Advertisement

கைப்பாவை இவளோ 24

                      “உனக்காக செய்யுறேன்ம்மா..” என்று சாஷாவிடம் கூறியவர், திருமணத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல், அவளது தாலியையும் காணிக்கையாக செலுத்த சொல்லிவிட, அவர் சொன்னபடி அத்தனையும் செய்து முடித்திருந்தாள் சாஷா.

                       இதோ அத்தனையும் முடிந்து அவர்கள் வீட்டிற்கும் வந்து சேர்ந்திருக்க, நேரம் இரவு ஏழு மணியைக் கடந்திருந்தது. சத்யன் அதுவரையும் அவர்கள் திருமணத்தைப் பற்றி வாய்திறக்காமல் மௌனம் காக்க, அதற்குமேல் பொறுத்திருப்பவனா பீஷ்மன்.

                       “நான் என்ன கேட்டேன் உங்ககிட்ட, நீங்க என்ன செய்துட்டு இருக்கீங்க தாத்தா…” என்று சண்டைக்கு நின்றான் அவன்.

                      “நாளைக்கு பேசுவோம் பீஷ்மா.. சாப்பிட்டுட்டு படுங்க ரெண்டு பேரும்..” என்று வெகு இயல்பாக கூறியவர் சலனமே இல்லாமல் தன்னைக் காண்பித்துக் கொண்டு உணவு மேசையில் சென்று அமர்ந்து கொண்டார்.

                     பீஷ்மன் சாஷாவின் முகம் பார்க்க, பீஷ்மன் அளவுக்கு பதறவில்லை அவள். இத்தனை நாட்களில் ஓரளவு சத்யநாராயணனைக் குறித்த புரிதல் வந்திருந்தது அவளுக்கு. நிச்சயம் அவர் தங்களுக்கு நன்மையே நினைப்பார் என்று அவள் உள்ளம் உறுதி கூற, உண்ண அமர்ந்தவருக்கு உணவு பரிமாறச் சென்றாள் அவள்.

                    அவர் உண்டுமுடிக்கும் வரை அவள் சத்யாவின் அருகிலேயே இருக்க, பீஷ்மன் இருவரையும் கண்டனத்துடன் பார்த்திருந்தான். சத்யா அவன் பார்வையைக் கண்டுகொள்ளாமல் உண்டு முடித்து தனது அறைக்குச் சென்றுவிட, சாஷா பீஷ்மனாய் உணவுண்ண அழைத்தாள்.

                    ஆனால், அவன் மனம் வேறெங்கோ இருந்ததால், அவன் கவனம் உணவில் இல்லை. “எனக்கு பசிக்கல சாஷா..” என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் வேகமாக வெளியில் நடந்தான். சில நிமிடங்களில் சாஷா அவனைப் பின்தொடர, தோட்டத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான் அவன்.

                    சிறு புன்னகையுடன் அவனை நெருங்கியவள் அவன் அருகில் சென்று அமர்ந்து கொள்ள, “பணியில் எதுக்கு வெளியே வந்த..” என்று அதட்டினான் அவன்.

                   “நீங்க எதுக்காக வந்திங்க..” என்றாள் சாஷா.

                   “உன் தாத்தா மேல கொஞ்சம் கடுப்பா இருக்கேன்.. அங்கே நேரா காட்ட முடியல… இங்கே வந்து உட்கார்ந்துட்டேன்..”

                    “அவர்மேல் இருக்க கோபத்தை சாப்பிடறதுல காட்டிட்டு வந்திங்க..” என்று மனைவி திருத்த,

                    “வேற என்ன செய்ய சொல்ற.. அவர்கிட்ட எதிர்த்து கேட்க முடியாதே..” என்று சுணங்கினான் பீஷ்மன்.

