Advertisement

கைப்பாவை இவளோ 16

                       சாஷா கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருக்க, எப்போதும் போல அவளை நெருங்காமல், தள்ளியே நின்றிருந்தான் பீஷ்மன். சாஷா தானாகவே கண்களைத் துடைத்துக் கொண்டு எழ, என்ன ஏதென எதுவும் அவளைக் கேட்கவில்லை பீஷ்மன்.

                சாஷா “நான் கிளம்புறேன்..” என்று நிற்க, இப்போது மட்டும் கோபமாக முறைத்தான் அவளை.

                அவன் பார்வையில் லேசாக அச்சப்பட்டவள் “சாரி.. கோபத்துல தெரியாம அடிச்சுட்டேன்..” என்று தயக்கத்துடன் கூறி நின்றாள்.

                 இப்போது அவன் பார்வையில் கோபம் காணாமல் போக, அந்த இடத்தை ரசனை ஆக்கிரமித்துக் கொண்டது.

                 அதே ரசிப்புடன் “உட்காரு.. உன்கிட்ட பேசணும்..” என்றான் பீஷ்மன்.

                சாஷா அப்படியே நின்றவள் “சொல்லுங்க..” என,

         

                 “இப்போ நான் ரெண்டு அரை கொடுக்க போறேன் சாஷா. ஒழுங்கா உட்காரு..” என்றான் மிரட்டலாக.

                சாஷா “நான் வீட்டுக்கு போகணும்.. இங்கே இருக்க முடியல என்னால..” என்றாள் பாவமாக

                “போகலாம்.. நானே கூட்டிட்டுப் போய் விடறேன். இப்போ உட்காரு..” என்றான் மீண்டும்.

                சாஷா அமைதியாக அமர்ந்து கொள்ள, “நாளையில் இருந்து என்னோட ஆபிஸுக்கு வரணும் நீ. இங்கே நீ என்னவெல்லாம் செய்யணும்ன்னு நான் சொல்லி தரேன்..” என்றவன் முடிக்கக்கூட இல்லை.

                 அதற்குமுன்பே “நான் வரமாட்டேன்.. என்னால வரமுடியாது..” என்றாள் அவள்.

                 “நீ வர்றியா இல்லையான்னு நான் கேட்கவே இல்லையே.. வந்தாகணும்ன்னு சொல்றேன். ஒருவேளை நீ வராமப் போனா, நீ கொடுக்கறதா எழுதிக் கொடுத்து இருக்க டொனேஷன் அந்த பிள்ளைகளுக்கு போய் சேராது. அதை மட்டும் மனசுல வச்சுக்கோ..” என்றான் பீஷ்மன்.

                 “நீங்க ரொம்ப நல்லவர் மாதிரி பேசும்போதே யோசிச்சேன் நான்.. முதல்ல என் பிள்ளையை வச்சு மிரட்டினீங்க.. இப்போ அனாதை பிள்ளைகளை வச்சு மிரட்டுறீங்களா..” என்றாள் சாஷா.

               “ஆமா.. உன்னை மிரட்டுறது மட்டும்தான் ஒரே வேலை எனக்கு. வேற வேலை வெட்டி இருக்கா என்ன..?” என்று நக்கல் செய்தவன் “உனக்கு சொத்து வேண்டாம்ன்னு சொன்ன, அதை எப்படியோ நாலு பேருக்கு உபயோகமா இருக்கும்படி மாத்திக் கொடுத்து இருக்கேன்.. அவ்ளோதான்..”

                 “இதற்குமேல அதை பாதுகாத்து அந்த பிள்ளைகளுக்கு உதவிப் பண்றதும், பண்ணாம இருக்கறதும் உன்னோட விருப்பம்.. இதுல பீஷ்மனுக்கு ஆக வேண்டிய காரியம்ன்னு எதுவும் இல்ல. இதையெல்லாம் பண்ணிதான் உன்னை என்னோட பிடிச்சு வைக்கணுமா..”

                  “இது எதுவுமே இல்லாம இந்த நிமிஷம் உன்னை என்னோட நிறுத்திக்க முடியும். பீஷ்மனால முடியும். புரியுதா.. ஓவர் திங்கிங் பண்ணாத… அண்ட் இதுக்கும்..” என்று தன் கன்னம் தடவியவன் “நிச்சயம் ஒருநாள் பதில் சொல்வேன்..” என்றான் மிரட்டலுடன்.

