Advertisement

          கால்களில் மகனுக்கு  சாக்ஸ்ஸை மாட்டி கொண்டு இருந்தாள் வானதி .. சற்றே சஞ்சலமாக அருண் அவளை ஏறிட்டு கேட்டான், “அம்மா, இன்னிக்காச்சும் டூட்டி முடிச்சிட்டு அப்பா வந்தப்பறம்  ஸ்கூல் பீல்ட்  ட்ரிபிக்கு   பீஸ் வாங்கி வை மா ப்ளீஸ்” என்றான் அருண். 

          தாயிடம் நம்பிக்கை இல்லாமல் மீண்டும் ,” மா நாளைக்கு தான் மா கடைசி அப்பறம் சேர்த்துக்க மாட்டாங்க மா” என்றான். மௌனமாக தலையை மட்டும் அசைத்து மகனுக்கு விடை  கொடுத்தாள் . திரும்பி  திரும்பி பார்த்துக்கொண்டே பள்ளி வாகனத்தில் ஏறினான் அருண்.

           வீட்டின் வரவு செலவு மொத்தமும் மாமியாரே பார்த்துக் கொள்வார் . வெளி வேலைகளை மாமனாரும் கணவருமே பார்த்துக் கொள்வார்கள். வீட்டு வேலைகள் மட்டுமே வானதிக்கு. மகன் பள்ளிக்கு கிளம்பியதும் மாமனார் மாமியாருக்கு காலை சிற்றுண்டி  அது நடக்கயிலேயே சிறிது நேரத்தில் நைட் ஷிபிட் முடித்து கணவன் வந்ததும் அவனை கவனித்து பின் மீதி வேலைகள் என்று வரிசை கட்டும் .

              மனம் பாரமாகவே திரும்பி வந்து மீதி வேலைகளை கவனித்தாள். வேலைகளின் ஊடே தன்னை பற்றிய சிந்தனையில் இருந்தாள்.

            கார் கம்பெனியில்  வேலை, கை நிறைய சம்பளம் பாலுவிற்கு. பார்க்கும் பெண்  டிகிரி மட்டும் படித்திருந்தால் போதும், வேலைக்கு  செல்லக்கூடாது என்று கேட்டு தான் பாலுவிற்கு வானதியை மணந்து கொண்டு வந்தார்கள். அப்போது சற்று பெருமையாகவே இருந்தது , ஆனால் இன்று தன் கையில்  ஒரு  சிறு கைத்தொழிலாவது இருந்திருக்கலாம் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

           தன் தாய் வீடு சற்று வசதியில் குறைவு , ஏனோ அந்த தாழ்வு மனப்பான்மை வானதிக்கு எப்போதும் உண்டு. அதனாலோ என்னவோ  தன்னை இந்த வீட்டின் மருமகளாக தான் நினைக்கிறார்களா என்று அவளுக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். வீட்டில் அனைவருக்கும் பார்த்து பார்த்து செய்வாள் , அவளுக்கு என்று வந்துவிட்டால் யாராலும் செய்ய இயலாது . ஏன் ஒரு ஜுரம் வந்தால்  கூட வெந்நீர் வைத்து தர ஆள் இல்லாமல் போகும் அவளுக்கு. அது என்னவோ அவள் விதி . 

            மாமியார், மாமனார்  கொடுமை எல்லாம் அவளுக்கு அந்த வீட்டில் இல்லை , எல்லா மருமகளை போல மாமியாரிடம் அன்யோன்யமாக இருக்க வேண்டும், கலகலப்பாக பேசிக் கொள்ள வேண்டும்  என்றே அவளும் நினைத்தாள்  முதலில்.  நினைத்தது எல்லாம் நடந்துவிடுமா என்ன. எப்போதும்  எதிலும் பட்டும் படாமல் விட்டேத்தியாகவே  இருக்கும் மாமியாரை என்ன தான் செய்வது  என்றே தோன்றும். திடீரென்று நன்றாக பேசுவார்,  சில நேரம் நீ யாரோ நான் யாரோ  யாரோ என்று நடந்து கொள்வார். 

              மாமனாரை பற்றி கேட்கவே வேண்டாம் . மிகுந்த செல்வாக்கான மனிதர் ரயில்வேயில் வேலை பார்த்து ரிடைர் ஆனவர். எவரிடமும் தகுதி பார்த்து மட்டுமே பழகுபவர் .எப்போதும் தோரணையாகவே நடந்து கொள்வார் .தனக்கு தேவையான அனைத்தும் சரியானா நேரத்திற்கு வந்துவிட்டால் நீ நல்ல மருமகள்.  மற்றபடி எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளமாட்டார் .

              அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள்  இருப்பினும் அவள் பெரிதாக எடுக்காமல் இருப்பாள் . மீறி நடக்கும் போதே அவள் அதை பாலுவிடம் எடுத்து செல்வாள். அவனுக்கு இது எல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று அவள் வாயை அடைத்து விடுவான். எல்லா வற்றிலும் ஒரு அலட்சியம் உண்டு பாலுவிடம். எதையும் பெரிதாக அலட்டி கொள்ளமாட்டான் . ஒற்றை பிள்ளையாய் வளர்ந்ததால் இவ்வாறு இருக்கிறானோ என்று கூட நினைத்திருக்கிறாள்.

