Advertisement

மின்னொடு வானம் நீ…17

இப்போதுதான் சுமதியும் முரளியும் பெங்களூரில் இருந்து கிளம்பினர். அவர்களின் மிட்சுபிஷி.. அலுங்காமல் குலுங்காமல் வந்து கொண்டிருந்தது சேலம் நேஷனல் ஹைவேயில்…

நிறைவான பயணமாக இருந்தது தம்பதிக்கு… ஆசைக்கு ஒரே பெண்.. கண் குளிர… மணமுடித்து… அவளின் கணவருடன் சேர்த்து வைத்துவிட்டு தன் பெண்ணின் வாழ்வு நன்றாக அமைய வேண்டும், அடுத்து.. மகனுக்கும் நல்ல முறையில் திருமணம் அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் கிளம்பினர் கோவை நோக்கி…

இருவரும் பெண்ணின் பெருமை பற்றியே பேசி பேசி இன்பமாய் சலித்துக் கொண்டிருந்தனர்… டிரைவர் வண்டியை ஓட்டியதால்… முரளி இலகுவாக பின்னாடி திரும்பி திரும்பி சுமதியை, பார்த்து… ப்ரியாவின் பெருமை பேசினார். என்னாவோ தீரவேயில்லை… தங்கள் பெண் புகுந்த வீட்டில்… அழகாக பொருந்தியது… பேசி பேசி தீர்த்தனர்…

சேலத்தை நெருங்கும் போது முரளியை அழைத்தார் சபரி.. ஆசையாகவே போனை எடுத்தார் முரளி.. கூடவே “பாரு… உன் பையனுக்கு போன் பண்ண தெரிஞ்சதா… சபரி, பொறுப்புதான்” என தன் நண்பனின் மகனை புகழ்ந்தபடியே போனை எடுத்தார் அவர்.

சபரி.. ஏதும் விசாரிக்காமல்.. அமர் அங்கு மகாவின் வீட்டில் இருப்பதாக சொன்னார், முரளியிடம்.. அத்தோடு “நீங்கள் எப்போது வருவீர்கள்… நான், என்னை கூப்பிடுகிறான், போகவா…” என கேட்கவும் முரளிக்கு அய்யோடா என்றானது…

சபரி… “ஹலோ மாமா… மாமா” என இருமுறை அழைத்தான் சபரி.

“ஹம்… ம்… சொல்லுப்பா… “ என கேட்க…

சபரி “நான் ஒரு பத்து…. நா… கூப்பிடுறேன் ப்பா சபரி” என சொல்ல

சபரிக்கும் புரிந்தது “ம்… அவசரமில்ல மாமா… அத்தைகிட்ட பேசுங்க… அவன் சும்மாதான்…

ஒன்னும் பெருசா இருக்காது… ஏதோ… அவசரத்துல… போயிருப்பான்…

நான் பேசறேன்… நீங்க பொறுமையா வாங்க” என்றான்.

முரளியும் “ம்ம்…” என்றவர் போனை வைத்துவிட்டார்.

முதலில் அமரா, அப்படி என நம்ப முடியவில்லை முரளியால்… எங்களை மீறி போவிட்டானா… எ.. என் மீது நம்பிக்கை இல்லையா என் மகனுக்கு… நான் அதை தரவில்லையா அவனுக்கு என முரளிக்கு, முதலில் தோன்றியது அதுதான்..

இப்போதுதான் மகளை மணமுடித்து பெண்ணை விட வந்திருக்கிறேன்… அதற்குள் இவன் வேறு இப்படி இழுத்து வைத்திருக்கிறானே… எனவும்தான் தோன்றியது.

கோவம்தான் வந்தது… நீண்ட வருடங்கள் சென்று… தன் தங்கை சொல்லாமல் சென்ற போது தோன்றியதே… ஏதும்.. செய்ய முடியாதா கோவம்… அதே கோவம் திரும்பவும் தோன்றியது…

யாரிடமும் காட்ட முடியாமல்.. பசுமையாய்… அதே வலியுடன்… மீண்டும் தோன்றியது முரளிக்கு… பெண்களாவது தங்கள் வார்த்தைகள் மூலம், சிலசமயம் செயல்களின் முலம் காட்டிவிடுவார்… சில ஆண்கள், அதுவும் குடுபத்தை போற்றும் சில ஆண்கள்… எல்லாவற்றையும்… ஏற்றுக் கொண்டு கடந்து போய்விடுவர்.. அப்படிப்பட்டவர்தான் முரளி போல… இன்று வலித்து தன் மகன் எனும்போது இன்னும் வலித்தது…

