Advertisement

உன் வருகை… என் வரமாய்….4(1)

மறுநாள் காலையிலேயே அழைத்தான் சர்ரு, அழைத்தவன் பேசாமல் ஒரு பத்துநிமிடம் சிரித்தான்… வர்ஷினிக்கு முதலில் புரியவில்லை பின்பு “என்ன ஸ்டேட்ஸ் பார்த்தியா” என்றாள் பொறுமையாக.

“ம்… ஹஹா… ஹா….” என சொல்லி மீண்டும் சிரித்தான்… “யாரவது நான் இருக்கேன் உனக்குன்னு சொன்னா… ஓங்கி அடிச்சிடு…

நீதான் என் உயிருன்னு சொன்னா… உருட்டு கட்டையாலையே அடிச்சிடு” என வைத்திருந்தாள்.. சரவணுக்கு அடக்க முடியாத சிரிப்பு… “என்னாச்சு ஏதாவது லவ் ப்பைலியரா…” என்றான்.

“யாருக்கு எனக்கு….

லவ்… அதெல்லாம் நம்பிக்கை இருந்தா வரும்…

நமக்கெல்லாம்… இவன் நல்ல பையன்னு, நீயா சொல்லி யாரையாவது கட்டிச்சா உண்டு…

சரி வை… எனக்கு டைம் ஆச்சு” என சொல்லி வைத்தாள் போனை.. அன்றைய பொழுது பரபரப்பாக நடந்தது அனைவருக்கும்.

சுப்பு எப்போதும் போல… அன்று மாலையும் வந்து எல்லாம் பார்த்துவிட்டு திண்ணையில் அமர.. டீயுடன் வந்தாள்.. வர்ஷினி.. ஏதும் பேசாமல் வாங்கி குடித்தான்.. வர்ஷினி “உங்க கிட்ட அத்த, பொண்ணோட போன் நம்பர் கொடுக்க சொன்னாங்க..” என்றாள்.

ஆச்சிரியமாக பார்த்து “ம்… அத வேற வாங்கினியா…” என்றான். பின் சலிப்பான குரலில். “எல்லாம்.. இங்க வரட்டும்… பேசிக்கலாம்..

அம்மா கேட்டா, கொடுத்திட்டேன்னு சொல்லு…” என்றான் ஏதோ மாதிரி.

‘என்னை பார்த்தா எப்படிதான் தெரியுதோ இரண்டு பேர்க்கும்…’ என மனம் நினைத்தாலும்.. அதற்குமேல்… என்ன சொல்ல சுப்புவிடம் என அமைதியாகிவிட்டாள்.

மறக்காமல் சரவணனிடம்… நேற்று, தான் கோவிலில்.. அந்த பெண் குறித்து, உணர்ந்த செய்தியை சொன்னாள்.. அவன் என்ன செய்வான் பாவம்.. ‘சரி பார்த்துக்கலாம், எல்லாம் கல்யாணம் ஆனா சரியாகிடும்’ என்றான்…

அந்த வாரம் சென்றது…  தீபாவளி, நாளை மறுநாள் என்ற நிலையில்… கிரி வந்தான். சுப்பு பஸ் ஸ்டாப்பிலிருந்து அழைத்து வந்தான்.. கிரியே எப்போதும் இறங்கியவுடன் தன் அக்காவை அழைப்பான்… இன்று அந்த வழியாக சுப்பு வரவும் அவருடன் வந்துவிட்டான்.

வர்ஷினி அவனை அழைக்க செல்ல தயாராகியிருந்தால், இந்த மாதத்தில் இப்போதுதான் வருகிறான். எனவே வர்ஷினி சற்று சிறப்பாக சிற்றுண்டி செய்திருந்தாள்..

எப்போதும் கிரி வந்தால், சுப்பு இங்கு வருவான்.. உள்ளே… வீட்டினுள். கிரி இல்லையென்றால்… வெளிவாசலுடன் சென்றுவிடுவான். ஒன்றாக அமர்ந்து உண்ணுவான் எப்போதாதவது.. அவனுக்கு வர்ஷினியின் சமையல் பிடிக்கும்..

