Advertisement

“மிதுனோட மரணத்துக்கு பீஷ்மன் காரணமா இருக்கலாம். ஆனா, அவனா எதுவும் செய்திருக்கமாட்டான். நீ அவனை கொலைகாரன்னு எல்லாம் சொல்லி நீயே உன் வேதனையை அதிகமாகிக்காத..”

                      “நீ சொல்றபடி பீஷ்மனோட கை இதுல இருந்தா, அவனுக்கு ஒரு சேதமும் இல்லாம அவனை பார்த்துக்கறதுக்கு நான் பொறுப்பு.. நீ அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.” என்று உறுதி கூறினார் சத்யா.

                     “ஆனா, நீதான் காரணமா இருப்பேன்னு எப்படி நினைக்கிற நீ..” என்று சத்யா கேட்டு நிற்க,

                     “என்னோட மொத்த வருமானமும் தனக்கு சொந்தமானதுன்னு நினைச்சுட்டு இருந்தவன் மிதுன். நினைச்சபடி சுத்தி திரிஞ்சு, அவன் நினைச்ச அத்தனையும் நடத்தினவன். பீம் மொத்தத்தையும் அவன்கிட்டே இருந்து பிடுங்கிட்டாரு. எதுவுமே அவனுக்கு கிடைக்காம செஞ்சார்.. அது ஒன்னு போதாதா.. பணத்தைவிடவும் வேறெதுவும் காரணம் வேணுமா..” கசப்புடன் சிரித்தாள் சாஷா.

                     “இப்பவும் நிச்சயமா அவன் என்னை வச்சுதான் ஏதோ திட்டம் போட்டு இருக்கணும்.. இல்லேன்னா, உங்க பேரன் இந்த காரியத்துக்கு துணிஞ்சிருக்கமாட்டார்..” என்றாள் அழுத்தமாக

                      சத்யா மெல்ல அவள் தலையை தடவிக் கொடுத்தவர் “உன் புருஷன் வரட்டும் பேசுவோம்.. அதுதான் அவன் தப்பு செய்திருக்கமாட்டான்னு உறுதியா சொல்றியே.. அது போதாதா.. வரட்டும் விடு..” என்று இலகுவாக அவளுக்கு ஆறுதலுரைத்தார் சத்யா.

                    “அவர் தப்பு செய்திருக்கமாட்டார்ன்னு நம்புறது என்னோட நம்பிக்கை தாத்தா.. அதேபோல, எதுவா இருந்தாலும் இவகிட்ட சொல்லலாம்ங்கிற நம்பிக்கையை நான் அவருக்கு கொடுத்திருக்கணும் இல்ல..??” என்று கேள்வி கேட்டாள் அவள்.

                   “அவன் சொல்ல மறுக்கிறது உன் நல்லதுக்காக கூட இருக்கலாம் இல்லையா..” என்றவரின் கேள்விக்கு சிரிப்பையே பதிலாக கொடுத்தாள் அவள்.

                   “எனக்கு தெரியணும் தாத்தா… காலையில அவன் இறந்துட்டான்னு தெரியவும் எல்லாம் மறந்து அழுதுட்டேனே.. என் அம்மா வந்தபோது சிலையா நின்னுட்டேனே… இன்னமும் ஏதோ ஒரு இடத்துல எனக்குள்ள அவங்களுக்கான பாசம் இருக்கு இல்லையா..”

                    “ஆனா, அதுக்கெல்லாம் தகுதியானவங்க இல்லன்னு நான் எனக்கு சொல்லிக்கணும் இல்லையா… நான் இப்படி மெழுகா உருகக்கூடாது இல்லையா.. அதுக்காகவாவது எனக்கு தெரியணும் தாத்தா…”

                    “நான் பீஷ்மனுக்கு மனைவியா மட்டுமே இருக்கணும்ன்னா எனக்கு தெரிஞ்சே ஆகணும்.. அவர் எப்படி என்கிட்டே மறைக்கலாம்..” என்று சராசரி மனைவியாக கோபம் கொண்டாள் பேத்தி.

                    சத்யா சிரித்துக் கொண்டே, “உன் பஞ்சாயத்து ரொம்ப பெருசா இருக்கும் போல.. நீ உன் புருஷன்கிட்டேயே பேசி தீர்த்துக்கோ… இப்போ முகத்தை கழுவிட்டு சாப்பிட வா.. எனக்கு பசிக்குது..” என்று டைனிங் டேபிளில் சென்று அமர்ந்து கொண்டார் அவர்.

                     அவர் பசி எனவும், சாஷாவும் தாமதிக்காமல் வந்து அமர்ந்து கொள்ள, இருவரும் காலை உணவை முடித்துக் கொண்டனர்.