ஆனால், தன் மகனை விட்டு கொடுக்கவும் முடியாமல்… சபரியை, போக சொன்னார் அங்கு… அரைமணி நேரம் கடந்து “போ சபரி… நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்… சேலம் தாண்டிட்டு கால் பண்றேன், என்ன ஏதுன்னு பார்த்திட்டு கூப்பிடு… அவன் விருப்பம்தான்… எல்லாம்..” என சொல்லி வைத்துவிட்டார். இதெல்லாம் மெதுவாக பேசினார்.. சுமதிக்கு தெரியவில்லை.. அலுவலக விஷயம் என அமைதியாக இருந்துவிட்டார் சுமதி.

இன்னும் முரளியின் முகம் வேதனையை அவரையறியாமல் காட்டியது போல, முகம்பார்த்த சுமதி “என்னங்க… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க… “ என கேட்க… முரளியும் ஒரு பெருமூச்சோடு மறைக்காது சொல்லிவிட்டார். அன்றும் இன்றும் உடன் வருவது இவள் மட்டும்தானே… என மனம் தன் மனைவிமேல் பரிவு கொண்டது…

கூடவே “நீ மாறிக்க சுமதி… அவன்.. பிடிவாதமாக நிற்கிறான்,

விட்டுவிடு… கையில் பிடிக்காதே” என்றார்.

சுமதி “அதெப்படி அவனுக்கு அவ்வளவு பிடிவாதம்” என சின்ன  அழுகையினுடே… கேட்கவும்.. பாவம் முரளிக்கும் பதில் தெரியவில்லை.. “என்ன செய்வது… அந்த பொண்ணுதான் வேணும்னு கேட்கிறான்…

அத மறுக்கிற உரிமை எனக்கில்லை… உனக்கும் இல்லை

இப்போ பார்… நாம.. ஏதும் சொல்லலைன்னு தெரிஞ்சி…

அங்க போய் நிக்கிறான்…

அதனால, நாமலே பேசி கல்யாணம் நடத்தி வைச்சிடலாம்” என்றார் பொறுப்பான அப்பாவாக.

சுமதி “அப்போ, அங்க போக போறீங்க” என்றார் வெறுப்பான குரலில். ஆனால் இதில் நான் செய்வதுற்கு ஒன்றுமில்லை எனும் விதமாக முரளி தன் மனையாளை… பார்க்க…

சுமதிக்கு கையறு நிலை… மகன் புரிந்து கொள்ளவில்லையே.. நான் முக்கியமே இல்லையா… இப்படி என்னை விட அந்த பெண்தான் முக்கியமாக தெரிகிறாளா… என மகாவின், மீதிருந்த கோவம் சுறாவளியாய் அபி மீது இடமாறியது இயல்பாய்…

மேலும் இந்த நாத்தனார்… அண்ணி உறவு முறை எந்த வயதிலும்… எந்த இடத்திலும் இருபக்கமும் ஷார்ப்பான கத்திதான். என்னதான் இவர்கள் இருவருக்குமான புரிதல் நன்றாக இருந்தாலும்… எங்கையோ.. எப்படியோ.. பூசி மறைத்த, ஒரு விரிசல் இருந்தே தீரும்..

அதில் அழகாக சிக்கியவர்கள் இந்த மகாவும்.. சுமதியும்… எனவே அதை விட்டுவிட நினைத்த சுமதிக்கு.. இப்போது புதிதாய், தொடர்கதையாய்… அவர்கள் வீட்டிலிருந்து பெண் வருகிறாள்… அதுவும் மகன் மூலமாக.. அது இன்று விஸ்வரூமாக தெரியவும்… அது தன் மகளின் திருமணம் தந்த எந்த இனிமையையும்… உணர விடவில்லை என்பதாக உணர்ந்தார் சுமதி…

ஏதேதோ நினைவுகள்… எதோ அவமானம் நேர்ந்துவிட்ட உணர்வு.. என சுமதி அமைதியாகவே வந்தார் அந்த பயணம் முழுவதும். முரளிக்கும் கிட்டத்தட்ட அதே நிலையில் இருக்க, யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லமுடியாத நிலையில் இருந்தனர்.

#$#$#$#$#$#$#$$$$$$$$$$$$$$

அங்கு அமர் கண்ணில் இன்னும் படவில்லை அபி… அகிலன், தன் தந்தை வந்தவுடன்.. மேலே சென்று அபியின் கதவை வெளியிருந்து லாக் செய்து வந்துவிட்டான் அப்போதே..

