Advertisement

மிட்டாய் புயலே-15

நண்பகல் மணி பனிரெண்டரை, அவர்களின் மில்லே பரப்பரப்புடன் இருந்தது. நெல் வைக்கும் குடோனிலேயே ஒரு பகுதியை தனியாக பிரித்து, சிறுதானிய அவல் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

இதோ இன்று மாலை இயந்திரங்கள் வந்துவிடும், எனவே ஒரு கையில் டீ கப்புடன், அங்கு நடந்து கொண்டிருந்த வேலைகளை மேற்பார்வை பார்த்திருந்தாள் சாக்க்ஷி.

அவளருகில் வந்த செந்தில் “சாக்க்ஷி, லாரி கிளம்பிடிச்சாம்மா, போன் பண்ணாங்க, நாலு மணிக்கெல்லாம் வந்துடும்” என்றார்.

சாக்க்ஷி “ம், சரி அங்கிள், அப்புறம், வீட்டு வேலைக்கு ஆள் கேட்டு இருந்தேனே, ஏதாவது பார்த்தீங்களா அங்கிள்” என்றாள்.

“எங்கம்மா, எல்லாம் வெளியூராதான் வராங்க, நீதான், உள்ளூரில் பாருங்கன்ற” என்றார்.

தொடர்ந்து அவரே “இப்போ கூட ஒரு அம்மாவும்  பையனும் இருக்காங்க, கோயம்புத்தூர்காரங்க, வர ரெடியா இருக்காங்க, வர சொல்லவா” என்றார்.

என்ன செய்வது என தெரியவில்லை சாக்க்ஷிக்கு, கடந்த ஒரு மாதமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவள் கேட்டது போல் உள்ளூரில் கிடைக்கவில்லை, எனவே “சரிண்ணா, வர சொல்லுங்க, நம்பிக்கையானவங்களா இருந்தா போதும்” என்றாள்.

“அதெல்லாம் நல்லா விசாரிச்சாச்சும்மா, கவலபடாத, அம்மாவை நல்லா பார்த்துக்குவாங்க” என்றார்.

சாக்க்ஷியின் கவலையும் அதுதான். அம்மாவை உடனிருந்து கவனிக்க வேண்டும், வீட்டில் தனியாக இருப்பதால் இவளிற்கு கொஞ்சம் பயம். எனவே, அதற்காவே தேடிக் கொண்டிருந்தாள், எனவே “சரிண்ணா , பார்க்கலாம், வர சொல்லுங்க” என்றாள்.

நேரம் பறந்தது, மதியம் உணவிற்கு கூட செல்லவில்லை அவள். ஏதோ டீ, வடை என சாப்பிட்டு மில்லே கதியென அமர்ந்திருந்தாள். பிரசவ நேரத்தில், லேபர்ட் வார்டின் வெளியே காத்திருக்கும் கணவனின் நிலையில் இப்போது சாக்க்ஷி.

வந்து விட்டது, அவளின் கனவுகளை தாங்கிய பிள்ளை, ஆட்கள் இறக்கி, அதற்குண்டான இடத்தில் வைத்து, முடுக்கி, சரிபார்த்து என பத்து ஆண்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மொத்தம் மூன்று இயந்திரங்கள். ‘வெளிய நிற்கும் கணவன் எப்படி ‘தன்னால் அவள் வலியை பகிர முடியாது. ஆனால், அவளுடனே நிற்க மட்டுமே முடியும்’ என நிற்பானோ அப்படி நின்றிருந்தாள். கையை கட்டிக் கொண்டு, அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள்.

ஒரு வழியாக இரவு எட்டு மணிக்கு எல்லாம் சரி பார்க்கப்பட்டு, ‘டெமோ கொடுப்பதற்கு ஆட்கள் நாளை வருவார்கள்’ என சொல்லி கிளம்பினர் அந்த இயந்திரத்தை டெலிவரி செய்தவர்கள்.

செந்தில் அவர்களின் கணக்குகளை சரி பார்த்து அமௌன்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இங்கு சாக்க்ஷி அந்த இயந்திரங்களைத்தான் பெருமை பொங்க பார்த்திருந்தாள். சின்னதான வருடல் ஏதோ முதல் முறை தன் குழந்தையை தொடும், தந்தை போல் அத்தனை மென்மை அவளின் வருடலில்.

ஒவ்வொன்றாக ரசித்து, வருடி உணர்ந்து என சாக்க்ஷி முழுதாக ரசித்தபின்னே அந்த இடம் விட்டு வெளியே வந்தாள்.