                    அதன்பின்னர் சத்யா வெளியே கிளம்ப, சாஷா மேலே தான் தங்கியிருந்த அறைக்கு வந்துவிட்டாள். அவளின் அலைபேசியை அவள் வீட்டிலேயே விட்டு வந்திருக்க, வெளியுலகத் தொடர்பு முற்றிலும் அறுந்திருந்தது. என்னவோ மனம் முழுதும் பீஷ்மனுக்கான சிந்தனைகள் தான்.

                    நிரம்ப சுயநலமாக இருக்கிறோமோ.. என்று மனம் உறுத்தினாலும், ஏனோ அழுகை வரவில்லை.

                     “மிதுன் என்ன செய்திருப்பான்.”  என்றே எண்ணங்கள் ஊர்வலம் சென்றது அவள் மதி முழுவதும்.

                    அறையிலேயே அடைந்து கிடப்பது ஏதோ செய்ய, கட்டிலில் இருந்து எழுந்தவள் முதல்முறையாக அந்த வீட்டின் மொட்டைமாடிக்கு வர, அங்கே அழகாக நீண்டு விரிந்திருந்தது அந்த நீச்சல்குளம். செவ்வகவடிவில் இருந்த அந்த நீச்சல் குளத்தின் குளுமை அவளுக்கும் தன் குளிர்ச்சியைக் கடத்த தொடங்க, அமைதியாக நீரின் அருகே வந்தவள் நீரில் கால்களை விட்டு தரையில் அமர்ந்து கொண்டாள்.

                     மனம் மெல்ல மெல்ல வசப்பட, அந்த தனிமையும், குளுமையும் பீஷ்மனை நினைவுபடுத்தியது மங்கைக்கு. இந்த இடத்தில் அவனோடு நானிருந்தால் என்ற எண்ணமே முகம் சிவக்கச் செய்ய, “நீ இப்படியே இரு.. அவர் உன்னை ஏமாத்திட்டே இருக்கட்டும்..” என்று முறைத்தது மனது.

                    மனதை அதன் தலையில் தட்டி அதட்டி அடக்கியவள் சுதந்திரமாக அந்த நீரில் அமிழ்ந்து எழுந்து பீஷ்மனைத் தேட தொடங்கினாள். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, மேலே வருவதும், மீண்டும் நீரில் விழுவதுமாக தன்னை மறந்து சிறுபிள்ளையாக நீந்தி களித்தவள் அதன்பின்பே பெரிய மனது வைத்து அங்கிருந்து கிளம்பினாள்.

                    அன்று இரவு வரையும் பீஷ்மனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. ஏன்.. அவள் விட்டு வந்த அலைபேசியைக் கூட, கொடுத்து அனுப்பியிருக்கவில்லை அவன். அவனைத் மனதார திட்டிக்கொண்டே உண்டு முடித்து அவள் அறைக்கு வர, படுத்ததுமே கண்களை சொருகியது.

                    மதியம் தண்ணீரில் கிடந்தது இப்போது வேலையை காட்ட, லேசாக சளி பிடிக்கும் அறிகுறி காட்டியது உடல். ஆனால், அதற்காக மெனக்கெட்டு எதுவும் செய்யாமல் அவள் அமைதியாக கண்மூட, அவள் ஆழ்ந்து உறங்க முற்படும் வேளையில் அழுத்தமாக அவளை அணைத்துக் கொண்டான் பீஷ்மன்.

                     அவன் நினைவிலேயே இருந்ததால் இப்படி இருக்கிறதோ.. என்று தன்னையே கேட்டுக்கொண்டவளாக அவள் மீண்டும் உறக்கத்தை அழைக்க, ம்ஹூம்… மீண்டும் அவள் இதழ்கள் ஈரமானது அங்கே.

                  பட்டென அவள் கண்களைத் திறக்க, அவளை அப்படியே அள்ளி தன்மீது கிடத்திக் கொண்டான் பீஷ்மன். ஒரு கணம் நெகிழ்ந்தவள் அவன்மீது இருந்த கோபத்தில் “என்னை விடுங்க..” என்று தள்ளிப் போக, காது கேளாதவனாக அவளை அணைத்துப் பிடித்திருந்தான் பீஷ்மன்.

                மீண்டும் சாஷா விலக முற்பட, “இங்கே பாருடி.. ரொம்ப ஓவரா பண்ணாத.. நான் இல்லாம உனக்கு தூக்கம் வராதே ன்னு தான் வந்தேன்.. ஒழுங்கா கண்ணை மூடி தூங்கு..” என்று பீஷ்மன் அதட்ட,

                “நான் சொன்னேனா உங்ககிட்ட.. நான் தூங்கதான் போனேன்.. என் தூக்கத்தை கெடுக்கிறதே நீங்கதான்.. வெளியே போங்க..” என்றாள் கண்டனத்துடன்.