பாட்டி, உறக்கம் முடித்து வந்தார் ஒருமணி நேரம் சென்று… தாத்தாவும் வீட்டிலேயே இருக்கவும் ஹாலில் இரு பெரியவர்களும் அமர்ந்திருந்தனர்…

பாவம் மகாவிற்கு, அப்படியொரு சந்தோஷம்… என் வீட்டிற்கு.. இந்த இருபதெட்டு வருடத்தில்… என் சொந்தம் என்ற ஒன்று வந்திருக்கிறது என்றால் அது, இப்போது வந்துள்ள அமர்தான்.

அப்படியே அவனை தன் கண்வழியே நிரப்பிக் கொண்டிருந்தார்… தன் அண்ணனின் சாயல்… அவரின் அமைதியான குணத்திற்கு முற்றிலும் வேறாய்.. பட் பட்டென பேசும் சுபாவம்… கண்ணில் தெரியும் அலட்சியம்.. கூடவே திமிர்.. ‘என்னை என்ன செய்வாய்’ எனக்கேட்கும் உடல்மொழி… என தன் அண்ணன் மகனை விழி எடுக்காமல் பார்த்திருந்தார் மகா…

ஆனாலும் ஒரு குறை… அமர் தன்னை பற்றி சொல்லும்போது ஒரு வார்த்தை கூட… இவரின் அண்ணன் மகன் என உறவு சொல்லவில்லை என்ற குறைதான் அது..

ஆனாலும் பெரிதாக எடுக்கவில்லை மகா… சொந்தம் சேர போகிறதே… இவனின் திமிரில். பொறுத்து போகாமல் இருப்பேனா எனதான் தோன்றியது அந்த மகா ஜீவனுக்கு.

சுவாமியின் பேச்சு இயல்பாய்.. அமருடன் சென்றது. கெட்டிகாரதனத்தை அவனுடைய பேச்சின் மூலம் ஆராய தொடங்கினார். அமரும் அபியை பற்றி பேசாமல் தங்கள் நிறுவனம்.. பற்றி, அவர்களின் தொழில் பற்றி என அந்த ஒருமணி நேரம் பேச்சு சென்றது.

முன்பே, சுவாமிக்கும் மகாக்கும் முரளியின் மகன் என்ற போதே பெரிதாக எதிர்க்கவில்லை… இப்போது இவனுடைய… அருமை பெருமையை அறியவும் இன்னும் அமருக்காகவே அமரை, பிடித்தது சுவாமிக்கு…

குறிப்பாக அவனின் தைரியம் பிடித்தது.. அபி, போலவே, அவரின் தந்தைக்கும்… எல்லோருக்கும் வந்துவிடாதா ஒன்றாக தோன்றியது.. அவனுடன் அமர்ந்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார் சுவாமி.

சபரி, ஒருமணி நேரத்தில் வந்தார்… சுவாமிக்கு போன் வந்தது செக்யூரிட்டியிடமிருந்து… “சபரி…” என பெயர் சொல்லவும்…

அமர் குறுக்கிட்டு… “என்னோட பிரிண்ட்தான் வந்திருக்காங்க” என்றான். சுவாமி உள்ளே வரசெய்தார்.. முறையான உபசரிப்பு. சபரிக்கு சற்று தயக்கம்தான் ஏதேனும் எடுத்தெறிந்து பேசிவிடுவார்களோ என…

ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை அங்கு… உறவை தேடுபவர்களாகவே தெரிந்தனர். ஆண்கள் எப்போதும் நடைமுறையை எளிமைபடுத்தி விடுவர் போல… ஒரு அழகான பேச்சாக சென்றது.. அதிராமல், அவசரபடாமல்… அதே சமயம்… குறிப்பான விஷயத்தையும் பேசாமல் மேலோட்டமாக ஒரு பேச்சு…

நேரம் சென்றது.. சபரி மெதுவாக “அமர், ஏதோ அவசரத்துல வந்துட்டான்…

உங்களுக்கு விஷயம் என்னான்னு தெரியும்…

நீங்க வீட்டில் கலந்து பேசி சொல்லுங்க…

அத்த, மாமா… அதாவது அமரோட, அம்மா அப்பா…

அங்க பெங்களூர் போயிருக்காங்க… இன்னிக்கு ப்ரியா…

இவன் தங்கையை தனிக்குடித்தனம் வைக்க… வந்திடுவாங்க..” என தயங்கி தயங்கி… பேசினார் முரளி..

