Advertisement

கைப்பாவை இவளோ 12

                         பீஷ்மனின் கையில் இருந்த தாலிச்சரடை வெறித்து நோக்கி கொண்டிருந்தாள் சாஷா. நேற்றிலிருந்து இந்த தாலி அவள் கழுத்தில் இல்லை என்பதே நினைவில் இல்லை அவளுக்கு. இப்போது தன்முன் நீண்டிருந்த அவன் கையை காணவும் மனதில் அழுந்தியிருந்த வேதனை வெளிப்பட துடிக்க, அவன் கையிலிருப்பதை மீண்டும் கையில் வாங்கவோ, கழுத்தில் ஏற்கவோ தயாராக இல்லை அவள்.

                 பீஷ்மன் அவள் ஏதாவது பேசுவாள் என்று காத்திருக்க, அவன் கையை கவனிக்கவே இல்லை என்பது போல் முகத்தை திருப்பினாள் சாஷா. பீஷ்மனும் சளைத்தவன் இல்லையே. அவள் குறிப்பை உணராதவனாகவே நடந்து கொண்டான் அவனும்.

                “நேற்று ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது கழட்டி இருக்காங்க. இப்போ ட்ரீட்மெண்ட் முடிஞ்சுது இல்லையா.. போட்டுக்கலாம்..” என்று வெகு இயல்பாக கூறிக் கொண்டே அவளை நெருங்கினான் பீஷ்மன்.

                  அவன் பேச்சில் பதறி அவன் முகம் பார்த்தவள் தன் நிலையை மீறி எழுந்து கொள்ள முயற்சிக்க, அவள் தோளைப் பற்றி மீண்டும் அவளை கட்டிலில் கிடத்த முற்பட்டான் பீம். ஆனால், அவனால் முயற்சிக்க மட்டுமே முடிந்தது. சாஷா தன் மொத்த பலத்தையும் திரட்டி அவன் கையில் இருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தாள்.

                  “சாஷா..” என்று பீஷ்மன் அதட்ட, “என்னை விடுங்க.. எனக்கு படுக்க வேண்டாம்..” என்று அழுத்தமாக கூறியவள் அவன் அசந்த நொடி அவன் கையிலிருந்து விடுபட்டிருந்தாள். பீஷ்மன் நிதானமாக அவளை விட்டு விலகி நின்று கைகளை கட்டிக் கொள்ள, சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தாள் சாஷா.

                  ஆனால், அதற்கே அவளின் மொத்த சக்தியும் வடிந்து விட, வயிற்றுக்குள் ஆழிப் பேரலையாக ஏதோ கொந்தளிப்பது போன்று ஒரு வலி. கைகள் தானாக வயிற்றை பிடித்துக் கொள்ள “சாஷா..” என்று என்று மீண்டும் நெருங்கினான் பீஷ்மன்.

                  அவனை நெருங்கவே விடாமல் ஒற்றை விரலை நீட்டி விலக்கி நிறுத்தினாள் இம்முறை. அதில் அவனது கர்வம் பெரிதாக அடி வாங்க, கோபத்துடன் அவள் வலது கையைப் பற்றினான் பீஷ்மன். அதீத வலியை அனுபவித்தபோதும் அவளின் அழுத்தம் மட்டும் மாறாமல் இருக்க, “கையை விடுங்க..” என்று நேரடியாகவே அவனின் கண்ணைப் பார்த்து பேசத் தொடங்கியது அவனது கைப்பொம்மை.

                    பீம் அவளின் அந்த குரலிலும், அவள் கண்களில் தென்பட்ட அழுத்தத்திலும் சற்று அதிர்ச்சியாக அவளைப் பார்த்திருக்க, சாஷா தானாகவே அவன் கையை எடுத்து விட்டிருந்தாள். பீஷ்மன் பார்வை இப்போது அழுத்தமாக சாஷாவை ஏறிட, “இந்த ட்ராமா எல்லாம் போதும்னு தோணுது..” என்றாள் சாஷா.

