பண்ணாதீங்க.. ” என்றாள் மருமகள்.

                 “என்ன விஷயம். எதுக்காக எனக்கு போன் பண்ணியிருக்க..” என்று பார்கவி அதட்ட

                 “என்ன பண்றது நீங்கதானே என்னோட மாமியார்.. அப்போ உங்ககிட்ட தான் பேசியாகணும்..” என்றாள் சாஷா..

                   “நீ என்கிட்டே பேச என்ன இருக்கு..?” என்று அவர் கடுமையாக பேச,

                   “நிச்சயமா இருக்கு.. உங்க வீட்டு நவராத்திரி பூஜையைப் பத்தி பேசணும்.. நேத்து தாத்தா சொல்லிட்டு இருந்தாங்க… நீங்க எப்படி பூஜை பண்ணுவீங்க, உங்களோட விரதம் எப்படி எல்லாமே சொன்னாங்க… அவருக்கு நீங்கதான் பூஜை பண்ணனும்னு எண்ணமிருக்கு.. ஆனா, கூப்பிட்டா நீங்க வருவீங்களான்னு தயக்கம்.. அதனாலதான் நான் சொல்றேன்..” என்று சாஷா கூற,

                 “என் தலையெழுத்தைப் பார்த்தியா.. என் வீட்டு பூஜைக்கு நீ என்னை கூப்பிடற..”

                “இதுக்காகத்தான் சொல்றேன்.. இது உங்கவீட்டு பூஜை.. உங்க புருஷன், பிள்ளை, மாமனார் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நீங்க பண்றது.. என்னால கெட்டுப்போனதா இருக்க வேண்டாம்.. உங்களுக்கு இவங்கமேல அக்கறை இருந்தா நீங்களே வந்து பண்ணிடுங்க..” என்றாள் சாமர்த்தியமாக.

                 :”ஏன்.. என் மகன் கையால தொங்க தொங்க தாலி கட்டியிருக்கியே.. நீ கும்பிட வேண்டியது தானே.. என்னை எதுக்குடி கூப்பிடற..” என்று அவர் அப்போதும் ஒருமையில் சத்தமிட,

                   “நீங்க சொன்ன அதே காரணம் தான்.. நான் பிறந்த குடுமபத்துல இதெல்லாம் பழக்கமில்லை.. இதெல்லாம் என்னனு கூட தெரியாது எனக்கு.. நீங்க வந்து செஞ்சிடுங்க..” என்று அப்போதைக்கு அழைப்பைத் துண்டித்துக் கொண்டவள் அவ்வபோது அழைத்து “வந்துடுவீங்க இல்ல..” என்று கேட்டு கேட்டே பார்கவியின் இரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருந்தாள்.

Advertisement