Advertisement

கைப்பாவை இவளோ 01

                  இருள் இன்னமும் முழுதாக சூழ்ந்து கொள்ளாத அந்தி மாலை நேரம்… பௌர்ணமி முடிந்து ஒருநாள் கடந்திருக்க, கிட்டத்தட்ட பௌர்ணமியைப் போலவே காட்சியளித்த முழுநிலவு. அந்த நிலவை தன்னுள் நிரப்பிக் கொண்டு, தான் பெரியவன் நீ எனக்குள் என்று ஆர்ப்பரிக்கும் நீலக்கடல்… இதற்குமேல் என்ன வேண்டும் மன அமைதிக்கு. ஆனால், அவளுக்கு மட்டும் கிட்டவில்லையே.

                  தனக்கு முன்னால் நீண்டு விரிந்திருந்த கடலை அமைதியாக வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சாஷா. அவளுக்கு சொந்தமான கடற்கரை பங்களா அது. அவளின் வருமானத்தில் பீஷ்மன் அவளுக்கென்று முடிவுசெய்து வாங்கியது. எப்போதும் இனிமையைக் கொடுக்கும் இடம் தான். ஆனால், இன்று முழுதாக வேதனையைப் பரிசளிக்கிறதே.

                மனம் முழுதும் வேதனை மேகங்கள் சூழ்ந்து இருந்தாலும், வெளிப்படையாக வாய்விட்டு அழும் சுதந்திரமில்லை அவளுக்கு.

                தமிழ்த்திரையுலகின் முக்கிய கதாநாயகி ஆகிற்றே. அவள் அழுவதுகூட தலைப்புச் செய்திதான். அதோடு அழுது முகம் வீக்கம் கண்டாலோ அல்லது காய்ச்சல், தலைவலி என்று படுத்துக் கொண்டாலோ மொத்தமாக பலரின் வேலை நின்றுவிடும்.

               எப்போதுமே அடுத்தவர்களை பற்றி அதிகம் யோசிப்பவள் என்பதால், தன்னால் யாரின் நேரமும், உழைப்பும் வீணாவதை அனுமதிக்கவே மாட்டாள் அவள். இதோ இப்போதும் அவளின் கவலைகள் ஆயிரம் இருந்தாலும், அன்றைய காட்சிகளை நடித்துக் கொடுத்த பின்தான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து இங்கே வந்து சேர்ந்திருந்தாள்.

                   நம்மில் பலரைப் போல, வீடு வரத் தாமதமானால் பதறி துடிக்கும் சொந்தங்கள் எதுவும் அற்றவள் அவள். ‘அவள் வரவில்லையா??’ என்பதோடு தாய் வேலைக்காரியிடம் விசாரணையை முடித்துக் கொள்வார் என்றால், தம்பி என்று பெயருக்கு இருப்பவன் “அவனோட இருப்பா..” என்று அவனே முடிவு செய்து கொள்வான்.

                அவளைப் பொறுத்தவரை குடும்பம் என்பது எப்போதுமே கசப்பான மருந்து தான். ஆனால், அது ஆரோக்கியத்தை தருவதற்கு பதிலாக, மெல்ல மெல்ல அவளை சுருட்டி விழுங்கிக் கொண்டிருக்கிறது.

            அனைத்தும் தன் கண்முன் நடந்தாலும், எதையும் தடுக்கவோ, மறுக்கவோ அதிகாரம் அற்றவளாக அடுத்தவர்களின் கைப்பாவையாகவே வாழ்ந்து பழகிப் போயிருந்தாள் சாஷா.

             இதோ இப்போதும் தனது உயரமும் தெரியாமல், தனக்கு இந்த திரையுலகில் இருக்கும் மதிப்பும் தெரியாமல், இந்த பெரிய உலகில் தனக்கென ஒருவரும் இல்லையே என்று தனிமையில் உழன்றுக் கொண்டிருந்தாள் அவள்.

           அந்த மணல் பரப்பில், அவளின் வழக்கமான அரைகுறை உடை இல்லாமல், அருகில் பீஷ்மனும் இல்லாமல், முழுதாக தன்னை ஒரு ட்ராக் பேண்ட், டீ சர்ட்டால் மூடிக் கொண்டு கடலை வெறித்திருந்தவள் என்ன நினைத்தாளோ, அதே இடத்தில் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டாள்.

