Advertisement

கைப்பாவை இவளோ 15

               பீஷ்மனின் வருகை சாஷா எதிர்பார்த்த ஒன்று தான். வருவான் என்று தெரியும், ஆனால், இத்தனை விரைவாக வந்து நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை அவள். மணியிடம் கூறினால் விஷயம் நிச்சயம் பீஷ்மனின் காதுக்கு சென்றுவிடும் என்ற அவளது கணிப்பு தப்பவே இல்லை.

               இதோ வந்து நின்றுவிட்டானே… அதுவும் ஆற்றோரத்தில் நிற்கும் அய்யனார் சிலை போல அத்தனை முறுக்கும், ஆத்திரம் அவன் விழிகளில். சாஷாவுக்கு அவன் தோற்றம் பயம் கொடுத்தாலும், அவளும் விடுவதாக இல்லை இம்முறை.

            சத்யநாராயணன் வீட்டில் இல்லாத நேரமாக இருக்க, சாஷா வீட்டின் மாடியில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த நேரம் அவளுக்கு முன்பாக வந்து நின்றிருந்தான் பீஷ்மன். தன் கையில் இருந்த பத்திரங்களை சாஷாவின் முகத்தில் விட்டெறிந்தவன் “இதோட மதிப்பு தெரியுமாடி உனக்கு..” என்று தன்னை மீறி கத்தியிருந்தான்.

            சாஷா அவனுக்கு கொடுக்கும் நோக்கமில்லாதவளாக நிற்க, “யாரைக் கேட்டு முடிவு பண்ண நீ..” என்று கேட்டுக் கொண்டே பீஷ்மன் கோபத்துடன் சாஷாவை நெருங்க, நின்ற இடத்தில இருந்து அசையாமல் “யாரைக் கேட்கணும்..” என்று அவனை தூர நிறுத்தினாள் சாஷா.

             அவள் வார்த்தைகளில் பீஷ்மன் அசையாமல் நிற்க, “இந்த சொத்து எனக்கு தேவையே இல்லாத ஒன்னு.. தேவையில்லாத விஷயத்தோட மதிப்பு தெரிஞ்சு நான் என்ன செய்யப் போறேன்..” என்றாள் சாஷா.

              பீஷ்மன் கைவிரல்களை மூடித் திறந்து தன் கோபத்தைக் கட்டுக்குள் வைக்க, எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென நின்றாள் சாஷா.

                அவளின் பாவனையில் பெருமூச்சுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான் அவன். தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “இங்கே உட்கார்..” என்றான் அவளிடம்.

               சாஷா அவன் கைகாட்டிய இடத்தில் அமராமல் நிற்க, அவள் கையைப் பிடித்து இழுத்து அமர்த்தினான் பீஷ்மன். சாஷா அவன் செயலில் அவனை கோபத்துடன் ஏறிட, அவள் பார்வையைக் கண்டு கொள்ளாமல் “பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு..” என்றான் அடிக்குரலில்.

               சாஷா மௌனம் சாதிக்க “இந்த சொத்தையெல்லாம் உன் அம்மாவுக்கும், தம்பிக்கும் கொடுத்திட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்கப் போறதா உத்தேசமா..?? ரொம்ப கஷ்டப்பட்டு உன்னை வளர்த்து ஆளாக்கிட்டாளே அதுக்காக தூக்கி கொடுக்க போறியா உன் அம்மாவுக்கு.. அறிவிருக்காடி உனக்கு..” என்று சீறினான் பீஷ்மன்.

               அவன் பேசியது மொத்தத்தையும் விட்டுவிட்டு “வாடி, போடின்னு சொல்லாதீங்க..” என்றாள் ஆறுவிரல் நீட்டி.

              அவள் பேச்சில் “அடிங்க.. அறைஞ்சேன்னா பாரு..” என்று கையை உயர்த்தி விட்டான் பீஷ்மன்.