            மற்றபடி துணி நகை என்று கேட்டால் அனைத்துமே வாங்கித் தருவான் பாலு ,. கேட்டால்  மட்டுமே செய்வான். அவனாக எதையும் இது வரை வாங்கித் தந்ததில்லை. ஒரு பிறந்தநாள் பரிசு, ஒரு காண்டில் லைட் டின்னர் , சர்ப்ரைஸ்ஸாக ஒரு படத்திற்கு கூட்டி செல்வது என்று எல்லாம் கேட்டால் , “இன்னும் என்ன காலேஜ் படிக்கற பசங்க மாதிரி எதிர்பாக்குற” என்று நம்மையே கிண்டல் செய்துவிடுவான். “நான் ரொம்ப  பிராக்டிகல் மா சினிமா தனமாலாம் இருக்காத” என்று முடித்துக் கொள்வான். 

             சரி போகட்டும் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை ,  கஷ்டபட்டு ஒரு  புது வகை சமையல் செய்து அசத்தினால்,  அதை உண்ண மட்டுமே தெரியும். ஒரு சின்ன பாராட்டு. “சூப்பரா இருக்கு மா” , குறைந்த பட்சம் “பரவலையே நல்லா  தான் இருக்கு” என்று அவன் வாயில் வந்ததே இல்லை. . என்ன வளர்ப்போ என்று அவளும் அடிக்கடி நினைத்து கொள்வாள்.  இந்த வீட்டிற்கு வந்து ஒவ்வொருவரை பற்றி புரிந்து கொள்ளவே சில ஆண்டுகள் பிடித்தது வானதிக்கு.

              சண்டைகள் மனஸ்தாபங்கள் எழும் போது மாறி மாறி  விட்டு கொடுத்தால் தானே வாழ்கை உயிர்ப்பாக இருக்கும். அவ்வப்போது சில பரிசு பரிமாறல்கள் , பாராட்டுகள் என்று  இருந்தால் தானே வாழ்க்கையில் சுவாரசியமும் இருக்கும். எல்லோருடைய  மனசும் ஒரு சின்ன  பாராட்டுக்காக தானே ஏங்கிக் கொண்டிருக்கிறது.

             இரண்டு நாட்களுக்கு முன் தான், தான் செய்யாத தவறுக்கு மாமியாரிடம் பேச்சு வாங்கியதை ஆதங்கத்துடன் கணவனிடம் கொட்டி தீர்த்தாள் . அதில் ஆரம்பித்தது அவர்களது சண்டை. எப்பொழுதும் போல் கடைசி வாக்கியம் பாலுவினுடையதே . சரி சண்டை வந்து அவளை வார்த்தையால் காயப்படுத்தி விட்டோம், ஒரு மன்னிப்பு, ஐயோ அது பெரிய வார்த்தை.  சரி சமாதானம், அதுவும் இல்லை.  சமாதானம் செய்வது என்ற வார்த்தை அவன் அகராதியிலேயே கிடையாது. அவன் முடித்தால் முடித்தது தான் . 

                தூங்கி எழுந்ததும் பேப்பரில் ரப்பர் வைத்து அழித்தது போல் இருந்து விடுவான். சண்டையை சீக்கிரமே மறப்பது உத்தமமே ,  ஆனால்  காயப்படுத்தியதை மறப்பது எவ்விதத்தில்  நியாயமாகும்.  வானதியால் பாலுவிடம் செய்ய முடிந்தது மௌன விரதம் இருப்பது மட்டுமே. அவனுக்கு அனைத்தும் செய்வாள் ஆனால் பேச மட்டும் செய்ய மாட்டாள் . அவன் ஏன் பேசவில்லை என்று ஒரு வார்த்தை கேட்டால் போதும்  பாவி மனம் சமாதானம் அடையும். செய்வானா? இது வரை செய்து இருக்கிறானா, இப்போது செய்ய என்று அவள் மனமே அவளை  எள்ளி நகையாடும்..

                  “நீ தானே பேசாமல் இருக்கிறாய் இதில் நான் என்ன செய்ய” என்று விட்டு விடுவான். இன்றாவது தன்னிடம் ஏதாவது கேட்பானா என்று யோசித்து கொண்டே மீதி வேலைகளை கவனித்தாள் . மணி ஒன்பது, பாலு வரும் நேரம் வாசலை பார்த்துக்கொண்டே மாமனாருக்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள். பத்து நிமிட தாமதத்திற்கு பிறகே வீடு வந்து சேர்ந்தான். 