       அவளின் சொந்தஇடம் என்பதால் பாதுகாப்புக்கு எப்போதும் குறைவிருக்காது. அவளின் பாதுகாவலர்களும் அவள் கூப்பிட்டால் ஓடி வரும் தூரத்தில் தான் இருந்தனர். பாதுகாப்பு எப்படி மிகுந்திருந்ததோ அதே அளவுக்கு அவள் தனிமையும் மிகுந்து இருந்தது அங்கே.

               அடுத்த இரண்டு மணி நேரங்கள் அதே அமைதியுடன் கழிய, நேரம் எட்டைத் தொடவும் எழுந்து வீட்டிற்குள் வந்தாள் அவள். தன் அலைபேசியில் இருந்து “இரவு வீட்டிற்கு வரமாட்டேன்..”என்று அன்னைக்கு குறுஞ்செய்தி அனுப்பியவள், தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.

              அறைக்குள் இருந்த தொலைக்காட்சியை அவள் உயிர்ப்பிக்க, அவளின் விருப்பமான “சோட்டா பீம்..” கார்ட்டூன் அந்த அறையை நிறைக்க தொடங்கியது. சில நிமிடங்கள் நின்றபடி அதனை பார்த்தவள், குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

              மெல்லிய தூறலாக தண்ணீர் அவளை மொத்தமாக தொட்டு முத்தமிட, மெல்ல மெல்ல நீருக்குள் கரைந்து கொண்டிருந்தாள் சாஷா. அரைமணி நேரத்திற்கு குறையாமல் தண்ணீரில் நின்றவள் அதன்பின்னர் உடையை மாற்றி வெளியே வர, அவளுக்கான இரவு உணவுடன் வந்து நின்றார் சொர்ணம். அந்த வீட்டின் வேலையாள்.

             அவர் உணவுத்தட்டை டீபாயில் வைத்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்க்க, “நீ போ சொர்ணம்மா.. நான் சாப்பிட்டுக்கறேன்..” என்றாள் அவரிடம்.

               “ஏன் பாப்பா இப்படி செய்யுறீங்க.. நேத்தும் சாப்பிடவே இல்ல.. இன்னிக்கும் வச்சுட்டு போக சொல்றிங்க.. சாப்பிடுங்க பாப்பா..” என்று அவள் வற்புறுத்த, லேசாக சிரித்து வைத்தாள் அவரிடம்.

               “கொஞ்ச நேரம் கழிச்சு கண்டிப்பா சாப்பிடுவேன் சொர்ணம்மா.. இப்போ பசிக்கல… விடேன்…” என்று முடித்துவிட்டாள்.

        அதற்குமேல் சொர்ணமும் அவளை வற்புறுத்தவில்லை. சம்பளம் கொடுப்பவளாகிற்றே. எல்லையை மீறி எதுவும் பேசப்போய் அவளுக்கு கோபம் வந்துவிட்டால் என்ற பயம் அவளுக்கு.

             சொர்ணம் அகலவும், உணவைப் பற்றிய எண்ணமில்லாதவளாக தொலைக்காட்சியில் மூழ்கிப் போனாள் சாஷா. எப்போது உறங்கினாள் என்று தெரியாமல் அவள் உறங்கிப் போயிருக்க, அன்றும் இரவு உணவு சீண்டப்படாமலே கிடந்தது.

                  அடுத்தநாள் காலை… இரவின் எச்சங்களை மொத்தமாக ஒதுக்கி வைத்து, எப்போதும் போல சிரித்த முகத்துடன் காலை ஐந்து மணிக்கே தயாராகிவிட்டாள் அவள். அன்றைய படப்பிடிப்பு காலை ஏழு மணிக்கு தொடங்குவதாக இருக்க, சென்னையை விட்டு சற்றுத் தள்ளி அமைந்திருந்தது அந்த படப்பிடிப்புத் தளம்.

                     எப்போதுமே சரியான நேரத்திற்கு தளத்திற்கு வந்துவிடுவது அவளின் வழக்கமாக இருக்க, அன்று காலையும் குறித்த நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பாகவே வந்து காத்திருந்தாள் அவள்.

