Advertisement

கைப்பாவை இவளோ 27

                          பீஷ்மன் கட்டிலில் அமர்ந்திருக்க, அவன் முன்னே கைகளை கட்டி நின்றிருந்தாள் சாஷா. சாஷா கேட்ட எந்த கேள்விக்கும் இதுவரை பீஷ்மன் பதில் சொல்லி இருக்கவில்லை. மாதுரி சென்று ஒருமணி நேரம் கடந்திருக்க, இதுவரை வாய்திறக்கவே இல்லை அவன்.

                  சாஷா கேட்டபோது  பேசாமல் அவன் அறைக்கு வந்துவிட, அவனுக்காக காத்திருந்து சோர்ந்து போனவள் தானே மாடியேறி தங்கள் அறைக்கு வந்துவிட்டிருந்தாள். அறையின் கட்டிலில் தன் கைகளை கால் முட்டியில் பதித்து, உள்ளங்கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் பீஷ்மன்.

               சாஷா அவனிடம் ஏதும் கேட்காமல் அமைதியாக அவன் முன்னே நின்றிருந்தாள். நீண்ட நேரத்திற்குப் பின் கைகளை விலக்கி பீஷ்மன் சாஷாவின் முகம் பார்க்க, பாவமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது அவன் பொம்மை.

               பீஷ்மன் “என்ன வேணும் உனக்கு..” என்று கோபம் கொள்ள,

               “நீங்களே சொல்லுங்க..” என்றாள் சாஷா. வழக்கத்தை மீறிய அழுத்தம் அவள் குரலில்.

               “என்ன தம்பியை கொன்னுட்டான்னு தோணுதா..” என்று பீஷ்மனும் அழுத்தம் கூட்ட,

               விழாவா.. வேண்டாமா.. என்று நின்றிருந்த கண்ணீருக்கு விடுதலை கொடுத்தாள் சாஷா.

              சாஷா அவள் கண்ணீர் முகத்தை காணவியலாமல் அவள் கைபிடித்து அருகில் அமர்த்திக் கொண்டான்.

               சாஷா பார்வையை பீஷ்மனின் கண்களில் நிலைக்கவிட, காதல் மட்டுமே மிகுந்திருந்தது அவன் கண்களில். தவறு செய்த உணர்வோ, குற்றவுணர்ச்சியோ நிச்சயம் இல்லை.

               அதுவே அவளுக்கு ஆறுதலாக இருந்தாலும், “என்ன நடந்தது.. என்பதை அறிந்துகொள்ள விரும்பினாள் அவள்.

                 “என்ன நடந்தது.. ஏன் இப்படி..” என்று சாஷா திக்கி நிறுத்த,

                 “நான் பண்ணியிருப்பேன்னு நினைக்கறியா..” என்றான் பீஷ்மன்.

                   “நீங்கதான்… எனக்கு தெரியும்.. என்னால உங்களை உணர முடியும்..” என்று உறுதியாக கூறினாள் அவள்.

                   வாழ்க்கையே அல்லாடும் நிலையிலும் கர்வமாக சிரித்துக் கொண்டான் அவன். அவளின் அந்த வார்த்தைகள் கொடுத்த கர்வத்துடனே “நான்தான்.. என்ன செய்ய போற இப்போ… என்ன வேணாலும் செஞ்சுக்கோ என்னை.. ஆனா, ஏன் எதுக்கு எதுவும் கேட்காத.. நான் சொல்லமாட்டேன்..” என்றான் பீஷ்மன்.

                  “ஏன் கேட்கக்கூடாது.. நான் கேட்பேன்.. எனக்கு தெரிஞ்சாகணும்..” என்று சாஷா நிற்க,

                  “இந்த பேச்சை இதோட விடு சாஷா..” என்றான் பீஷ்மன். குரலில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமை மிகுந்து போயிருந்தது.

                   ஆனால், இந்தமுறை அந்த கடுமைக்கெல்லாம் மசிவதாக இல்லை சாஷா. “நீங்க தப்பு செஞ்சிருக்கமாட்டிங்க.. நான் நம்பறேன்… ஆனா, ஒரு கொலை செய்யுற அளவுக்கு துணிஞ்சு இருக்கீங்க.. அதுக்கான காரணம் என்னனு எனக்கு தெரியணும்.. தெரிஞ்சே ஆகணும்..” என்ற சாஷாவின் குரலில் பீஷ்மனின் மீதான நம்பிக்கையும், அவளின் உறுதியும் சரிபாதியாக வெளிப்பட்டது.

