Advertisement

மிட்டாய் புயலே-15

கதீஷிற்கு இப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது. அவளை தன்னால் நெருங்க முடியாது, எனவே, அவளின் பாதுகாப்பை உறுதி செய்வது போல் பார்த்துகொண்டான். அதனால் மனம் இலகுவாக இருந்தது அவனிற்கு.

மிக நீண்டநாள் கழித்து இன்றுதான் இரு அக்காக்களும் வீடு வந்திருந்தனர். பிள்ளைகளுக்கு அரையாண்டு விடுமுறை எனவேதான் இந்த விஜயம். அப்படியே ஏதேனும் தம்பியிடம் பேசி பார்ப்போம் என்ற எண்ணமும்தான்.

இங்கு டவுனில், சின்ன அக்காவும், காங்கேயத்தில் பெரிய அக்காவும் இருக்க, முன்பெல்லாம் பிள்ளைகள் சிறிதாக இருக்கும் வரை, வார விடுமுறைக்கு கூட வந்து, செல்லும் அக்காக்கள், இப்போதெல்லாம், இப்படி விடுமுறை நாட்களில் மட்டும் வந்தனர். இதில் பூங்கொடிக்குதான் வருத்தம்.

பொதுவாக ப்ரகதீஷ் மதிய உணவுக்கு வீட்டிற்கு வருவத்தில்லை, பூங்கொடி யாரிடமாவது கொடுத்து அனுப்பிவிடுவார். எனவே இவனின் அக்காக்கள் மதியம் வந்தது இவனிற்கு தெரியவில்லை.

இன்றும் அப்படிதான், பங்குக்கு, இரவு நேர ஷிப்ட்டிற்கு ஆட்கள் வந்தவுடன், எல்லாம் சரிபார்த்தது, வீடு வர, எப்போதும் போல் மணி பனிரெண்டை நெருங்கியது.     

அவனின் வீட்டு முற்றமே ஜெகத் ஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. முன்புறம் உள்ள இடத்தில், அவனின் பெரிய அக்காவின் பெரிய பையன் சந்தோஷ் இப்போதுதான் பதினோராம் வகுப்பு படிக்கிறான்.

அவன், தனது மாமாவின் புல்லட்டை, தனது ஒட்டடை குச்சி கை கொண்டு தள்ளிக் பழகிக் கொண்டிருந்தான். இளையவன் வீராசாமி காளையை கட்டி வைத்து அதன் கொம்பை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

சின்ன அக்காவின் பிள்ளைகள் இரண்டும் கண்கட்டி விளையாடிக் கொண்டிருக்க, வரும் போதே பார்த்துவிட்டான் தன் வீட்டின் முகப்பை, அப்படியே தனது சிறுவயதை நினைவு படுத்துவதுபோல் தோன்ற, கூடவே நாக்கடி கற்கண்டாய் சாக்க்ஷியின் நினைவும் வர, அது ஒரு மந்திர புன்னகையை அவன் முகத்தில் கொண்டுவர, காரை மேலே ஏற்றாமல் கீழவே நிறத்தி, இறங்கி உள்ளே வந்தான்.

இவன் தலை தெரியவும், எங்கிருந்தோ வந்து அந்த நால்வர் படையும் இவன் மேல் விழ, ஆளுக்கு ஒரு பக்கமாக அவன் மேல் தொங்க தொடங்கினர், அழகாக அவர்களை தாங்கி, ஒரு சுற்று சுற்றி இறக்கினான்.

நல்ல திராவிட நிறம் கதீஷ், இப்போது உள்ளேயே இருப்பதால், சற்று அதுவும் மேம்பட்டிருக்க, கொஞ்சம் கூடுதலான உயரம்தான் ஆனால், சாக்க்ஷி சொல்லுவதுபோல் பனைமரமல்ல, இந்த நாலு பிள்ளைகளை ஒரே நேரத்தில் சாமளிக்க் கூடிய திடகாத்திரமாக உடல்வாகு, லேசாக சிரித்திருந்ததால் அவனின் திருத்தமான முகம் இன்னும் ஒலி சிந்தியதோ பார்த்திருந்த பெற்றோருக்குதான் அத்தனை மகிழ்ச்சி. எத்தனை நாள் ஆகிறது இந்த இயல்பை இவனிடம் பார்க்க என தோன்றியது.

