Advertisement

அத்தியாயம் 17

 

               செல்வா வந்து சென்ற பின்பு எப்பொழுதும் போல் ஒரு போர் இருவருக்கும் இடையில் சில நிமிடத்தில் உருவாகி அதை விட சில நிமிடத்தில் முடிந்தும் இருந்தது…இப்படியே தோசைக்கு தொட்டுக்க தக்காளி சட்னியா…தேங்காய் சட்னியா…யார் முதலில் குளிக்கப்போவது…கே டிவியில் போடுகிற தல படமா… இல்லை ஜெயா டிவியில் போடுகிற தளபதி படமா…என்று அவர்களுக்கே உரிய முறையில் சண்டையிட்டு ஒரு மாத காலத்தையும் ஒட்டிருந்தனர்…

 

              இருவருக்கிடையில் நெருக்கம் என்று சொல்லப்போனால்  தூங்கும் போது இடையில் இருந்த தலையணை பாலத்தை அகற்றிவிட்டிருந்தனர்… இப்பொழுதெல்லாம்  ஜெயக்குமார் கட்டியணைத்து முத்தமிட்டாலும் நடுக்கத்தை வெளியிடாத அளவிற்கு பழகிருந்தாள் சுருதி…இருவருமே அதை விட்டு அடுத்த படிக்கு முன்னேற முயலவில்லை…

            ஜெய்குமார்க்கு அவளை அருகே கண்டாலே சுர்ர் என்று ஏறும் தான் ஆனால் அதை அடக்கி கொள்ள பழகிருந்தான்….இவன் அடுத்த கட்டத்துக்கு போவதற்கான நடைமுறையில் இறங்கிருந்தால் கூட சுருதி ஒன்றும் சொல்ல போவதில்லை  சிரித்த முகத்துடனும் ஏற்று கொண்டிருப்பாள் தான்…ஆனால் இவனுக்கு அவள் காதல் தேவைப்பட்டது….சுருதி அவனுடன் கடமைக்காக கூடாமல் காதலுடன் கூட வேண்டும் என்று நினைத்தான்…அவள் என்னதான் தான் முத்தமிடும்போது சாதாரணமாக இருப்பதுபோல் தன் உடல்மொழியில் காட்டிக்கொண்டாலும்…அவள் பளிங்கு முகத்தில்…நீண்ட நயனங்களில் பயம் தெரிந்தது…

      சுருதியிடம் தன் காதலை சொல்லலாம் என்றால் அதுவும் முடியாது…விவரம் தெரிய ஆரம்பித்த வயதிலிருந்து அடித்து பிடித்து சண்டையிட்டு…ஐந்து வருடங்கள் அவளை ஒதுக்கி வைத்து…அதை மீறி பார்த்த பொழுதிலெல்லாம் அவளை வார்த்தைகளால் காயப்படுத்தி இப்பொழுது போய் காதல் என்றால் நம்பும் படியாகவா இருக்கிறது…ஒருவேளை ஏதோ தெய்வ செயலாக  அவள் நம்பினால் கூட பரவாயில்லை நம்பாமல் ஒரு பார்வை பார்த்தால் கூட போதும் தன்னால் தாங்க முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை…

             சுருதி இன்னும் அதே நிலைப்பாட்டில் தான் இருந்தாள் என்று தான் சொல்லவேண்டும்…அவளுக்கு ஜெயக்குமாரை காதலிக்கிறாளா இல்லையா என்பதை தாண்டி அவனை நல்ல கணவனாக ஏற்றுக்கொண்டாள்…அவன் நெருங்கும் போது பிடித்திருக்கிறது ஆனால் பிடிக்கவில்லை என்ற குழப்பத்திலே சுற்றிக்கொண்டிருந்தாள்…..எப்பொழுதும் ஒரு குரலில் மட்டுமே பேசும்  அவளது மானம்கெட்ட மனசாட்சி இப்பொழுதெல்லாம் இரண்டாக பிரிந்து ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி கொண்டு திரிகிறது…

