Advertisement

கைப்பாவை இவளோ 13

                     பீஷ்மனுக்கு சொந்தமான அந்த மாலின் மொட்டை மாடியில் வெயிலில் அமர்த்தப்பட்டிருந்தான் மிதுன். இன்றுதான் என்று இல்லாமல், சாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தில் இருந்தே அங்குதான் இருந்தான் அவன்.

                  மணி அவனை சென்னை முழுவதும் அவனைத் தேடி கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் மிதுனை தூக்கியிருந்தான் பீஷ்மன். தூக்கியதோடு நிற்காமல் அவனது மொத்த ஆத்திரத்தையும் அவன்மீது காட்டியிருக்க, இன்னும் உயிர் மட்டும்தான் ஒட்டிக் கொண்டிருந்தது மிதுனின் உடலில்.

                  மரணவேதனை என்பதை முதல்முறையாக அனுபவித்துக் கொண்டிருந்தான் மிதுன். இத்தனைக்கும் அவன் உடலில் பெரிதான காயங்கள் கூட இல்லை. ஆனால், உடலின் ஒவ்வொரு அணுவிலும் வலி தெறித்தது. இந்த வேதனைக்கு மரணமே மேல் என்று நினைக்கும் நிலையில் அவனை நிறுத்தியிருந்தான் பீஷ்மன்.

                  நான்கு நாட்களாக அவனுக்கு ஒவ்வொரு நொடியும் மரணத்தை கண்முன் காட்டிக் கொண்டிருந்தான் பீஷ்மன். இதில் மணிக்கும் அவன் இருப்பிடம் தெரிந்து போக, நேற்று முழு நாளும் அவன் பங்கிற்கு நான்கு போட்டிருந்தான்.

                  வேளை தவறாமல் உணவு கொடுத்தாலும், இருந்த இடத்திலிருந்து எழ விடாமல் அவனை சித்ரவதை செய்து கொண்டிருந்தான் மணி. துளி உறக்கமில்லாமல், உடலைத் தரையில் சாய்க்க விடாமல் அமர்த்தி வைத்திருந்தான் அவன். சாஷாவின் கண்ணீர் முகம் இன்னும் மணிக்கு கண்ணிலேயே இருக்க, அத்தனைக்கும் சேர்த்து திருப்பிக் கொண்டிருந்தான் அவன்.

                  இன்று காலை பீஷ்மனே நேரில் வந்து மணியை இழுத்துச் சென்றிருக்க, அதன்பின்பு தான் சற்று நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான் மிதுன். ஆனால், இந்த நிம்மதி நீண்ட நேரம் நிலைக்காது என்பதும் தெரியும் அவனுக்கு. பீஷ்மன் எந்த எல்லைக்கும் செல்வான் என்று தெரிந்தும் சாஷாவை தொட்டது இப்போது முழு முட்டாள்தனமாக பட்டது.

                   இவன் நிலை இப்படியிருக்க, அவன் தாயோ மகனைக் காணாத தவிப்பில் நான்கு நாட்கள் கழித்து மகனைத் தேட தொடங்கியிருந்தார். அவன் நண்பர்களிடம் விசாரித்ததில் அவன் சாஷாவைத் தேடிச் சென்றது தெரிய வர, இதற்குமேல் பொறுப்பதாக இல்லை மதுரிமா.

                  “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்… என் மகனைக்கூட என்னுடன் விடமாட்டாளா..” என்று ஆத்திரம் எல்லைமீற, சாஷாவைத் தேடிக் கிளம்பிவிட்டார் மதுரிமா. அவர் விசாரித்ததில் சாஷா பீஷ்மனின் தாத்தா வீட்டில் இருப்பது தெரியவர, சத்யநாராயணனின் வீட்டிற்கே சென்று நின்றார் அவர்.

                  ஆனால், அங்கும் வாசலில் மணி காவலுக்கு நிற்க, வாசலைத் தாண்டி மதுரிமாவை உள்ளேயே அனுமதிக்கவில்லை அவன். ஒரே பிடியாக “வெளியே போங்க..” என்றான் அவன்.

