Advertisement

மிட்டாய் புயலே-10

கதீஷ் கிடு கிடுவென வீடு வந்தவன்தான். தன் வீட்டு மனிதர்களிடம் கேள்வி கூட கேட்க பிடிக்காதவனாக, தன் இமயனை தேடி சென்றுவிட்டான்.

அவனிற்கு வீட்டிற்கு வந்த பிறகுதான் அவள் கொடுத்த அறையின் நினைவே வந்தது. அப்போது மட்டுமே இருந்த வலி, இப்போது இனிக்கத்தான் செய்ததது.    

நண்பனாய் அவனிற்கு தெரியும்தானே அவளின் கொள்கைகள், அதில் காதல் என்பது இல்லவே இல்லை எனவே இந்த ‘அறை’ என்பது சர்வ சாதாரனமாகத்தான் தெரிந்தது கதீஷிற்கு.

இப்போதும் அந்த இமயனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் “பாருடா, எப்படி அடிக்கிறான்னு, கடங்காரி, மனசாட்சியே இல்லடா அவளுக்கு” என்றான் அவனை கையில் வைத்த படி,. அதற்கு என்ன புரிந்ததோ, அது அவனின் விரலை லேசாக கடித்தது.

அதில் இன்னும் அதிகமாக அதனிடம் புலம்பினான் “எல்லாம் தெரியுதுடா, நான் ஏதாவது சொல்லி அவ, என் பக்கம் சாஞ்ச்சிடுவாலோன்னு, சொல்லாதேன்றாடா, எதுவும் கேட்கமாட்டாளாம்” என்றவனுக்கு இப்போது கோவம் வந்தது

முகம் கடு கடுப்பை காட்டியது “என்னை பாக்க மாட்டாளாம், கண்ணை மூடிக்கிறாடா, நான் த்ரோகியாமாடா அவளுக்கு“ என்றான்.. இப்போது கண் லேசாக நீ திரையிட, ஓய்ந்த தோற்றமாக, அந்த இடம் ‘ஷெட்’ என்ற நினைவு கூட இல்லாமல் அந்த மண் தரையில் அமர்ந்தான். அந்த இமயன் தனது சிறு குரலில் கர் கர் என்றது…

‘இமயன்’ அவர்களின், அதாவது சாக்க்ஷி, கதிஷீன் மிக சிறிய வளர்ப்பு தோழன். ஆம் எட்டு சென்டிமீட்டர் நீளமே வளர்ந்தவன். சத்தமே செய்யாதவன், உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே அவன் இருக்குமிடம் தெரியும். அப்படியொருவன்.

கதீஷ் ஒரு முறை பள்ளி சுற்றுலா சென்ற போது தனது, வாட்டர் பாட்டிலில் போட்டு ஊருக்கு எடுத்து வந்தவன். பன்னிரண்டு வருடங்களாக நான்கு சென்டிமீட்டர் மட்டுமே வளர்ந்திருப்பவன் இமயன் அவன் ஆமை.

கொண்டு வந்த போது பூங்கொடி வீட்டிற்குள் விடமாட்டேன் என்று கண்டிப்புடன் சொல்லியதால், ஜாகுவார், வீராசாமி இருக்குமிடத்தில் தனியாக ஒரு கண்ணாடி பாட்டிலில் மூடியில் துளையிட்டு வளர்த்து வந்தனர் இருவரும்.

எனவே, இருவரின் மிகவும் செல்லமான தோழன் அவன். அவனிடம்தான் இந்த புலம்பல் அனைத்தும்.       

அவனிற்கு, தன் வீட்டாரிடம் விளக்கங்கள் சொல்ல பிடிக்கவில்லை. எந்த கேள்வியாக இருந்தாலும் தன்னைத்தானே அவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருந்த நிலையில்.

அவள், மனம் வாடி நிற்க, தானே காரணம் என்ற எண்ணம் எழ, யாரையும் அவன் கேள்வி கேட்க முயலவில்லை அமைதியாக இருந்தான்.

கதீஷின் அன்னை பூங்கொடிக்கு, இந்த பதினைந்து நாட்களும் திகிலாகவே இருந்தார். எந்த நேரத்தில் கதீஷ் வந்து தன்னை கேள்வி கேட்பானோ என அவருள் ஒரு பயம் வந்தது தான். ஆனால் இது வரை அப்படி நடக்கவில்லை எனவும் ஏற்கனவே இருந்த குற்ற உணர்ச்சி அதிகமாகியது அவற்கு.