                 சாஷா அவன் பேச்சில் மௌனமாகி இருக்க, “கிளம்பு..” என்றான் நிதானமாக.

                அவள் எழுந்து கொள்ளவும், “நாளைக்கு மார்னிங் ரெடியா இரு. இன்னைக்கு மாதிரி லேட் பண்ணிடாத..” என்றான் கட்டளையாக.

               சாஷாவுக்கு அப்போதைக்கு அங்கிருந்து தப்பித்தால் போதுமென்று இருக்க, அவனிடம் எதுவும் பதிலுக்கு பேசாமல் வேகமாக வெளியே வந்துவிட்டாள். வாசல்வரை வந்துவிட்டவள் அதன்பின்னரே “எப்படி செல்வது..” என்று யோசிக்க, அவள்முன் வந்து வண்டியை நிறுத்தினான் மணி.

               கார்கதவையும் திறந்துவிட, அமைதியாக காரில் ஏறி அமர்ந்தாள் சாஷா. மணியிடம் எதுவும் பேசாமல் அவள் அமைதியாக வெளியே வேடிக்கைப் பார்த்திருக்க, “கோபமா இருக்கீங்களா அக்கா..” என்றான் மணி.

                “ஏன்.. நான் எதுக்காக கோபமா இருக்கேன்னு உன் அண்ணனுக்கு அப்டேட் கொடுக்கணுமா..” என்றாள் முகத்தில் அடித்தாற் போல.

              “நீங்க போற அத்தனை ஷூட்டிங்குக்கும் உங்களோட வர்றவன் நான். ஒவ்வொரு படத்துக்கும் என்ன கஷ்டப்படறீங்கன்னு கண் முன்னாடி பார்த்துருக்கேன். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசை தகுதியே இல்லாத சிலருக்கு நீங்க தூக்கி கொடுப்பீங்க. நான் அதை வேடிக்கைப் பார்க்கவா..” என்றான் மணி.

                 “நான்தான் சொன்னேன் அண்ணன்கிட்ட.. நீங்க அவர்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்ன எதையும் இதுவரைக்கும் நான் சொன்னதில்ல. ஆனா, இந்த விஷயத்துல தான் நீங்க எதுவுமே சொல்லலையே..” என்றான் அவன்.

                சாஷா “உங்க எல்லாருக்கும் என்மேல ரொம்ப அக்கறை இல்ல..” என்று நக்கலாக வினவ, “மத்தவங்களைப் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது.. ஆனா,. என்னை உங்களுக்கு தெரியும்..” என்றான் மணி.

                 “நல்லா பேசுற மணி.. பீஷ்மனோட வளர்ப்பு இல்லையா..” என்றாள் மீண்டும்.

                “உங்களுக்கு என்னதான் பிரச்சனைக்கா.. ஏன் இப்படி பேசிட்டு இருக்கீங்க. வேணும்ன்னா ரெண்டு அடி அடிச்சிருங்க.. ஆனா, இப்படி பேசி என்னை பீல் பண்ண வைக்காதிங்க..”

                “என்னோட முதல் பிரச்சனையே உன்னோட அண்ணன்தான்..” என்றாள் சாஷா.

               “சும்மா எல்லாத்துக்கும் அண்ணனையே குறை சொல்லாதீங்க.. அன்னிக்கு ஹாஸ்பிடல்ல எப்படி இருந்தார் தெரியுமா… விட்ட அழுதே இருப்பார். உங்க மேல பாசம் இல்லாமலா அப்படி இருப்பாங்க.. “

               “நீங்கமட்டும் என்ன?? உங்களுக்கும் அண்ணனை ரொம்ப பிடிக்கும் தானே.. அப்புறம் ஏன் இதெல்லாம்.. ஒழுங்கா நம்ம வீட்டுக்கே போயிருக்கலாம் நாம… இப்படி நீங்க ஒரு இடத்துல அண்ணன் ஒரு இடத்துல நல்லாவா இருக்கு.. ஏன்க்கா இப்படி..??” என்று முதல்முறையாக அவளை உரிமையுடன் அழைத்து மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தான் மணி.