                   பீஷ்மன் நெடுமூச்சு ஒன்றை வெளியேற்றியவன் “என்ன இப்போ.. உனக்கு தெரியணும் அவ்ளோதானே…  என் பிள்ளையை கொன்னவனை நான் கொல்லணும்னு நினைச்சேன்.. அதுக்காகத் தான் செஞ்சேன்..” என்றான் பீஷ்மன்.

                   “இல்ல.. நீங்க பொய் சொல்றிங்க.. நிச்சயமா இது காரணம் இல்ல..” என்று உடனடியாக மறுத்தாள் பெண்.

                   “நீ கேட்ட, நான் உண்மையைச் சொல்லிட்டேன்..அவ்ளோதான்..” என்றான் பீஷ்மன்.

                  “நீங்க இந்த காரணத்துக்காக அவனை கொல்ல நினைச்சிருந்தா, நான் கேட்டப்போ அவனை விட்டு இருக்கமாட்டீங்க… நீங்க என்கிட்டே பொய் சொல்லமுடியாது.. உங்க வார்த்தையோட வளைவு நெளிவுகளை வச்சே உங்க மனநிலையை கணிக்கிறவ நான்.. நீங்க பொய் சொல்றதை என்னால உணர முடியாதா..??” என்று கோபத்துடன் அவன் கையை விலக்கி எழுந்து நின்றாள் சாஷா.

                  “நீ எப்படி கேட்டாலும் இதுதான் உண்மை. இதுக்குமேல என்னால எதுவும் சொல்லமுடியாது..” என்று பீஷ்மன் எழுந்து நகர, அவன் கைபிடித்து நிறுத்தினாள் மனைவி.

                 அவள் பிடியில் நின்றவனிடம் “என்கிட்டே உண்மையை சொல்லமாட்டீங்களா..” என்று கெஞ்சியவளாக கேட்டாள் மனையாள்.

                  “நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்…” என்றான் அவன்.

                  அவன் கையை விட்டுவிட்டவள் அமைதியாக அவனுக்கு முன்னே நடக்க, இந்த முறை பீஷ்மன் பிடித்து நிறுத்தினான் அவளை.

                   “என் கையை விடுங்க..” என்று ஒட்டாத குரலில் கூறியவள் அவனைவிட்டு எட்டி நின்றாள்.

                  பீஷ்மன் அவளை வெறித்து நோக்க, “நான் என் வீட்டுக்கு போறேன்.. என்னால இங்கே இருக்க முடியாது..” என்றாள் முடிவாக

                  “என்ன.. உன் வீட்டுக்கா.. இதுதான் உன் வீடு சாஷா.. நீ எங்கேயும் போகப்போறதில்ல.. ” என்று மீண்டும் அவள் கரம் பிடித்து நிறுத்தினான் பீஷ்மன்.

                   “என் வீடா.. நிச்சயமா இல்ல. என் வீட்ல என்ன நடக்குதுன்னு கூட எனக்கு தெரியல. அப்புறம் எப்படி இது என் வீடாக முடியும். முதல்ல எனக்கு தாலி கட்டின உங்ககிட்டேயே எனக்கு என்ன உரிமை இருக்குன்னு தெரியல எனக்கு.. நான் எப்படி வீட்டுக்கெல்லாம் உரிமை கொண்டாட முடியும்.. “என்றாள் சாஷா. நிராசை மட்டுமே நிறைந்திருந்தது அவள் மனமெங்கும்.

                   இத்தனை கேட்டும் இவன் தன்னிடம் மறைப்பானா.. என் கோபமோ, கண்ணீரோ இவனை அசைக்கவில்லையெனில் நான் இங்கிருந்து என்ன பயன்.. என்று தோன்றிவிட்டது அவளுக்கு. அந்த கோபத்தில் தான் கிளம்பி நின்றாள் அவள் .

                 ஆனால், பீஷ்மன் அதற்கும் விடாமல் பிடித்து வைத்திருக்க, “என் கையை விடுங்க..” என்றாள் இப்போது.