                 ஒரு மனது அவன் உண்மையிலே உன்னை விரும்பி தன் மனைவியாக ஏற்கிறான் என்று கூறுகிறது…இன்னொரு மனமோ இன்று உன்னுடன் கூடி கழித்துவிட்டு..என்றாவது ஒரு நாள் வேறுஒருவனை காதலித்து விட்டு என்னுடன் வெட்கமில்லாமல் கூடினாயே என்று கேட்பான் என்றும் கூறியது….இரண்டில் எதை கேட்பது என்று புரியாமல் குழம்பி போயிருந்தாள்…

    “சுருதி சுருதி…”என்று வீட்டில் வெளியில் இருந்து இரண்டு குரல்கள் மாற்றி மாற்றி கேட்டது…

        கைப்பையில் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த சுருதி இருக்குரல்களை கேட்டு வெளியில் ஓடிவந்திருந்தாள்…ஜெயக்குமாரோ அவள் ஓடுவதை பார்த்து அவனும் பின்னாடியே சென்றான்…

        வீட்டின் வெளியே சுருதியின் இரண்டாவது சித்தப்பா ஆறுமுகம் அப்பாவின் சீமந்த இரட்டை  புத்திரர்களான ஹரிகிருஷ்ணனும் ராமகிருஷ்ணனும் பள்ளிக்கு டிப் டாப் ஆக சீருடையுடன் கிளம்பி தங்களது மிதிவண்டியில் வந்திருந்தனர்…

        “உள்ளே வரமாட்டீங்களோ…”என்று கேட்டவாறு அவர்களிடம் விரைந்தாள் சுருதி…ஜெயக்குமாரும் உள்ளே வாங்க டா என்ற அழைப்புடன் அவர்கள் அருகில் சென்றான்…

        ஜெயக்குமாரை பார்த்தவுடன் மிதிவண்டியில் இருந்து இறங்கியவர்கள் “இல்லை அத்தான்…ஸ்கூலுக்கு லேட் ஆச்சு…”என்று மிக பவ்வியமாக கூறினார்கள்…ராமகிருஷ்ணன் தன் மிதிவண்டியின் கைப்பட்டையில் தொங்கிக்கொண்டிருந்த கூடையை எடுத்து சுருதியிடம் கொடுத்தவாறு “ஜோதிமா கொடுத்துவிட்டாங்க…சுருதி…”என்றவர்கள் ஜெயகுமாரிடம் திரும்பி கிளம்பிகிறோம் என்று கூறுவதற்கு முன் ஜெயக்குமார் அவர்களிடம்

         “எப்படி டா பரிச்சைலாம் எழுதுனீங்க… ஒழுங்கா எழுதிருக்கீங்க தானே…பேப்பர் திருத்தி கொடுத்தவுடன் கொண்டு வரீங்க…ஸ்கூலுக்கு லேட் ஆச்சு ஒடுங்க… ”  என்று அவர்கள் பதில் சொல்லவே முடியாது தலையை மட்டும் ஆட்டும் கேள்விகளாக கேட்டு தான் ஒரு நெறி தவறாத வாத்தியார் என்று நிரூபித்து அவர்களை விரட்டிவிட்டான்…

    சுருதியோ இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று சத்தமாக முணுமுணுத்து விட்டு உள்ளே சென்றாள்…

  உள்ளே சென்ற சுருதி தன் தாய் கொடுத்தனுப்பிய இட்லியை எடுத்து போட்டு சாப்பிட்டவள்…இன்னொரு கிண்ணத்தில் இருந்த சாதத்தை டிபன் பாக்ஸில் மதியத்துக்கு அடைத்து கொண்டு தன் உத்தம புருசனிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் கிளம்பினாள்…

     ஜெயக்குமாரோ நடப்பது அனைத்தையும் விதியே என்று பார்த்தவாறு அவனும் தான் சமைத்த வெண்பொங்கலை கல்லோ மண்ணோ என்பது போல் முழுங்கி விட்டு மதியத்துக்கு கேண்டீனில் பார்த்துக்கொள்ளலாம் என்று வீட்டை பூட்டி சாவியை அவனே எடுத்துக்கொண்டு கிளம்பினான்…

      வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியவன் மனம் நேற்று நடந்ததை நினைவு மீட்பு செய்ய ஆரம்பித்திருந்தது…

           

      கடந்த ஒரு வரமாக  விடாது கருப்பு மாதிரி சளியும் காய்ச்சலும் விடாமல் பிடித்துக்கொண்டு  சுருதியை பாடாய் படுத்தி எடுத்தது…அவந்திகா வந்து பார்த்தும் சரியாகாததால் இப்பொழுது பரவலாக சொல்கிறார்களே டெங்கு கிங்கு என்று அப்படி எதுவும் உயிர் குடிக்கும் காய்ச்சலோ என்று பயந்துபோய் மருத்துவமனையில் சேர்த்து  சோதனை பண்ணியதில் முடிவுகள் எதிர்மறையாக வரவும் தான் ஜெய்குமார்க்கும் அவன் மொத்தக்குடும்பத்துக்கும் உயிரே வந்தது…ஏதோ வைரல் காய்ச்சல் என்று கூறி அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்…அந்த ஒரு வாரமும் ஜெயக்குமார் அவளை தாங்கினான்….அவனின் அன்னை…ஜோதி என்று வந்த அனைவரையும் ஒதுக்கிவிட்டு கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டான்…

 அப்படி இப்படி என்று அவள் ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் காய்ச்சல் விட்டு இயல்பு நிலைக்கு திரும்பினாள்…

            இரவு அவள் உறங்கியதற்கு பின்…வாசல் கதவு…ஜன்னல் என்று அனைத்தையும் தாளிட்டு விட்டு ஜெயக்குமார் உறங்க மணி பத்துக்கும் மேல் ஆகிவிட்டது…

       சரியாக பதினொன்று மணி போல் சுருதியின் அலைபேசி

       “வாழ்வே மாயம்…இந்த

          வாழ்வே மாயம்…

           வாழ்வே மாயம்…இந்த

          வாழ்வே மாயம்…”  என்று அவர்களின் தூக்கத்தை கெடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு கத்திக்கொண்டிருந்தது…அம்மணிக்கு உடம்பு சரி இல்லை அல்லவா…அது தான் இந்த தத்துவ பாடல்கள் எல்லாம்…

          சத்தத்தில் முதலில் முழித்த ஜெயக்குமார் கைபேசியை எடுக்க முயல முடியவில்லை… ஏனெனில் அவனின் மனைவி தான் எப்பொழுதும் போல் அவனையே தலையணையாக கொண்டு படுத்திருந்தாளே…எழுப்பலாம் என்று பார்த்தால் இன்று தான் ஒரு வாரத்திற்கு பின் அசந்து உறங்குகிறாள் அதை ஏன் கெடுப்பானேன் என்று மெதுவாக எடுக்க முயற்சி செய்தான் முடியவில்லை…கைபேசி சுருதிக்கு அந்தப்பக்கம் கொஞ்சம் தள்ளி படுக்கையில் கிடந்தது…

         மீண்டும் மீண்டும் அடிக்கவும் என்னமோ ஏதோ என்று பயந்தவன் அவளை தள்ளி படுக்கவைத்தான்… இவ்வளவு நேரம் உணர்ந்த மார்பு சூடு கிடைக்கத்தாலோ…அல்லது அவ்வளவு நேரம் விடாமல் அடித்துக்கொண்டிருந்த கைபேசியின் ஓசையாலோ என்னவோ எழுந்தாள் சுருதி…

        சுருதி எழுந்து ஜெயக்குமார் எடுப்பதற்கு முன் அவள் கைபேசியை எடுத்தாள்…கைபேசியில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவள் அவ்வளவு நேரம் இருந்த தூக்கம் விடைபெற்று விட ஜெயக்குமாரை கண்டுகொள்ளாமல் கைபேசியை எடுத்துக்கொண்டு பின்பக்கம் சென்றாள்…

