Advertisement

கைப்பாவை இவளோ 02

                  தனது தனி சாம்ராஜ்யமான தன்னுடைய மாலில் இருந்தான் பீஷ்மன். கையில் பாதி தீர்ந்த மதுக்கிண்ணத்துடன் அவன் இருக்க, மனம் எங்கெங்கோ சுற்றி வந்தது. மனம் ஸ்ரீகாவைத் தொட்டு, தீக்ஷியிடம் திரும்பி, சீதாவிடம் வந்து நின்றது.

                 அவனது சொந்த அத்தை சீதா. பல ஆண்டுகளுக்குப் பின் அவரது உறவு புதுப்பிக்கப்பட்டு இருக்க, அடுத்த சில நாட்களில் இதோ அவன் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அவர். அதுவும் இந்த வயதில் தற்கொலை முயற்சி.

                  ஏதோ ஒரு வகையில் அவரின் முடிவுக்கு தான் காரணம் என்பது வேறு இடிக்கவும் தான், தீக்ஷி விஷயத்தை அவனாகவே முடித்துக் கொடுத்து வந்திருந்தான். இல்லையென்றால், ஸ்ரீகா விஷயத்தில் ஜெய் அவனை முந்தியதை, அவன் தங்கையை கொண்டே சரி செய்திருப்பான்.

                   ஆனால், அவன் சிந்தனை இப்போது தீக்ஷியிடம் இருந்து சாஷாவிடம் சென்றது. அவளைக் கடைசியாக ஸ்ரீகாவின் நிச்சயத்தன்று சந்தித்தது தான். அன்று சித்தார்த் வர்மாவுடன் அவள் அமர்ந்திருந்தது ஏனோ பிடிக்கவில்லை அவனுக்கு.

                    தன் பொம்மை தன்னை விட்டு பிறரிடம் சிரித்துப் பேசுவதா???…. என்ற ஆணவம் தான் அப்போதும். “நீ இன்னும் என் கைப்பாவை தான்..” என்று சாஷாவுக்கு உணர்த்திவிடும் வேகம் வெகுவாக கிளர்ந்து அன்றைய தினம்.

                   அருகில் அமர்ந்திருந்த அன்னையை கூட கவனிக்காமல், எழுந்து அவள்பின் நடந்தவன் அன்று அவளை நிதானமாக தண்டித்து முடித்திருந்தான். ஆனால், அன்றைய தினத்தின் முடிவில் முதல்முறையாக ஒரு குற்றவுணர்வு அவனை சூழ்ந்து கொள்ள, அதன்பின் சாஷா இருக்கும் திசைக்கு கூட செல்வதைத் தவிர்த்துவிட்டான் அவன்.

                சாஷா எப்போதுமே அவனைத் தேடியதோ, அழைத்ததோ இல்லை என்பதால், இப்போதும் அப்படியே இருந்து கொண்டாள். ஆனால், சாஷாவின் நினைவுகளை அத்தனை எளிதில் மறந்துவிட முடியுமா அவனால். அவளைக் காயப்படுத்தியது எல்லாம் எங்கோ மறைந்து போக, “என்னை தேடமாட்டாளா இவ.. பெரிய ரதியா..” என்று கோபம் கொண்டது மனம்.

                 தானாக அவளைத் தேடிச் செல்ல, அவனின் மனம் இடிக்க, இன்றுகாலை வரையும் கண்டுகொள்ளாமல் தான் இருந்தான். ஆனால், காலை அவன் அத்தையை பார்த்துவிட்டு, அவன் வெளியே வரும் சமயம் தான் அவன் கண்ணில்பட்டது அவன் பொம்மை.

                முகம் மொத்தமும் பயமும், பதட்டமும் நிறைந்து போயிருக்க, எதிரில் வருவது யார் என்று கூட கவனிக்க முடியாத அளவுக்கு அவசரத்தில் இருந்தாள் அவள். தலையைக் குனிந்து கொண்டே ஓட்டமாக அவள் ஓடியிருக்க, அவள் முகத்தை வைத்தே அவளுக்கு ஏதோ சிக்கல் என்பது வரை உணர்ந்து கொண்டான் பீஷ்மன்.

