Advertisement

கைப்பாவை இவளோ 18

                           சாஷா “பீம்..” என்றதில் மீனலோச்சனியின் ஆத்திரம் கூடிப் போக, “அவனுக்கென்ன.. நல்லாத்தான் இருக்கான்.. முதல்ல உன்னைப்பத்தி யோசி நீ..” என்று அவளை அதட்டிவிட்டார் மீனலோச்சனி.

                அவர் இயல்பாக பேசவும் தான் நிம்மதியாக இருந்தது சாஷாவுக்கு. பின்னே பேய்வேகத்தில் கார் ஒட்டியிருந்தானே. எதிலாவது மோதி, ஏதேனும் காயமோ இல்லை இன்னும் பெரிதாகவோ ஏதாவது என்றால் என்ன செய்வான்..? இவன் எப்போது என்னை சிந்தித்து நடப்பான்..?? என்னை ஒரு ஆளாக இவன் எப்போது மதிப்பான்..? என்று அடுத்தடுத்து கேள்விகள் வரிசைகட்டி நின்றது.

                மீனலோச்சனி இன்னும் அவளை முறைத்துக் கொண்டே நிற்க, “ரொம்ப வேகமா வந்தாங்க டாக்டர்.. பயந்துட்டேன்..” என்றாள் சமாதானமாக.

                 மீனலோச்சனி அவளை கண்டிப்புடன் பார்க்க, “மொத்தமா வெறுக்க முடியல என்னால. நான் சாஷாவாச்சே..” என்று பாவமாக அவரைப் பார்த்தாள் அவள்.

                 “என்னவோ செய்..” என்று அவர் நகர, அவரது கையைப் பிடித்தவள் “சாரி டாக்டர்..” என்று சிரித்தாள்.

                 அவளின் அந்த அப்பாவியான முகத்தைக் கண்டபிறகு கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை மீனலோச்சனியால். “ரெஸ்ட் எடு.. சத்யா ஐயா வெளியே இருக்காங்க.. நிம்மதியா தூங்கு..” என்றார் மீனலோச்சனி.

              “தாத்தாக்கு எப்படி தெரியும்..??” என்று அதிர்ந்தாள் சாஷா.

              “ஏன் நான் சொல்லமாட்டேனா..” என்று மீனலோச்சனி முறைக்க, அவரைத் தவிப்புடன் பார்த்தாள் சாஷா.

               “ரொம்ப நேரமாகிடுச்சே டாக்டர்… இந்த நேரத்துல அவரை ஏன் அலைய வைக்கணும்…” என்றவள் சற்று தயங்கி, “அவருக்கு அவரோடப் பேரனை ரொம்ப பிடிக்கும் டாக்டர்.. எனக்காக பீஷ்மனை அவர் திட்டினாலும், அதிகமா கவலைப்படுறார்.. அது நல்லது இல்லையே..” என்றாள் சாஷா.

               மீனலோச்சனி மெல்ல தலையசைத்துக் கொண்டவர் “என்னால ஐயாகிட்ட சொல்லாம இருக்க முடியாது. உன் பீமனும் அவருக்குதான் கொஞ்சமா பயப்படுவான். என்னை என்ன செய்ய சொல்ற..” என்றார் மீனலோச்சனி. அவர் நிலையில் இருந்து பார்த்தால் அவர் செய்தது சரிதானே. என்ன பேச முடியும் சாஷாவால்.

                மீனலோச்சனி வெளியேச் சென்று சத்யநாராயணனிடம் சாஷாவின் உடல்நிலையை எடுத்துக் கூற, பீஷ்மனும் அருகில் தான் நின்றிருந்தான். இரத்த அழுத்த மாறுபாடுகளாலும், அதீத மன உளைச்சலிலும் தான் மயங்கியிருந்தாள் சாஷா. அதை அப்படியே அவர் தெரிவிக்க, முகம் கசங்கி நின்றான் பீஷ்மன்.

                ஏற்கனவே ஒருமுறை அவன் பிள்ளையை இழந்து நின்றபோது இதே நிலைக்குச் சென்று வந்திருந்தாளே.. மறக்க முடியுமா அவனால்..??… ஆனால், சட்டென அதை மறந்து என்ன காரியம் செய்து வைத்திருக்கிறோம் என்பதும் மனத்தை அழுத்த, சாஷாவைக் காண ஒரு அடி எடுத்து வைத்தான் பீஷ்மன்.

                ஆனால், அவனுக்கு முன்பாகவே அவனை வழிமறித்து நின்றார் சத்யநாராயணன். பீஷ்மன் அவரை அதிருப்தியுடன் பார்க்க, “நீ கிளம்பு. என் பேத்தியை நான் கவனிச்சுக்கறேன்..” என்றார் கடினத்துடன்.