                பீஷ்மன் நக்கலாக தலையசைத்து அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, எப்போதும் போல அவனை ரசிக்க முடியவில்லை சாஷாவால். “நான் பேசியே ஆக வேண்டும்..” என்பது மட்டுமே மனதில் இருக்க, அவன் தோரணையை வெறித்து நோக்கினாள் அவள்.

                பீஷ்மன் அவள் பார்வையை சட்டை செய்யாமல் ” ஓகே சொல்லு.. கேட்போம்..” என்றான் கதை கேட்பது போன்ற பாவனையில்.

                  அவன் நக்கல் புரிந்தாலும், அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை அவள். “நான் பேச வேண்டியதை பேசியே ஆக வேண்டும்..” என்று மீண்டும் ஒருமுறை தனக்குள் உருவேற்றி கொண்டவள் “எனக்கு உங்களோட வாழ வேண்டாம். நான் என் பிள்ளைக்காக தான் கல்யாணம் செய்ய சம்மதிச்சேன். இப்போ அவனே இல்லை, பின்னே எதுக்காக எனக்கு இந்த வாழ்க்கை. எனக்கு வேண்டாம்.” என்றாள் ஒரே முடிவாக.

                  பீஷ்மன் “என்னைப் பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா..??” என்று நிதானமாக கேட்க, உன் கேள்விக்கு பதில் சொல்ல தயாரில்லை என்பதாக மௌனம் காத்தாள் அவள்.

                 அதில் கடுப்பானவன் “இந்த ஜென்மத்துக்கு நீ பீஷ்மனோட பொண்டாட்டி தான். யார் நினைச்சாலும் அதை மாத்த முடியாது. தேவையில்லாத விஷயங்களை யோசிக்கிறதை விட்டுட்டு ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கிற வழியைப் பாரு..” என்று அதட்டினான் அவளை.

                அதில் ஏளனமாக சிரித்தவள் “பீஷ்மனோட பொண்டாட்டியா… பொம்மைன்னு சொல்லுங்க.. சரியா இருக்கும். உங்களுக்கும் நான் அப்படி இருக்கறது தானே பிடிக்கும்..” என்றாள் வேதனையுடன்.

                பீஷ்மன் “அப்படி இருந்ததால என்ன கெட்டு போச்சு இப்போ..” என்று கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பீஷ்மன் கேள்வியெழுப்ப, விரக்தியுடன் சிரித்தாள் சாஷா.

                 “நானே கெட்டுப் போனவளா மாறி நிற்கிறேன். என்ன கெட்டுப் போச்சுன்னு கேட்டுட்டு இருக்கீங்க..”

                “உன்னை நீயே அசிங்கப்படுத்தாத சாஷா.. என்ன கெட்டுப் போயிட்ட நீ…”

                 “எஸ்.. என்னை நான் அசிங்கப்படுத்திக்க கூடாது. அதை செய்யத்தான் நீங்க இருக்கீங்களே… எனக்கு வெளியே என்ன பேர் தெரியுமா…”

                   “என்ன… என்ன பேரு.. இன்னிக்கு பீஷ்மனோட பொண்டாட்டி நீ.. அதை யாரும் மறுக்க முடியாது..”

                   “ஆனா, ஒருநாள் உங்களோட வைப்பாட்டியா இருந்திருக்கேன். அதையும் என்னால மறக்க முடியாது… என்னால உங்களோட வாழ முடியாது..” என்று அழுத்தந்திருத்தமாக சாஷா உரைக்க, மெல்லியதாக சிரித்தான் பீஷ்மன்.

                    “உன்னோட  விஷயங்கள் என்னைக்கும் என்னோட  முடிவுதான் சாஷா.. உனக்கு வேற ஆப்ஷன் நான் கொடுக்கவே இல்லையே..”

                 “எனக்கு ஆப்ஷன் கொடுக்க நீங்க யாரு. என் வாழ்க்கையை முடிவு செய்ய நீங்க யார்.. “என்று சாஷா தன்னை மீறி சத்தமிட, “நான் யாரா..” என்று அப்போதும் சிரித்தான் பீஷ்மன்.

