Advertisement

 

மிட்டாய் புயலே-12

அவனின் கோவம் இவளை கொஞ்சம் யோசிக்க வைத்தது. ஆனால் மேகலை மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார்.

மேகலை “சாக்க்ஷி, காலையிலேயே சிக்கிரமா போய்டுடா, அங்க எல்லோரும் உன்னை எதிர்பார்ப்பாங்க, என்ன புடவை கட்டிக்க போற” என தொடர்ந்து கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார்.

சாக்க்ஷி “ம்மா, ஏன் இப்படி கேள்வியா கேட்கறீங்க, அங்க தானே பாங்க்ஷன், நான் புடைவை கட்டி என்ன பண்ண போறேன், நான் முதலில் போகவா, வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றாள் நெற்றியில் கை வைத்து தேய்த்துக் கொண்டே.

மேகலை “ஏண்டி சலிச்சுக்கிற, ரெண்டு பேரும் ஒண்ணா வளர்ந்ததால, என்னால பிரிச்சு பார்க்க முடியல, எந்த சண்டையா இருந்தாலும் அப்புறம் வைச்சுக்கங்க, ப்ரகதீஷ் எவ்வளவு ஆசையா கூப்பிட்டு போயிருக்கு, யோசிக்காத, ஒரு எட்டு போயிட்டு வா” என்றார்.

“ம்ச்சு, தெரியலம்மா” என்றாள் சாக்க்ஷி. சாக்க்ஷி யோசனையுடனே இருக்க, இரவு உணவு முடித்து மேகலை உறங்க செல்லும் முன், “எத்தனை மணிக்கு எழுப்ப” என்றார்.

“ம்மா, நான் அலாரம் வைச்சுக்கிறேன்” என்றாள் எரிச்சலாக.

மேகலை தன்போல் ‘நாயையை குரைன்னா குறைக்காது, அதுவா கத்திக்கிட்டு கிடக்குமாம்’ என சொலவாடையை முனு முனுத்தபடி உறங்க சென்றார்.

ஜகு இன்று வரவில்லை. சாக்க்ஷியும் எதிபார்க்கவில்லை. உறங்க சென்றாள். தூக்கம்தான் கண்ணாமுச்சு ஆடியது.

‘போங்கனும்மா, அவன் வேற ப்ரன்டுண்ணா வான்னு போய்ட்டான். இவன் எப்ப எப்படி இருப்பான்னு தெரிய மாட்டேன்கிறது. அவங்க வீட்ல வேறு யாரும் பேசவே மாட்டாங்க நான் வேற அங்க போய் என்ன பண்றது.

இவனுக்கு இதெல்லாம் புரியாது. சொன்னா சண்டை வேற வரும். ஐய்யோ என்னை யாராவது காப்பாத்துங்களேன் என கத்த வேண்டும் போல் இருந்தது.    

ஒரு வழியாக அதிகாலை மூன்று மணிக்கு, உறங்க தொடங்கினாள் சாக்க்ஷி. ஒரு அரைமணி நேரம் சென்று அவளின் கைபேசி அலறியது. அலாரம் என நினைத்து, தூக்க கலக்கத்தில், அதனை நிறுத்த முயன்றாள். எனவே, போனை குத்து மதிப்பாக டச் செய்தாள். அது ப்ரகதீஷின் அழைப்பு, எனவே கால் கட்டாகியது.

திரும்பவும் அழைப்பு வர, ஒரு வழியாக காதில் வைத்தாள். கதீஷ் “சாக்க்ஷி, எழுந்திரு, கிளம்பி வா” என்றான்.

அவள் எதுவும் சொல்லவில்லை அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கம் போலும், திரும்பவும் கதீஷ் “சாக்க்ஷிம்மா” ம்கூம் அசைவில்லை அவளிடம்.

கதீஷ் “எரும, சாக்க்ஷி “ என கர்ண கொடூரமாக குரல் வர சற்று அசைந்தாள் அவள் “ம்…” என்றாள்

“எழுந்திரு, மணியாச்சு” என்றான் அதே கொடூரமான குரலில்.

“ப்ளீஸ் கதி இப்போதான் தூங்….” என்றாள் சத்தமே இல்லை. அந்த பக்கம் லேசான முக மலர்ச்சி கதீஷிடம். தூக்க கலக்கத்திலும் அவனின் குரல் மட்டும் அடையாளம் தெரிந்தது. சண்டையாவது, சமாதானமாவது, அவனிடம் எப்போதும் போல் உளறினாள்.