                  மதுரிமாவுக்கு அது பெருத்த அவமானமாகிப் போக, “என் வீட்டு வேலைக்காரன் நீ.. என் பொண்ணைப் பார்க்க நான் உன்கிட்ட அனுமதி கேட்கணுமா.. தள்ளி நில்லுடா..” என்று கத்தினார் அவர். அவரின் உரத்த குரல் வீட்டிற்குள்ளும் கேட்க, தன் அறையில் இருந்து வெளியே வந்தார் சத்யநாராயணன்.

                  ஆனால் அதற்குள் மணி “நீங்க அம்மாவா… ஆம்பளையா பொறந்து இருந்தா உங்களுக்கு பேரே வேற.. மேடத்துக்கு அம்மான்னு எல்லாம் வெளியே சொல்லிட்டு திரியாதிங்க.. அவங்களுக்கு தான் அசிங்கம்.. முதல்ல வெளியே போங்க..” என்று அவரை விரட்டினான் அவன்.

                  மதுரிமா அப்போதும் அடங்காமல் தன் கையை உயர்த்த, அவர் கையை அந்தரத்திலேயே நிறுத்தியிருந்தான் மணி.

                   “நான் உங்கவீட்ல வேலை செஞ்சேன் தான். உங்ககிட்ட வேலை செய்யல.. ஞாபகம் இருக்கட்டும். என் பொறுமையோட அளவு என்னன்னு எனக்கே தெரியாது. உங்க பேச்சு என் மண்டைக்கு ஏறுச்சு, பெரியவங்க, பொம்பளை எதையும் யோசிக்கமாட்டேன்.. மரியாதையா சொல்லும்போதே கிளம்பிடுங்க..” என்று கடுமையாக எச்சரித்தான் மணி.

                   இன்னமும் அவர் கையையும் அவன் விடாமல் இருக்க, அவனுக்கு பின்னால் சத்யநாராயணன் இறங்கி வருவதைக் கவனித்துவிட்டார் மதுரிமா..

                    “ஐயோ.. என் நிலைமை இப்படியா ஆகணும்.. பெத்த பொண்ணை பார்க்க நான் யார் யார்கிட்டேயோ கெஞ்சிட்டு நிற்க வேண்டி இருக்கே. என் மகளை நான் பார்க்க கூடாதுன்னு சொல்றானே..” என்று அடுத்த நாடகத்தை தொடங்கியிருந்தார் அவர்.

                 சத்யா “என்ன மணி.. என்ன சத்தம்.. ” என்று ஏதும் அறியாதவர் போல் மணியிடம் கேட்டு நிற்க,

                 “அதெல்லாம் ஒண்ணுமில்ல ஐயா.. நீங்க உள்ளே போங்க..” என்றான் மணி.

                “எதுடா ஒன்னுமில்ல.. நான் என் மகளை பார்க்கணும் ஐயா.. என் மக உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல இருந்துட்டு வீட்டுக்கு வந்திருக்கா.. அதைக்கூட எனக்கு யாரும் சொல்லாம விட்டுட்டாங்க.” என்று சத்யநாராயணனிடம் குற்றம் சொன்னார் மதுரிமா.

                  “நியாயம்தானே மணி. அவங்க மகளைப் பார்க்க அவங்க வந்திருக்காங்க. தப்பில்லையே…” என்றவர் “கந்தா..” என்று வீட்டினுள் பார்த்து குரல் கொடுத்தார்.

                   அந்த வீட்டின் சமையல் ஆள் கந்தன் வந்து நிற்க, “சாஷாவைக் கூப்பிடு…” என்றார் அவனிடம்.

                  மணி “ஐயா..” என்று அப்போதும் ஆட்சேபிக்க, “நீ கூப்பிடு கந்தா..” என்று கட்டளையிட்டார் அவர். மணியையும் அதட்டலாக ஒரு பார்வை பார்க்க, அதற்குமேல் அவரிடம் பேச முடியாமல் அமைதியாக நின்றான் மணி.