                மருத்துவமனையின் பதிவுகளை அலசியதில், அவள் மருத்துவர் மீனலோச்சனியை சந்திக்க வந்தது உறுதியாக, அடுத்த அரைமணி நேரத்தில் அவரை அறைக்கு அழைத்திருந்தான். மீனலோச்சனி கொஞ்சம் தயங்கியவராகவே அவன் முன் அமர, “சாஷா எதுக்காக வந்திருந்தாங்க..” என்றான் நிதானமாக

               சாஷாவின் பயந்த தோற்றம் நினைவில் எழ, “நத்திங் சார். சும்மா ரொட்டின் ஹெல்த் செக்கப் தான்.. எப்பவும் அவங்க வர்றது தானே..” என்று சமாளிக்கப் பார்த்தார் அவர்.

               “அப்படியா… ரொட்டின் ஹெல்த் செக்கப்…” என்று தன் என்று தன் நெற்றியை விரலால் கீறியவன் “நம்ம ஹாஸ்பிடல்ல ஹெல்த் செக்கப் இலவசமா பன்றோமா என்ன???..” என்றான் அடுத்த கேள்வியாக

               மீனலோச்சனி விழிக்க, “சாஷாவோட நேம் இன்னிக்கு உங்க பேஷண்ட் லிஸ்ட்ல இல்ல. ஆனா, அவங்க உங்களை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்து இருக்காங்க… நீங்களே என்ன விஷயம் னு சொல்லிடுங்க டாக்டர். இது உங்களுக்கு தேவையில்லாத தலைவலி..” என்று சின்ன சிரிப்புடன் அவன் மிரட்ட, மீனலோச்சனி சுதாரித்துவிட்டார்.

                “அவங்க என்னைப் பெர்சனலா பார்க்க வந்திருந்தாங்க சார். இதுல உங்ககிட்ட சொல்ற அளவுக்கு முக்கியமான விஷயம் எதுவும் இல்ல.. அவங்க எனக்கும் நல்ல பிரெண்ட் தான். அந்த வகையில என்னைப் பார்க்க வந்தாங்க..” என்று அடித்து பேசிவிட்டார்.

                 பீஷ்மனுக்கு அவரைத் தெரியும். இதற்குமேல் தான் தலைகீழாக நின்றாலும், ஒரு வார்த்தை அவர் வாயில் இருந்து வாங்க முடியாது. அவன் தாத்தாவின் கையாள் மீனலோச்சனி. இப்போது அவரை எதுவும் பேசினால், விஷயம் நிச்சயம் சத்யநாராயணின் காதுவரை செல்லும் என்பதும் தெரியும்.

                தனக்கு முன்னால் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் அவரை ஆழ்ந்து பார்த்தவன் “நல்லது டாக்டர்… சாஷா விஷயம் எதுவும் எனக்குத் தெரியாம இருக்கவே முடியாது. இப்போ நீங்க சொல்ல மறுக்கிற விஷயமும் அதுவாகவே என் காதுக்கு வரும்… நீங்க கிளம்புங்க..” என்றான் அழுத்தமாக

                மீனலோச்சனி விட்டால் போதும் என்று அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவரின் வழக்கத்திற்கு மாறான பதட்டமும், சாஷாவைத் தோழி என்று அவர் சொல்லிக் கொண்டதும் பீஷ்மனை சிந்திக்க தூண்டியது இப்போது.

              மீனலோச்சனி ஆசிரமத்தில் வளர்ந்தவர். தனக்கென குடும்பம், தாய், தந்தை என்று யாருமில்லாமல் நின்றவரை படிக்க வைத்து ஆளாக்கியவர் சத்தியநாராயணன். மருத்துவம் கனவானதால் மீனலோச்சனி சிரத்தையுடன் படித்து முடிக்க, அவரது மருத்துவமனையிலேயே வேலை கொடுத்து அவரை பாதுகாத்தார் சத்தியநாராயணன்.