               அவளுக்கான ஒப்பனைகள் முடிந்திருக்க, அடுத்த காட்சிக்கான வசனங்கள் அடங்கிய காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவளது உதவியாளர் அவளுக்கான பழச்சாறை கொண்டு வந்து கொடுத்தார்.

             நேற்று இரவிலிருந்து உண்ணாதது லேசான சோர்வை கொடுத்திருக்க, வெறும் வயிறு பிரட்ட தொடங்கி இருந்தது. எனவே அந்த பழச்சாறை மறுக்காமல் வாங்கி கொண்டு, அவரை அனுப்பிவிட்டாள்.

           அவளுக்கான காட்சிகளை மனதில் ஏற்றிக் கொண்டு, மெல்ல அந்த பழச்சாறை அவள் அருந்த, அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தில் அமர முடியாதபடி ஏதோ சங்கடத்தை உணர்த்தியது அவள் உடல்.

               கையில் இருக்கும் காகிதத்தில் கவனம் பதியாமல் போக, கண்களை மொத்தமாக ஏதோ கருப்புப்புகை சூழ்ந்து கொள்வது போல ஒரு பிரம்மை. அதற்கும் மேலாக அடிவயிற்றிலிருந்து ஏதோ புரட்டி எடுக்க, அவசரமாக அந்த கேரவனில் இருந்த வாஷ்பேசினை நோக்கி ஓடினாள்.

                வயிற்றிலிருந்து மொத்தமும் வெளியேறிய பிறகே சற்று ஆசுவாசம் ஏற்பட, ஓய்ந்து போனவளாக இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அடுத்து பத்து நிமிடங்கள் என்ன நடந்தது என்று தெரியாமல், அரை மயக்கத்தில் கிடந்தவள் அதன் பின்பே சற்று தெளிந்து எழ, அடுத்த காட்சிக்கு அழைக்க வந்து நின்றுவிட்டனர்.

              மேலும், பத்து நிமிடங்கள் எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவள் கீழிறங்க, அன்றைய நாள் முழுவதுமே சற்று சோர்வாகவே காணப்பட்டாள் சாஷா. நல்லவேளையாக அன்று பாடல் காட்சிகளோ, வேறு எதுவும் முக்கியமான காட்சிகளோ இல்லாததால் ஒருவழியாக சமாளித்து நடித்துக் கொடுத்திருந்தாள்.

             அன்றும் வீட்டிற்கு செல்லும் எண்ணமில்லாமல் போக, கடந்த ஒரு வாரத்தின் பழக்கமாக தன் கடற்கரை பங்களாவிற்கே வந்துவிட்டாள் சாஷா. அன்று இரவும் அன்னைக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டுமே. ஆனால், நேற்றுபோல் கடற்கரைக்கு செல்லாமல், தன்னறையில் அமர்ந்து கொண்டவள் தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டாள்.

             இரவு சொர்ணம் உணவை எடுத்து வந்தபோது காலையில் நடந்தவை நினைவு வர, இன்று மறக்காமல் உணவை வாங்கி கொண்டவள் முழுதாக உண்டு முடித்தே உறங்கச் சென்றாள். அடுத்தநாள் காலை படப்பிடிப்பு எதுவும் இல்லாததால், சற்று தாமதமாக எழலாம் என்ற நினைப்புடன் தான் அவள் படுத்தது.

                ஆனால், அவளின் புது தலைவலி காலை ஏழு மணிக்கே தொடங்கிவிட, நேற்றைக்கு போலவே ஒரு அவஸ்தை சூழ்ந்து கொண்டது சாகித்யத்தை. இன்று ஒருபடி முன்னேற்றமாக காலை படுக்கையில் இருந்து எழும்போதே தலை கனத்தது.

               இயற்கையின் அவசரம் அவளை விடாமல் இம்சிக்க, பெருமுயற்சிக்கு பிறகு எழுந்து கொண்டவள் ஓய்வறைக்கு சென்று வந்தது தான் தெரியும். மீண்டும் படுக்கையில் விழுந்திருந்தாள். அடுத்து அவள் கண்விழித்தது சொர்ணாவின் அழைப்பில் தான்.