                 “படுத்து தூங்கு.. இதைப் பத்தி பொறுமையா பேசுவோம்..” என்று அவன் எழுந்து கொள்ள, “பேசுறதுக்கு நான் உயிரோட இருக்கணுமே..” என்று அவனை அதிரச் செய்தாள் சாஷா.

                  ஆனால், அப்போதும் “என்ன மிரட்டலா..” என்று சாதாரணமாகவே கேட்டான் பீஷ்மன்.

                  “ஏன் மிரட்டணும்.. உங்களை மிரட்டி என்ன ஆகணும் எனக்கு. உங்க அம்மா சொல்றமாதிரி எனக்கு உங்களோட பேர், புகழ், பணம் எதைப்பத்தியும் அக்கறையே கிடையாது. உங்களை மிரட்டி எந்த காரியமும் சாதிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல..”

                  “ஓஹ்.. டாப்ஸ்டார் சாஷா பேசறாங்களா..”

                  “சாகித்யாவை சாஷாவா உருவாக்கினதே நீங்கதான். அதுக்கான நன்றிக்கடனையும் நான் இதுவரைக்கும் மறுத்தது இல்ல. ஆனா, எதுக்கும் ஒரு எல்லை இருக்கு இல்லையா.. என்னோட எல்லை இதுதான். இன்னும் என்னோட நன்றி உங்களுக்கு தேவையா இருந்தா, நீங்க ஏற்படுத்திக் கொடுத்த பணம், சொத்து அத்தனையும் உங்ககிட்ட கொடுத்துட்டு வெளியே போகவும் நான் தயாராதான் இருக்கேன்.” என்று அவள் முடித்த நிமிடம் பீஷ்மனின் பேய்க்குணம் தலைதூக்க, எப்போதும்போல எட்டி அவள் கழுத்தைப் பிடித்திருந்தான் பீஷ்மன்.

                    “யார்கிட்ட பேசிட்டு இருக்க தெரியுதா உனக்கு..” என்று அடிக்குரலில் அவன் சீற, துளியும் அச்சமில்லாமல் அவனை ஏறிட்டவள் “என் வாழ்க்கைக்காக பேசிட்டு இருக்கேன்…”என்றாள் அவனுக்கு குறையாத அழுத்தத்துடன்.

                   “நான் இல்லாம உனக்கு வாழ்க்கை இருக்கா..” என்று தன் பிடியை விலக்காமல் அவன் கேள்வி கேட்க, “அதுக்காக என்னையே நான் பலி கொடுக்கணுமா..” என்று அவன் சட்டையைப் பிடித்தாள் சாஷா.

                    “சொல்லுங்க.. என்னை நான் பலியா கொடுக்கணுமா.. என்ன சொல்லி மிரட்ட போறீங்க என்னை.. இதுவரைக்கும் பிள்ளை பிள்ளைன்னு என் பிள்ளையை வச்சு மிரட்டியாச்சு.. இன்னும் என்ன செய்யப் போறீங்க.. சொல்லுங்க.. என்னை ஏன்டா இப்படி சித்ரவதை பண்ற… என்ன பாவம் பண்ணேன் நான்…”

                    “உன்மேல மனசார ஆசைப்பட்டது மட்டும்தான் நான் செஞ்ச பாவம்.. தப்புன்னு தெரிஞ்சும் உன் இச்சைக்கு உடன்பட்டு நின்னேன்ல அது அதைவிட பெரிய பாவம். அதற்குதான் எனக்கு இப்படி தண்டனை கொடுத்துட்டு இருக்கியா.. சொல்லு…”

                     “எனக்கு இது அத்தனைக்கும் இன்னைக்கு முடிவு தெரிஞ்சாகணும்.. நீ சொல்லிட்டா உன் பொண்டாட்டி ஆகிடுவேனா நான்.. யாருமே இல்லாத ஒரு ஹோட்டல் ரூம்ல என் கழுத்துல ஒரு செயினை போட்டுட்டா அதற்கு பேர் கல்யாணம் ஆகிடுமா… எனக்கு மனசுன்னு ஒன்னு இருக்கவே கூடாதா..”

