Advertisement

அத்தியாயம் 16

         

          “நான் பக்கத்துல படுக்குறவங்க மேல கால் எல்லாம் போட மாட்டேன்…நீ பொய் சொல்ற…”என்று உண்மை புரிந்தாலும் கெத்தாக பேசினாள் சுருதி…

       அடுத்து ஜெயக்குமார் ஏதோ பேச போக…இவள் அதற்கு மறுமொழி சொல்ல என்று கணவனும் மனைவியும் சண்டையிட்டே வெற்றிகரமாக அரைமணி நேரத்துக்கும் மேல் வீணாக்கியிருந்தனர்…(உங்கள வைச்சுட்டு சண்டை வேணும்னா போடலாம்…ரொமான்ஸ் வாய்ப்பே இல்ல…)

              தூக்கம் கண்களை சுழட்டவும் இருவரும் சேர்ந்து ஒரு உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்டனர்…அது என்னவென்றால் இருக்கிற எல்லா தலையணைகளையும் இருவருக்கும் இடையில் வைத்து ஒரு பாலம் அமைப்பதாக முடிவு செய்தனர்…அந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது…நானும் வரமாட்டேன் என்பது போல்…

         அடுக்கி வைத்துக்கொண்ட தலையணைகளுக்கு ஒருபுறம் அவனும் மறுபுறம் இவளும் படுத்துக்கொண்டனர்…

            சுருதிக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது…ஜெயக்குமார் இதுவரை எப்பொழுதும் கீழே படுத்தது கிடையாது…எங்கயும் கீழே படுக்கவும் மாட்டான்…சொகுசு காரன்…அதையும் மீறி கீழே படுத்தான் என்றால் இவன் என்னமோ சக்கரை மாதிரி அனைத்தும் ஊர்வனவும் இவனை கடித்து விடும்…பச்சை குழந்தைக்கு கொசு கடித்தால் எப்படி தடுப்பு தடுப்பாக சிவந்து போய் தெரியுமோ…அது மாதிரி இவன் நிறத்துக்கும் அந்த சருமத்துக்கும் அப்டி தெரியும்…அதனால் தான் அவனை கீழே படுக்க விடாமல் மேலே படுக்க வைத்தாள்…காலையில் எந்திரித்து வேலை பார்த்ததற்கே கையெல்லாம் கொசு கடித்து சிவந்து இருந்தது…அதுவே அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது…கட்டுன கணவனை கொடுமை படுத்துகிறோமோ என்பது போல்…எந்த கணவன் வாசல் தெளித்து கோலம் எல்லாம் போடுகிறான்…

                 மறுநாள் விடியல் யாருக்கு நல்லதாக அமைந்ததோ இல்லையோ ஜெயக்குமார்க்கு அமோகமாக அமைத்தது என்று தான் சொல்ல வேண்டும்…அவனின் தர்மபத்தினி அவன் எழுவதற்கு முன்பே எழுந்து வாசல் பெருக்கி கோலம் போட்டு…சமத்து பெண்ணாக டீயை போட்டு அவனை எழுப்பினாள்…

       முதல் நாள் தூக்கம் இல்லாததால என்னமோ ஜெயக்குமார் அடித்து போட்டது போல் தூங்கியவன் அவள் வந்து எழுப்பும் வரை எழுந்திருக்கவே இல்லை…அவள் வந்து தன்னை தட்டி அழைத்து எழுப்பியவுடன் பதறி எழுந்தவன் தன் மனைவி கையில் டீயுடன் நிற்பதை பார்த்தவுடன் அசந்துவிட்டான்…(ரொம்ப சந்தோச பட்டுக்காதே…ஏதாவது பெரிய ஆப்பு வைத்திருப்பாள்…)

           “பேபி மா…மாமாவுக்காக டீ போட்டியா…”என்று டீயின் மேல் படாமல் லேசாக அவளை கட்டி அணைத்தவாறு கேட்டான் ஜெயக்குமார்

      “உன் மண்டை…போ போய் மூஞ்சே கழுவிட்டு வா…டீ சமையல் கட்டுல இருக்கு…எடுத்துட்டு வா…”என்று அவனை திட்டியவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து டீ குடிக்க ஆரம்பித்தாள்…

        “அதானே பார்த்தேன்…எனக்கோனு நினைச்சு கொஞ்ச நேரத்துல ஜெர்க் ஆகிட்டேன்…”என்று அவன் கூறவும் நேற்று அவளின் அத்தை லட்சுமி தன் கணவனை பார்த்து செய்ததை போல் இவளும் வாயில் கை வைத்து மூடிட்டு போ என்பதை போல் சைகை செய்தாள்…