இப்படியாக நாட்கள் கரைந்தன.    

கதீஷை பார்த்து இன்றோடு ஒரு மாதமாகிறது. சாக்க்ஷிக்கு, மனது கேட்கவில்லைதான் இப்படி இருப்பதற்கு. ஆனால், இதை தவிரவும் வேறு வழி இருக்கவில்லை.

இத்தனை நாட்களில் எந்த வித தனிமை உணர்வும் அவளை தாக்காமல் எப்போதும் உடனிருக்கும் கதீஷை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

ஆனால் நட்பு எண்ணும் வட்டத்தை தாண்டவே முடியவில்லை. தாமாக சென்று பேசினால், எங்கேனும் வேறு அர்த்தம் வந்துவிடுமோ என பயம் அவளுக்கு. எனவே, தாங்க முடியாத அமைதியை, பல்லை கடித்துக் கொண்டு பொருத்திருந்தால் சாக்க்ஷி.    

அவளை சுற்றி எங்கும் தனிமையை உணர தொடங்கினாள். எப்போதும் இறுக்கமாகவே இருந்தாள். இப்போதுதான் கல்லூரி செல்ல தொடங்கி ஒரு வாரம் ஆகிறது.

அன்று வெள்ளி கிழமை. அவளின் சித்தப்பா வந்து கணக்கு பார்க்கும் நாள். ஆம் காங்கேயத்திலிருந்து அவளின் சித்தப்பா வாரத்தில் ஒருநாள் வந்து மில்லை கவனித்து கொள்வது. மற்ற நேரங்களில் அங்கிருக்கும் மேனேஜர் போன்ற (ராஜனிற்கு) அப்பாவிற்கு நம்பிக்கையான மனிதர்தான் பார்த்துக் கொள்வார்.

இன்று அவளின் சித்தப்பா வந்தார். நேரே மில்லிற்கு சென்று வந்தார் போலும், மாலையாகியிருந்தது அவர் வீட்டிற்கு வரும்போது. வந்தவுடன் மேகலைதான் “வாங்க தம்பி“ என்றார்.

அப்போதுதான் கல்லூரி முடித்து சாக்க்ஷி வந்தாள். வந்தவள் சித்தப்பா ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்து “வாங்க சித்தப்பா” என்றவள் உள்ளே, தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

அவளுக்கும், இவர்க்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான்.. அந்த மாப்பிள்ளை விஷயம் தட்டி சென்றதிலிருந்து இன்னும், ஆகாமல் போனது. எனவே அவள் அவரை கடந்து சென்றுவிட்டாள்.

மேகலை காப்பியுடன் சிற்றுண்டி எடுத்து வந்தார், சில பல பேச்சுகளுக்கு பிறகு மெதுவாக கேட்டார் “ஏன் அண்ணி, மில்லு முன்ன மாதிரி வரவு செலவு சரியா இல்லை.. வித்துடலாமா” என்றார்.

இப்போதுதான் இவர் ஒரு மாதமாக வருகிறார், அதற்குள் ஏன் இந்த கேள்வி என புரியாதவராக மேகலை கையை பிசைந்து கொண்டு நின்றார். என்ன சொல்லுவது என தெரியவில்லை அவற்கு. ‘தன் கணவர் இருந்தவரை நன்றாக தானே  சென்றது’ என யோசனை அவற்கு.

மேகலை “ஏன் தம்பி” என்றார் தயங்கியவாறே..

“இல்ல அண்ணி, வேலைக்கு ஆளுங்க கிடைக்கறதில்லை, கூலி அதிகம் கேட்கறாங்க, வேலையும் சரியா செய்யதில்லை. அண்ணன் எப்படிதான் சாமாளிச்சாரோ” என்றார்..

தொடர்ந்து அவரே “இப்போ ஒருத்தர் நல்ல விலைக்கு கேட்கறாரு. நம்ம மில்லுக்கு இது நல்ல விலைதான், பொண்ணுங்க தானே அண்ணி, வித்து பணத்தை பாங்கில் போட்டால், ஏதாவது நல்லது கேட்டதுக்கு எடுத்தா போதும், குத்தகை வருமானம் வேற வருமே, இது மட்டும்தான்னு இல்லையே. மேலும் எனக்கும் வந்து, போகற வேலை மிச்சம்” என்றார்.