என்ன சொல்லகிறோம் எதற்கு சொல்கிறோம் என தெரியாமலே கதீஷும் “காலையில் சீக்கிரம் வாடி, என் சுந்தரி” என்றான் இருந்த டென்ஷன் எல்லாம் பறக்க, அமைதியான குரலில் இவன்.

அங்கு “ம்…” என்றாள் தூக்க கலக்கத்திலேயே. சிரித்தவாறே போனை வைத்துவிட்டான். அவனிற்கு தெரியும்தான் அவள் சுயநினைவில் இருந்தால், இந்நேரம் காளி அவதாரம் தான் என தெரியும். அதான், ஒரு ஆசைக்கு சொல்லிக் கொண்டான் அவ்வளவுதான்.

கதீஷ் எல்லாவற்றுக்கும் கட்டுப்பட்டவன். இதுவரை அவன் கேட்டு அடம்பிடிக்கும் படி ஒன்று இருந்ததேயில்லை எனலாம். அழகான உலகம் அவனுடையது.

அதில் திகட்ட திகட்ட உறவுகள், அதற்குண்டான வரைமுறைகள், கட்டுபாடுகள் என பழகியவன். அதை உடைக்க வேண்டும் என அவன் நினைத்ததேயில்லை. அப்படி ஒரு தேவை அவனிற்கு இருந்ததேயில்லை.

இப்போதுதான் முதல்முறை ஒரு எண்ணம், ம்கூம்…. பிடிவாதம், இதெல்லாம்.  இந்த சாக்க்ஷி என்ற தங்க கிண்ணம் அவன் கைகளில் இத்தனை நாள் கேட்பாறற்று இருந்தது. அதனை யாரோ சொந்தம் கொண்டாடவும்தான், அதன் அருமை கொஞ்சம் புரிகிறது அவனிற்கு.

எனவே அவனின் அதே பழைய உலகம் இப்போது கொஞ்சம் மெருகேறுகிறது. தொட்டதெல்லாம் ஒளிர்கிறது. அதன் வெளிப்பாடுதான் இப்போது அவனின் அழைப்பு.

அதே நல்ல மனநிலையில், ஜில் என்ற காலை காற்றும், நான் சொந்தம் கொண்டாட ஒருத்தி என்ற கர்வமும், முகத்தில் மின்ன அவன் குடும்பத்தாருடம் தனது இடம் நோக்கி சென்றான்.

பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இவர்கள் செல்லவும் சரியான நேரத்திற்கு பூஜை ஆரம்பமானது. கதீஷின் சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டதால் கூட்டம் சற்று குறைவாகத்தான் இருந்தது. ஒரு ஐம்பது நபர்கள்தான் இருப்பர்.

பூஜைகள் முடிவடைந்து. அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மணி ஏழாக இருந்தது. கதீஷ் வாசல் பார்ப்பதும் வந்தவர்களுடன் பேசுவதுமாக இருந்தான்.

அத்தை முறை உறவுகள் எல்லாம் “ஏண்டா, எப்போ உன் கல்யாணம், சட்டு புட்டுன்னு முடிச்சுரு ஜெகன்னா, பையன் இப்பெல்லாம் ரொம்ப சுறு சுறுப்பா இருக்கான், பார்த்துக்க” என கதீஷிடம் ஆரப்பித்த பேச்சு, அவனின் தந்தையிடம்  ஒரு பற்ற வைத்தலுடன் முடிந்தது. உறவுன்னா சும்மாவா.

எல்லோருக்கும் முகம் நிறைந்து இருந்தது. அவனின் அக்காக்கள் பாக்கியலக்ஷ்மி, ஜெயலக்ஷ்மி இருவருக்கும் தங்கள் தம்பி வளர்ந்து காலூன்றி நிற்பதில் அவ்வளவு பெருமை, அவர்கள் முகமே சொன்னது. அழகாக முகம் விகாசிக்க நின்றிருந்தனர்.

நேரம் ஆக ஆக கதீஷின் முகம் சோபையிழந்தது. ஏதோ என அமர்ந்திருந்தான். அவனின் தந்தை வந்து “எல்லோரையும் சாப்பிட போக சொல்லுடா” என அவனை வேலை ஏவ. எழுந்தான்.

