Advertisement

மிட்டாய் புயலே-14

இது எல்லாவற்ரையும் பார்வையாளாராக மட்டும் பார்த்துக் கொண்டிருந்த மேகலைக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. இவர்கள் இருவரின் நிலை பார்த்து “கதீஷ், நீ கிளம்புப்பா” என்றார். குரலில் கவலையோ, கோவமோ இல்லை. என்ன நடக்க வேண்டாமோ நடந்தே ஆகும் என்ற த்வனித்தான் இருந்தது.

தன் கணவர் இருக்கும் போது ‘இதற்குதான், கதீஷை வர வேண்டாம்’ என்றாரோ என எண்ணம் எழுந்தது. ‘இத்தனை விஷயங்களும் நடந்தது எனக்கு தெரியவில்லையே’ என தோன்ற தொடங்கியது மேகலைக்கு.

சுந்தர்ராஜன் இருந்த வரை எல்லாம் அவர் பார்த்துக் கொண்டார். இதோ இப்போது அதனை சாக்க்ஷி கையில் எடுத்துக் கொண்டாள். எனவே, மேகலையின் உலகம் அந்த வீடு மட்டும் என்றானது.

முன்பும் பெரிதாக எந்த சங்கடமும், தன் மனைவியை பாதிக்காது பார்த்துக் கொண்டார் ராஜன். ஆம் மாமியார் மாமனார் இவர்களின் திருமணத்தின் போதே இல்லை. நாத்தனார் கிடையாது.

வரதராஜனுக்கும் சொந்தத்திலேயே பெண் பார்த்து திருமணம், அவர்களும் ஏதோ விழா, பண்டிகை என்றால் மட்டுமே வருவது. காலை வந்து மாலை செல்வது. மேலும் இயல்பிலேயே மேகலை அதிர்ந்து பேச தெரியாதவர். பிறந்த வீட்டில் கூட பெரியவர்கள் எது சொன்னாலும் சரி என்பவர்.

எனவே, மேகலையின், அழகான சிறிய கூட்டில், எல்லாம் ராஜன் மற்றும் குழந்தைகள் என ஆகி போனார்கள். எனவே, இப்போது ஒருவர் வீடு தேடி வந்து, தன் மகளை குறை கூறி செல்லவும், தன் கணவனைத்தான் தேடியது அவரின் மனம்.

அவர் இருந்தவரை, இந்த வெகுளியான மேகலைக்குதான் எவ்வளவு மரியாதை. இப்போது அவரின் தம்பி கூட மதிப்பதில்லை. யாரிடம் இதை சொல்லுவது என தெரியாமல் நேரே சென்று தன் கணவன் படத்திற்கு முன் அமர்ந்து விட்டார்.

எத்தனை வருடமானால் என்ன, எத்தனை வயதானால் என்ன, கணவனின் கைகள் தருகின்ற கத கதப்பையும், அவனின் உரிமை பார்வையையும் எந்த இடத்திலும் பொருத்தி பார்க்கவே முடியாது தானே. அப்படிதான் மேகளையும் அவரின் அருகே போய் அமர்ந்து கொண்டார்.     

சாக்க்ஷிக்கு, கதீஷின் இந்த கோவம், அவளிற்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தாலும், அவனையே வெறித்து பார்த்து நின்றிருந்தாள்.

கதீஷ், அங்கு டீபாய் மேலிருந்த அவளின் கார் சாவியை கையிலெடுத்துக் கொண்டான் “வா, உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்“ என்றான் அவளை பார்த்து.

சாக்க்ஷி “அம்மா, அங்க இருக்காங்க, அப்புறமா பேசலாம்” என தனது அன்னை, அப்பா படத்திற்கு முன் அமர்ந்திருப்பதை பார்த்து அவள் சொல்லவும்.