ஏனோ மேகலைக்கு மனதேயில்லை, அமைதியாக இருந்தார். இந்த பேச்சு வார்த்தையெல்லாம் சாக்க்ஷியின் காதில் கேட்கத்தான் செய்தது. தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் அவள்.

அப்போது அணிந்திருந்த அதே சுடிதாரில்தான் இருந்தாள், ஆனால், இப்போது முகம் கழுவி பளிச்சென வெளியே வந்தாள். அவளின் முகம் ஒரு தெளிவை காட்டியது.. வந்தவள் தன் சித்தப்பாவின் எதிரே அமர்ந்தாள்.

அவரை பார்த்துக் கொண்டே “அம்மா, மில்ல விக்கவெல்லாம் வேண்டாம், நான் பார்த்துக்கிறேன்.” என்றவள் அவர் பக்கம் திரும்பி “நீங்க எப்போதும் போல, வாரத்தில் ஒரு நாள் வந்துட்டு போங்க சித்தப்பா, நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

வரதராஜன் “அது எப்படிம்மா,  படிக்கற புள்ள நீ போய் என்ன பண்ண போற அங்க” என்றார் தன்மையாகவே..

சாக்க்ஷி “இப்போதிக்கு அத விக்க வேண்டாம் சித்தப்பா, இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு ப்பஸ்ட் இயர் சமஸ்டர் முடிய. அதுக்கப்புறம் டிஸ்கண்டினியு பண்ணிட்டு புல் டைம் நான் மில்லுக்கு போறேன், அப்பவோடது அது, அத என்னால விட முடியாது சித்தப்பா” என்றாள் இவளும் பிடிவாதமாக.

எப்போதும் போல், இவளின் பிடிவாதம் அவளின் சித்தப்பாவை உசிப்பிவிட “இன்னும் நாலு ஐஞ்சு மாசம் கழிச்சு மாப்பிள்ளை பார்க்கணும், கல்யாணம் பண்ணனும், அப்போ வந்து சேல்ஸ் பண்ணுங்கன்னு சொல்ல போறீங்க, அத இப்பவே செய்தாதான் என்ன” என்றார். தன் பேச்சை கேட்கவில்லையே இவர்கள் என்ற ஆதங்கம்தான் அவர்க்கு அது கோவமாக வெளிவந்தது..

சாக்க்ஷிக்கு அவருக்கு புரியவைக்கவோ, வாதடவோ விருப்பமில்லை எனவே “சித்தப்பா, ப்ளீஸ் நான் இருக்கும் வரை நான் பார்க்கிறேன். மற்றது அப்புறம் பார்க்கலாம்” என்றாள் சலிப்பில் தொடங்கிய அவளது குரல் முடிக்கும் போது கறாராக வந்தது.

வரதராஜனுக்கு கோவம் வந்தது, சிறு பிள்ளையிடம் போட்டி போடுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் “பார்க்கிறேன், எப்படி செய்கிறேன்னு பார்க்கிறேன்” என்றார் கோவமாக.

மேகலைதான் “சாக்க்ஷி என்னடா” என்றார்.

சாக்க்ஷி பேசவேயில்லை அமைதியானாள். இதென்ன பேச்சு என்பதாகத்தான் தோன்றியது அவளிற்கு எனவே அமைதியானாள்.

மேகலை வரதராஜனிடம் “விடுங்க தம்பி, அவகிட்ட போய், சின்ன பிள்ளை தம்பி அவ, நீங்க சொல்றபடி செய்யலாம் தம்பி“ என அவரை சமாதானபடுத்தினார். இரண்டு பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் நிலையில், தன் சொந்தங்களை பகைத்துக் கொள்ள அவர் தயாராகயில்லைதான்.  

ஆனால் சாக்க்ஷி “அம்மா, அதெல்லாம் முடியாது.. நாளையிலிருந்து நான் போவேன்” என்றவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

சாக்க்ஷிக்கு ‘எப்படி செய்வ, எப்படி ‘ எனும் போதுதான் வேகம் வந்தது. எனவே, ‘பார்க்கலாமே’ என்ற எண்ணம் வந்தது அவளுள். மற்ற படி அவளிற்கு, தன் சித்தப்பா உடனிருக்க வேண்டும் எனதான் விருப்பம். ஆனால் அவர்தான் போட்டி போட்டுக் கொண்டு அவளிடம் முறைத்துக் கொண்டிருந்தார்.