                  கந்தன் சென்று சாஷாவிடம் விவரம் தெரிவிக்க, அமைதியாக கீழே இறங்கி வந்தாள் அவள். வாசலில் தன் தாய் நிற்பது தெரிய, எதற்கும் தயாராகத் தான் வந்திருந்தாள்.

                  சத்யநாராயணன் சாஷாவைக் காணவும் “உன் அம்மா உன்னைப் பார்க்க வந்திருக்காங்க சாஷா.. பேசிட்டு வா..” என்று வீட்டிற்குள் நுழைந்து விட்டார். வீட்டின் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டவர் நிதானமாக அதைப் பார்வையிட தொடங்கினார்.

                  உண்மையில் அவர் இருக்கும் தைரியத்தில் தான் சாஷா கீழே இறங்கி வந்தது. ஆனால், அவர் தன் போக்கில் உள்ளே செல்லவும் அவளின் அடித்தளம் லேசாக ஆட்டம் கண்டது. ஆனால், அவர் அறைக்கு செல்லாமல் ஹால் சோஃபாவில் அமர்ந்து கொள்ளவும் மீண்டும் நிமிர்ந்து நின்றாள் அவள்.

                 மதுரிமாவிடம் “என்ன விஷயம்..” என்று ஒட்டாத குரலில் கேட்டு வைத்தாள் சாஷா.

                 “சாஷாம்மா… என்னடா உனக்கு.. என்ன ஆச்சு உன் உடம்புக்கு.. எதுக்காக ஹாஸ்பிடல் போயிருந்த..” என்று கேட்டுக் கொண்டே அவர் மகளின் கையை பிடிக்க முற்பட, இரண்டடி பின்னால் தள்ளி நின்றாள் சாஷா.

                 “எதுக்காக இங்கே வந்திங்க..” என்று மீண்டும் அவள் கேட்க, “சாஷா..” என்று அதிர்ந்தவராக காட்டிக் கொண்டார் மதுரிமா.

                  ஆனால், அவரது நாடகத்திற்கெல்லாம் இடமே கொடுக்காமல் “எனக்கு உங்களை தெரியும். உங்களுக்கும் என்னைத் தெரியும். இந்த ட்ராமா எல்லாம் வேண்டாம். என்ன விஷயம் சொல்லுங்க. இல்ல முடியாதுன்னு சொன்னா, கிளம்புங்க..” என்று நிமிர்வுடன் கூறிவிட்டாள் சாஷா..

                  “நான் உன் அம்மாடி..” என்று மதுரிமா மீண்டும் தொடங்க, “வெளியே சொல்லாத…” என்று முடித்தாள் சாஷா.

                   மதுரிமாவிற்கே அலுத்து போனதோ என்னவோ, அவரின் சுயம் வெளிப்படத் தொடங்கியது அந்த இடத்தில்.  “என்னடி கெஞ்சினா மிஞ்சுவியா… புதுத்தாலி கட்டிக்கிட்ட மிதப்பா.. நாளைக்கே அவன் விரட்டிவிட்டா என் வீட்டுக்கு தான் வந்து நிற்கணும்..” என்று அடிக்குரலில் சீறினார் மதுரிமா.

                “இதுதான் நீ..” என்று ஒரு ஏளனச் சிரிப்புடன் அவரை ஏறிட்டவள் “உன் வீடா.. அது எங்கே இருக்கு..” என்று நக்கல் செய்தாள்.

                 மதுரிமா அவளை முறைத்து நிற்க, “என்னோட வீடு அது… நான் அங்கே வந்து நிற்க உன்னோட அனுமதி எனக்கு தேவையில்ல…புரியுதா..” என்று அதட்டலாக கேட்டவள் “எதுக்காக இங்கே வந்த..” என்றாள் மரியாதையைக் கைவிட்டு.

                அவளின் இந்த அதட்டல் குரல் மதுரிமாவிற்கு புதிதாக இருக்க, தன் மகளுக்கு இந்த தொனியில் பேச வரும் என்பதே அன்று தான் தெரிய வந்தது அவருக்கு.