கதீஷ் விடாது “மேல வா” என்றான். சாக்க்ஷி அவனிடம் இப்போது சிக்கினால் அவ்வளவுதான், இருக்கும் நிலையில் ஏதாவது உளறி வைத்து விடுவோம் என நினைத்து, “இப்போது முடியாது, நீங்க கிளம்புங்க, அப்புறம் பேசலாம்” என்றாள். அவனை அனுப்புவதிலேயே இவள் குறியாய் நிற்க.

கதீஷ் திரும்பவும், மேகலையிடம் அனுமதி வாங்கும் எண்ணத்துடன்  “ஆன்ட்டி, நான்.” என அவன் என்ன சொல்லியிருப்பானோ,

சாக்க்ஷி அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு “ப்ளீஸ் கதீஷ்…. லீவ்வ்வ் மீ” எனறாள். இதுவரை கலங்காத அவளின் கண்களில் லேசான நீர் படலம் “நீ கூட புரிஞ்ச்சிக்க மாட்டியா” என்றாள்.

இந்த கெஞ்சலை பார்த்ததே இல்லை அவளிடம். அதில் கரைத்தான் அவனின் உக்ரத்தையெல்லாம். அவனின் கண்ணில் நேசம் வழிய, அவளின் அருகில் வந்தான்.

அவளின், கண்ணோடு, தன் கண் கலக்க விழையவில்லை அவன். அவளின் மனதை போல் அலைபாய்ந்து கொண்டிருந்த அவளின், துண்டு முடிகளை, அவளின் காதோரம் ஒதுக்கினான்.

அவளின் காதில் ஆடிய, அந்த முத்து கம்மலை வருடிய வண்ணம், “என் சாக்க்ஷிக்கு கெஞ்ச தெரியாது. முக்கியமா, என்கிட்ட இருந்து எதையும் மறைக்க தெரியாது.” என்றவன் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவன்.

“உன் கண்ணிலிருந்து, எனக்கான நேசத்தை நீ, மறைக்க பார்க்கற, பரவாயில்ல………

உன் விருப்பம்தான், என்னோட விருப்பம். இப்போ, நான் விட்டுட்டுதான் போறேன். ம்…. சரியா” என்றான் அவளின் கண்களை பார்த்து.

“ஆனா, மொத்தமா வருவேன்………. எனக்கான உன் நேசம், உன் கண் வழியே வழியும், அப்போ நான் திரும்பி வருவேன்……

அப்போ, நான் சொல்றத நீ கேட்கணும்…. கேட்ப” என்றவன் அவளின் கன்னத்தில் இறங்கிய நீரை, தனது பெருவிரல் கொண்டு துடைத்தவன். அந்த கன்னத்தை நிமிட்டிவிட்டே சென்றான்.

கதீஷிற்கு ஒரு நிம்மதி வந்தது அவளின் பார்வையில், அவளின் இந்த அமைதியில். எதற்கோ தன்னை தள்ளி வைக்கிறாள் எனதான் தோன்றியது. ஆனால் எதற்கு எனதான் புரியவில்லை.

அவன் திரும்பியும் பாராமல் செல்லவும், சாக்க்ஷிக்கு சொல்ல முடியாத வலி, தான் கொண்ட பிடிவாதத்திற்கு அழுவதா, இல்லை, அவனின் இந்த நம்பிக்கைக்கு அழுவதா என தெரியாத நிலை, அப்படியே தொய்ந்து போய் அமர்ந்தாள்.

வாசலை கடந்து சென்றவன், தன்னிடம்தான் கார் சாவி இருக்கிறது என உணர்ந்து திரும்பி வந்து அங்கிருந்த டீபாய் மேல், சாவியை வைத்து விட்டு திரும்பினான், மீண்டும் திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க. சாக்க்ஷி ஓய்ந்து போய் சோபாவில் அமர்ந்திருந்தாள்.

பார்த்தவனுக்கு வலித்தது. திரும்பவும் அவளின் உச்சி கோதி, தோள்சாய்த்து ஆறுதல் சொல்ல நினைத்த தனது மனதை, ஹாக்கி மட்டை கொண்டு அடித்து அமர்ந்த்தினான் கதீஷ். ‘நான் எதையும் பார்க்கவில்லை’ என விருட்டென நடந்தான்.

