Advertisement

மிட்டாய் புயலே-9

திருவிழாவில், மதம் கொண்ட யானை, பாகனையே, சிதறடித்தது போல், அழகான அவர்களின் நட்பு இப்படி சின்னா பின்னாமாக கிடந்தது.

இது ஏதும் தெரியாத கதீஷ், இதோ இப்போதும் கூட அவளின் அறை நோக்கியே தனது தவம் என அமர்ந்திருந்தான்.

தோழனாக இருந்தவன் இப்போது நேசனாகவும் தன்னவளை நெஞ்சில் தாங்க காத்துக் கொண்டிருக்கிறான்.   

சாக்க்ஷியின் வீட்டில், எல்லா உறவுகளும் கிளம்பி இருந்தனர். சாக்க்ஷியின் தாய்மாமா மேகநாதன் வீட்டினர் மட்டும் இருந்தனர். மணி மாலை, ஆரு ஆறரை  இருக்கும்.

மேகநாதனின் மகன்தான், கதீஷிடம் பேசிக் கொண்டிருந்தான். இப்போதுதான் வந்தான் கதீஷ், இன்று அவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு அமர்ந்திருக்கிறான்.

ஏதோ அவனிற்கு, சாக்க்ஷி, தன்னை ஒதுக்குவதாகதான் தோன்றியது.. எனவே அவளை பார்த்துவிட்டே செல்ல வேண்டும் என பொறுமையாக அமர்ந்திருக்கிறான்.

வீடு இப்போதுதான் கொஞ்சம் இயல்புநிலை கொண்டது. தங்களுக்கு இனி பொறுப்புக்கள் அதிகம் என புரிந்து கொண்டு, மீண்டு கொண்டிருந்தது.

எல்லோரும் அவனை வந்து பார்த்து விட்டனர். ஏன், எப்போதும் ஒதுங்கும் அக்க்ஷர கூட வந்து பார்த்து விட்டாள்.. ஆனால் இன்னும் சாக்க்ஷி வெளியவே வரவில்லை.

இப்போதுதான் காப்பி எடுத்து வந்த, சாக்க்ஷியின் அன்னை “என்ன கதீஷ், சாக்க்ஷிய தேட்ரியா, அவ மேலதான் இருக்கா, போ, போய் பாருப்ப்பா” என்றார். அவருக்கு தன் மகள் கொஞ்சம் தெளிந்தால் போதும் என்றிருந்தது.

சாக்க்ஷியை குறித்துதான் பயம் மேகலைக்கு, அழுது அரற்றவில்லை ஆனால், ஒதுங்கிக் கொண்டாள். என்னை எதுவும் பாதிக்கவில்லை என்பது போல் ஒரு தோற்றம் வந்தது அவளிடம்.

அதை நினைத்துதான் பயம் வந்தது மேகலைக்கு. எனவே, எப்போது போல் ‘தன் நண்பனிடம் சொல்லி அழுதால், கொஞ்சம் தெளிவாகி விடுவாள்’ என நினைத்தார்.. எனவே கதீஷை மேலே போய் பார்ப்பா என்றார்.

கதீஷிற்கு இந்த வார்த்தையை மேகலை சொல்லவும். கனிந்த பார்வை ஒன்று, அவரை பார்த்து மாடியேறினான்.

முதல் முறை அவளை நேரில் காண்பது போல் ஒரு நடுக்கம் அவனிடம். இதுவரை அவனிடம் தோன்றாத ஏதோ ஒரு நடுக்கம் வந்து அமர்ந்தது.

இதுவரை நண்பன் என்ற நிலையில்தான் அவளை பார்த்திருக்கிறான், எனவே, யார் இருந்தாலும் கவலை படாமல், அவள் அருகில் சென்று அமர்பவன். இப்போது, அவள் வீட்டில் அவளை பார்ப்பதற்கே தயங்கினான்.

மனமெல்லாம் ‘நீ சரியில்லை, அவளை நீ கவனிக்கவேயில்லை, தோழனாக, அவளை நீ தோள் சாய்க்கவில்லை’ என குற்றம் கூறிக் கொண்டேதான் வந்தது.

