Advertisement

கைப்பாவை இவளோ 28

                 மாதுரிக்கும் சாஷாவுக்கு இடையே யாதொரு உறவும் இல்லையென சட்டபூர்வமாக எழுதி வாங்கியிருக்க, மாதுரியின் முகத்தைக்கூட பார்க்க விரும்பாதவளாக காரில் வந்து அமர்ந்து கொண்டாள் சாஷா. பீஷ்மன் நின்று அத்தனையும் முடித்துவர, காரில் தனக்கருகில் அமர்ந்தவனின் தோளில் சாய்ந்து கொண்டவள் கண்களை மூடிக் கொண்டாள்.

                  பீஷ்மனுக்கு புரியுமே அவளை. அவள் கன்னத்தில் மென்மையாக தட்டிக் கொடுத்தவன் மெல்ல தன் இதழ்களைப் பதித்தான் அங்கே. சாஷா சிறு புன்னகையுடன் இன்னும் அழுத்தமாக அவனோடு ஒட்டிக்கொள்ள, அவனும் சிரிப்புடனே காரை இயக்கினான்.

                   அடுத்த ஒருமணி நேரத்தில் அவர்கள் சத்யநாராயணனின் வீட்டை அடைய, இவர்களுக்காக காத்திருந்தார் அவர்.

                   சாஷாவின் சிரித்த முகத்தைக் காணவும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது அவருக்கு. “எல்லாம் முடிஞ்சதா..” என்று பீஷ்மனிடம் அவர் கேட்க, ஆமென தலையசைத்தான் பேரன்.

                   சாஷா இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் தீர்ந்தவளாக “நான் கொஞ்சநேரம் தூங்கறேன் தாத்தா.. தூக்கம் வருது.. ரொம்ப சோர்வா இருக்கு..” என்று மேலே இருந்த அவளது அறைக்குச் சென்று படுத்துவிட, அடுத்த சில நிமிடங்களில் கையில் பழச்சாறுடன் அவளைத் தேடி வந்துவிட்டான் பீஷ்மன்.

                    கதவுத் திறக்கும் ஓசையில் கண்விழித்துப் பார்த்தவள் “பீம் இப்போ எதுவும் வேண்டாம்.. தூக்கம் வருது எனக்கு.. டயர்டா இருக்கு..” என்று மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

                   பீஷ்மன் அவளை அப்படியே விட்டுவிடுவானா என்ன..? அவள் கையைப் பிடித்து எழுப்பி அமர்த்தியவன் அவள் உதட்டருகில் அந்த டம்ளரை வைத்து அழுத்த, “ம்ச்.. எனக்கு வேணாமே..” என்று கொஞ்சினாள் மனைவி.

                   என்னவோ அவளது முகமும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் வாடிப் போயிருக்க, “எதையும் நினைச்சு கஷ்டப்படறியா சாஷா..”என்று அவள் முகத்தை தன் ஒற்றைக்கையில் தாங்கினான் பீஷ்மன்.

                    “இந்த நிமிஷம் நிம்மதியா இருக்கேன் பீம்.. அவங்களோட பொண்ணுங்கிற அடையாளம் தொலைஞ்சு போனதை நினைச்சு நிம்மதியா இருக்கேன். இப்போ நான் சாஷா.. பீஷ்மனோட மனைவி சாஷா மட்டும்தான். என் தாத்தா சத்யாவோட பேத்தி… அவ்ளோதான்..”

                   “எதுல இருந்தோ விடுதலையானது போல உணர்றேன் பீம். இது அத்தனையும் உங்களால தான்.” என்றவள் காதலுடன் அவன் கீழ்த்தாடையில் முத்தமிட,

                    “என்னடி கேட்காமலே கொடுக்கற..” என்று அதிர்ச்சியானான் அவன்.

                     “ஆமா.. அப்படித்தான்.. என் புருஷன் நான் கொடுப்பேன்..” என்றவள் மீண்டும் அவன் கன்னத்தை ஈரமாக்க,

                     “இதெல்லாம் பெரிய விஷயமா.. இன்னும் முக்கியமான இடத்துக்கே வரல நீ..” என்றான் பீஷ்மன். அவன் கண்கள் திருட்டுப் புன்னகை புரிந்து கொண்டிருந்தது அந்த நேரம்.

