Advertisement

கைப்பாவை இவளோ 23

                      பீஷ்மனின் கையணைப்பில் இதமாக உறங்கிக் கொண்டிருந்தாள் சாஷா. அதிகாலை நான்கு மணி அளவில் தான் உறங்கவே தொடங்கியிருக்க, இப்போது நேரம் பத்து மணியைத் தாண்டி இருந்தது.

                     ஆனால், இந்த நேரத்திற்கும் துளிக்கூட அதிக வெளிச்சமில்லாமல் இருள் சூழ்ந்திருந்தது அந்த அறை. விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில், நீண்ட பயணத்தின் விளைவால் இருவருமே அசந்து தூங்கிக் கொண்டிருக்க, மதியத்திற்குமேல் வர சொல்லி இருந்ததால், வேலையாட்களும் வந்திருக்கவில்லை.

                  ஒருவழியாக பன்னிரண்டு மணி அளவில் பீஷ்மனுக்கு லேசாக விழிப்பு வர, முயன்று கண்களைத் திறந்தான் அவன். அவன் கையை அசைக்க நினைக்க, அதற்கு இடம் கொடாமல் அவனது வலது கையின் மீது தன் தலையை வைத்து நித்திரை கொண்டிருந்தாள் சாஷா.

                   புன்னகையுடன் அவளை நோக்கியவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்த அவள் இதழ்களில் லேசாக, மிக லேசாக முத்தமிட, அரைத்தூக்கத்தில் “பீம்..” என்றுவிட்டு மீண்டும் உறங்கினாள் அவள்.

                   சிறு அசைவுக்கே அலறி எழும் அவளின் முந்தைய நிலை நினைவு வர, அவளை சோதிக்க விரும்பியவனாக மீண்டும் ஒருமுறையும் அவள் இதழ் தீண்டினான் கள்வன். முன்போல அச்சம் கொள்ளாமல், லேசாக அவன் கைகளின் மீதே புரண்டவள் அவன் நெஞ்சில் முகத்தை பதித்து உறக்கத்தை தொடர்ந்திட, கண்களில் நீர் நின்றது பீஷ்மனுக்கு.

                  ‘தன் மீது நம்பிக்கை வந்துவிட்டதா இவளுக்கு’ என்று அவன் கலங்க, “முட்டாள்.. அவள் எப்போது உன்னை நம்பாமல் இருந்தாள்… அவளின் அச்சம் அவளின் பாதுகாப்பின்மையால் வந்தது. அவளின் அந்தநிலை  உன் நிலையில்லா குணத்தால் வந்தது..” என்று மனம் இடித்துரைத்தது.

                   இத்தனைக்கு பிறகும் தன்னை முழுதாக நம்பி, தன்னை பாதுகாப்பென நினைக்கும் அவளின் காதலில் கட்டுண்டவன் அதற்குமேல் தாள முடியாமல் அவளை அனைத்திருந்த தன் கரங்களில் சிறிது அழுத்தத்தை கூட்டிவிட்டான்.

                    ஆனால், அவனின் அழுத்தம் தாங்காமல் “பீம்..” என்ற அழைப்போடு விழித்து எழுந்தாள் சாஷா. அவள் கண்களைத் திறந்த நிமிடம், அவளை பேசவே விடாமல் அவள் இதழ்களை பீஷ்மன் சிறை செய்ய, “ம்ம்ம்..” என்று திணறிப் போனது பாவை.

                   ஒரு நீண்ட முற்றுகைக்குப் பின் அவன் விடுவிக்க, அவனை அதிர்ச்சியுடன் நோக்கியது அவனது பொம்மை. அவளின் அந்த பாவம் இன்னும் அவனை பித்தனாக்க, மீண்டும் அவளை நெருங்கியிருந்தான் பீஷ்மன்.

                   “பீம்..” என்ற அவளின் அழைப்பும், அவளது அதிர்ச்சியும் அவன் இதழ்களுக்குள் அடங்கிப் போக, அவனைத் தடுக்கவே முடியாமல் அவனிடம் தன்னை ஒப்படைத்து ஓய்வாக சாய்ந்துவிட்டாள் அவள்.