      ஜெயக்குமாரும் இந்த அர்த்த ராத்திரியில் அழைத்திருக்குறார்களே எதுவும் பிரச்சனையோ என்று நினைத்துக்கொண்டு அவள் பின்னாடியே சென்றான்..ஜெயக்குமார் தன் பின்னேயே வருவதை பார்த்தவள் “என் ப்ரெண்ட் தான் குமாரு…நீ தூங்கு…”என்று கூறியவள் அழைத்த நபருடன் ஐக்கியமாகி விட்டாள்…

          அவள் பேசட்டும் என்று படுக்கையில் வந்து அமர்ந்தான் ஜெயக்குமார்…சிறிது நேரத்தில் அவனை அறியாமலே உறங்கியும் விட்டான்…பத்துநிமிடம் கழித்து சுதாரித்து எழுந்தவன் அருகில் பார்த்தால் அவள் இன்னும்  பேசிவிட்டு வரவேயில்லை…மீண்டும் பின் சென்று பார்த்தால் சுருதி மிகவும் தீவிரமாக கோவமாக பேசிக்கொண்டிருந்தாள்…

         ஜெயக்குமார் அருகில் சென்று சைகையில் என்ன என்று கேட்டும் சுருதி ஒண்ணுமில்லை என்பதை போல் தலையசைத்து அவனை உள் செல்லுமாறு சைகை செய்தாள்…

          அவனும் அதற்குப்பிறகு எதுவும் அவளிடம் கேள்வி கேட்காமல் சுருதி தன் பார்வைக்கு தெரியுமாறு உள்சென்று அமர்ந்துகொண்டான்…மேலும் பத்து நிமிடங்கள் ஆகியும் அவள் வரவில்லை….பனி விழுவதற்கும் அதுக்கும் முடியாத உடல் என்பதால் சுருதி இரும்பிக்கொண்டே பேசினாள்…

 அவ்வளவு தான் ஜெயகுமாரிற்கு கோவம் வந்துவிட்டது…இத்தனை நாள் முடியாமல் இருந்து இப்பொழுது தான் சரியாகிருக்கிறது…இவளோ இப்படி பனியில் அமர்ந்து மீண்டும் இழுத்துவிட்டு கொள்வாள் போல் என்று நினைத்து தான் பின்வரும் செயல்களை செய்திருந்தான்…ஆனால் சுருதியின் பார்வையில் எல்லாம் தப்பாகி நாசமாக போய்விட்டது…

       விறுவிறுவென்று சென்றவன் அவளின் கைபேசியை புடுங்கி அணைத்து தன் சட்டை பையில் போட்டவன் அவளை முறைத்து பார்த்தான்…எந்நாளும் இல்லாத திருநாளாக சுருதி அவனை விட பயங்கர கோபத்துடன் ஜெயக்குமாரை முறைத்தாள்…

    “குமாரு…ப்ளீஸ் மொபைல் குடு…வெறுப்பு ஆக்காதே…ஏற்கனவே செம டென்ஷன்ல இருக்கேன்…”என்று பல்லை கடித்து கொண்டு கூறினாள்…

     ஜெயக்குமாரும் அதுக்கு குறையாத கோபத்துடன் “மணி என்னாச்சுன்னு தெரியுமா…12  ஆக போது…யார் கூட இவ்வளவு நேரம் கடலை போட்டுட்டு இருக்க……குடும்ப பொண்ணு யாராச்சும் இனியாரத்துல ஒரு மணி நேரம் போன் பேசுவங்களா…உங்க வீட்ல உனக்கு என்ன தான் சொல்லி குடுத்தாங்க…”என்று ஏதோ கூறவந்தவன் எதுவோ கூறி தப்பாக முடித்தான்…