இப்போது ஒரு பரபப்பு வந்தது, நாளை சீக்கிரம் வர வேண்டும், நாளைதான் முதல் நாள் உற்பத்தியின் தொடக்கம், எனவே அதனை மனதில் வைத்து வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள்.

‘ஆண்களின் உழைப்புக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை பெண்களின் உழைப்பும், கனவும்’ என எண்ணிய செந்தில், செல்லும் அவளையே பார்த்திருந்தார்.

வீட்டிற்கு வந்த சாக்க்ஷிக்கு அமைதி வந்திருந்தது. கொஞ்சம் பயமும். மனமெல்லாம் படபடப்பு கால்கள் நிற்கவில்லை ஓரிடத்தில், நடந்து கொண்டே இருந்தாள்.

தன் அப்பாவின் படத்தின் முன் போய் சிறிது நேரம் நின்றாள். மேகலை உணவு உன்ன அழைக்கவும் அமைதியாக வந்து அமர்ந்தாள். மேகலைதான் அவளின் அமைதி பார்த்து “என்னடி, மிஷினெல்லாம் வந்திடுச்சா, ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற” என்றார்.

“ஆமாம் ம்மா, நாளைக்கு சீக்கிரம் கிளம்பி இரு, போலாம் “ என்றாள்.

“நான் வந்து என்ன செய்ய போறேன், நான் கோவிலுக்கு போறேன், நீ பார்த்து செய்தால் சரி“ என்றார்.

அவள் காதில் வாங்கவில்லை, அவளின் பட படப்பிலேயே இருந்தாள் “சரிம்மா, எனக்கு தூக்கம் வருது “ என எழுந்தாள்.

மேகலை அவள் பாதி சாப்பாட்டில் எழவும் “ஏன், என்னாச்சி, இரு” என அந்த இட்லியை அவளுக்கு ஊட்டி விட்டார். சாக்க்ஷியும் ஏதும் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.

மேகலை “சோம்பேறி, சாப்பட கூட சோம்பேறிதனம்…” என நீண்ட நாட்கள் கழித்து திட்டிக் கொண்டே ஊட்டி விட, சாக்க்ஷிக்கு இப்போது கொஞ்சம் சுய உணர்வு வர, தன் அன்னையின் கையை வலிக்காமல் மென்றாள்.

மேகலை “எரும… ஒழுங்கா சாப்பிடு” என இன்னும் திட்டி ஊட்டினர். இப்போதுதான் உணவு அவளுள்ளே அமிர்த்தமாக இறங்கியது போல, இன்னும் இரண்டு இட்லி ஊட்டி விட வைத்தாள் தனது அன்னையை.

ஒரு வழியாக திட்டி ஊட்டி என உண்டு முடித்தவள் நல்ல மனநிலையிலேயே உறங்க வந்தாள்.    .

அவளின் அறைக்கு சென்றாள். ஆனால், அதற்காகவே காத்திருந்தது போல கதீஷ்ஷின் நினைவுகள் வந்து ஒட்டிக் கொண்டது. ‘அவனிடம் சொல்லலாமா’ என எண்ணம் எழுந்தது. கைகள் தன் போல் அலை பேசியை கூட  எடுத்தது.

‘இப்போ வேண்டாம்’ என தடுத்தது மூளை. இளக இருந்த மனத்தையும் இறுக்கிக் கொண்டாள் சாக்க்ஷி. ஆம் ‘இப்போது வேண்டாம்’ என தனக்குதானே சொல்லிக் கொண்டாள்.

ஆனால், மனதிற்கு ‘ஏதோ அவனில்லாமல் செய்வது, தவறு செய்வது போல் தோன்றியது.’ நேசம் சில சமயம் நம்மை குற்றவாளியாக்கும். ஆனால், காதில் வாங்கவில்லை அதையெல்லாம் அவள்.

உறக்கம் தன் போல் அவளை இழுத்துக் கொண்டது, உழைப்பு எல்லாவற்றிற்கும் மருந்து. கதீஷின் நிலைவுகளை கடந்து, உறங்க முடிகிறதே அவளால். அசந்து உறங்கினாள்.  

பள பளவென பொழுது விடிந்தது. சாக்க்ஷி முன்பே எழுந்துவிட்டாள் இன்று முக்கியமான நாள் என்பதாலோ என்னவோ.

ஆர்பாட்டம் இல்லாமல் கிளம்பினாள், கோவிலுக்கு சென்று வந்தாள், மனம் இன்னும் அமைதியாக இருந்தது. ஒரு நல்ல மனநிலையில் மில்லிற்கு சென்றாள். செந்தில்ண்ணா இவளிற்கு முன் நின்றிருந்தார்.       