                   பீம் சில நிமிடங்களுக்குப் பிறகு அவளை விடுவிக்க, அவன் செயல்கள் புரியாமல் அவன் முகம் பார்த்தாள் சாஷா.

                  பீம் “என்ன..” என்று அவள் கன்னம் தொட, சுத்தமாக புரியவில்லை சாஷாவுக்கு.

                  “என்ன என்ன… நான் கேட்கணும் உங்களை.. காலையில என்ன ஆச்சு உங்களுக்கு..” என்று அவன் முகம் பார்த்தது பாவை.

                   “காலையில கண்ணைத் திறந்ததும், ஒரு பொம்மை அழகா தூங்கிட்டு இருந்துச்சா, அதை அப்படியே தூங்க விட்டா, அது தப்பில்ல… அதான்.. பொம்மைக்கிட்ட விளையாடிப் பார்த்தேன்..” என்ற அவன் வார்த்தைகளில், அவன் வாய் மீது ஒரு அடி கொடுத்தாள் சாஷா.

                   பீஷ்மன் அவள் கையைப் பற்றிக் கொண்டவன் “என்னை மன்னிச்சிட்டியா சாஷா..” என்று அவள் கண்களை நோக்க, மறுப்பாகத் தலையசைத்தாள் சாஷா.

                   மேலும் “எனக்கு தெரியல பீம்.. உங்கமேல ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள், குறைகள் இருக்கு எனக்கு… ஆனா, என் கோபம் போய்டுச்சா, உங்களை மன்னிச்சிட்டேனா.. எதுவுமே தெரியல…”

                   “ஆனா, ஒரு விஷயம் தெளிவா இருக்கு… என்னால பீம் இல்லாம வாழ முடியாது. அவன் நல்லவனோ, கெட்டவனோ, தப்பானவனோ எப்படியோ இருக்கட்டும்… ஆனா, எனக்கு என் பீம் வேணும்.. என்னால அவனை விட முடியல…”

                    “இப்பவும் எனக்கு தெரியும்.. என்னால உங்களை பிடிச்சு வைக்க முடியாது… ஏற்கனவே ஒருமுறை என்னை விட நினைச்சவர் தான் நீங்க.. ரெண்டுமுறை வேற யாரையோ கல்யாணம் செய்ய நினைச்சிருக்கீங்க… இனியும் அப்படி நடக்கலாம்… தெரியுது..”

                    “ஆனாலும், என்னால உங்களை விட முடியலையே.. இப்போ நாம சேர்ந்து இருக்கற இந்த நொடிகளை சேகரிச்சுக்க தோணுது பீம் எனக்கு.. அதுவும் இப்போ புதுசா குட்டியா ஒரு நம்பிக்கை.. என் பீம் இனி தப்பி போக மாட்டார்ன்னு.. அதையும் இறுக்கமா பிடிச்சிக்க தோணுது..” என்று சாஷா கூற, அவள் கண்கள் கலங்கி இருந்தது இதற்குள்.

                     அவள் பேச்சை நிறுத்திய நிமிடம் “சத்தியமா சாஷா… உன்மேல சத்தியம்.. நிச்சயம் உன் பீம் தப்பு பண்ணமாட்டேன்… இந்த பீம் உயிரோட வாழுற கடைசி நாள் வரைக்கும் அவனோட ஜீவன் சாஷா தான்… எந்த சந்தர்ப்பத்துலேயும் நான் இனி தவறமாட்டேன் சாஷா.. என்னை நம்புவியா… கடைசியா ஒரே முறை..” என்றவன் பிடித்திருந்த அவள் கைகளில் அழுத்தம் கொடுக்க நினைக்க, அவன் கைகள் நடுங்கியது..

                     சாஷா அவன் கண்களை துடைத்தவள் “எனக்கு எப்பவும் உங்க கண்ணீர் வேண்டாம் பீம். எனக்காக அழறதா இருந்தாலும் கூட, எனக்கு இந்த கண்ணீர் வேண்டாம்… எனக்கு என் பீமோட அழுத்தமும், திமிரும் தான் பிடிக்கும்.”

                      “என் பீம் எப்பவும் அப்படித்தான் இருக்கணும் எனக்கு.. அழாத..” என்று அவன் கண்களை மென்மையாக அவள் துடைத்துவிட, அவள் தோளின் மீது முகம் புதைத்து படுத்துக் கொண்டான் அவன்.