                      “நீங்க இப்படி கிடையாதே..” என்று சாஷா சந்தேகத்துடன் இழுக்க,

                   “நிச்சயமா நான் இப்படி கிடையாது சாஷா… எல்லாமே என் விருப்பம், என்னோட முடிவு தான்… எதுக்கும் யாரையும் எதிர்பார்த்து நின்றதும் இல்ல.. யாருக்கும் பயந்து, பணிஞ்சு அவங்க அனுமதிக்காக எல்லாம் காத்திருந்ததும் இல்ல.. ஏன்.. தாத்தாவையே நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன்…”

                  “அப்பா, அம்மா, தாத்தா எல்லாரும் பாசமா இருந்தாலும், தாத்தாகிட்ட ரொம்ப செல்லம்.. நான் கேட்டு எதையும் அவர் மறுத்ததே இல்ல. ஆனா, அவரையே என் விஷயங்கள்ல தலையிட விட்டதில்ல.. பிசினஸ் என் கைக்கு வரவும் பழக்கவழக்கமெல்லாம் ரொம்ப ஈஸியா மாறிப்போச்சு..”

                 “தாத்தாக்கும் எனக்கும் இடையில சில கருது வேறுபாடுகள் வேற… போதாக்குறைக்கு ஒழுக்கமே உருவான ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் வேற பேரன் அவருக்கு.. ஒரு கட்டத்துல பேச்சு வார்த்தையே எண்ணி எண்ணி தான் இருக்கும்..”

                 “என்னால ஒருமுறை ஹாஸ்பிடல்ல கூட இருந்தாங்க.. அதுக்குப்பிறகு தான் கொஞ்சம் இயல்பா, பழையபடி பேசிக்கத் தொடங்கினோம் ரெண்டு பேரும்.. எல்லாம் இருந்தாலும், என் விஷயங்கள்ல தாத்தா தலையிடறத மொத்தமா குறைச்சுட்டாரு..”

                 “அந்த நேரம் எனக்கும் அது நிம்மதியா இருக்கவும் அப்படியே விட்டாச்சு.. இப்போ அவர் உங்கிட்ட பேசறதெல்லாம் பார்க்கிறப்போ, அவர் ஏக்கம் கொஞ்சம் புரியுற மாதிரி இருக்கு… ஒரு வகையில் அவரும் உன்னை மாதிரி தான்..”

                 “உனக்கு உன் பீம் எப்படியோ, அப்படிதான் அவருக்கு அவரோட பீஷ்மன்.. நான் தப்பே செய்தாலும் என்னை எங்கேயும் விட்டுக் கொடுக்கமாட்டார். எனக்காக என் அப்பாவை விட அதிகமா துடிச்சுப் போறவர்.. உன்கிட்ட அவர் இயல்பா இருக்கறது, எங்கேயோ கொஞ்சம் சந்தோஷமா இருக்கு..” என்று தன்னைமீறி சாஷாவிடம் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தான் பீஷ்மன்.

                சாஷா எங்கும் இடையிடாமல் அவன் பேச்சை உள்வாங்கிக் கொண்டு அமர்ந்திருக்க, “இந்த கல்யாண விஷயமும் என்னை அலையவிடத் தான் இப்படி இழுத்துட்டு இருக்கார். முதல்முறை நம்ம கல்யாணம் நடந்தப்போ கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். அதுக்கான பழிவாங்குதல் தான் இது..” என்று சிரித்தான் அவன்.

                  அவன் சிரிப்பில் “யாரையும் விட்டு வைக்க மாட்டிங்களா நீங்க..” என்று சாஷா கேலியாக முறைக்க

                 “உனக்கு தெரியாதா என்னை..” என்று பார்த்தான் பீஷ்மன்.

                  சாஷா பதிலில்லாமல் அவனைப் பார்த்திருக்க, “எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்து ஆட்டி வைக்கறீங்க என்னை.. என்னவோ செய்ங்க..” என்றவன் அந்த கல் இருக்கையில் கண்களை மூடி பின்னால் சாய்ந்து கொண்டான்.

                  சாஷா “சாப்பிடலையா..” என்று மீண்டும் ஒருமுறை வினவ

                 “சாப்பிடுவோம் என்ன அவசரம்.. என்னோட இரு..” என்றவன் அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள, சுகமாக அவன் மீது சாய்ந்து கொண்டாள் சாஷா.