              ஆனால், அதற்கும் சாஷா அசையாமல் இருக்க, “என்ன உனக்கு பயந்து உன்னை இங்கே விட்டுட்டு போய்ட்டதா நினைச்சுட்டு இருக்கியா.. இல்ல, நீ என்ன செஞ்சாலும் நான் அமைதியா இருப்பேன்னு நினைச்சுட்டியா. சுயமரியாதை, சொந்த கால்ல நிற்கிறது இப்படி நிறையப் பேசின இல்ல. அந்த வெங்காயத்துக்காக தான் உன்னை விட்டு வச்சிருக்கேன்..”

                “நீ என்ன கிழிக்கப் போறன்னு நான் பார்க்கணும்னு தான் விட்டு வச்சிருக்கேன் உன்னை. இதே போல பைத்தியக்காரத்தனமா ஏதாவது செஞ்சுட்டு இருந்த, தூக்கிட்டு போயிட்டே இருப்பேன். என் தாத்தா இல்ல, யார் வந்தாலும் என்னைத் தடுக்க முடியாது. ஞாபகம் இருக்கட்டும்..” என்றான் கர்ஜனையாக

                சாஷா “எனக்கு எதைப்பத்தியும் கவலை இல்ல.. எனக்கு இதெல்லாம் தேவையும் இல்ல.. நீங்கதான் என்னை விடாம விரட்டிட்டே இருக்கீங்க..” என்றாள் குற்றம் சுமத்துபவளாக.

                “என்ன விரட்டுனாங்க உன்னை.. என்ன செஞ்சேன் நான்.. சொல்லுடி..” என்று  மீண்டும் அவள்மீது பாய்ந்தான் பீஷ்மன்.

                  “என்ன செய்யல.. இந்த சொத்தெல்லாம் நான் கேட்டேனா உங்ககிட்ட. இதையெல்லாம் வாங்கி கொடுக்க சொல்லியும் நான் கேட்கல.. இப்போ திரும்ப கொடுக்க சொல்லியும் நான் கேட்கல. உங்களை வேண்டாம்ன்னு சொன்னா அத்தனையும் என்கிட்டே தூக்கி கொடுப்பீங்களா…”

                  “என்கிட்டே கொடுத்திட்ட பிறகு நான் அதை என்ன செய்தா உங்களுக்கு என்ன..” என்று அவனுக்கு குறையாத கோபத்துடன் இரைந்தாள் சாஷா.

                  “கையில காசு இல்லாம அடுத்தவேளை சாப்பாடு கூட வாங்க முடியாது… அப்புறம் எங்கே சொந்த கால்ல நிற்கிறது.. அதற்காகத் தான் இதெல்லாம் கொடுத்தது.. நான் நல்லபடியா சொன்னா கேட்டுக்கற நிலைமையிலா நீ இருக்க.. அதுதான் பேய் பிடிச்சு ஆட்டிட்டு இருக்கே உன்னை..” என்றான் பீஷ்மன்.

                 “நான் கேட்டேனா உங்ககிட்ட. எனக்கு வாழ வழியில்லன்னு நான் சொன்னேனா..”

                “சரி சொத்து வேண்டாம்.. வேற என்ன செய்ய போற…”

                “எதுவும் செய்ய வேண்டாம்.. எனக்கு இந்த ஆடம்பர வாழ்க்கை வேண்டாம். மூணுவேளை சாப்பாடும், எதைப்பத்தியும் பயப்படாத நிம்மதியான வாழ்க்கையும், அமைதியான தூக்கமும் போதும். நான் மாசம் பத்தாயிரம் சம்பாதிச்சா கூட எனக்கு அது போதும்..”

                 “நீங்க என்ன நினைக்கறீங்க.. உங்களை வேண்டாம்ன்னு சொல்லிட்டு பெருசா எதையோ நான் சாதிக்க நினைக்கிறதா தோணுதா உங்களுக்கு. நிச்சயமா இல்ல. எனக்கு என்னோட நிம்மதி போதும். வேற எதுவுமே வேண்டாம்.” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

                  “சோ, என்னோட இருந்தா இந்த நிம்மதி கிடைக்காது உனக்கு. உன்னை பிசிக்கலாவும், மென்டலாவும் நிறைய டார்ச்சர் பண்ணியிருக்கேனோ நான். தட் மீன்ஸ் நீ மறுத்தும் உன்னோட உடலுறவோ, இல்ல உனக்கு பிடிக்காத நீ மனசால விரும்பாத எதையுமோ செஞ்சிருக்கேனோ..” என்றான் பீஷ்மன்.

