Advertisement

கைப்பாவை இவளோ 17

                      சாஷா அன்று மாலைக்குள் அந்த மூன்று திரைப்படங்களையும் பார்த்து முடித்தவள் அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களையும் அழைத்துப் பேசியிருந்தாள். அவர்களில் ஒருவர் வளர்ந்து வரும் இளம் தயாரிப்பாளராக இருக்க, வட்டிக்கு பணத்தை வாங்கி திரைப்படத்தை தயாரித்து இருந்தார் அவர்.

                இதற்குமேல் படத்தின் வெளீயீட்டிற்கு தனியாக கடன் வாங்கி அவதிப்பட விரும்பாமல் பீஷ்மனின் நிறுவனத்தை நாடி இருந்தார் அவர். பீஷ்மனின் நிறுவனத்தைப் பற்றியும் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்க, பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை அவரிடம். அவர்கள் கொடுக்கும் விலையை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தார் அவர்.

               எப்படியும் அடிமாட்டு விலைக்கு தான் வாங்குவார்கள் என்ற எண்ணத்தில் தான் வந்திருந்தார் மனிதர். அவர் பீஷ்மனை எதிர்பார்த்து காத்திருக்க, அவரைச் சந்தித்தது சாஷா. நடிகையாக சாஷாவை முன்பே அறிந்தவர் என்பதால் “இந்த பொண்ணு என்ன செய்யப் போகுது..” என்று அசட்டையாக தான் நினைத்தார் அவர்.

               ஆனால், அவர் எதிர்பார்த்ததுக்கு மாறாக அவரின் திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து முடித்திருந்தாள் சாஷா. அந்த திரைப்படத்தின் நிறை குறைகளையும் பட்டியலிட்டவள் “நல்ல படம் தான்.. நிச்சயமா சொல்லிக்கிற மாதிரி பிசினஸ் நடக்கும். நீங்க என்ன எதிர்பார்க்கிறிங்க..” என்று அவரிடமே கேட்டு வைத்தாள்.

              அவள் படத்தின் நிறை குறைகளை அலசி ஆராயும்போதே அவள்மீது ஒரு மரியாதை வந்திருந்தது அந்த தயாரிப்பாளருக்கு. அதுவும் அவள் படத்திற்கான தொகையையும் அவரிடமே கேட்க, சாஷாவின் மீது நிச்சயம் நல்லெண்ணம் தான்.

            தனது நிலையை மறைக்காமல் அப்படியே அவளிடம் கூறிவிட்டவர் “அசலைவிட அதிகமா வட்டி கட்டிட்டு இருக்கேன் மேடம். நீங்க என்ன ரேட் கொடுத்தாலும் வாங்கிக்க வேண்டிய கட்டாயத்துல தான் இருக்கேன். நீங்க பார்த்து சொல்லுங்க..” என்றுவிட, அவரின் நிலை புரிந்தது சாஷாவுக்கு.

              படத்தை எடுப்பதற்கான செலவுத் தொகையை கணக்கிட்டவள் அதிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் லாபம் வைத்து அவருக்கான விலையைக் கூற, அவர் எதிர்பார்த்து வந்ததை விட, நிச்சயம் அதிகமானத் தொகை தான் அது.

           அவரின் மனநிறைவு அவரின் முகத்திலேயே தெரிந்துவிட, “ரொம்ப நன்றி மேடம்..” என்றார் அவர்.

            புன்னகையுடன் அவருக்கு விடைகொடுத்தவள் “நிச்சயம் நாம திரும்ப சந்திப்போம் சார். இதுபோல நல்ல படங்கள் நிறைய கொண்டு வாங்க..” என்ற கோரிக்கையுடன் அவரை அனுப்பி வைத்தாள்.

          அடுத்த படத்தின் தயாரிப்பாளரிடமும் நியாயமான ஒரு விலையைப் பேசி முடித்திருந்தாள் சாஷா.

