Advertisement

அத்தியாயம் 12

        மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வளையல் கடையில் தான் கதாநாயகியின் குடும்பம் ஆளுக்கு ஒவ்வொன்றாக கேட்டு அந்த கடைக்காரனை பாடாய்படுத்தி எடுத்துக்கொண்டிருந்தனர்…. அந்த கடைக்காரர் முகத்தில் இருந்த கோவத்திலே தெரிந்தது எப்பொழுது வேண்டும் என்றாலும் இந்த குடும்பத்தை விரட்டிவிட 99 சதவீத வாய்ப்பு உள்ளது என்பது…

     பின்னே பொன்வளையல் இன்னும் பளபளப்பாக வேண்டும் என்றும்…மற்ற அனைவர்க்கும் ஒரே நிறத்தில் ஒரே விதமான வேலைப்பாடுடன் வளையல் வேண்டும் என்று கேட்டால் அவர் என்ன செய்வார் பாவம்…மற்ற அனைவர் என்ற கணக்கில் 13  வயதிலிருந்து 55 வயது வரை பெண்கள் இருந்தனர்…

     “என்னங்க அண்ணா உங்ககிட்ட ஒரு வளையல் கூட எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இல்லை…”என்று சலிப்புடன் கேட்டார் சுருதியின் இரண்டாவது சித்தி அனுசியா…

     “ஏன் மா…இதுக்குமேல எல்லாருக்கும் பிடிக்குற மாதிரி வளையல் வேணும்னா நா தான் மா போய் வளையல் கம்பெனில செய்ஞ்சுட்டு வரணும்…பிடிச்சா எடுங்க இல்லாட்டி கிளம்புங்க…”என்று கோவமாக கூறினார் வளையல் கடைக்காரர்…

       கோவப்பட்டவுடன் கடைக்காரரை வார்த்தைகளால் வெளுத்துவாங்கி விட்டு… பின்பு போனால் போகிறது என்று கிட்ட தட்ட ஒரே மாதிரி நிறத்தில் வளையல் எடுத்துக்கொண்டு அந்த இடத்தை காலி செய்தனர்…

        திருமணத்துக்கு இரண்டு நாள் முன்பு மணப்பெண்ணுக்கு வளையல் போடுதல் என்றொரு சடங்கு இந்த பக்கங்களில் கடைபிடிக்க படும்…மணப்பெண்ணும்…மணப்பெண் மற்றும் மணமகனின் சொந்தபந்த பெண்கள் அனைவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அன்னை மீனாட்சியை வணங்கிவிட்டு அங்குள்ள வளையல் கடையில் மணப்பெண்ணுக்கே உரித்தான பொன்வளையல் போடுவர்….

பொன்வளையலை மணப்பெண்ணுக்கு அணிவித்துவிட்டு அப்படியே நகைக்கடைக்கு சென்று கொலுசும் மெட்டியும் வாங்குவர்…இந்த பக்கத்துக்கு வழக்கத்தில் மெட்டி மணமகனின் தங்கை அல்லது அக்கா மணப்பெண்ணுக்கு அணிந்து விடுவர்…அந்த சடங்குக்காக தான் சுருதி ஜெயக்குமாரின் குடும்பத்து பெண்கள் அனைவரும் வந்திருந்தனர்…இவர்களுக்கு துணையாக வந்து மாட்டிக்கொண்ட பாவப்பட்ட சாரி சாரி ஆசிர்வதிக்கப்பட்ட ஜீவன் தான்  நம் சுருதியின் பிரின்சிபால் கேகே…  

