Advertisement

மிட்டாய் புயலே-11

சாக்க்ஷி தினமும் மில்லிற்கு சென்றாள். கல்லூரி என்பதை அவள் கணக்கில் கொள்ளவேயில்லை. மில்லின் செய்யபாடுகள் அவளிற்கு இந்த ஒரு வாரத்தில் இப்போதுதான் புரிய தொடங்கி இருந்தன.

தினபடி வேலைகள் எந்த தடையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தாலும், நீண்ட நாட்களுக்கான நெல் கொள்முதல் வேலைகள் இன்னும் தொடங்காமேலே இருந்தது.

சுந்தரராஜன் இருந்த போதே பிரச்சைகள் வந்து போயின , எனவே அங்கே வேலைய செய்யும் செந்தில்நாதன்தான் மேனேஜர், இது பற்றி வரதராஜனிடம் சொல்லியிருந்தார்தான்.

ஆனால், இப்போது அவர் கண்ணோட்டத்தில் சிறுபிள்ளையான சாக்க்ஷி மில்லிற்கு வந்து செல்லவும் எப்படி சொல்லுவது என தெரியாமல் அமைதியாக இருந்தார்.

இந்த சீசனில் நெல் கொள்முதல் நடந்தால்தான், அதை வைத்து வருடம் முழுவதும் மில்லில் வேலை நடைபெறும். எனவே அதற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன.

இந்த பத்து நாட்களில் மில்லின் நடைமுறை தெளிவு பட, இப்போது செந்திலிடம் கேட்டாள் “எவ்வளவு ஸ்டாக் இருக்கு அங்கிள்” என்றாள்.

செந்தில் ஒன்றும் சொல்லாமல் குடோனிற்கு அழைத்து சென்றார். தனது டைரி எடுத்து எல்லா விவரமும் மெதுவான குரலில் சொல்லிக் கொண்டே வந்தார். அவளின் சின்ன சின்ன சந்தேகங்களுக்கும் பதில் சொன்னார்.

சாக்க்ஷி “எப்போது போகணும் ஏலத்திற்கு” என்றாள். செந்தில் இப்போது தயங்கியவாறே “உங்க சித்தப்பாவா கூப்பிடுவோம்மா பாப்பா, இல்ல சாக்க்ஷி…” என்றார் தயங்கியவாறே.

சாக்க்ஷி “பரவால்ல அங்கிள் உங்களுக்கு எது வசதியோ அப்படி கூப்பிடுங்க” என்றாள் சிரித்தவாறே.

செந்தில் “யாரேனும் பெரியவர்கள் இருந்தால்தான் நல்லது. இல்லேன்னா, முன் பின்ன விலை, தரம் கூட சரியா கிடைக்காது” என்றார் தயங்கிய குரலில்.

தொடந்து அவரே “நெல் ரகமும், தரமும் கூட நான் பார்த்துடுவேன்ம்மா, ஆனா விலை நாம கேட்டு ஏதாவது தப்பா போச்சுன்னா நஷ்ட்டம்மா போய்டும் பாப்பா” என்றார்.

என்ன செய்வது என்றே தெரியவில்லை சாக்க்ஷிக்கு. அங்கிருந்த நெல் மூட்டையின் மீதே அமர்ந்து கொண்டாள், அந்த வாசம் வேறு அவளுக்கு தும்மல் வந்து கொண்டிருந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தாள்.

என்ன செய்யலாம், ‘தன் சித்தப்பாவை அழைப்பது பெரிதல்ல ஆனால் அவர் வர மாட்டான் என சொல்லிவிட்டால்’ என இப்போது அவள் மனம் எண்ணியது.

‘இதற்குதான் அப்போதே சொன்னேன் என்பார்’, எப்படி கேட்பது அவரிடம் என யோசனையாக அமர்ந்திருந்தாள். தும்மல் விட்டபாடில்லை அவளை.

செந்தில் தான் “அப்புறம் வரலாம் பாப்பா, வெளியே வாங்க“ என அழைத்து சென்றார். இப்படி கொள்முதல் செய்வதற்கு நாற்பது நாட்கள் இருந்த நிலையில் சாக்க்ஷி சற்று கவலை கொண்டாள்.