            மூன்றாவதாக காத்திருந்த தயாரிப்பாளர் கொஞ்சம் பெரிய  அளவிலான படங்களை தயாரிப்பவராக இருக்க, இந்த படத்திலும் ஒரு பெரிய கதாநாயகனைத் தான் உபயோகித்து இருந்தார். அவர் வழக்கம்போல் பீஷ்மனை எதிர்பார்த்து வந்திருக்க, சாஷா அங்கே அமர்ந்திருந்ததில் லேசான சுணக்கம் தான் மனிதருக்கு.

                ஆனாலும், வெளிகாட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் அவர் அமர, மற்றவர்களிடம் பேசியதைப் போலவே அவரிடமும் தன்னியல்பு மாறாமல் பேசினாள் சாஷா. அந்த தயாரிப்பாளர் ‘சாஷாவை ஏய்த்துவிடலாம்’ என்று எண்ணினாரோ என்னவோ, படத்தின் திரையரங்க உரிமையை மட்டும் கொடுப்பதாகவும், அதிலும் லாபத்தில் பங்கு போட்டுக் கொள்வோம் என்றும் தேர்ந்த வியாபாரியாக பேரம் பேசினார் அவர்.

                 சாஷா அவர் பேச்சில் சிரித்துக் கொண்டவள் “வெறும் தியேட்டர் ரைட்ஸை வச்சு இன்னைக்கு நிலைமைக்கு எதுவுமே செய்ய முடியாது சார். ட்ரெண்ட் மாறிப் போச்சே.. ஓடிடி, சேனல் ப்ராபிட் தான் மேட்டர் இங்கே. ரெண்டு பேரும் இதே துறையில தான் இருக்கோம்.. கொன்ஜம் நியாயமா பேசுவோமே..” என்றுவிட்டாள்.

           இப்படி முகத்தில் அடித்தது போல பேசுவாள் என்று எதிர்பாராதவர் “சரிங்க மேடம்.. மொத்தமாகவே கொடுத்துடறேன். ஆனா, எனக்கு ப்ராபிட்ல ஷேர் கொடுத்திடுங்க..” என்றார்.

                  அவரின் நோக்கம் புரிந்தவள் ஒரு தொகையை குறிப்பிட்டு “இதுதான் எங்களோட பைனல் அமவுண்ட். உங்களுக்கு விருப்பமிருந்தா படத்தை எங்ககிட்ட கொடுக்கலாம்.. இல்லையா, நிச்சயம் நீங்க வேற கம்பெனியைப் பார்த்துக்கலாம்..” என்றுவிட்டாள் முடிவாக.

                  அந்த தயாரிப்பாளர் எதிர்பார்த்து வந்ததே வேறு. பீஷ்மன் இருந்திருந்தால் அது நடந்தும் இருக்கும். பெரிய நாயகனின் திரைப்படம் என்பதால் கொஞ்சம் வளைந்து கொடுத்திருப்பான்.

           ஆனால், சாஷா வளவளவென்ற பேச்சு வார்த்தைக்கே இடம் கொடுக்காமல் பட்டென பேச்சை முடித்துக் கொள்ள, நிச்சயம் திருப்தியில்லை அவருக்கு. ஆனால், பீஷ்மனின் மனைவியிடம் அதற்குமேல் வாதிடவும் முடியாது அவரால். பீஷ்மனின் நிறுவனம் ஒரு திரைப்படத்தை திரையிட மறுத்துவிட்டால் பீஷ்மனை மீறி மற்றவர்கள் அவருக்கு உதவிக்கு வரமாட்டார்கள் என்பதும் புரிய, அவள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு.

                  அதனைக் கொண்டே மறுபேச்சு பேசாமல் அவளின் விலைக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுக் கிளம்பியிருந்தார் அவர். அவர் பேசி முடித்து எழுந்தபோது நேரம் இரவு எட்டு மணியை நெருங்கிவிட, அதற்குமேல் எதுவும் வேலையில்லாததால் சாஷா தானும் எழுந்து விட்டாள்.

