Advertisement

மிட்டாய் புயலே-13

சாக்க்ஷிக்கு அந்த வாரம் முழுவதும் வேலை ஓயவில்லை. அவளின் வேலை அப்படியாக இருந்ததது. அவள் நெடுநாளாக யோசித்த காரியம் இன்னும் சற்று தூரத்தில்தான் இருக்கிறது என தோன்ற தொடங்கியது.

கதீஷின் ஓபனிங் முடிந்து ஒரு பத்து நாள் சென்றிருந்தது. கதிஷுக்கு அவள் வந்ததே பெரிதாக இருந்தது. மேலும் அவளுடன் சற்று நேரம் விளையாடியது. ஏதோ கனவு போல் அடிக்கடி அவன் நினைவில் வந்து போனது.

‘பேச வேண்டும், அவளுடன் பேச வேண்டும். புரிந்து கொள்வாள், அவளை தவிர யாரால் என்னை புரிந்துக் கொள்ள முடியும்’ என அவன் மனம் அவனிடமே சொல்லிக் கொண்டிருந்தது. நேரம் பார்த்துக் கொண்டிருந்தான், அவளிடம் தன் மனதை சொல்ல.

அவனால் புது நிர்வாகத்தை விட்டு நகர முடியவில்லை. ஹோட்டல் என்பது மட்டுமே அவன் மேற்பார்வையில் வராது. மற்றது அனைத்தும் அவனே பார்த்தாக வேண்டும்.

முடிவு பெறாத கட்டிட வேலைகளும், புதிதாக சேர்ந்த வேலையாட்கள், தினபடி கணக்கு பார்த்தே ஆக வேண்டிய பங்க் என அவனும் சற்று சுதாரிக்க நேரம் வேண்டுமாக இருந்தது.

அவளிற்கு போன் செய்து பேசும் மனநிலையில் அவன் இல்லை. விழி பிதுங்கியது வேளையில். எனவே நாட்கள் சென்றது.

அன்று கதீஷ் வீட்டிற்கு வரவும், பூங்கொடி “ஏண்டா இவ்வளவு நேரம், மணி எத்தனை ஆகுது பாரு, பன்னிரெண்டு ஆக போகுது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க, என்னால இப்படியெல்லாம் விழித்திருக்க முடியாது” என்றார் சலிப்பாய்.

அவன் ஏதோ நல்ல மனநிலையில் இருந்தான் போல “கட்டிட வேண்டியதுதான்” என்றான். அதில் உறக்கம் பறந்து சுறு சுறுப்பானார் பூங்கொடி.

“என்னாடா  சொல்ற, பொண்ணு எல்லாம் ரெடியாதான் இருக்கு, ம்ன்னு சொல்லு உடனே கல்யாணம்தான்” என்றார்.

“ம்கூம், நான் சொல்ற பொண்ணுனா, சொல்லு இப்போவே நான் ரெடி “ என்றான். விளையாட்டோ வினையோ அவளுடன் மட்டுமே என்பதை போல, தன் அன்னையின் முகத்தை பார்த்தவாறே புருவம் தூக்கி கேட்க.

அசந்து போனார் அவர் “என்னடா சொல்ற, இன்னும் நீ அந்த நினைப்புலதான் இருக்கியா” என்றார்.   

“நான் எப்போ மாறினேன், இன்னுமான்னு கேட்கற நீ” என்றான். அந்த தோசையை வாயில் போட்டவாறே.

அதன் பிறகு ஏதும் சொல்லவில்லை பூங்கொடி அமைதியாக பரிமாறினார். கதீஷ் தான் “என்னம்மா, பொண்ணு கேட்குறியா” என்றான்.

மனம் பதை பதைத்தது அவருக்கு. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “எதா இருந்தாலும் உன் அப்பா கிட்ட பேசிக்கடா” என்றார்.

“ம்ம், நான் பார்த்துகிறேன்” என்றான் குரல் உற்சாகமாக வந்தது. அவன் நினைத்திருந்தான், தந்தை அன்று இயல்பாய் இருக்கவும் எல்லாம் நல்ல படியாகத்தான் முடியும் என எண்ணியிருந்தான்.