என்ன செய்வது என தெரியவில்லை எப்படி ஏலம் எடுப்பார் என இதுவரை அவள் பார்த்ததில்லை. எனவே, கதீஷிடம் கேட்கலாம் என ஒருமனம் சொல்லியது. ஒரு பக்கம் அவனை தேடவும் செய்தது.

சிறு வயதில் அவளின் எல்லா கேள்விக்கும் அவனிடம் பதில் இருக்கும் “ஏன் வெயில் சுடுது, ஏன் எறும்பு வரிசையா போகுது என்பதிலிருந்து, அந்த காக்கா எங்க போகுது’ என அர்த்தமே இல்லாத கேள்விகளுக்கும் விடை தந்தவன் தானே அவன்

எனவே, இந்த தொழில் முறை கேள்விக்கும் அவன் பதில் சொல்வான் என தோன்றியது. ஆனால், இப்போது மூளை அவனை நம்ப மறுத்தது. மனம் அவனை மட்டுமே நம்ப.. சாக்க்ஷிதான் தடுமாறி நின்றாள்.

தினமும் இரவு ஜகு வருவதும், காலைவரை இவர்களுக்கு துணை இருப்பதும் தொடர்ந்தது. இப்போது சாக்க்ஷியின் முக்கிய நிமிடங்களாக ஜகுவினுடன் இருக்கும் நிமிடம் குறித்துக் கொள்ளப்பட்டது.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. கதீஷிற்கு சாக்க்ஷி கல்லூரி செல்லாதது, மில்லை கவனிப்பது இது எதுவும் தெரியாது. மேலும் அவனிற்கு, அவனின் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நெருங்கிக் கொண்டிருந்தது, எனவே அவன் அதில் பிஸி.

கதிஷுனுடையது ஒரு மல்டி பர்பஸ் ப்ளேஸ், பெட்ரோல் பங்க், ஹோட்டல், ஒரு கல்யாண மண்டபம், கூடவே மூன்று கடைகள் என கொண்ட ஒரு பெரிய ஸ்பேஸ்.  

அந்த வகையில் அவனின் திறப்பு விழா அழைப்பானது மிகவும் பிரமாண்டமாக இருந்தது. கிட்ட தட்ட ஒரு வருடமாக வேலைகள் நடந்து முடிந்திருக்க இன்னும் ஒரு வாரத்தில் திறப்பு விழா.. அதனால் கதீஷிற்கு நிற்க நேரமில்லை என்ற நிலை.

அதில் அவனுக்கு சாக்க்ஷியை பற்றி தெரிந்து கொள்ள நேரமிருக்கவில்லை. இத்தனை நாட்கள் வரை அவன் ஒருவனே அலைந்து கொண்டிருந்தான்.

இப்போதுதான், ஜெகன்நாதனுக்கும், தன் மகனின் நிலையுணர்ந்து அவனுடம் பத்திரிகை வைக்க, அழைக்க என கலந்து கொண்டார். அவன் கேளாமலேயே.

கதீஷும் ஒன்றும் சொல்லவில்லை. அவரிடம் கலந்து, யார் யார்க்கு சிறப்பு அழைப்பு என பட்டியல் இட்டுக் கொண்டிருந்தான்.

கதீஷ் இன்று “அப்பா, நீங்க ஈரோடு கிளம்பிடுங்க, நான் இங்க நால்ரோடு போய்ட்டு நேரா பங்க்குக்கு போறேன்.“ என்றவன்..

அவனே தொடர்ந்து “கோவில்ல போய் அந்த அய்யிருக்கிட்ட பூஜ சாமான் லிஸ்ட் வாங்கணும், போன் பண்ணி சொல்லிடுங்கப்பா, சாயங்காலம் வரேன்னு” என்றான்.

ஜெகன் “ஏண்டா, நம்ம மாப்பிள்ளை ஆபிஸ் அங்கதானே இருக்கு மதியம் சாப்பிட வரும்போது வாங்கி வர சொல்றேன்” என போனை கையில் எடுத்தவாறே சொல்ல

அவரையே பார்த்திருந்தான் கதீஷ் “இல்ல நானே “ என்று ஏதோ சொல்ல வர.