             அவனை நிறுத்தும் எண்ணம் இல்லாமல் சாஷா அவனை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்திருக்க, அவனுக்கே போதும் எனத் தோன்றியதோ என்னவோ, பேச்சை நிறுத்தி தன் சாஷா அக்காவின் முகம் பார்த்தான் மணி.

              அவளின் பார்வையில் கூச்சமாக இருக்க, “என்னக்கா..” என்றான் மீண்டும்.

              “ஒன்னுமில்ல..” என்றவள் “அதென்ன என்னை அக்கான்னு கூப்பிடற.. ஆனா, உன் பீஷ்மா அண்ணனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ற..” என்றாள் கேள்வியாக.

               “ஏன்னா, என் அண்ணனோட இருந்தாதான் நீங்க நல்ல வாழ்விங்கன்னு எனக்கு தெரியுமே..” என்றான் அவன்.

               “ஏன் உன் அண்ணன் இல்லாம என்னால வாழ முடியாதா..”

               “உயிரோட இருக்கறதெல்லாம் வாழுற கணக்குல வராதுக்கா.. சத்தியமா சொல்றேன். என் அண்ணனோட மட்டும்தான் நீங்க நல்லா வாழ்விங்க. ஏன் அவரும் அப்படித்தான். நீங்க இல்லன்னா ஒண்ணுமில்லாம போயிடுவார்..” என்று அடித்துக் கூறினான் மணி.

                 “உன் அண்ணனா..” என்று விரக்தியாக சிரித்தாள் சாஷா.

                 “நிச்சயமா சொல்றேன். நீங்க இல்லாம அண்ணனால இருக்க முடியாது. சும்மா வெளியே கெத்தா சுத்திட்டு இருக்கார்.. ஆனா, தினமும் நைட் என்னோடதானே இருக்கார். எனக்கு தெரியும்.” என்றான் மணி.

                 “இதுவும் உன் அண்ணன் சொல்லிக் கொடுத்தாரா.. என்கிட்டே இப்படியெல்லாம் பேச சொன்னாரா..”

                “நான் இப்படியெல்லாம் பேசினது தெரிஞ்சாலே என் பல்லை உடைச்சுடுவார்.. உங்களுக்கு தெரியாதா அவரை..” என்றான் மணி.

               சாஷா மெல்லியதாக சிரிக்க, அதற்குமேல் பேசாமல் அமைதி காத்தான் மணி.

                இதற்குள் வீடும் வந்துவிட, காரில் இருந்து இறங்கியவள் “தேங்க்ஸ் மணி..” என்று கூறிச் செல்ல, எதற்கென்று புரியாமல் நின்றான் மணி.

               ஆனால், சாஷா முகத்தில் புன்னகை நிறைந்து இருக்க, அவளைக் கண்ட சத்யாவே “என்னம்மா.. ரொம்ப சந்தோஷமா இருக்க போல..” என்று விசாரித்தார்.

                 அவர் சோஃபாவில் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள் “ஆமா தாத்தா..” என்றதோடு காலையில் இருந்து நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் அவரிடம் கூறி முடித்தான்.

                 சத்யா நமட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருக்க, “உங்களுக்கு முன்னாடியே தெரியுமா.. பீம் சொன்னாரா..” என்று சந்தேகித்தாள் சாஷா.

                  “உன் பீம் சொல்லல.. என் மக மீனு சொன்னா… அவளை வச்சுதான் மதர்கிட்ட பேசி இருக்கான். எனக்கு  எப்படி தெரியாம இருக்கும்…” என்றார் சத்யா.

                    “என்கிட்டே முன்னாடியே சொல்லிருக்கலாம் இல்லையா.. “என்று சாஷா கேட்க, அமைதியாக சிரித்தார் சத்யா.

                 “என் பேரன் முதல்முறையா அவனே ஒரு நல்ல விஷயம் செய்ய துணிஞ்சிருக்கான். அதை அவனே சொல்லட்டும்ன்னு நினைச்சேன்..” என்றார் அவர்.

                 சாஷா அமைதியாகவே இருக்க, “என்னம்மா..” என்றார் சத்யா.

                சாஷா தயங்கினாலும், “நீங்க எப்படி பீஷ்மனை இப்படி விட்டிங்க தாத்தா.. எல்லா விஷயத்திலேயும் சரியா இருக்கீங்க. அவரை உங்களோட வளர்ப்புன்னு சொல்றாங்க. பிறகெப்படி அவர் இப்படி…” என்று கேட்டுவிட்டாள் அவள்.

