Advertisement

அன்புடைய ஆதிக்கமே 10

 

        ஜெயக்குமார் சுருதி நிற்கும் இடத்தை நெருங்க நெருங்க தான் தெரிந்தது…அவள் அணிந்திருந்த வெள்ளை நிற உடை முழுவதும் ஆங்காங்கே ரத்தம் தெளித்திருக்க….சுருதி கண்கள் சிவக்க…உதடுகள் ரெண்டும் அழுத்தமாக மூடியிருக்க…அசையாது நின்று கொண்டிருந்தாள்…அவள் இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஏதோ விபத்து நடந்திருக்கும் போல சாலையில் ஒரு 3 மீட்டர் நீளத்திற்கு ரத்தம் காய்ந்து கிடந்தது தெரிந்தது… ஆங்காங்கே இரண்டு மூன்று நபர்கள் நின்றுகொண்டிருந்தனர்….

 

          ஜெயக்குமார் அகமும் புறமும் பதற அவள் இருக்கும் இடத்தை அடைந்தவன் தன் வண்டியை அவசரமாக நிப்பாட்டிவிட்டு அவளை அடைந்தான்…

           “சுருதி என்ன டி ஆச்சு…உனக்கு எதுவும் அடிபடலையே….”என்று வாய் வினவினாலும் அவனின் கண்கள்  முழுவதும்  அவளுக்கு எதுவும் அடிபட்டிருக்கிறதா என்று மேலிருந்து கீழ் வரை பார்ப்பதிலே குறியாக இருந்தது..அவளுக்கு எந்த விதமான அடியும் படவில்லை…

          அவளோ எந்த பதிலும் சொல்லவில்லை… அவள் பேசாமல் இருப்பதை பதட்டத்தில் அவன் கவனிக்கவே இல்லை…

 

          அவளுக்கு எங்கயும் அடிபடவில்லை என்பதை நொடிக்கு 100 தடவைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்த தன் இதயத்துக்கு புரியவைக்க முயன்று கொண்டிருந்தான்… சில நொடிகளில் அதில் வெற்றியும் பெற்றிருந்தான்…

 

          

              அப்பொழுது தான் அவள் தன்னிடம் பேசவில்லை என்று உணர்ந்தவன் அவளை கூர்ந்து பார்த்தான்…அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது அவளோ பொங்கி வரும் அழுகையை அடக்கி கொண்டிருக்கிறாள்  என்பதை…

        “சுருதி…”என்று அவள் பெயரை அவன் சொல்லி முடிப்பதற்குள்”ஏன் கால் அட்டென்ட் பண்ணல…”என்று கேட்டவள் அழுவதற்கு தயாராக அவள் உதடுகள் பிதுங்கி கண்களில் இருந்து இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் வடிய ஆரம்பித்திருந்தது…

      அவள் அழுவதை பார்த்து அவனுக்கும் கண்கள் கலங்கியது…”சாரி டி…”என்று அவள் கண்ணீரை துடைத்து கொண்டே கூறினான்…

      அவன் கையை தட்டி விட்டவள் அவனை நோக்கி குனி என்பது போல் சைகை செய்தாள்…அவளை நோக்கி குனிந்தவனை பளார் என்று ஒரு அரை கொடுத்திருந்தாள்…

 அவனோ எப்படி இவள் தன்னை அடிக்கலாம் என்றெல்லாம் கோவப்படாமல் மீண்டும் அவள் கண்ணீரை துடைத்து கொண்டே”சாரி டி…”என்றான்…மீண்டும் மறுகன்னத்தில் பளார் என்று இன்னொரு அரை அறைந்தாள்…

        சுற்றி ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் அனைவரும் சுருதியை தான் அதிசயமாக பார்த்தனர்…ஆறடி ஆண்மகனை அவனின் தோள் உயரத்துக்கு கூட இல்லாத பெண் இப்படி குனிய சொல்லி நடுரோட்டில் நிற்க வைத்து அடித்துக்கொண்டிருக்கிறாளே என்று…அவள் தைரியமானவள் என்று சிறிது நேரத்துக்கு முன்பு தான் நிரூபித்திருந்தாள்…ஆனால் இவ்வளவு தைரியமான பெண் என்று அவர்கள் நினைக்கவில்லை…