          “இது என்ன…உங்க குடும்ப முத்திரையா…எல்லாரும் செய்யுறீங்க…”என்று சத்தமாக பேசிக்கொண்டே குளியலறை நோக்கி சென்றான்…

  குளியலறை சென்று முகம் கழுவி விட்டு…சமயலறைக்கு சென்று டீயை எடுத்து கொண்டு சுருதி இருக்கும் இடத்துக்கு வந்தவன்…இருவர் அமரும் சோபாவில் அவளுக்கு அருகில் அமர்ந்தவன் “பேபி மா…மாமா கஷ்ட படக்கூடாதுனு நீயே எல்லா வேலையும் செய்ஞ்சுட்டியா…”என்று அவளை உரசியவாறே டீ குடித்து கொண்டே கேட்டான்…

          “ஏதாவது சொல்லிற போறேன்…ஒரு வேலை ஒழுங்கா பார்க்கத்தெரியுதா…பேரு மட்டும் பெத்த பேரு…ஐஐடில படிச்சேன்னு…கூட்டி கூட்டி குப்பையெல்லாம் பக்கத்து வீட்டு காரவங்க தென்னை பக்கத்து தள்ளி விட்டு இருக்க…அந்த அம்மா காலங்காத்தால வந்து சத்தம் போட்டுட்டு இருக்கு…”என்று முறைத்தவாறு கூறினாள் சுருதி…

       “ஏன் டி…கூட்டுறது எல்லாமா ஐஐடில சொல்லி தராங்க…நான் அங்கெல்லாம் தள்ளி விடல…குப்பையெல்லாம் அள்ளிட்டேன்…”என்று அவனும் கூறினான்…

         “அப்ப நான் பொய் சொல்லறேன்னு சொல்ல வரியா…”என்று கேட்டாள் சுருதி…

         “ஆமாம் டி…பொய் தான் சொல்ற…”என்று அவன் சொல்வதற்குள் வேகமாக சொல்லியது அவள் மனசாட்சி…அதை தலையிலே ரெண்டு தட்டு தட்டி அனுப்பி வைத்தவள் ஜெயக்குமாரை முறைத்துக்கொண்டிருந்தாள்…

     ஆமாம் னு சொன்னா நாம உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று முடிவெடுத்தவன்…வேலையும் அவளே பார்த்துக்கொள்கிறாள் சந்தோசம் தானே இதற்கு எதுக்கு நம் உயிரெல்லாம் பணயம் வைக்கணும் என்று நினைத்தவன் ஒன்றுமே சொல்லாமல் சிரித்துவைத்தான்…

           “என்ன ரொம்ப பம்முறான்…பயந்துட்டான் போல…சுருதி உனக்கு பொண்டாட்டியா இருக்குறதுக்கு எல்லா தகுதியும் வந்திருச்சு…”என்று மனதிற்குள் நினைத்தவள் அவனை பார்த்து மையமாக சிரித்து வைத்தாள்…

      “சரி குமாரு…காய் எல்லாம் நறுக்கி வைச்சுட்டேன் சமைச்சுரு…தண்ணி ரெண்டு பேருக்கும் தேவையானதே அவங்க அவங்களே எடுத்துக்கலாம்…சரியா…பாத்திரம் கழுவுறதெல்லாம் நான் பார்த்துகிறேன்…தண்ணி நீ தான் எடுத்து தரணும்…”என்று ஒரு இன்ஸ்டன்ட் உடன்படிக்கையை போட்டாள் சுருதி…

      சுருதிக்கு சமைக்க தெரியாது என்பது உலகறிந்த ரகசியம்…டீ காபி கூட இப்பொழுது தான் பழகினாள்…குமாருக்கு சமையல் என்றால் அவ்வளவு விருப்பம்…நன்றாகவும் சமைப்பான்…

      ஜெயக்குமார் அனைத்தையும் ஒப்பு கொண்டு வேலைகளை மடமடவென்று பார்க்க ஆரம்பித்தான்…அவனுக்கு இன்று கல்லூரி செல்ல வேண்டும்…செம் ஆரம்பித்து இருந்ததால் 9  மணிக்கு மேல் சென்றால் போதுமானது…