அப்போதே ஜெகன் உள்ளே சென்றுவிட்டார். இனி பிள்ளைகள் பேசட்டும், தான் சென்று படுக்கலாம் என எழுந்துவிட்டார். தான் இருந்தால் சரியாக மகன் பேசமாட்டான் என எண்ணி உள்ளே சென்றுவிட்டார்.

கதீஷ் “எப்போடா, வந்தீங்க எல்லோரும்” என்றான் பிள்ளைகளை பார்த்து. சின்ன அக்காவின் மகள்தான் பதில் சொன்னாள் “மதியம்தான் மாமா, ஏன் மாமா இவ்வளோ லேட்” என்றாள்.

“எனக்கு எப்படி தெரியும் நீங்க வந்தது” என்றான்.

தன் அக்காக்களை பார்த்தவன் “என்ன,  ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து வந்திருக்கீங்க” என்றான்.

பாக்கியம் தான் “என்னடா இது, அம்மா வீடு, நாங்க எப்படி வேணா வருவோம், எங்களை ஏன் வந்தேன்னு கேட்கத்தான் இன்னும் உன் பெண்டாட்டின்னு ஒருத்தி வரலைல, அதுவரைக்கும் எங்க ராஜ்யம்தான்” என்றார் சிரித்தவாறே இது அப்பட்டமான வில்லங்க பேச்சென அவனிற்கு புரிந்தது. இருந்தும் அமைதியாக பிள்ளைகள் புறம் திரும்பி பேச தொடங்கினான்.

ஜெயம்தான் “விடுடா, சும்மாதான் டா, அக்கா வரேன்னா, பிள்ளைகளுக்கு லீவுல்ல அதான் எல்லாம் வந்தோம், வா சாப்பிடு அப்புறம் வந்து பேசு” என்றார்.

ஜெயம் கொஞ்சம் அனுசரனைதான் எப்போதும். அவனை ஒத்து போவாள். தாங்கி தாங்கியே பேசி அவன் வழியாகவே சென்று, தவறு என்றால் சுட்டிக்காட்டி சொல்லும் ஒரு பொறுப்பான அக்கா,

பாக்கியம்தான் இதற்கு நேர்மாறு, அதிக பாசம்தான் ஆனால் வெடுக் வெடுக்கென பேசி, இது சரி என சத்தமாக சொல்லி அன்பை கூட அதிகாரமாக சொல்லும் விதம்தான். ஆனால் அவரிடம் உள்ளதும் கரடு முரடான அன்புதான்.         

ஜெயம் சொல்லியதும் கதீஷும்  “ஆம்மாம் க்கா, பசிக்குது, எடுத்து வா இங்கேயே” என்றான். சொல்லியவன் வெளியில் உள்ள பைப்பிலேயே கைகால் கழுவி கொண்டு, தன் அம்மாவின் புடவையில் துடைத்துக் கொண்டே அமர்ந்தான் கீழே.

பாக்கியம் “இருடா, சேர் எடுத்து வர சொல்றேன் “ என சொல்லி “சந்தோஷ்” என்றார்.

“அட விடுக்கா” என்றவன் கீழேயே அமர்ந்தான். அது ஷீட் போட்டு இருக்கும் முற்றம்.  எப்போதும் சாணி போட்டு மொழுகி, ஓரத்தில் சுண்ணாம்பு கரை கட்டி பார்க்கவே கொங்கு வீடுகளின் முற்றும் அழகாக இருக்கும்.