                 ஆனால், இதற்கெல்லாம் அசரும் ஆளா அவர். “என்னடி உன் வீடு… நான் இல்லாம இதெல்லாம் வந்துடுச்சா. நீ இன்னைக்கு இந்த நிலையில இருக்கவே நாந்தான் காரணம். ஏன் இன்னைக்கு புருஷன்னு ஓட்டிட்டு இருக்கியே.. அவனை உனக்கு பிடிச்சு கொடுத்ததே நாந்தான்… மறந்து போச்சா…” என்று விஷத்தைக் கக்கினார் மதுரிமா.

                  “கடைசியா ஒத்துக்கிட்ட..” என்று விரக்தியாக சிரித்தவள் “பணத்துக்காகத் தானே அவனோட அனுப்பி வச்ச.. அதுதான் நீ நினைச்சதை விட அதிகமாகவே கொட்டிட்டேனே.. இன்னும் ஏன் இங்கே வந்து நிற்கிற.. வெளியே போ.” என்றாள் ஆணையாக.

                  “என்னையே வெளியே போக சொல்றியா.. நீ எப்படி நிம்மதியா வாழுறன்னு நான் பார்க்கிறேன்… என்ன..??? பீஷ்மா தாலி கட்டிட்டான், அவன் பொண்டாட்டிங்கிற நினைப்புல பேசிட்டு இருக்கியா… உன்னை மாதிரி தினம் பத்து பேரைப் பார்க்கிறவன் அவன். அவனை நம்பி என்னை எதிர்த்து நிற்க நினைக்கிறாயா… உன்னை திரும்ப என் கால்ல விழ வைக்கிறேன் பாருடி.”

                   “அவனோட வாழ்ந்ததுப் போதும்ன்னு நீ என்னைத் தேடி வருவ. நான் சொல்றபடி கேட்டு, என் இஷ்டத்துக்கு உன்னை ஆட்டி வைப்பே..” என்று அவர் வார்த்தையை முடிக்கும் முன்பே தாய் என்று பாராது கைநீட்டி இருந்தாள் சாஷா.

                    மதுரிமா உச்சகட்ட அதிர்ச்சியுடன் தள்ளாட, “இந்த அடி உனக்கு எப்பவும் ஞாபகம் இருக்கணும். வாழ முடியாத நிலைன்னு ஒன்னு வந்தா செத்து ஒழிவேனே தவிர்த்து உன்கிட்ட வந்து நிற்க மாட்டேன். வெளியே போ..” என்று மதுரிமாவைப் பிடித்து தள்ளியிருந்தாள் சாஷா.

                   ஆவேசத்துடன் அவள் தள்ளி விட்டதில் மதுரிமா தரையில் விழுந்து கிடக்க அப்போதும் அவர் வாய் அடங்கவே இல்லை. “அப்படி ரோஷமா இருக்கறவ என் மகனை எதுக்காகடி தூக்க சொன்ன.. என் மகனை என்னோட அனுப்பி வைக்க சொல்லு..” என்று கூச்சலிட, மணியைத் திரும்பி முறைத்தாள் சாஷா.

                 அவள் பார்வையின் உஷ்ணத்தில் “பீஷ்மா அண்ணா..” என்று மெல்லிய குரலில் முனகினான் மணி.

                அவனிடமே “இவங்களைத் தூக்கி வெளியே போடு. இனி எந்த காரணத்துக்காகவும் இவங்க இந்த வீட்டுக்கு வரக்கூடாது..” என்றாள் ஆணையாக.

                 சாதரணமாகவே ஆடும் மணிக்கு அந்த வார்த்தைகள் சலங்கை கட்டிவிட, “கண்டிப்பா மேடம்.. நீங்க உள்ளே போங்க.. நான் பார்த்துக்கறேன்..” என்று சாஷாவை வீட்டிற்குள் அனுப்பி வைத்தான் அவன். சாஷா உள்ளே சென்ற மறுநிமிடம் அவன் பார்வை மதுரிமாவை ஏளனமாக ஏறிட, அதைத் தாங்க முடியாமல் கொதிப்புடன் அங்கிருந்து வெளியேறினார் மதுரிமா.