தொடங்கியது அவர்களின் வேலைகள். நன்றாக பயிற்சி பெற்றவர்கள் வந்து விளக்கி சென்றனர். இவளும் மில்லின் ஆட்களுக்கு பயிற்சி கொடுத்ததால் வேலை தங்கு தடையின்றி நடந்தது.

உள்ளே செல்லும் சிறு தாணியம், சுத்தமான அவல்லாக மாறி வெளியே வந்தது. முதல் பிடி எடுத்து சாக்க்ஷி கைகளில் கொடுத்தனர். ஏதோ கிருஷ்ணர், குசேலருக்கு தந்தது போல் பய பக்க்தியாக வாங்கிக் கொண்டாள் கண்கள் கசிய.

தன்போல் ஒரு செருக்கு வந்தது. பாரதி சொல்லும் ஞன செருக்கு போல் உழைப்பின் செருக்கு வந்தது சாக்க்ஷிக்கு. முகம் ஜொலி ஜொலிக்க நின்றிருந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக தன் சுற்று புறம் நினைவு வர, ஒரு சிரிப்புடன் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்க்க தொடங்கினாள்.

அப்போதுதான் செந்தில் வந்தார் “என்னம்மா திருப்தியா” என்றார் அவளை ஆராய்ந்து கொண்டே.

லேசாக சிரித்தாள். வேறேதும் காட்டிக் கொள்ளவில்லை.  செந்தில் “என்னாம்மா, சிரிக்கிற” என்றார். அதற்கும் சிரித்தாள்.

இப்போதெல்லாம் அமைதி அவளிடம் அதிகமாக உறவாட தொடங்கியது. மௌனமும் பழகினாள்.

சின்னத்தில் கதீஷ் சொல்லுவான் “பேசாம இருந்தா சாக்கிக்கு, மிட்டாய் தருவேன்” என அதுதான் நினைவு வந்தது. எங்கு என்றாலும், அவன் ஒரு புள்ளியிலாவது வந்து நின்றான்.

இப்படி கதீஷ் நினைவு அவளை இழுக்க மனம் வாடியது. ‘என்ன சொல்லியிருப்பான், ம்கூம், என்ன சொல்லுவாங்க என் அமைதி பார்த்து, ஒரு வேலை நிறைய மிட்டாய் கொடுத்திருப்பாங்களோ’ என தோன்றியது. இப்படி அவளின் மனம் செல்ல

அவளை அழைத்தார் செந்தில், “சாக்க்ஷி வேலைக்கு கேட்டிருந்தில்லாம்மா, அந்த பையன் வந்திருக்காப்ல, வர சொல்லவா” என்றார்.

செந்தில் “வா வேலு“ என்றார். வந்தான் ஒல்லியாய், உயரமாய், துரு துரு கண்களுடன் சுற்றியும் பார்த்தவாறே, எந்த பயமும் இல்லாமல், ஏதோ தன் இடத்திற்கு வருவது போல் அசால்டாக வந்து நின்றான்.

சாக்க்ஷியை பார்த்து ஏதோ சொல்ல வந்தவன் போல், அதை விழுங்கிக் கொண்டே “குட் மோர்னிங் க்கா” என்றான்.

சாக்க்ஷி “மோர்ணிங், என்றவள் பெரிய வண்டி ஓட்டுவியா” என்றாள்.

அவன் அசராமல் “எந்த வண்டிக்கா, டாட்டா வா, மகேந்திரவா, “ என்றான்.

“இல்ல, அங்க வெளிய நிக்குதுல்ல, டஸ்ட்டர், அததான் கேட்டேன்” என்றாள்.

அந்த வேலு “அதானேக்கா, நல்லா ஓட்டுவேன், எந்த வண்டியானலும் ஓட்டுவேன். எங்கிட்ட போய் இப்படி கேட்டு போட்டீங்கலேக்கா, நானெல்லாம் ரேசே ஒட்டினவன், போறக்கும் போதே நானெல்லாம் சாரதி வம்சம்…… ” என பேசினான், பேசினான் ஒரு ஐந்து நிமிடம் விடாமல் பேசினான்.

சுவாரசியம் வந்தது சாக்க்ஷிக்கு, “என்ன படிச்சிருக்க” என்றாள்

“BBA, பிரஸ்ட் இயர் போனேன், அப்புறம் பிடிக்கல, அதான் இப்படி வேலைக்கு வந்துட்டேன்” என்றான்

“அம்மா அப்பா என்ன செய்யாறாங்க” என்றாள்.