ஜெகன் “என்னடா இப்போ, சொந்தம் பந்தம் எதுக்கு, இப்படி எல்லாரும் கூடி செய்தால்தான் சிறப்பு, சும்மா எல்லாரையும் ஒதுக்கிட்டு, தனியா வாழ்ந்து என்ன செய்ய போற” என்றார்.

அவரை தன்னால் முடிந்த மட்டும் ஒரு முறைப்பு முறைத்தான். அதில் ‘நீங்க அப்படி என்னை நினைக்கவில்லையே’ என இருந்ததோ. அதை, தந்தையாக உணர்ந்து, சுதாரித்தவர். “வா சாப்பிட்டு கிளம்பு“ என தணிந்தார்.

ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அவருடன் நடந்தான். உணவு உண்டு கொண்டே போன் பேசியபடி இருந்தான். இப்போதுதான் பூங்கொடிக்கு சற்று நிம்மதி. ஏதோ சகஜமாக பேசி உண்கிறானே என நினைத்திருந்தார்.  

வீடு சற்று இயல்பு நிலை கொண்டது. முன்போல் கலகலப்பு இல்லை என்றாலும், ஒதுக்கம் போய் எல்லோரும் பேசி பழகினர். அக்காக்கள் வந்து போயினர்.

எனவே, வீட்டில் ‘அவன் சாக்க்ஷியை மறந்து விட்டிருப்பான்’ என்ற எண்ணம் வந்தது. பூங்கொடிதான் ‘இந்த திறப்பு விழ முடியட்டும், திருமணம் பற்றி அவனிடம் பேச வேண்டும்’ என எண்ணிக் கொண்டார்.

பாவம் கதீஷின், இந்த அமைதிக்கு பின்னால் பெரிய சுனாமியே இருக்கிறதென யார் சொல்லுவது அவர்களிடம்.

கதீஷிற்கு சாக்க்ஷியின் திருமணம் நின்ற செய்தி அவள் வீட்டினர் மூலமாக தெரிந்திருந்தது. எனவே இப்போது அவனிற்கு புது தெம்பு வந்தது. ‘எப்படியும் அவள் எனக்குதான்’ என தோன்றியது. அது கொடுத்த உத்வேகமே இப்போது அவனின் நிலை.

ஏதோ சக்தி வந்ததாக உணர்ந்தான். சுறு சுறுப்பாக வேலைகள் நடந்தன. மனம் புத்துணர்ச்சியுடன் இருந்தது. எப்போதும் மலர்ச்சியாக இருந்தான். ஆனால், அவளை பார்க்கவோ பேசவோ விழையவில்லை. முக்கியமாக நேரம் இருக்கவில்லை அதுதான் உண்மை.

இப்படியே அந்த வாரம் நகர, நாளை திறப்பு விழா என்ற நிலையில். இன்று மாலை ஏழு மணிக்கு சாக்க்ஷியின் வீட்டிற்கு வந்தான் கதீஷ்.

முன்னாடியே வந்து அழைத்து சென்றால், ஏதேனும் காரணம் சொல்லி தப்பித்துக்கொள்வாள், வரமாட்டாள். எனவே பிடி பிடியென முதல்நாள் சென்று அழைத்தால், அவளை வரவைத்து விடலாம் என்ற எண்ணத்தில்தான், இன்று வந்திருக்கிறான்.

உள்ளே வரும் போதே “ஆன்ட்டி” என்றான்.

மேகலைதான் “வாப்பா ப்ரகதீஷ், எப்படி இருக்க, முன்னெல்லாம் தினமும் வருவ, இப்போல்லாம் ஆளையே காணம்” என்றார் வாஞ்சையாக.

கதீஷ் “கொஞ்சம் வேலை ஆன்ட்டி, எங்க சாக்க்ஷி” என்றான்.

“இதோ வந்துடுவா, இன்னைக்கு ஏதோ, மிஷின் டிடைல்ஸ் சொல்ல வராங்களாம், ஏதோ மீடிங்காம், இப்போ வந்துடுவாப்பா” என்றார்.

அவள் இந்த நேரத்தில் எங்கே சென்றுவிடுவாள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என நினைத்து வந்தான்.

கதீஷிற்கு குண்டூசி குத்திய வலி ஏனென்றே தெரியவில்லை. அவளை பற்றி ஒன்றுமே தெரியவில்லையா எனக்கு, நான் யாருமே இல்லையா அவள் வாழ்வில் என தோன்றிய தருணமிது.

