Advertisement

“உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை வேணுமில்லையா..” என்றாள் சாஷா. அவள் குரலில் என்ன இருந்தது என்று உணர முடியாமல் போனாலும் அவளுக்கு பதில் கொடுத்தான் பீஷ்மன்.

                     “என் குழந்தையை பெத்துக்க நினைச்சிங்களே மேடம்.. என்ன உரிமையில..??” என்றான் பீஷ்மன்.

                       சாஷா பிள்ளையின் நினைவில் முகம்வாட, “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு..” என்று இறுக்கினான் பீஷ்மன்.

           “அதுதான் எனக்கில்லைன்னு ஆகிடுச்சே.. இன்னும் ஏன் அதைப்பத்தி பேசிட்டு இருக்கீங்க..”

          “இப்போ விஷயம் இருக்க இல்லையாங்கிறதைப் பத்தி இல்ல.. ஏன் நினைச்ச..” என்றான் பீஷமன்.

            “ஏன்னா, அது என்னோட குழந்தை..”

                        “அப்படியா… குந்தியா நீ..” என்று மீண்டும் அவன் நக்கலடிக்க, கண்களில் கண்ணீர் தேங்கியது சாஷாவுக்கு.

         “அழுத.. கண்ணை தோண்டி கையில கொடுத்திடுவேன்.. கண்ணைத் துடைடி..” என்று அதட்டினான் இப்போது.

            சாஷா அவன் குரலில் அதிர்ந்து அமைதியாக, இதற்குள் காரை சாலையோரம் நிறுத்தியிருந்தான் பீஷ்மன்.

            சாஷா “என்ன வேணும் உங்களுக்கு..” என்று சோர்வுடன் கேட்க,

           “எந்த உரிமையில என் குழந்தையை பெத்துக்க நினைச்ச.. என்கிட்டே உரிமை இல்லன்னு சொல்றவளுக்கு என் பிள்ளையோட மட்டும் எப்படி உரிமை வரும்..?” என்றான் பீஷ்மன்.

             “நீ பதில் சொல்லாம இங்கேயிருந்து நிச்சயமா நாம கிளம்ப போறதில்ல..” என்றவன் அழுத்தமாக அமர்ந்து கொள்ள, சாஷா என்ன பதில் சொல்லிவிட முடியும்..??…

             கண்ணீருடன் காரின் சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் அவள். பீஷ்மன் அவளை விடாமல் , அவள் கையைப் பிடித்து முன்னே இழுக்க, “என்னால முடியல பீம்…” என்றாள் தோற்றவளாக.

             “இது பதிலில்லை சாஷா..” என்று பீம் உக்கிரமாக, சாஷாவுக்கும் கோபம் வந்தது.

             “என்ன.. என்ன சொல்லணும் உனக்கு..” என்றவள் கண்களை அழுந்த துடைத்துக் கொள்ள, பீஷ்மன் இப்போது நிதானித்தான்.

              சாஷா “ஆமா… உன்னோட குழந்தையை பெத்துக்க நினைச்சேன். ஆனா, அதைவச்சு உங்கிட்ட உரிமை எடுத்துக்க விரும்பல. ஹேய்.. நீ என்னை காதலிச்சியா… இல்ல, நான் பெரிய ஹீரோயின் அதனால டேட் பண்ணோமா ரெண்டு பேரும்.. இல்ல, லிவிங் டூ கெதர்.. அப்படி ஏதாவது இருந்ததா நமக்குள்ள…”

             “நீ பெருசா எப்போ பேசி இருக்க என்கிட்டே.. நம்ம உடம்பு ரெண்டும் பேசிக்கிட்டே அளவுக்கு கூட நாம பேசிக்கிட்டது இல்ல பீம்.. முதல்முறை நீ பக்கத்துல வரும்போது பிடிக்கல தான். ஆனா, இவனை விட்டுட்டா, அந்த கிழவனுக்கு உன்னை கட்டி வைப்பேன்னு ஒருத்தி என்னை மிரட்டும்போது என்னை என்ன செய்ய சொல்ற…”

             “அந்த மிருகத்துக்கிட்ட மாட்டிடக்கூடாதுன்னு அந்த ஒரே காரணத்துக்காகத் தான் உன் ரூமுக்கு வந்தேன். நீ என்னைப் பார்த்த பார்வையில நிச்சயமா எனக்கு அருவருப்பு வரவே இல்ல.. உன் கண்ல தெரிஞ்ச ஏதோ ஒன்னு அந்த நிமிஷம் பிடிச்சு இருந்தது..”