              அப்படியே விட்டுச் செல்பவனா பீஷ்மன். அவனுக்கு சாஷாவைப் பார்க்க யாரின் அனுமதியும் தேவையே இல்லையே. அவர் பேசியதே காதில் விழவில்லை என்பது போல போல, அவரைத் தாண்டி நடந்துவிட்டான் அவன்.

               “பீஷ்மா..” என்று சத்யா பல்லைக் கடித்துக் கொள்ள, “ஐயா..” என்று அவரின் கையைப் பற்றினார் மீனலோச்சனி.

               சத்யா “இவனை என்னதான் செய்யுறது மீனு..” என்று மீனலோச்சனியிடம் புலம்ப, “இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம். நீங்க என்னோட வாங்க..” என்று அவரை தனது ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார் மீனலோச்சனி.

              அந்த அறையில் இருந்த சோஃபாவில் அவரை அமரச் செய்து, அவருக்காக சூடான பால் வரவைத்து கொடுத்தார் மீனலோச்சனி. சத்யா மறுப்பாக பார்க்க, “ரொம்ப நேரமாகிடுச்சு ஐயா.. குடிங்க.. நான் பேசணும் உங்ககிட்ட..” என்று நிற்கவும், மறுக்க முடியவில்லை சத்யாவால்.

            அவர் பாலை குடித்து முடிக்கவும், “மயக்கம் தெளிஞ்சு உங்க பேத்தி பேசின முதல் வார்த்தை என்ன தெரியுமா..??” என்றார் மீனலோச்சனி.

             “என்ன பீஷ்மனைக் கேட்டாளா..??” என்றார் பெரியவர். மீனலோச்சனி அதிர்ச்சியாக அவரைப் பார்க்க, மென்மையாக சிரித்தார் சத்யா.

             “என் பேத்தி அப்படித்தான் கேட்பான்னு எனக்கு தெரியும் மீனு.. நல்ல பொண்ணு.. கடந்த காலத்தை நினைச்சு பயமாகவும் இருக்கு.. அதே சமயம் மொத்தமா பீஷ்மனை விட்டு விலகி நிற்கவும் மனசு வரல. அவளுக்கு என்ன வேணும்ன்னு அவளுக்கே புரியாத நிலையிலதான் இருக்கா.”

              “அப்படி என்ன காதலோ இவன்மேல.. இவனுக்குன்னு வந்து சேர்ந்திருக்கா பாரு.. இவன் பொண்டாட்டி இப்படி இருந்தா, இவன் எப்படி வழிக்கு வருவான்..” என்று தலையில் அடித்துக் கொண்டார் சத்யா. மீனலோச்சனிக்கு அவரின் கவலையில் சிரிப்பு வந்துவிட, அடக்க முடியாமல் சிரித்துவிட்டார் அவர்.

              “என்னம்மா நீயும் சிரிக்கிற..” என்று சத்யா கடிந்து கொள்ள, சிரிப்பை நிறுத்தி அமைதியாக தன் தந்தையானவரைப் பார்த்தார் மீனலோச்சனி.

               “பீஷ்மனைப் பற்றி நீங்க இவ்ளோ யோசிக்க வேண்டாம் ஐயா. இப்போவே அங்கங்கே சின்ன சின்ன மாற்றங்கள் தொடங்கிடுச்சே.. உங்களுக்கு தெரியலையா..??” என்றார் மீனு.

               சத்யா மீனலோச்சனியைப் பார்க்க, “யாருக்குமே அடங்காத பீஷ்மன்.. யாருக்காகவும் தன்னை விட்டு கொடுக்காத பீஷ்மன்.. அடிக்கடி சாஷாவுக்காக மட்டும் தவிச்சு நிற்கிறானே… அதைவிட வேறென்ன வேணும். அவன் குணத்துக்கு சாஷாவும் அவனைப் போலவே இருந்தா, நிச்சயம் போடின்னு போயிடுவான்..”

              “சாஷா அவளுக்கே தெரியாம உங்கப் பேரனை அசைச்சுட்டு இருக்கா. அவனும் கொஞ்சம் கொஞ்சமா உருகினாலும் வெளியே காட்டாம நிற்கிறான். சீக்கிரமே எல்லாம் சரியா வரும்.. உங்கப் பேரனும் உங்க வழிக்கு வருவான்.. அவசரப்பட்டு உங்க உடம்பை கெடுத்து வைக்காதிங்க.. அவங்களை அவங்க போக்குல விட்டு ஜாலியா சீரியல் பாருங்க..” என்று மீண்டும் சிரித்தார் மீனலோச்சனி.