                “அப்போ வா ரெண்டு பெரும் போகலாம்..” என்று அவளை கைபிடித்து இழுத்தான் அந்த ராட்சசன்.

                “நான் உங்களோட வரமாட்டேன் எங்கேயும்..” என்று சாஷா கையை இழுத்துக் கொள்ள,

               “அதனாலதான் நான் வந்தேன் செல்லம்…” என்று மீண்டும் அவளை அணைத்தான் பீஷ்மன்.

                     “வேணாம் போங்க… என்கிட்டே எதையும் சொல்ல முடியாது உங்களால.. ஆனா, தூங்க மட்டும் நான் வேணும்.. போங்க..” என்று தலையணை வைத்து அவனை அடித்தவள் கட்டிலில் இருந்து இறங்கி நிற்க, எழுந்து அமர்ந்தான் பீஷ்மன்.

                 சாஷாவை நோக்கி தன் கைகளை அவன் நீட்ட, தன் கைகளை வேண்டுமென்றே இறுக்கமாக கட்டிக்கொண்டாள் அவள். அவள் செயலில் புன்னகை வர, “இங்கே உட்கார்..” என்று தன்னருகே படுக்கையைத் தட்டிக் காண்பித்தான் அவன்.

                 “முடியாது..” என்று அழுத்தமாக அவள் நிற்க,

                 “நீ கேட்டதை சொல்லத்தான் வந்தேன்.. கேட்கணும்னா உட்காரு..” என்றான் மீண்டும்.

                 அவள் படுக்கையின் ஒரு நுனியில் அமர, தன் கைகளை விரித்தான் இப்போது. இந்த முறை சுதாரித்துவிட்டாள் சாஷா..

                   “நான் மாட்டேன்.. உங்க கைக்குள்ள வந்தா என்னை யோசிக்கவிடாம செஞ்சிடுங்க நீங்க.. அப்புறம் என்னை விட்டுட்டும் போயிடுவீங்க..” என்று கூறிக்கொண்டே எழுந்து நின்றுகொண்டாள் மீண்டும்.

               பீஷ்மன் அவள் பேச்சில் சிரித்தவன் “வாடி..” என்றான் மீண்டும் காதலாக

               சாஷா மறுக்க, “நான் எழுந்தேன்.. எதையும் கேட்கற நிலைமையில நீ இருக்கமாட்ட..” என்று மிரட்டினான் இப்போது.

               சாஷா ஆட்சேபத்தை பார்வையில் தெரிவிக்க, “பக்கத்துல வந்தா சொல்றேன்.. இல்ல, நான் கிளம்புறேன். நீ இங்கேயே இரு.. ஆனா, எப்பவும் சொல்லமாட்டேன்..” என்று முறுக்கிக் கொண்டான் அவன்.

                கூடவே, அவனும் கட்டிலில் இருந்து இறங்க, “இருங்க..” என்று அவன் அருகில் அமர்ந்தாள் சாஷா.

               பீஷ்மன் சிரிப்புடன் தன்னிடத்தில் அமர்ந்து கொள்ள, சாஷா அவனைக் கேள்வியாகப் பார்த்திருந்தாள். ஆனால், அவள் எதிர்பாராத நேரம் அவளை இழுத்து தன்மீது சாய்த்துக் கொண்டான் அவன்.

               சாஷா “பீம்..” என்று விலக முயல, “கொன்னுடுவேன் உன்னை.. அப்படியே இருடி..” என்று சத்தமாக அதட்டிவிட்டான் இப்போது.

               சாஷா முகம் சுருக்கி கண்களை மூடிக் கொள்ள, “கண்ணைத் திற..” என்று அதற்கும் அதட்டல் தான்.

                அவள் கண்களைத் திறக்கவும், “எவனோ செத்துப்போனா, அதுக்கு என்னை விட்டுட்டு வருவியா நீ.. உனக்கு அந்த அளவுக்கு திமிர் கூடிப் போச்சுல்ல..” என்றவன் அவள் இடையில் அழுத்தமாக கிள்ளி வைக்க, “அச்சோ..” என்று அலறினாள் அவள்.

                  ஆனால், அப்போதும் “உங்ககூட இருக்கேன்ல.. அதுதான்..” என்று பதில் கொடுத்தாள் சாஷா.

