Advertisement

கைப்பாவை இவளோ – 21

 

                   சாஷாவிடம் கத்திவிட்டு வந்து அரைமணி நேரம் முடிந்திருக்க, ஓரளவு இயல்பாகி இருந்தான் பீஷ்மன்.  பேச்சுப்போக்கில் தீக்க்ஷி விஷயத்தையும் உளறி கொட்டியது இப்போது உரைக்க, அதற்கும் சேர்த்து அழுவாளே என்று மனம் தவித்துப் போனது.

                    ‘பெரிதாக வசனமெல்லாம் பேசி அவளை அழைத்து வந்தது அவளை இப்படி அழவைத்து வேடிக்கைப் பார்க்கவா??… அவளை பற்றி தெரியும்தானே’ என்று தன்னிடமே வாதம் செய்தவன் சட்டென எழுந்துவிட்டான். அவன் வேகமாக சாஷாவைத் தேடிச் செல்ல, அவன் விட்டு சென்ற இடத்திலிருந்து அசையாமல் அமர்ந்திருந்தாள் பாவை.

                  பீஷ்மனுக்கு அவளின் நிலை வேதனையைக் கொடுக்க, கைகளால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான் அவன். சாஷா தானாகவே பீஷ்மனின் தோளில் சாய்ந்து கொள்ள, அவளை சுற்றி கைகளால் வளைத்துக் கொண்டான்.

                 மௌனமான சில நிமிடங்கள்… இருவருமே மற்றவரின் அணைப்பில் ஆறுதலை மட்டுமே யாசித்த நீளமான நொடிகள். பீஷ்மனின் விரல்கள் சாஷாவின் விரல்களை மெல்ல அழுத்திக் கொடுக்க, அந்த இதத்தில் கண்ணீர் மறந்து போனது சாஷாவுக்கு.

                அப்படியே, அவன் தோள்மீதே மெல்ல அவள் உறங்கிப் போக, பீஷ்மன் அவளைத் தூக்கிச் சென்று அவனது அறையின் கட்டிலில் கிடத்தினான். அவளை விட்டு அவன் நகர முற்படுகையில் “பீம்..” என்று சாஷா கைகளை காற்றில் வீச, அதற்குமேல் பொறுக்க முடியவில்லை அவனால்.

                அவளின் தேடல் உணர்ந்தவன் உருகிப் போனான் அவள் காதலில். “இருக்கேன் சாஷா..” என்று அவள் அருகில் அமர்ந்து அவன் உரைக்க, தூக்கத்தோடே நகர்ந்து அவன் மடியில் தலைசாய்த்துக் கொண்டாள் சாஷா.

                 இது புதியது பீஷ்மனுக்கு… ஏதோ இதமான ஒரு உணர்வு.. இந்த நிமிடம் நிச்சயம் சாஷாவின் மீது காமம் பெருக்கெடுக்கவில்லை அவனுக்கு. மாறாக புதுவித அலை ஒன்று அவனை புரட்டிக் கொண்டிருந்தது. சாஷா இப்படியெல்லாம் அவனை நெருங்குபவள் கிடையாதே..

                 எப்போதும் அவன்தான் அவளிடம் இதம் தேடுவது.. இப்படி மடிசாய்வது, உணவு ஊட்டுவது, தலையைக் கோதுவது, நெஞ்சில் தாங்கிக் கொள்வது என்று அத்தனை இதத்தையும் சாஷா அவனுக்கு கொடுத்திருக்கிறாளே தவிர, எடுத்துக் கொண்டதில்லை இதுநாள்வரை.

                 அவனுக்கு லேசான காய்ச்சல் என்றாலும், அவனுடனே இருந்து தாங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். தாயிடம் கூட தான் சுகமில்லை என்பதை தெரிவிக்க விரும்பாத  அந்த வீம்பு பிடித்தவனும் அவளிடம் தன்னை ஒப்புவித்து அமைதியாக அவளை ரசித்து அமர்ந்திருந்த தருணங்கள் எல்லாம் எக்கச்சக்கம்…

                 ஆனால், அவனறிந்து எதற்கும் அவனை நாடியதே இல்லை சாஷா. ஏன் அவள் மருத்துவமனையில் இருந்தபோதும் சரி.. அதன்பின்னான நேரங்களிலும் கூட பெரிதாக பீஷ்மனிடம் ஆறுதல் தேடவில்லையே அவள்.

                அப்போதும் அவளை அதட்டி மிரட்டி உணவை அவள் வாயில் திணித்திருக்கிறானே தவிர, காதலோடு அவளுக்கு ஊட்டியவன் இல்லை.. அதை அவள் எதிர்பார்த்ததும் இல்லை.