                சரியான வயதில் அவரை திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்த, திருமணத்தை மறுத்து மக்கள் சேவையாக மருத்துவத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. தன்னை ஆளாக்கிய சத்யநாராயணனுக்கு தீவிர விசுவாசி அவர். அந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவின் துறைத்தலைவர் பதவி வரை அவர் உயர்ந்திருக்க, தன்னை வளர்த்த ஆசிரமத்துப் பிள்ளைகளுக்கு இலவசமாக மருத்துவசேவை அளித்துக் கொண்டிருக்கிறார். அவரின் சம்பளப்பணமும், அவரின் தேவைக்கு தவிர, மற்றதெல்லாம் அந்த அசிரமத்திற்கே சென்றுவிடும்.

                அப்படிப்பட்டவர் சாஷாவின் தோழி என்றதுதான் முரணாக நின்றது பீஷ்மனுக்கு. தன்னையும், சாஷாவையும் அவர் பார்க்கும் கீழான பார்வையை அறிவானே அவன். ஆனால், முகத்திற்கு நேரே அவனுக்கான மரியாதையை தவறாமல் கொடுத்துவிடுவதால், “நீ என்ன நினைச்சா எனக்கென்ன..” என்று விட்டு வைத்திருந்தான் அவரை.

                                                அப்படிப்பட்டவர் இன்று மாற்றிப் பேசுவது புதிதாக இருக்க, தீராத யோசனைதான். முகம் தீவிர சிந்தனையை சுமந்திருக்க, கையில் இருந்த மதுக்கிண்ணம் நிரம்புவதும், மீண்டும் குறைவதுமாகவே இருந்தது. ஆனால், அந்த நிலையிலும் அவன் அறிவு தெளிவாக இருக்க, சாஷாவின் மேனேஜருக்கு அழைத்தான்.

                  அவன் அழைப்பை முதல் ரிங்கில் எடுத்ததுடன் “சொல்லுங்க சார்..” என்று பவ்யமாக கேட்க

                  “சாஷா இப்போ எங்கே இருக்கா..” என்றான் பீஷ்மன்.

                   “சார் அவங்க அவங்களோட பீச் ஹவுஸ்ல இருக்காங்க சார். நேத்தும் அங்கேதான் இருந்தாங்க. இப்பல்லாம் அதிகமா வீட்டுக்கு வர்றதில்லை சார்.” என்று கேட்காத கேள்விகளுக்கும் பதில் கொடுத்தான்.

                   பீஷ்மன் அமைதியாக அவன் கூறியதை உள்வங்கிக் கொண்டான். அவனுக்கு பதில் எதுவும் கூறாமல், “அவளுக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா..”என்று சந்தேகத்துடன் அவனிடமே விசாரிக்க

                  “அப்படியெல்லாம் எதுவும் இல்லையே சார். நேத்து மட்டும் ஸ்பாட்ல கொஞ்சம் டயர்டானது போல இருந்தாங்க ன்னு, மணி சொன்னான்…” என்று அவன் கூற

                   “மணி சொன்னானா.. அப்போ நீ எங்கே இருந்த…” என்றான் கூர்மையாக

                  “சார்.. அது நேத்து என் வைப் வீட்ல ஒரு விசேஷம் சார்.. அங்கே போயிருந்தேன். மேடம்கிட்ட கேட்டுதான் சார் போனேன்..” என்று அவன் பயத்துடன் கூற

                   “ஓஹ். நீ உன் வீட்டு விசேஷத்துக்கு போகத்தான் சம்பளம் கொடுக்கிறோமா நாங்க..” என்று நிதானமாக அவன் வினவ,எதிர்முனையில் இருந்தவனுக்கு வியர்த்துப் போனது.

                    அவன் அமைதியாகவே இருக்க, “நான் உன்கிட்ட பேசின விஷயம்..” என்று பீஷ்மன் நிறுத்த

                    “மேடம்கிட்ட சொல்லமாட்டேன் சார்..” என்றான் உடனடியாக.