எனவே மதிப்பில்லாத இடத்தில் இருக்க பிடிக்காதவராக எழுந்துவிட்டார் வராதராஜன். மேகலை தடுக்க தடுக்க கேட்காமல் கிளம்பியும் விட்டார்.

மேகலை வந்து சாக்க்ஷியை பிடித்துக் கொண்டார் “ஏண்டி இப்படி, எல்லோரையும் பகைச்சுக்கிற, நீ படிப்ப பாரேன் டி, நாங்க என்னமோ செய்கிறோம், இதில் நீ ஏன் வர” என்றார் கோவமாக.

கண்ணில் நீருடன் பேசிய மேகலையை கட்டிக் கொண்டாள் சாக்க்ஷி, அப்படியே அழைத்து வந்து தன் கட்டிலில் அமர வைத்து “அம்மா இது அப்பாவோடது, ஏன் நான் பார்க்க கூடாதா” என்றாள். அவர் தோளில் சாய்ந்த வண்ணம்.

என்ன சொல்லுவார் அவர் “இல்லடி…” என தயங்க சாக்க்ஷியே “விடும்மா, என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்” என்றாள் சிரித்த வண்ணம்.

மறுநாள் காலை விரைவாகவே கிளம்பிவிட்டாள் மில்லிற்கு, தன் தந்தை போலவே. அவரின் பழைய ஆக்டிவா எடுத்து கிளம்பினாள். அவ்வபோது அவள் தன் தந்தையுடன் செல்வதுதான். எனவே மில் வேலை அவளிற்கு புதிதல்ல.

அவர் இருக்கும் போது விளையாட்டாகவும் எளிதாகவும் தெரிந்த ஒரு செயல், அவர் இல்லாத போது, அதே செயலைதான் செய்வோம். ஆனால், கண்ணில் நீர் வர, வர ‘என் அப்பா’ என, அவர் பெருமையை உணர்ந்து சொய்வோம். ஆனால் அவர்தான் இல்லை பார்ப்பதற்கு. அந்த நிலைதான் இப்போது சாக்க்ஷிக்கு.

அன்று முழுவதும் வேடிக்கை பார்த்தாள். வேறு ஏதும் கண்டு கொள்ளவில்லை அவள். ஆனால் கண்ணில் நீர் படலம் எப்போதும் இருந்தது. அதை தடுக்க முடியவில்லை அவளால்.. கூடவே ஒரு வலியும்தான்.

அழுது தீர்க்கலாம் ஒரு மாதம் கூட. ஆனால், அவர் இல்லாமல் வாழும் போது, வருமே ஒரு வலி, அதனை வாழ்நாள் முழுவதும் நாம் சுமக்கவேண்டும்.

அப்பா இல்லாதா நிலை, இப்போதுதான் வடுவாக மாறியது அவள் இதயத்தில். அதனை உள்வாங்க வைத்தது இன்று மில்லிற்கு சென்று வந்த நினைவு.

தன் அப்பாவை தேடிய அளவுக்கு அவளின் மனம் கதீஷையும் தேடியது. ஒருவர் இல்லவே இல்லை என்று அறிவால் உணர்ந்தாலும், அதை மனத்தால் ஏற்பது அவ்வளவு கடினமாக இருந்தது.

சாக்க்ஷி வீட்டிற்கு வந்தும் அவள் நிலையில் மாற்றமில்லை. இன்று அக்ஷரா போன் செய்திருந்தால். அப்போதுதான் கொஞ்சம் மனம் இலகுவானது அவளிற்கு. அதிக நேரம் தன் தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தாள் சாக்க்ஷி.

இரவு உணவு முடிந்து உறக்கம் வராமல் தன் வாசல் வராண்டாவில் உலவிக் கொண்டிருந்தாள் சாக்க்ஷி. இப்படியெல்லாம் தனிமையை அவள் உணர்ந்ததே இல்லை எனலாம்.

எப்போதும் கதீஷ், அல்லது தந்தை உடனிருப்பார்கள். இல்லை இருவரும் உடனிருப்பார்கள். அழகான வாய் சண்டை, சின்ன சின்ன கேலி, கிண்டல்கள் என அவள் வாழ்க்கை எப்போதும் வண்ணமயமாகவே இருந்த்தது. இப்போது அதெல்லாம் முற்பிறவி என்ற நிலையில் கடந்த கால நினைவுகளை எண்ணி அவள் நடை போட்டுக் கொண்டிருந்தாள், வாசல் வராண்டாவில்….