                 அவள் அவளுடைய அறையில் இருந்து வெளியேறி அந்த கட்டிடத்தின் வாசலுக்கு வர, அங்கே காருடன் தயாராக நின்றான் பீஷ்மன். “மணி வரவில்லையா..” என்று சாஷா பார்த்து நிற்க, “அவன் வரமாட்டான் சாஷா.. வா…” என்று உள்ளிருந்தபடியே காரின் கதவைத் திறந்து விட்டான் பீஷ்மன்.

               சாஷா அவனிடம் வாயைக் கொடுக்காமல் அமைதியாக காரில் ஏறி அமர, “என்ன இன்னையோட பிசினஸ் முடிஞ்சுது போல.. “என்று தொடங்கினான் பீஷ்மன்.

            இதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாதே.. “ஆமாம்.. முடிஞ்சுது.. நீங்கதானே முடிக்க சொன்னிங்க..” என்றாள் சாஷா.

         “நிச்சயமா நாந்தான் முடிக்க சொன்னேன்.. ஆனா, நான் கொடுத்த பைல்ஸ்ல இருந்த டேட்டாஸ் எதுவும் மனசுல பதியல போலவே..” என்றான் அவன்.

          “எதை வச்சு அப்படி சொல்றிங்க…”

            “நீ முடிச்ச பிசினஸ் டீலிங்ஸ் வச்சுதான் சொல்றேன். நான் கொடுத்த எதையும் பாலோவ் பண்ணலையே..” என்றான் பீஷ்மன்.

            அவன் குரல் சாஷாவுக்கு தெரியாதா என்ன.. அவன் குரலிலேயே அவனுக்கு பதில் கொடுத்தாள் சாஷா.

           “இங்கே பணத்தைவிட மதிப்புமிக்க சில விஷயங்கள் இருக்கு தெரியுமா..” என்றாள் சாஷா.

           பீஷ்மன் நக்கலாசிரித்தான் அவள் பேச்சில். சாஷா அவன் சிரிப்பைக் கண்டு கொள்ளவே இல்லை.

                “நான் தாத்தாவோட வேண்டுகோளுக்காக தான் இந்த பொறுப்பை எடுத்துட்டு இருக்கேன்.. எனக்கு பணமெல்லாம் முக்கியமில்லை. நான் செய்யுற வேலையை நான் முழுதிருப்தியோட செய்யணும். அவ்ளோதான்…”

              “ஈவன்.. உங்க தாத்தாவுக்கும் இதுதான் விருப்பம். அவர் பணத்தை பெருசா நினைக்கல..” என்று உறுதியான குரலில் கூறினாள் சாஷா.

                “ரெண்டு பேரும் சேர்ந்து சேவை செய்ய போறிங்களா.. அதுக்கு எதுக்கு ப்ரொடக்ஷன் கம்பெனி.. தொண்டு நிறுவனம் ஏதாவது தொடங்கிடலாமே..” என்றான் அவன்.

            “அந்த ஐடியாவும் இருக்கு. தாத்தா சொன்னா செய்வேன்..” என்றாள் சாஷா.

                “தாத்தா சொன்னா எதையும் செய்வ போல..”

               “எதுவும் எனக்கு சரியா இருந்தால் செய்வேன்.. இனி யாரோட பேச்சையும் கண்ணை மூடிட்டு கேட்கிறதா இல்ல..”

               “ஏன் கேட்டதால என்ன கெட்டுப் போச்சு இப்போ..”

              “எனக்கு தூக்கம் வருது.. கொஞ்சநேரம் தூங்கட்டுமா ப்ளீஸ்..” என்று கண்களை மூடிக் கொண்டாள் சாஷா.

                  அன்று முழுவதும் இருந்த இதமான மனநிலை கெட்டுவிடுமோ என்று அச்சமாக இருந்தது அவளுக்கு. பீஷ்மனிடம் அதற்குமேல் வாதிட விரும்பாமல் அவள் கண்களை மூடிக் கொள்ள, அவளை அப்படியே விட்டால் அவன் பீஷ்மன் இல்லையே.

             “சாஷா..” என்றான் அழுத்தமாக.