     சமையலை முடித்து விட்டு குளிக்க தண்ணி எடுக்க சென்றான்…தண்ணீர் குழாய் இவர்கள் வீட்டுக்கு மிக அருகில் ஒரு 10  மீட்டர் இடைவேளை தான்…அதனால் தான் ஒத்தும் கொண்டான்…இவர்கள் வீட்டிலும் போர் போடலாம் தான்…கோர்ட்டில் ரொம்ப காலமாக இந்த வீட்டின் மீது வழக்கு நடந்து கொண்டு இருப்பதால் …இந்த சொத்தை அனுபவிக்க மட்டும் தான் இப்போதைக்கு முடியும் இவர்களுக்கு உரிமை..அதை விற்கவோ மாற்றம் செய்யவோ அவர்களுக்கு உரிமை கிடையாது…மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கோர்ட் தீர்ப்பு இவர்களுக்கு சாதகமாக வர வேண்டும்…நாம ஊர் நீதிமன்றம் எல்லாம் நீதியே எப்பொழுது உடனே கொடுத்திருக்கிறது…பல வாய்தா சென்று நீதிக்கு நாக்கு தள்ளி செத்த பின்னாடி தான் தீர்ப்பு தருவார்கள்…

                   ஜெயக்குமார் குளிக்க தண்ணீர் எடுத்து ஊற்றி வைத்து விட்டு துண்டு எடுக்க உள்ளே சென்றான்…அங்கு அதே நேரம் அவளது துண்டை எடுத்து வந்த சுருதி இவனும் துண்டு எடுத்து குளியலறை நோக்கி போகவும் சுருதியும் வேகமாக  அவனை முந்திக்கொண்டு குளியலறை நோக்கி ஓடினாள்…ஒரு நொடியில் யூகித்தவன் சுருதி பின்னாடியே குமாரும் ஓடினான்…சுருதியை பிடிப்பதற்குள் குளியலறைக்குள் நுழைந்து கதவை மூட போனாள்…அவள் கதவை மூடுவதற்குள் தடுத்து நிறுத்தி வெளியில் இருந்து அவன் கதவுக்கு அழுத்தம் குடுத்தான்…அவளும் உள்ளிருந்து கதவை மூட அழுத்தம் கொடுத்தாள்…

   

     “ப்ளீஸ் குமாரு…லேட் ஆச்சு…கே கே சார் இப்ப தான் கால் பண்ணி உடனே வர சொன்னாரு…அதான் டா…நான் வந்தவுடனே நீ குளி…”என்று உள்ளிருந்து கத்திக்கொண்டிருந்தாள் சுருதி…

        “எனக்கும் லேட் ஆச்சு டி…இன்னைக்கு எக்ஸாம் டி…ப்ளீஸ் வெளியே வாடி..என் தங்கம்ல…”என்று மணி வேறு எட்டு முப்பதுக்கும் மேல் ஆகி விட்டதென்று கெஞ்சினான்…

     “அந்த ஆளை பத்தி உனக்கு தெரியாது கத்துவார் டா…முதல் நாளே திட்டு வாங்குன நல்லவா இருக்கும்…”என்று அவளும் கதவை பலமாக மூட போராடியவாறு பேசினாள்…

      “மாமாகிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு…சொல்லவா…ரெண்டு பேருக்கும் லேட் ஆகாது…”என்று அவனும் கதவை அவள் மூட முடியாதவாறு பிடித்துக்கொண்டு கேட்டான்…

     “என்ன சொல்லி தொலை…”என்று கேட்டாள்…

      “இல்லை பேபி மா…உனக்கும் லேட் ஆச்சு…எனக்கும் லேட் ஆச்சு…”என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்தி கூறினான்….

       “நொண்டி குமாரு….அதான் தெரியுமே…வேகமா சொல்லி தொலை..”என்று அவன் அசந்த நேரத்தில் தள்ளி விட்டு கதவை சாத்தலாம் என்று யோசித்தவாறு கேட்டாள் சுருதி…

        “ரெண்டு பெரும் சேர்ந்து ஒண்ணா குளிச்சோம்னா…நேரமும் மிச்சம் ஆகும்…தண்ணியும் மிச்சம் ஆகும்…”என்று அவன் சிரிப்புடன் கூறியவுடன் ஆ ஆ என்று வாயில் கைவைத்தவள் கதவை விட்டிருந்தாள்…

      அந்த இடைவேளையில் உள்ளே வந்தவன் அவளையும் உள்ளே விட்டு கதவை பூட்டியிருந்தான்…

               என்ன இப்படி பேசுகிறான்…செய்கிறான்  என்பது போல் வாயை கையால் மூடி அவனை அண்ணாந்து பார்த்தாள் சுருதி…

