Advertisement

பீஷ்மன் அவளை நக்கலாகப் பார்த்தவன்இப்படியெல்லாம் யார் உன்கிட்ட சொல்லிக் கொடுத்தது..” என்று கேள்வியெழுப்ப, மறுப்பாக தலையசைத்து தாத்தாவைப் பார்த்தாள் பேத்தி.

               சத்யாபோட்டுக் கொடுத்துட்டியே பேத்திம்மா..” என்று சிரிக்க, “உன் தாத்தா சொன்னா, என்னை வச்சு காமெடி பண்ணுவியா..” என்று பீஷ்மன் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்தவன் சாஷாவை நெருங்க, “பீம் நானில்ல..” என்று கத்திக்கொண்ட தானும் எழுந்து விலகி நின்றாள் சாஷா.

                பீம் அவளை முறைத்துக் கொண்டே அவளை பிடிக்க முற்பட, சிரிப்புடன் அவ்விடம் விட்டு படிகளில் ஏறி ஓடினாள் சாஷா. அறைக்குள் நுழைந்தால் நிச்சயம் பிடித்துவிடுவான் என்று அவள் மொட்டைமாடிக்கு ஓட, பீஷ்மனும் விடாமல்  துரத்திக் கொண்டிருந்தான்.

                               சாஷா நீச்சல் குளத்திற்கு அருகில் வரவும் அப்படியே நின்றுவிட, பீஷ்மன் சிரிப்புடன் நெருங்கினான் அவளை.

             “பீம் நான் சொல்லல.. தாத்தாதான்..” என்று கெஞ்சலாக சிணுங்கினாள் பாவை.

              “எப்படி கெத்தா இருந்தவனை, இப்படி அவர் கலாய்க்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்ட.. உன்னை..” என்றவன் அவளை எட்டிப் பிடிக்க முற்பட,

              “பீம் என்னால மறுபடியும் குளிக்க முடியாது..” என்று விலகினாள் மனைவி.

              “நான் உன்னை குளிக்க சொல்லலையே…” சட்டென அவளை பிடிக்க முயல, இம்முறை சாஷா விலகவும், நீச்சல் குளத்திற்கு வெகு அருகில் இருந்தான் பீஷ்மன்.

               சாஷா சிரிப்புடன் அவன் பின்புறம் வந்தவள் அவனை அப்படியே தள்ளிவிட, மொத்தமாக நீரில் விழுந்திருந்தான் பீஷ்மன்.

               அவன் விழுந்ததில் அப்படி ஒரு சிரிப்பு அவன் பொம்மைக்கு.. நின்ற இடத்தில் கைகளை தட்டி குழந்தையாக அவள் ஆர்ப்பரித்து சிரிக்க, அந்த சிரிப்புக்காகவே இன்னும் பத்துமுறை கூட விழுந்து எழலாம் என்றுதான் நினைக்கத் தோன்றியது பீஷ்மனுக்கு.

                “ஒழுங்கா பக்கத்துல வா..” என்று அவன் மிரட்ட, மறுத்து தலையசைத்தவள்தாத்தா கீழே இருக்காங்க பீம்.. நான் போகணும்..” என்று ஓடியிருந்தாள்.

                  அவளின் அடுத்தடுத்த நாட்களும் பீஷ்மனின் அருகாமையில் இதே மகிழ்வுடன் தொடர, அழகான இல்லறம் அவர்களுடையது..

                  அதுவும் அவளுக்கு உறவுகளே இல்லையே என்ற ஏக்கம் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள, தாத்தாவும், மணியும் வேறு அருகில் இருக்க வேறு என்ன வேண்டும் சாஷாவுக்கு. அழகாக பீஷ்மனின் கையைப் பற்றிக்கொண்டு நடைபோட்டது அவனது பொம்மை.

                   அவர்களின் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்லாது அவர்களின் மாலும் இப்போது சாஷாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. மிதுன் விஷயத்தில் பீஷ்மன் கடுமையாக நடந்து கொண்டதில் இருந்தே அவனை நெருக்கமாக கண்காணிக்கத் தொடங்கியிருந்தாள் சாஷா.

                   ஏதோ அவர்களின் நல்ல நேரம் பீஷ்மன் பெயர் எதிலும் சிக்கி கொள்ளாமல் வெளியே நடமாடிக் கொண்டிருக்கிறான். ஆனால், எப்போதும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாதே.. அந்த பயம்தான் அவளுக்கு.