அம்மா சமையல் சற்று… ஒரே மாதிரியாக இருக்கும். இவள் ஏதாவது.. யூடியூப் பார்த்து செய்வாள்.. கொஞ்சம் வகையாக ருசியாக. அதனால் சரு.. சுப்பு இருவருக்குமே இவளின் உணவு பிடிக்கும்…

கிரி வந்தால்.. அவர்கள் வருவார்கள்… சரவணன் மட்டும் வந்தால்… இங்கிருந்து உணவு அங்கு செல்லும்… இல்ல, அவன் இது வேண்டும் என கேட்டு, சமைக்க சொல்லி உண்பான்… அதற்காக தன் பானு அத்தை முதற்கொண்டு… களையெடுக்க வரும்.. பாட்டி வரை அனைவரையும் வேலை வாங்கிவிடுவாள் வர்ஷினி.

இன்று கிரிக்காக எதோ புது வகை.. கட்லெட் ரெடி செய்தாள்… அதன் மணம் அந்த தோட்டம் முழுதும் வீச… சுப்பு கிரியுடனே உள்ளே வந்தான். அக்கா தம்பி இருவரும்… ஒரு ஐந்து நிமிடம் யாரையும் கண்டுகொள்ளாது பேசிக் கொண்டிருந்தனர்..

சுப்பு, அந்த மர நாற்காலியில் அமர்ந்து போன் பேசிக் கொண்டே இவர்களையும் பார்த்துக் கொண்டிருதான்.

கிரி, சற்று உயரமாக… ஒல்லியாக இருந்தான்… இப்போது கோவையின் சிறுவாணி தண்ணீரின் மாயம் போல, நிறம் கூடி தெரிந்தான்.. “வர்ஷி… க்கா..” என வந்தவுடன் பாசமாக தொடங்கிய அழைப்பு… “போடி.. பசிக்குது… வாசன வேற வருது… எதையாவது சாப்பிட கொடு… மாமா வேற வைட்டிங்” என்றான் இப்போதுதான் சுப்புவின் அருகே வந்து அமர்ந்து கொண்டு…

சுப்பு “எத்தனை நாள் லீவ்… படிப்பு எப்படி போகுது” என பொதுவான விசாரிப்புடன் பேச்சு தொடங்கியது.

செண்பா, இன்னும் வரவில்லை… இப்போது தோட்டத்தில் பூ பறிக்கும் சீசன்… அதனால், அங்கு சென்றிருக்கிறார்… மேற்பார்வைக்காக. வருவதற்கு நேரமாகும்..

எனவே வர்ஷினியே… உள்ளே சென்று… அவசரமாக தேங்காய் சட்னி அரைத்தாள்… சுப்புக்கு சாஸ் பிடிக்காது… கொஞ்சமாக அவனுக்கு மட்டும் அரைக்க… அடுத்த பத்து நிமிடத்தில்… இருவருக்கும்… கட்லெட் சாஸ் சட்னி சகிதம் சிற்றுண்டி வர.. உண்ண தொடங்கினர்.

கிரி “எப்போ மாமா… சரவணன் மாம்ஸ் வராங்க” என்றான்.

வர்ஷினி “காலையில வந்திடுவாங்க… ஐந்தேகாலுக்கு பஸ்… பைபாஸ்ல வந்திடும்… “ என்றாள்.

“ம்…. மாமா நீங்க போறீங்களா, கூப்பிட இல்ல, இவளா” என்றான் கிரி.

இப்போதுதான் சுப்பு வாய்திறந்தான்… “ என்கிட்ட எதுவும் சொல்லல… நைட் பஸ் ஏறிட்டு, கூப்பிடுவான்…” என்றான் அமர்த்தலான குரலில்.

வர்ஷினி “டேய் நாளைக்கு சீக்கிரம் கிளம்பு, நம்ம பர்சேஸ் ஆரம்பிக்கனும்” என்றாள்.

“ஹேய்… நீ இன்னும் வாங்கலையா… அய்யோ நாளைக்குதான் லாஸ்ட் டே.. கூட்டம் எப்படி இருக்கும் தெரியும்மில்ல” என அலற தொடங்கினான் கிரி.