அந்த நேரம் சரியாக, கார் அந்த கல்யாண மண்டபத்தின் வாசலில் வந்து நின்றது. அழகான தேன் நிற டஸ்டர் வண்டியது. அதிலிருந்து மாம்பழ நிறமும், நீல நிறமும் கலந்த ஹாப் அண்ட் ஹாப், கலம்காரி சாரியில் இறங்கினாள் சாக்க்ஷி.

அதே நீல நிற டெரகோட்ட ஹாரம், அதிலேயான ஜிமிக்கியுடன். தனது போனை மட்டும் கையிலெடுத்து இறங்கினாள் சாக்க்ஷி. அங்கிருந்த கதீஷிற்கு மூச்சடைத்தது.

அவன் தனது சின்ன மாமாவுடன் அமர்ந்து கொண்டிருந்தவன் எழுந்தான். அவளும் அவனை தாண்டிதான் சென்றாள். ஆனால், அவன் புறம் திரும்பவில்லை இவனின் “வா.. சா” என்ற அழைப்பு காற்றில் கலந்தது.

நேரே உள்ளே சென்றாள். அங்கிருந்த கதீஷின் அக்கா பிள்ளைகள் வந்து “அக்கா…” என்றனர். அங்கிருந்த ஜெகன் “வாம்மா” என்றார் வாஞ்சையாக, அன்று அவளை துக்க வீட்டில் பார்த்தது. இப்போது மூன்று மாதங்கள் ஆகிறது அவளை பார்த்து. எனவே, இயல்பான பக்கத்துவீட்டு உறவு வந்தது கண்ணில்.

வேறு பெண்கள் யாரும் வரவில்லை அவளருகில், ஜெகன் கண்ணால் பூங்கொடியை தேட, அவர் அங்கில்லை. எனவே தன் பேரன்களிடம் சொல்லி அழைத்து வர செய்தார்.

பூங்கொடி வந்து “வா வா சாக்க்ஷி, எப்படி இருக்க “ என்றார் அவரின் நீண்ட நாள் குற்ற உணர்ச்சி விலகுவதாக இருந்தது இவளை பார்த்ததும். எனவே நல்ல முறையிலேயே வரவேற்றார்.

கதீஷின் இளைய அக்கா, ஜெயா வந்து “வா டா, சாக்க்ஷி, நல்லாயிருக்கியா” என்றார்.

ஜெகன் “இங்க வா சாக்க்ஷி, இந்தா” என ரக்க்ஷை வைத்து விட்டார் அவளின் நெற்றியில். அவர் இதையெல்லாம் செய்வார் என யாரும் நினைக்கவில்லை. ஆனால், அந்த கள்ளமில்லா முகம் அவரை செய்ய வைத்ததோ. இன் முகமாகவே செய்தார்.

இதையெல்லாம் கூட்டத்தில் பேசியபடியே அமைதியாக பார்த்திருந்தான் கதீஷ். சாண்டல் கலர் பேண்ட், பிஸ்தா கிரீன் சைனீஸ் காலர் வைத்த ஷர்ட் அணிந்து, நெற்றியில் அவளுக்கு வைத்த அதே ரக்க்ஷையுடன் அவளையே பார்த்தவாறு தனது மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சாக்க்ஷி இப்போது கண்களால் யாரையோ தேடினாள், ஜெகன் “யாரம்மா தேடற, ப்ரகதீஷையா” என்றவர் அவரும் கண்களால் அவனை தேட சாக்க்ஷி “இல்ல மாமா, மணிண்ணா எங்க” என்றாள்.

“இதோ, இரு“ என்றவர் “மணி“ என குரல் கொடுக்க, வந்தார் கல்லூரியில் வேலை செய்யும் மணிண்ணா. அவரும் அவளை பார்த்து சிரிக்க சாக்க்ஷி தனது கார் கீய்யை அவரிடம் கொடுத்து “அண்ணா வண்டில, ஒரு பார்சல் இருக்கு எடுத்து வாங்கண்ணா” என்றாள்.

அவரும் எடுத்து வந்து கொடுக்க, அதை ஜெகனிடம் கொடுத்தவள் “பிரிங்க மாமா” என்றாள்.