அந்த வார்த்தையை எல்லாம் காதில் வாங்காமல், இனி என்னால் தோழனாக மட்டும் இருக்க முடியாது என தன் மனதிடமே வாதாடிக் கொண்டு வந்தான்.  

இந்த பங்குனி மாத கதிரவன்,  தன் வெம்மை கரங்களை கடினப்பட்டு அந்த மாலை மஞ்சளில் தொலைத்துக் கொண்டிருந்தான். அதன் சுவடுதானோ என்னவோ, மாடி தரையும் இன்னும் காய்ந்து கொண்டிருந்தது.

ஏதோ, அழுக்கு கலரில் ஒரு நைட்டி போட்டுக் கொண்டு, மறையும் அந்த கதிரவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சாக்க்ஷி.. ‘எப்போதும் மேற்கு சூரியனை ரசிப்பவர்கள் சற்று தைரியமானவர்கலாம்’ எதிலோ படித்தது நினைவு வந்தது கதிஷுக்கு.

இந்த வெறுமையான பார்வை அவனை ஏதோ செய்ய, எப்படி அவளிடம் பேசுவது என தெரியாமல் அமைதியாக நடந்தான்.

மனமெங்கும் அவள் நினைவுதான் இத்தனை நாட்களில் ‘தோழியாகவே அவளை தோள் சாய்த்து ஆறுதல் சொல்பவன்.. இன்று, நேசமாகவும் நெஞ்சில் சாய்த்து கொள்ளவும்தான் மேலே வந்திருந்தான்.

ஆனால், அவளை அருகில் பார்க்க, பார்க்க ‘இதென்ன இப்படி இருக்கா’ எனதான் தோன்றியது அவனிற்கு. இளைத்து, கருத்து., கன்னமெல்லாம் ஒட்டி என சாக்க்ஷி உருமாறியிருந்தாள்.

அப்படியே பார்த்திருந்தான் அவளை, ‘என் தோழி வளர்ந்துவிட்டாள், என்னிடம் பகிர முடியாத துக்கம் கூட அவளிற்கு இருக்குமா’ என அவன் மனம் கேள்வி கேட்க, அதனை கண்களில் தாங்கி, அவளை பார்த்திருந்தான்.

அருகில் வந்தவன் “சாக்கி” என்றான் தோழமையாய்.. என்ன செய்தாலும், நட்பே முதலில் பேசும் அல்லவா. எனவே நட்பாகவே வந்தான் அருகில்.

இவனின் குரலுக்கு எந்த வித அசைவும் இல்லை அவளிடம். அவளின் தோள் தொட்டு அசைக்க, நிமிர்ந்தாள் “என்ன சாக்கி அப்படியே நிக்கிற, நான் வந்தது கூட தெரியலையா” என்றான்.

‘எதற்கு கவனிக்கணும்’ என ஒரு பார்வை பார்த்து நின்றாள். ஏதோ குற்றம் சொல்லும் பார்வை. கேள்வி கேட்கும் பார்வை. இது அவனை தாக்க “என்ன சாக்கி, சாப்பிட்டியா” என்றான். பேச்சை மாற்றும் விதமாக.

அமைதிதான் அவளிடம், பார்வையை மாற்றவில்லை. கதீஷ் “என்ன” என்றான் சற்று கோவமாக. இந்த குற்றம் சொல்லும் பார்வை அவனை தாக்க, கோவம் வந்தது அவனிடம்.

சாக்க்ஷி, இப்போது கதீஷிடம் “எதுக்கு வந்த, கிளம்பு “ என்றாள்.

கதீஷ் ஏதோ புரியாத மொழி கேட்பது போல் அவளையே பார்த்திருக்க. திரும்பவும் அவளே “நீ போ, இங்க வராத இனி” என்றாள்.

‘நீ சொல்லறியா என்னை’ என இப்போது அவளின் எதிரில் வந்து நின்று கொண்டான் “என்ன ஆச்சு உனக்கு, நான் ஏன் வரக் கூடாது” என்றான். குரல் வேறாக இருந்தது.