                   அதன்பொருட்டே எந்த நேரமும் பீஷ்மனின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறாள் சாஷா. பீஷ்மன் சிலமுறை சத்தமாக அதட்டி இருந்தும், அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் சாஷா.

                  பீஷ்மனும் தன் அடிதடி, பஞ்சாயத்துகளை ஓரளவு குறைத்துக் கொண்டாலும், இன்னும் மொத்தமாக விட்டிருக்கவில்லை. அவன் இருக்கும் துறையில் இதெல்லாம் இல்லையென்றால் பிழைக்க முடியாதே.. ஆனால், அவனது எந்த தகிடுதத்தமும் சாஷாவை நெருங்காமல் பார்த்துக் கொள்கிறான் இப்போதெல்லாம்.

                  வீட்டில் சாஷாவின் பீமாக அவள் பின்னே சுற்றிவந்தாலும், வெளியே அதே சாந்தனு பீஷ்மன் தான் அவன்.

                 இவர்கள் மாதுரிக்கும் சாஷாவுக்கும் இடையில் ஒன்றுமில்லை என்று எழுதிக்கொடுத்து இரண்டு மாதங்கள் கடந்திருக்க, மாதுரியின் வசமிருந்த சொத்துகள் சட்டப்படி சாஷாவின் கைகளுக்கு வந்து சேர்ந்திருந்தாலும், அதையெல்லாம் பற்றி எந்த கவலையுமில்லாதவளாக சாஷா வலம் வர, பீஷ்மன் அப்படியிருப்பவன் இல்லையே.

                 மொத்தத்தையும் சாஷாவின் பெயரில் ஒழுங்குபடுத்த நினைத்தான் அவன். ஆனால், சாஷாவோநமக்கு இதெல்லாம் வேண்டாமே பீம்..” என்றாள் கெஞ்சலாக.

                  “ஹேய்.. பின்ன எதுக்கு அவங்ககிட்ட இருந்து வாங்கினது. வேண்டாம்ன்னா என்ன செய்ய சொல்ற இத்தனையும்.. அத்தனையும் கோடிக்கணக்கில் போகும் தெரியுமா..??” என்று அதட்டினான் பீஷமன்.

                  “எனக்கு இந்த கணக்கெல்லாம் வேண்டாம் பீம். நான் சாப்பிடற அளவுக்கு என் புருஷன் சம்பாதிக்கிறார்.. அது போதும்.. எனக்கு என்னவோ இதை தொடவே மனசில்ல.. பிடிக்கல.. எனக்கு வேண்டாமே..” என்று மீண்டும் கூறியவள் அவன் தோள் சாய, அவளின் உணர்வுகள் ஓரளவு புரிந்தது அவனுக்கு.

                   அவள் கூறியதுபோலநாந்தான் சம்பாதிக்கிறேனே.. என் மனைவிக்கு என்னால் சொத்து சேர்க்க முடியாதா..” என்று எண்ணம் எழ, அவன் முன் இருந்த பத்திரங்கள் வெற்று காகிதங்களாகத் தான் தெரிந்தது அவனுக்கு.

                   நொடியில் அவை தனக்கும் வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டான் அவன். ஆனால், அவை வேண்டியவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதிலும் அவன் தெளிவாக இருக்க, அந்த நொடி முதலாகவே சிந்தித்து அவன் எடுத்திருந்த முடிவுதான் சாஷாவின் பெயரில் அவன் தொடங்கியிருந்த அறக்கட்டளை.

                   எந்த பெயரை சாஷா வெறுத்து ஒதுங்க நினைத்தாளோ, எதை சிறுமையாக அவள் நினைத்திருந்தாளோ, அதை அவளின் பெருமையாக மாற்ற முடிவெடுத்திருந்தான் பீஷ்மன்.

                   எந்த யோசனையும் இல்லாமல்சாஷா அறக்கட்டளை…” என்று நிறுவனத்தை அவள் பெயரில் பதிந்து இருந்தான். அவளின் சொத்துகள் அனைத்தையும் அந்த நிறுவனத்திற்கே அளித்துவிட முடிவெடுத்திருந்தான் அவன்.