       ஏற்கனவே இவனின் நடத்தைகளில் குழம்பி தவிப்பவள் பற்றாகுறைக்கு இப்பொழுது ஏதோ கோவத்தில் வேறு இருந்ததால் எப்பொழுதும் சூழ்நிலையை சரியாக புரிந்து நடந்து கொள்பவள் முதன் முறையாக அனைத்தையும் தவறாக எடுத்துக்கொண்டு கத்த ஆரம்பித்தாள்…

    “ச்சீ…உன் புத்தியே இவ்வளவு தான் டா…இந்த நேரத்துல போன் பேசுற பொண்ணு எல்லாம் உங்களுக்கு பத்தினி கிடையாது என்ன…நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை…குமாரு என்னை உன் பொண்டாட்டியா நீ மதிக்கவும் இல்லை புரிஞ்சுக்கவும் இல்லை…”என்று அவன் சொன்னதை சரியாக தவறாக புரிந்து கொண்டு சண்டையிட்டாள்…

  “லூசு மாதிரி உளறாதே…எனக்கு கெட்ட கோவம் வந்துடும்…நான் அப்டி மீன் பண்ணவே இல்லை டி…நான் சொல்றதுக்கு தான் நான் பொறுப்பு…நீ புரிஞ்சுகிறதுக்கு எல்லாம் நான் பொறுப்பு கிடையாது…”என்று அவனும் எகிறினான்…

       “ஓஹ்…நீ என்ன மனசுல நினைச்சுகிட்டு என்ன பேசுவேன்னு எனக்கு தெரியாதா…ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதே டா…நான் உனக்கு வெறும் மாமா பொண்ணா இருந்தப்பவே என்னை அந்த  வார்த்தை சொல்லி திட்ட வந்தவன் தானே நீ…இப்ப பொண்டாட்டி ஆனதும் உனக்கு ரொம்ப உறுத்துது என்ன…அதான் சாதாரணமா ஒரு போன் பேசுறதுக்கு கூட நீ வந்து நசநசன்ற…”என்று நஞ்சை கக்க ஆரம்பித்தாள்…

      “நிஜமா உனக்கு மனசாட்சினு ஒன்னு  இருந்தா அதை தொட்டு சொல்லு டி…உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி ஒரு மாசத்துல நான் அப்டியாடி நடந்துருக்கேன்…உன்னை வைச்சு தாக்குனேன் டி…”என்று வெறுத்து போன குரலில் கூறினான் ஜெயக்குமார்…

       “எல்லாம் எதுக்கு…உனக்கு நான் வேணும்…இன்னும் சொல்ல போனா உனக்கு என் உடம்பு வேணும்…அதான் இப்படியெல்லாம் என் மேல என்னமோ உனக்கு அக்கறை  இருக்க மாதிரி நடிக்குற…அப்டியே அதை நம்பி உன்கூட நான் இருந்திருந்தாலும் இப்டி என்னைக்காச்சும் ஒரு நாள் நான் உன்கூட இருந்ததை பத்தியே தப்பா சொல்லி என்னை திட்டிருப்ப…”என்று அவள் முடிக்ககூடவில்லை…

           கோவம் என்னும் நெருப்பு கக்கும் கண்களுடன்…முகம் இறுக தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன் அவளின் கன்னத்தை சேர்த்து சலுப்பென்று ஒரு அரை விட்டிருந்தான்…அந்த அரைக்கே ஒரு சுழல் சுழன்று நின்றவள் கன்னத்தில் கை வைத்தவாறு அவனை முறைத்து பார்த்தாள்…

         “இனி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்தாலும் சத்தியமா நான் மனுசனா இருக்க மாட்டேன் டி…நீ எல்லாம் மனுசியா…பாம்பு டி..விஷபாம்பு…ச்சீ…இவ்வளவு கேவலமாவா என்னை நினைச்சுட்டு இருக்க நீ…”என்று மூக்கு விடைக்க ஏற்கனவே குளிரில் லேசாக சிவந்திருந்த அவனது முகம் கோவத்தில் சிவுசிவுவென்று சிவந்து போய் இருக்க தொண்டை நரம்புகள் புடைக்க கத்தினான்…

