Advertisement

கைப்பாவை இவளோ 14

                       பீஷ்மனின் பேச்சில் கோபம் கனன்றது சாஷாவுக்கு. “இவர் சொல்றதை எல்லாம் நான் கேட்கணும்.. ஆனா, நான் எதுவும் சொல்லக்கூடாது.. எப்போதான் திருந்துவாங்களோ..?” என்று தனக்கு புலம்பியவளுக்கு மிதுனை அப்படியே விட மனதில்லை.

              அவன்மீது பாசம் என்று இந்த கணம் எதுவுமே இல்லை. ஆனால், இந்த தேவையில்லாத தலைவலிகள் வேண்டாம் என்று தோன்றியது. அவளை முன்னிட்டு, அவளுக்காக பீஷ்மன் மிதுனை தூக்கியிருப்பது வேண்டாத வேலை அவளைப் பொறுத்தவரை.

              மிதுனின் பெயரைச் சொல்லிக்கொண்டு மீண்டும் ஒருமுறை யாரும் இந்த வீட்டின் வாசலில் வந்து நிற்பதிலும் விருப்பமில்லை சாஷாவுக்கு. பீஷ்மன் அவனை விட்டுத் தொலைத்தால் போதும் என்றிருந்தது. “இவனை அடிப்பதால் இறந்த என்பிள்ளை உயிர் பெற்று வரப்போகிறதா..” என்பதும் ஒரு காரணம்.

             வெகுநேரம் சிந்தித்தவள் சத்யநாராயணனிடம் சென்று நின்றாள். அவர் என்னவென்று கேட்க, “மிதுனை விட்டுட சொல்லுங்க தாத்தா..” என்றாள் மெல்லிய குரலில்.

             சத்யா அவளை வியப்புடன் பார்க்க, “கண்டிப்பா அவன்மேல பாசமெல்லாம் இல்லை தாத்தா.. ஆனா, எனக்கு இது பிடிக்கல. என் பேரை சொல்லி உங்க பேரன் அவனைத் தூக்கி இருப்பது பிடிக்கல. அவனைத் தேடி திரும்ப யாரும் இங்கே வந்து நிற்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன் தாத்தா.. ப்ளீஸ்.. விடச் சொல்லுங்க..” என்றாள் சாஷா.

             “நான் சொன்னா பீஷ்மன் கேட்பான்னு தோணுதா உனக்கு.. ஏற்கனவே உன்னை என்னோட கூட்டிட்டு வந்த கோபத்துல இருக்கான். நிச்சயமா நான் சொல்றதை கேட்கமாட்டான்…” என்று சிரித்தவர் “ஏன் நீயே பேச வேண்டியது  தானே..” என்றார் சாதாரணமாக.

             அதற்கும் “ஏற்கனவே பேசிட்டேன்..” என்று சாஷா பதில் கொடுக்க, அவளை சிறு அதிர்ச்சியுடன் ஏறிட்டார் சத்யா.

             அவர் பார்வையில், “என்னோட முடிவுகளை மட்டும் நான் எடுக்கணுமாம். அவர் என்ன செய்யணும்ன்னு நான் சொல்லக்கூடாதாம்..” என்று குற்றம்சாட்டினாள் சாஷா.

             “நியாயம்தானே..” என்று தாத்தா பேரனுக்கு ஒத்துப்பாட, “எது நியாயம்..” என்று கொதித்தாள் சாஷா.

             ஆனால், மறுநொடியே “நீங்க அவரோட தாத்தா தானே.. வேற எப்படி யோசிப்பிங்க..” என்றுவிட்டாள் அமைதியாக.

             சத்யா அவள் பேச்சில் சிரித்தவர் “எதை வச்சு பீஷ்மன் பேசுறது தப்புன்னு சொல்ற நீ..” என்று  வளர்த்தார்.

              “நீங்க எப்படி தப்பில்லன்னு சொல்றிங்க. எனக்கான அத்தனை முடிவுகளையும் உங்கப் பேரன் எடுத்தார் இல்ல. அப்போ நான் அமைதியா தானே இருந்தேன்.. ” என்று கோபம் குறையாமல் கேட்டாள் சாஷா.