              “நீ சொல்றபடி நடந்தா நல்லதுதான். ஆனா, இந்தப்பைய பண்ற வேலையில அந்த பொண்ணு மொத்தமா வெறுத்து ஒதுங்கிட்டா என்ன செய்யுறது..” என்று மீண்டும் சத்யா கவலைக் கொள்ள, சத்தமாக சிரித்தார் மீனு.

               “அதற்கெல்லாம் வாய்ப்பில்ல ஐயா. சும்மா காமெடி பண்ணாம தூங்குங்க.. அந்த முயல்குட்டி உங்க ராட்சசனை விடவே விடாது.. படுத்து தூங்குங்க நீங்க..” என்று கூறியவர் எழுந்து கொண்டார்.

               சத்யா அவர் பேச்சில் சற்றே நிம்மதியாக உணர, “எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.. நான் என்னோட கேபின்ல இருக்கேன்.. ஒர்க் முடிஞ்சதும் வர்றேன்..” என்றுவிட்டு வெளியில் நடந்தார் மீனலோச்சனி.

               இங்கு சாஷாவின் அறையிலோ பீஷ்மனைக் கண்ட நிமிடமே இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டாள் சாஷா. இன்னும் அவனின் வேகம் அச்சுறுத்தலைக் கொடுத்துக் கொண்டே இருக்க, அவனைக் காணவும் மீண்டும் கோபம் துளிர்த்தது அவளுக்கு.

              அவன் நன்றாக இருப்பதே கவலைகளை மறக்கச் செய்ய, மீண்டும் கோபம் கொண்டது அவனது பாவை.

                தன்னைக் கண்டதும் அவள் பட்டென கண்களை மூடிக் கொண்டதில் சின்ன சிரிப்புடன் தான் அவளை நெருங்கினான் பீஷ்மன். அவளது கட்டிலில் அவளை உரசிக் கொண்டு அவன் அமர, பட்டென நகர்ந்து கொண்டாள் அவள்.

                 கூடவே கண்களைத் திறந்து அவனை சுட்டெரிக்க, அவள் இரண்டு கைகளையும் தனது கைகளோடு கோர்த்துக் கொண்டவன் “பயந்துட்டேன் சாஷா..” என்றான் சிரிப்புடன்.

                சாஷா அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் தன் கையை விடுவிக்கப் பார்க்க, “என்கிட்டே இருந்து கையை எடுக்காத.. என்னோட கைகளுக்கு சுதந்திரம் கொடுத்தா, உன்னை விட்டு இப்படி தள்ளியிருக்காது..” என்றான் பீஷ்மன்.

               “தாத்தா வெளியே இருக்காங்க.. கூப்பிடுவேன்..” என்றாள் சாஷா.

               “கூப்பிடேன்.. யார் வேண்டாம்ன்னு சொன்னது. என் பொண்டாட்டியை நான் கட்டிப்பிடிக்க கூட உங்ககிட்ட பெர்மிஷன் கேட்கணுமான்னு அவர்கிட்டேயே கேட்கிறேன்.. ” என்றான்.. பேச்சுக்கும், முகத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒன்றுமறியாதவன் போல் அப்பாவியாக பார்த்துக் கொண்டே அத்தனையும் பேசினான் அவன்.

              “இப்படி பேசுபவனிடம் என்ன பதில் பேசுவேன்” என்று சாஷா மௌனமாக, “என்ன தாத்தாவை கூப்பிடலையா..” என்றான் அதற்கும்.

               “எனக்கு தூக்கம் வருது.. தள்ளிப் போங்க..” என்று சாஷா மீண்டும் விலக,

               “ஏற்கனவே இப்படி பொய் சொல்லி தான் இங்கே வந்து படுத்திருக்க..” என்றான் பீஷ்மன்.

               “ஓஹ்.. பொய் சொன்னா இப்படி செய்விங்களா.. அப்போ கண்டிப்பா எனக்கு தூக்கம் வருது..” என்றாள்.

              “தூக்கம் வருதா.. சரி ஓகே. வா.. மறுபடியும் ஜாலியா ஒரு ரைட் போவோம். இந்த முறை வேணும்ன்னா பைக்ல போவோமா..” என்றான் மீண்டும்.

சொன்னதோடு நிற்காமல் அவள் கைகளைப் பிடித்து தூக்க முயற்சிக்க, “பீம் விடு என்னை..” என்று கையை இழுத்துக் கொண்டாள் சாஷா.