     “ஹா ஹா…என்ன டி வில்லன் ரேஞ்சுக்கு லுக் விடுற…மாமன் ஹீரோ டி…”என்று கூறியவாறு அவள் வாயிலிருந்து கையை எடுத்தவன் தன் கைகளோடு பிணைத்து கொண்டான்…

       “நீ ஹீரோவா…விடு நான் வெளிய போறேன்…”என்று அவன் கையிலிருந்து தன் கையை உருவ போராடிக்கொண்டிருந்தாள்…

       “நீதானே…பேபி மா…குளிக்கணும் சொன்ன…வா குளிக்கலாம்…”என்று அவளை சுவற்றோடு சாய்த்தவன் அவளின் மீது இவனும் சாய்ந்து கொண்டு ஒரு கையால் அவளை பிடித்து கொண்டு மறு கையால் கப்பில் நீரை எடுத்து அவள் தலையில் இருந்து ஊற்றினான்…

          அவனின் பிடியில் இருந்து விடுபட ஒரு வழியும் இல்லை…அவளே பாவம் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 45  கிலோ இருப்பாள்…இவனின் ஆறடி உருவத்தில் இருந்து விடுபட வழியே இல்லை…போராடி தோற்றாள்…

      அவனின் பார்வையோ ஆராதிக்கும் தன்மைக்கு மாறியிருந்தது…அவளின் தலையில் இருந்து வடிந்த நீர் பிறை நெற்றி…கூரிய மூக்கு…இளஞ்சிவப்பு இதழ்கள் சிவந்த தாடை…ஆப்பிள் கன்னம் என்று வழிந்து பொன்மஞ்சள் கழுத்து என்று இறங்கி கொண்டிருந்ததை பார்த்தவாறு நின்றான்…

       அவள் ஆடாமல் இருந்தால் கூட அவனின் மீது தன் உடல் படாமல் இருந்திருக்கலாம்…அவள் அவனிடமிருந்து விடுபட போராட போராட அவளுக்கு தெரியாமலே அவனுக்குள் தீயை பற்ற வைக்க ஆரம்பித்திருந்தாள்….

 பற்றி எரியும் தீயை அணைக்கும் வழி தெரியாமல் அவளை இறுக அணைத்திருந்தான்…அவனின் கைகளோ இன்னும் இன்னும் அவளை தன்னோடு இறுக அணைத்து கொண்டே இருந்தது…அவளை தன்னோடு புதைக்கும் எண்ணம் போல் அவனுக்கு…(ஏன் பா வாத்தி இப்ப உனக்கு நேரம் ஆகலையா…)

   அவளுக்கு இரு வேறான மனநிலை…வேண்டும் போலும் அதே நேரத்தில் வேண்டாம் போலவும் இருந்தது…பற்றாக்குறைக்கு இவன் எதுவும் தன்னை வைத்து சோதித்து பார்கிறானோ…இவனிடம் இசைந்தால் தவறாக கூறி விடுவானோ என்றும் நினைத்து பயந்தாள்…பயந்தாலோ என்னவோ அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது…

        அவள் உடல் நடுக்கத்தில் தெளிந்தவன் அவளை விட்டு விலகினான்…விலகிய பின்போ இன்னும் சுருதின் உடல் நடுங்கியது…அவனை பார்த்து பேந்த பேந்த வேறு முழித்து தொலைந்தாள்…அதை பார்த்து அவனுக்கு சிரிப்பே வந்துவிட்டது…”என் செல்ல பேபி…”என்று அவளை பார்த்து முனங்கியவன் சுருதியின் சிவந்த தாடையில் பல் படாதவாறு மெதுவாக கடித்து வெளியேறினான்…அவளோ என்னடா நடக்குது இங்கே என்பது போல் இன்னும் முழித்து கொண்டு நின்றாள்…தான் வெளியே வந்தும் அவள் கதவை முடாததால் “நீ குளிக்கிறாயா…இல்லை மாமா வந்து குளிப்பாட்டி விடவா…”என்று கத்தினான்…உடனே கதவை சாற்றியவள் குளிக்க ஆரம்பித்தாள்…

        ஜெயக்குமார்க்கு தான் தவறு செய்கிறோம் என்று கண்டிப்பாக தெரிந்தது…எப்படி நடுங்கினாள்…ஒரு வேளை நிஜமாகவே அவளுக்கு தன்னை பிடிக்கவில்லையோ அதனால் தான் இப்படி ரியாக்ட் செய்கிறாளோ என்று யோசித்தான்…என்ன என்னமோ தேவையில்லாததை சம்மந்தப்படுத்தி யோசித்தவன் மனம் கனத்து போனது…

       அவள் குளித்து வெளி வந்தவுடன் வேகமாக குளியலறைக்குள் நுழைந்தான்…அவன் வருவதற்குள் இவளும் கிளம்பி சாப்பாடு எடுத்து வைத்திருந்தாள்….குளித்துவந்தவன் உடை மாற்றி வந்தான்…இருவரும் சாப்பிட்டு வெளிக்கிட தயாராகி வந்தனர்….