அப்படிதான் இவர்களதும் மிகவும் சுத்தமாக இருக்கும். அங்கே இரண்டு சேர் எப்போதும் இருக்கும். இவன் கார் நிறுத்திய இடத்தில் ஒரு வேப்பமரம் இருக்கும் எனவே காற்றும் நன்றாக வரும்.

சாப்பத்தியும் சன்னாவும் வந்தது அவனின் கைகளில் “என்னக்கா, வந்த உடனே கிட்செனுக்கு போயிட்டியா, ரெஸ்ட் எடுக்கலாம்ல” என்றான், தனது ஜெயாக்காவை பார்த்து, தட்டை வாங்கிய வண்ணம்.

அவனிற்கு தெரியும் சின்ன அக்கா வந்தா மட்டும்தான் இது போல் சன்னா, பன்னீர், நூட்லஸ் என டிபன் வரும். இவர்கள் மட்டும் இருந்தால், இதே சப்பாத்திக்கு பசிப் பருப்போ இல்லை காய்கறி குருமாவோதான் வரும். அதனால் இப்படி ஒரு கேள்வி.

பாக்கியம் சம்மனில்லாமல் ஆஜராகி “என்ன செய்ய, இப்பவும் நாங்களேதான் வந்து செய்ய வேண்டியிருக்கு, வந்தா, போனா உட்காந்து சாப்பிட முடியுதா, எப்போ அந்த குடுப்பினை வருமோ” என்றார்.

இவனும் “அதுக்கு எதுக்கு குடுப்பினை, நாளைக்கு நம்ம, அந்த ஹோட்டலில் இருந்து பார்சல் எடுத்து வரேன், வேணுன்னா, சொல்லு கூட்டிக் கூட போறேன், இதுக்கு போய் குடுப்பினையாம்” என்றவன் பசங்களை பார்த்து

“நாளைக்கு எல்லோரும் ரெடியா இருங்கடா, ஹோட்டல் போகலாம்” என்றான். ஜெயா சிரிக்க, பாக்கியம் தான் அவனை எரிப்பது போல் முறைத்துக் கொண்டிருந்தார். அதில் பூங்கொடியும் சிரித்து விட, கொஞ்சம் இலகுவானார் பாக்கியம்.

அவன் காதை பிடித்து திருகி “ஏன்டா, இன்னும் இப்படி விளையாட்டுதனமாகவே இருக்க, உனக்கு ஒரு நல்லது நடந்தாதானேடா அம்மாக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும், அவங்களுக்கும் வயசாகுதில்ல” என்றார்.

“க்கா, அந்த குருமாவ கொடு” என்றான் ஜெயாவிடம். பதிலே சொல்லவில்லை பாக்கியத்திற்கு. அதில் முகம் சிறிதாக பாக்கியம் ஜெயாவை பார்க்க.

இப்போது ஜெயாதான் “என்னடா, பதில் சொல்லுடா, பொண்ணு பார்க்கலாமா” என்றார்.

இப்போது ‘நீயுமாக்கா’ என ஒரு பார்வை ஜெயாவை பார்க்க “இல்லடா, ஒன்னு சரிவராதுன்னா, விட்டுட்டு வேற வேலைய பார்க்கலாமல்ல, இன்னும் ஏன்டா” என சொல்ல.

“க்கா, நான் பசங்க கூட விளையாடனும், இப்போ என்னை பேச வைக்காதீங்க” என்றவன் தட்டுடன் உள்ளே சென்றான்.

பார்த்திருந்த பூங்கொடிக்குதான் நிம்மதி வந்தது. ஒரு அன்னையாக அவனை நினைத்து இது நாள் வரை கொண்ட கவலை இப்போது இல்லை.

தனக்காக போராடுகிறான், ஆனால், யாரையும் ஒதுக்கி வைத்துதோ, தள்ளி வைத்தோ இல்லை. இதோ இப்போது கூட ‘வீட்டில், தன் அக்கா சாக்க்ஷியை பேசினாள்’ என தெரிந்தும் முகம் காட்டாமல், அவளை ஒதுக்காமல் அரவணைத்தே செல்கிறான் என தோன்றியது.