                     “நீ சொன்னாலும் எனக்கு எந்த கவலையுமில்லை.. ஆனா, இனி இப்படி நீ அலட்சியமா இருந்தால், உன் இடத்துக்கு வேற ஆள் தேட வேண்டி இருக்கும்..பார்த்துக்கோ ” என்று அவனை ஒருவழி செய்தே அழைப்பைத் துண்டித்தான் பீஷ்மன்.

                     அடுத்து அவன் மணிக்கு அழைக்க, “சொல்லுங்கண்ணா…” என்றான் அவன்.

                     “சாஷா எப்படி இருக்கா… நேத்து என்ன நடந்தது..” என்று அவனை குடையத் தொடங்கினான் பீஷ்மன்.

                      “ண்ணா.. உடம்பு முடியல போல அவங்களுக்கு.. நேத்து காலைல வாந்தி எடுத்துட்டு இருந்தாங்க.. நாங்க உள்ளேப் போகவும், அமைதியா உட்கார்ந்துட்டாங்க… ஆனா, ஆளே டல்லா இருக்கங்கண்ணா..” என்று அவன் கூற

                       “இதை ஏண்டா நேத்தே என்கிட்டே சொல்லல..” என்று பீஷ்மன் கத்த

                       “நீங்கதான் அவங்களைப் பார்க்க வர்றதே இல்லையே.. அதோட அவங்களும் உங்ககிட்ட எதையும் சொல்லக்கூடாது ன்னு சொல்லி இருக்காங்க..” என்றான் மணி.

                       “ஓஹ்.. உன் அக்கா பேச்சை தட்டாம கேட்கறியா நீ…” என்று பீஷ்மன் நக்கலடிக்க

                       “ஏன் கேட்டா என்ன?? நீங்கதானே அவங்க சொல்றதை அப்படியே கேட்கணும் ன்னுசொன்னிங்க..” என்றான் மணி.

               “அவ பேச்சைக் கேட்கிறவன் இப்போ அவ கதையெல்லாம் என்கிட்டே ஏண்டா சொல்லிட்டு இருக்க..” என்று நக்கலாக கேட்க

                 “அவங்களுக்கு முடியல சொன்னேன்.. அவங்க கேட்டா, நீங்கதான் மிரட்டி கேட்டிங்க ன்னு சொல்லிப்பேன்.. என்னை திட்டமாட்டாங்க..” என்றான் நம்பிக்கையுடன்.

                 “வாய் ஜாஸ்தியா ஆகிடுச்சுடா உனக்கு..” என்று பீஷ்மன் மிரட்ட,

                 “எங்க அக்காவீட்டு சாப்பாடு அப்படி..” என்றான் மணி.

                  அவன் பேச்சில் லேசாக சிரித்தாலும், “மணி..” என்று கண்டிப்புடன் அழைத்தான் பீஷ்மன்.

                   மணி அமைதியாக “நான் விசாரிச்சது சாஷாவுக்கு தெரியக்கூடாது. அதோட அவளுக்கு உடம்புக்கு என்ன ன்னு தெரிஞ்சிக்க பாரு..” என்றான் பீஷ்மன்.

                   மணி சரி என்றும் கூறாமல், இல்லை என்றும் கூறாமல் அமைதியாக, “சொன்னதை செய் மணி. உன் அக்காவுக்கு நல்லதுதான் சொல்வேன் நான்..” என்று அழைப்பைத் துண்டித்தான் பீஷ்மன்.

                   அவனது மூளை வேகமாக வேலை செய்ய, அவளின் சோர்ந்த முகம், வாந்தி, மருத்துவர் மீனலோச்சனி என்று அனைத்தும் புரிந்தது. புரிந்த விஷயம் அப்படி ஒரு ஆத்திரத்தைக் கொடுக்க, சாஷாவின் மீதும் எரிச்சல் படர்ந்தது.