வாசல் கேட்டின் முன் குதிரை கனைக்கும் சத்தம், அந்த ஏகாந்த இரவில் கேட்க, வேறு யாராவதாக இருந்திருந்தால் பயந்து போய் இருப்பார்கள். ஆனால் சாக்க்ஷிக்கு, காதில் தேன் வந்து பாய்ந்தது.

குதித்துக் கொண்டு ஓடினால் ஜகுவாரை நோக்கி, அப்படி ஒரு சந்தோஷம் அவள் முகத்தில். “ஜகு..” என அதன் கழுத்தை கட்டிக் கொண்டு கிட்ட தட்ட தொங்கினாள். அதுவும் அசாராமல் தாங்கியது அவளை.

இவ்வளவு நேரம் கண்ணில் படர்ந்திருந்த நீர் குபுக்கென வெளியேற வார்த்தைகளின்றி அதை அடித்து, தடவி, முத்தமிட்டு என ஒரு ஐந்து நிமிடம் என்ன செய்தாள் என தெரியாமல் அதனிடம் தன் உணர்வுகளை கொட்டிக் கொண்டிருந்தாள் சாக்க்ஷி.

அந்த ஜகுவும் அவளின் எல்லா செய்கைக்கும், அமைதியாக நின்று கொண்டு, அவளின் முடி மீது புஸ் புஸ் என மூச்சு விட்டு விளையாடிக் கொண்டிருந்தது.

இதை எல்லாம் தன் வீட்டு வாசலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரகதீஷ். அவள் வீட்டில் ஒளிர்ந்த விளக்கின் ஒளியில், கண்ணில் வைர துளிகளுடன், சந்தோஷமும் துக்கமும் போட்டி போடா, முகமெல்லாம் பிரகாசிக்க, ஜகுவுடன் அவள் விளையாடிய நிலை பார்த்தது இவன் முகத்தில் மந்திர புன்னகைதான்.

‘தான் இட்டு நிரப்பவேண்டிய சூழ்நிலையை எல்லாம் தவற விடுகிறேனே’ என அவனின் மனம் அடித்துக் கொண்டது. தானாக ஒரு பெருமூச்சு எழ உள்ளே சென்றான் கதீஷ்.

சாக்க்ஷி சகுவை கூட்டிக் கொண்டு, கேட்டை தாண்டி, உள்ளே சென்றாள். வராண்டாவில் நின்றுகொண்டு “அம்மா…..” என கத்தல்தான்.

வெளியே வந்த மேகலையை பார்த்து “பாரும்மா, ஜகு வந்திருக்கான் என்னை பார்க்க “ என ஆர்ப்பாட்டமாக சொல்லிய மகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் மேகலை.

அதன் பின் நிற்கவில்லை அவள், ஜகுவிற்கு கொடுக்க “காரட் இருக்காம்மா” என்றாள்.. எடுத்து வந்து தந்தார் மேகலை.

மேகலை வெளி வாசலில் அமர்ந்துகொள்ள இருவரும் வீட்டை சுற்றி நடந்தனர். எதோ பேசிக் கொண்டே நடந்தால் சாக்க்ஷி. அதுவும் பக்கத்திலிருந்த மாதுளை செடியை தின்பதும், அவள் திட்டும் போது கனைப்பதும்,. பின் நடப்பதும் என விளையாடிய படியே சென்றது.

இப்படியே நேரம் கடக்க மணி பதினொன்று, மேகலைதான் “வா சாக்க்ஷி போகலாம் மணியாச்சி” என்றார். இவளிற்கு ஜகுவை பிரியவே மனமில்லை. ஆனாலும் ஜகுவிடம் “சரி ஜகு, நீ போ” என கேட்டை தாண்டி அதனை விட்டு சென்றாள்.

அது அவளின் பின்னேயே வந்தது. இப்படியே இரண்டு முறை செய்ய அதுவும் பின்னாடியே வந்தது. சாக்க்ஷி “ஏண்டா, படுத்தற , நான் அங்க வர மாட்டேன் நீ போ“ என அதனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

மேகலையும் “விடேன், இன்னைக்கு இங்க இருக்கட்டும்” என்றார். சாக்க்ஷிக்கு கதீஷ் அதனை தேடுவானோ என எண்ணம்.    

அதனை புங்கை மரத்தடியில் கட்டி விட்டு சென்றுதான் உறங்கினாள். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல உறக்கம் தழுவியது அவளை.

   

 

 

                                           

Advertisement