தனது போனை எடுத்து காட்டினான். “இதோ அம்மா, அப்பா. அப்பா இறந்து மூணு வருஷம் ஆகுதுக்கா, அம்மா வேலைக்கு போய்தான் என்ன பார்த்துக்கிட்டாங்க, நானும் நல்லா படிச்சி வேலைக்கு போகதான் நினைச்சேன், எங்க” என்றவன் ஒரு பெருமூச்சு விட்டான்.

அவனே சுதாரித்து “பஸ்ட் இயர் முடிச்சி லீவில், கால் டாக்ஸி டிரைவர்ரா வேலைக்கு போனேன்…. அப்படியே வேண்டாத பழக்கம், டூ வீலர் ரேசுக்கு இழுத்துச்சி, அதிலே போலீஸ்ல மாட்டிகிட்டேன்.” என்றான் அவன். லேசாக செந்திலை பார்த்தாள் சாக்க்ஷி.

“அப்புறம் காலேஜ் போக புடிக்கலீங்கக்கா, இப்படியே ஏதோ சம்பாதிச்சேன், அப்புறமும் போன வாரம் ரேசுக்கு போயிட்டேன், அதான், அம்மா புடி புடின்னு, இங்க அண்ணன்ட்ட சொல்லி, இங்க கூட்டி வந்துட்டாங்க” என்றான். வளைந்து நெளிந்தெல்லாம் சொல்லவில்லை, தைரியமாக சொல்லிக் கொண்டிருந்தான்.

சாக்க்ஷி “இவர் உனக்கு அண்ணனா” என்றாள் செந்திலை பார்த்து. அவன் மேலும் ஏதோ சொல்ல வர, செந்தில் “விடும்மா, எப்படியோ மரியாதையா கூப்பிட்டா சரி” என்றார்.

மீண்டும் சாக்க்ஷி “கோயம்புத்தூர்ல ரேசா” என்றாள் அதிசியமாக.

இப்போது அவன் “என்ன க்கா, இப்படி கேட்…………” என திரும்பவும் ஆரம்பிக்க, செந்தில்தான் “அத அப்புறம் பேசிக்கலாம், முதல்ல வந்த வேலையை பாரு வேலு” என்றார்.

சாக்க்ஷி “சரி, இங்க ஒழுங்கா இருக்கணும், எப்போ அம்மாவ கூட்டி வந்து சேர்ந்துக்கிற” என்றாள் அவனிடமே.

“நீங்க சொல்லுங்கா, எப்போ வரன்னு” என்றான்.

“நாளைக்கே வந்துடு, என் வீட்டு மாடியில, ஷீட் போட்டு இருக்கு அங்கேயே தங்கிக்குங்க, அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றாள்.

“தேங்க்ஸ் க்கா” என்றவன், கிளம்பினான்.

சாக்க்ஷிக்கு இனி அம்மாவை பற்றி கவளை பட தேவையில்லை என தோன்றியது. அந்த வாரம் முழுவதும் அவளிற்கு வேறு வேலைகள் ஓடவில்லை. அங்கேயே, மில்லையே சுற்றினாள்

முதலில் தன் தந்தையின், நண்பர் அவர்களிடம்தான், தனது விற்பனையை தொடங்கினாள். அவர்கள் ஏற்றுமதி செய்பவர்கள். எனவே இவளிடமிருந்து வாங்குவது அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை.

எனவே சாக்க்ஷிக்கு இப்போது நிற்பதற்கு நேரமில்லை. தொடர்ந்து ஆடர்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் வேலையாட்கள் தேவையாக இருந்தது. செந்திலும் அவளின் எல்லா முயற்சிக்கும் துணை நின்றார்.

கந்தவேலும், அவனின் அன்னை, வசந்தியும் வந்து சேர்ந்து இன்றோடு ஒரு வாரம் ஆகிறது. வேலுக்கு பெரிதாக வேலையெல்லாம் இருக்கவில்லை.

சாக்க்ஷியை கொண்டு விடுவது, கூட்டி வருவது இது தவிர அவளின் ஈரோடு பயணம் என குறைந்த அளவே வேலை, அதனால், மில்லிலும் வேலை பார்த்தான் வேலு. என்ன அவன் வாயும், சரிக்கு சரியாக வேலை செய்தது.

அப்படிதான் வண்டி ஓட்டும் போதும் பேசிக் கொண்டே வருவான். இன்னதான்னு இல்லை எல்லாவற்றையும் பேசுவான். சாக்க்ஷிக்கு இது தொல்லையாக இருக்கவில்லை போலும் அமைதியாக கேட்டுக் கொண்டே வருவாள்.