விசிலடித்தபடியே உறங்க சென்றான். நாளை வருவது தெரியாமல். பூங்கொடிதான் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தார்.

இவர்கள் நினைத்திருந்தனர், விழாவில் அவன், அவளை கண்டுகொள்ளவில்லை அதனால், இப்போது பேசுவதில்லை போல என நினைத்திருந்தனர்.

பூங்கொடிக்கு தன் கணவனை நினைத்து கவலைதான், இப்படி பிள்ளை உற்சாகமாக இருப்பதுதானே வேண்டும் என தாய் ,மனம் எண்ணியது.

ஜெகனின் எண்ணம் எப்போதும் அரவனைப்பதுதான். ஆனால் திருமணம் சடங்கு சம்பிரதாயம் என வரும் போது. அதில் அவர் சரியாவே இருப்பார். அதானல் மகனை அதற்கு பழக்கி இருந்தார்.

இப்போது அவனின் திருமணம் என வரும் போது, அவரே சாக்க்ஷியை பிடித்து, ஜாதகம் பார்த்து பேசி முடித்திருந்தால். ஒரு வேலை, தன் மகனிற்கு திருமணம் செய்து வைத்திருப்பாரோ என்னவோ.

ஆனால், இப்போது ஊரில் இவர்களை சேர்த்து வைத்து பேச்சு அடிபடுவதால், அப்படி திருமணம் முடித்தால், நாளை நம் குடும்பத்திற்கு மரியாதை இருக்காது என யோசிக்க தொடங்கிவிட்டார்.

எனவே மகனை அவன் போக்கில் விடாமல், இழுத்து பிடித்து வெற்றியும் கண்டதாக நினைத்திருந்தார் இந்த ஆறுமாத அவனின் நடத்தைகளில்.    

இந்த நிலையில், மறுநாள் கதீஷின் தாய்மாமா ரங்கராஜன் ஒரு பெண்ணின் ஜாதகத்துடன் வந்தார். அப்போதுதான் பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார் ஜெகன் “வா வா மாப்பிள்ளை, என்ன அதிசியம் காலையிலேயே வந்திருக்க” என்றார்.

ரங்கன் “நம்ம கதீஷுக்கு ஒரு வரன் வந்திருக்கு, பார்க்கலாமா” என்றார்.

ஜெகன் “யாருப்பா, உள்ளூரா” என்றார்.

“எல்லாம், நம்ம தூரத்து சொந்தம்தான். என்ன, இப்போது சென்னையில் இருக்காங்க, ஒரே பொண்ணு, நம்ம வசதி வாய்ப்போட ஒத்து போறவங்க, சரின்னா, மேற்கொண்டு பேசலாம் மாமா” என்றார்.

“ம்….. பையன கேட்கணும், இந்த வருஷம் போகட்டும்ன்னு பார்த்தேன்.” என்றார் யோசனையாக.

ரங்கன் “நல்ல இடம் மாமா, பேச்சு வார்த்தை, அது, இதுன்னு ஆரம்பிச்சா, நாள் ஓடிடும். பாருங்க, கேளுங்க கதீஷ” என்றார்.

ரங்கனுக்கு அன்று சாக்க்ஷியுடன் பார்த்ததிலிருந்து சற்று யோசனைதான். எனவே பாப்போம் என எடுத்து வந்திருந்தார், இந்த வரனை.   

கதீஷ் உடற்பயிற்சி முடித்து அப்போதுதான் வந்தான். உள்ளே தன் மாமாவையும் பார்த்தவன் “வாங்க பிரின்சி” என்றான். நீண்ட நாட்களுக்கு பிறகு இயல்பான அழைப்பு அவனிடமிருந்து.

அவனையே பார்த்திருந்தார் ரங்கன். என்னவோ அவனின் முகம் கலையாக இருந்தாக தோன்றியது. எத்தனை அலைச்சல் இருந்த போதிலும் முகத்தில் தெளிவு இருந்தது.

அதை கவனித்த ரங்கன் “என்ன மாப்பிள்ளை, உனக்கு பொண்ணு பார்க்க போறோம்ன்னு தெரிஞ்ச உடனே கல்யாண கலை வந்திடுச்சு உன் முகத்தில்” என்றார். அவன் என்ன சொல்கிறான் என பார்க்கும் ஆவலுடன்.