                  நிலவு மட்டுமே அவர்களுக்குத் துணையிருக்க, யாரும் கெடுத்துவிட முடியாத ஒரு இனிய ஏகாந்தம் அழகாக அவர்களை சூழ்ந்திருந்தது. சுற்றியிருந்த பூச்செடிகள் மணம் அந்த இடத்தை ரம்யமாகச் செய்திருக்க, காதலர்களுக்கு உகந்த இடமாகிப் போயிருந்தது அந்த இடம்.

                 சத்யநாராயணன் எதற்கோ ஜன்னல் அருகில் வந்தவர் இவர்கள் இருவரையும் பார்த்துவிட,  சிறு புன்னகையுடன் சென்று கட்டிலில் படுத்துவிட்டார் அவர்.அவரது மனம் அப்படி ஒரு நிம்மதியில் ஆழ்ந்து போயிருந்தது, இனி பீஷ்மனின் வாழ்வைக் குறித்து கவலையில்லை என்ற நிம்மதியுடன் உறக்கத்தைத் தழுவினார் அவர்.

                   இங்கு பீஷ்மனும் சாஷாவும் வெகுநேரத்தை அந்த இருக்கையிலேயே கடத்திவிட, குளிருக்கான உடைகளை அணிந்திருந்தாலும், அதையும் மீறி வெடவெடத்தாள் பாவை. அவளின் நடுக்கத்தை கைகளில் உணர்ந்தவன் “ஹேய் குளிருதா..” என்று கண்திறந்து பார்த்தான் அவளை.

                 மொத்தமாக அவனிடம் ஒண்டிக் கொண்டிருந்தாள் சாஷா… சிரிப்புடன் எழுந்து நின்றவன் அவளைத் தன் கைகளில் தூக்கியிருந்தான். எப்போதும்போலவே அவள் இதழ்கள் “பீம்..” என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே உரைத்து மௌனமாக, அவளின் அழைப்பில் சிரித்துக் கொண்டே நடந்தான் பீம்.

                 அவளைத் தன்னறைக்கு அழைத்து வந்து கட்டிலில் கிடத்த, மொத்தமாக போர்வைக்குள் சுருண்டு கொண்டாள் சாஷா.. “தூங்காத..” என்று அவளிடம் கண்டிப்புடன் கூறியவன் மீண்டும் அறையை விட்டு வெளியேற, அவனைக் கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டாள் சாஷா.

                ஆனால், அடுத்த ஐந்து நிமிடங்களில் அவளின் போர்வை பறிக்கப்பட, “பீம் ரொம்ப குளிரா இருக்கு… கொடு..” என்று தந்தியடித்தாள் அவள்..

                 “இவ்ளோ குளிருதே.. எதுக்கு பனியில் உட்கார்ந்து இருக்கணும்..” என்றவன் அவளை முறைக்க,

                 “நீ இருந்த இல்ல..” என்று முடித்தாள் சாஷா..

                  அவள் பேச்சில் “உனக்கு ரொம்ப முத்தி போய்டுச்சு…” என்று பீஷ்மன் சிரிக்க, “எனக்கே தெரியும்..” என்று அதற்கும் ஒப்புதல் கொடுத்தாள் சாஷா..

                   “சாப்பிட்டு தூங்கு..” என்று அவளை இழுத்து அமர்த்தி உணவை ஊட்டி அவன் வாயைத் துடைத்துவிட, அவன் ஊட்டி முடிக்கவும் அழகாக அவன் கன்னத்தை ஈரமாக்கினாள் சாஷா..

                   “இது எதுக்கு..” என்று பீம் சிரிப்புடன் கேட்க,

                   “என் அம்மா கூட இப்படி ஊட்டியிருக்கமாட்டா எனக்கு.. வேற யாரும் ஊட்டிவிட நான் அனுமதிச்சதும் இல்ல.. ரொம்ப குட்டியா இருக்கும்போதே நானே சாப்பிட பழகிகிட்டேன்.. இப்போ நீ ஊட்டிவிடவும் ஏதோ ஞாபகம்… அப்பா ஊட்டியது ஞாபகம் வந்தது..” என்றாள் சாஷா..