    கதவை பூட்டு போட்டு மூடியவர்கள் சாவியை எதிர் வீட்டு கொலை கார சாரி குழாய் கார மாமி வீட்டில் குடுத்துவிட்டு இருவரும் ஜெயக்குமார்க்கு அவனின் மாமா முத்துவேல் புதிதாக வாங்கி கொடுத்த புல்லட்டில் சென்றனர்…இருவரும் அந்த சம்பவத்துக்கு பின் பேசிக்கொள்ளவே இல்லை…என்ன ஆச்சர்யம் சுருதியும் அமைதியாகவே வந்தாள்…சுருதியை அவளது பள்ளியில் உள்சென்று பிரின்சிபால் அறைக்கு முன் இறக்கி விட்டான்…

        இறங்கியவள் வரேன் என்பது போல் தலையசைத்து விடை பெற்றாள்…தன்னிடம் விடை பெற்று செல்லும் தன் மனைவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்…பேபி பிங்க் என்று கூறுவார்களே அந்த நிறத்து புடவை அவள் நிறத்துக்கு அவ்வளவு அழகாக பொருந்தி போயிருந்தது…அந்த லேயர் கட் வெட்டப்பட்ட முடியை மொத்தமாக பிடித்து கிளட்ச் கிளிப் போட்டு அடக்கிருந்தாள்…அது அடுக்கு அடுக்காக அவள் முதுகில் படந்திருந்தது பார்க்க அப்படி இருந்தது…தன் மனைவியின் அழகை துளி துளியாக பார்வையாலே தனக்குள் இறக்கிக்கொண்டிருந்தான் ஜெயக்குமார்…

 ஜெயக்குமார்க்கு அவனின் கல்லூரி துறை தலைவரிடமிருந்து அழைப்பு வந்தவுடன் தான் அரக்க பறக்க வண்டியை எடுத்துக்கொண்டு கல்லூரியை அடைந்தான்…கல்லூரிக்கு சென்றவன் தன் துறை தலைவரிடம் தாமதத்திற்காக ஒரு மன்னிப்பை வேண்டி கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறைக்கு மேற்பார்வை பார்க்க உள்சென்றான்…இவனுக்கு ஒதுக்கப்பட்ட அறை அவனின் மாணவர்கள் முப்பெரும் தேவிகள் பாரதி..நவீனா…பவித்ரா அமர்ந்திருந்த அறை…அனைவர்க்கும் வினாத்தாள் விடைத்தாள் விநியோகித்தவன்…அடுத்து ஒவ்வொருவரிடமும் வருகை பதிவு கையெழுத்து வாங்க ஆரம்பித்தான்…

       அந்த முப்பெரும் தேவிகளோ இவனை காண நேரிடும் ஒவ்வொரு முறையும் முறைத்துக்கொண்டிருந்தனர் …அதிலே தெரிந்தது பாரதி அனைத்தையும் கூறிவிட்டாள் என்று…ஜெயக்குமார்க்கு புரிந்தாலும் நீங்கள் எல்லாம் எனக்கு ஒரு ஆளா என்பது போல் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை…

  தேர்வு எழுதி வெளியே வந்தவர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டே பேச ஆரம்பித்திருந்தனர்…

      “ரொம்ப ஓவரா தான் பண்ணுது அந்த ஆளு…மனசுல பெரிய ரன்பிர் கப்பூர்னு நினைப்பு…இந்த ஆளு நம்மகிட்ட வந்து பேசுனா அப்டியே நாம என்னமோ அவர் பின்னாடியே போக போற மாதிரி தான்…”என்று மற்ற இருவரையும் பார்த்துக்கொண்டு அவளது பையில் பேனா மற்றும் இதர சாமான்களை உள்ளே வைத்துக்கொண்டு பேசினாள் பாரதி…

      நவீனாவோ”சரி விடு மச்சி…அப்புறம் பேசிக்கலாம்..”என்று பேய் முழி முழித்துக்கொண்டு கூறினாள்…பவித்ராவுக்கோ வார்த்தையே வரவில்லை…