                    சொர்ணா அவளுக்கான டீயை வைத்து செல்ல, மெல்ல எழுந்து அதைக் குடிக்க முயன்றவள் அதுவும் முடியாமல் நேற்று போலவே ஓய்வறையை நாடி இருந்தாள். மொத்த சக்தியும் வடிந்து போக, படுக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு என்னவோ என்னவோ என்று மனம் சுழன்றது.

                  இந்த அவஸ்தை தாங்க முடியாததாய் இருக்க, அப்போதே தான் வழக்கமாக செல்லும் மருத்துவமனைக்கு அழைத்து முன்பதிவு செய்து கொண்டவள், அன்று காலை பத்து மணி அளவில் அந்த மருத்துவமனையை அடைந்து இருந்தாள்.

                  அந்த மருத்துவமனைக்குள் கார் நுழையும்போதே, அது பீஷ்மனின் மருத்துவமனை என்று எண்ணம் எழ, “எங்காவது கண்ணில்படமாட்டானா..” என்று அப்போதும் தொடர்ந்தது தேடல்.

                 அவன் நினைவு வழக்கம்போல் வலியை மட்டுமே கொடுக்க, மனதை நிலைப்படுத்தி வெளியே வேடிக்கையைத் தொடங்கினாள் சாஷா. ஆனால், அதற்கும் தடை விதிப்பது போல, கார் அந்த மருத்துவமனையின் பிரத்யேக நுழைவு வாயிலில் சென்று நிற்க, முற்றிலும் வரிசையாக வாகனங்கள் மட்டுமே.

               தன் காரில் இருந்து இறங்கியவள் மருத்துவமனையின் பின்புறம் இருந்த விஐபிகளுக்கான தனி வழியில் நேராக மருத்துவமனைக்குள் நுழைந்தாள். அந்த மருத்துவமனையில் அவள் பெயர் பிரசித்தம் என்பதால், ராஜமரியாதை தான் அவளுக்கு.

             ஆனால், எதையும் எதிர்பாராதவளாக தான் பார்க்க வந்த மருத்துவர் மீனலோச்சனியின் அறைக்கு விரைந்தாள் சாஷா. அவர் வேறு ஒரு நோயாளியை பார்க்க சென்றிருப்பதாக, வாசலில் இருந்த நர்ஸ் கூற, அவர் வரும்வரை அவர் அறையில் காத்திருந்தாள் சாஷா.

             அதற்குள் மனம் எட்டாத உயரங்களை எல்லாம் எட்டிப் பிடிக்க முயற்சிக்க, அந்த மருத்துவரின் அறிமுகம் கிடைத்த நொடிகளை நினைத்துக் கொண்டாள் அவள். பீஷ்மன் தான் அவளை முதல்முறை அங்கே அழைத்து வந்தது.

                      கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் அவளின் பத்தொன்பதாவது வயது தொடங்கி இருந்த நேரம். அவள் அன்னை மதுரிமா திரைப்பட ஆசையில் அவளை அழைத்துக் கொண்டு சென்னை வந்திருக்க, அவளின் நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ அவள் வாய்ப்புத் தேடி வந்த முதல் கம்பெனி பீஷ்மனின் நிறுவனம்.

                 அவளது அங்க லாவண்யங்களை எடுத்துக் காட்டும்படி உடை உடுத்தி, அவள் அழகுகளை பட்டும்படாமல் மதுரிமா காட்சிப்படுத்தி இருந்தது வீண் போகவில்லை. அங்கிருந்த மேலாளருக்கு அவளின் புகைப்படங்கள் திருப்தியாக இருக்க, தனது அலைபேசியில் ஏற்றிக் கொண்டார் அவர்.

                      கூடவே அதன் பிரதிகளையும் வாங்கிக் கொண்டவர் அதை பீஷ்மனின் தந்தையிடம் காண்பிக்க, அவருக்கும் திருப்தியாக இருக்கவே அடுத்து ஒரு திரைப்படத்தில் அவளுக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தார் அவர். கதாநாயகி என்று இல்லாமல் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரம் அவளுக்காக காத்திருந்தது.

                   இயல்பிலேயே நடனம் கைவர பெற்றவள் என்பதால், அவள் முகத்தில் உணர்வுகள் அழகாக அபிநயம் பிடிக்க, தன் முதல் திரைப்படத்தில் தனக்கு கொடுத்த வேலையை திறம்பட செய்து முடித்திருந்தாள். விமர்சனங்களில் கூட அவள் பாத்திரத்தைப் பற்றி ஒரு வார்த்தை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு சாதித்து இருந்தாள் அவள்.