                    வார்த்தைகளில் இருந்த உணர்வுகள் குரலில் இல்லை. நிச்சயம் அவள் குரலில் இன்னதென்று சொல்ல முடியாத மகிழ்வுதான் மிகுந்து இருந்தது. ஆனால், பீஷ்மன் புரிந்து கொண்டது அவளின் சிறுவயது ஏக்கங்களைத் தான்..

                      இன்னும் இப்படி எத்தனை எத்தனை ஒளித்து வைத்திருக்கிறாளோ என்று அவன் பார்த்திருக்க, “இருங்க.. உங்களுக்கு சாப்பிட எடுத்து வர்றேன்..” என்று எழுந்து நடந்தாள் சாஷா.

                     பீஷ்மன் சாஷா குறித்த சிந்தனையில் அமர்ந்திருக்க, அவன் கன்னம் தட்டியவள் அவனுக்கு உணவை ஊட்டிவிடத் தொடங்கியிருந்தாள்…. இருவரும் உண்டு முடிக்கவும் சற்றுமுன் கீழே அந்த இருக்கையில் அமர்ந்திருந்தது போலவே மீண்டும் பீஷ்மன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, அவனைக் கட்டிக்கொண்டு அவன் அருகில் சாஷா.

                     மொத்தமாக கொடியைப் போல் அவன்மீது சரிந்து கொண்டிருந்தாள் அவள். பேசாத அவர்களின் மௌனம் ஆயிரம் பாஷைகள் பேசிக் கொள்ள, வாய்ச்சொற்களுக்கு அங்கே வேலையில்லை…

                     அந்த இரவு இருவருக்கும் அப்படியே கழிந்து போக, அடுத்தநாள் அதிகாலை நேரமே பேரனுக்கு அழைத்துவிட்டார் சத்தியநாராயணன். அவர் சொல்படி இருவரும் குளித்து முடித்து கீழிறங்க, அவர் மனைவியின் விலையுயர்ந்த பட்டுசேலை ஒன்றை சாஷாவின் கைகளில் கொடுத்தவர் “இதை மாத்திட்டு வாம்மா..” என்று அனுப்பி வைத்தார் அவளை.

                    சாஷா அந்த பச்சைநிற பட்டுச்சேலையை மாற்றிவர, அப்சரஸாகவே தெரிந்தாள் பீஷ்மனின் கண்களுக்கு. அவள்மீது இருந்து பார்வையை நகர்த்த முடியாமல் அவன் தடுமாற, அவளும் சரியாக அவன் அருகில் தான் வந்து நின்றாள்.

                 சத்யா தன்முன் நின்ற இருவரையும் திருப்தியாகப் பார்த்துக் கொண்டவர் இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜையறைக்குச் செல்ல, அங்கே முருகப்பெருமான் மூன்றடி உயரத்தில் அழகாக நின்றிருக்க, பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு பூஜைக்குத் தயாராக நின்றார் அவர்.

               சத்யா தன் கைகளைத் தலைக்கு மேலாக உயர்த்திக் கும்பிட்டுக் கொண்டவர், அந்த அறையின் மற்றொரு சுவற்றில் வீற்றிருந்த தன் மனைவியையும் கடவுளாக நினைத்து வணங்கி முடித்தார்.

               சாஷாவிடமும் “இவதான் என்னோட மனைவி மாதங்கி…” என்று அறிமுகம் செய்து வைத்தார் பெரியவர்.

               பீஷ்மன் அமைதியாக நின்றிருக்க, சத்யா தன் மனைவியின் படத்திற்கு கீழே இருந்த அவரது தாலிக்கொடியை கைகளில் எடுத்துக் கொண்டார். கண்மூடி சில நிமிடங்கள் மனைவியை தியானித்துக் கொண்டவர் அந்த தாலியை முருகனின் பாதத்தில் வைத்து அங்கும் சில நிமிடங்கள் பிரார்தித்து நிற்க, அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பது புரிந்தது பீஷ்மனுக்கு.