சுப்பு “ஏன்… போன வாரம்… பிரிண்ட்ஸ் கூட போனியே பர்சேஸ்சுக்கு“ என்றான் லேசாக புருவம் உயர்த்தி.

வர்ஷினிக்கு எப்படியோ ஆனது.. “அது……. சும்மா… எப்படி நாளைக்கு இருக்கும்னு பார்க்க” என்றாள் அலட்டாமல்.

கிரி “அக்கா, நாளைக்கு வேணாக்கா ப்ளீஸ்” என்றாள்’

“போடா… நான் சரு, கூட போயிக்கிறேன்” என சொல்லி உள்ளே எழுந்து சென்றாள் வெடுக்கென..

சுப்புவின் வாய் அனிச்சையாய் “எதுக்கெடுத்தாலும் அவன கூட்டு சேர்த்துக்க வேண்டியது..” என சத்தமாக சொல்லிவிட்டு சுதாரித்துக் கொண்டான்..

இதில் அக்கா தம்பி இருவரும்தான் அசந்து போயினர்.. எப்போதும் பேசவே மாட்டான்.. அதுவும் வர்ஷினி எனும்போது சத்தம் வரவே வராது… என இவர்கள் பார்த்திருக்க.  பேசியவன், அவர்களின் பார்வையில் ஏதோபோல் உணர்ந்து வெளியே எழுந்து சென்றுவிட்டான்.

இந்த சத்தத்திற்கு காரணம் சுப்புவிடம், சரவணன் பேசியிருந்தான்… “பெண்ணிடம் சற்று பேசு… போன் நம்பர் தரேன்னு சொன்னாலம் நீ, வேண்டான்னு சொல்லிட்டியாம்… அவங்க பேசவேயில்லைன்னு வர்ஷி சொன்னா…  நீ பேசி பாரேன்… உனக்கு பிடிச்சிருக்கு தானே” என இந்த வாரத்தில் நான்கு முறை சொல்லிவிட்டான் இது போல… அதனால் சுப்புக்கு  இவள்தான் காரணம் இவர்கள் இருவரும் சேர்ந்து என்னை படுத்துகின்றனர் என தோன்ற… இப்போது சட்டென வார்த்தை வந்துவிட்டது.

இவனை விட எல்லோரும் சிறியவர்கள்… எங்கும் கவனமாக இருப்பான்.. சட்டென கோவம், வார்த்தை வராது… அதுவும் வர்ஷினி விஷயத்தில் வார்த்தை, ம்… தலையசைப்பு கூட வராது அவனிடம்…

அப்படியிருக்கையில்.. சுப்பு, என்ன செய்தேன் என புரியாமல்.. வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு தோட்டத்தில் இறங்கியிருந்தான். கிரி கையில் டீயுடன் சுப்புவை தேடி வெளியே வர… சுப்பு அங்கு நடந்து கொண்டிருந்தான்..

கிரி “மாமா வாங்க… டீ ஆறிடும்…” என சத்தமிட…

மறுக்க முடியாமல் வந்தான்… திண்ணையில் அமர்ந்து இருவரும் அருந்த தொடங்கினர் டீயை.. இப்போது சற்று முகம் தெளிந்திருந்தது.

வர்ஷினி அப்போதுதான் தனக்கான கட்லெட் எடுத்து வந்து உண்ண தொடங்கினாள் அவளிடம் சுப்பு “ஏன், சரவணன்கிட்ட சொன்ன” என்றான்.

அவள் “அப்புறம் யார்கிட்ட சொல்றது… நீங்க பேசலைன்னு.. அப்புறம், உங்க அம்மா, என்னை கேட்பாங்க… அதான்” என்றாள் நீட்டி முழக்கி…

சுப்புக்கு ஏனோ இப்போது அந்த ஆர்வம் வர… “சரி நம்பர் கொடு நான் பேசறேன்” என்றான்.

பொறுப்பாக அழைத்தான்… அந்தபக்கம் எடுத்ததுடன் “ஹலோ நான் சிவா… சிவசுப்ரமணியம் பேசறேன்” என்றான்.