       “சரி போதும் டி…அடிச்சுட்டே இருப்பியா…என்ன ஆச்சுன்னு சொல்லு…அழுகாதே டி முத…”என்று கூறியவன் கண்ணீர் வடிக்கும் அவள் முகத்தை தன் கைக்குட்டையால் துடைத்து விட்டான்…

         

    இவ்வளவு நேரம் எப்படி தான் அந்த வாந்தியை அடக்கி வைத்திருந்தாலோ ஓரமாக சென்று வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்…

           வேகமாக சென்று அருகிலிருக்கும் கடையில் தண்ணீர் பொத்தல் வாங்கி வந்தவன் பின்னிருந்து அவள் தலையை பிடித்து கொண்டான்…

             வாந்தியெடுத்து முடித்தவுடன் அவளை தன்மேல் சாய்த்து கொண்டு முகம் கழுவிவிட்டவன்…வாயை துடைத்து அங்கிருந்த பழக்கடையில் வெளியே இருக்கும் டேபிளில் அமர்ந்து அவளையும் அமர வைத்தான்…அங்கு அவன் ஏற்கனவே கேட்ட எலுமிச்சை பழ சாறு இருந்தது…அவளுக்கு அதை மெதுவாக புகட்டிவிட்டவன் மென் குரலில் நடந்ததை கூற சொன்னான்…

               “இவ்வளவு நேரம் வாந்தியை அடக்கி வைச்சுருப்பியா…வந்தா எடுக்கமாட்டியா…லூசு…”என்று பாசமாக கேட்க நினைத்து அதையும் அதட்டலாகவே கேட்டான்…

              “நீ ஏன் கால் அட்டென்ட் பண்ணல…எனக்கு பயமா இருந்துச்சு அதான்…ஒரு வேலை மயக்கம் போட்டுட்டா என்ன பண்றது…”என்று அவன் குடுத்த எலுமிச்சை சாறை குடித்தவாறே கிட்டத்தட்ட புலம்பினாள் என்றே சொல்ல வேண்டும்…

              “சாரி டி…இனிமே இப்டி பண்ணமாட்டேன்  சரியா…என்ன ஆச்சு….ஏன் டாப்ஸ் எல்லாம் ரத்தமா இருக்கு…”என்று அவள் புலம்புவதை தாங்க இயலாமல் மீண்டும் மன்னிப்பு கேட்டான்…

   

சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன்பு…..

 

     சரியாக 12  மணிக்கு கனி பழக்கடை என்னும் பெயர்ப்பலகை போட்டிருந்த கடைக்கு முன்னால் வண்டியை நிற்பாட்டி இறங்கினாள்  சுருதி…

 

   “அப்பா…என்னமா கட்டிருக்கானுங்க…outer area நல்லா வளைச்சு போட்டானுங்க போல…இங்கிருந்து பஸ் ஸ்டாப் போணும்னா கூட எப்படியும் இரண்டு கிலோ மீட்டர்க்கு மேல நடக்கணும் போலயே…”என்று  தனக்கு எதிரே சிறிது தூரம் தள்ளியிருந்த கல்லூரியை பார்த்தவாறு எப்பொழுதும் போல மனதுக்குள்ளே புலம்ப ஆரம்பித்தாள்…

 மேலும் ஏதோ ஏதோ நினைத்தவாறு 10 நிமிடங்களை கடத்திருந்தாள்…ஆனால் அவன் இன்னும் வந்த பாட்டை தான்  காணோம்.. பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க  என்று பாட்டு பாடததது தான் குறை….எட்டி எட்டி சாலையை பார்த்துக்கொண்டிருந்தாள்…