                  சாஷா சோர்வுடன் கண்களைத் திறந்து பார்க்க, “இன்னும் என்ன செய்யணும் நான். என்ன எதிர்பார்க்கிற..” என்றான் பீஷ்மன்.

              “என்னை வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க.. அதுவே போதும்..” என்றாள் புரியாதவளாக.

                   பீஷ்மன் சட்டென ஏறிய உஷ்ணத்துடன் அவளைப் பார்வையிட்டவன் தன் ஆத்திரம் மொத்தத்தையும் காரின் வேகத்தில் காண்பிக்க, அதிவேகத்தில் சீறிப் பாய்ந்தது அவனது லம்போர்கினி. சாஷா காரின் வேகத்தில் மிரண்டு போனவளாக “பீஷ்மா..” என்று கத்த, அவள் குரல் அவனை பாதிக்கவே இல்லை என்பதை போலவே காரை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.

                 கார் அவன் தாத்தா வீட்டிற்கு செல்லாமல் வேறு பாதையில் செல்லவும், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க..” என்று சாஷா மீண்டும் சத்தமிட, ம்ஹூம் எதற்கும் பதிலில்லை அவனிடம்..

                  அந்த கார் சென்னை மெரினா கடற்கரையை அடைய, இன்னும் பீதியானாள் சாஷா. யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் எப்படி சமாளிப்போம் என்பதே அவள் கவலையாக இருக்க, எதைப்பற்றியும் கவலை அற்றவனாக காரை செலுத்திக் கொண்டிருந்தான் பீஷ்மன்.

                 சாஷா பயந்தது போல, அவனது கார் எங்கேயும் சட்டென அப்படி நின்றுவிடவில்லை. பீஷ்மன் சென்னையைத் தாண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தான் இப்போது. சாஷா அவனிடம் போராடித் தோற்றவளாக கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு இருக்கையோடு ஒண்டிக் கொண்டிருந்தாள்.

            வெகுநேரத்திற்குப் பின் அவன் கடற்கரையின் ஓரமாக காரை நிறுத்த, கார் நின்றதைக் கூட உணராமல் சீட்டுடன் ஒட்டிக் கொண்டிருந்தாள் சாஷா. அவள் உடல் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தது அங்கே.. பீஷ்மன் காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கிவிட, எதையும் உணராமல் கண்களை மூடிக் கொண்டு அனத்திக் கொண்டிருந்தாள் சாஷா.

              பீஷ்மன் நீண்டப் பெருமூச்சுகளை விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் அதன்பின்னரே காரில் ஏற, இதற்குள் சிறகிழந்த பறவையாகி இருந்தாள் சாஷா. எங்கோ ஒளிந்திருந்த அவளின் பயந்த முகம் மீண்டும் வந்து அவளிடம் ஒட்டிக் கொண்டிருந்தது.

               பீஷ்மன் “சாஷா..” என்று அவளை நெருங்க முற்பட, “என்னை விட்டுடு ப்ளீஸ்..” என்று முதல் நாளைப் போலவே கெஞ்சலில் இறங்கினாள் அவள்.

             பீஷ்மன் பதறியவனாக “சாஷா..” என்று அவள் எதிர்ப்பையும் மீறி அவளை அணைத்து கொள்ள, கோழிக்குஞ்சாக அவனிடம் ஒட்டிக் கொண்டாள் சாஷா.

            பீஷ்மனுக்கு அப்போதுதான் தன் தவறு உரைக்க, கொஞ்சமாக மீண்டு வந்தவளை மீண்டும் ஆரம்பநிலைக்கே தள்ளிவிட்டோமோ என்று துடித்துப் போனான் அவன்.

            “சாஷா ஒன்னுமில்லடி.. இங்கே பாரு..” என்று பீஷ்மன் அவள் கன்னம் தட்ட, அதீத பயத்தில் இருந்தவள் அவன் கைகளிலேயே மயங்கிச் சரிந்தாள். காரில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தும் சாஷா கண்விழிக்காமல் போக, வேகமாக செயல்பட்டான் பீஷ்மன்.