        அப்படியே யாரடி நீ மோகினி தனுஷ் நிலைமை தான் நமது கேகே வுக்கும்…கேகே வை சுருதி ஜெயக்குமாரின் குடும்பம் எளிதாக தங்களுக்குள் ஒரு அங்கமாக ஏற்று கொண்டது…அவனை தங்களுக்குள் இணைக்க அவர்கள் கேட்ட ஒரே ஒரு கேள்வி சுருதிக்கு  நீங்கள் என்ன வேண்டும் என்பதே…அந்த கேள்வியை ஜெயக்குமாரின் அம்மா லட்சுமி முதன் முதலாக கேகே விடம் கேட்க அவன் என்ன சொல்வது என்று முழித்து கொண்டிருந்த வேளையில்  பேச்சின் இடையில் நுழைந்த ஜோதி எனக்கு தம்பி சுருதிக்கு மாமா என்று கூறினார்… அதற்கு பின் சுருதியின் சித்தப்பா மக்களுக்கு எல்லாம் மாமாவாகவும்…அவளின் அத்தை மக்களுக்கு எல்லாம் சித்துவாகவும் மாறிப்போனான்…கே கே உறவு என்று அறிந்தவுடன் சுதாகர் செய்த அலப்பறைகள் தான் அதிகம்…சித்து சித்து என்று அழைத்து கேகேவை ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தான்…

       இப்படி அனைவருமே ஒவ்வொரு விதத்தில் சந்தோசமாக இருந்த பொழுது இருவர் மட்டுமே தங்களின் நினைவு என்னும் ஓடத்தில் இறந்தகாலம் என்னும் முடிவில்லா கடலில் நீந்தி கொண்டிருந்தனர்…அந்த இருவர் யாரென்றால் சுருதியும் அவந்திகாவும் தான்…

    அனைவரும் அனைத்தும் நல்லபடியாக வாங்கிவந்து வீட்டை அடைந்தவுடன்…இருவரும் தங்களது அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர்…

       சந்தோஷத்தில் இவர்களை மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாரும் கவனிக்காமல் இருக்கலாம்…பெற்ற தாய் கூடவா கவனிக்காமல் இருப்பார்கள்…சுருதியின் சுணக்கத்துக்கான காரணம் அவள் தங்களை விட்டு பிரியப்போவதே என்று நினைத்தார் ஜோதி…அதனால் தன் கணவரை அழைத்து கொண்டு சுருதியிடம் பேச சென்றனர்…

         சுருதியோ எதையெதையோ நினைத்து அழுதுகொண்டிருந்தாள்…அவள் மனம் முழுவதும் குற்றவுணர்வு…அடுத்து வாழ்கை என்ன ஆகும் என்ற அளவுகடந்த பயம்…ஜெயகுமார் தன்னை திட்டிய வார்த்தைகள் என்று அனைத்தும் சேர்ந்து அவளை ஒரு குழப்ப மனநிலையில் குற்றவாளியாக நிறுத்தியது…

   சுருதியின் அறைக்குள் சென்ற ஜோதியும் முத்துவேலும் கண்டது படுக்கையில் குப்புறப்படுத்து முதுகு குலுங்க அழுதுகொண்டிருந்த சுருதியை தான்…

    அவள் அழுவதை பார்த்த ஜோதி வேகமாக அவளை நெருங்கினார்…முத்துவேல் கதவை அடைத்துவிட்டு அவரும் தன் செல்ல மகளை நெருங்கினார்…அதற்குள் ஜோதி அவளை எழுப்பி அமர வைத்திருந்தவர் தன் சேலை முந்தானையால் அவள் முகத்தை அழுத்தி தொடைத்து கொண்டே அறிவுரை கூற ஆரம்பித்திருந்தார்…

       “எங்கே போக போற…உங்க அத்தை வீட்டுக்கு தானே…அம்மா அப்பாவே பாக்கணும்னு தோணுச்சுனா அஞ்சே அஞ்சு நிமிச நடை தான் டா… நம்ம வீட்டுக்கு வந்துரலாம்…இதுக்கெல்லாம் போய் அழுவங்களா…பாக்குறவங்க என்ன நினைச்சுக்குவாங்க சுருதி…இப்படி விவரம் தெரியாத பிள்ளையா இருக்காதே…”திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாள் என்று இருக்கையில் இப்படி அழுதுகொண்டு இருக்குறாளே என்ற ஆற்றாமையுடன் கேட்டார்…