              சத்யா சிரிப்பு மாறாமல் “அப்போ என் பேரன் உன்னோட தானே இருந்தான்..” என்றார்…

              சாஷா முழிக்க, “என் பேரன் உனக்கான அத்தனை முடிவுகளையும் எடுத்தப்போ, அவன் உனக்காக உன்னோட இருந்தான். அதை உன்னால மறுக்க முடியாது…. ஆனால், இப்போ நிலைமை அப்படி இல்லையே.. நீதான் மொத்தமா அவனை வேண்டாம்ன்னு சொல்லிட்டியே. அவனோட வாழவே முடியாதுன்னு சொன்னதும் நீதான்..”

               “அப்புறம் அவனுக்கான முடிவை நீ எப்படி எடுப்ப.. இது எப்படி நியாயமாகும்..” என்றார் சத்யா.

              சாஷா “அப்போ மிதுனை தூக்கினது யாருக்காக. அது மட்டும் சரியா..?” என, “நீ ஏன் அவன் உனக்காக செஞ்சதா நினைக்கிற.. அவன் பிள்ளைக்காக அவன் செய்திருக்கலாம் இல்லையா..” என்றார் சத்யா.

                “பிள்ளையா.. கருவிலேயே அழிக்க சொன்னவர் உங்க பேரன்..”

               “இருக்கலாம்.. ஆனா, அந்த பிள்ளைக்காக உன்னை கல்யாணம் செய்யவும் முடிவெடுத்தான். அதை உன்னால மறுக்க முடியாது..” என்று அடித்துப் பேசினார் சத்யா.

                 “நான் அவர் கைப்பிடியிலேயே இருக்கனும்ன்னு என்னை கல்யாணம் பண்ணிகிட்டார் தாத்தா.. மாத்தி சொல்லாதீங்க..”

                 “அப்படியா.. அதுக்கு முன்னாடி நீ பீஷ்மனோட கைப்பிடியில இல்லையா.. உனக்கு அப்படி தோணுதா..” என்று கேள்வியாக அவளை நோக்கினார் சத்யா.

                சாஷா மௌனமாக, “எப்பவும் நீ பீஷ்மனோட பிடியிலதான் இருந்திருக்க சாஷா. சமீபமாகவும் அவன்தான் உன்னை விலக்கி நிறுத்தியிருந்தான்.. நீ அவனை பிரிய நினைச்சதே இல்ல. அப்படியிருக்க, கல்யாணத்துக்கான அவசியம் என்ன…” என்றார் மீண்டும்.

                “இது உங்க விஷயம் நீங்க ரெண்டு பேரும்தான் பேசி முடிவெடுக்கணும். நீ தைரியமா இருக்க நினைக்கிறது, சுயமா வாழ நினைக்கிறது அத்தனையும் சரிதான். ஆனா, பீஷ்மனோட இருந்து இதையெல்லாம் செஞ்சிருக்கணும் நீ.. அவனோட இருந்து அவனுக்கு உன்னை உணர்த்தி இருக்கணும்… “

                 “இப்பவும் பீஷ்மன் அவன் தப்பை உணருவதற்கான வாய்ப்பை நீ அவனுக்கு கொடுக்கவே இல்ல. அதனாலதான் உன்னை இப்படி பேசி இருக்கான். அவன் செஞ்சதோ, இப்போ செய்றதோ எதுவுமே தப்புன்னு இன்னும் அவனுக்கு புரியவே இல்ல..”

                 “அவனுக்கு புரியுற வரைக்கும், நிச்சயமா அவன் உன்னைப் புரிஞ்சிக்க போறதில்ல..” என்று முடித்தார் சத்யநாராயணன்.

                 சாஷா அவரின் பேச்சை முழுவதுமாக மனதில் ஏற்றிக் கொண்டாலும், “பீஷ்மன் வேண்டாம்..” என்ற எண்ணம் மாறவே இல்லை. எனவே உடனடியாக அவருக்கு பதில் எதுவும் கொடுக்கவே இல்லை அவள்.

                 சத்யா அவளின் மௌனத்தில் “மிதுனை நானே கூட்டிட்டு வரேன்.. இனி பீஷ்மன் அவனைத் தொடக்கூடாது ன்னு சொல்லி வைக்கிறேன்.. ஆனா, ஒரு கண்டிஷன்..” என்று நிறுத்தினார்.

                 “என்ன.. உங்கப் பேரனோட சேர்ந்து வாழணுமா..” என்றாள் சாஷா… மெல்லிய கோபம் வேறு விழிகளில்.