இவளிடம் பேசும் போது வெளிப்படும் கனிவான குரலோ, இல்லை அவளை வம்பிழுக்க பேசும் த்வனியோ இல்லை இது.

முற்றிலும் வேறாய், ‘எங்கோ தொலைந்தது’ என நினைக்கும் நேரம் அது திரும்ப தன் கைகளில் கிடைக்கும் நேரம், அதை பற்றிக் கொள்ளும் ஒரு முழுமையான ஆண் மகனின் குரலாய் அது கேட்க, அமைதியானாள் சாக்க்ஷி.

இவனிற்கு, இன்னும் தெரியவில்லை, சாக்க்ஷிக்கு எல்லாம் தெரியும் என்று.   

சாக்க்ஷிக்கு இப்போதும் பேச தோன்றவில்லை. அமைதியாகவே நின்றாள். முழுதான பத்து நிமிடங்கள் சென்ற பிறகு, திரும்பவும் கதீஷ் “ஏன் வரக் கூடாது” என்றான் இன்னும் அந்த அழுத்தம் மாறாத குரலில்.

இந்த கதீஷ் முற்றிலும் புதியவனே சாக்க்ஷிக்கு.. இத்தனை வருடங்களில், அவனின், கனிவான குரல் தவிர வேறு கண்டதில்லை அவள். இந்த அழுத்தமான பேச்சும், பார்வையும் அவளை ஏதோ செய்தது. ஆனாலும் அவனை விட அழுத்தமாக, அவனை பார்த்தவாறே நின்றாள், ஏதும் பேசவில்லை.

கதீஷ், இவளின் பார்வையை உணர்ந்து, ‘இவளிற்கு ஏதோ தெரியும்’ என யூகித்தான். எனவே, சற்று இறங்கிய குரலில், “அப்பாவ நினைச்சு கவலை படாத, அவர் எப்போதும் உன் கூடத்தான் இருப்பார்” என்றான். அசைவில்லை அவளிடம்..

இயல்பாய் தொட்டு பேசுவதெல்லாம் அவர்களிடம் இல்லை, ஆனால் இன்று, அவளின் இந்த வெறித்த பார்வை தாக்க, அவனின் கைகள் தானாக, அவளை நோக்கி நீண்டது. அவளின் கைகளையும் பற்றியது “இங்க பாரு டி”.. அவ்வளவுதான், அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை கதீஷிடம்.

ஓங்கி அவன் கன்னத்தில் ஒன்று வைத்திருந்தாள் சாக்க்ஷி, ‘இத்தனை அழுத்தமா இந்த தளிர் விரல்களில்’ எனதான் யோசனை கதீஷிற்கு..

அத்தோடும் விடவில்லை அவள், தனது சுட்டு விரல் உயர்த்தி ‘கொன்னுடுவேன்‘ எனும் விதமான செய்கை, அத்தோடு “த்துரோகி” என்ற வார்த்தை வேறு அவனை பார்த்து.

கதீஷிற்கு முகமெல்லாம் இருண்டது. யார் யாரை சொல்வது. இவளிற்காக நான் அங்கு, இவளிற்கே தெரியாமல் போராடினால், இவள் இப்படி சொல்கிறாலே என தன் நிலையிழந்தான் கதீஷ்.

அமைதியாக இருக்க விரும்பாதவனாக. அவளின் சுட்டு விரலை, தன் கை கொண்டு முறுக்கி பிடித்தவன். “உனக்கு எப்படி தெரியும்” என்றான். இது இருவரும் பயணிக்கும் ஒரே நேர்கோடு என்பதால் நேரடியாக கேட்டான்.

அவனால் ஊகிக்க முடிந்தது. தன் எண்ணம் பற்றி அவளிற்கு தெரிந்திருக்கும் என்று… ஆனால் எப்படி தெரிந்தது என அவனிற்கு தெரியவில்லை.. எனவே அது குறித்து வினவினான்.