             “அந்த கிழட்டு மிருகத்துக்கு நீ தேவலன்னு நினைச்சேன் போல.. உன்கிட்ட இயல்பா பேச முடிஞ்சுது.. நீயும் நல்லவன் தான்.. என்னை நிறைய பேச வச்சு வேடிக்கைப் பார்த்த.. ஆனா, அதன்பிறகு…. எந்த உரிமையும் இல்லாத நீ என் உடம்பைத் தொடும்போது ஒரு பொண்ணா, நான் எப்படி உணர்ந்திருக்கணும் பீம்..”

                 “நான் என்னையே கீழ்த்தரமா நினைச்சு கண்ணீர் படிச்சுட்டு இருக்கேன்.. ஆனா, என் உடம்பு என் கட்டுப்பாட்டில் இல்லாம உன்னோட தாளத்துக்கு ஆடிட்டு இருக்கு.. நீ நினைக்கிறதெல்லாம் செஞ்சுட்டு இருக்கேன் நான்.. அதை ஜீரணிக்க எத்தனை நான் ஆச்சு தெரியுமா..??”

                 “ஆனா, அந்த வகையிலும் நீ நல்லவன் தான்.. என்னை அதிகமா யோசிக்கவே விட்டதில்லை நீ.. நீ கூப்பிடற இடத்துக்கு வரணும்.. நீ  சொல்றவங்க கூட நடிக்கணும்.. நீ நீட்டுற இடத்துல கையெழுத்துப் போடணும்.. கடைசியா நீ நினைச்சதெல்லாம் நடக்கும்..”

                 “நான் நல்லவளா இருந்திருந்தா உன்னை மறுத்திருக்கணும் இல்ல.. நான் எதையுமே மறுக்கவே இல்ல.. எனக்கு மறுக்க தோணல.. இதெல்லாம் விட கொடுமை, எனக்கு உன்னை பிடிச்சு  தொலைச்சது.. ஆனா, நிச்சயமா இது நடக்காதுன்னு நானே முடிவு பண்ணிட்டேன்..”

                “எந்த நிலையிலும் உன்கிட்ட காதல்ன்னு வந்து நிற்கக்கூடாதுன்னு எனக்கு நானே சத்தியம் பண்ணிட்டேன். உன்னை ஈர்க்கிற மாதிரி ஒரு பார்வைகூட பார்க்கக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன். நீ நிறுத்தின எல்லையில நிற்க பழகிகிட்டேன்..

                “என் காதல் என்னோட மறைஞ்சு போகட்டும்ன்னு தான் நானும் நினைச்சேன்.. என் முடிவுல நானே தெளிவா இருக்கறதா என்னை ஏமாத்திட்டு இருந்த நேரம் தான் ஸ்ரீகா வந்தா.. உன்னோட கவனம் மாறிப்போச்சு.. எனக்கும் அந்த நேரம் தான் கண்திறப்பு..”

                “எத்தனை நாளா என்னை நானே பைத்தியக்கார மாதிரி ஏமாத்திட்டு இருந்திருக்கேன்ன்னு அப்போதான் புரிஞ்சது எனக்கு.. நான் பிறந்ததுல இருந்து அனுபவிச்ச வலி அத்தனையும் ஒண்ணுமே இல்லன்னு சொல்ற அளவுக்கு வலிச்சது…”

                  “உன்னோட நிராகரிப்பு என்னை அத்தனை பாதிக்கும்ன்னு எனக்கே தெரியல பீம். ஆனா, உன்கிட்ட வந்து நிற்கவும் மனசில்ல… ஒருவேளை உன் அம்மா மாதிரி நீயும் ஏதாவது பேசிட்டா, என் பணத்துக்காகவா ன்னு கேட்டுட்டா, இல்ல.. நீயெல்லாம் என்மேல ஆசைப்படலாமான்னு பேசிட்டா… செத்தேப் போய்டுவேனோன்னு ஒரு பயம்..”