           ஒரு வாரம் முடியாமல் இருந்ததால் ஏற்கனவே கன்னம் எல்லாம் ஒட்டி போய் பரிதாபகரமாக இருந்தவள் இவன் அரைந்ததில் ஒட்டிய கன்னங்களில் ஐந்து விரல் தடங்களும் பதிந்திருக்க…நீண்ட நயனங்களில் வைரங்களகக கண்ணீர் துளி மின்ன அவனை அண்ணாந்து பார்த்தவள் ஒன்றும் பேசாமல் வீட்டிற்குள் சென்று படுத்துவிட்டாள்…

           

          வீட்டினுள் சென்று படுத்தவளோ எப்பொழுதும் போல் மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள்…”விளங்காம போறவன்..எப்படி அடிச்சுட்டான்…மயக்கமே வந்துருச்சு…உடம்பு முடியாத பிள்ளைன்னு இரக்கம் இல்லையா உனக்கு…ராஸ்கல்…எதிர்த்து சண்டை போடலாம்னு பார்த்தா அதிர்ச்சில வாயில இருந்து காத்து தான் வருது…விடியட்டும் உனக்கு இருக்கு டா…உங்க அம்மா வீட்டுக்கு அடிச்சு பத்திவிடுறேனா இல்லையானு பாரு…”என்று அவளின் தவறை இன்னும் உணராமல் அவனை திட்டுவதிலே முழு கவனத்தையும் திருப்பி விட்டாள்…அவள் மனதில் இருப்பதாய் கொட்டியவுடன் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது…ஜெயக்குமார் அவன் காதலை அவளுக்கு உணர்த்தவே இல்லை…சொல்லாத காதல் எல்லாம் சுருதி போன்ற கூறுகெட்ட குப்பாயிகளுக்கு புரிவது இல்லை…கடைசி வரை இதயம் முரளி நிலை தான் ஜெயக்குமார்க்கு போல…

               அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் மீண்டும் காதிற்குள் ஒலிக்க..அப்டியே அங்கிருந்த கல்லில் மடங்கி அமர்ந்தான் ஜெயக்குமார்…வலி வலி…நெஞ்செல்லாம் வலி…எங்கே தனக்கு மாரடைப்பு வந்துவிடுமோ என்று பயந்தே விட்டவன்…வேகமாக அடுக்கலைக்குள் சென்று தண்ணீர் எடுத்து குடித்து விட்டு மீண்டும் வெளியே வந்தவன் அடிக்கும் மார்கழி மாத பனியையும் கணக்கில் கொள்ளாமல் விடிய விடிய அவள் கூறிய வார்த்தைகளை நெஞ்சில் வலம் வர அங்கேயே அமர்ந்திருந்தான்…தான் எங்கே பிழை விட்டோம்…அவளுக்கு அனைத்துமே பார்த்து பார்த்து தானே செய்தோம்…எப்படி தன்னை நினைத்துவிட்டாள் படுபாதகி…

 அதற்கு அப்புறம் விடிந்து அவள் எப்போதும் போல் அவள் வேலையை பார்த்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினாள்…இவனை கண்டுகொள்ளவே இல்லை…அவனும் இவளை கண்டுகொள்ளவில்லை…சாப்பாட்டுக்கு கூட அவள் வீட்டிலிருந்து வரவைத்திருந்தாள்…சுருதி ஜெய்குமாருடன்  சண்டை போடவேண்டும் என்று நினைத்து தான் இருந்தாள்…ஆனால் அவளுக்கு இன்று முக்கியமான வேலை ஒன்று இருந்ததால் சண்டை ஜெயக்குமார் அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு தன் வேலைக்கு கிளம்பினாள்…