                 இரவு வேலை முடிந்து வந்த மகனை பார்த்து “ஏன்பா பாலு இன்னிக்கும் லேட்டா” என்று கேட்டார் மாமியார். “கொஞ்சம் வேலை ஜாஸ்தி மா” என்று முடித்துக் கொண்டு அன்றைய தினசரியை கையில் எடுத்துக்கொண்டு  அறைக்குள் சென்று விட்டான்.

            “நீ அவனை கவனி”  என்று மாமனாருக்கு  தோசை ஊற்றும் வேலையை அவர் கையில் எடுத்துக்கொண்டார். மாமியார்கள் தான் எவ்வளவு விசித்திரம், அது வரை ஒரு வேலை செய்யாமல் பொழுதை போக்கி விட்டு ,மகன் வந்ததும் வீட்டு வேலைகளை மருமகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு என்று எப்போதும் போல மனதிலேயே நினைத்துக் கொண்டு கணவனுக்கு என்ன வேண்டும் என்று பார்க்க அவர்கள் அறைக்கு சென்று விட்டாள் வானதி.

            அவன் குளிக்க வெந்நீர் தயார் செய்து , மாற்றுடை ,துண்டு சகிதம் எடுத்து வைத்து விட்டு ஏதாவது கேட்பானா என்று அவன் முகம் பார்க்க, அவன் நாளிதழுக்குள் புதைந்திருந்ததை பார்த்து, ஏதும் கேட்கப்போவதில்லை என்று மீண்டும் சமையல் அறைக்கு வந்தாள் .

              அதற்குள் அவ்விருவரின் காலை  உணவு முடிந்து மாத்திரைகளின் படலம் ஓடிக்  கொண்டிருந்தது.  பாலு குளித்து முடித்து வருவதற்குள் அவனுக்கான பழக்கலவையுடன் சிற்றுண்டியும்  மேஜை மேல் தயாராக இருந்தது.

              சாவதானமாக தந்தையுடன் அரட்டை அடித்தபடியே காலை உணவை முடித்துக்கொண்டான். பின் சோம்பல் முறித்துக்கொண்டே தூக்கத்திற்கு தயார் ஆனான். இதற்குள் வானதி அவன் முகத்தை பதினைந்து தடவையேனும் பார்த்திருப்பாள்.  பலன் தான் பூஜ்ஜியம் ஆயிற்றே.

                அதற்குள் பாலுவின்  தந்தை , “என்ன பா  இன்னிக்கும் சீக்கிரமே கெளம்பணுமா” என்று வினவினார். ஆமாம் பா என்று கூறி அறைக்குள்  செல்ல எத்தனித்தான். பாலு மூணு நாள் ஆச்சி பா நீ அருணை  பார்த்து , என்கிட்டே கேட்டுட்டே இருக்கான் பா என்று அவன்  தந்தை வினவ அதற்கு பாலு , “ஆமாம் பா , அவன் பாஸ்கெட்பால் கோச்சிங் முடிச்சி வீட்டுக்கு வரதுக்குள்ள நான் கெளம்பிடறேன்” என்று  சோகமாக உரைத்தான் அருணின்  பாசமிகு தந்தை . 

             அப்போதுதான் வானத்திற்கு நினைவு  வந்தது ,. ஹய்யோ அருண் பீஸ் வேற வாங்கி வைக்க சொன்னானே  என்று மனம் சோர்ந்தாள்  வானதி. என்ன செய்ய தங்களின் கோபதாபங்களால் பாதிக்கப்  பட போவது அவர்கள் பிள்ளைகள் தானே என்று மனதை கல்லாக்கி கொண்டு மகனுக்காக பாலுவிடம் பேச விரைந்தாள்.

                    அறையில் படுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் பாலு, அவனிடம் விரைந்து, “என்னங்க தம்பிக்கு ஸ்கூல் பீல்ட் ட்ரிப்க்கு போக ரெண்டாயிரம் வேணுமாம். நாளைக்கு தான் கடைசி  தேதியாம்ங்க”  என்றாள் . ஒன்றுமே  நடவாதது போல்  பாலு, “எங்க கூட்டிட்டு போக போறாங்களாம்” என்று சாதாரணமாகவே வினவினான். 

               வானதி, ”ஏதோ பால் கம்பெனி பேரு சொன்னானே” என்று யோசித்து, “ஹாட்ஸன் (hatsun) கம்பெனிக்காங்க” என்றாள் . சரி என்று அவன் பர்சிலிருந்து இரண்டாயிர ரூபாய்த் தாளை நீட்டினான்.  

               பாலு, “ரெண்டு நாளா மேடம் நம்மள கண்டுக்கவே  இல்ல, இப்போ பையனுக்குனதும்  கோவம் போயிடிச்சோ” என்று  நக்கலாக வினவினான். வானதி கசந்த முறுவலை சிந்தி விட்டு விளக்கை அணைத்துவிட்டு அறையில் இருந்து வெளியேறினாள் அவன் தூங்க…

“இம்முறையும் பாசமே வென்றது, ஆனால் அவளுடைய தன்மானம் ஆயிரமாவது முறை தூக்கில்  ஏறியது “.

Advertisement