      “என்ன அப்புறம் பேசிக்கலாம்…நான் இப்பவே பேசுவேன் டி…நேத்து மச்சி ஒரு சிரிப்பு சிரிக்குறதுக்கு என்ன மச்சி…அப்டியே விடைச்சுக்கிட்டு திரும்பறான்…நான் வேற கேனை மாதிரி விஷ் பண்ண கை வேற தூக்கிட்டேன்…”என்று இன்னும் கோவமாக கூறினாள்…

     “விடு பாரு மா…நாம சார் மரியாதையா பேச வேணாமா…”என்று கண்ணை காட்டி காட்டி பேசினாள்…

      “என்ன டி புதுசா மரியாதை எல்லாம் குடுக்க சொல்லுற…நானே மரியாதை குடுத்து பேசினாலும் நீ தான் கோவ படுவ…இவ ஏன் இப்படி முழிச்சுட்டு இருக்கா…”என்று நவீனாவிடம் ஆரம்பித்து பவித்ராவிடம் முடித்தாள்…

    இதற்கு மேல் விட்டால் இவள் பேசியே தங்களை இந்த கல்லூரியில் படிக்க விடாமல் செய்து விடுவாள் என்று நினைத்த நவீனா அவளை திருப்பி அவளுக்கு பின் நின்றுகொண்டிருந்த உருவத்தை காட்டினாள்…

        அங்கு கல் போன்ற முகத்துடன் ஜெயக்குமார் நின்றுகொண்டிருந்தான்…அதை பார்த்த பாரதியோ வாயை பிளந்து பேந்த பேந்த முழித்தவள் குட் மோர்னிங் சார் என்று மட்ட மத்தியானம் ஒரு மணிக்கு கூறினாள்…

        “வழியே விட்டு பேசுனீங்கனா நல்லா இருக்கும்…அப்புறம் இது மோர்னிங் இல்லை மதியம்…”என்று கூறியவன் அவர்களை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான் ஜெயக்குமார்…

 “அவர் பின்னாடி நிக்குறார்னு சொல்லறத்துக்கு என்ன பக்கி…”என்று கேட்டு இருவரையும் அடி துவைத்து எடுத்து விட்டாள்…

      இருவரும் ஒரே நேரத்தில் காண்டாகி”நாசமா போனவளே…எவ்வளவு நேரம் சைகை காமிச்சோம் கண்டுபிடிச்சியா…நீ மட்டும் சிக்குனது பத்தாதுன்னு எங்களையும் போட்டு விடுற…”என்று இருவரும் இணைத்து இப்பொழுது அவளை அடிக்க ஆரம்பித்தனர்…சிறிது நேரம் அதை நினைத்து பயந்தவர்கள்…தங்கள் வகுப்பறை நண்பர்கள் வந்து கூறிய செய்தியில் ஆனந்தம் ஆகினர்…இன்று வந்த வினாத்தாளில் சில கேள்விகள் அவுட் ஆப் போர்சன் ஆம்…அதான்…இதான் இளைஞர்கள்  எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் வரும் பொழுது பார்த்துக்கொள்வோம் என்று தள்ளி வைத்து விட்டு…இந்த நிமிடத்தில் வாழ ஆரம்பித்துவிடுவர்…

 ஜெயக்குமார்க்கு அவர்கள் பேசிய நிமிடத்தில் சிறிது கோவமாக இருந்தது…அடுத்து அதை மறந்துவிட்டான்…கல்லூரி என்றால் இப்படி தான்…மாணவர்கள் என்றால் இப்படி தான் என்று தெரிந்தவன் என்பதால் அனைத்தையும் மறந்து அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தான்…

       

**************************************************************************************************************

   சுருதி பள்ளிக்கு திரும்பி வந்ததும் சுதாகர்…அர்ஜுன்…கதிர் …வெண்ணிலா…அவர்களின் தோழர்கள் என்று ஒரு கூட்டமே இவளை காண ஆர்வமாக ஓடிவந்தது…அவர்களை பார்த்து பேசி அனுப்பி வைத்தவள் பிரின்சிபால் அறைக்குள் நுழைந்தாள்…

       சுருதி சொன்னதுபோலவே கே கே திட்ட ஆரம்பித்தான்…அவள் உள்ளே நுழைந்தவுடன் அமர சொன்னவன் “முதல் நாளே லேட்…லேட் வந்துட்டோம்னு கொஞ்சம் கூட பதட்டம் இல்லாம உன் வானர படைகள் கூட பேசிட்டு வர…”என்று எப்பொழுதும் போல் திட்ட ஆரம்பித்தான்…