                  அறக்கட்டளையின் நிர்வாகத்தில் சாஷா, மீனலோச்சனியை தவிர்த்து மூன்றாவதாக ஒரு ஆளையும் சேர்த்து இருந்தான் பீஷ்மன். ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாதவர் பீஷ்மனின் பேச்சு சாதுரியத்திலும், சத்யாவின் வற்புறுத்தலிலும், அவருக்கு நெருக்கமான மற்றவர்களின் அறிவுறுத்தலிலும் ஒப்புக்கொண்டிருந்தார்.

                   நிறுவனத்தை சட்டப்படி பதிவு செய்யும் வேலையையும் சாஷாவுக்குத் தெரியாமலே, தன் பணத்தால் முடித்திருந்தான் அவன். சாஷாவின் கையெழுத்தும் வழக்கம்போல் அவள் மயங்கியிருந்த நேரத்தில் பெறப்பட்டிருந்தது.

                    இன்னும் பீஷ்மனின் அருகாமையில் அவனது பொம்மைதான் சாஷாசிலதெல்லாம் என்ன செய்தாலும் முடிவில் அப்படியே அதன் வடிவிற்கே வந்துவிடுமே.. அப்படிப்பட்டவள்தான் அவள். ஆயிரம் மாற்றங்கள் வந்திருந்தாலும், பீஷ்மனிடம் அதே சாஷாதான்.

                   இன்றளவிலும் சிறு மாற்றமில்லை அவள் காதலிலும். சொல்லப்போனால், இப்போதுதான் இன்னுமின்னும் அதிகமாக காதலிக்க கற்றுக் கொண்டிருக்கிறாள் அவள்தினம் தினம் பீஷ்மனை காதலிக்க ஒரு புது காரணம் கிடைத்துக் கொண்டே இருக்கும் அவளுக்கு.

                   இதோ இப்போதும் அவளிடம் சொல்லாமலே அனைத்தையும் முடித்திருந்தவன் அன்று காலை அத்தனை அவசரமாக அவளை அழைத்து வந்திருந்தான். அவர்களின் அறக்கட்டளையின் தொடக்கவிழா அன்று.

                  செயல்பட முடியாத நிலையில் இருந்த இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களை அன்றே அவர்கள் அறக்கட்டளையின் கீழ் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தான் பீஷ்மன். மேலும் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், சமூகத்தினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், முதியவர்கள் என்று அத்தனைப் பேரின் நலத்தையும் நாடுவதே அந்த அறக்கட்டளையின் நோக்கமாக இருந்தது.

                  இதுமட்டுமல்லாமல் ஏழை மாணவர்களின் படிப்பு, மருத்துவம் என்று அத்தனைக்கும் பயன்படும் வகையில் அதன் கொள்கைகள் வரையறுக்கப்பட்டிருக்க, ஒரே மாதத்தில் இப்படி ஒரு துவக்கம் பீஷ்மனைத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமாகி இருக்காது.

               பீஷ்மன் சாதித்துக் காட்டியிருந்தான். அவன் பொம்மையின் முகத்தில் காணப்போகும் அந்த கண்ணீர் கலந்த புன்னகைக்காக அத்தனையும் செய்திருந்தான் அவன்.

                இதோ சாஷாவை தானே அழைத்து வந்தவன் அந்த அறக்கட்டளையின் முன்னே தன் காரை நிறுத்த, மணி வந்து கார்கதவை திறந்துவிட்டான். சாஷாஎங்கே வந்திருக்கிறோம்..” என்று கேட்டுக்கொண்டே இறங்க, பதிலில்லாத புன்னகையுடன் அவள் அருகில் வந்து நின்றான் பீஷ்மன்.

                மணிவாழ்த்துகள் மேடம்..” என்று கையை நீட்ட, அவன் கையைப் பிடித்தாலும் அவனை முறைத்தாள் அவள்.

                என்னதான் அக்கா என்று கூறிக்கொண்டாலும், எப்போதும்மேடம்..” என்ற அழைப்புடன் தனக்கான எல்லையில் நிற்பவனை எத்தனையோ முறை திட்டிவிட்டாள் சாஷா. ஆனால், எப்போதாவது உணர்ச்சிப்பெருக்கில் அவனையும் மீறிய நேரங்களில் மட்டுமேஅக்கா..” என்று அழைப்பவன், மற்ற நேரங்களில் அவனாகவே இருந்தான்..