      அப்பொழுது தான் ஒரு 10  வயது மதிக்கத்தக்க சிறுவன் 10 …15 ஆடுகளை சாலையின் அந்த பக்கமிருந்து இந்த பக்கம் ஒட்டி வந்து கொண்டிருந்தான்…

        அந்த சிறுவன் சாலையை கடப்பதையே துடிதுடிக்கும் இதயத்துடன்…படபடப்புடன் பார்த்து கொண்டிருந்தாள்…ஏனெனில் அது ஒரு நெடுஞ்சாலை நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான வண்டிகளும்…மகிழுந்துகளும்…லாரிகளும் சென்று கொண்டிருந்தன…

       ஒரு வழியாக அந்த சிறுவன் ஆடுகளை பத்திக்கொண்டு சாலையை கடந்த பின்பு தான் சுருதிக்கு உயிரே வந்தது…

         அந்த சிறுவன் இவளை நெருங்கியவுடன் அவனை பார்த்து சிரித்தவள்….”பார்த்து போ…”என்று கூறியவாறு அவனுக்கு கை அசைத்தாள்…

      அச்சிறுவனும் இவளை பார்த்து சிரித்துவிட்டு கை அசைத்து சென்றான்…

      அச்சிறுவன் சாலையை விட்டு இறங்கி அங்கிருந்த நிலப்பரப்பை அடைந்தவுடன் தான் அவனை விட்டு பார்வையை திருப்பினாள் சுருதி…

   மேலும் சில நிமிடங்கள் சென்றிருந்த வேளையில் தான் அந்த விபரீதம் நடந்தது…

     அந்நெடுச்சாலை இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டிருந்தது…அந்த பக்கமிருந்து வந்த ஒரு இருசக்கர வாகனம் இடப்பக்கம் நோக்கி திரும்புவதற்குள் நேராக அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த  கருப்பு நிற audi s5 கார் அந்த இரு சக்கர வாகனத்தை இடிக்க சென்று…அந்த விபத்தை தடுப்பதற்காக  அந்தக்காரை ஓட்டியவர் ஒடித்து திருப்பினார்…மீண்டும் சரி விகிதத்தில் கார் வந்தபொழுது அந்த கார் அவளை நெருங்கியிருந்தது… எங்கிருந்து தான் அந்த நிறைமாத ஆடு வந்தது என்று தெரியவில்லை…அந்த ஆட்டின் மீது மோதி அதை தூக்கி எறிந்தது…அது சரியாக அவளின் காலடியில் வந்து விழுந்தது…அதனால் அவளின் வெள்ளை நிற உடை முழுவதும் ரத்தம் தெறித்தது…

        

        இவை அனைத்தும் கண்முடி திறக்க எடுத்துக்கொள்ளும் ஒரு நொடியில் நடந்து முடிந்திருந்தது…

 ஒரு நொடியில் முடிவெடுத்தவள் அவளுக்கு அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்து அந்த காரை நோக்கி விட்டெறிந்தாள்…

      அந்த கல்லும் குறித்தவறாமல் சென்று அந்த காரின்  பின்பக்க கண்ணாடியை சல்லி சல்லியாக நொறுக்கி இருந்தது…

                  தான் எறிந்த கல் குறித்தவறாமல் இலக்கை அடைந்ததை நினைத்து அந்த ரணகளத்திலும் அவளது மனது சிறிது கிளுகிளுப்பை  உணர்ந்து தொலைத்தது..

        கண்ணாடி உடைந்தவுடன் சிறிது தூரம் சென்ற அந்த கார் மீண்டும் u டர்ன் எடுத்து திருப்பி அவள் இருந்த இடத்தை நோக்கி வந்தது…

         அதற்குள் அங்கு மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது….ஆடு அடிபட்டதை பார்த்து அந்தசிறுவன் வேகமாக ஓடிவந்து ஆட்டின் அருகில் வந்து அழுதுகொண்டிருந்தான்…

      அந்த audi s5 சாலையை தேய்த்தவாறு புழுதி பறக்க சுருதியின் முன் வந்து நின்றது….