             பீஷ்மன் அவள் கையை இழுத்ததில் தடுமாறியவனாக அவள்மீதே விழ, “ஆஆ. ம்மா..”என்று லேசாக கத்தினாள் சாஷா. ஆனால், அவளின் சத்தத்தை காதிலேயே வாங்காமல் நிதானமாக அவன் எழுந்து அமர, அவளை பீஷ்மன் இதற்குள் அணைத்து பிடித்திருந்ததால் அவளும் அவனுடனே எழுந்து அமர்ந்திருந்தாள்.

             அவன் சட்டென தன்னை இப்படி அவனுக்கு நெருக்கமாக அமர்த்திக் கொண்டதில் அதிர்ந்தவளாக அவள் விலக, அவளை விடாமல் அணைத்து அவளது தோளில் மென்மையாக முகம் புதைத்துக் கொண்டான் பீஷ்மன்.

              “விடுங்க என்னை..” என்று முழுதாக அவனை எதிர்க்க முடியாமல் சாஷா தடுமாற, “என்ன பண்ணிட்டேன் உன்னை.. அப்படியே இரு..” என்றான் நிமிராமல்.

               அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் பீஷ்மனை அள்ளிக் கொள்ள துடித்தாலும், தன்னை மொத்தமாக அடக்கி அமர்ந்திருந்தாள் சாஷா. அவள் உடலின் இறுக்கத்தில் முகம் நிமிர்த்தியவன் அன்று காலையில் செய்தது போலவே மீண்டும் ஒருமுறை அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

                சாஷா சிலையாக அமர்ந்திருக்க, என்னவென்று புருவம் உயர்த்தினான் பீஷ்மன். சாஷா  விலகி அமர்ந்து கொள்ள, அதிசயிக்கும் விதமாக அவளைத் தடுக்காமல் அமைதியாக இருந்தான் பீஷ்மன்.

                 சாஷா “என்னவோ சரியில்லையே..” என்று யோசனையில் இறங்க, “என்ன உன் மண்டையைக் குடையுது..” என்றான் பீஷ்மன்.

                சாஷா மறுப்பாக தலையசைக்க, “சரி சொல்லு.. எப்போ என் பொண்டாட்டியோட நான் வாழறது.. என் பொண்டாட்டி எப்போ என்னோட வருவா..” என்று கேள்வியை மாற்றிக் கேட்டான் பீஷ்மன்.

               “அதை ஏன் என்கிட்டே கேட்கறீங்க.. நீங்க கிளம்புங்க..” என்று இன்னும் தள்ளி அமர்ந்தாள் சாஷா.

               “உன்கிட்ட கேட்காம வேற யார்கிட்ட கேட்க.. எனக்கு இருக்கறதே ஒரே ஒரு பொண்டாட்டி..” என்று பாவமாக கூறினான் பீஷ்மன்.

                “ஆமா.. ஊர்ல மத்தவங்க எல்லாம் பத்து பதினைஞ்சி வச்சிருக்காங்க.. நீங்க செஞ்சதை கல்யாணம்ன்னு சொல்லாதீங்க எப்பவும்..” என்று மீண்டும் முறுக்கிக் கொண்டாள் சாஷா.

                  “சரி சொல்லமாட்டேன். என்னோட வந்திடு..” என்றான் எதிர்பார்ப்புடன்.

                 ஆனால், சாஷாவுக்கு இன்னும் அதற்கான துணிவு வரவில்லை போலும். மறுப்பாகவே தலையசைத்தாள் அவள்.

                   பீஷ்மன் ஆயாசமாக அவளைப் பார்க்க, இதழ்களை அழுத்தமாக கடித்துக் கொண்டு மௌனமானாள் அவள்.

                     அவளின் அழுத்தத்தில் எப்போதும் ஆத்திரப்பட்டு கத்தி, ஆர்ப்பாட்டம் செய்பவன் “சரி வரவேண்டாம்.. ரிலாக்ஸ்.. ” என்று அவள் இதழ்களை தன் கையால் பிரித்துவிட்டான். சாஷா அவனை அதிசயமாக நோக்க, “படுத்துக்கோ தூங்கு..” என்று பீஷ்மன் விலகி எழுந்து கொள்ள, அவன் அப்படி விலகிச் செல்வதும் ஏற்புடையதாக இல்லை சாஷாவுக்கு.

                    அவன் எழுந்து நிற்கவும், சென்று விடுவானோ என்று தவிப்புடன் ஏறிட்டாள் அவனை. பீஷ்மனுக்கு அவள் பார்வை புரிய, “இப்படியெல்லாம் பார்த்து வைக்காத.. அப்புறம் கட்டி பிடிச்சேன்.. கையைப் பிடிச்சேன்னு கம்ப்ளெயிண்ட் பண்ணுவ..” என்று அதட்டினான் பீஷ்மன்.