அவரை ‘மாமா’ எனதான் சிறு வயது முதல்லே அழைப்பாள். பூங்கொடிதான் அம்மாவாகி போனார். எனவே, அவர்கள் கூட கிண்டல் செய்வதுண்டு ‘முறையை சரியாக சொல்லு சாக்க்ஷி’ என.

அதானல், இப்போதும் அதே பழக்கம் வந்தது அவளிடம். பூங்கொடியிடம் பேசவேயில்லை அவள். ஏனோ மனம் அவரை இப்போது தள்ளி வைத்தது. லேசாக சிரித்து வைத்தாள் அவரிடம் அவ்வளவே.

அவரும் பிரிக்க அழாகான வெங்கடாஜலபதி அலமேலுமங்கா படம் இரண்டடி உயரத்தில் அழகாக இருந்தது. ஜெகன் “நல்லாருக்கம்மா, எதுக்கு இதெல்லாம்” என்றார்.

அப்போதுதான் அவளின் கண்கள் அணிச்சை செயலாய் கதீஷை தேடியது. ஏன், எதற்கு என இதற்கு அர்த்தமெல்லாம் இல்லாமல் தேடியது. அந்த ஷணம் தன்னையே நொந்து கொண்டு, ஜெகனை பார்த்து புன்னைக்கைத்தாள்.

கதீஷால் இங்கு அமரவே முடியவில்லை. எழுந்து சென்றான், அவள் எப்படி என்னிடம் பேசாமல் போகிறாள் பார்க்கிறேன் என எழுந்து சென்றான்.

அருகில் செல்லவும் ஜெகன் “பாரடா உன் பிரிண்டு என்ன குடுத்திருக்கா பாரு” என்றார். அந்த போட்டோவை காட்டி. இதுதானோ மனித இயல்பு, இரட்டை வேடமா இல்லை இயல்பு நிலையா தெரியவில்லை கதீஷிற்கு. அமைதியாக “சூப்பர் பா” என்றான்.

சாக்க்ஷியின் முகம் தடுமாற்றத்தை காட்டியது. அங்கே நிற்க முடியாமல் நெளிந்தாள். இத்தனை நாள் இல்லாத தயக்க உணர்வு வந்தது.

ஜெகனை பார்த்து “நான் கிளம்பறேன் மாமா, வேலையிருக்கு” என நழுவ பார்க்க. கதீஷ் அதட்டலாய் சொன்னான் “வா சாப்பிட்டு போகலாம்” என்றான்.  இது அழைப்பா, மிரட்டலா என தெரியாமல் அவனுடன் நடந்தாள். கதீஷிற்கு தன் குடும்பத்தார் குறித்து மிகவும் யோசனை, இவளை அவர்களிடம் நடந்து கொண்டது மிகவும் குழப்பியது அவனை. எனவே முகம் தெளிவில்லாமல் இருந்தது.

அந்த பிரபலமான ஹோட்டலில்தான் உணவு எனவே, உறவுகள் அமர்ந்திருக்க இடம் இல்லை எனவே, வெளியே போட்டிருந்த சேரில் அமர வைத்தான். கூடவே தானும் அமர்ந்து கொண்டான்.

சாக்க்ஷி “நீ போய் வேலையை பாரு கதீஷ், நான் சாப்பிட்டுக்குவேன்” என்றாள். தன் எண்ணத்திலிருந்து கலைந்தவன் “மரியாதை கொடுடி, நீ இல்ல, நீங்க…, எங்க சொல்லு“ என்றான் விளையாட்டாய்.

சாக்க்ஷிக்கு முகமெல்லாம் குப் என வேர்த்தது. “நா… நான் எதுக்கு அப்படி சொல்லணும், முடியாது” என்றாள்.

கதீஷ் “முன்னாடி அதயெல்லாம் நான் எதிர்பார்க்க மாட்டேன், ஆனா இப்போ மரியாதை ரொம்ப முக்கியம், பார்த்துக்கோ” என்றான். அதே பழைய குரல்.

“இப்போ மட்டும் எதுக்கு புதுசா, பழசுதான் நல்லா இருக்கும், எதுவும் மாறாது, நான் இப்படிதான் கூப்பிடுவேன்” என்றாள் பிடிவாதமாக.

லேசாக சிரித்தவாறே “மாறலாம், நல்ல மாற்றம் தப்பில்ல” என்றான்.

சாக்க்ஷியும் விடாது “எனக்கு வேண்டாம்” என்றாள்.