   நிப்பாட்டிய வண்டியிலிருந்து ஆறடிக்கும் அதிகமான உயரத்துடன் கண்களெல்லாம் சிவக்க 35 வயது மதிக்கத்தக்க ஒருவன் இறங்கினான்…

   “யூ ப்ளடி சீப்…ஹொவ் டர் யூ…என் கார் மேலையே கல்லை தூக்கி எறிவ…”என்று அவனின் முழு உயரத்துக்கு நிமிர்ந்து கண்சிவக்க கேட்டான்…

        கார் வந்து அப்படி நின்ற பொழுதே தன்னிச்சையாக சுருதியின் கைகள் ஜெய்குமார்க்கு அழைப்பு விடுத்திருந்தது…

          ஆட்டின் அருகில் இருந்த கூட்டம் அனைத்தும் இவர்களது உரையாடலை கேட்க ஆரம்பித்திருந்தது…

            உடல் முழுவதும் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாலும் கண்களில் தெரிய விடாமல் நடுக்கும் குரலை எப்டியோ கம்பிரமாக மாற்றியவள் “ஏய் மேன்…mind your tongue …உன் கார்கண்ணாடி எவ்வளவு உனக்கு முக்கியமோ அதை விட அந்த பையனுக்கு உயிருள்ள அந்த ஆடு முக்கியம்…மனுசங்க உயிர் மட்டும் பெரிசு இல்லை…இந்த மாதிரி விலங்குங்க உயிரும் முக்கியம் தான்…மரியாதையா அந்த பையனுக்கு நஷ்ட ஈடு குடுத்துட்டு போ…”என்று கூறியவாறே ஜெய்குமார்க்கு விடாமல் அழைத்துக்கொண்டிருந்தாள்…

         “”கேவலம் அதுக்காக என் 80 lakh கார்கண்ணாடியை உடைப்பியா…”என்று சீறலுடன் கேட்டான் அந்த கார்காரன்…

 அங்கிருந்த பொதுமக்களும் சுருதிக்கு ஆதரவாக பேச ஆரம்பித்திருந்தனர்…

       “என்ன பா…நீ பாட்டுக்கு அடிச்சு போட்டுட்டு போய்ட்டு இருக்க…அதுவும் ஒரு உயிர் தானே…”என்று ஆளாளுக்கு ஒன்று கூறவும் அவனின் காருக்குள் இருந்த தன் வாலட்டை எடுத்து 10  15 இரண்டாயிரம் நோட்டுகளை அங்கிருந்த ஒரு பெரியவரிடம் தூக்கியெறியாத குறையாக கொடுத்தவன் இவளை நோக்கி ஏற்கனவே குடித்ததால் சிவந்து இருந்த கண்கள் கோவத்தில் இன்னும் சிவக்க  “உன்னை பார்த்துகிறேன்…”என்று அவளது உடலின் அணு கூட பயத்தில் சிலிர்க்கும் அளவு கடின குரலில் கூறி சென்றான்…

  இவ்வளவு களேபரம் நடந்துகொண்டு இருந்த போதும் பயத்தில் அவளது கைகள் ஜெயக்குமார்க்கு அழைத்து கொண்டே இருந்தது…ஆனால் அவன் எடுக்கவே இல்லையே…

        அப்பொழுது தான் அந்த இறந்த ஆட்டை பார்த்தவளுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது…பற்றாக்குறைக்கு எப்பொழுதும் போல் வாந்தி வேறு வந்து தொலைத்தது…பொங்கி வரும் அழுகை மற்றும் வாந்தியை கஷ்டப்பட்டு அடக்கியவன் கை மீண்டும் தானாக ஜெயக்குமாரை அழைத்திருந்தது…சேனையாடு என்பதால் அதான் வயிற்றில் இருந்த இரண்டு ஆட்டுக்குட்டிகள் வெளியே வந்திருந்தது…மூன்று உயிர்களும் சம்பவ இடத்திலே உயிரை இழந்திருந்தன…