                  இப்போதும் சாஷாவின் முறைப்பைக் கண்டுகொண்டாலும், “வாங்க மேடம்..” என்று கையை விலக்கிக்கொண்டே அவள் பின்னால் நடந்தான் அவன்.

                  பீஷ்மன் சாஷாவின் கைபிடித்து உள்ளே அழைத்துவர, மீனலோச்சனி, சத்தியநாராயணன், தெய்வநாயகி என்று அத்தனைபேரும் கூடியிருந்தனர் அங்கே. அவர்கள் மட்டும்தான் என்றில்லாமல் சாஷாவுக்குத் தெரியாத இன்னும் சிலரும் அங்கிருக்க, அந்த கட்டிடத்தின் உள்ளே ஒரு பலகைக்கு திரையிடப்பட்டிருந்தது.

                  ஏதோ திறப்பு விழாவோ என்று எண்ணிக் கொண்டாலும், சாஷாவுக்கு இன்னமும் முழுதாக எதுவும் புரியாத நிலை. அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து அறிமுகப்புன்னகை செய்தவள் பீஷ்மனின் அருகில் நின்று கொண்டாள்.

                  பீஷ்மன் சத்யாவைப் பார்க்கவும், சத்யா மெல்ல தலையசைக்க, பீஷ்மன் சாஷாவின் கையைப் பிடித்து மெல்ல அழைத்து வந்து அந்த திரைக்கு முன்னே நிறுத்தினான்.

                  சாஷாபீம்..” என்று ஆச்சரியத்துடன் அவன் முகம் நோக்க, மீனு சிரிப்புடன் அவள் அருகில் வந்தவர் அவளைத் தோளோடு அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அவள் கைகளில் ரிப்பன் கட்டியிருந்த ரிமோட்டை அவர் திணிக்க, “என்ன நடக்குது இங்கே..” என்று குழந்தையாக விழித்தவளை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடிவிடத்தான் தோன்றியது பீஷ்மனுக்கு.

                  தன்னை அடக்கிக் கொண்டே அவன் பின்னால் நகர்ந்து நிற்க, மீனலோச்சனி சாஷாவிடம் அந்த திரையைக் கண்காட்டினார். ஆனால், சாஷா அப்போதும் பீஷ்மனைத் திரும்பி பார்க்க, அவன் தலையசைக்கவும் தான் தன் கைகளில் இருந்த ரிமோட்டை அழுத்தினாள்.

               அந்த மெல்லிய சாட்டின் திரை விலகசாஷா அறக்கட்டளை..” என்ற எழுத்துகள் பொன்னிறமாக மின்னிக் கொண்டிருந்தது அங்கே.

                 திகைத்து விழித்தவளுக்கு அந்த நிமிடம் எப்படி தன்னை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. தன் வலது கையால் வாயை மூடி தன் அழுகையை கட்டுப்படுத்தியவள் பீஷ்மனைத் தேட, சட்டென அவள் அருகில் வந்து நின்றான் பீஷ்மன்.

                  மேலும்சாஷா..” செல்லமாக அதட்டியவன் அவளைத் தோளோடு அணைக்க, மீனு விலகி நின்றார் இப்போது. பீஷ்மன்சாஷா எல்லாரும் இருக்காங்கஅழக்கூடாது.” என்று கட்டளையாக அவள் காதில் உரைக்க, மெல்ல கண்களைத் துடைத்துக் கொண்டே, விலகி நின்றது கவிதைதான் நிச்சயம்.

                 பீஷ்மனை ஊடலாக நோக்கியவள் சத்யாவின் அருகில் சென்று நின்று கொண்டாள். “நீங்களும் சொல்லவே இல்ல தாத்தா..” என்று அவரையும் குற்றம் சாட்டினாள் பெண்.

                 “உன் புருஷன், நாந்தான் என் பொண்டாட்டிக்கு சொன்னவன் தாத்தானு சொல்லிட்டானே சாஷாம்மா…” என்று இலகுவாக பேரனை கோர்த்துவிட்டார்.

                   சத்யநாராயணன் மீனுவையும், ரேகாவையும் பூஜையை துவங்கி வைக்க சொல்ல, ரேகா தயங்கி நின்றார். ம்ம்ம்.. ரேகாவும் அந்த நிறுவனத்தின் ஒரு உறுப்பினர். அவரைவிட இந்த பணிக்கு சிறந்தவராக யாரைத் தேர்வு செய்திட முடியும்.

Advertisement