                       சாஷா “பீம்..” என்று அவன் தோள் தொட, “என்னை இறுக்கிக்கோ சாஷா…” என்றான் பீம்.

                  சாஷா சிறு புன்னகையுடன் தன் கைகளால் அவனை வளைத்துக் கொள்ள, “எப்பவும் விட்டுடாதே… இப்படியே பிடிச்சுக்கோ..” என்றான் அவன்.

                    சாஷா தன் தோளில் இருந்த அவன் முகத்தைப் பார்க்க முயல, முகத்திற்கு பதிலாக அவன் இடதுபக்க காதும், கழுத்தும் தான் பட்டது அவள் பார்வையில். மெல்ல அவனை நெருங்கியவள் அவன் கழுத்தில் அழுத்தமாக தன் இதழ்களைப் பதிக்க, இன்னுமின்னும் அவன் கரங்களின் அழுத்தம் கூடிப்போனது.

                   “பீம் வலிக்குது..” என்று சாஷா சிரிப்புடன் சினுங்க, “ஏன் தாங்க மாட்டியா…” என்று அவள் தோளில் கடித்து வைத்தான் அந்த அரக்கன்.

                    “பீம்..” என்றவள் “ஆஆ..” என்று சிறு குரலில் கத்த, “என்ன.. என்ன ஆச்சு..” என்று வேகமாக விலகி அவள் முகம் பார்த்தான் அவன்.

                    சாஷா “வலிக்குது..” என்று தன் தோள் தொட, “எங்கே பார்க்கலாம்..” என்று அவளது மேல்ச்சட்டையை அவன் விலக்க பார்க்க, “பீம்..” என்று அவன் கைகளின் மீது ஒரு அடி வைத்தாள் சாஷா…

                    “என்னடி அடிக்கிற..” என்றவன் அவள் கன்னத்திலும் கடித்து வைத்தான் இப்போது.

                    “பீம்..” என்ற சாஷாவின் அலறல் அந்த அறையில் இனிமையாக எதிரொலிக்க, எப்போதும் அவனின் இந்த அடாவடிகளை அமைதியாக கிரகித்துக் கொள்பவள் இன்று அவனைப் படுக்கையில் தள்ளியிருந்தாள்.

                    பீம் மல்லாந்து அவள் அருகில் விழ, அவன் நெஞ்சில் அழுத்தமாக தன் கரங்களை ஊன்றியவள் “வலிக்குது சொல்றேன்ல..” என்று விரல் நீட்டி மிரட்டினாள் அவனை.

                    பீஷ்மன் “வலிக்கட்டும்..” என்று அசால்டாக கூற,

                     “உன்னை..” என்று ஒரு நொடி யோசித்தவள் அடுத்தநொடி, அவன் மீது ஏறி அமர்ந்திருந்தாள். பீஷ்மன் அவளது செயலை வாய் பிளந்து பார்த்திருக்க, “கடிக்காத சொன்னேன்ல..” என்று கேட்டுக்கொண்டே அவன் கன்னத்தில் தன் பற்கள் பதியுமளவிற்கு கடித்து வைத்தாள் அவள்.

                      பீஷ்மனைப் போல் அல்லாமல் சற்று அழுத்தமாகவே அவள் தன் பற்களைப் பதித்து இருக்க, அப்போதும் சிறு சத்தம் கூட எழுப்பாமல் அவளை ரசித்திருந்தான் பீஷ்மன். சாஷாவாக அவனிடம் வாயடிப்பதும், பேச்சுக்கு பேச்சு திருப்பிக் கொடுப்பதும், அவன் செயல்களுக்கு அப்படியே எதிர்வினையாற்றுவதும் புதுமையாக இருந்தது அவனுக்கு.

                     இத்தனை நாட்கள் அவளை பொம்மையாக்கி விளையாடி வந்தவன் இன்று விருப்பத்துடனே அவள் கைகளில் அடங்கியிருந்தான். அவன் சிந்தனையில் மூழ்கிய நேரம் அவனை உலுக்கத் தொடங்கியிருந்தாள் சாஷா.