அன்று நடந்தது தாயாய் பூங்கொடிக்கு மிக பெரிய வருத்தம்தான், ‘நீ எனக்கு வேண்டாம்‘ என தன் மகனை பார்த்து சொல்லும் போது, அன்னையாக கோவமே வந்தது, சாக்க்ஷி மேல்.

ஆனால் ஜெகன்நாதனின் மனைவியாய் ‘இதைத்தானே எதிர்பார்த்தார்’ என இருந்தது. சாக்க்ஷி வேண்டாம் என சொன்னவுடன், கதீஷ் விட்டு விடுவான் என நினைக்கவில்லைதான் கொடி.

ஆனால், ஜெகனின் மனைவியாய், எப்படி ‘சுந்தரம் தனது மகனை பற்றி, அவரிடம் சொல்லி செல்லலாம்’ எனவும் தோன்றியது. எனவே அதனுடைய கோவம்தான், பாக்கியம் அன்று பேசும் போது அமைதியாக இருந்தார்.

ஆனால், மனதுள் சற்று பயம்தான், ‘எங்கே தாலி கட்டி, கூட்டி வந்துவிடுவானோ’ என. ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இல்லை எனுமாறு, அமைதியாகிவிட்டான். ‘எங்கள் வளர்ப்பு வீண் போகவில்லை’ என பெருமைதான் பூங்கொடிக்கு.

பொற்றோர் நம்பிக்கையை பொய்யாக்காமல் இருப்பதும் வீரம்தான். கிட்ட தட்ட ஒருமணி நேரம் தன் மகனின் பெருமைகளை நினைத்தவாறே அமர்ந்திருந்தார் பூங்கொடி.

கதீஷும், பசங்களும் ஆடி தீர்த்து வந்த பிறகு, பிள்ளை எல்லாம் எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்த, தங்கள் பாட்டியிடம் வந்து “பே” என கத்தவும்தான், திடுக்கிட்டு எழுந்தார்.

கதீஷ் “என்னம்மா, கனவா, நீ போய் படுக்கலாம்ல்ல” என்றான் லேசான கோப குரலில்.

கொடி “என்ன தினமும்மா இருக்கேன், என்னிக்கோ கொஞ்ச நேரம், விடுடா” என்றார். இப்படியே பேசிய படியே அனைவரும் உறங்க சென்றனர்.

மறுநாள் காலையிலேயே வந்து நின்றான் சந்தோஷ் “மாமா, புல்லட் கத்து கொடு மாமா” என்றான்.

“நீயே எடுத்து ஓட்டுடா, என்னமோ சின்ன பையன் மாதிரி” என்றான் சிரித்துக் கொண்டே.

சந்தோஷ் “நீ வா மாமா, ஒரே ஒரு தரவ” என கெஞ்சினான்.

கதீஷும் அதற்கு மேல் நிற்காமல் கீழே சென்றான். புல்லட்ட ஓட்ட சொல்லிக் கொடுத்தான். ‘எப்படி கீர் போடுவது, வெயிட் எப்படி பாலன்ஸ் செய்வது’ என சொல்லிக் கொடுத்தான்.

ஒரு ரவுண்டு அவனுடம் பின்னால் அமர்ந்து சென்று சொல்லிக் கொடுத்தான், எப்போதும் போல் சாக்க்ஷி நினைவு வந்தது. ‘அவளிற்கும் நான்தானே சொல்லிக் கொடுத்தேன், எப்படிதான் ஒரே பிடியாய் கற்றுக் கொண்டாளோ.’

‘நான் ஒன்றை செய்தால், அதை அவளும் செய்தே ஆகவேண்டும், பிடிவாதம், அத்தனை பிடிவாதம், இப்போ அந்த பிடிவாதம் எல்லாம் எங்கே போச்சோ’ என எண்ணி பெருமூச்சு வந்தது அவனிடமிருந்து.