ஆனால், அவனின் இந்த கோவம், தன் வீட்டில் மையம் கொண்டு சுழல தொடங்கியது. நேரே சென்றவன் ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

ஒரு பத்து நிமிடம் யாரும் எதுவும் அவனை கேள்வி கேட்கவில்லை, அந்த கோவம் இன்னும் அவனை தாக்க, ‘நான் இந்த வீட்டில் யாரும் இல்லையா இவர்களுக்கு’ என தோன்ற தொடங்கியது.

காலை எழுந்ததிலிருந்து ஒன்றும் குடிக்க கூட இல்லை. எனவே, பூங்கொடி டீ எடுத்து வந்து கொடுத்தார். வாங்கவில்லை அவன், “குடி டா, எதுவுமே சாப்பிடல” என்றார் அன்னை.

கதீஷ் ”சாக்க்ஷிக்கிட்ட யார் என்ன பேசினீங்க” என்றான். ஜெகன் அங்குதான் அமர்ந்திருந்தார் . இன்று சண்டே என்பதால் எங்கும் செல்லவில்லை. உணவு மேசையிலிருந்து எழுந்து வந்தவர்.

“உன் எதிரில் தான் பேசினோம்” என்றார்.

கதீஷ் தன் அன்னையை ஒரு பார்வை பார்க்க “இல்லடா, அது அப்போ ஏதோ பாக்கியா, நல்லதா நாலு வார்த்தை சொன்னா, அவ்வளவுதான். வேற நாங்க எதுவும் பேசல” என்றார்.

“உங்களுக்கு ஒரு சேதி சொல்லட்டா, நான் இதுவரைக்கும் அவகிட்ட என்னை கல்யாணம் செய்துக்கன்னு சொல்லவேயில்ல, நீங்களாதான் எல்லாம் அவகிட்ட சொல்லியிருக்கீங்க.

அவளுக்கு எதுவுமே தெரியாது. ஆனா எல்லாம் அவ செய்ததாதான் சொல்லியிருக்கீங்க…. தப்பு செய்தது நான், என்கிட்டே எதுவுமே பேசாம, பாவம் யாருமே இல்லாம தனியா நிக்கிற பெண்ணை போய் மிரட்டுறீங்க….. ம்” என்றான். அத்தனை கோவம் அவன் வார்த்தைகளில்.

ஜெகன் “அப்புறம் எதுக்குடா, வரதன் வந்து அன்றைக்கு அப்படி சொல்லிட்டு போனாரு” என்றார் கோவமாக.

சட்டென வந்தது வார்த்தை “நீங்க பேசாதீங்க பா, அதான் சொன்னனே தப்பு என்னோடதுன்னு. அதுவும் அவர் இருக்கும் போது போய் கேட்டிருக்கணும், இப்போ போய் அவகிட்ட….. ச்சே……” என்றவன் மேலேறி தனது அறைக்கு சென்றான்.

@@@@@@@@@@@@@@@@@@@       

ஓய்ந்து போனாள் சாக்க்ஷி, புரிந்து போனது அவளிற்கு இந்த ஜென்மத்தில் இவன்தான் எனக்கு என. ஆனால் ஒரு பத்து நிமிடம் முன் நடந்ததும் கனவு அல்லவே.

ஏதோ, தான் அவனை பிடித்து வைத்திருப்பது போல் வந்து மிரட்டி சென்றதும் கனவு அல்லவே.

ஆனால், அதை பற்றி இப்போது யோசிக்க நேரமில்லை அவளிற்கு,. அம்மா அங்கே அமர்ந்தவர் அப்படியே சாய்ந்தது போல் தோன்ற, உள்ளே சென்றாள். அங்கு அவரின் நிலைமையும் அப்படிதான் இருந்தது மயங்கிய நிலையில் இருந்தார் மணிமேகலை.

உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து, அவரின் கண்களில் துடைத்து விட்டு, “ம்மா…… ம்மா” என இரு முறை அழைத்த பிறகே கண்களை உருட்டினார்.