                அந்த தாலி தங்கள் குடும்பத்திற்கு எத்தனை முக்கியமானது என்று அவனும் அறிவானே. இதுவரை தன் மனைவியின் படத்திற்கு முன்பிருந்து அதை அகற்றவிட்டதே இல்லை பெரியவர். இப்போது ஒரு முடிவுடன் அவர் கடவுளை தியானித்துக் கொண்டிருக்க, அவரது செயல் புரிந்தவனாக மௌனம் காத்தான் பீஷ்மன்.

                சாஷாவுக்கு அவர்களின் முன்கதைகள் ஏதும் தெரியாததால் அவள் அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்திருக்க, சாஷாவை அருகில் அழைத்தார் சத்யநாராயணன். அவர் முருகனின் இடதுபுறம் நின்றிருக்க பேத்தி வலப்புறம் வந்து நின்றாள்.

                சாஷாவிடம் “நீ இவன்மேல எந்த அளவுக்கு அன்பு வச்சிருக்கன்னு எனக்கு தெரியும்.. ஆனா, அப்படியிருந்தும் ஒருமுறை அவனைவிட்டு விலக முடிவெடுத்த.. எப்படி நடந்து இருந்தாலும் ரெண்டு பேருக்கும் நடந்தது கல்யாணம் தான். ஆனா, ரெண்டுபேருமே அதற்கான மரியாதையைக் கொடுக்கலைன்னு நான் நினைக்கிறேன்..’

                  “பழசெல்லாம் எப்படியோ போகட்டும்… ஆனா, இந்தமுறை எதுவும் தப்பிப்போக கூடாது. இந்த தாலி வழிவழியா எங்க குடும்பத்து பெண்கள் போட்டுட்டு இருக்கறது… என் அம்மாவுக்கு பிறகு என் மனைவி கழுத்துல போட்டு இருந்தா…”

                 “ஏனோ அவளுக்கு பிறகு இதை பார்கவிகிட்ட கொடுக்க மனசு வரல எனக்கு… இது உன் கழுத்துக்கு தான் வரணும்னு இருந்திருக்கு.. ஆனா, இதை ஏத்துக்கறதும் சுலபமான காரியம் இல்ல.. நீ கழட்டி வச்ச உன் பழைய தாலி இல்ல இது..”

                 “இதுக்கான மரியாதையை நீ கொடுத்தே ஆகணும்.. என்ன நடந்தாலும் சரி இந்த தாலியை கழட்டுற எண்ணம் உனக்கு வரவே கூடாது.. என் பேரன் தப்பே செய்தாலும் அவனை உன் வழிக்கு கொண்டு வரத்தான் முயற்சிக்கணுமே தவிர, இதை விட்டெறிஞ்சுட்டு போற முடிவை நீ என்னைக்கும் எடுக்கமாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடு..”

                  “நீ எனக்கு சத்தியம் செஞ்சு உத்திரவாதம் கொடுத்தா, நான் உங்க கல்யாணத்துக்கு சாட்சியா இருக்கேன்..” என்று அவள்முன் தன் கைகளை நீட்டினார் சத்யா.

                  சாஷா ஒரு நொடிகூட யோசிக்காமல் அவர் கைகளின்மீது தன் கைகளை வைத்தவள் “சாஷான்னு ஒருத்தி உயிரோட இருக்க கடைசி நிமிஷம் வரைக்கும் இந்த தாலி அவ கழுத்துல இருக்கும் தாத்தா.. உங்க குடும்பத்துக்கோ, உங்களோட நம்பிக்கைகளுக்கோ என்னால எந்த சங்கடமும் வராது.. நீங்க என்னை நம்பலாம்… அதோட இனியொருமுறை உங்கப் பேரனை விட்டு போகணும்னு நினைச்சா, என் உயிர் இருக்காது..” என்றாள் அழுத்தமாக

               சத்தியநாராயணன் அவளிடம் ஏதும் பேசாமல் தன் பேரனின் முகம் பார்க்க, சாஷாவின் கைகளின் மீது தன் கைகளை வைத்தவன் “எப்பவும் தப்பு செய்யமாட்டேன் தாத்தா.. முக்கியமா இவளை கஷ்டப்படுத்தமாட்டேன்.. உங்கமேல சத்தியம்..” என்றான் பீஷ்மன்.