                   சத்யா சிரித்தபடியே “இப்போதானே சொன்னேன். உங்க விஷயம் நீங்கதான் முடிவு செய்யணும். இது என்னோட விஷயம்.. என் தொழிலைப் பத்தி..” என்றார்.

                “புரியலையே..” என்று முழித்தாள் சாஷா.

  

                “மிதுன் விஷயத்தை நான் பார்த்துக்கறேன். அதற்குப்பதிலா, என்னோட ப்ரொடக்ஷன் கம்பெனியை நீ பார்த்துக்கணும். முடியுமா..?” என்றார் அவர்.

                “அது எப்படி முடியும்..”

                “ஏன் முடியாது… உனக்கு இது புதுசு இல்லையே..”

                 “இல்லதான்.. ஆனா, உங்க கம்பெனியை உங்க பேரன் பார்த்துட்டு இருக்கார் தானே…”

                 “ஆமா.. ஆனா, எனக்கு அதுல உடன்பாடு இல்ல. அவன் அவனோட தொழிலைப் பார்க்கட்டும்.. என்னோட வேலையை நான் பார்த்துக்கறேன். என் இடத்துல இருந்து நீ கவனிச்சுக்கோ..” என்றார் சத்யா.

                  “அதுதான் ஏன்.. என்ன அவசியம் இதுக்கு..” என்று தயக்கத்துடனே கேட்டாள் சாஷா. தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று வெகுவாக தயங்கியது அவள் குரல்.

                   “நீ தைரியமாகவே கேட்கலாம். தப்பில்ல… என் மருமகளுக்கு நான் அவ மகன் வாழ்க்கையை கெடுத்துட்டதா ஒரு எண்ணம் இருக்கு… நேரடியா சில முறை என்கிட்டே சொல்லியும் இருக்கா. இந்த வயசான காலத்துல எனக்கு ஏன் அந்த கெட்ட பெயர்.. என் வேலையை நானே செய்துக்கறேன்..”

                  “நீ செய்வியா.. ஒத்துக்கறியா என்னோட டீலுக்கு.. உனக்கு என்ன சம்பளமோ அதை சரியா கொடுத்திடுவேன்..” என்று அவளை யோசிக்கவே விடாமல் பேசினார் சத்யா. இறுதியாக அவள் சரியென்று கூறும்வரை அவளை விடவே இல்லை அவர்.

                  சொன்னது போலவே, அன்று மாலையே மிதுனை பீஷ்மனின் இடத்தில இருந்து மீட்டிருந்தார் சத்யா. கூடவே பீஷ்மனிடமும் “இனி மிதுனைத் தொடக்கூடாது..” என்று கடுமையாக எச்சரித்து வந்திருந்தார்.

                  அவரின் செயல் சாஷாவுக்கு நிம்மதியாக இருக்க, அடுத்தநாள் காலையே அவள் நிம்மதிக்கு வேட்டு வைத்தார் சத்யா. காலையில் உணவு நேரத்திற்கு அவள் கீழே வர, “சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு சாஷா.. நாம கம்பெனிக்கு போவோம்..” என்றார் பெரியவர்.

                 “தாத்தா இன்னிக்கே போகணுமா..” என்று சாஷா அதிர்ந்து நின்றாள்.

                 “அட என்னம்மா நீ. போறதுன்னு முடிவாகிருச்சு. உடனே போக வேண்டியது தானே..கிளம்பு.. கிளம்பு..” என்றவர் ஒரே பிடியாக அவளைக் கம்பெனிக்கும் அழைத்துச் சென்றுவிட்டார்.

                இவர்கள் சென்ற நேரம் பீஷ்மன் அலுவலகத்தில் இல்லை. அவன் காலையில் இருந்தே வரவில்லை என்று விவரம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சாஷாவும், சத்யனும் உள்ளே நுழைந்த இருபது நிமிடங்களில் வந்து சேர்ந்திருந்தான் பீஷ்மன்.

             தன் அறையில் அமர்ந்திருந்த சாஷாவை ரசனையாக ஒரு நொடி கூர்ந்தவன் அடுத்த கணமே பார்வையை மாற்றிக் கொண்டான். அவன் தாத்தா சோஃபாவில் அமர்ந்திருக்க, அவரையும் ஒரு பார்வை பார்த்து தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான் அவன்.