                    “உங்களுக்கு வலிக்கவே இல்லையா…” என்று கடுப்புடன் அவள் வினவ, தன்மீது அமர்ந்திருந்த அவள்மீது அழுத்தமாக தன் பார்வையைப் பதித்தான் பீஷ்மன். அவன் பார்வையில் தன்னிலை உணர்ந்தவள் அவன் மீதிருந்து நகர முற்பட, விடாமல் அவள் கைகளைப் பற்றி அவளை இழுத்து தன்மீது போட்டுக் கொண்டவன் “பர்ஸ்ட் நைட்க்கு ஒரு ட்ரையல் பார்ப்போமா..” என்றான் அவள் காதுகளில்.

                 “பீம்..” என்றவள் குரல் முழுதாக வெட்கத்தில் நனைந்திருக்க, பீஷ்மனின் விரல்கள் அவள் உடலில் அத்துமீற தொடங்கிய நேரம் பீஷ்மனின் அலைபேசி இசைத்தது.

                  “எவன்டா இந்த நேரத்துல..” என்று புலம்பிக் கொண்டே அவன் விலக, சாஷா சிறுசிரிப்புடன் அவனைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.

                   அழைத்திருந்தது சத்யநாராயணன்… அவரின் அழைப்பை பார்க்கவும் தான் அதிகாலையில்  அவரிடம் பேசியிருந்தது நினைவு வர, மண்டையிலேயே தட்டிக்கொண்டு நேரம் பார்த்தான் அவன்.

                    இரண்டு மணியாக இன்னும் சில நிமிடங்களே இருக்க, “காட்..” என்றவன் வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து நின்றான்.

                     “சாஷா வேகமா குளிச்சுட்டு வா.. தாத்தா வந்திருக்காங்க..” என்று பேசிக்கொண்டே அறையை விட்டு அவன் வெளியேற,

                      “பீம் டிரஸ் எங்கே இருக்கு…”என்று முழித்தாள் சாஷா.

                       பீஷ்மனுக்கு தாங்கள் உடையேதும் எடுத்து வரவில்லை என்பது அப்போதுதான்  மண்டையில் உரைக்க, “முகத்தை கழுவிட்டு கீழே வா.. ட்ரெஸ் வந்ததும் குளிச்சுக்கோ..” என்றான் இப்போது.

                     சாஷா வேகமாக மண்டையாட்டியவள் குளியல் அறைக்குள் நுழைந்து அடுத்த பத்து நிமிடங்களில் கீழே இறங்க, அங்கே பீஷ்மனும், சத்யநாராயணனும் அமர்ந்திருந்தனர்.

                     சாஷா வேகமாக இறங்கி வந்தவள் “வாங்க தாத்தா..” என்று வரவேற்க, மென்மையாக சிரித்தார் சத்யா..

                       சாஷாவுக்கு அப்போதுதான் தன் தவறு புரிய, “சாரி தாத்தா.. உங்க வீட்ல உங்களையே வர சொல்றேன்..” என்று அவள் தலையில் தட்டிக் கொள்ள, மீண்டும் சிரித்தார் சத்யா.

                      “இது என் வீடா இருக்கலாம்.. ஆனா, நீ இந்த வீட்டுப் பொண்ணு.. எங்க வீட்டு மருமக.. நீ இப்படித்தான் இருக்கணும்.. நீ வாங்கன்னு கூப்பிடவும் சந்தோஷத்துல தான் சிரிச்சேன்..” என்று அவர் விளக்க, அவர் பேச்சில் சிரித்தவள் பீஷ்மனைப் பார்த்தாள்.

                     “என்ன திரும்பவும் கடத்திட்டு வந்துட்டானா..” என்று பெரியவர் சிரிக்க, பாவமாக தலையசைத்தாள் அவள்.

                    “ஆமா.. எங்கேன்னு கூட சொல்லாம இழுத்துட்டு வந்துட்டாங்க…” என்று சின்னப்பிள்ளையாக அவள் புகார் படிக்க,

                     “பொய் சொல்றா தாத்தா.. அவதான் கூட்டிட்டுப் போக சொன்னா..” என்று மறுத்தான் பீஷ்மன்.

                    பெரியவர் இருவரின் பேச்சிலும் சிரித்துக் கொண்டவர் “என்னை எதுக்குடா வரச் சொன்ன…” என்றார் பேரனிடம்.