இப்படி சின்ன சின்ன இடங்களில் எல்லாம் கதீஷ் அவளின் நினைவில் நின்றான்.  நீண்ட நாள் சென்று தனது பெட்ஸ்சுடனும் நேரம் செலவிட்டான். கூடவே, அவைகளை தனியாக கொண்டு சென்று முறையான பயிற்சி அளிக்கும் எண்ணமும் வந்தது.

கூடவே, நியூ இயர் வரவும், இப்போது பிள்ளைகள் எல்லாம் “மாமா கோயம்புத்தூர் போலாம் மாமா, இந்த நியூ இயர் சூப்பரா இருக்கணும், அடுத்த வருஷம் நான் டூவல்த், நான் எங்கயும் வர முடியாது” என சோகமே உருவாக சந்தோஷ் சொல்ல, மற்ற மூவரும் வழி மொழிந்தனர்.

எனவே நாளை எங்கு செல்வது எப்படி கொண்டாடுவது என திட்டமிடுதல் தொடங்கியது. ஆளாளுக்கு ஓவ்வென்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

கதீஷுக்கு யோசனை வந்தது. எப்படி விட்டு செல்வது, வேலை இருக்கிறதே என தோன்றியது. ஆனாலும், பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகளை ஏமாற்ற தோன்றாமல், அவனும் அதற்கு ஒத்துக் கொண்டான்.

******************************************

சாக்க்ஷி, அக்க்ஷராவை அழைத்து வர, தன் அம்மாவை, வேலுவுடன்  அனுப்பினாள். அக்க்ஷராதான் கொஞ்சம் அந்த வீட்டை கல கலப்பாக்கினாள். அக்க்ஷரா இப்போது நிறைய பேசினாள்.

ஆனால் இப்போது சாக்க்ஷியால் அதில் ஒன்ற முடியவில்லை. அவளின் எண்ணம் எல்லாம் தொழிலை பற்றியதாகவே இருந்தது. அக்க்ஷராதான் “அக்கா, என்ன க்கா, இப்படி போரடிக்கிற, எத பேசினாலும் கடைசியில, மில்லிலேயே வந்து நிக்கிற, போர்க்கா நீயி” என்றாள்.

தன் அம்மாவிடம் “ஏன் ம்மா, அக்கா ரொம்ப ரெஸ்ட்லஸ்ஸா இருக்கா, எங்கயாவது போலாம்மா” என்றாள்.

மேகலைக்கு அது தோன்றவேயில்லை இப்போது அக்க்ஷரா சொல்லவும் “சரி டா தங்கம், நான் அவகிட்ட கேட்கறேன்” என்றார்.

அன்று இரவு சாக்க்ஷியிடம் மேகலை “சாக்க்ஷி, எங்கயாவது வெளியே போயிட்டு வரலாமா, அப்…” என ஏதோ சொல் வந்தவர் “இப்போதைக்கு எங்கயும் போகவேயில்ல, ஏதாவது சினிமா, இல்ல, ப்ளக் தென்டர் போலாமா” என கேட்டார் மேகலை.

சாக்க்ஷியும் ஏதும் சொல்லாமல் “ம்மா, கோயிலுக்கு போலாமா” என்றாள்.

“இன்னும் ஒரு வருஷம் ஆகலைடா, வேறு எங்காவது போலாம்டா” என்றார் இறைஞ்சுதலாக.

இப்போது அக்க்ஷராவும் சேர்ந்து கொள்ள, எங்கே செல்வது என பேசி முடித்திருந்தனர். வேலுவிடம் இரவே சொல்லியாகிவிட்டது எங்கே செல்வது என. எனவே அக்க்ஷரா மிகவும் சந்தோஷமாக உறங்கினாள்.

மறுநாள் காலை அக்க்ஷராதான் எல்லோரையும் கிளப்பிக் கொண்டிருந்தாள் “க்கா ஆச்சா………. ம்மா என்ன பண்ற, இப்பவே கிளம்பினாத்தான் சரியா இருக்கும், ரெண்டுமணி நேரம் ஆகும்…. போகவே” என விரட்டிக் கொண்டிருந்தாள்.