                “நீ என்ன கேட்க வர்ற புரியுது எனக்கு… ஆனா, சில விஷயங்கள் நம்மையும் மீறினது இல்லையா.. பீஷ்மன் விஷயமும் அப்படித்தான்.”

                 “சின்ன வயசுல இருந்தே பீஷ்மனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்தாச்சு. நானும் அப்போ என் மனைவியை இழந்து நின்ன நேரம், கூடவே  இருந்த பீஷ்மனை கண்டிக்கத் தோணல. என்னைவிட அவன் அம்மாகிட்ட சலுகைகள் அதிகம்.”

                  “அந்த வயசுலேயே அவன் நினைச்சதை சாதிக்கிற குணம் இருந்தது பீஷ்மன்கிட்ட. பேரன் அப்படியே தாத்தனைப் போலன்னு சிலாகிச்ச நேரங்கள் அவை. அவனும் அவனை குறை சொல்லும்படி நடந்ததே இல்லையே. படிப்பிலேயும் சுட்டி, விளையாட்டு, மத்த விஷயங்கள்ன்னு எல்லாத்திலேயும் பெஸ்ட் என் பேரன்.”

                 “ஸ்கூல் முடியவும் நான் பாரின் போறேன்னு வந்து நின்றான். பேரனைப் பிரிஞ்சிருக்க முடியாதுன்னு தடுத்துப் பார்த்தேன். வழக்கம்போல அவன் அம்மாவை சமாளிச்சு சரிகட்டிட்டான். எனக்கு இருக்கறது ஒரே பிள்ளை, நம்மகிட்ட என்ன பணமா இல்ல. என் மகனை அனுப்பி வைங்கன்னு பார்கவி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா.. நானும் மனசைத் தேத்திட்டு அனுப்பி வச்சுட்டேன்.”

             “ஆனா, அங்கேயும் அவனைத் தனிச்சு விடாம கண்காணிச்சுட்டே தான் இருந்தேன். அவனோட பழக்கவழக்கங்கள் மாறிப் போனது அங்கேதான். அளவில்லாத சுதந்திரம், கண்டிக்க வேண்டிய நாங்களும் கூட இல்லாத நிலை… அவன் வயசுக்கு அவன் நினைச்சதை செய்யத் தொடங்கினான்..”

              “அப்படியும் நான் கூப்பிட்டு கண்டிச்சேன்.. அதன்பிறகு என்கிட்டே பேசுறதே குறைஞ்சுப் போச்சு. சரி எப்படியும் இங்கேதானே வரப்போறான் பார்த்துக்கலாம்ன்னு விட்டாச்சு. ஆனா, அவன் இங்கே வந்த நேரம் எனக்கு சுத்தமா உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல படுத்தாச்சு..”

              “அப்போ என் மகளும் அடிக்கடி வந்து என்னைப் பார்க்க காத்திருக்க, பார்கவிக்கு பயம் வந்துடுச்சு. என் மகளுக்கும் ஒரு மகன் இருக்கறதால, எங்கே சொத்தெல்லாம் கையை விட்டு போய்டுமோன்னு யோசிக்கத் தொடங்கிட்டா..”

            “ஹாஸ்பிடல்ல இருந்து நான் வீடு வரவும் ஏக கவனிப்பு. முழுநேர நோயாளியா நினைச்சு கால்கூட தரையில் படாத அளவுக்கு என்னை கவனிச்சுக்கிட்டா என் மருமக. ஆனா, அதுக்கெல்லாம் பலனா, தொழிலை மொத்தமா பீஷ்மன்கிட்ட கொடுக்க சொல்லி கேட்டுக்கிட்டா..”

            “நிறைய சொல்லிப் பார்த்தேன். சங்கரன் பார்க்கட்டும், பீஷ்மன் தொழிலைக் கத்துக்கட்டும்ன்னு நிறைய சொல்லியாச்சு.. சங்கரனுக்கும் இந்த சினிமா பிடிபடாம, நிறைய நட்டமாகியிருந்த நேரம் அது. அவரை நம்பி பலனில்லை மாமா.. என் மகனால மட்டும்தான் தொழிலைக் காப்பாத்த முடியும்ன்னு பிடிச்ச பிடியில் நின்னா என் மருமக.”

Advertisement