                     சாஷா சிரித்துக் கொண்டே அவன் இதழ்களை நெருங்கி, அதிரடியாக அவனுக்கு முத்தம் வைக்க, “தன் பொம்மையா…” என்று அதிர்ந்து விழி விரித்தான் பீஷ்மன்.

                     சாஷா சில நாழிகை கழிந்து விலக, அதிர்ச்சி குறையாமல் “ஹேய் பொம்மை என்ன இதெல்லாம்.. இப்படியெல்லாம் ஷாக் கொடுக்கற..” என்று பீஷ்மன் வினவ, வெட்கத்துடன் கண்சிமிட்டிச் சிரித்தாள் அவள்.

                     சிரிக்கும் அவளை மிக மென்மையாக அணைத்துக் கொண்டவன் மீண்டும் அவள் கைகளில் அந்த பழச்சாறு அடங்கிய டம்ளரை வைத்து அழுத்தினான்.

                     அவனை காதலுடன் பார்த்தவள் மௌனமாக அந்த பழச்சாற்றை அருந்தி முடிக்க, “கொஞ்சநேரம் தூங்கு.. ஈவினிங் வீட்டுக்கு கிளம்புவோம்..” என்றான் மென்மையுடன்.

                              “ஹான்.. எங்கே கிளம்பனும்.. அதெல்லாம் முடியாது. இங்கேயே இருப்போம்.” என்றாள் முடிவாக.

         “நீயே முடிவு பண்ணுவியா.. ஒழுங்கா என்னோட வர, இல்ல தூக்கிட்டு போய்டுவேன்..” என்று கண்களை பெரிதாக்கி பீஷ்மன் முறைக்க, தன் கைகளால் அவன் கழுத்தை வளைத்துக் கொண்டவள் “ப்ளீஸ்ப்பா.. இங்கேயே இருப்போம்…” என்று மீண்டும் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, அவளை புதிதாக பார்த்திருந்தான் பீஷ்மன்.

             “என்ன மேடம் ரொம்ப நல்ல மூட்ல இருக்கீங்க போல.” என்று கட்டிலில் சாய்ந்து கொண்டே அவன் வினவ, சாஷா அவன் கழுத்தை வளைத்திருந்ததால் தானும் அவனுடனே விழுந்து வைத்தாள்.

                அவன் அருகில் விழுந்தவள் கைகளை விலக்க, அவளை விடாமல் பிணைத்துக் கொண்டவன் அவள் முகத்தில் வந்து விழுந்த அவளது முடியைக் காதோரம் ஒதுக்கிவிட, அவனை மென்புன்னகையுடன் ரசித்துப் பார்த்திருந்தாள் சாஷா.

                “என்னடா..” என்று பீஷ்மன் மீண்டும் அவள் கண்பார்க்க, “தேங்க்ஸ் எல்லாத்துக்கும்…” என்றவள் சிறு துளியாய் நின்ற கண்ணீருடன் அவன் கழுத்தில் புதைய,

                 “இப்போ என்ன.. நானும் சொல்லனுமா..” என்றான் அவன்.

                “நான் கேட்டேனா உங்ககிட்ட..” என்று முறுக்கினாள் சாஷா.

                 “நான் மட்டும் கேட்டேனா என்ன.. நீ ஏன் சொன்ன..” என்று அவளை இறுக்கினான் பீஷ்மன்.

                  “சொல்லணும் தோணுச்சு…” என்றவள் மீண்டும் அவன் தாடையில் இதழ் பதித்தாள்.

                 நேராக படுத்து அவளைத் தன்மீது அப்படியே கிடத்தியவன் “நான் சொல்லணும்ன்னு தொடங்கினா, இன்னைக்கு முழுக்க சொல்லணும் சாஷா.. அப்புறம் தேங்க்ஸ் சொல்றதுக்கே மொத்த நேரமும் போய்டும்..” என்று கண்ணடித்தான்.

                   சாஷா அவன் பேச்சில் சிரிக்க, “இந்த காதலுக்கு நான் எப்படி நன்றி சொல்றது..” என்றான் காதலுடன்.