காலையில் கிளம்பிய வண்டி, நேராக கோயம்புத்தூர் கோவை குற்றலத்தில்தான் சென்று நின்றது. எப்போதும் சொற்பமாக வரும் நீர் இந்த முறை கொஞ்சம் அளவில்லாமல் வந்து கொண்டிருந்தது.,

கூட்டம் சற்று அதிகம்தான். ஆனாலும், அதற்கெல்லாம் அக்க்ஷரா அஞ்சவில்லை. சாக்க்ஷியும் மேகலையும் நின்று வேடிக்கை பார்க்க தனியாளாக சென்று அருவியில் குளிக்க தொடங்கினாள்.

அங்குதான் பார்த்தாள் சந்தோஷை. ஆம் அக்க்ஷராதான் முதலில் பார்த்தாள் அவர்களை, பார்த்தவுடன் இன்னும் யார் வந்திருக்கிறார்கள் என பார்க்க… கதீஷ் நிற்பது தெரியவில்லை அவளுக்கு, பசங்க மட்டும் அங்கு அருவியில் நின்றிருந்தனர்.

இப்போது “’அக்கா “ என சந்தோஷ் அழைக்க அவர்களுடன் பேசிய படியே குளித்து முடித்து வெளியே வந்தாள்.

உடைமாற்றி ஓரிடத்தில் அமர்ந்து, எடுத்து வந்த உணவை உண்டுகொண்டிருந்தனர். அடுத்து எங்கு என அக்க்ஷரா கேட்க வேலுதான் “ப்ரூக் பீல்ட் போலாம்க்கா, இங்க படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு, நீங்க பர்சேஸ் போங்க, நான் படத்துக் போறேன்” என்றான் எல்லோருக்கும் முந்திக் கொண்டு.

இதெல்லாம் சாக்க்ஷி கணக்கி கொள்ளவில்லை தலையாட்டினாள். அக்க்ஷ்ரா குதித்துக் கொண்டு கிளம்பினாள். முன்மாலை பொழுதில் அங்கே சென்று சேர்ந்தனர்.

கதீஷின் திட்டமெல்லாம் வேலுவால் நடக்க, பசங்க போகும் படத்திற்கு அவனிற்கும் சேர்த்து நேற்றே டிக்கெட் புக் செய்து வைத்திருந்தவன். இப்போது இவர்களுக்காக, அங்கு காத்திருக்க தொடங்கினான்.

பக்கத்து வீட்டில் இருப்பவளை கூட நூறு கிலோ மீட்டர், கிட்ட தட்ட கடத்தி வந்து பார்க்கும் தனது நிலைமையை எண்ணி, சிரித்துக் கொண்டே நின்றிருந்தான்.

ஆனால் காதலிக்கும் ஆண்கள் சொல்லுவது போல ‘இதுவும் ஒரு த்ரில்லாதான் இருக்கு என எண்ணிக் கொண்டே, கல்லூரி படித்த நாட்களில் கூட இப்படி யாருக்கும் காத்திருக்கவில்லை நான்’  என எண்ணியபடியே நின்றிருந்தான்.

அவனின் தாரகையை தாங்கிய தேர், அந்த மாலின் உள்ளே நுழைய…. தெய்வம் கண்ட பக்தனாக மெய் மறந்து நின்றான் கதீஷ்.

அவள் இறங்கி உள்ளே வர வர, இவன் பின்னால் சென்று கொண்டிருந்தான். அவள் கண்ணில் படாமல் நின்று கொண்டான். திருட்டு தனமும் அழகுதான் என இப்போது தோன்றியது கதீஷுக்கு.