     “சாரி சார்…”என்று கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்…”இப்பலாம் உனக்கு பயம் இல்லாம போச்சு சுருதி…நீ ஏற்கனவே பார்த்துக்கிட்ட மாதிரி எடுக்குறியா…இல்லை நான்காம் வகுப்புல ஒரு கிளாஸ் மிஸ் இல்லாம இருக்குது…அதை பார்த்துகிறாயா…அதுக்கு தான் இனிமேல் advertise  பண்ணனும்…”என்று கேட்டான் கே கே…

      “இல்லை வேண்டாம் சார்…நானே நான்காம் வகுப்பு பார்த்துகிறேன்…”என்று கூறி தன்னுடன் பியூனை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்…இதே போல் 4  மாதங்களுக்கு முன் இங்கே முதல் முதலாக  வந்ததை நினைத்து சிரித்துக்கொண்டாள்…எவ்ளவு மாற்றம்…

 

  நான்காம் வகுப்பு மாணவர்களுடன் தன்னை இணைத்து கொண்டாள் சுருதி…மாலை வந்து ஜெயக்குமார் அழைத்து செல்ல வந்தான்…காலையில் நடந்ததை எல்லாம் மறந்து எப்பொழுதும் போல் அவனிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்திருந்தாள்…சில பல சீண்டல்களுடனும்..சண்டைகளுடனும் இரண்டு நாட்கள் ஓடிருந்தது…

       

    பள்ளி முடிந்து சுருதி வெளியே வந்தபொழுது செல்வா அவளை அழைத்துசெல்வதற்காக காத்திருந்தான்…செல்வாவை பார்த்தவுடன் இவளும் அனைத்தையும் எப்பொழுதும் போல் மறக்காமல் தன் கணவனுக்கு அழைத்து செல்வாவுடன் வருவதாக சொல்லியிருந்தாள்…

      செல்வா இவளை அழைக்க எடுத்து வந்ததோ இவளின் ஸ்குட்டி…அவனை பார்த்தவுடன் இவளுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது…செல்வாவின் ஆறடி நான்கடி உயரத்துக்கு புல்லெட்டே சிறிதாக தான் தெரியும்…அப்படி இருக்கும் பட்சத்தில் ஸ்குட்டிஎல்லாம் பார்க்க செம காமெடியாக இருந்தது…

        “ஹா ஹா ஹா…ஏன் டா இப்படி காமெடி பண்ற…”என்று அவனிடம் சிரிப்புடன் கேட்டாள் சுருதி…செல்வாவோ மருந்துக்கு கூட சிரிக்கவில்லை…

        “ஏன் டா…கொடைக்கானல் போயிருக்க…என்கிட்டயும் சொல்லல…குமார் கிட்டயும் சொல்லல நீ…சாக்லேட் வாங்கிட்டு வந்தியா…”என்று கடமையே கண்ணாக கேட்டாள் சுருதி…

        செல்வாவோ இவள் வாழ்க்கையே இங்கு கேள்வி குறியாக இருக்கிறது அது எதையும் புரிந்துகொள்ளாமல் இன்னும் சிறுபிள்ளை போல் இருக்கிறாளே என்று அவளை நினைத்து சோகமாக சிரித்தவன்”அதே குடுக்க தான் வந்தேன்…நீ ஒட்டு…நா பின்னாடி உட்காந்துகிறேன்…”என்று கூறினான் செல்வா…

      அவன் பேசுவதில் இருந்தே ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டவள் “என்ன டா ஆச்சு …ஏதாவது பிரச்சனையா…”என்று இதையே திருப்பி திருப்பி வேறு வேறு மாடுலேஷனில் கேட்டவாறு வண்டி ஓட்டினாள் சுருதி….அவளின் அனைத்து கேள்விகளுக்கும் அவன் ஒன்றுமில்லை என்ற பதிலே தந்தான்..

            வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவள் மாமி வீட்டில் போய் சாவி வாங்கி வந்து வீட்டை திறந்து உள்ளே அழைத்து சென்றாள்….அவனுடன் பேசிக்கொண்டே டீ செல்வாவுக்கு டீ போட்டு தந்தவள்…

     “ஏன் செல்வா ஒரு மாதிரி இருக்க…”என்று அவன் முகத்தை பார்த்தவாறு கேட்டாள்…ஒன்னும் இல்லை சுருதி விடு…நீ எப்படி இருக்க…வேலையெல்லாம் எப்படி போகுது என்று பேச்சை மாற்றினான்…நம் தலைவிக்கு தான் பள்ளியே பற்றி கேட்க ஆரம்பித்தாலே அவள் மாணவர்களின் குறும்பை சொல்ல ஆரம்பித்துவிட்டாள்…

        “ஒருத்தன் சாரதினு இருக்கான் செல்வா…அவன் ரொம்ப சேட்டை பன்றான் டா..காலைல வந்தவுடனே என்னை கிளாஸ்க்குள்ள கூட நுழைய விடாம வாசல்ல நின்னுகிட்டு வாயை உப்பி வைச்சுட்டு அதே உடைச்சா தான் உள்ளே விடுவேன்னு சொல்ரான் டா…உடைச்சா தான் உள்ளேயே விடுறான்…”என்று சிரித்துக்கொண்டே கூறினாள்…இதான் சுருதி…அவளின் மாணவர்கள் செய்யும் எல்லா குறும்பையும் ரசிப்பாள்…ஏதோ இவளின் பிள்ளை செய்யும் குறும்புகளை பெருமையுடன் சொல்லும் தாயின் மனநிலையை ஓத்திருப்பாள்…

        அவளையே பார்த்திருந்த செல்வாவுக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது…அவனை பொறுத்தவரை சுருதி ஒரு தேவதை பெண்…அவளை அவனின் அண்ணன் ஜெயக்குமார் ஏமாற்றிவிட்டான் என்றே நினைத்துக்கொண்டான்…சுருதிக்கு தெரியாமல் கண்ணை துடைத்தவன் “சுருதி…பிள்ளைங்க ஸ்கூல்னு இருக்கமா…உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு….புரிஞ்சுக்க முயற்சி பண்ணு…எப்பயும் விளையாட்டு தனமா இருக்காம….பொறுப்பு உணர்ந்து நடந்துக்கோ…யாரையும் நம்பாதே…சிரிச்சு பேசுறவங்க எல்லாம் நல்லவங்களா ஆயிட மாட்டங்க…உன் வாழ்கை உன் கைல…அதே இறுக்கி பிடிச்சுக்கோ…சரியா…”என்று கூறியவன் கிளம்புவதற்காக எழுந்தான்…

      செல்வா ஏன் இப்படி சொல்கிறான் என்று அவன் கூற கூற நினைத்தவள் அவள் கிளம்ப எழுந்தவுடன் அனைத்தும் பின்னுக்கு போக “என்ன அதுக்குள்ளயும் கிளம்பிட்ட…குமார் வந்துருவான்…பார்த்துட்டு போடா…”என்று கூறினாள் சுருதி…

        செல்வாவோ அவன் மூஞ்சில எல்லாம் முழிக்கக்கூடாதுனு தானே கிளம்புறேன் என்று நினைத்தவன் “ட்ரெயின்க்கு நேரமாச்சு சுருதி…கிளம்பனும்…”என்று அவள் பேச பேச வண்டியை எடுத்துக்கொண்டு சென்றிருந்தான்…

    அவன் இவர்கள் வீட்டு முக்கை தாண்டி வளைவில் வளையும் போது சரியாக ஜெயக்குமார் அவனுக்கு எதிர் புறத்தில் வளைய வந்தான்…ஜெயக்குமாரை கண்ட செல்வா பார்காததுபோல் சென்றான்…ஜெயக்குமார் அவனை பார்த்தவுடன் நின்று திரும்பி செல்வா செல்வா என்று கத்த காது கேட்காதவன் போல் சென்றுவிட்டான்…

      வீட்டில் வந்து வண்டியை நிற்பாட்டி இறங்கினான் ஜெயக்குமார்…செல்வாவை வழியனுப்ப வந்த சுருதி இன்னும் வீட்டிற்குள் செல்லவில்லை அதற்குள் ஜெயக்குமார் வந்துவிட்டான்…

       “கொஞ்சம் வேகமா வரதுக்கு என்ன…செல்வா இப்ப தான் போனான்…”என்று தன் நண்பனை நீ சந்திக்க வில்லையே என்று ஆதங்கத்துடன் கேட்டாள் சுருதி…

       “நானும் பார்த்தேன்..கூப்பிட்டேன்..கேட்கல போல போய்ட்டான்…அவனுக்கு பிடிக்குமேனு பானிபூரி வாங்கிட்டு வந்தேன்…அதான் லேட் ஆயிருச்சு…”என்று சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தான்….

 

ஆதிக்கம் தொடரும்…

         

 

Advertisement