“ம்கூம் “ என்றான் சுவாரசியமாக தன் அன்னையை பார்த்தவாறே.

பூங்கொடிக்குதான் திக் திக்கென்றது. ஜெகன் “ஆமாம் கதீஸ், மாமா ஒரு ஜாதகம் எடுத்து வந்திருக்கார். உனக்கு பார்க்கலாம்னு இருக்கோம்” என்றார்.

தன் மாமனை ஒரு பார்வை பார்த்தவன். “அதெல்லாம் சரி வராதுப்பா, எனக்கு என்ன வேணுன்னு உங்களுக்கு தெரியும், அப்புறம் எதுக்கு புதுசா யோசிக்கிறீங்க” என்றவன் வேறு பேசாது எழுந்து குளிக்க சென்றுவிட்டான்.  

அவன் செல்வதையே யோசனையுடன் பார்த்திருந்தார் ஜெகன் ‘உன் அப்பன்டா நான்’ எனும் விதாமாக அந்த பார்வை இருந்ததோ.

&*********************************************************************************&

அன்று சாக்க்ஷிக்கு நிற்க நேரமில்லை. மாலையில்தான் வீடு வந்தாள். மிகவும் சோர்ந்து தெரிந்தாள். மேகலை பார்த்ததும் கொஞ்சம் அரண்டு போனார்.

வந்தவளிடம் “ஏண்டாம்மா இப்படி அலையற, நாளைக்குதான் பார்த்தால் என்ன, ஏன் ஒரே நாளில் எல்லாம் செய்யற” என்று கடிந்தவாறே காபி எடுத்து வந்து கொடுத்தார்.

சோபாவில் சாய்ந்து அமர்ந்தவள். அந்த காபியில் தன்னை மறந்து, தன் அன்னையை பார்த்து சிரித்துக் கொண்டே ரசித்துக் குடித்தாள்.

கொஞ்சம் தெம்பு வந்தவள் “தள்ளி போட்டா எப்படிம்மா, சீக்கிரமா வேற யூனிட் வர போகுது நம்ம மில்லுக்கு, அப்போ பார், நான் இன்னும் ஓட வேண்டி இருக்கும், இதுக்கே இப்படி சொன்ன எப்படி “ என்றவள் தன் அன்னையை பார்த்து கண்ணடித்தாள்.

மேகலை “போதும் போதும், எதுக்கு ஓடற, எல்லாம் இருக்கிறது போதும், நீ அலட்டிக்காத” என்றார் வாஞ்சையாக.

“போம்மா, நான் எவ்வளவு ஆசையா சொல்றேன், நீ எதுவும் சொல்லாதம்மா” என்றவள் கோவமாக எழுந்து சென்றுவிட்டாள்.

மேகலைக்கு அன்னையாக யோசனை, ‘இதெல்லாம் சரியாக வருமா, பெண் பிள்ளையை வேலை வாங்குகிறோமா’ என பலத்த யோசனை. எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு தன் மகளின் இரவு உணவை தயாரிக்க சென்றார்.

சாக்க்ஷி ரெப்ரெஷ்ஷாகி வெளியே வந்தாள். டிவியை ஆன் செய்து அமர்ந்து கொண்டாள் “அம்மா, எப்போம்மா அக்ஷரா வருவா, இந்த வாரம் தானே” என கேள்வி எழுப்பினாள்.

“ஆமாம் வரணும்தான், ஆனா சமஸ்டர் லீவ் அடுத்த வாரம் விடுறாங்களாம், அப்போ வரேன்னு சொல்லிட்டா” என்றார்.

“போம்மா, வர சொல்லி இருக்கலாம்ல போரடிக்குது எனக்கு, சண்டே போய் பார்க்கலாமா அவள” என்றாள்.

“சரி சரி போலாம்” என்றார் மேகலை.

அதன் பிறகு சாக்க்ஷிக்கு வேறு ஏதோ யோசனை. இப்போது ஏலத்திற்கு செல்ல வேண்டும் என்றதும் அவளிற்கு சற்று பயமே. என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும், தனது ஒரு காலை ஆழமாக உனிக்கொள்ள நினைத்தாள்.