                   சாஷா உள்ளே நுழைந்தவள் சத்யநாராயணனின் முன்னே நிற்க, நிதானமாக அவளை நிமிர்ந்து பார்த்தார் சத்யா. எதையோ எதிர்பார்த்தவளாக அவள் நிற்க, “என்னம்மா..” என்றார் அவர்.

                  “உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கிறேனோ..” என்றாள் சாஷா.

                 “ஏன் திடீர்ன்னு இப்படி ஒரு சந்தேகம்..”

                “நான் இங்கே இருக்கப் போய்தானே, என்னோட அழுக்கான கடந்தகாலம் உங்க வீட்டு வாசல் வரைக்கும் வந்திருக்கு..” என்று வேதனையுடன் கூறினாள் சாஷா.

                  “இப்போதான் உன்னைப் பத்தி கொஞ்சமா பெருமைப்பட்டேன். என் பேத்தி இனி பொழைச்சுக்குவான்னு நினைச்சேன்.. அது தப்போ..??” என்று சந்தேகம் கொண்டார் சத்யா..

                  “புரியலையே…”

                  “உனக்கு புரியாது… உன் அம்மா என்னையே எதிர்க்க துணிஞ்சவ.. பீஷ்மா அவ பக்கம் இருக்க தைரியத்துல, உங்களால முடிஞ்சதைப் பாருங்கன்னு மறைமுகமா சொன்னவ… அப்படிப்பட்டவளை என் பேத்தி ஒரே அறையில கீழே தள்ளிட்டாளே.. பெரிய விஷயம் இல்லையா..??” என்று அதிசயித்தார் சத்யா.

                  சாஷாவுக்கு இது புதிய தகவலாக இருக்க, “நீங்க அம்மாகிட்ட பேசி இருக்கீங்களா…” என்றாள் சங்கடத்துடன்.

                 சத்யா மெல்ல தலையசைத்து, “நீ என் பேரனைப் பிடிச்சு வச்சிருந்தா உன்கிட்ட பேசி இருப்பேன்… இங்கே என் பேரன்தானே உன்னைப் பிடிச்சு வச்சிருந்தான்.. அதனாலதான் உன்னை கூட்டிட்டு எங்கேயாவது  போக சொல்லி உன் அம்மாகிட்ட சொன்னேன்…” என்றார் சாதாரணமாக.

                 அவர் பேச்சில் சாஷாவுக்கு கண்கள் கலங்கியது. அவள் நிலையை சரியாக கணித்து இருக்கிறாரே.. பீஷ்மன் விஷயத்தில் அவள்மீது நம்பிக்கை வைத்த முதல் ஜீவனாகிற்றே.. அவரின் அந்த நம்பிக்கை அவளது இந்த ஜென்மம் மொத்தத்திற்கும் போதுமாக இருந்தது.

                 கண்ணீருடன் “தேங்க்ஸ் தாத்தா..” என்று முதல்முறையாக அவள் அழைக்க, அவள் அழைப்பில் சிரித்துக் கொண்டார் சத்யா.

                  “தாத்தாவை ஏத்துக்க மனசு வந்துடுச்சே பேத்திக்கு..” என்று சிரித்தவாறு “போய் சாப்பிடுமா..” என்று அவளிடம் கூறி தன் அறைக்குள் நுழைந்து கொண்டார் சத்யா.

                  நீண்ட நாட்களுக்குப் பின் சாஷா சிறுபுன்னகையுடன் நிற்க, அவளின் முன்னால் வந்து நின்றான் மணி. முகத்தில் இருந்த புன்னகை உறைந்து போக, “என்னை நிம்மதியா விடவே மாட்டிங்களா நீயும் உன் அண்ணனும்..” என்று அவனிடம் கோபம் கொண்டாள் சாஷா.

                  “நான் எதுவும் பண்ணல மேடம்.. அண்ணாதான்..” என்று நல்லபிள்ளையாக கூறி நின்றான் மணி.

                “அவர் தூக்காம விட்டிருந்தா நீ தூக்கி இருப்ப.. என்கிட்டே நடிக்காத மணி..” என்றாள் சாஷா.

                 அவள் பேச்சில் மணி முழித்து நிற்க, “உன் அண்ணனுக்கு போன் போடு..” என்றாள் தோரணையாக.