       சுருதி அமைதியாகவே கண்ணீர் வடிய அழுதுகொண்டே இருந்தாள்…முத்துவேல் இருவரது உரையாடலையும் பார்த்தவாறு அமைதியாக இருந்தார்…அவருக்கு எதுவோ சரியில்லை என்றே தோன்றியது…சுருதி இதற்கெல்லாம் அழுபவள் கிடையாது…நிசர்சனம் புரிந்த பெண்…பெரிதாக ஏதோ வரப்போகிறது என்று மட்டும் அவர் மனம் அடித்து சொன்னது… இவள் திருமணம் மட்டும் வேண்டாம் என்று சொல்ல கூடாது என்று அவர்களின்  குலதெய்வமான அய்யனாருக்கு வேகமாக வேண்டுதல் வைத்தார்…

   பலவாறாக அறிவுரை சொல்லியும் அழுதுகொண்டிருந்த சுருதியை பார்த்த ஜோதிக்கு கோவம் வந்துவிட்டது…

    “ஏன் டி இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டு இருக்கேன்…இன்னும் அழுதுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்…வாயே திறந்து சொல்லு டி…எதுக்கு இப்ப ஒப்பாரி வைச்சுட்டு இருக்க…”என்றும் கோவமாக தன் மகளிடம் பேசாதவர் இன்று அதட்டி பேசினார்…

     ஜோதியை அடக்கிய முத்துவேல்”சொல்லு டா என்னாச்சு…வேற ஏதாவது பிரச்சனையா…”என்று அவளது தலையை தடவியவாறே கேட்டார்…

        சுருதி தன் தந்தையின் உடல்நிலையை கணக்கில் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்…தான் ஏதாவது சொல்ல போய் அவர் அதை வேறுமாதிரி எடுத்துக்கொண்டு அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ற யோசனையில் எதுமே பேசாமல்  இருந்தாள்…முத்துவேல் திரும்ப திரும்ப கேட்கவும் அழுதவாறே அவள் கூறியதை கேட்ட இருவரும் வார்த்தைகளில் சொல்ல முடிய மனக்கஷ்டத்தை உணர்ந்தனர்…

      “அப்பா நா நல்ல பொண்ணு இல்லைதானே…ரொம்ப கெட்டவள் தானே…character less  பொண்ணு தானே…”என்று அழுதவாறே மூக்கை உறிஞ்சிக்கொண்டே தன் பெற்றவர்களின் முகத்தை பார்த்தவாறு கேட்டாள்…

 

  “லூசு மாதிரி பேசாதே பாப்பா…அப்டி எல்லாம் ஒன்னும் இல்லை…”என்று வேகமாக கூறினர் இருவரும்….

    “இல்லை அப்பா…அப்டி தான்…நா ரொம்ப கெட்டபொண்ணு…ஏற்கனவே ஒருத்தனை காதலிச்சுட்டு இப்ப ஒருத்தனை கல்யாணம் பண்ண போறேன்ல…அப்ப என் பேரு வேற தானே பா….”என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மூன்று வருடங்களுக்கு முன் மருத்துவமனையில் வைத்து ஜெயக்குமார் தன்னை திட்ட வந்த வார்த்தை அநியாயமாக இப்பொழுது ஞாபகம் வந்து தொலைத்தது…

 “நீ இதெல்லாம் இன்னும் மறக்கலையா பாப்பா…நீ எல்லாத்தையும் மறந்துட்டேனு நினைச்சு நாங்க சந்தோசமா இருந்தோமே பாப்பா…”என்று தன் மகள் இன்னும் அவளின் கருப்பு பக்கத்தை மறக்காமல் அதிலே உழன்று கொண்டிருக்கிறாளே என்று கண்கலங்க கேட்டார் முத்துவேல்…