                      “இதைக்கூட கவனிக்காம என்ன பண்ணிட்டு இருந்தா… வந்தவ முழுசா முடிச்சுட்டு போக வேண்டியது தானே.. எதுக்கு அப்படி பயந்து, நடுங்கி போகணும்.. எப்போதான் திருந்துவாளோ..” என்று சாஷாவைத் தான் திட்டி தீர்த்துக் கொண்டான்.

                      மற்றபடி அவள் கருவுற்றதோ, அவள் பிள்ளையோ எந்த வகையிலும் பாதிக்கவில்லை அவனை. அவள் கர்ப்பம் தரிக்காமல் இருக்க, மருத்துவரிடம் அழைத்து சென்று கருத்தடை மாத்திரைகளை வாங்கி கொடுப்பவன் தானே அவன். அவனிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்???

                              ஆனால், இங்கே சாஷாவோ அவனுக்கு அப்படியே நேரெதிர் மனநிலையில் இருந்தாள். அவள் பயந்தது, நடுங்கியது எல்லாம் ஒருபுறம் இருக்க, அத்தனைக்கும் மேலாக தன் வயிற்றில் உதித்திருக்கும் சிசுவை பிடித்திருந்தது அவளுக்கு.

                   அன்று எதிர்பாராத நேரம் பீஷ்மன் தன்னை நெருங்கியதும், அவன் நடந்து கொண்ட விதமும் இன்னும் நினைவில் இருந்தாலும், அவன் பிள்ளையை வெறுக்க முடியவில்லை அவளால். அன்று அவன் படுத்தி வைத்ததால் தான் அவள் மாத்திரைகளையும் மறந்து போனது.

                   அதுவே இப்போது அவளுக்கு நன்மை அளித்திருப்பதாக உணர்ந்தாள் அவள்.ஆம்.. அவளைப் பொறுத்தவரை இது நன்மை தான் அவளுக்கு. அவளின் திரையுலக வாழ்வு மொத்தமாக முடிந்து போகும். பீஷ்மன் ஏற்கமாட்டான் என்று அத்தனையும் புரிந்தாலும் அவளுக்கு குழந்தை  வரமாகவே தோன்றியது.

                   குழந்தையைக் கொண்டு பீஷ்மனை நெருங்க முயற்சிக்காதவரை பீஷ்மன் தன்னை நெருங்கமாட்டான் என்று நினைத்தாள் அவள்.

                              அவளுக்கும் பீஷ்மனை பிடித்து வைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனால், ஒரேடியாக அவனை இழப்பதற்கு அவன் நினைவாக என் மகன் துணையிருப்பது மேலானது அல்லவா.. என்று எண்ணமிட்டாள் அவள். அவன் எப்படியோ என்னவோ, என்னளவில் நான் நேசித்தேனே.. அந்த நேசிப்புக்கு இறைவன் எனக்களித்த கொடையாக நான் ஏன் மகனை நினைக்கக்கூடாது??

                    “எனக்கு என் மகன் வேணும்… என்னால் இவனை அழிக்கமுடியாது..” என்று நொடிக்கு நொடி அவள் தீவிரமாக பிள்ளையை பாதுகாக்க தொடங்கி இருந்தாள். பீஷ்மனை எந்த சூழலிலும் தேடிப் போகக்கூடாது என்று திடமாக முடிவெடுத்துக் கொண்டவள், மீறி அவன் ஏதாவது செய்ய நினைத்தால் “அவன் குழந்தையே இல்லை..” என்று சொல்வதற்கும் தயாராக இருந்தாள்.

                    தான் வாயால் சொல்லிவிட்டால், அப்படி ஆகிவிடுமா என்ன?? என் மனதிற்கு தெரியும்தானே அதுபோதும்.. என்று சிறுபிள்ளையின் மணல் வீடு போல், பீஷ்மனை கணக்கிட்டுக் கொண்டிருந்தாள் அவள். அவள் முடிவில் உறுதியாக இருந்தவள் அடுத்தநாளே தான் முடிவு செய்த காரியங்களை முடிக்க தொடங்கி இருந்தாள்.