                   சாஷா இப்போது அவனை முறைக்க, “என்ன முறைப்பு வேண்டி கிடக்கு.. கூட வரமாட்டேன்னு சொல்லிட்ட இல்ல.. அப்புறம் என்னடி பார்வை. எதுக்கு இப்படி பார்த்து வைக்கிற..” என்று கத்தினான் அவன்.

                 சாஷா சட்டென புன்னகைக்க, அவள் கழுத்தைப் பிடித்துவிட்டான் பீஷ்மன். “என்னைப் பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா உனக்கு..??” என்றான் கோபத்துடன்.

                  ஏனோ இம்முறை அவனிடம் பயம் வராமல் போக, மெல்ல புன்னகைத்தாள் சாஷா. பீஷ்மன் அவள் சிரிப்பில் கடுப்பாகி முறைக்க, “என்னைத் தூங்க விடுங்க. டாக்டர் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க..” என்றாள் அவள்.

                   “என் தூக்கம் போச்சுடி உன்னால..” என்று பீஷ்மன் ஆத்திரம் கொள்ள,

                  “என்னை எத்தனை நாள் தூங்காம அழ வச்சு இருக்கீங்க.. நீங்களும் கொஞ்சம் அனுபவிக்கலாம்.. தப்பில்ல..” என்றாள் சாஷா. குரலில் இப்போது மிடுக்கும் சேர்ந்திருந்தது.

                   “ஒஹ்.. மேடம் பழிவாங்கறிங்களா..” என்று பீஷ்மன் மீண்டும் அவள் அருகில் கட்டிலில் அமர,

                   “நீங்க கிளம்புறதா இல்லையா..” என்றாள் சாஷா.

       “எப்படியும் தூங்கப் போறதில்ல.. அப்புறம் எதுக்கு வீட்டுக்கு போய்க்கிட்டு.. இங்கேயே படுத்துக்கறேன்… நீ பழி வாங்கிக்கோ..” என்று சட்டமாக கூறியவன் அவள் அருகில் படுத்து அவள்மீது கையைப் போட்டுக் கொள்ள, பதறிப் போனவளாக எழுந்து அமர்ந்தாள் சாஷா..

பீஷ்மன் விடாமல் அவளைத் தன்னுடன் இழுக்க, “விடுங்க என்னை..” என்றவள் அவன் கையிலிருந்து விலகி, கட்டிலை விட்டும் கீழே இறங்கி நின்று கொண்டாள்.

                  கைகளைக் கட்டிக்கொண்டு அவள் பீஷ்மனை முறைக்க, “ஹப்பா.. வண்டி ஓட்டினதுல உடம்பெல்லாம் சரியான வலி.. கொஞ்சம் பிடிச்சு விடு..” என்றவன் கவிழ்ந்து வாகாக படுத்துவிட்டான்.

                  “நகர மாட்டானோ..” என்று சாஷா பீதியுடன் நிற்க, மறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தவனோ முகமெல்லாம் புன்னகையாக காட்சியளித்தான்.

                   சாஷா இருந்த இடத்தில் இருந்து நகராமல் நிற்க, “வா.. வா.. பழிவாங்கலாம்..” என்று அவளை நக்கல் செய்தான் பீஷ்மன்.

                  “நான் கிளம்புறேன்..” என்றவள் அந்த அறையின் வாயிலை நோக்கி நடக்க, பட்டென எழுந்தவன் வேகமாக அவளை நெருங்கி கைகளில் தூக்கிக் கொண்டான் அவளை.

                சாஷா முகத்தை திருப்பிக் கொள்ள, “இப்படியே  தூக்கிட்டு போய்டவா..” என்று கேள்வியுடன் நின்றான் பீஷ்மன்.

                 “கீழே விடுங்க..” என்று சாஷா இறுக்கம் கொள்ள, “ஏன் பீமுக்கு என்னாச்சு..” என்று அடாவடியாக நின்றான் அவன்.

                  சாஷா எரிச்சலுடன் அவனை திரும்பி பார்க்க, “சீக்கிரமே வந்திடு..” என்றவன் கட்டிலில் அவளை இறக்கிவிட்டு மீண்டும் ஒருமுறை அவள் நெற்றியில் முத்தம் வைத்து நகர்ந்து கொள்ள, “என்ன செய்தான் என்னை..” என்று செல்லும் அவனை பார்த்திருந்தாள் சாஷா.

Advertisement