     “அதை மறக்கணும்னா இந்த உடம்பிலிருந்து என் உயிர் போனும் பா…அப்ப தான் என்னால் மறக்க முடியும்…நா ஏமாந்ததும்…நீங்க அவமானப்பட்டதும் அவ்வளவு சீக்கிரத்தில் என்னால மறக்க முடியாது பா…”என்று கண்களில் நீர் வடிய மூக்கு துடிக்க கூறினாள் சுருதி…

        இந்த வார்த்தையை கேட்ட பிறகு தான் இருவருக்கும் உயிரே வந்தது…எங்கே அவள் அந்த காதலை மறக்க முடியாமல் இப்படி இருக்கிறாளோ என்ற கவலையில் இருந்தவர்களுக்கு அவள் தான் பட்ட அவமானங்களை தான் நினைக்கிறாள் என்று நினைத்த போது ஒரு விதத்தில் சந்தோசமாக தான் இருந்தது…

          “பாப்பா…நீ பேசுறது உனக்கே முட்டாள்தனமா தெரியல…எல்லார் வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஒரு விஷயம் இருக்கும்…இதுல உன் மேல தப்பே இல்லை…நீ யாரையும் ஏமாத்தல…யார் நம்பிக்கையும் குலைக்கள…தப்பு எல்லாரும் பண்றது தான்…இப்படி பேசாத…நா உன்னை அவ்வளவு தைரியம் இல்லாத பொண்ண வா வளத்துருக்கோம்…நீ இருக்க pubble  இருந்து வெளிய வா…”என்று கூறினார் முத்துவேல்…

 “எப்படி பா நான் யார் நம்பிக்கையும் குலைக்கள….யாரையும் ஏமாத்தலைன்னு சொல்லறீங்க…உங்க ரெண்டு பேர் நம்பிக்கையும் குழி தோண்டி புதைச்சவ பா நான்…உங்கள ஏமாத்துனவ பா…”என்று இருவரின் கைகளையும் பிடித்தவாறு அழுதுகொண்டே கூறினாள் சுருதி…

     “லூசு மாதிரி பேசாதே…அந்த வயசுல நீ அதுமாதிரி பண்ணாம இருந்திருந்தா தான் தப்பு…ஆனால் என்ன உன் பிரச்னை கொஞ்சம் பெருசாயிருச்சு…அவ்வளவு தான்…விடு டா…நீ இப்படி எல்லாம் நினைக்குறவ கிடையாதே…ஏன் திடிர்னு என்னாச்சு…”என்று சுருதியிடம் சிரித்தவாறு கூறினார் முத்துவேல்…

    ஏதோ யோசித்தவாறே இருந்த ஜோதி”குமார் ஏதாவது உன்னை சொன்னானா…”என்று கேட்டார்…

 

 ஏனென்றால் இவ்விசயம் முத்துவேல்…ஜோதி…ஜெயக்குமார் என்ற இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும்…அனைத்தையும் குடும்பத்தாரிடம் பகிர்ந்துகொள்ளும் முத்துவேல் இவ்விஷயத்தை யாரிடமும் கூற விரும்பவில்லை…யாரும் தன் மகளை ஒரு நிமிடம் கூட தவறாக நினைப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை…ஏதோஎதோ பொய்கள் சொல்லி தான் மதுரையில் இருந்து நீலகிரிக்கு சென்றனர்…ஏனோ குமாரிடம் சொல்ல அவர் தயங்க வில்லை…அவனை முழுமையாக நம்பினார்…

  வேகமாக ஜோதியிடம் இல்லை என்று மறுத்தவள் கண்களை எட்டாத ஒரு புன்னைகையை உதிர்த்துவிட்டு குளியலறை நோக்கி சென்றாள்…

    இனிமேல் சரியாகி விடுவாள் என்ற நம்பிக்கையில் இருவரும் வெளியேறினர்…

 