                     “எனக்கு ஆசைகள் இருக்க கூடாதா… இப்படித்தான் வாழணும்ன்னு எந்த கனவும் எனக்கு இருக்கக்கூடாதா.. அப்படியென்ன தப்பு பண்ணேன் நான்.. உன்னோட படுத்தது மட்டும்தான் நான் செஞ்ச தப்பு… நான் செஞ்சது தப்புன்னா, என்னை நீ யூஸ் பண்ணிக்கிட்டதும் தப்புதான்…”

                     “உனக்கு யார் தண்டனை கொடுக்க… சொல்லு… என் வாழ்க்கையை நீ உன் கையில எடுத்து உன் விருப்பத்துக்கு என்னை ஆட்டி வச்சதெல்லாம் போதும்.. இனி ஒரு நொடி கூட நான் உங்க யாருக்கும் கட்டுப்பட மாட்டேன்.. எனக்கு உங்க அத்தனைப் பேர்கிட்ட இருந்தும் இந்த நிமிஷம் விடுதலை வேணும்..”

                   “யாரும் கட்டுப்படுத்தாத, கஷ்டப்படுத்தாத ஒரு வாழ்க்கைதான் வேணும் எனக்கு. என் வாழ்க்கை எனக்கானதா இருக்கணும். உன்னோட ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம் கண்டுபிடிச்சு உனக்கு பிடிச்சதை மட்டுமே செய்யிற ஸ்விச் போடுற பொம்மையா இனி என்னால இருக்க முடியாது…”

                    “நான் இருக்கவும் மாட்டேன்.. என்னை விட்டுடு.. என்னை விட்டு போய் தொலைங்க அத்தனைப் பேரும்.. எனக்கு “சாஷா… சாஷா.. சாஷா…” என்னை சுத்தி கேட்கிற இந்த கூச்சல், ஆரவாரம், மிரட்டல் எதுவுமே வேண்டாம்… நான் என் அப்பாவோட சாகித்யாவா வாழனும்.. அது முடியாம போனா, அவர் போன இடத்துக்கே போய் சேர்ந்திடனும்..”

                     “இது ரெண்டுல ஒண்ணுதான் நடக்கும்.. நீ நினைக்கிற எதுவும் இனி என் வாழ்க்கையில நடக்காது… மீறி ஏதாவது செய்ய நினைச்சா நான் மண்ணோட மண்ணாகிடுவேன்… சத்தியமா செஞ்சுடுவேன்… என்னை விட்டுடு… எனக்கு யாரும் வேண்டாம்.. விடுதலை தான் வேணும்.. நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் என்னை மன்னிச்சுடு… உன் கால்ல விழணுமா நான் விழறேன்.. என்னை விட்டுடு.. உன்னோட வாழற வாழ்க்கை எனக்கு வேண்டாம்..”

                   “எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம்.. என்னை விட்டுடுங்கடா… நான் செத்துப் போறேன்.. என்னை விட்டுடுங்கடா..” என்று பைத்தியம் பிடித்தவள் போல் தலையில் அடித்துக் கொண்டு அழுதவள் அதீத மனஉளைச்சலில் மயங்கி விழ, கட்டிலில் அமர்ந்திருந்ததால் புதிதாக காயம் ஏதும் ஏற்படாமல் தப்பித்துக் கொண்டாள்.

                    அவள் தன் மனத்திலிருந்தது மொத்தத்தையும் வெளியேற்றி நிம்மதியாக கண்ணை மூடிவிட, பீஷ்மன் என்ற ஆறடி மனிதன் மரண காயம் பட்டிருந்தான் அந்த நொடி. அவளின் மொத்த வேதனைக்கும் அவன் காரணம் இல்லை என்றாலும், அவளின் இந்த கீழான வாழ்வுக்கு அவன் மட்டும்தான் காரணம் என்ற குற்றவுணர்வும், அவளின் ஓலமும் அவனை அசையவே விடவில்லை.

Advertisement