இங்கே அவளின் துக்கத்தை நினைக்க கூட நேரம் இருக்கவில்லை. உள்ளே சென்று அவசரமாக, சர்க்கரை தூக்கலாக போட்டு, டீ எடுத்து வந்தாள்.

மணி ஒன்பது “அம்மா போலாமா, அக்ஷராவை பார்த்தட்டு வரலாம்” என்றாள்.  அவரை மனம் மாற்றும் எண்ணத்துடன். கண்ணில் துளி ஈரம் இல்லை, எல்லாவற்றையும்தான், அவளின் கதீஷ் துடைத்து சென்றானே.

மேகலைக்கு, தன் கணவரை தாண்டி மகள்களை கவனிக்க தெரியவில்லை. எனவே, இவர் பிள்ளையாக மாறினாரோ, தன் போல் தலையாட்டினார். சாக்க்ஷி “சப்பிட்டியாம்மா” என்றாள்.

“இன்னும் இல்லடா” என்றவர். இப்போதுதான் தன் வேலை நினைவு வந்தது போலும். தானே எழுந்தார்.

“இரு வரேன்” என்றவர். உள்ளே சென்று இருவருக்கும் ஒரு கிண்ணத்தில் உணவு எடுத்து வந்து அவளுக்கும் ஊட்டி தானும் இரண்டு வாய் உண்டு முடித்தார்.

உடனே கிளம்பினர். நேரம் சென்றுதான் என்றாலும் இந்த வடிகால் அவர்களுக்கு தேவையாக இருந்தது.

சாக்க்ஷி காரில் செல்ல செல்ல பேசிக் கொண்டே வந்தாள். மேகலைதான் “சாக்க்ஷி இனி காருக்கு ஒரு டிரைவர் போட்டுக்கோடா” என்றார். தன் அன்னை முதல் முதலாக சொல்லுவது, எனவே சற்று யோசித்த சாக்க்ஷி..

“நீ வீட்டு வேலைக்கு ஆள் வைச்சிக்கோ, நான் டிரைவர் போட்டுக்கிறேன்” என்றாள்.

மேகலை “ஆமாம், இருக்கிற ரெண்டு பேருக்கு, வேலையாள் வேற” என்றார் சலிப்பாக.

“உனக்கு, பேச்சு துணைக்குன்னு நினைச்சிக்க” என்றாள் சாக்க்ஷி.

“சரிடம்மா, பயந்திட்டியா, அது அப்பா நினைப்பு கொஞ்சம் வந்திடுச்சு அதான், இனி உன்ன பயபடுத்தமாட்டேன்” என்றார்.

பின் தானே தொடர்ந்து “அக்ஷரவ வேண்ணுன்னா, இங்க கூட்டி வந்திடுவோமா” என்றார்.

அவசரமாக தடுத்தாள் சாக்க்ஷி “ஏன்ம்மா, அவளாவது கொஞ்சம் நிம்மதியா படிக்கட்டும்” என்றாள். பின் எதுவும் பேசவில்லை இருவரும்.

கல்லூரி வர, இருவரும் சென்று  அக்ஷராவை பார்த்தனர். அவளிற்கு மிகவும் மகிழ்ச்சி. அவள் எதிர்பார்க்கவில்லையே இவர்களின் வரவை. எனவே, வாய் கொள்ளாமல் பேசிக் கொண்டே இருந்தாள். சாக்க்ஷிதான் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.

சற்று நேரம் கழித்து அக்ஷராவின் தோழிகளும் வந்து சேர்ந்து கொண்டனர். எனவே அரட்டை களைகட்டியது. எப்போதும் தங்கைக்கு சரியாக  வாயடிக்கும் சாக்க்ஷி இப்போது அமைதியாக இருந்தாள். ஆனால் அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

தான் தொலைத்து கொண்டிருக்கும் சொர்க்கம், இப்போது அவளின் கண்முன் தெரிந்தது. ஆறுமாதம் முன்பு வரை இப்படிதானே நானும் இருந்தேன் என தோன்றியது.