                     ஆனால், சரியாக அதே சமயம் தான் சங்கரநாராயணனின் சறுக்கல் தொடங்கி இருந்தது. அவர் தயாரிப்பு நிறுவனம் கடலில் மூழ்கும் கப்பலாக நிலையிழக்கத் தொடங்கி இருந்த நேரம் அது. அவரது தோல்வி அவர் உடலையும் பாதிக்க, மொத்தமாக பீஷ்மனின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது அவர்களின் தயாரிப்பு நிறுவனம்.

               முதலில் சாஷா என்று ஒருத்தி இருப்பதே அறியவில்லை அவன். அவன் பணத்திற்கு மயங்கிய பெண்கள் அவர்களாகவே அவனை சுற்றி வளைக்க, அவனுக்கும் பெரிதாக கொள்கைகள் எல்லாம் இல்லை என்பதால் கட்டுப்பாடற்ற சுதந்திரமான உலகம் தான் அவனுடையது.

                  இப்போது தயாரிப்பு துறையிலும் இறங்கிவிட, முன்னணி கதாநாயகிகளே அவன் அறிமுகத்திற்காக காத்து நிற்க, அந்த காத்திருப்பு பிடித்திருந்தது அவனுக்கு. அவன் உலகில் அவன் உல்லாசமாக சிறகடித்துக் கொண்டிருக்க, மீண்டும் படவாய்ப்பு ஒன்றிற்காக அவன் அலுவலகத்திற்கு வந்திருந்தாள் சாஷா.

                 அந்த நிறுவனத்தின் வெளியே நின்று அவள் யாரிடமோ பேசிக் கொண்டிருக்க, அந்த நேரம் காரில் வந்து இறங்கினான் பீஷ்மன். கண்களில் இருந்த கண்ணாடியை கழற்றிக் கொண்டே இறங்கியவன் பார்வையில் சாஷா பட்டுவிட, அவள் கண்களும், அது வெளிப்படுத்திய கலவையான உணர்வுகளும் பீஷ்மனை ஈர்த்துக் கொண்டது. ஆனால், அதற்கும் மேலாக அவன் கணக்கிட்டது அவளின் உடல்வாகு தான்.

                  மெல்லிய கொடிபோல என்று பெண்களை வருணிப்பார்களே, உண்மையில் அப்படித்தான் இருந்தாள் அவள். அவள் தன் கைகளில் நெகிழ்ந்து நின்றால் அவள் உடல் எப்படி வளையும் என்று அப்போதே எண்ணமிட்டுக் கொண்டான் பீஷ்மன்.

                 ஆனால், யாரோ எவரோ என்று அவன் தள்ளிப்போக, அவளை அவனிடமே கொண்டு நிறுத்தியது அவள் விதி. அதற்குமேல் பீஷ்மனுக்கு சொல்லியா தர வேண்டும்?? அவள் அன்னையை முழுதாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் அவளின் அத்தனைக்கும் அவனே பொறுப்பாகி போனான்.

                  அத்தனைக்கும் என்றால் அவள் சம்பந்தப்பட்ட சிறு தலையசைப்புக் கூட அவன் விருப்பப்படிதான் எனும் அளவுக்கு மொத்தமாக சாஷாவை சுற்றி வளைத்திருந்தான் அவன். முதலில் அவன் அருகாமையில் அஞ்சி நடுங்கியவளையும் கூட, அழகாக பாடம் கற்பித்து தனக்கேற்ற கைபொம்மையாக மாற்றிக் கொண்டிருந்தான்.

                 பத்தொன்பது வயது தானே அவளுக்கும். வளர்ந்தும் வளராத கனவுப்பருவம் அல்லவா.. வகைவகையான உடைகள், நகைகள், ஆடம்பர பரிசுகள்…அதற்குமேலாக தேனைப் போல் வருடி மயக்கும் வித்தைக் கற்ற பீஷ்மன். அவன் கைகளில் சாஷா உருகிக் கரைந்ததில் அதிசயம் இல்லையே.