                  என்ன சொல்வாள் சாஷா. அப்படி ஒன்று நடந்ததே இல்லையே. இந்த திருமணம் ஒன்றைத் தவிர எதற்குமே கட்டாயப்படுத்தியவனில்லையே… இந்த ஒரு விஷயத்தில் தானே தன் விருப்பத்தை மீறி அவன் நடந்து கொண்டது.. அவனது இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று தெரியாமல் மௌனம் காத்தாள் சாஷா.

                “நீ கேட்கிற உன்னோட குறைந்தபட்ச நிம்மதி, உன்னோட அமைதி இது எல்லாமே என்கிட்டே இருக்கு. என்கிட்டே மட்டுமே இருக்கு சாஷா. உனக்கு இது புரியுற நாள் வரும். அன்னைக்கு நீ என்னோட வருவ. அதுக்காகத்தான் உன்னை இங்கே விட்டு வச்சிருக்கேன்…”

                “உனக்கு புரியுற நாளுக்காகத் தான் நானும் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். ஆனால், என் பொறுமை எந்தளவுக்கு தாக்கு பிடிக்கும்னு எனக்கே தெரியாது.. சீக்கிரமே என்கிட்டே வந்திடு..” என்றான் மீண்டும்.

                 சாஷாவுக்கு அவன் கண்களை விட்டு பார்வையை விலக்க முடியாத நிலை. இத்தனை காதலை போலியாக ஒருவன் கண்ணில் தேக்க முடியுமா என்று தனக்குள்ளாக சந்தேகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

                  ஆனால், இளகுவதாக இல்லை அவள் மனம். “இப்போ என்ன சொல்ல வர்றிங்க. நீங்க பெரிய மனசு பண்ணி என்னை விட்டு வச்சிருக்கீங்களா… நீங்க நினைச்சா மறுபடியும் என்னை உங்க அடிமையா மாத்த முடியும்ன்னு சொல்ல வர்றிங்களா..”

                   “இதுல இருந்து நான் என்ன புரிஞ்சிக்கணும்.. உங்க மேல எந்த தப்பும் இல்லன்னு உணர்ந்து நானே உங்ககிட்ட வந்திடணுமா..” என்றாள் எகத்தாளமாக

                   பீஷ்மனும் சளைத்தவன் இல்லையே. “வந்தா நல்லாயிருக்கும்..” என்றான் இலகுவாக.

                  சாஷா கோபத்துடன் எழ, அவளை விடாமல் இழுத்து நிறுத்தியவன் “புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம்.. உனக்கு புரிய வைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.. நான் என்ன செய்யுறது..”என்று சிரித்தான் பீஷ்மன்.

                  அவன் சிரிப்பில் இன்னமும் கடுப்பானவள் “என் கையை விடு..” என்று தட்டிவிட முயல, விரல்களைப் பற்றியிருந்தவன் இப்போது இன்னும் அழுத்தமாக அவளது முழங்கைக்கு மேலாகப் பற்றினான்.

                   சாஷா விலக முற்பட, அவளைப் பற்றிக் கொண்டே எழுந்தவன் “உன்கிட்ட அமைதியா பேசறதெல்லாம் வேலைக்காகாது போல.. இப்படியே தூக்கிட்டு போய்டவா..” என்று கேட்டதோடு நிற்காமல் அவளை இருக்கைகளிலும் தூக்கியிருந்தான்.

                  சாஷா தன்னைமீறி “பீம்..” என்று அலறியவள் பயத்தில் அவன் சட்டையின் காலரைப் பற்றிக் கொண்டிருந்தாள் இப்போது… அவன் அவளை அப்படியே அந்தரத்தில் நிறுத்தி வைக்க, “கீழே இறக்கி விடுடா..” என்று கண்களை மூடிக் கொண்டு கத்தினாள் சாஷா..