                   சாஷா வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகம்பதித்து கொள்ள, அவள் உச்சியில் இதழ் பதித்தான் அவன். இருவருக்குமே அந்த நிமிடம் அவர்கள் இருவரைத் தவிர்த்து வேறு சிந்தனையே இல்லை. அவர்கள் உலகில் அந்த நேரம் அவர்கள் இருவர் மட்டுமே பிரஜைகள்.

                  சாஷா சுகமாக அவன் நெஞ்சின்மீதே உறங்கிப் போக, அவள் உறக்கம் உணர்ந்தவன் அவளை அப்படியே வைத்துக்கொண்டே தானும் சில நிமிடங்களில் உறங்கிப் போனான்.

                    காலை பன்னிரண்டு மணி அளவில் உறங்கத் தொடங்கியவர்கள் மதிய உணவுக்கு கூட கீழிறங்காமல் அப்படியே உறங்கி போக, மாலை இருள் கவிழும் நேரம் தான் விழித்தெழுந்தனர்.

                   பீஷ்மன் விழித்த நேரம் சாஷா குளித்து முடித்து வெளியே வர, “கிளம்பிட்டியா.. வெரிகுட்.. நானும் குளிச்சுட்டு வரேன்… கிளம்புவோம்.” என்றான் சாதாரணமாக.

                       “எங்கே கிளம்ப.. நாந்தான் காலையிலேயே சொன்னேன்ல.. நான் எங்கேயும் வரமாட்டேன்..” என்றாள் சாஷா.

                      “ஓகே. நீ இங்கேயே இரு. நான் கிளம்புறேன்..” என்றவன் குளியலறையில் நுழைந்து கொள்ள, “பீம்.” என்று செல்லும் அவன் முதுகைப் பார்த்து அவள் கத்த, அவளைக் கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்து கொண்டான் அவன்.

                      சாஷாவும் அவனை விடும் எண்ணமில்லாமல் “பீம்.” என்று குளியலறைக் கதவைத் தட்ட, கண்டு கொள்ளவே இல்லை அவன். “பீம்..” என்று சற்று அழுத்தமாக அவள் கதவைத் தட்டிய நொடியில் அவன் குளியலறைக் கதவைத் திறந்து வைக்க, எதிர்பாராமல் அவன்மீதே விழுந்திருந்தாள் மனைவி.

                  சாஷா அதிர்ச்சியில் உறைய, அவளை உள்ளே இழுத்து கதவைத் தாழிட்டான் அவன். “பீம்..” என்ற அவளது அலறல்கள் அடங்கிப் போக, மேலும் ஒருமணி நேரம் கழிந்தபின்பே அங்கிருந்து வெளியே வந்தனர் இருவரும்.

                 சாஷா பீஷ்மனை முறைத்துக்கொண்டே கீழிறங்கிச் சென்றுவிட, பீம் மந்தகாசமாக சிரித்துக் கொண்டிருந்தான். கீழே சத்யா ஹாலில் அமர்ந்திருக்க, அவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் சாஷா.

                 “என்னடா நல்ல தூக்கம் போல.. உடம்பு எதுவும் முடியலையா.. மீனாவை வரச் சொல்லவா..” என்று கனிவுடன் கேட்டார் அவர்.

                அதில் உள்ளம் நெகிழ்ந்தது சாஷாவுக்கு. உண்மையிலேயே அவள் முடியாமல் படுத்து கிடந்த காலங்களில் இப்படி அவளை அக்கறையாக விசாரிக்க என்ன, அவள் என்ன ஆனாள் என்று தேடக்கூட ஆளில்லாமல் கிடந்திருக்கிறாள். அந்த நினைவுகள் மேலெழ, எதிரில் இருந்தவரை மறந்து போனாள் அந்த நிமிடம்.

                 சத்யா அவளின் முகம் கண்டு “சாஷா..” என்று மீண்டும் அழைக்க, “ம்ம்.. என்ன தாத்தா..” என்றாள் தூக்கத்தில் இருந்து விழித்தவள் போல்.

                சத்யா “என்னம்மா யோசனை..” என்று மீண்டும் கேட்க,

                “ஏதோ தாத்தா.. முன்ஜென்ம நியாபகங்கள்..” என்று சிரித்தது பாவை.