                    பீஷ்மன் அவருக்கு பதில் சொல்லாமல் சாஷாவிடம் கைகளை நீட்ட, அவனை மறுப்புடன் பார்த்து நின்றாள் அவள். அவள் மறுப்பைக் கண்டுகொள்ளாதவன் அவள் கைபிடித்து தன்னருகில் அமர்த்திக் கொண்டான் அவளை.

                       அதன்பிறகே அவன் சத்யாவின் முகம் பார்க்க, “நீயே சொல்..” என்பதாக பார்த்திருந்தார் அவர்.

                  “எனக்கு சாஷாவை கல்யாணம் பண்ணிக்கணும் தாத்தா.. நீங்க செஞ்சு வைக்கணும்…” என்றான் பேரன்.

                  “ஏற்கனவே நீயே நடத்திக்கிட்டியே அதுக்கு பேர் என்ன..??” என்று சத்யா முறைக்க,

                  “உங்களால செஞ்சு வைக்க முடியுமா.. முடியாதா..?” என்று தன்வழிக்கே திரும்பினான் பேரன்.

                  “ஏன்டா கல்யாணம் என்ன விளையாட்டா… நீ எத்தனை முறை நினைக்கறியோ, அத்தனை முறை கல்யாணம் பண்ணுவியா… என்ன நினைச்சுட்டு இருக்க நீ..” என்று அவனுக்கு சரியாக நின்றார் சத்யா.

                          பீஷ்மன் மீண்டும் வாய்திறக்க, சாஷா அவன் கைபிடித்து தடுத்தாள் இப்போது. அவள் முகம் பார்த்தவன் தன்னை மெல்ல நிதானப்படுத்திக் கொள்ள, சத்யநாராயணன் இருவரையும் திருப்தியாகப் பார்த்துக் கொண்டார்.

             அவர் நேராக சாஷாவிடமே “சொல்லும்மா.. என்ன சொல்றான் இவன்.. என்னதான் நினைக்கறீங்க ரெண்டுபேரும்..” என்று கேட்க,

               “நாங்க கல்யாணம் செய்துக்கிட்டது உண்மைதான் தாத்தா… ஆனா, அன்னைக்கு ஹாஸ்பிடல்ல தாலியை கழட்டினப்பிறகு நான் திரும்ப அதை போடல.. தாலியும் இவங்ககிட்ட தான் இருக்கு.. அப்போ ரெண்டுபேர் மனநிலையும் சரியில்லாம ஏதோ அழுத்தத்துல தான் இருந்தோம்..”

               “நடந்தது கல்யாணமான்னு நிறைய முறை நானே கேட்டு அவரை கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனா, இப்போ அப்படியில்ல.. ரெண்டு பேருமே வாழ நினைக்கிறோம் தாத்தா.. நீங்க பெரியவங்க.. என்ன செய்யணும் சொல்லுங்க..” என்றவள் அவர் முகம் பார்க்க,

                “கத்துக்கோடா..” என்று பேரனை நக்கலடித்தார் கிழவர்.

                பீஷ்மன் அவரை என்ன செய்தால் தகும் என்று பார்வையிட, “உன் தாலி எங்கேம்மா..”என்றார் சத்யா.

              சாஷா பீஷ்மனைப் பார்க்க, “கார்ல இருக்கு..” என்றான் அவன்.

“ஏன் நீ கழுத்துல மாட்டிக்க வேண்டியது தானே..” என்று நக்கலாக கேட்டார் பெரியவர்.

                 அவர் சொல்லி முடிக்கவும் சாஷா, நாக்கை கடித்து சிரிப்பை அடக்க, பீஷ்மன் திரும்பி முறைத்தான் அவளை..

                “சாரி.. சாரி..” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே கூறியவள் “தாத்தா..” என்று பெரியவரை பொய்யாய் முறைக்க,

                “உனக்காக செய்றேன்ம்மா..” என்று சத்யா முடிக்கும்முன்பே, “ஏன் எனக்காக செய்ய மாட்டியா நீ..” என்று எழுந்து நின்றான் பீஷ்மன்.