               பீஷ்மனைக் கண்டதும் பட்டென தாமரையாக மலர்ந்து நிற்கும் அவளது முகம் மட்டுமே அவளின் அதிகபட்ச வெளிப்பாடு. அந்த சில நொடிகள் மட்டுமே அவள் தன்னைமீறி தன்னை வெளிப்படுத்தும் நேரங்கள்.

              ஆனால், அதையும் பீஷ்மன் ஊன்றி கவனிக்க முற்பட்டால், சட்டென உணர்வுகளைத் தொலைத்தவளாக அமைதியாக நின்றுவிடுவாள். அப்படிப்பட்டவளின் காதல் முதலில் அதிர்ச்சிதான் அவனுக்கு.

               நிச்சயம் அவளுக்கு தன்மீது வெறுப்பில்லை என்று உணர்ந்தாலும், தன்னை கவசமாக பயன்படுத்திக் கொள்கிறாள்.. என்பது தான் அவன் எண்ணம். அதைத் தாண்டி யோசிக்க துணிந்ததில்லை அவன். ஆனால், எந்த கணம் அவளின் காதல் தனக்கானது என்பதை உணர்ந்தானோ, அதன்பின் அவளைத் தாண்டி வேறெதையும் யோசிக்கும் துணிவு வரவே இல்லை பீஷ்மனுக்கு.

                 ஆனால், அவள் காதலை உணர்ந்த கணம் தொட்டு அவர்கள் வாழ்வில் கலவரம் மட்டும்தானே துணையிருக்கிறது.. இன்றுவரை காதலை ஒப்புக்கொள்ளவில்லையே அவள். விரும்பினாலும் வேண்டாம் என்றுதானே நிற்கிறாள்.

 

                  அப்படிப்பட்டவள் தானாக அவனது மடியில் சாய்ந்து கொள்ள, அசையவே இல்லை பீஷ்மன். சற்று அசைந்தாலும் கூட விழித்து எழுந்து விலகி விடுவாளோ என்று மனம் பதற, சிலையாக மாறிப் போனான் அவன்.

                   அடுத்த ஒருமணி நேரம் அவன் வசம்தான் சாஷா. தன் கைகள் ஒருநாள் நடுங்கும் என்று யாரும் சொல்லியிருந்தால் நம்பியிருப்பானோ என்னவோ.. ஆனால், அவள் தலையைக் கோதி கொண்டிருந்த தன் விரல்களில் முதல்முறையாக நடுக்கத்தை உணர்ந்தான் பீஷ்மன்.

                   அவன் நிலையை நினைத்து அவனுக்கே சிரிப்பு வர, “என்னடா பண்ற பீஷ்மா..” என்று சத்தமாகவே அவன் கேட்டுக்கொள்ள, அதற்கும் “பீஷ்மா இல்ல பீம்.” என்று கேலி செய்தது மனது.

                   கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கழித்து விழித்து எழுந்தவள் பீஷ்மனிடம் இருந்து நகர்ந்து கொள்ள, “ஏன் எழுந்தா..” என்று சுணங்கினான் அவன்.

 

              சாஷா விரிந்திருந்த தன் கூந்தலை அள்ளி கொண்டையிட்டு கட்டிலில் இருந்து இறங்க முயல, அவளது கைபிடித்து இருந்தான் பீஷ்மன். சாஷா கேள்வியாக அவனிடம் திரும்ப, சம்பந்தமே இல்லாமல் “எங்கே போற..” என்றான் பீஷ்மன்.

 

               “பீம்…ரெஸ்ட் ரூம் போகணும் நான்..” என்றாள் அலுப்புடன்.

 

               தூக்கம் இன்னும் முழுதாக விலகவே இல்லை அவளுக்கு. அரைக்கண்ணை மூடிக் கொண்டே அவள் பேசிவைக்க, தான் அமர்ந்திருந்த இடத்தில இருந்து மண்டியிட்டு அவளை நெருங்கியவன் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட, தூக்கம் தெளிந்து போனவளாக அவனை முறைத்தாள் சாஷா.

 

               “தூக்கம் போச்சா.. இப்போ போ..” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 

                சாஷா பதில் கூறாமல் அவனை முறைத்து நிற்க, “போ..” என்பதாகத் தலையசைத்து, கண்களை காட்டினான் அவன். சாஷா மௌனமாக திரும்பி நடந்தாலும், முகத்தில் புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது அவன் செயலில்.

                   இங்கே கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவனும் சிரிப்புடன் தான் அமர்ந்திருந்தான். அவனை முறைத்து நின்றாலும் சாஷாவின் முகத்தில் வாட்டமில்லை என்பதால் வந்த புன்னகை அது.