சுவாமி “தெரியும்… கேள்விபட்டேன்…. நல்லது நல்லது” என்றவர் அமைதியாகிவிட்டார்.

அடுத்த இரண்டு நிமிடம் சுத்தமான அமைதி… இதுவரை… பிசினஸ் என்ற கேடயத்தில் மறைந்திருந்தவர்கள்… இப்போது அதனை விட்டு… சொந்தம் என்னும் கத்தியோடு நிற்க… தயக்கம் இயல்பு போல… அப்படியொரு அமைதி..

அதற்கு மேல் என்ன பேசுவது என சபரிக்கும் தெரியவில்லை… அமைதியாக இருந்தார்.. அமருக்கு முன்போல சத்தமாக அபியை கூப்பிடுங்க என சொல்ல முடியவில்லை…

சுவாமிக்கு ‘அமரின் பக்கம் இறங்கி வருவது தெரிகிறது… இனி நாங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும்’ என புரிகிறது… எனவே அந்த இரண்டு நிமிட அமைதி…

மகா உள்ளிருந்து மீண்டும் ஜூஸ் எடுத்து வந்தார்… அடுத்த ஒருமணி நேரம் சென்றிருந்தது… சாப்பிட சொல்லும் அளவிற்கு… இன்னும் நெருங்கவில்லை, அத்தோடு சும்மா இருக்கவும் மனமில்லை எனவே இந்த ஜூஸ்.

சுவாமிக்கும் அது தேவையாக இருந்தது போல… அங்கிருந்த மூவரும் எடுத்துக் கொண்டனர்.. சுவாமி அவசரமாக குடித்து… “இருங்க வரேன்” என உள்ளே சென்றார்…

மெதுவாக தன் தந்தையின் அருகில் அமர்ந்தவர் ‘அமர் யார், அவன் எதற்கு வந்திருக்கிறான் என சொல்லினார்.. காரணத்தையும் சொன்னார்..’ அந்த முதியவர்க்கும் எல்லாம் புரிய தொடங்கியது… ‘இப்போது எதுவும் சம்பூரணத்திடம் சொல்ல வேண்டாம்’ என்றார்… அமரை உள்ளே அழைத்து வரும்படி சொன்னார்.

தாத்தாவும் மெதுவாக பாட்டியிடம் ‘மகாவின் அண்ணன் மகன் வந்திருக்கிறான்…’ என பொதுவாக சொன்னார்.

சுவாமியும் மகாவும் அங்கு வரவேற்பறை வந்தனர் மகா “அமர், உள்ளே வா… பெரியவங்க இருக்காங்க… பார்த்துட்டு போ…” என்றார் பொதுவாக.. இதுவே பாதி சம்மதமாகத்தான் தோன்றியது சபரிக்கு… அமரிடம் கண்ணசைத்து அனுப்பி வைத்தார்.

மகாவுடன் அமர் உள்ளே வந்தான்.. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினான்.. சம்பூரணம் “வீட்டில் எல்லோரும் நலமா ப்பா” என்றார்  பெரியவரகாக..

தன் பேரனை போல் உள்ள ஒருவன் வந்து காலில் விழுகிறான்.. மகாவின் சொந்தம் என்கிறார் கணவர்.. எதோ புரிகிறது அந்த முதியவருக்கு… வயதே, அனுபவமாக இருக்கிறாரே, எனவே பட்டும் படாமல் கேட்கிறார்… ‘எல்லோரும் நலமா’ என. இது மாற்றமா… இல்லை, இனி அவர்கள் காலம் என ஒதுங்கிக் கொள்ளும் நிலையா தெரியவில்லை. ஆனால் நல்ல விதமாகவே வாழ்த்தினர் அந்த மூத்த தம்பதிகள்.

இப்போது மீண்டும் சரியாக அகிலன் வந்தான்… அமர் ஹாலில் நிற்பதை பார்த்தான்.. தாத்தா எதோ பேசிக் கொண்டிருந்தார், அமர் நின்றபடியே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். மகா.. தன் அத்தையின் அருகே நின்றிருந்தார்..