                 “எங்கே போகப் போற இப்போ..” என்று அதட்டினான் அவன்.

                 “எனக்கான இடத்துக்கு.. நான் என் தாத்தா வீட்டுக்கு போறேன்.. உங்களால எப்போ உண்மையை சொல்ல முடியுமோ.. அப்போ என்னை  தேடி வாங்க.. அதுவரைக்கும் இந்த வீட்டுக்கு வரமாட்டேன் நான். எனக்கு உங்க வீடும் வேண்டாம்.. என்கிட்டே உண்மையை சொல்லாத நீங்களும் வேணாம்..” என்று கோபமும், அழுகையுமாக வெடித்தவள் அவன் கையை உதறிக்கொண்டு வேகமாக அவனை விட்டு நீங்கிவிட்டாள்.

                  அவள் அழுகையுடன் வாசலுக்கு வந்து காரில் கையை வைக்க, “நான் எடுக்கிறேன்க்கா..” என்று வேகமாக வந்து ஏறிக்கொண்டான் மணி.

                   “எங்கே போகணும்..” என்று கேட்காமல் அவன் வாகனத்தை செலுத்த “தாத்தா வீட்டுக்கு போ மணி..” என்று அழுத்தமாக உரைத்தாள் சாஷா.

                    அடுத்த பதினைந்து நிமிடங்கள் கண்களை மூடி மௌனம் காத்தவள் சத்யாவின் வீட்டு வாசலில் கார் நிற்கவும், கண்களைத் திறந்தாள். அடுத்த நொடி காரிலிருந்து அவள் இறங்கிவிட, மணியும் இறங்கி நின்றான்.

                     சாஷா தன் வழியில் நடந்தவள் ஒரு நொடி நின்று மணியை சட்டென திரும்பிப் பார்க்க, அவள் பார்வையை சந்திக்க மறுத்தான் அவன். அதிலேயே அவளுக்கு உறுதியாக, உள்ளே செல்லாமல் அவனை நெருங்கினாள் சாஷா.

                     மணி தலை குனிந்து நிற்க “உனக்கும் தெரியும் இல்ல.. ஆனா, உன் அண்ணனை மீறி நீ சொல்லமாட்ட.. நானும் நீங்களா சொல்றவரைக்கும் கேட்கமாட்டேன்…” என்று உறுதியாக உரைத்து திரும்பி நடந்துவிட்டாள்.

                     வீட்டின் பூஜையறையில் சத்யா கண்மூடி நின்றிருக்க, தானும் சென்று பூஜையறையில் நின்றாள் சாஷா. அங்கே நின்றிருந்த அந்த முருகனைக் காணவும், தன் கவலைகள் மொத்தமும் கண்முன் வர, பட்டென மூடிக்கொண்ட அவள் விழிகளில் இருந்து கண்ணீர் பெருகியது.

                   சத்யா வேண்டுதலை முடித்து கண்திறக்க, சாஷாவின் கண்ணீர் முகம்தான் அவர் கண்டது. அவள் விழிகளை திறக்கும் நொடிவரை மௌனித்து நின்றவர் அவள் கண்திறக்கவும் “என்னம்மா..” என்றார் எல்லையில்லாத அக்கறையுடன்.

                   அவர் குரலில் கண்ணீர் பெருகியது சாஷாவுக்கு. கண்களைத் துடைத்துக் கொண்டே குழந்தையாக பீஷ்மனை குற்றம் சொன்னாள் அவள்.

                   “உங்கபேரன்தான்.. என்னை அழ வைக்கிறதே வேலையா வச்சிருக்கார்.. ” என்றாள் மொட்டையாக

                   அவள் பேச்சிலிருந்து ஏதோ சின்ன சண்டை போல என்று தான் நினைத்தார் பெரியவர். “என்ன செஞ்சான்மா..” என்று அவர் கேட்க,

                   “மிதுன் உயிரோட இல்ல தாத்தா..” என்றாள் பேத்தி.