                 வெளியே இருள் சூழ்ந்திருக்க, நேரத்தைப் பார்த்தவனுக்கு அப்போதுதான் வயிற்றின் நியாபகம் வந்தது.

 

               அடுத்தடுத்த நிகழ்வுகளில் உணவை அடியோடு மறந்திருந்தான் அவன். அவன் எழுந்து அமரவும், சாஷா ஓய்வறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

 

               முகத்தை கழுவி வந்தவன் “சாப்பிடலாம் வா..” என்று கைநீட்ட, நீட்டிய அவன் கைகளைப் பிடிக்காமல் எழுந்து நின்றாள் சாஷா. ஆனால், அப்படியே விட்டால் அவன் பீஷ்மன் இல்லையே. தனக்கு முன்னால் நடந்தவளின் கைகளைத் தானாக பிடித்துக் கொண்டவன் அவள் பார்வையைக் கண்டு கொள்ளாமல் ஆவலுடன் இனைந்து நடந்தான்.

 

                சமையல்காரர் உணவை எடுத்து வைக்கவும், இருவரும் மௌனமாகவே உண்டு முடிக்க, மீண்டும் அடுத்து என்னவோ என்ற குழப்பம் வந்து சேர்ந்தது சாஷாவுக்கு. ஆனால், பீஷ்மன் அவளை கவனிக்காதவன் போல் காட்டிக் கொண்டான்.

 

                அவள் தடுமாறவும், மீண்டும் அவள் கைகளைப் பற்றிக் கொண்டவன் “எங்கேயாவது போகலாமா..??” என்றான் கேள்வியாக.

 

                சாஷா “எங்கே..” என்பதுபோல் பார்த்து வைக்க, “எங்கேயோ போவோம்… வா.” என்றவன் அவள் கைபிடித்து காருக்கு அழைத்துச் சென்றான் இம்முறை.

 

                 அன்று தன் விருப்பமில்லாமல் அவன் அழைத்துச் சென்றது ஞாபகம் வர, சட்டென பீஷ்மனைத் திரும்பி பார்த்தாள் சாஷா. அவன் என்னவென புருவம் உயர்த்த, மறுப்பாகத் தலையசைத்தது அவன் பாவை.

 

                  “ஏதாவது கேட்டா பதில் வருதா உன்கிட்ட..” என்று பீஷ்மன் வெளிப்படையாகவே நொந்து கொள்ள,

 

                 “என்ன கேட்டிங்க..” என்றாள் அமைதியாக

 

                 “உனக்கு புரியலையா..  சரி ஓகே விடு..” என்றவன் பாதையில் கவனம் வைக்க, சாஷாவுக்கு தான் எப்படியோ இருந்தது.

 

                  “அன்னைக்கு கார்ல கூட்டிட்டு போனது நியாபகம் வந்துடுச்சு..” என்றாள் தானாகவே.

 

                   பீஷ்மன் இப்போது “நான் கேட்கவே இல்லையே..” என்று தலையசைத்து சிரிக்க, அவனை கோபத்துடன் முறைத்து வெளியே திரும்பிக் கொண்டாள் அவள்.

 

                   “பொம்மைக்கு கோபமெல்லாம் வருதே..” என்று அதிசயித்தான் பீஷ்மன்.

 

                   “ஏன் வரக்கூடாதா..” என்றவள் குரல் ஊசியாக துளைத்தெடுக்க,

 

                  “எவன் சொன்னான்..” என்று இலகுவாக்க முயன்றான் பீஷ்மன்.

 

                   சாஷா “நீங்கதானே இப்போ சொன்னிங்க…கோபமெல்லாம் வருதேன்னா என்ன அர்த்தம்..” என்றது பொம்மை..

 

                    “கோபமெல்லாம் வருதே.. அப்படின்னா, என் பொம்மைக்கு கோபப்படத் தெரியுதேன்னு ஆச்சர்யமா இருக்ககூடாதா…” என்றான் பீஷ்மன்.

 

                    சாஷா மீண்டும் மௌனம் சாதிக்க, “கோபம் ஒரு வகையில் நல்லது சாஷா.. நீ கோபப்படு.. கத்து.. சண்டை போடு.. ஏன் எங்கயாச்சும் அடிச்சு, கடிச்சு வச்சாலும் கூட ஓகே தான்…” என்றான் பீஷ்மன்.

 

                   மேலும் அவனாகவே, “எந்த உணர்வையும் வெளிப்படுத்தாம உனக்குள்ளேயே ஒளிச்சு வைக்கிறதுக்கு கோபம் ரொம்பவே பெட்டர்..” என்றான் அவன்.

Advertisement