கதீஷிடம் கேட்கலாம் என்றே நினைத்திருந்தாள். ஆனால் ஏனோ ஒரு தயக்கம். அவன் மனதில் நாம் இருப்பது உறுதியான பிறகு அதை வளர்க்க அவள் விரும்பவில்லை.

எனவே கேட்கலாமா வேணாமா என யோசனை. டிவி அது தன் வேலையை செய்து கொண்டிருந்தது. அதில் அவளிற்கு கவனம் செல்லவில்லை.

மில்லின் செயல்பாடுகள் அவளிற்கு திருப்தியாக இருந்தாலும். கூடவே வேறு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என எண்ணம் எழுந்தது அவளுள்.

எனவே ‘என்ன என்ன’ என சிந்தனை சென்ற போது, அரிதாக மிக அரிதாக ஒரு விஷயம் கண்ணில் பட்டது.

இப்போது அதை நோக்கிதான் சென்றுக் கொண்டிருந்தாள். அதுதான் சிறுதானிய அவல்(அவுல்) நம் தமிழ் நாட்டில் அது இப்போது பரவாலாகி வருகின்றது. எனவே அதை தானும் செய்யும் நோக்குடன் துணிந்து காரியத்தில் இறங்கினாள்.

அதற்கான மெஷினரி பார்க்கத்தான் இப்போது ஈரோடு வந்தது, பேசியது எல்லாமே. அதனுடைய செயல்பாடுகள் எல்லாம் தெளிவாக அறியத்தான் இந்த பயணம்.

அவளின் தந்தையின் நண்பர் ஒருவர் இதனை செய்து, இப்போது ஏற்றுமதி கூட செய்து வருவதால், துணிந்து அவரிடம் தன்னுடைய சந்தேகங்களை கேட்டுக் கொண்டாள்.

இந்த சில நாட்களாக அதனை கொண்டே அவளின் வேலைகள் தொடர்ந்து நடந்தன. சுறு சுறுப்பாக இயங்கினாள் சாக்க்ஷி, எதிலும் தேக்கம் காட்டவில்லை. தனது வேலையாட்களுக்கு பயிற்சியும் அளித்துக் கொண்டிருக்கிறாள்.

புது முயற்சி, புது வேலை, புதிய மனிதர்கள் என சாக்க்ஷி இந்த ஒரு மாதத்தில் முழுதாக மாறியிருந்தாள். அவளிற்கு தனது கல்லூரியை பற்றியோ, தனது எக்ஸாம் பற்றி கூட நினைப்பதற்கு நேரம் இருக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்த வாரம் ஏலத்திற்கு செல்லவேண்டும் என்பதிலேயே மனம் நின்றது. எனவே மனம் தனக்கு சாதகமானவர்களை தேடியதோ. அதனால்தான் அக்ஷராவை பார்த்தாவது வருவோம் என நினைத்தாள்.

அதே யோசனையில் உண்டு உறங்கினாள் சாக்க்ஷி.

சண்டே என்றாலே ஒரு மயக்கம்தான் அது எந்த வயதாக இருந்தாலும் சரி. அப்படிதான் இருந்தது இந்த சண்டே சாக்க்ஷிக்கு. ஆனால், காலை ஏழு மணிக்கே ரெடியாகி அமர்ந்திருந்தாள்.

மேகலை, சுடச் சுட பொங்கலை ஒரு கிண்ணத்தில், சாம்பாரையும்  அதிலேயே கலந்து எடுத்து வந்து, அவள் கையில் கொடுத்தவர் “சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு“ என்றார். தானும் ரெடியாகதான் இருந்தார்.

இவள் அந்த நேரத்தில் முரசில் ஓடிய பழைய பாடலை ரசித்தவாறே உண்டு கொண்டிருந்தாள்.

“காற்றில் மிதக்கும் ஒளிகளிலே

கடலில் தவழும் அலைகளிலே

இறைவன் இருப்பதை நான் அறிவேன்…

என்னை அவனே தான் அறிவான்….” அது தன் வேலையை செய்ய..