******************************************************************

  திருமணத்துக்கு முதல் நாள் இரவு மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் முகூர்த்த அரிசி போடுதல் என்றொரு சடங்கு உள்ளது…தெய்வத்தை வணங்கி ஒரு பானையில் வீடு நபர்கள் மற்றும் சொந்தங்கள் என்று அனைவரும் அதில் அரிசி போடுவர்…

       அச்சடங்கை முடித்துவிட்டு அனைவரும் திருமணம் ஏற்பாடு செய்துருக்கும் திருமண மண்டபத்துக்கு சென்றனர்…

      இளசுகள் அனைவரும் கிண்டல் செய்து கொண்டிருக்க சுருதி வெட்கப்பட வேண்டும் என்பதற்காக வராத வெட்கத்தை வரவைக்க போராடி கொண்டிருந்தாள்…அதை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த ஜெயக்குமார்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…உடனே அவள் கைபேசிக்கு வாட்சப்பில் ஒரு குறுச்செய்தியை தட்டி விட்டான்…

     “என்ன கருமம் வேணாலும் பண்ணு…தயவுசெய்ச்சு வெக்கம் படுற மாதிரி நடிக்காதே டி…”

   அதை சுருதி வாசிக்கும் முன் அவளிடமிருந்து கைபேசியை கைப்பற்றிய செல்வா அதை சத்தமாக வசித்து காமித்தான்…

     ஏற்கனவே அவளை ஒட்டிக்கொண்டிருந்த ஜெயக்குமாரின் நண்பர்களும் சுருதியின் தோழிகளும் இதை கேட்டவுடன் கைபேசி சுற்றி அங்கிருந்த அனைவர் கைகளுக்கும் மாறி ஒரு வெடி சிரிப்பை உருவாக்கியது..

       சுருதியின் கோவத்தின் அளவை கேட்கவும் வேண்டுமா…கொலைவெறியில் இருந்தாள்…

      கைபேசி கை மாறியவுடனே அந்த இடத்தில் இருந்து எஸ் ஆகிருந்தான் ஜெயக்குமார்…

அவனை சுற்றி சுற்றி தேடிய சுருதிக்கு அவன் கண்ணில் படவேயில்லை…இதையும் கிண்டல் பண்ணி சிரித்தனர்…சுருதிக்கு இவங்கல்லாம் என்ன லூசா என்று நினைத்தவாறே அமைதியாகி விட்டாள்…

        நண்பர்கள் அனைவரும் சாப்பிட சென்றவுடன் சுருதி…செல்வா…அவந்திகா மூவர் மட்டுமே அமர்ந்திருந்தனர்…அவர்களுக்கு நேரெதிராக  அவர்களின் தாய்மார்கள் ஐவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்…இதை பார்த்த செல்வா

    “உண்மை தெரியாத யாராவது பார்த்தகனா இவங்க ஐஞ்சு பேர் மாதிரி தான் நாத்தனா மதினி மார்கள் இருக்கணும்னு நினைச்சுக்க மாட்டாங்க…”என்று கேட்டான்…

      “ஹா ஹா ஹா…ஆமா டா…ஆனால் இவங்க போடுற சண்டை நமக்கு தானே தெரியும்…”என்று சிரித்தவாறு கூறினாள் சுருதி…

     “டேய் காவாயா விளையாடி பார்ப்போமா…”என்று இருபுருவங்களையும் உயர்த்தியவாறு கேட்டாள் சுருதி…

  “கண்டிப்பா…என்ன பண்ணலாம்…”என்று கேட்டான் செல்வகுமார்…

     “நீ போய் புவனா சித்தியை இங்க வர சொல்லிட்டு நீ போய் அங்க உக்காந்துக்கோ…அவங்க பேசுறத மட்டும் கவனி டா மாமா…”என்று சிரித்தவாறு கூறினாள்…

     அதுபோல் எழுந்து அங்கு சென்றவன் தனது மூணாவது அத்தையான புவனாவை சுருதி அழைப்பதாக கூறி அனுப்பியவன் அவர் இருந்த இடத்தில் இவன் அமர்ந்து கொண்டான்…