கண்களுக்கு பதில் நெற்றி வேர்த்தது. உடலெல்லாம் உப்புசம் பூசியது போல் ஒரு உணர்வு. அவனால் அமர முடியவில்லை. பல கேள்விகள் அவன் மனதில்.

“என்னாச்சு ஆன்ட்டி” என்றான் இறுக்கமான குரலில்.

“ஒன்னுமில்லையே, மில்லுக்கு போயிருக்கா வந்திடுவாப்பா. உனக்கு தெரியாதா” என்றார்.

தொடர்ந்து அவரே “நீ வருவது அவளிற்கு தெரியாதா” என்றார்.

கதீஷ் “இல்ல ஆன்ட்டி தெரியாது. நான் பேசி ஒரு மாதம் இருக்கும்” என்றான் உள்ளே சென்ற குரலில்.

மேகலை ஆச்சிரியமாக பார்த்தார் அவனை “என்னப்பா, ஏதாவது சண்டையா, என் கிட்ட சொல்லவேயில்ல அவ” என்றார். சொல்லும் போது அவர் முகம் இயல்பாய் இருந்ததது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் “என்னாச்சு ஆன்ட்டி “ என்றான் இறுக்கிய குரலில்.

மேகலை அவளுக்கும், அவளின் சித்தப்பாவிற்கும் நடந்த வாக்குவாதம் அதை தொடர்ந்து நடந்தவைகள் என அனைத்தும் சொன்னார். அதனால் கல்லூரி செல்வதில்லை என்றார். இவள்தான் மில் பார்த்துக் கொள்கிறாள் என்றார்.

அமைதியாகவே அனைத்தையும் கேட்டுக் கொண்டான் கதீஷ். ஏதும் பேசவில்லை “இருப்பா, டீ கொண்டு வரேன்” என மேகலை உள்ளே செல்ல.

ஐயோ என்றானது அவனிற்கு. டைலர் கடைக்கு செல்வதற்கு கூட வழி, நான் சொல் வேண்டும். ஆனால் இப்போது மில்லை பார்க்குமளவு வளர்ந்து விட்டாளா என தோன்றியது. என்னிடம் சொல்ல தோன்றவில்லையே அவளிற்கு என்ற எண்ணம் வந்தது.

ஆனால், பொறாமை வரவில்லை. ஆசிரியர்கு தன் மாணவன் எங்கோ, எந்த தேர்விலோ வென்றிருப்பான், அதை யாரோ சொல்ல கேட்டாலும் ‘என் மாணவன்’ என வருமே ஒரு பெருமிதம். அதை போல் உணர்ந்தான் அவளின் கதீஷ்.   

போனை எடுத்து சாக்க்ஷிக்கு அழைத்தான். முழு ரிங் போய் கட்டானது எடுக்கவில்லை ‘திமிர், உடம்பு முழுக்க திமிர்’ என முனு முனுத்தவன் மீண்டும் டையல் செய்ய இம்முறை எடுக்கப்பட்டது “என்ன….” என்ற மெல்லிய குரலும் கேட்டது.

“எங்கருக்க” என்றான்.

“வீட்டுக்கு போறேன், ட்ரைவிங்கல இருக்கேன்” என்றாள்.

“சீக்கிரம் வா, நானும் இங்கதான் இருக்கேன்” என்றான். வார்த்தைகளில் அத்தனை அழுத்தம்.

பத்து நிமிடத்திற்குள்ளாக வந்துவிட்டாள் சாக்க்ஷி, கதீஷை ‘வாவென’ கூட அழைக்காது, தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

தெரியும் இவளிற்கு, அவனின் பங்க் ஒபனின் விழா இருக்கிறது என தெரியும். எங்கே வீட்டினரின் சொல் கேட்டு தன்னை அழைக்க வில்லையோ என மனம் அடித்துக் கொண்டது அவளிற்கு.   

இவனும் ஹாலில், பத்து நிமிடத்திற்கு மேல் பொறுமையாக அமர்ந்திருந்தான். அவள் வெளியே வரும் வழியை காணும். எனவே, ஹாலில் இருந்து கத்தினான் “சாக்க்ஷி, மாரியாத்தா வா வெளிய” என்றான்.