                 ஆனால், அந்த பத்தொன்பது வயதில் அவள் தனது பாதுகாவலனாக பீஷ்மனை எண்ணத் தொடங்கியது தான் முதலுக்கே மோசமாகிப் போனது இப்போது. பாதுகாவலன் என்ற எண்ணம் மெல்ல மெல்ல, காதலன் என்ற நிலையை அடைந்துவிட, அவனும் அதற்கேற்பவே நடந்து கொண்டதில் மயக்கத்தில்  தான் இருந்தது பெண்.

               ஆனால், அவளின் நிலை என்னவென்று அவ்வபோது பீஷ்மன் உணர்த்திக் கொண்டே இருந்தது இப்போது காலதாமதமாக புரிய வந்திருக்க, நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் பேதை.

                அவள் யோசனையை கலைப்பவராக மருத்துவர் மீனலோசனி அறைக்குள் நுழைய, அவரிடம் தன் நிலையை எடுத்துக் கூறினாள் சாஷா. அவள் கூறிய விஷயங்கள் அவருக்கு வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்த, அவளிடம் எதுவும் கூறாமல் அவளை முழுமையாக பரிசோதித்தார் மீனலோசனி.

               பரிசோதனைகளின் முடிவில் அவர் முகம் அதிர்ச்சியை காட்ட, “நான் கொடுத்த டேப்ளெட்ஸ் எல்லாம் கரெக்ட்டா எடுத்துட்டு இருக்கீங்க தானே…” என்று கேள்வி எழுப்பினார் அவர்.

               அவை என்ன வகை மாத்திரைகள் என்று அறியாதவளா அவள்.ஆனால்,அதற்கான அவசியமே ஏற்படவில்லையே கடந்த ஒரு மாதமாக. அதை அவரிடம் கூறும் விருப்பம் அற்றவளாக , அவள் மெல்ல தலையசைக்க,

                    “யூ ஆர் ப்ரெக்னன்ட்…” என்று அவளை அதிர வைத்தார் அந்த மருத்துவர்.

                      சாஷா அவர் வார்த்தைகளில் அதிர்ந்து நிற்க, “அவர் கூறியது நன்றாகத்தான் கேட்டதா…” என்று சந்தேகத்தில் இருந்தாள் அவள். மீண்டும் அந்த மருத்துவரிடம் “நீங்க என்ன சொன்னிங்க டாக்டர்..” என்று அவள் வினவ

                    “நீங்க கர்ப்பமா இருக்கீங்க சாஷா..” என்று மற்றுமொரு முறையும் அழுத்திக் கூறினார் அவர்.

                    இதற்கு நியாயமாக மகிழ வேண்டுமா அல்லது அழ வேண்டுமா என்பதே புரியாமல் அவள் நிற்க, அவள் நிலைப் புரிந்தவராக, மெல்ல அவள் கையைப் பிடித்தார் அந்த மருத்துவர்.

                   அவரின் பரிதாபம் அந்த நிமிடம் மிகவும் கொடுமையானதாக தோன்ற, “நான் அவசரமா கிளம்பனும் டாக்டர்… திரும்ப வரேன்..” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து விலகிச் சென்றாள் சாஷா. செல்லும் அவளை மீனலோசனி பாவமாகப் பார்க்க, அவரது பார்வை துரத்தியது அவளை.

                  வேகமாக சுற்றி இருக்கும் யாரையும் நிமிர்ந்தும் பாராமல் அவள் தன் காருக்கு விரைய, காரில் ஏறி அமரவும் தான் சுவாசம் மெல்ல சீரானது அவளுக்கு. மெல்ல தன் வயிற்றை தடவிக் கொண்டவளுக்கு பீஷ்மனின் முகம் நினைவில் வர, அடுத்தநொடி முகம் பயத்தில் ரத்தநிறம் பூசிக் கொண்டது.

                 “இந்த விஷயம் வெளியேத் தெரிந்தால், தன்னைக் கொல்லக்கூட தயங்கமாட்டான்..” என்று தோன்ற, வேகமாக அந்த மருத்துவமனை வளாகத்தை விட்டு புறப்பட்டாள் அவள். எதிலிருந்தோ தன்னைக் காத்துக் கொள்பவள் போல் அவள் ஓட, அதற்குமுன்பாகவே அவளைக் கண்டு கொண்டிருந்தான் வேடன்.

Advertisement