                சத்யா “உனக்காக நான் ஏன்டா செய்யணும்.. வயசான காலத்துல இப்படி என்னை அலைய வைக்குற.. உனக்காக ஏன் செய்யணும்.. என் பேத்திக்காக மட்டும்தான்..” என்றவர் “போ.. போய் காரை எடு…” என்றார் பீஷ்மனிடம்.

                “மணி வரல..” என்று அவன் வினவ

                “ஏன் நீ எடுக்கமாட்டியா..” என்றார் அவர்.

                 பீஷ்மன் பதிலில்லாமல் அவரை முறைக்க, “போடா.. போடா… போய் சொன்ன வேலையை செய்..” என்றார் பெரியவர்..

                 பீஷ்மன் வாசலை நோக்கி நகர, “நீ போம்மா.. இந்த ட்ரெஸை மாத்திட்டு வா..”  என்றுவிட, திருதிருவென விழித்தாள் அவள்.

                  “இல்லாத உடையை எங்கிருந்து மாற்றுவாள்..” அவரிடம் சொல்லவும் முடியாமல் சாஷா மௌனம் காக்க, “என்னம்மா..” என்றார் சத்யநாராயணன்.

                   “தாத்தா.. டிரஸ் எதுவும் கொண்டு வரல.. உங்க பேரன் வாங்கிட்டு வர்றதா சொன்னாங்க..” எனும்போதே, “என்ன நினைச்சு இதெல்லாம் செய்யுறான் இவன்..” என்று மீண்டும் கொதித்து எழுந்தார் சத்யா..

                 வீட்டிற்குள் வந்த பீஷ்மனிடமும் அவர் சத்தமிட, அடுத்த இருபது நிமிடங்களில் சாஷாவுக்கான உடை அவள் கையில் இருந்தது. அழகான பச்சை கரையிட்ட சிகப்பு பட்டு… அவளின் பொன்னிறத்திற்கு அத்தனை நேர்த்தியாக பொருந்திக் கொண்டது அந்த பட்டுசேலை.

                    ஒருவழியாக மாலை நான்கு மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பியவர்கள் அடுத்த ஒருமணி நேரத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலை அடைந்திருந்தனர் அவர்கள். பீஷ்மனிடம் இருந்த சாஷாவின் தாலிச்சங்கிலியை அவளை வாங்கி கொள்ள சொன்னவர் அதைக் கோவில் உண்டியலில் செலுத்திவிடும்படி அறிவுறுத்தினார் சாஷாவுக்கு.

                சாஷா சிறு அதிர்ச்சியுடன் ஏறிட, “சக்திவாய்ந்த தெய்வம்மா.. இனி உங்க வாழ்க்கையில எல்லாமே நல்லதே நடக்கணும்ன்னு வேண்டிட்டு செலுத்திடு..”என்றார் பேத்தியிடம்.

               சாஷா அவர் சொன்னதற்கு தலையாட்ட, மணியும் அவனுடன் இருந்த பீஷ்மனின் பாதுகாவலர்களும் இருவரையும் பாதுகாப்பாக கோவிலுக்குள் அழைத்துச் செல்லவும், மனமுருகி அந்த அன்னையை வேண்டிக் கொண்டவள் தன் தாலியை காணிக்கையாக செலுத்தியிருந்தாள்.

               பீஷ்மனும் கண்களை மூடி நின்றவன் வெகுநேரம் அன்னையை பிரார்தித்துக் கொள்ள, நிதானமாக சாமி தரிசனம் செய்து முடித்தனர் இருவரும். கோவிலில் அன்னைக்கு சாற்றிய மாலைகளை அவர்களிடம் கொடுத்த குருக்கள் இருவரையும் மாற்றிக் கொள்ள சொல்ல, அந்த மாலையுடனே கோவிலை வலம் வந்து முடித்தனர் இருவரும்.

               நிதானமாக கோவிலில் தரிசனம் முடித்து அவர்கள் வெளியே வர, அங்கும் கூட்டம் கூடியிருந்தது இதற்குள். சாஷாவின் ரசிகர்களிடம் இருந்து தப்பிப்பதே பெரும்பாடாகிப் போக, எப்படியோ ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தனர் அவர்கள்.

                தாலியை உண்டியலில் செலுத்த சொன்னவர்  திருமணத்தைப் பற்றி வாய்திறக்கவே இல்லை இறுதிவரை.

                

Advertisement