மாலைதான் இருவரும் கிளம்பினர். சாக்க்ஷி தனக்கு தேவையான எனர்ஜியை அக்ஷராவிடமிருந்து எடுத்து கொண்டாள். கடல் அலை, வானத்தில் உலவும் மேகம், மறையும் சூரியன், கன்னி பெண்கள் இவர்கள் எல்லாம் நல்ல பாசிடிவ் எனர்ஜி. நம் மனம் துவண்டிருக்கும் போது அவர்களை பார்த்தாலே மனம் புத்துணர்ச்சி பெரும்.

நடந்ததை நினைக்க கூடாது என தெளிவாக இருந்தாள் சாக்க்ஷி. இனிதானே தெரியபோகிறது, கதீஷின் தவ வலிமை.

இரவு வீடு வந்து சேர்ந்தனர். வீட்டினுள் நுழையும் போதே, மனம் கனக்க தொடங்கியது. இந்த தனிமைக்கு பயந்து தானே, காலையில் ஓடினாள். இது வரை, அதே தனிமை அவளுக்காக காத்திருந்தது.

வீட்டினுள் நுழையும் போதே வந்து கழுத்தோடு சேர்த்து கட்டிக் கொண்டது. ‘என்னை விட்டு ஒடி போக முடியுமா, அது முடியுமா’ என காதோடு பாடி, அவனின் நினைவு அவளை கட்டிக் கொண்டது.

நெஞ்சம் நிறைய கதீஷ், மூளை நிறைய கதீஷ்…. இப்போதும் கழுத்தை இறுக்கும் அவனின் நினைவு என அவள் விக்கித்து நின்றாள்.   

ஏதோ உண்டு, வெகு நேரம் அமர்ந்திருந்தாள் டிவி முன்பு. தன் அறைக்கு செல்லவே பயமாக இருந்தது சாக்க்ஷிக்கு. உள்ளே வந்து தன் கட்டிலில் அமர்ந்து கண்ணை மூடினாள்… ஏதோ இதற்காவே காத்திருந்தது போல் நீர் இறங்க தொடங்கியது அவளின் மூடிய கண்ணிலிருந்து.

அதனை கட்டுபடுத்தவோ, நிறுத்தவோ நினைக்கவில்லை சாக்க்ஷி. இது அவனுக்கான நிமிடங்கள் என கழுத்தை கட்டிக் கொண்ட அவனின் நிலைவுகளில், தனது முகத்தையும், தானே தொலைக்க தொடங்கினாள்.  

.@@@@@@@@@@@@@@@

உறங்கினாளா தெரியாது. மறுநாள் காலை சாக்க்ஷிக்கு இனிதாகவே விடிந்தது. நேற்றைய செயல்கள் ஏதும் தன்னை பாதிக்கக் கூடாது என நினைத்துக் கொண்டே எழுந்தாள்.

தன் அன்னையிடம் பேசியபடியே மில்லிற்கு கிளம்பினாள் சாக்க்ஷி. அங்கு, நெல் கொள்முதல் செய்வதற்கு ஏஜென்ட் என்று ஒருவர் அமர்ந்திருந்தார்.

‘நான்தான் அப்பா இருந்தவரை எல்லாம் பார்த்துக் கொண்டேன்’ என்றார். சாக்க்ஷிக்கு அவரை பற்றி ஆராயவெல்லாம் இல்லை. அவர் சொன்ன வார்த்தையே போதுமானதாக இருந்தது. அவரை நம்புவதற்கு.

அதை குறித்து பேச்சு வார்த்தைகள் சென்றது. விலை, தரம், முதற்கொண்டு எல்லாம் செய்து தருவதாக சொல்லி சென்றார். எங்கிருந்த வந்தார், எப்படி வந்தார் என புரியவில்லை அவளிற்கு. ஆனால், சாக்க்ஷியின் மிக பெரிய கவலை சற்று மட்டுப்பட்டது.    

 

      

     

 

                

Advertisement