இதோ இன்று ஏலத்திற்காக கரூர்க்கு சென்று கொண்டிருந்தனர். காரில் வேலு, செந்தில், இவள் மட்டும் தான். இந்த வண்டிக்குத்தான் ரேடியோவே தேவையில்லையே, பேச ஆரம்பித்தான் வேலு.

செந்தில் எப்போதும் சொல்லுவது போல் “சாக்க்ஷிய, மேடம்னு சொல்லு, அதென்ன அக்கா” என்றார் சலித்த குரலில். அவர், அவன் எப்போதெல்லாம் அவளை ‘அக்கா’ என்று அழைக்கிரானோ, அப்போதெல்லாம் சொல்லிக் கொண்டே வருவார். இன்றும் அதேபோல் சொல்ல, இன்று பொங்கி விட்டான் வேலு  

“அக்கா, இத கேளுங்க்கா, என்னை மேடம்க்கு வண்டி ஓட்டனும்னு சொன்னங்கக்கா, அண்ணன்.” என்றான். செந்திலை முறைத்தபடி.  

“நான் ஏதோ வயசானவங்கன்னு நினைச்சு வந்தேன். பார்த்ததா என் சீனியர் மாதிரி இருக்கீங்க்கா…. உங்கள போய் எப்படி வயசான மாறி மேடம்ன்னு சொல்றது. அதான், அக்கான்னு கூப்பிட்றேன், உங்களுக்கு ஏதாவது பிரச்சைனையாக்கா, நான் கூப்பிரதுல” என்றான். முன்னிருந்த கண்ணாடி வழியே சாக்க்ஷியை பார்த்த்தவாறே.

சாக்க்ஷி லேசாக சிரித்தாள் ‘இல்லை’ என்பதாக தலையாட்டினாள். அதை பார்த்தவன் செந்திலிடம் “கேட்டுக்கோங்க சார், உங்களுக்கு பொறாமை” என்றான்.

செந்தில் “நல்லா வைக்கிற டா ஐஸ்சு” என்றார். அதற்கும் சாக்க்ஷி சிரித்தாள்.     

கரூர் செல்வதால், அன்று பேசி சென்ற ஏஜென்ட் இவர்களுக்கு, பத்துநாள் முன்னமே சொல்லியிருந்தார். என்ன விலை செல்கிறது. எவ்வளவு கேட்கலாம் என தெளிவாகவே சொல்லியிருந்தார்.

அத்தோடு கூட ‘நான் அங்கு இருப்பேன் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார். அவரை தவிர, பல ஏஜெண்டுகள், இவள் புதிதாக இதில் ஈடுபடுகிறாள் என தெரிந்து மில்லிற்கு வந்து பேசி சென்றிருந்தனர்.

ஆனால் எதையும் காதில் வாங்காது. இது முதல் முறை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கிளம்பியிருந்தாள். உழவர் சங்கத்தின் முன் தனது வண்டியை நிறுத்தினார்கள்.

உள்ளே சென்றாள். எங்கும் கதர் வேட்டி, கதர் சட்டை, சத்தமான பேச்சு என அல்லோலபட்டது அந்த இடம். எங்கும் வாய் திறக்கவில்லை சாக்க்ஷி எல்லாம் செந்திதான் பேசினார். ஆனாலும், எல்லாம் ஏற்கனவே முடிவானதாகதான் பட்டது சாக்க்ஷிக்கு. எல்லாம் ஏஜெண்டு முறைதான்.

இவர்களும் அதே என்பதால், காரியம் நல்லபடியாக முடிந்தது. பேச்சுகள் தேவையிருக்கவில்லை. அங்குதான் கதீஷின் தந்தையும் வந்திருந்தார்.

கண்டும் காணாதவர் போல் நடந்து கொண்டார். சாக்க்ஷிக்கு அது முடியவில்லை. பார்த்து பேசும் எண்ணத்துடன் அருகில் சென்றாள். அவர்தான் ஏதோ முக்கியமாக தன் உதவியாளருடன் பேசியபடி விலகி சென்றார்.

பார்த்திருந்த செந்தில் “வாங்க பாப்பா” என அழைத்து சென்றார். கூடவே இருந்தார். சாக்க்ஷிக்கு ஒன்றும் பெரிதாக பாதிக்கவில்லை போல, சிரித்தவாறே கடந்தாள்.

இனி எப்படி தொடங்குவது, என்ன செய்வது எல்லாம் செந்தில் பார்த்துக் கொண்டார். சாக்க்ஷியின் கவனம் இப்போது முழு நேரமும் S.A புட்டிலேயே இருந்தது.

 

Advertisement