புரிந்தது போல அவர்களுக்கு… “வணக்கங்க… நல்லா இருக்கீங்களா” என தொடங்கி “நான் வெளியே இருக்கேங்க… வீட்டுக்கு போயிட்டு கூப்பிடுறேன்” என பேசி வைத்தனர் இருவரும்.

வர்ஷினி சுப்புவின் முகத்தையே பார்த்திருந்தாள்.. அந்த இருட்டில்… ஏதும் மாற்றம் தெரியவில்லை.. அதே அமைதிதான்.. வர்ஷினிக்கு கோவமே வந்தது.. ‘சந்தோஷம், ஏமாற்றம் எதுவுமே தெரியாதா… இவருக்கு’ எனதான் தோன்றியது.

சுப்பு “சரி… கிளம்பறேன்…” என்றவன் எப்போதும் போல அந்த வீட்டை ஒரு சுற்று சுற்றி கிளபினான்..

அக்கா தம்பி இருவருக்கும் அருமையாக நேரம் சென்றது… செண்பா வந்து சாதம் மட்டும் வைத்து… அவர்களுடன் அமர்ந்து கொண்டார்… இரவு பதினோரு மணிவரை… ஏதோ பேசி விளையாடி என பொறுமையாக உறங்க சென்றனர்.

வர்ஷினிக்கு அதிகாலையில் விழிக்கும் பழக்கம்… அந்த காலை நேர, மஞ்சள் சூரியனை பார்க்க தவறுவதில்லை அவள்… இன்றும் அப்படியே.. எழ… முதல் வேலையாக சரவணனுக்கு அழைத்தாள் “குட் மோர்னிங்… வந்தாச்சா…” என்றாள்.

“ம்…. இறங்க போறேன்… வை… கூப்பிடுறேன், அண்ணனுக்கு சொல்லணும்” என்றான் வைத்து விட்டான்.

இவளும் நல்ல மனநிலையில்… தன் வேலைகளை தொடங்கினாள்.. நேரம் இனிமையாக சென்றது… நாளை தீபாவளி என்பதால் விடுமுறை மூன்று நாட்கள்.

எனவே… பொறுமையாக எல்லாம் செய்தாள்.. டிபன் ரெடி ஆகியது… எப்படியிருந்தாலும் ஆண்கள் இங்குதான் உண்பர் என தெரியும், அதனால் செண்பா சேர்த்தே எல்லாம் செய்தார்..

எதிர்பார்த்தபடி சரவணன் காலை எட்டு மணிபோல் வந்தான்… கேட்டை திறக்கவும் வர்ஷினி வெளியே வந்து “சரு… வா வா” என கத்த தொடங்கினாள்.

ஏதோ பள்ளிகாலத்தில்.. அம்மா இரண்டுநாள் வெளியூர் சென்று, அதன்பிறகு வீடு திரும்பும் போது அம்மாவின் பின்னேயே சுற்றுமே குழந்தை.. அதே போல உற்சாகம் அவளிடம்.

அப்போதும் அம்மா திட்டுவார் “ஏன் புக்க இப்படி களைச்சி வைச்சிருக்க… ட்ரெஸ்ச ஒழுங்கா எடுக்க மாட்டியா’ என திட்டுதான் விழும்.. ஆனாலும்… ஏதோ வீடே இப்போதுதான் புது வாசம் கொண்டது போல் தோன்றும் அப்படிதான் வந்தான் சரவணன்… அவளுக்கு.

முதலில் நுழையும் போதே… “பாரு” என்றான் முகமலர… “என்ன ம்மா… குண்டாயிட்ட” என்றான்.

அவள் “பொய் சொல்லாத… “ என்றாள் கோவமாக.

அவளின் பேச்சை காதில் வாங்காமல், அடுத்த நொடி பொரிய தொடங்கினான் அவளின் வண்டியை பார்த்து “வண்டிய ஏன், இந்த மரத்துகிட்ட நிறுத்தி இருக்க… மட்டை… தொங்குது பாரு… விழுந்தா… வண்டி என்ன ஆகும்” என்றான்.. நல்ல திடமான குரலில்.

Advertisement