                பீஷ்மன் சிரிப்புடன் அணைப்பில் இறுக்கம் காட்டியவன் “இப்பவும் உனக்கு எதுவும் தெரியவே வேண்டாம்னு தான் நினைக்கிறேன் சாஷா.. நீ புரிஞ்சிக்காம பிடிவாதம் பிடிக்கிற..” என்று அவள் தலையைத் தடவிக் கொடுத்தான் பீஷ்மன்.

                  “என்னவா இருந்தாலும் நீங்க என்னோட இருந்தா நான் தங்குவேன் பீம்.. எனக்கு சொல்லுங்க..நான் யாரை உறவுன்னு நினைச்சிருந்தேன்னு எனக்கும் தெரியணும் இல்லையா.. எவ்ளோ நாளைக்கு நானும் பைத்தியமா இருப்பேன்..” என்றவள் குரல் கமற, அவளை விலக்கி பிடித்து முறைத்தான் பீஷ்மன்.

                   “நீ அழுத.. இப்படியே கிளம்பிடுவேன்..” என்று பீம் மிரட்டல் விடுக்க, “அழமாட்டேன்..” என்று கண்களைத் துடைத்துக் கொண்டவள் அமைதியாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, மிதுனின் செயல்களை ஒன்றுவிடாமல் மெல்லியகுரலில் கூறி முடித்தான் பீஷ்மன்.

                    சாஷாவின் கண்களின் ஈரம் அவன் சட்டையை நனைக்க, “சாஷா..” என்று அதட்டினான் மீண்டும்.

                  அவனை இடுப்போடு கட்டிக்கொண்டவள் முகத்தை நிமிர்த்தாமல் அவனுக்குள் புதைந்து கொள்ள, பீஷ்மன் அவள் முகம் நிமிர்த்த முயன்றபோதும் அவன் கைகளைத் தட்டி விட்டாள்.

                  “சரி.. நீ அழுது முடிச்சுட்டு கூப்பிடு.. நான் கிளம்புறேன்..” என்று பீஷ்மன் எழுந்து கொள்ள முற்பட, அதற்கும் விடாமல் இறுக்கினாள் அவனை.

                  “என்னை ஏண்டி இப்படி சித்ரவதை பண்ற..” என்று கத்தினான் பீஷ்மன்.

                  “என்னோட இருங்க..” என்று ஒரு வரியில் உரைத்தவள் அதன்பின்பு அன்று இரவு முழுவதுமே அவனைவிட்டு விலகவே இல்லை.

                   இரவு நெடுநேரம் அவள் உறங்கவில்லை என்றாலும், ஆறு மணிக்கெல்லாம் விழித்துவிட்டாள். குளித்து முடித்து பீஷ்மனையும் அழைத்துக்கொண்டு தாத்தாவிடம் வந்தவள் அவர் முன்னிலையிலேயே “மிதுனோட அம்மா இருக்க வீடு.. அவங்க கண்ட்ரோல்ல இருக்க மத்த சொத்து எல்லாமே நான் என்னோட உழைப்புல வாங்கினது.. அது அத்தனையும் எனக்கு வேணும். அவங்க என்னை பெத்த கடமைக்காக மாதம் ஒரு தொகையை கடைசிவரைக்கும் அவங்களுக்கு கொடுக்க நான் தயாரா இருக்கேன்..”

                 “ஆனா, என் பெயரை பயன்படுத்தி அவங்க அதை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தறதை என்னால அனுமதிக்க முடியாது.. மொத்தமும் என் கைக்கு வரணும் தாத்தா..” என்றாள் இருவரிடமும்.

                  பீஷ்மன் திருப்தியாக தன் மனைவியைப் பார்க்க, “நீ நினைக்கிறதை செய்ம்மா..” என்றார் தாத்தா..

                  சாஷா பீஷ்மனைப் பார்க்க, அடுத்தடுத்த காரியங்கள் வேகமெடுத்தன.. அத்தனையும் பீஷ்மன் கவனித்துக் கொள்ள, அடுத்த இரண்டு நாட்களில் சாஷாவுக்கும், தனக்கும் இனி எந்த உறவுமில்லை.. அவளைப்பற்றி இனி பொதுவெளியில் எதுவும் பேசுவதில்லை. என்று ஒப்புக்கொண்டு சட்டபூர்வமாக எழுதிக் கொடுத்தார் மாதுரி.

                   அதற்கு விலையாக ஒருகோடி பீஷ்மன் ஒரு பெரிய தொகையை அவருக்கு கொடுத்துவிட, வந்தவரை லாபம் என்று புரிந்தவர் அதற்குமேல் பீஷ்மனை எதிர்க்க முடியாமல் பணிந்தார்.

Advertisement