கேட்டிருந்த சாக்க்ஷிக்கு தொண்டையை அடைத்தது. இந்த ஷனத்தில் கதீஷ் அவளுள் இறங்க தொடங்கினான். இப்படிதானே என்னை எப்போதும் ஒரு அரசியாக உணர வைப்பான்.

நானில்லாமல் அவனிற்கு எதுவுமே நடக்காது என சொல்லுவது போல் வந்து விட்டான் பார் என்னை அழைக்க என பெருமிதமாகவே உணர்ந்தாள் சாக்க்ஷி. ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் மெதுவாக, அனைத்தையும் விழுங்கிக் கொண்டு முகம் கழுவி வெளியே சென்றாள்.

மேகலை அனைத்தையும் சிரிப்புடன் பார்த்திருந்தார். வந்தவளை ஒரு பார்வை பார்த்தவன் “ஆன்ட்டி இங்க வாங்க “ என்றவன். அழைப்பிதழ் ஒன்றை நீட்டினான்.

“நாளைக்கு காலையில் நாலு மணியிலிருந்து ஆரு மணிக்குள் ஹோமம், அதன்  பிறகு அப்பாவே திறந்து வைக்கிறார், கண்டிப்பா வரணும், ஈவ்னிங் ‘சுகி சிவம்’ வரார் மண்டபத்துக்கு, அப்போதுதான் அனைவருக்கும் அழைப்பு, நீ காலையில் வந்திடனும்” என்றான் போர்மலாக ஆரம்பித்த அவனின் குரல் போக போக கட்டளையில் முடிந்ததோ.

மேகலை கள்ளமில்லாமல் “ரொம்ப சந்தோஷம்ப்பா, அங்கிள் இருந்திருந்தா, கண்டிப்பா சந்தோஷப் பட்டிருப்பார்” என்றவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

தானே சுதாரித்து “சாக்க்ஷி வருவாப்பா” என்றார்.

சாக்க்ஷிக்கு அப்படி ஒரு ஆனந்தம். அவனின் கனவு நடந்தே விட்டதா என பார்த்திருந்தாள். தோழியாக மனம் குதுகலம் கொண்டது. “கங்க்ராட்ஸ்” என்றாள் தன்னையாரியாமல்.

இப்போது அவனின் கோபங்கள் எல்லாம் விலகி நிற்க “ம்…கேட்கல “ என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து.

அதில் ஒரு கணம் அவள் கண்களும் கலக்க, சுதாரித்தாள், சாக்க்ஷி “அம்மா சாப்பிட என்ன கொடுத்த” என்றாள் தன் அன்னையிடம்.

கதீஷ் “இருங்க ஆன்ட்டி” என்றவன் சாக்க்ஷியை பார்த்து “நாளைக்கு எத்தனை மணிக்கு வர, எல்லோரும் சேர்ந்தே போய்டலாம்” என்றான் பார்வையை விளக்காது.

ஒரு வருடத்திற்கு முன்பு ‘பாலகால் போடும் போது அப்படிதான் அவனின் வீட்டு ஆட்களுடன் சென்றாள்.’ அதே போல் இன்றும் கேட்டான், அவளின் அன்னையின் எதிரிலேயே.

சாக்க்ஷி “இல்ல, நாளைக்கு நான் சீக்கிரமா ஈரோடு வரைக்கும் போகணும், அதை முடிச்சிட்டு, ஈவ்னிங் வரேன்” என்றாள்.

“காலையில் ஐஞ்சு மணிக்கு வரணும், இல்ல நான் இங்க வந்திடுவேன், புரியுதா, ‘உன் ப்ரிண்ட் நான்’ அப்படின்னு நினைச்சா வா“ என்றவன் கண்ணில் கடுப்பை காட்டி அவளையே முறைத்தபடி பார்த்து, சொல்லிவிட்டு கிளம்பினான்.      

சாக்க்ஷி ‘போடா’ என உள்ளுக்குள் முனு முனுத்தாள். ‘அய்யோ’ அங்க அவங்க வீடு ஆட்கள் எல்லாம் இருப்பாங்களே என பயம் வந்தது. அதிசையமாக. போகலாமா, வேண்டாமா என்ற யோசனை வேறு வந்தது அவளிடம்.   

 

     

  

  

 

      

 

   

Advertisement