                சத்யா அவளுடன் சேர்ந்து சிரித்தாலும், தன் பேத்தியை ஆதுரத்துடன் பார்த்திருந்தார்.

                சாஷா தானாகவே “நான் இங்கேயே இருக்கட்டுமா தாத்தா.. உங்களோட இந்த வீட்டிலேயே இருக்கட்டுமா..” என்று அனுமதியாக பேத்தி கேட்க, சத்யாவுக்கு அவளின் இந்த எண்ணம் முன்பே தெரியும்.

                பீஷ்மன் காலையிலேயே அவரிடம் தெரிவித்து இருந்தானே.. சாஷா கேட்டு மறுத்துவிடுவானா அவன்..?? அவரிடம் சொல்லிவிட்டு தான் அவளை அலையவிட்டுக் கொண்டிருந்தான் அவன்.

                 சத்யா புன்னகையுடன் “உன் வீடும்மா இது.. நீ இங்கே இருக்க யாரை கேட்கணும்..” என்று புன்னகையுடன் வினவ,

                 “உங்க பேரனைக் கேட்கணும்.. நானும் இரண்டு வாரமா கேட்டுட்டு இருக்கேன்.. ஒத்துக்கவே இல்ல அவர்.. ப்ளீஸ் தாத்தா, நீங்க சொல்லுங்க..” என்று அழகாக கெஞ்சினாள் அவள்.

                 “அவனை விடும்மா.. நீ இங்கேயே இரு.. உன்னை விட்டு இருக்கமாட்டான் அவன். தானாகவே ஓடி வந்திருவான்..” என்று சத்யா சிரிப்புடன் வழி சொல்ல, வெட்கப்புன்னகை பூத்தாள் சாஷா.

                  அவள் புன்னகையில் சத்யா சத்தமாக சிரிக்க, “கிண்டல் பண்ணாதீங்க தாத்தா..” என்று சிணுங்கினாள் பேத்தி.

                  “உனக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்லவா… உன் புருஷன் காலையிலேயே என்கிட்டே சொல்லிட்டான். நானும் என் பொண்டாட்டியும் இனிமே இதே வீட்லதான் இருக்க போறோம்… பார்த்து நடந்துக்கோங்கன்னு உத்தரவு போட்டாச்சு..” என்றார் விளையாட்டாக..

                   சாஷா “அச்சோ.” என்று பார்க்க, “உன் புருஷன் ஒழுங்கா பேசினாதான் ஏதாவது வில்லங்கம் வரும்.. இப்படி பேசினா நல்ல விஷயம் தான்.. ” என்றார் சத்யா.

                  இப்போது பேத்தியும் “காலையில இருந்து என்னை அலையவிட்டுட்டு இருக்கார் தாத்தா..” என்று புகார் படிக்க, “நல்லா ரெண்டு அடி போடு..” என்று சொல்லிக் கொடுத்தார் அவர்.

                  சாஷா புன்னகைக்க, சத்யாவும் சிரித்துக் கொண்டார்… இவர்கள் சிரித்திருக்கும் போதே பீஷ்மன் வந்து சேர, அவனும் அவர்களுடன் அமர்ந்து கொள்ள, “என்ன சிரிப்பெல்லாம் பலமா இருக்கு..” என்றான் பீஷ்மன்.

                “ஆமா.. நான் இங்கே இருக்க தாத்தா ஒத்துக்கிட்டாங்க.. அதுதான் சிரிச்சுட்டு இருக்கேன்…” என்றாள் சாஷா.

                “உன் தாத்தா ஒத்துக்கிட்டா போதுமா..” என்று பீஷ்மன் அதட்ட, அவனை சிரிப்புடன் பார்த்தவள் “போதும்.. ” என்றுவிட, பீஷ்மன் அவளை முறைத்து பார்த்தான்.

                 “ம்ச்.. நீங்கதான் நான் எங்கே இருக்கேனோ, அங்கேதான் இருப்பிங்களாமே.. நான் இங்கே இருந்தா, நீங்களும் இங்கேயே வந்துடுவீங்களாம்..” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் சாஷா.

Advertisement