       புவனா இங்குட்டு சென்றவுடன் ஆரம்பித்தது பாருங்கள்

      “பாரேன்…அவ தலையை எத்தனை கிளிப் குத்திருக்கானு…இப்ப தான் என்னமோ இளமை திரும்புதுன்னு நினைப்பு…”என்று முகவாயை தோள்பட்டையில் இடித்தவாறு கூறினார் சுருதியின் இரண்டாவது சித்தியான அனுசியா…

     “அதானே டி…என்னமோ உலகத்துல இல்லாத அக்கா காரி இருக்க மாதிரி எந்நேரம் பார்த்தாலும் போன் தான் டி…செத்த நேரம் வெளிய வந்து உக்கார முடியல…அவ்வளவு பேசுறாளுக…நம்மட்ட தான் ஒண்ணுமே தெரியாதவை மாதிரி நடிப்பு…”என்று கூறினார் சுருதியின் தாய் ஜோதி…

     “ஐயையோ…நீ வேற ஜோதி…அன்னைக்கு பத்திரிகை குடுக்க வந்த கல்லணை காரரை வானு கூட கேக்கலையாம்…பாவி மக ஒரு டீ கூட போட்டு தரலையாம் …அவர் பொண்டாட்டியை பார்த்தப்ப அவ கேக்குறா…”என்று முகவாயில் கை வைத்தவாறு கூறினார் லட்சுமி…

    ஜோதியோ கொஞ்சமாச்சும் அண்ணன் பொண்டாட்டின்னு மரியாதையை இருக்கா…என்னை விட மூத்தவளான மதினி னு கூப்பிட கூடாதாம் என்று நினைத்தவாறு சிரித்துவைத்தார் ஜோதி…

       இப்படி ஆளுக்கு ஒன்றாக கூறினர் ஒற்றுமையான குடும்ப பெண்கள்….இதை கேட்ட செல்வாவோ விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தான்…

  அங்கே அவர் மட்டும் சளைத்தவரா என்று ஒரு ஆள் மீதம் இருக்க நான்கு பேரை தாளித்து கொண்டிருந்தார்…

       “அப்பாடா…நல்லவேளை கூப்பிட்ட டி…அங்கே ஒரே அறுவை…தாங்க முடியல…ஓல்ட் லேடீஸ்…”என்று உதட்டை பிதுக்கி கூறியவர்…

      “ஒரு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ஆச்சும் அவங்களுக்கு இருக்கா டி…உலகம் எவ்வளவு முன்னேறிருச்சு…இன்னும் மண்டை அகலத்துக்கு கரை வைச்சு பட்டுசேலை கட்டிக்கிட்டு கொண்டை போட்டுக்கிட்டு…”என்று கூறினார் புவனா…

      இதற்கு மேல் இருந்தால் வாசகர்களுக்கு தங்கள் குடும்பத்தின் மேலுள்ள மதிப்பு குறைத்து விடும் என்று நினைத்த செல்வா எழுந்து வந்தவன் புவனா அத்தையை அங்கு அனுப்பிவிட்டான்…

    இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்…”நம்ம குடும்ப மானமே கப்பல் ஏறுது…இன்னும் கொஞ்ச நேரம் உக்காந்திருந்தேன் அவ்வளவு தான் போல…”என்று அவந்திகாவின் மீது சாய்ந்து சிரித்தவாறே கூறினான் செல்வா…

   ஆனால் சுருதி இதழ் பிரித்து சிரிக்க கூட இல்லை…அமைதியாக அமர்ந்திருந்தாள்…செல்வா சிரிப்புடன் அதை கவனித்தவன் அவளிடமும் பேசி சிரிக்க வைத்தான்…ஆனால் அப்படி ஒன்றும் சிரித்து விடவில்லை…