                “உன் கண்ல படவே கூடாதுன்னு ஒதுங்கிப் போனேன்.. ஆனா, அப்படியும் என்னை விடாம விரட்டி வந்த நீ.. அன்னைக்கு.. அன்னைக்கு நீ நடந்த விதத்துக்கு பிறகும் எனக்கு உன்மேல கோபம் வரல.. ஏன் இப்படி என்னை வச்சிருக்கன்னு சாமிகிட்ட தான் சண்டை போட தோணுச்சு..”

                 “உன் மேல வச்ச காதலுக்காக என்னை நானே வெறுத்து இருந்த நேரம் தான் நான் கர்ப்பமா இருக்கேன்னு தெரிய வந்தது. ஏதோ ஒரு விடியல் வந்ததா நினைச்சுட்டேன்…”

                 “உன்மேல ஆசைப்படறது தானே தப்பு… எனக்குள்ள இருக்கறது என்னோட மகன்னு அப்போதான் உறுதியா நினைக்க தொடங்கினேன்.. உன்மேல காட்டமுடியாத என்னோட அன்பை என்மகன் மேல காட்ட முடிவு பண்ணேன்..”

                 “அவனை உன்கிட்ட இருந்து காப்பாத்த தான் ஓடிப்போகப் பார்த்தேன்.. ஆனா, எதுக்குமே நீ விடல… நான் எத்தனைப் போராடியும் இன்னைக்கு வரைக்கும் உன்னை வெறுக்க முடியல.. இப்பவும் உன் விருப்பத்துக்கு தான் வளைஞ்சு  நிற்கிறேன்.. இன்னும் நான் என்னதான் செய்யணும்…”

                  “சொல்லு..” என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனை பார்க்க, பேச்சற்று அமர்ந்திருந்தான் பீஷ்மன்.

                அவன் கண்கள் லேசாக கலங்கி இருக்கிறதோ என்று அவள் சந்தேகிக்கும்போதே, அவளை வலுக்கட்டாயமாக கட்டி அணைத்திருந்தான் பீஷ்மன்.

               சாஷா “பீம்..” என்று மறுக்க நினைக்க, “எனக்கு நீ வேணும் சாஷா..” என்றான் முடிவாக.

              சாஷா மௌனமாக “எனக்கு உன்னைமாதிரி பேசி புரியவைக்க தெரியல.. ஆனா, எனக்கு என் சாஷா வேணும்.. அவளோட காதல் மொத்தமும் வேணும்.. நான் என்ன செய்யட்டும் சொல்லு..” என்றவன் அவள் தோளில் முகம் பதிக்க, அவன் கண்களின் ஈரத்தை உணர முடிந்தது அவளால்.

              “அழுகிறானா..” என்று பதறியவள் “பீம்..” என்று திமிற, “அப்படியே இருடி..” என்று அப்போதும் அதட்டினான் அவன்..

              சாஷா இம்முறை அவன் பேச்சை மதிக்காமல் அவனிடம் இருந்து விலகி அவன் முகம் பார்க்க, அவளுக்கு முகத்தைக் காட்டாமல் வேறெங்கோ திரும்பிக் கொண்டான் அவன்.

               அவன் செய்கையில் அத்தனை நேரம் இருந்த கவலை மறந்தவளாக சிரித்தாள் சாஷா.

                பீஷ்மன் இருநிமிடங்களில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, அப்போதுதான் சாஷாவின் சிரித்த முகம் கண்ணில்பட்டது.