               பேரனின் வார்த்தைகளில் நிறைந்து போனவர் “அந்த தாலியை எடுத்து என் பேத்தி கழுத்துல போடுடா..” என, அவரையே எடுத்துக் கொடுக்க சொன்னான் பேரன்.

              சத்யா முகம் கொள்ளாத பூரிப்புடன் அந்த பன்னிரண்டு பவுன் சங்கிலியை எடுத்து தன் பேரனிடம் கொடுக்க, சாஷாவின் கண்களைப் பார்த்து அவள் கழுத்தில் பூட்டினான் பீஷ்மன். ஏனென்றே தெரியாமல் சாஷாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அவள் கண்களை மீறி கன்னத்தில் வழிந்தது அவள் கண்ணீர்.

               பீஷ்மனின் தாலியை இந்தமுறை மனதார ஏற்றுக் கொண்டவள் கண்களை புறங்கையால் துடைத்துக் கொள்ள, அவள் தலையைப் பிடித்து லேசாக அழுத்தி அவள் நெற்றியில் இதழ் பதித்தான் பீஷ்மன். சாஷா கண்ணீருடன் அவன் முகம் பார்க்க, அவளின் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டவன் பெரியவரின் கால்களில் விழுந்தான்.

               அந்த முருகனுக்கு அருகே தட்டில் இருந்த பூக்களை கையில் எடுத்த பெரியவர் இருவரின் மீதும் தூவி அவர்களை ஆசிர்வதிக்க, பூஜையறையில் வாசலில் நின்று கைதட்டிக் கொண்டிருந்தான் மணி.

             சாஷா “எப்போ வந்தான்..” என்று பார்க்க, “உள்ளே வாடா..” என்றான் பீஷ்மன். மணி சட்டென பெரியவரைப் பார்க்க, “வாடா..” என்றார் அவரும்.

             கைகளை வாயில் வைத்து விசில் அடித்தவன் “ண்ணா…” என்று பெருங்குரலோடு கட்டியணைத்துக் கொண்டான் தன் பீஷ்மா அண்ணனை. சாஷா புன்னகையுடன் அவர்கள் இருவரையும் பார்த்து நிற்க, “வாழ்த்துக்கள்க்கா..” என்று அவளிடமும் கையை நீட்டினான் மணி.

             அந்த நிமிடங்கள் அத்தனை இனிமையானதாக இருக்க, அதை இன்னும் இனிப்பாக்கும் விதமாக அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார் முனியன். அந்த வீட்டின் சமையல்காரர்.

              நேரம் தேனின் தித்திப்புடன் ஊர்ந்து செல்ல, அன்று மதியமே மணியை அழைத்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பினார் சத்யா. புது மணமக்கள் இருவருக்கும் தனிமை பூரணமாக கிடைக்க, ஒருவரில் மற்றவர் கரைந்து போக காலம் பார்த்திருந்தனர் இருவரும்.

இருவரும் பீஷ்மனின் அறையில் இருக்க, காலையில் இருந்த அதே சேலையில்தான் இருந்தாள் சாஷா. கழுத்தில் சேலைக்கு மேலாக பீஷ்மன் அணிவித்த அந்த பொன்தாலி..

               அத்தனை எடையுடன் இருந்தாலும், ஏனோ அது கனக்கவே இல்லை அவளுக்கு.. பீஷ்மனின் தோளில் சாய்த்து அவள் அமர்ந்திருக்க, அந்த தாலிச்சங்கிலி பீஷ்மனின் கையை உரசிக் கொண்டிருந்தது. பீஷ்மனின் கைகளுக்குள் அவளது வலக்கரம் சிறைப்பட்டு இருக்க, நிச்சலனமாய் கண்களை மூடி அவன்மீது சாய்ந்திருந்தாள் பெண்.

                               

Advertisement