        இப்படி புறணி பேசிக்கொள்பவர்கள் ஒருநாளும் வெளியில் யாரையும் விட்டுக்கொடுத்தது இல்லை…இந்தமாதிரி பெரிய குடும்பத்தில் இருக்கும் பெண்களை கூர்ந்து பாருங்களேன் என்னதான் ஒருத்தர் இல்லாதபோது மற்றவரிடம் பேசினாலும்…தங்கள் குடும்பம் இல்லாத ஒருத்தர் ஏதாவது சிறியதாக ஒன்று தவறாக கூறினாலே கொதித்து போய்விடுவார்கள்…அவர்களுடன் சண்டையிடாமல் கண்டிப்பாக திரும்ப மாட்டார்…இதுவும் ஒரு வகையான பேரன்பு தான்…

 

  சிலுசிலென்ற காற்று அவந்திகாவின் நீள முடியை கலைத்துச்செல்ல அவளோ ஜெயக்குமாரின் நெஞ்சில் சாய்ந்தவாறு தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தாள்…ஜெயகுமாரோ அவளை அணைத்து அவளிடம் எதுவோ மெதுவாக பேசிக்கொண்டிருந்தான்…

     மண்டபத்தில் உள்ள மொட்டை மாடியில் இரவு ஒரு மணி போல தான் இதெல்லாம் நடந்து கொண்டிருந்தது….

          “எல்லாத்தையும் மறந்திரு…ரெண்டு பேருக்குமே இது நல்லது இல்லை….”என்று தன் நெஞ்சில் சாய்ந்து அழுதுகொண்டிருக்கும் அவந்திகாவிடம் கூறினான் ஜெயக்குமார்…

        அப்பொழுது தான் தம் அடிப்பதற்காக மேலே வந்த செல்வா இவை அனைத்தையும் கேட்டான்…கேட்டவன் நொடியும் தாமதிக்காமல் வந்த சுவடு கூட தெரியாமல் கீழே இறங்கினான்…

       ஒட்டு கேட்பவர்கள் நல்லது எதையும் கேட்பது இல்லை என்பது எவ்வளவு உண்மை….

      

 

     மங்கள வாத்தியங்கள் ஒரு புறம் முழங்கிக்கொண்டிருக்க…குடும்ப உறவினர்கள் அனைவரும் அங்கிட்டும் இங்கிட்டும் என்று சென்று வேலைகள் பார்த்துக்கொண்டிருக்க ஜெயக்குமார் மணமேடையில் அமர்ந்து அய்யர் சொல்லும் மந்திரங்களை கூறிக்கொண்டிருந்தான்…

          முகூர்த்த நேரம் நெருக்கிருச்சு…பொண்ணை அழைச்சுட்டு வாங்க என்று அய்யர் குரல் கொடுக்கவும்….சிவப்பு நிற சேலையில் அந்த வான்மகளே இறங்கி வந்துவிட்டாலோ என்று சந்தேகப்படும் அளவிற்கு புன்னைகை முகத்துடன் தோழிகளின் புடைசூட அன்ன நடையிட்டு வந்தாள் அவந்திகா…

             ஜெயகுமாரோ மணமகளை திரும்பி கூட பார்க்காமல் கை முஷ்டி இறுக கண்கள் சிவக்க தனக்கு நேரெதிராக முதல் வரிசையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு அவளின் மேனரிசம் ஆன இரு புருவங்களை உயர்த்தி….உதடுகளை பிதிக்கியவாறு தலையை மேலும் கீழும் ஆட்டும் சுருதியை பார்த்துக்கொண்டிருந்தான்…

          அவந்திகா அருகில் வந்து அமர்ந்தவுடன் மாங்கல்யத்தை அவளின் கழுத்தை நோக்கி கொண்டுசென்றவன் பார்வை முழுவதும் சுருதி மேலே இருந்தது…..

 

யாருக்கு யாரோ….கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பம்…

 

ஆதிக்கம் தொடரும்…

 

Advertisement