சாக்க்ஷி “ஆ…ஆ அ வலிக்குது” என்றாள். விடவில்லை அவன்.. “யார் சொன்னா” என்றான் திரும்பவும் கையில் அழுத்தம் கொடுத்து “ஐய்யோ, ஆ” என கண்ணில் நீர் வழிந்தது. ஆனால், வார்த்தைகள் வரவில்லை சாக்க்ஷிக்கு.

கதீஷ் “நல்லா வலிக்கட்டும், சொல்லு” என்றான்..

அவளால் தன் விரலை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. “விடு கதீஷ் “ என கதற தொடங்கினாள். அவனிற்கு, ‘எப்படி’ என தெரிந்தே ஆக வேண்டி இருந்தது “சொல்லு, விடறேன்” என்றான் அழுத்தமாக.

இவளும் வாயை திறக்கவில்லை அழுத்தமாக நின்றாள். கையை உதற தொடங்கினாள். ‘ம்கூம்’ அசைக்க முடியவில்லை அவளால். இப்போது அவளின் கையையும் சேர்த்து பிடித்துக் கொண்டான்.

தன் போல் கதீஷ் பேச தொடங்கினான் “நான் சொல்லாம எப்படி தெரியும் உனக்கு, அதான் வெளியேவே வரலையா, என்கிட்டே வருவேன்னு பார்த்தேன், அதான் வராலையா, எதா இருந்தாலும் என்னிடம் நீ கேட்டிருக்கணும்” என தன் நெற்றி தட்டிக் கொண்டான்.

உடனே சிந்தனை வந்தவனாக “எங்க வீட்டுக்கு, போனியா” என்றான். அவளின் கையை விட்டான். அவன் கையை விட்டதும் அங்கேயே அமர்ந்து கொண்டாள். கை வலி அவளுக்கு தாங்கவே முடியவில்லை. அவள் தன் கையை அழுத்தி பிடித்துக் கொண்டாள்..

இப்போதும் கதீஷ் “என் வீட்டுக்கு போனியா” என்றான் திரும்பவும்.. அவன் இப்போது அவளின் வலி உணர தயாராக இல்லை. அவனிற்கு பதில் மட்டுமே தேவையாக இருந்தது.

இப்போதும் கதீஷ் “சொல்லு “ என உருமினான். சாக்க்ஷி “ஆம்” என்பதாக தலையாட்டினாள்.

இதுவரை, தான் அவளை காயப்படுத்தியது தெரியவில்லை “என்ன டி சொன்னாங்க, ஏதாவது திட்டினாங்களா” என்றான் பரபரப்பாய். அவன் மனம் அடித்துக் கொண்டது.

தன்னையே வெட்டி, வெட்டி பேசியவர்கள். இவளை சும்மா விட்டு விடுவார்கள் என அவன் நம்புவானா. எனவே, பதில் வேண்டும் என்பதாக, அவளையே பார்க்க…

அவள் கண்ணில் நீர் இன்னும் வந்து கொண்டிருந்தது. ஏனோ, இதுவரை, அவனின் நேசம், அவன் கண்ணை மறைத்ததா தெரியவில்லை.

இப்போதுதான்  அவளின் தேம்பல் கேட்டகவும், அவனின் மனம் அலைபாய்ந்தது.. ‘என்ன செய்கிறேன் நான், எதற்கு இவளை படுத்துகிறேன்’ என அவனே இப்போதுதான் கொஞ்சம் உணர தொடங்கினான். அவள் இன்னும் அழுகவும்தான், தன் செய்கை அவனிற்கே புரிந்தது.

தன் நெற்றியை தேய்த்துக் கொண்டான். என்ன செய்வது என தெரியவில்லை அவனிற்கு.. இந்த பரிணாமம் புதிது. இது வரை இப்படி அவன் நடந்ததும் இல்லை, அவள் இவனிடம் இப்படி அழுத்தும் இல்லை..

‘எதற்கும் தன்னை தேடி வருபவளை. இப்படி தன்னை பார்த்தே ஒதுங்கி போக வைத்து விட்டேனே’ என தன் மேலேயே அவனிற்கு கோவமாக வந்தது.