      எப்பொழுதும் அவன் கூடவே செல்பவள் இன்றைக்கு ஆட்டோ பிடித்து தனியாக சென்று விட்டாள்…

       இவ்வாறு ஜெயக்குமார் அனைத்தையும் நினைத்து முடிப்பதற்கும் அவன் கல்லூரியை அடைவதற்கும் சரியாக இருந்தது…ஜெயக்குமார் வண்டியை நிற்பாட்டிவிட்டு பிரின்சிபால் அறையில் சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு அவர்கள் துறை தலைவரின் அறைக்கு சென்றான்…

        “வாங்க ஜேகே…லீவு எல்லாம் எப்படி போச்சு…”என்று தனது அலமாரியில் ஏதோ தேடிக்கொண்டிருந்தவர் ஜெயக்குமாரை பார்த்து விசாரித்தார்…அவனோ அவர் யாரோ எவரோ யாரிடமோ பேசுவது போல் கண்டுகொள்ளாமல் இருந்தான்….

         துறை தலைவர் அலெர்ட் ஆறுமுகம் ரெண்டு மூன்று தடவைக்கு மேல் அவனிடம் கேட்டும் பதில் இல்லாததால் அவனுக்கு முதுகு காட்டி தேடிக்கொண்டிருத்தவர் ஜெயக்குமாரை நோக்கி திரும்பினார்…

             ஜெயக்குமார் ஏதோ யோசனையில் வெளியே தெரிந்த மரத்தை பார்த்தவாறு நின்றிருந்தான்…அவன் கவனம் தன்னிடம் இல்லை என்றதும் மேஜையில் ஒரு தட்டு தட்டி அவனை அழைத்தார்…அந்த சத்தத்தில்  தன் கவனம் கலைந்தவன் அவரை பார்த்தான்….

            “ஆர் யூ ஒகே ஜேகே…வேற ஏதாவது பிரச்சனையா…”என்று அவர் கேட்கவும்

             “சாரி சார்…அப்டிலாம் ஒன்னும் இல்லை சார்…”என்று லேசாக சிரிப்புடன் கூறினான்…

             “அப்ப ஒகே…நீங்க  நம்ம டிபார்ட்மென்ட் வாலன்டியர்ஸ் பசங்கள…இன்னைக்கு நம்ம காலெஜ்ல் நடக்குற ரத்த தான மையத்துக்கு அழைச்சுட்டு போய் பார்த்துக்கிறிங்களா….”என்று கேட்டார்…

             “சரிங்க சார்…பட் நான் கூப்பிட்டு போறப்ப எனக்கு கிளாஸ் இருந்ததுனா…”என்று சந்தேகத்துடன் கேட்டான்…

    “உங்களுக்கு எப்ப கிளாஸ் வருதுன்னு புனிதா மேம் கிட்ட பார்த்து சொல்லிட்டு போங்க…அவங்க பார்த்துக்குவாங்க… “என்று அவர் கூறியதும் அவரிடம் விடைபெற்று தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றான்…

         

 

            சுருதி நேராக பள்ளிக்கு சென்றவள் கே கே விடம் பேசி ஒருவாரமாக வராததற்கு காரணம் சொல்லிவிட்டு இன்றைக்கும் விடுமுறை எடுத்துக்கொண்டு…இவள் மற்றும் இவளின் தோழிகள் தோழர்கள்…மற்றும் சில சேவை மையம் சேர்த்து நடத்தும் “அன்புடை கரங்கள்…”என்னும் சேவைமையத்திற்கு சென்றாள்…

  ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு இவளின் பள்ளி கால நட்புகள் சேர்ந்து மிக சிறிய அளவில் ஆரம்பித்தது…இரத்த தானம்…அன்ன தானம்…என்று பிறகு கொஞ்சம் வளர்ந்து ஆன்லைன் மற்றும் சிறப்பு வகுப்புகள் மூலம் ஏழை மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பது இப்படி வேலைகள் செய்து வந்தனர்…பின்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்று மதுரையில் இருக்கும் அசிரமத்துடன் இந்த அமைப்பை இணைத்து பல நற்காரியங்கள் செய்தனர்…அன்புடை கரங்கள் அமைப்பு பலரால் கவனிக்கப்பட்டது சென்னையில் வந்த வெள்ளத்தின் போது தான்…அளப்பரிய பல உதவிகள் செய்தனர்…அதனால் பல அமைப்புகளும் இவர்களுக்கு பணஉதவி செய்ய ஆரம்பித்தனர்….சுருதி இதை உருவாக்கிய அன்புடை கரங்களில் இவளும் ஒருத்தி என்பதை விட ஆரம்பித்த கரமே இவளுடையது தான்…இதற்கு ஆரம்பித்த காலங்களில் பணஉதவி செய்தது இதில் உள்ள கரங்களின் பெற்றோர்கள் தான்…