                   “எனக்கு தெரியும்மா.. காலையிலேயே நியூஸ் பார்த்தேனே.. நானே அங்கே வர நினைச்சேன்.. அதுக்குள்ள நீ வந்துட்ட..” என்று அவர் குரலில் வருத்தத்தை தெரிவிக்க,

                   “நீங்க வருத்தப்படற அளவுக்கு எல்லாம் தகுதியானவன் இல்ல தாத்தா அவன். காலையில நியூஸ் பார்க்கவும் பட்டுன்னு ரெண்டு நிமிஷம் அழுதேன்.. அதற்குள்ள  அம்மா வந்துட்டாங்க… ஆனா, அவங்க  போனபிறகு யோசிக்கவும்தான் நான் கண்ணீரை வீணாகிட்டேனோன்னு தோணுச்சு..” என்றாள் உணர்வில்லாத குரலில்.

                   “என்னம்மா..” என்று மட்டுமே இப்போதும் பெரியவர் கேட்க,

                    “போலீஸ் தற்கொலைன்னு சொல்லிட்டாங்க. என் அம்மா பீஷ்மன் கொன்னுட்டதா சொல்றாங்க..” என்று சாஷா நிறுத்த

                    “பீஷ்மனை சந்தேகப்படறியா..” என்றார் அவர்.

                   “எனக்கு உறுதியா தெரியும் தாத்தா.. அவர்தான்.” என்று அடித்துக் கூறியவள் “அவரே ஒத்துக்கிட்டாரு..” என்றாள் தகவலாக.

                    “என்னம்மா சொல்ற..” என்று சத்யா அதிர, ஆமென தலையசைத்தாள் சாஷா.

                    “அவனால எனக்கு அபார்ட் ஆனதால, அவனை கொல்ல சொன்னதா சொல்றாங்க தாத்தா.. ஆனா, நிச்சயம் அது பொய்.. ” என்று குழம்பினாள் சாஷா.

                     “புரியல எனக்கு.. பொய்னு சொல்ற.. அப்புறம் பீஷ்மந்தான்னு எப்படி சொல்ற..” என்று பெரியவர் இடையிட,

                     “அவர் சொல்ற காரணம் பொய்னு சொல்றேன் தாத்தா.. அவனை கொல்ல நினைச்சிருந்தா நான் கேட்டப்போ விட்டிருக்க மாட்டார்.. அவன் வேறே ஏதோ பெருசா செஞ்சிருக்கணும். இவருக்கு இந்த அளவுக்கு கோபம் வரணும்ன்னா அவன் நிச்சயமா என்னவோ செய்திருக்கணும் தாத்தா..” என்றாள் பேத்தி.

                    “எனக்கு பயமா இருக்கு.. இந்த விஷயத்தால இவருக்கு எதுவும் பிரச்சனை வந்திடுமோன்னு கலக்கமா இருக்கு தாத்தா.. மிதுன் என்ன செய்தான்னு எனக்கு தெரியல. அதற்கு இவர் செஞ்சது சரியா தவறா அதுவும் தெரியாது..”

                    “ஆனா, பீஷ்மன் இதுபோல காரியங்கள் எல்லாம் எப்போவும் செஞ்சதில்ல… அடிப்பாங்க, மிரட்டிட்டு விட்டுவாங்க.. கொலையெல்லாம் நினைக்கவே பயமா இருக்கு தாத்தா…”

                    “சுயநலமே கூட இருக்கலாம்.. ஆனா, எனக்கு மிதுன் மேல பாசம் வரல.. அவனுக்காக கண்ணீர் வரல.. இவரை நினைச்சுதான் பதட்டமா இருக்கு தாத்தா.. என்னவோ செய்திருக்காங்க..” என்று தீர்க்கமாக பேசினாள் அவள்.

                    “உன் அபார்ஷன் விஷயம் இல்லாம போனா, மிதுனுக்கும் பீஷ்மனுக்கும் இடையில் வேறெதுவும் இருக்க வாய்ப்பில்ல சாஷா.. பீஷ்மன் சொல்றது உண்மையா இருக்கலாம் இல்லையா..”

                     “பீமுக்கும் மிதுனுக்கும் இடையில நான் இருக்கேன் தாத்தா.. அதுதான் எல்லாத்துக்கும் காரணம். இப்போ உங்க பேரன் கொலைகாரனானதுக்கும் நிச்சயம் நாந்தான் காரணமா இருப்பேன்.. என் மனசு அடிச்சுட்டே இருக்கு..” என்றாள் சாஷா..

Advertisement