                “எதுக்கு சிரிக்கிற..” என்று அவன் மீண்டும் தொடங்க,

               “அதுக்கும் உங்க அனுமதி கேட்கணுமா நான்..” என்றவளுக்கு இன்னும் சிரிப்புதான்.

                 பீஷ்மன் முறைத்து கொண்டிருக்க, ஏனோ மீண்டும் சிரிப்பு வந்தது அவளுக்கு..

                அவனின் அழுத முகம் அவள் கவலைகளை மறக்கச் செய்ய, விரிந்து சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

             “ஏண்டி ஒரு புருஷன் அழறேன்.. ஏன் எதுக்கு எதுவும் கேட்காம சிரிப்பியா நீ..” என்று பீஷ்மனே கேட்டுவிட, அதன்பிறகும் சிரிப்புதான் வந்தது அவளுக்கு.

                பீஷ்மன் “சாஷா..” என்று விளையாட்டாக அதட்டியபோதும் அவள் சிரிப்பு அப்படியே இருக்க, ஒரே நொடியில் அவளை தன் இருகைகளாலும் தூக்கி தன் மடியில் அமர்த்தியிருந்தான் பீஷ்மன்.

                சாஷாவின் சிரிப்பு அப்படியே மறைந்து போக, “ஏன். இப்போ என்ன பண்ணிட்டேன்.. இந்த ரியாக்ஷன் கொடுக்கற.. “என்றான் பீஷ்மன்.

               சாஷா இன்னும் அதிர்ச்சி நீங்காமல் அமர்ந்திருக்க, “வேணும்னா மறுபடியும் அழவா.. அப்போ சிரிப்பியா..” என்றான் உண்மையாக

               சாஷா அவன் பேச்சில் என்ன நினைத்தாளோ, தானாகவே கைகளால் அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டாள்.

                 “உனக்கு அந்த தலையெழுத்து வேண்டாம்.. எப்பவும் அழாத..” என்றாள் கண்கலங்கியவளாக.

                “நீ சிரிக்கிறேன் சொல்லு.. நான் அழுதுட்டே இருக்கேன்.. நிச்சயமா உனக்கு பண்ணது பாவம்தான் சாஷா.. நான் அழ தகுதியானவன் தான். எனக்கு உன்னோட சிரிப்பு வேணும்… அதுக்கு இதுதான் வழின்னா, நான் தயாரா இருக்கேன்..”

                  “இல்ல.. எதையுமே மறக்க முடியலன்னு சொன்னா, நீ என்ன சொல்றியோ அதை அப்படியே செய்றேன்.. நான் ப்ராமிஸ் பண்றேன் உனக்கு..” என்று காதலாக பீஷ்மன் உரைக்க,

                  “என்ன வேணாலும் செய்வியா..” என்றவள் கண்கள் பளபளத்தது.

                   “என்ன கேட்கப்போகிறாளோ..” என்ற பீதியுடனே அவன் தலையசைக்க, அவன் முகம் போன போக்கில் சிரித்து விட்டாள் சாஷா..

                     பீஷ்மனின் காதருகில் குனிந்தவள் “பீஷ்மனை பார்க்க பாவமா இருக்கு.. இப்போதைக்கு ஒரு கிஸ் கொடு… கிஸ் மட்டும்..” என்றாள் உத்தரவாக.

                     பீஷ்மன் அதிர்ந்தவனாக அவள் முகம் நோக்க, மெல்ல கண்சிமிட்டிச் சிரித்தாள் அவள்.

                     அவளின் அந்த சிரிப்பில் மீண்டும் கண்கள் கலங்குமோ என்று பயம் வர, பட்டென அவளை இறுக்கி கொண்டான் பீஷ்மன். சாஷா “என் முன்னாடி அழு..” என்றவள் மீண்டும் சிரிக்க, அவள் கழுத்தில் இப்போது அவன் பற்கள் பதிந்தது.

                      சாஷா “பீம்..” என்று சினுங்க, அவளை அசையவிடாமல் பிடித்துக் கொண்டான் அவன். அவன் விட்டாலும் விலகும் நிலையில் இல்லை அவள்.

Advertisement