அப்போது உள்ளே வந்தனர் ஜெகனும், பூங்கொடியும். சாக்க்ஷிக்கு முதலில் புரியவேயில்லை வந்திருப்பது யாரென, ஒரு ஷணம் கடந்துதான் மூளை செயல்பட “வாங்க மாமா, அம்மா “ என்றாள்.

சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார் மேகலை, பாரத்துடன் அவருக்கு தோன்றியது “ஏன் இவர்கள் இங்கு வந்திருக்கின்றனர்” எனதான் தோன்றியது.      

மேகலை அதே முகத்துடன் “வாங்க” என்றார். இதுவரையில் இவர்கள் இது போல் வீட்டிற்கு வந்ததில்லை. தன் கணவர் இறந்த போது கூட ஜெகன்தான் வந்தார். பூங்கொடி வரவில்லை. அப்படியிருக்கையில் இருவரும் சேர்ந்து வந்திருப்பதுதான் யோசனைக்கு காரணம்.

மேகலை “காப்பி தரவா, இல்ல ட்டீ போடவா” என்றார் அவர்களிடம்.

பூங்கொடி “இருங்க, சாக்க்ஷிம்மா” என்றவர் மேகலையை தடுத்து “இப்போதுதான் சாப்பிட்டு வரோம், ஒரு முக்கியமான விஷயம்” என்றார்.

சாக்க்ஷி சாப்பிட்டிருந்த கிண்ணத்தை உள்ளே சென்று வைத்து வந்தாள். என்னவென அவளும் முகம் பார்த்து நிற்க. மெதுவாக ஆரம்பித்தார் ஜெகன் “அதும்மா, கதீஷுக்கு பெண் பார்க்கலாம்ன்னு இருக்கோம். அவன் பிடி கொடுக்க மாட்டேங்கிறான். உன் பிரிண்டுகிட்ட நீ கொஞ்சம் சொல்லும்மா” என்றார்.

அழகான செய்கை யார் மனதையும் புண்படுத்தாத வகையில்தான் பேசினார். ஆனால் மேகலைக்கு சற்று நெருடியது “என்ன என்ன சொல்றீங்க“ என்றார்.

“அது……. சாக்க்ஷிக்கு திருமணம் நின்றது, அவனின் மனதை பாதித்துவிட்டது போல, அதான் கொஞ்சம் யோசிக்கிறான். நமக்கு அது சரிவராதுல்ல, அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றார்.

மேகலை சாக்க்ஷியை குற்ற பார்வை பார்க்க தாங்க முடியவில்லை சாக்க்ஷியால். உடனே கதிஷுக்கு போன் செய்தாள்.

அவன் அப்போதுதான், ஜாக்கிங் முடித்து வந்து அமர்ந்திருந்தான் போல, இவளின் கால் பார்த்தவன், கண்ணில் மின்னலுடன் எடுத்தான் கூடவே யோசனையும் வந்தது.

“என்னடி..” என்றான் குரலில் அவ்வளவு வாஞ்சை கூடவே அமைதி கலந்து வந்தது. இங்கு, பற்றிக் கொண்டது சாக்க்ஷிக்கு “என்னடா பண்ற, எங்க வீட்டுக்கு வாடா” என்றாள். அவன் எதிரில் இருந்திருந்தால், அவன் கழுத்தை பிடித்திருப்பாள். அவ்வளவு உக்கிரம் அவளின் பேச்சில் தெரிந்தது.

அடித்து பிடித்து எழுந்தான். ஏதோ அம்மாக்கு உடல் முடியவில்லை, இல்லை அவளிற்கு ஏதோ பிரச்சனை எனதான் ஓடினான் அவளின் வீட்டிற்கு.

அங்கு, அந்த ஷோபாவில் அமர்ந்திருந்த தன் பெற்றோரை பார்க்கவும். காரணம் இன்னும் பிடிபடவில்லை அவனிற்கு. திரு திருவென விழித்தான்.

அழுகவில்லை, கலங்கவில்லை சாக்க்ஷி. அவனை எரித்து விடுபவள் போல் நின்றிருந்தாள். வேறு யாரையும் பார்க்கவில்லை அவள்.