                 வந்த வேகத்திலேயே மீண்டும் சென்னைக்குள் நுழைந்தவன் தனது மருத்துவமனைக்கு சென்று நின்றான். பெண்ணவளை கைகளில் தூக்கிக் கொண்டவன் நேரே தனது அறைக்குள் நுழைய, அங்கே தயாராக நின்றிருந்தார் மீனலோச்சனி.

                கடும்கோபத்துடன் பீஷ்மனை முறைத்துக் கொண்டிருந்தார் அவர். அவரின் பார்வையைக் கண்டுகொள்ளாமல் “முதல்ல அவளுக்கு என்னனு பாருங்க..” என்றான் பீஷ்மன்.

                மீனலோச்சனிக்கும் சாஷாவின் உடல்நிலை முக்கியமாக இருக்க, அவளைப் பரிசோதிக்கும் வேலையில் இறங்கினார் அவர். பீஷ்மன் சாஷாவை மீனலோச்சனியிடம் ஒப்படைத்து அந்த அறைக்கு வெளியே நின்றுகொள்ள, நேரம் இரவு பத்து மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது.

                  அந்த இரவு நேரத்தில் மணி மருத்துமனைக்கு வந்து நிற்க, வந்தவன் தனியாக வராமல் சத்யாவையும் உடன் அழைத்து வந்திருந்தான். பீஷ்மன் சத்யாவைக் காணவும், பார்வையை வேறு புறம் திருப்பிக் கொள்ள, சத்யா நேராக அவனிடம் தான் வந்து நின்றார்.

                  அந்த காரிடாரில் அவர்களைத் தவிர யாருமில்லாமல் போக, பேரனின் சட்டையைப் பிடித்தவர் பொது இடம் என்றும் பார்க்காமல் அவனை அறைந்திருந்தார். மணி “தாத்தா..” என்று பதறிக் கொண்டு அருகில் வர, வஞ்சனையில்லாமல் அவனுக்கும் ஒரு அறை விழுந்திருந்தது.

               “தள்ளி நில்லுடா..” என்று மணியை தூர நிறுத்தியவர் “அப்படி என்னடா ஆத்திரம் உனக்கு.. அந்த பொண்ணைக் கொன்னுட்டுதான் விடுவியா.. அப்படி பொறுமையே இல்லாம என்னடா மனுஷன் நீ.. இதைத்தான் உனக்கு சொல்லிக் கொடுத்தோமா நாங்க.. ஒரு பெண்ணை இப்படி சித்ரவதை செய்ய யார்கிட்ட கத்துகிட்ட..” என்று தன் இயல்பை மீறி கத்திக் கொண்டிருந்தார் அவர்.

              அவனை அடித்து திட்டி ஓய்ந்தவராக, சத்யா ஒரு ஓரமாக அமர்ந்துவிட, அடுத்த அரைமணி நேரத்தில் கண்விழித்து விட்டாள் சாஷா. மீனலோச்சனியை பார்க்கவும் தான் இருக்குமிடம் ஓரளவுக்குப் பிடிபட்டுவிட, அவள் கண்கள் பீஷ்மனைத் தான் தேடியது.

              அவளுக்கு இன்னமும் அவனது வேகம் மட்டுமே மனதில் பதிந்திருந்தது. ‘அவனுக்கு என்னவானதோ’ என்ற எண்ணம் இப்போதும் பயத்தைக் கொடுக்க, அவனைக் கண்களில் காணும்வரை தன்னால் இயல்பாக முடியாது என்ற நிலையில் தான் இருந்தாள் அவள்.

              மீனலோச்சனி அவளை நெருங்கி அவள் தலையில் தனது கையை வைக்க, அவர் கையைப் பிடித்துக் கொண்டவள் “பீம்..” என்று கேள்வியாக இழுத்து நிறுத்த, அவளை அதிசயமாகப் பார்த்தார் மீனலோச்சனி. ‘இப்படியும் ஒருத்தி இருப்பாளா..’ என்று அசந்து நின்றார் அவர்…

                 

   

           

Advertisement