            அந்த பையனோ தன்னை சுற்றி நடந்த எதையும் கவனத்தில் எடுக்காமல் அழுதுகொண்டே இருந்தான்…

             “சரி அழுகாத தம்பி…எந்திரி…”என்று அவனை எழுப்பினாள்…

              அதற்குள் அவனின் அன்னை வந்திருந்தார்…வந்தவர் இறந்துகிடக்கும் ஆட்டை பார்த்தவர் நேராக வந்து தன் மகனை அடிக்க ஆரம்பித்தார்….

            அவரிடம் இருந்து அந்த சிறுவனை பிரித்த சுருதி பெரியவரிடம் அந்தக்கார் காரன் குடுத்த பணத்தை வாங்கி அச்சிறுவனின் அன்னையிடம் குடுத்தாள்…

 அதை வாங்கியவர் தன் மகனுடன் சேர்ந்து இறந்த ஆட்டை தூக்கி கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்….

       அவரை சொல்லியும் குற்றமில்லை…பணம் தான் அனைத்தும்…அவர்களின் வாழ்வாதாரமே இந்த ஆட்டு மந்தையை நம்பி தான் போய் கொண்டிருக்கிறது…எப்படியும் 20 கிலோ உள்ள சேனையாடு இறந்தால் அவர்களுக்கு எவ்வளவு நஷ்டம்…

       அவர்கள் சென்ற பின்பு கூட்டமும் கலைந்தது…சுருதியும் அந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வந்து நின்று கொண்டாள்…வாந்தியும் கண்ணீரும் போட்டி போட்டு கொண்டு வந்தது…எங்கே வாந்தி எடுத்தால் மயங்கி விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் உதடுகளை இறுக மூடியவாறு அசையாமல் நின்றிருந்தாள்…அதிலும் ஜெயக்குமார்க்கு அழைத்து கொண்டிருந்தாள்…

பிறகு தான் ஜெயக்குமார் வந்தது…

அதே நேரத்தில்…

 

      முத்துவேல் வீட்டில் அவரின் அறையில் உள்ள பால்கனியில்  அவரது தம்பிகள் மற்றும் முத்துவேல் என்ன மூவரும் அமர்ந்திருந்தனர்…

        கணேசனும் ஆறுமுகமும் அண்ணனின் முகத்தை பார்த்தவாறு இருந்தனர்…வீட்டு ஆட்கள் யாரும் வீட்டில் இல்லாத போது பேச வேண்டும் என்று கூறி அழைத்திருந்தார்…என்னவாக இருக்கும் என்ற யோசனையில் இருவரும் இருந்தனர்…வந்து பத்து நிமிடம் ஆகியும் தங்களது அண்ணன் தங்களிடம் பேச யோசிப்பதிலே தெரிந்தது விஷயம் ஏதோ பெரிதென்று…

           லேசாக தொண்டையை செறுமிய முத்துவேல் தான் நினைத்ததை கூற ஆரம்பித்தார்…

“இந்த கல்யாணத்தை நிறுத்திரலாம்னு நினைக்குறேன் கணேஷா….இது சரியா வரும்னு எனக்கு தோணல…கல்யாணம் பண்ணிக்க போற ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாத போது அது எப்படி சரியா வரும்…”

    “என்ன அண்ணா இப்டி சொல்லுற…பத்திரிக்கைலாம் குடுக்க ஆரம்பிச்சாச்சு…இப்ப போய் நிப்பாட்ட சொல்லுற…”என்று பதட்டத்துடன் வினவினார் ஆறுமுகம்…