             மீண்டும் ஒருமுறை சாஷாவைப் பார்த்தவன் “சொல்லுங்க தாத்தா.. என்ன இந்த பக்கம்..” என்றான் தாத்தாவிடம்.

             “ஏன்.. வரக்கூடாதா..” என்றார் சத்யா

            “எப்பவும் வர்றது இல்லையே.. அதனால கேட்டேன்..”

             “இப்போ வரவேண்டிய அவசியம் வந்திருக்கு..”

             “என்ன அவசியம் வந்துச்சு இப்போ.. அதுவும் எனக்கு தெரியாம..”

             “அவசியம்தான்.. இனி என்னோட கம்பெனி வேலையை நானே பார்த்துக்கறேன் பீஷ்மா.. நீ உன்னோட தொழிலைப் பாரு.” என்றார் பெரியவர்.

              “ஓஹ்..” என்று நக்கலாக புருவத்தை ஏற்றி இறக்கியவன் “எப்படி தினமும் ஆபிஸ் வருவீங்களா..” என்றான் நக்கலாக.

               “என் இடத்துல இருந்து சாஷா கவனிப்பா.. ” என்றார் சத்யா.

               பீஷ்மனின் பார்வை கூர்மையாக “என் தொழிலை பார்த்துக்க இவ யாரு.. இவகிட்ட கம்பெனியை தூக்கி கொடுத்திட்டு நான் வெளியே போகணுமா… நல்ல கதையா இருக்கே..” என்று சிரித்தான் அவன்.

               “எது உன்னோட தொழில்.. இது என்னோட சொந்த உழைப்பு பீஷ்மா.. இதை கொடுக்க முடியாதுன்னு நீ சொல்ல முடியாது..”

              “எப்போ உங்களால பார்க்க முடியாம என் கையில கொடுத்தீங்களோ, அப்போவே இது என்னோட பிசினஸ்.. இதை அப்படியெல்லாம் தூக்கி கொடுக்க முடியாது.. கிளம்புங்க..” என்றான் பீஷ்மன். கொஞ்சம்கூட தயவு தாட்சன்யமில்லை அவன் குரலில்.

              சத்யா “நிச்சயமா இதை என்னால அனுமதிக்க முடியாது. இங்கே நீ அடிக்கிற கூத்தெல்லாம் எனக்கு தெரியாது நினைக்கிறியா.. ஒழுங்கா நான் சொல்றதை கேளு.” என்று அதட்ட, சட்டையே செய்யாமல் அமர்ந்திருந்தான் பேரன்.

             சத்யா “இந்த கம்பெனியோட நிர்வாகம் இனி சாஷா கையால தான். நீ இந்த விஷயத்துல இனி எதுவும் பேசக்கூடாது..” என்று மறுக்கமுடியாத குரலில் கட்டளையிட,  அவரை அழுத்தமாக பார்த்திருந்தான் பீஷ்மன்.

              “என்ன உரிமையில இங்கே வந்து உட்கார்ந்திருக்கா இவ… நான் வேண்டாம், என் பிசினஸ் மட்டும் வேணுமா…” என்றவன் சாஷாவை கடுமையாக முறைத்தான்.

               “அவ உரிமையில இங்கே வரல. சம்பளத்துக்கு வேலைக்கு வந்திருக்கா…” என்றார் சத்யா.

              “ஓஹ்.. மேடம் வேலைக்கு வந்திருக்காங்களா..” என்று இழுத்து நிறுத்தியவன் “நீங்க கிளம்புங்க.. நான் ட்ரெயின் பண்ணிக்கறேன்..” என்றான் சட்டமாக

               சத்யா அவனை முறைத்தவர் “நீ என்னடா அவளுக்கு சொல்லிக் கொடுக்கறது.. முதல்ல கிளம்பு இங்கேயிருந்து.. அதெல்லாம் அவ பார்த்துப்பா.. ஏதாவது சந்தேகம் இருந்தால், நான் சொல்லி தருவேன்..” என்று அவனை விரட்டினார் சத்யா..