ஆனால் எங்கோ ஒரு ஓரமாக ஒரு இதம், ‘எத்தனை உரிமையாக அவளிடம் நெருங்குகிறேன் நான். வலிக்க, வலிக்க என்றாலும் அவளுக்கு நான் யார் என புரியட்டும். என் நிலை என்ன தெரியட்டும்’ என ஒரு மின்மினி உள்ளே பறக்கதான் செய்தது.  

இப்போதுதான் கொஞ்சம் இயல்பாகினான். கல்லாய் இருந்த முகம் சற்று தளர்ந்தது.

கீழிறங்கி சென்றான். ஒரு தண்ணீர் பாட்டிலுடன் மேலே வந்தான். அவள் முன் அமர்ந்தான் “இந்தா, குடி “ என்றவன் அவளின் கைகளில் திணித்தான். அவள்  அமைதியாக இருக்க, அவளின் வலி கொண்ட கையை முயன்று தன் கைகளுக்குள் கொண்டு வந்தான்.

அமைதியாக வருடிக் கொண்டே பேச தொடங்கினான் “சாரி சாக்க்ஷி, அது உன்கிட்ட சொல்ல, எனக்கு டைம் கிடைக்கல………” என இன்னும் என்ன சொல்லியிருப்பானோ..

சாக்க்ஷி “ப்ளீஸ், கதீஷ் எதுவும் சொல்லாத, நா…. நான் இப்போ ஏதும்….. ம்கூம், எதுவும் வேண்டாம் கதீஷ், இந்த வலி புதுசு, இந்த கதீஷ் புதுசு, எ.. எனக்கு எதுவும் வேண்டாம் கதீஷ், ப்ளீஸ், நீ போய்டு” என திக்கி  தெணறி தெளிவாகவே சொல்லிவிட்டாள்..

சாக்க்ஷிக்கு, இத்தனை நாள் அவள் பார்த்த சொர்கம் வேறு, அவளிற்கு அவனின் நேசம் புரியவைத்த தடம் வேறு.

இவர்களிடம் மட்டுமல்ல, நேசம் என்பது வந்தால், உறவுகளைத்தான் முதலில் விலக்கும். எனவே சாக்க்ஷிக்கு, கதீஷின் வீட்டில் கேட்ட வார்த்தைகள் எல்லாம் இன்னும் அவள் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தன.

கூடவே தந்தை இருந்தவரை, கதீஷை வீட்டிற்கு வர வேண்டாம் எனதான் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் அவரை இழந்த நேரம் என எல்லாம் சேர்ந்து கொண்டது.

அவளிற்கு புரிந்தது, அவன் தன்னை விரும்புகிறான் என. ஆனால் தன் தந்தைதான் கதீஷை வீட்டிகே வர வேண்டாம் என்றாரே. அதனால் ‘விளக்கி வைக்க வேண்டும் அவனை’ என்தான் நினைத்தாள்    

எனவே, அவன் ஏதாவது சொல்லி. அதை, நான் கேட்டு, இல்லை, நான் ஏதாவது அவர்கள் வீட்டை பற்றி சொல்லி. அதை அவன், அங்கு கேட்டு சண்டை போட்டு’ என இதில் எது நடந்தாலும் இருவருக்கும் வருத்தமே எனவே அமைதியானாள். கதீஷையும் எதுவும் சொல்லாதே என்றாள்.

கதீஷ் அவளின் முகம் பார்க்க பார்க்க அதில் வருத்தம் கவலை என எதுவும் கண்டுகொள்ள முடியவில்லை. முன் போல், முகம் கண்ணாடியாக இல்லாமல், இறுகி கிடந்தது..

தன் விளையாட்டு தோழி இப்போது ஆசானாக தெரிந்தாள் கதீஷுக்கு. ஆனால் சாக்க்ஷி இப்போது கண்ணை மூடிக் கொண்டாள். தோழன் தவிர வேறு எதுவும் வேண்டாம் என.

   

 

           

    

  

 

 

  

 

Advertisement