           “ஆனந்த்…எல்லாம் அங்கே தயார் பண்ணிட்டாங்களா….மெடிக்கல் ஸ்டுடென்ட் எல்லாரும் வந்துட்டாங்களா….கிளம்பலாமா”என்று அந்த அறையில் நுழைந்தவுடன் கேட்டாள் சுருதி….

           “ம்ம்…எல்லாம் ரெடி….அவந்தி கூப்பிட்டு வந்துட்டா…எல்லாரும் உள்ளே தான் இருக்காங்க…நீ வர்ரதுக்கு தான் எல்லாரும் வைட்டிங்…” என்று மருத்துவ மாணவிகள் இருக்கும் அறையை நோக்கி நடந்தவாறு கூறினான் ஆனந்த் …அவன் கூடவே நடந்த சுருதி அங்கிருந்த மருத்துவ மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை பார்த்து அசந்து விட்டாள்…குறைந்தது 30 …40 பேருக்கும் மேல் இருந்தனர்…

         நேற்று இவள் கோவப்பட்டு பேசியது இதற்காக தான்…ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது பற்றி தான்…அவர்கள் அமைப்பில் உறுப்பினர்களாக  இருக்கும் ஒரு 10 பேரிற்கும் மேல் வருகிறேன் என்று சொல்லி விட்டு கடைசி சமயத்தில் வரவில்லை என்று சொல்லி விட்டனர்…அது தான் நட்ட நடு ராத்திரியில் அவள் கத்தியது…இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு கல்லூரிகளில் பெர்மிசன் வாங்கி வைத்திருந்தனர்…இதில் தொய்வு ஏற்பட்டால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் திரும்பி இவர்களிடம் பொறுப்பு ஒப்படைப்பது மிக சிரமமாகி விடும்…

         அவந்திகாவை பார்த்தவள் அவளை அணைத்துக்கொண்டு நன்றி சொன்னாள்…அதை பார்த்துக்கொண்டிருந்த  “அக்கா…உங்க தங்கச்சிக்கு மட்டும் தானா கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம்…அர்த்த ராத்திரி பன்னிரண்டு மணிக்கு பேய் மாதிரி இந்த குட்டி சாத்தானுக்கு எல்லாம் கால் பண்ணி தாவு தீர கத்தி கூப்பிட்டது நானு அக்கா…”என்று அவந்திகாவின் உயிர் தோழி  நிலா சிலுப்பி கொண்டாள்…

        “அப்டியா டி என் தங்கம்…”என்று அவந்திகாவின் தோழி நிலாவை கொஞ்சியவள் அவளையும் அணைத்து கொண்டாள்…

         “அக்கா….அக்கா…நானும் நானும்….”என்று கத்திய மாணவர்களை பிச்சு பிச்சு என்று கூறியவாறு ஆள்க்காட்டி விரலால் சிரித்தவாறு மிரட்டியவள்   “கிளம்புங்க கைஸ்….பைக் வச்சுருக்கவங்க அதுல வாங்க…இல்லாதவங்க எங்ககூட வேன்ல வாங்க….”என்று கூறியவள் கிளம்பினாள்…

     இவ்வளவு விஷயம் நடந்தும் அவந்திகா அனைத்துக்கும் மென்சிரிப்பே கொடுத்தாள்…

             

       ஆதிக்கம் தொடரும்…

 

Advertisement