“உனக்கு, என்னை பார்த்து பரிதாபம் வருதா கதீஷ்” என்றாள். கிட்ட தட்ட கடித்து துப்பினாள் வார்த்தைகளை.

திரும்பவும் பூங்கொடியை பார்த்தவள் “அன்னிக்கும் இதேதான், அவர்களாக யோசித்து ஏதோ பேசினாங்க” என்றவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்.

“என் தப்புதான், ஏதோ தெரியாம சொல்லிட்டேன், உன் பெயரை. அதுக்கு இப்படி தினமும் என்னை யாராவது ஒருத்தர் வதைத்து கொண்டே இருப்பீங்களா” ஆற்றாமையாக வந்தது அவளின் குரல்.

தொடர்ந்து ஓய்ந்த குரலில் கெஞ்சலாக வந்தது “நீ கூட புரிஞ்சிக்க மாட்டியா கதீஷ், நீ வேண்டாம் எனக்கு. வேண்டவே வேண்டாம் கதீஷ், பிரிண்டா கூட நீ வேண்டாம் டா எனக்கு” என்றவள்.

“போதுமா “ என ஜெகனை பார்த்து கேட்டாள்.

கதீஷிற்கு என்ன நடந்தது ஏது நடந்தது தெரியாது. ஆனால் ஊகிக்க முடிந்தது அவனால். கூனி குறுகி நின்றிருந்தான். ஒரு பெண் தனியாக சொன்னாலே அவமானம். இப்போது எல்லோர் எதிரிலும் சொல்கிறாள் அதுவும் என்னுடம் ஆதியிலிருந்து  கூடவே இருந்தவள் சொல்கிறாள் ‘நீ வேண்டாம்’ என.

எல்லா இடத்திலும் அடி, எங்கு திரும்பினாலும் அடி, அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன் தன் குடும்பம் பல அடிகள் முன்னால் நிற்கிறதே என கோவம், ஆற்றாமை.

கட்டாயமா செய்ய முடியும் அவளிடம். ‘யார் வேண்டாம்’ என்றாலும் பொறுக்கலாம் உரியவளே மறுப்பது அவமனாமல்லவா, அவளையே வெறித்து பார்த்து நின்றிருந்தான் அவளின் கதி.

ஆனால் ஜெகன், அவர் சாக்க்ஷியை போல் இருபத்தி மூன்று வயது மனிதரல்லவே, அவளின் வயதை அனுபவமாக கொண்ட சராசரிக்கும் சற்று மேலே, போசிக்க கூடிய தந்தை அமைதியாக சமாளித்தார் “தெரியும்மா எங்களுக்கு, இந்த சாக்க்ஷியின் மனம் தெரியும், பெரியவர்களை ஒரு போதும் சங்கடப்படுத்தமாட்டேன்னு தெரியும்.

இதுதான் சாக்க்ஷி, நான் பார்த்து வளர்ந்த சாக்க்ஷி. கத்துக்கடா அவகிட்ட இருந்து” என்றார்.

பின் மேகலையை பார்த்து “மில்லுக்கு இவதான் போறா போல, நம்பிக்கையாக இருங்க, நல்ல திறமைசாலி. நான்தான் ஜகுவை இவளின் பழக்கத்திற்கு கொடுப்பேன், அப்போவே தெரியும் இவளின் திறமை, எந்த உதவியா இருந்தாலும் கேளும்மா” என்றார்.      

சிறிது நேரம் சென்று “மனதில் எதையும் நினைக்காதீங்க. ஏதோ இவர்களின் நட்பில் ஊரார் கண் பட்டதுன்னு நினைங்க, கூடிய சீக்கிரம் என் பையனுக்கு கல்யாணம் செய்யணும், கண்டிப்பா திரும்ப இவர்கள் நட்பு இணையும். எதா இருந்தாலும் கூப்பிடுங்க, நாங்க இருக்கோம்” என்றார் அத்தனை தன்மையாக இருந்தது அவரின் பேச்சு. பெரிய மனிதர் பெரிய மனிதர்தான். ஒன்றுமே நடக்கவில்லை என காட்டி சென்றார்.

கதீஷ்தான் ருத்ரமாக நின்றிருந்தான்.  

  

  

 

        

  

Advertisement