                   பீஷ்மன் சிறு சிரிப்புடன் அவளை நிதானமாக இறக்கிவிட, அவனைக் கடுமையாக முறைத்தவள் அங்கு நிற்காமல் நகர, எட்டி அவள் கையைப் பிடித்து இழுத்து தன்மீது சாய்த்துக் கொண்டவன் அவள் தோளில் முகம் பதிக்க, “பீம்… எனக்கு இது பிடிக்கல.. விடு என்னை..” என்று கத்தினாள் சாஷா.

                பீஷ்மன் அவளை விடாமல் அவள் தோளில் லேசாக தன் இதழ்களைப் பதிக்க, ஒரே உதறலில் அவனை விட்டு விலகி தூர நின்றிருந்தாள் சாஷா. “உனக்கு என்னைப் பார்த்தாலே இது மட்டும்தான் தோணுமா.. இதற்கு மட்டும்தான் நானா… நீ இப்படி என்னை நெருங்கறதே பிடிக்கல எனக்கு.. நீ பக்கத்துல வந்தாலே நான் கொதிச்சுப் போறேன் பாரு.. அந்த உணர்வே பிடிக்கல எனக்கு..”

                “வாழவே வேண்டாம்ன்னு நினைக்க வைக்கிற பீம் நீ..  உன் இச்சைக்காக என்னை நெருங்காத..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கத்தியவள் வேகமாக படிகளில் இறங்கிவிட்டாள்.

                 பீஷ்மன் அங்கேயே சில நிமிடங்கள் நின்றவன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு கீழே இறங்க, ஹால் சோஃபாவில் அவன் தாத்தா அமர்ந்திருந்தார். பீஷ்மன் அப்படியே சென்றுவிடத் தான் நினைத்தான்.

                  ஆனால், சாஷாவின் செயலை இவர் எந்த வகையிலும் தடுக்கவில்லையே என்ற கோபம் மெல்ல எட்டிப் பார்க்க “இதுதான் நீங்க அவளைப் பார்த்துக்கற லட்சணமா…” என்றான் நேரடியாகவே.

                  சத்யா “என்னடா சொல்ற.. சொல்றதை முழுசா சொல்லிட்டு, பிறகு கேள்வி கேளு..” என்றார் சட்டமாக.

                    “அந்த பைத்தியக்காரி.. மொத்த சொத்தையும் அவ அம்மாவுக்கும், தம்பிக்கும் எழுதி வைக்க ஏற்பாடு பண்ண சொல்லியிருக்கா மணிகிட்ட. உங்களுக்கு தெரியுமா…” என்றான் பீஷ்மன்.

                 “அவ வேண்டாம்ன்னு முடிவு பண்ணதை யாருக்கு கொடுத்தால் என்ன??…” என்றார் சத்யநாராயணன்.

                  “சத்யா.. உனக்கு புரியுதா இல்லையா… அதெல்லாம் அவ கஷ்டப்பட்டு சம்பாதிச்சது.. அதைத் தூக்கி அந்த நாய்களுக்கு..” என்று ஆத்திரத்தில் புலம்பினான் பீஷ்மன்.

                  “அங்கேதான் நீ தப்பு பண்ற பீஷ்மா. அவ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச எண்ணத்தை நீங்க யாருமே அந்த பொண்ணுக்கு கொடுக்கல. இந்த ப்ராபர்ட்டிஸ், ஷேர்ஸ் எல்லாமே நீ அவளுக்கு கொடுத்த விலையாதான் அவ மனசுல பதிஞ்சு போயிருக்கு.”

               “இதெல்லாம் எந்த காலத்திலேயும் அவளுக்கு உபயோகப்படாது. அதனாலதான் தூக்கி கொடுக்க நினைச்சிருக்கா.. அவளுக்கு நல்லது செய்ய நினைச்சா, அவ சொல்றபடி செய்திடு..” என்றார் சத்யா.

                பீஷ்மனுக்கு அந்த நிமிடம் சாஷாவின் மனநிலை ஓரளவுக்குப் புரிந்தது. இன்னும் என்னென்ன செய்து வைத்திருக்கிறேனோ?? என்று தனக்குள் எண்ணமிட்டவன் “கிளம்புறேன்..” என்று தாத்தாவிடம் கூறிவிட்டு வெளியேறினான்.

Advertisement