     “இல்லை டா…நிச்சயத்து அன்னைக்கு கூட அவங்க ரெண்டு பெரும் சண்டை போட்டதை பார்த்திங்கள…உங்களுக்கே தெரியும் ரெண்டு பேருக்கும் ஒத்துவராதுன்னு…எனக்கு என்னமோ ரெண்டு பேர் வாழ்க்கையையும் கேள்வி குறி ஆகுறோமோன்னு பயமா இருக்கு..என் ஆசைக்காக அவங்க வாழ்க்கையை குழப்ப வேண்டாம்… “

என்று கூறினார்…மிகவும் யோசித்திருப்பார் போல…இந்த முடிவு அவர்க்கும் சந்தோசத்தை அழைக்கவில்லை என்பது அவரது கசங்கிய முகத்திலிருந்து தெரிந்தது…

     “அவங்க சண்டை போடுறது என்ன நமக்கு புதுசா….இதுக்கு போய் கல்யாணத்தை நிப்பாட்டுறதா…”என்று மீண்டும் ஆறுமுகமே கேட்டார்…கணேசன் வாயே திறக்கவில்லை…

      “அது மட்டும் இல்லை ….நிச்சயம் முடிச்சனைக்கு நைட் ரொம்ப நேரம் சுருதி ரூம்ல விளக்கு எரிச்சுட்டே இருந்தது…என்னனு போய் பார்த்தேன் டா…கீழே உக்காந்து அழுதுட்டு இருந்தா டா…ரொம்ப கஷ்டமா போச்சு…எதுவுமே கேக்காம வந்துட்டேன்…அதான் சொல்றேன்…”என்று தன் எண்ணத்தை கூறினார் முத்துவேல்…

       அப்பொழுது பால்கனி வழியாக சாலையை பார்த்து கொண்டிருந்த கணேஷன் தன் அண்ணனை அழைத்து அங்கு பார்க்க சொன்னார்…

        அங்கு ஜெயக்குமார்  ஓட்ட இருசக்கர வாகனத்தில் இருபுறமும் கால் போட்டு அமர்ந்து அவனை இறுக்கி கட்டி பிடித்து அவனின் முதுகில் சாய்ந்தவாறு சுருதி அமர்ந்திருந்தாள்…

அவர்கள் விவாதித்து கொண்டிருந்த விஷயம் தேவையில்லாது போல் ஆனது…

       வீட்டின் முன் வந்து வண்டியை நிற்பாட்டிய ஜெயக்குமார் அவளை இறங்கச்சொல்லி அவளை கூட்டி கொண்டு அவளின் வீட்டிற்குள் சென்றான்..

       அதற்குள் சகோதரர்கள் கீழே வந்திருந்தனர்…சுருதியின் உடையை பார்த்தவுடன் மூவரும் பதறிவிட்டனர்…

       மூவரிடமும் நடந்தது அனைத்தையும் ஜெயக்குமார் கூறினான்…முத்துவேலும் கணேசனும் அமைதியாக கேட்டுக்கொண்டனர்….ஆறுமுகம் மட்டும் ஜெயக்குமாரை சிறிது அதட்டினார்…

    “சரி விடு ஆறுமுகம்…பாப்பா போய் துணி மாத்திட்டு வா…உங்க அம்மா வந்தா அபசகுனம் அது இதுனு புலம்ப ஆரம்பிச்சுருவா…அவகிட்ட சொல்லாதே…”என்று அவளை அனுப்பிவைத்தார் முத்துவேல்..

      யாருமே சுருதியை திட்டவில்லை…பெண்ணாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் செய்துவிட்டாய் என்று….அவளை நினைத்து பெருமை தான் பட்டனர்….அவர்கள் குடும்பத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் தைரியமும் சமூக அக்கறையும் வேண்டும் என்று நினைப்பவர்கள்….அப்டியே தங்களது குழந்தைகளையும் வளர்த்தனர்…

 

  பெண்களுக்கு சுதந்திரம் என்பது உங்களால் கொடுக்கவே முடியாது…ஏனென்றால் சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது இல்லை …எடுக்க படுவது ஆகும்…

 

ஆதிக்கம் தொடரும்

         

Advertisement