இன்று புடவை உடுத்தாமல், கல்லூரி பெண் போல, ஒரு காட்டன் சுடி அணிந்து வந்தாள். எப்போதும் போல் தலைக்கு எண்ணை வைத்து பின்னால்தான், அதில் அளந்து வைத்தது போல், ஒரு ஜான் அளவுதான் பூ, அதற்கு மேல் இருக்கவே இருக்காது, அதையும் வளையல் போல் சுற்றி, ஒரு சேப்டி பின் கொண்டு தலையில் வைத்திருப்பாள்

இவனை விட ஒரு நூல் கூடுதல்தான் நிறத்தில், மாந்துளிர் நிறம். காதில் எப்போதும் அணியும் ஆடாத கம்மல் என இப்போதும் கதீஷை கவர்ந்துதான் வந்தாள்.  

எல்லாரும் வந்த வேலைகளை பார்க்க, வேலு சினிமாக்கு சென்றான். அக்க்ஷ்ரா, அங்குள்ள கடைகளில் துணி எடுத்துக் கொண்டிருந்தாள், மேகலையும் உடன் சென்றார்.

சாக்க்ஷி தனியாக என்ன செய்வது என தெரியாமல் அங்குள்ள புட் கோர்ட்டில் ஏதோ ஒரு ஜூஸ்சுடன் அமர்ந்திருந்தாள். சொல்லாமல் கொள்ளாமல் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் கதீஷ்.

சாக்க்ஷி இப்போது கண்மூடி அமர்ந்து கொண்டாள். அவன் வந்தது தெரியும், அமர்ந்தது தெரியும். ஆனால் எதுவும் காட்டிக் கொள்ளாமல் கண்மூடி அமர்ந்திருந்தாள் சாக்க்ஷி.

கதீஷ் “சாக்க்ஷி” என்றான் குரல் இயல்பாக இல்லை. பாதிதான் கேட்டது அவளிற்கே, பாதி காற்றில் பறந்தது.

சாக்க்ஷிக்கும் கண்கலங்கியது, ‘தேவையா இது’ என தோன்றியது. ‘எழுந்து சென்றுவிடலாம்’ என இருந்தது. ஆனால் அவளென்ன மிஷினா இதையெல்லாம் செய்ய.

எங்கோ மனதின் கீழ் அடுக்குகளில் அவனின் நினைவு இருக்கத்தானே செய்யும். இப்போது அவனின் குரல் அதையெல்லாம் தட்டி எழுப்ப, இன்னும் இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டாள்.

“எதுக்கு வந்த “ என்றாள் அவனிடம். அங்கிருந்த டேபிலேளில் கதீஷின் விரல்கள் தாளமிட்டுக் கொண்டிருந்தன. ‘பளாரென’ அவளை ஒரு அப்புவிட தோன்றியது.

‘கெஞ்சவா முடியும் பாருடின்னு, போடி…….. தேடி வர ஒருத்தன் இருக்கவும் தானே, உனக்கு திமிராகுது’ என தோன்றியது.. கதீஷுக்கு.

‘போடின்னு போயிருக்கனும், உன்னையெல்லாம்….’ என திட்ட கூட வரவில்லை அவனிற்கு.

சாக்க்ஷிக்கு அவன் அருகில் இருக்கும் நேரமெல்லாம் அவள் மனதின் பலம் குறைந்து கொண்டே சென்றது. அதற்கு நேர் மாறாக இன்னொரு மனம் அவனின் அருகாமையை ரசிக்க தொடங்கியது.

அதில் சற்று அமைதியும் கொண்டது. சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. அவர்கள் இருவரும் தத்தமது துணையின் அருகாமையில் மனம் லையிக்க தொடங்க, சாக்க்ஷியின் போன் இசைக்க தொடங்கியது,

கதீஷ் இப்போது அவளை பார்க்காமல் கூட எழுந்து சென்றான். செல்லும் அவனையே பார்த்திருந்தாள் சாக்க்ஷி. ‘தேங்க்ஸ்’ என்றது அவளின் உதடுகள்.   

  

 

 

  

 

    

 

    

  .

   

 

 

      

 

  

Advertisement