               மணி அலைபேசியைக் கையில் எடுக்க “மிதுனை அனுப்பிவிடச் சொல்லு.. அவன் விஷயத்துல இனி அவர் தலையிட வேண்டாம்.. சொல்லு உன் அண்ணன்கிட்ட..” என்றாள் மீண்டும்.

             மணி பீஷ்மனுக்கு அழைத்து சாஷா கூறியதை அப்படியே கூற, “ஏன் விடணும்..” என்றான் அவன்.

             “அண்ணிதான் உங்ககிட்ட சொல்ல சொன்னாங்கண்ணா..” என்றான் மணி.

             “பக்கத்துல இருக்காளா..” என்று பீஷ்மன் கேள்வி கேட்க, “ம்ம்..” என்று ஆமோதித்தான் மணி..

              “ஸ்பீக்கர்ல போடு..” என்று பீஷ்மன் கூற, மணி அலைபேசியை சாஷாவின் முன்னே நீட்ட, எப்போதும் போல் கம்பீரத்துடன் ஒலித்தது பீஷ்மனின் குரல்.

                                         “என்கிட்டே எது பேசறதா இருந்தாலும் நேரடியா பேச சொல்லு மணி.. இனி இப்படி நீ எனக்கு கூப்பிடக்கூடாது..” என்று அதிகாரமாக கட்டளையிட்டான் பீஷ்மன்.

               சாஷாவுக்கு அவன் பேச்சில் ஆத்திரம் கூட, மணியின் கையில் இருந்த அலைபேசியைப் பிடுங்கி தூர எறிந்தவள் அதே கோபத்துடன் தன்னறைக்குச் சென்றிருந்தாள்.

               மணி கீழே கிடந்த தன் அலைபேசியைப் பரிதாபமாகப் பார்த்தவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் உடைந்த பாகங்களை கையில் எடுத்துக் கொண்டு வெளியேறி பீஷ்மனுக்கு அழைத்தான்.

                பீஷ்மன் அழைப்பை ஏற்க, “உங்களால என் போனை உடைச்சுட்டாங்க மேடம். ஒழுங்கா எனக்கு போன் வாங்கி கொடுங்க..” என்றான் உரிமையாக.

                “நீ என்கிட்டேயா வேலை செய்ற.. உன் அக்கா தானே உடைச்சா.. அவகிட்ட போய் கேளுடா..”என்று அழைப்பைத் துண்டித்தான் பீஷ்மன்.

                 அவன் முகத்தில் எப்போதும் போல கர்வமான ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொள்ள, அவன் எதிர்பார்த்த இடத்தில் இருந்து அடுத்த பத்து நிமிடங்களில் அழைப்பு வந்தது அவனுக்கு.

                 சாஷா தான். பீஷ்மன் வேண்டுமென்றே கடைசி ரிங்கில் அழைப்பை ஏற்க, மறுபுறம் பேச்சே வரவில்லை.

                பீஷ்மனே “பேசு..” எனவும், “மிதுனை விட்டுடுங்க..” என்றாள் சாஷா.

               “நீ சொல்லி அவனை தூக்கினேனா…” என்றான் பீஷ்மன்.

               சாஷா மௌனம் காக்க, “இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்ல. உன் விஷயத்துக்கு மட்டும் நீ முடிவெடு. நான் என்ன செய்யணும்ன்னு நீ சொல்லாத..” என்றான் முகத்தில் அடித்தது போல்.

               சாஷா பல்லை கடித்து தன்னை அடக்கி கொள்ள, “முடிஞ்சுதா..” என்றான் மீண்டும்.

              சாஷா அவனுக்கு பதில் கூறாமல் அழைப்பைத் துண்டிக்க, “கொழுப்பு..” என்று சிரிப்புடன் கூறிக் கொண்டான் பீஷ்மன்.

ஆனால், அன்று மாலையே பீஷ்மனின் அனுமதி இல்லாமல் அந்த மாலில் இருந்து வெளியேறி இருந்தான் மிதுன்.

               

Advertisement