                     தான் முன்பணம் வாங்கி இருந்த மூன்று முன்னணி இயக்குனர்களை அழைத்தவள், முதல் வேலையாக தான் வாங்கி இருந்த முன்பணத்தை திருப்பிக் கொடுத்தாள். அவர்கள் அதிர்ந்து பேசியபோதும் சரி, மிரட்டலில் இறங்கியபோதும் சரி, எதற்குமே அசையாமல் நின்றாள் அவள்.

                  அவள் பின்னால் பீஷ்மன் இருப்பது வந்தவர்களுக்கும் நன்கு தெரியுமே. அவர்களாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவளை வற்புறுத்த முடியவில்லை. அதுவும், இவள் அவனிடம் எதையாவது சொல்லி வைத்தால் தங்களின் எதிர்காலம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும் என்பதால் அவள் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு நகர்ந்தனர் அவர்கள்.

                    அவர்கள் செல்லவும் நிம்மதி மூச்சு ஒன்றினை வெளியேற்றினாள் சாஷா. இப்போது அவள் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே மீதமிருக்க, மூன்று நாட்களில் அதுவும் முடிந்துவிடும் என்பது நிம்மதியாக இருந்தது.

                    அடுத்து என்ன என்று அவள் மனம் கூச்சலிட, முதல் வேலையாக மணியை அழைத்தாள். அவன் வந்து நிற்க, “நீ பீம்கிட்ட திரும்பி போயிடு மணி..” என்றாள்.

                    அவன் அதிர்ச்சியுடன் பார்க்க, “ப்ளீஸ் அப்படி பார்க்காத. எனக்கு வேற வழியில்லை மணி.நான் சினிமாவை விட்டு முழுசா ஒதுங்க நினைக்கிறேன். எனக்கு அசிஸ்டன்ட் எல்லாம் இனி தேவைப்படாது. ” என்று அவள் எடுத்து கூற

                      “அடியாளா வச்சுக்கோங்க..சினிமாவுல இல்லன்னா என்ன?? உங்களுக்கு பாதுகாப்பு தேவைப்படாதா.. நானும் கொஞ்சநாள் அடியாளா இருந்தவன் தான்..” என்றான் மணி.

                        அவன் பேச்சில் சிரித்துக் கொண்டவள் “என்னால உனக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாது மணி..” என்றாள் மீண்டும்.

                       “நான் உங்ககிட்டே கேட்டேனா..” என்று கோபம் கொண்டான் அவன்.

                      “நீ என்ன சொன்னாலும், என்னால உன்னை என்னோட வச்சுக்க முடியாது. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ… என்னை கஷ்டப்படுத்தாம நீயே போய்டு..” என்றாள் கண்ணீருடன்.

                       “உங்களைப் பற்றிய எந்த விஷயமும் என் வழியா யாருக்கும் போகாது. மணி சொல்றதே சத்தியம் செய்யுறது போலத்தான்.. இல்ல சத்தியம் செய்ய சொன்னாலும் செய்றேன்…” என்றவன் அவளை நேராகப் பார்க்க, எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தாள் சாஷா.

                       “எனக்கு மூணு வேளை ஒழுங்கா சோறு கிடைச்சதே உங்ககிட்ட வந்தபிறகு தான். அதை மறக்கவும் மாட்டேன். அந்த சோத்துக்கு துரோகம் பண்ணவும் மாட்டேன். என்ன பீஷ்மா அண்ணன்தானே.. பேச மாட்டேன் அவர்கிட்ட.. போதுமா..” என்றான் மீண்டும்.

                        “நான் இங்கே இருக்கமாட்டேன் மணி. லண்டன் போறேன்.. ” என்று சாஷா தெரிவிக்க, சட்டென அதிர்ந்தாலும் “எனக்கும் இங்கே உறவுன்னு யாரும் இல்ல..  அக்காதானே நீங்க.. கூட கூட்டிட்டுப் போங்க..” என்று நின்றான் அவன்.

Advertisement