              தாத்தாவை முறைத்துக் கொண்டே எழுந்தவன் “வாழ்த்துக்கள் சாஷா மேடம். வேலை பார்க்கிறதுன்னு முடிவாகிடுச்சு… உங்க வேலைகளையும் சேர்த்துப் பாருங்க..” என்றான் கிண்டலுடன்…

             சாஷா புரியாமல் விழிக்க, “உன் பேர்ல ரெண்டு ப்ரொடக்ஷன் கம்பெனி இருக்கு… சென்னைக்குள்ள ஒரு மால் இருக்கு.. இது போக அங்கங்கே சில ப்ராபர்ட்டிஸ் இருக்கு. எல்லாமே ஷூட்டிங்கிற்கு ரென்ட்க்கு விட்டுட்டு இருந்தேன்..”

             “இதுவரைக்கும் இதெல்லாம் நான் பார்த்துட்டு இருந்தேன்.. இப்போதான் மேடம் “பீஷ்மா வேண்டாம்…”ன்னு சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களே.. இனி அதையும் நீங்களே பார்த்துக்கோங்க..” என்றான் சிரிப்புடன்.

              “உங்களோட எல்லா ப்ரோபர்டி டீடைல்ஸும் ரெண்டு நாள்ல உங்க கைக்கு வந்திடும்..” என்று அவளை அச்சமூட்டியவன் “வாழ்த்துக்கள் உங்களோட முடிவுகளை நீங்களே எடுக்கிறதுக்கு..” என்றான் சிரித்துக் கொண்டே.

              சாஷா அவனது இத்தனைப் பேச்சுகளுக்கும் எதுவுமே பதில் கொடுக்காமல் நிற்க, சத்யா பேசினார். “நீ செய்யுறது சரியில்ல பீஷ்மா.. இது அவளை பழிவாங்குற வேலை..” என்றார் அவர்.

               “நிச்சயமா பழிதான் வாங்கறேன்.. என்னை வேண்டாம்ன்னு சொன்னவதானே இவ.. இவளுக்காக நான் ஏன் பார்க்கணும்..”

                “இதை சொல்ல வெட்கமா இல்லையா உனக்கு..”

                “சத்தியமா இல்ல..” என்றான் பேரன்.

                அதுவரை வாய்  திறக்காமல் இருந்தவள் “நீங்க சொல்றது சரிதான். எனக்காக நீங்க ஏன் கஷ்டப்படணும்.. சொன்னபடி எல்லா டாக்யூமெண்ட்ஸும் கொடுத்து விட்ருங்க.. அதை என்ன செய்யணும்ன்னு நான் முடிவு பண்ணிக்கறேன்..” என்றாள் அவள்.

                அத்துடன் பேச்சு முடிந்தது என்பதைப் போல, “கிளம்புவோம் தாத்தா..” என்றவள் அங்கு நில்லாமல் வேகமாக நடக்க, அவள் கண்ணீரை அடக்குவது புரிந்தது பீஷ்மனுக்கு.

        ஆனாலும், மனமிறங்கவில்லை அவன். அவள்மீதான கோபம் அப்படியே இருந்தது. “என்னை வேண்டாம் என்பாளா..” என்பதே முன்நின்றது இப்போதும்.

சத்யா பேரனை முறைத்து நிற்க, “என்ன… அதுதான் பேத்தியோட கூட்டணி போட்டு இருக்கீங்க இல்ல.. கிளம்புங்க..” என்றான் அவரிடமும்.

           சத்யநாராயணன் பேரனை முறைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து காருக்கு வர, கல் போன்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள் சாஷா. அனேகமாக அழுது கொண்டிருப்பாள் என்று நினைத்துதான் அவர் வந்தது. ஆனால், ஏதோ முடிவெடுத்துவிட்ட உறுதியுடன் அமர்ந்திருந்தாள் அவள்.

           அவள் முகத்தைப் பார்த்த சத்யா அவளிடம் எதுவும் பேசாமல் அவளை அமைதியாக விட, அடுத்த இரண்டு நாட்களும் யோசனையிலேயே கழித்தாள் அவள். மூன்றாம் நாள் காலை பீஷ்மனின் உதவியாளன் வந்து பத்திரங்களை அவளிடம் நீட்ட, மணியைத் தான் அழைத்தாள் சாஷா.

            அவன் வரவும், அவனிடம் சில விஷயங்களை கூறி, அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள சொல்லி அவனை அனுப்பி வைத்தாள். மணி கிளம்பிய ஒருமணி நேரத்தில் பீஷ்மன் வந்து நின்றான் அவள்முன்.

Advertisement