அவளின் பிடிவாதம் இன்னும் இவனை தூண்டியது “உன்னை யாரும் கேட்கல, நான் எடுத்துக்கிறேன்” என்றவன் அவள் கையை பற்றிக் கொண்டான். வெடுக்கென இழுத்தாள், ம்கூம் அவளின் கை அவனிடமே இருந்தது.

அவ்வளவு அழுத்தமாக அமர்ந்திருந்தான் கதீஷ். ஏனென்றே தெரியாத அழுத்தம். அவளிடம் திரும்பவில்லை, இவளும் கையை இழுக்க இழுக்க இன்னும் பிடி இறுகியது.

சாக்க்ஷிக்கு இதயம் தட தடத்தது. அங்குமிங்கும் கண்கள் யாராவது பார்க்கிறார்களா என பார்த்தது. “விடு கதீஷ்” என்றாள் சற்று பயமாக.

அவனும் “விடுங்க சொல்லு” என்றான் எங்கோ வெறித்து பார்த்தது போல். அவன் நட்பு என்ற கட்டத்தையெல்லாம் எப்போதோ கடந்தவன் போல், ‘இது எனது’ என்று நினைப்பவன் போல் பிடியை வைத்திருந்தான்.

சாக்க்ஷிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை “விடுங்க கதீஷ் “ என்றாள் தன் இயலாமையால் வந்த குரல் அது.

உடனே விடுவித்தான், அவளின் கையை “சாரி டா, ஏன் தெரியல, உன்கிட்ட மட்டும் தான் கோவம் இ…இப்படி வருது. சாரி டா” என்றான், அவன் கண்ணில் அத்தனை வலி.

“இரு ஏதாவது காலி இடமிருக்கா பார்த்து வரேன்” என உள்ளே சென்றான்.

நண்பனாக இருந்தவரை இல்லாத உரிமை, நேசனாதும் வந்து ஒட்டிக் கொண்டது அவனிடம். எங்கோ தன்னை விட்டு அவள் தூர சென்று விடுவாளோ என இவன் இறுக்கி பிடிக்கிறான்.   

என்ன நினைப்பது என தெரியவில்லை சாக்க்ஷிக்கு. இது எங்கே சென்று முடியும் எனதான் தோன்றியது. அமைதியாக கீழே குனிந்து அமர்ந்திருந்தாள்.

இடம் பார்த்து வந்தவன் கூட்டி சென்று அமர வைத்தான். தானே, பார்த்து பார்த்து பரிமாறினான். ஏதும் சொல்லாமல் உண்டாள் சாக்க்ஷி.

பணியாளர்கள் எல்லாம் பக்கத்தில் நின்றே பார்த்திருந்தனர். யாரிது எனதான் பார்த்திருந்தனர். எதையும் கண்டுகொள்ளவில்லை அவன்.

அங்கிருந்த ஸ்வீட் கடையிலிருந்து ஒரு கிண்ணத்தில் இரண்டு ரசகுல்லா எடுத்து வந்தான்.

அதனை பார்த்து நிமிர்ந்தாள் சாக்க்ஷி “ம்ம், சாப்பிடு சாப்பிடு, பாஸ்ட் “ என்றான்.

“போடா” என்றாள் அனைத்தையும் மறந்து தோழியாக கண்ணில் நீருடன் சிரிப்புதான் வந்தது அவளிற்கு.

அங்கிருந்தவர்களை அனுப்பினான் “போங்க வேலைய பாருங்க“ என சொல்லி.

இப்போது கதீஷ் அவளிடம் “போங்க சொல்லுடி” என்றான் சிரித்தவாறே.

“போடா, போய் வேலைய பாரு” என்றாள்.

“தேங்க்ஸ் டி “ என்றான்.

“போ போ வேலைய பாரு” என கிட்ட தட்ட துரத்தினாள் அவனை. இதெல்லாம் அங்கிருந்த கிட்சென் அறையிலிருந்து, அவனின் மாமா ரங்கராஜன் பார்த்திருந்தார்.

என்னடா நடக்கிதிங்க என அவர் பார்த்திருக்க, சாக்க்ஷி உண்டு முடித்து கிளம்பியிருந்தாள். அனைவரிடமும் சொல்லிக் கொண்டு ஈரோடு நோக்கி சென்றாள்.

 

 

     

 

 

 

  

     

            

 

Advertisement