அகிலனுக்கு ஏதோபோல் ஆனது.. உள்ளே வந்துவிட்டானா… என தோன்றியது. அமர் அப்படி நகரவும், தன் தாத்தாவிடம் அமர்ந்து கொண்டான் அகிலன். அவரை இறுக்கிக் கொண்டான்… பேரனின் இறுக்கத்தை தாள முடியவில்லை… அவரால் “டேய்… அகிலா… விடுடா… பார்த்துக்கலாம்… நம்ம பிள்ளை சந்தோஷம் முக்கியம்டா,

அத்தோட உங்க அம்மா…

நாங்க ஏதோ… அப்போ புரியல….

நாங்க செய்த தப்பை, நீயும் செய்திடாதடா…” என்றார்… இன்னமும் கம்பீரம் குறையாத அந்த முதியவர்.

அகிலன் அதை ஏற்கும் நிலையில் இல்லை… அவரின் தோளில் சாய்ந்து கொண்டான்…(காதல், சைட் எப்க்ட் உள்ளதுதானே) தான், என்ன சொல்வது என தெரியாமல்..

அமர் வெளிய வந்தான்.. மகாவிடம் மெல்லிய குரலில் “அபி எங்க..” என்றான் காரியத்தில் கண்ணாக. மகாக்கு என்ன சொல்லுவது என புரியவில்லை “இருங்க வரேன்” என்றவர்.. தன் கணவனின் காதில் சொல்ல… சுவாமி இப்போது “கூப்பிடு” என்றார்.

சொந்தமெனும் கத்தி… மெல்ல மெல்ல… சுவாமியின் கையிலிருந்து நழுவி கீழேயே விழுந்தது…

வேலையாள் மூலமாக மகா அழைத்துவரபட்டாள்… கீழே வந்தவள்… தன் பாட்டியிடம் சென்று “எப்போ வந்தீங்க… என்ன சொன்னாங்க டாக்டர்” என பொறுமையாக கேட்டாள்.

சம்பூரணமும் மெல்லிய குரலில் பதில் சொன்னார்… அகிலனும் தாத்தாவும் அவளை பார்த்திருந்தனர்… கண்ணில் எதோ வருத்தம் தெரிகிறது, அதை அவள் மறைப்பதும் தெரிகிறது… அகிலனுக்கு கோவம்… இப்படி இவள் எதற்கு ஏங்குகிறாள் என…

தாத்தாக்கு.. இப்போதுதான் தன் பேத்தியின் நிலை தெரிந்தது. அவளை அப்படியே பார்த்திருந்தனர்…

அபி “இருங்க பாட்டி… அம்மாவ, பார்த்திட்டு வரேன்” என சொல்லி எழுந்தாள்.

அதற்குள் சுவாமி, அமரிடம் “அமர்… ப்ரன்ட்ல தோட்டத்துல வெயிட் பண்ணுப்பா… வருவா” என்றவர், சபரியிடம் சில பல முக்கிய விஷயங்களை பேச தொடங்கினார்.

அபி வந்தாள்.. மகா “அங்க பார், அப்பா கூப்பிடுறாங்க…” என சொல்லி உள்ளே சென்றார், சிற்றுண்டி வேளையில் மும்முரமாக… பெரிதாக தன் மகளிடம் சொல்ல இப்போது தோன்றவில்லை… முதலில் அத்தை, மாமா என்ன சொல்வார்கள்.. அதன் பிறகு பெரிய மலை… அகிலன், என மகா மனதில் ஓடிக் கொண்டிருக்க… விஷயத்தை பெரிதாக்காமல் சொல்லி சென்றார் தன் மகளிடம்.

வரவேற்பறை செல்ல.. அங்கே சபரியை, பார்த்து ஒரு புன்னகை செய்து தன் தந்தை அருகில் அமர்ந்தால் அபி, யார் என தெரியாமல். உடனே  அவர்.. “அங்க கார்டன்ல அமர் வெயிட் பண்றார் போய் பார்த்துட்டு வா டா” என்றார் ஈஸியாக…

அப்பா சொன்னவுடன் எழுந்துவிட்டவள்… அமர் என்பது புரியவே லேட் ஆனது… எதிரில் இருப்பவர் யாரென தெரியவில்லை… இருந்தும், எழுந்தவள்… குனிந்து தந்தையின் கழுத்தோடு அனைத்துக் கொண்டாள்… உடனே நிமிர்ந்தவள் “எங்க ப்பா” என்றாள் அவசரமாய்..

சுவாமி “ப்ரோன்ட் கார்டன்ல… போடா… போ…” என சொன்னார்..

அபிக்கு சின்னதாக சிறகு முளைக்க… பறந்தே வந்தாள் தோட்டத்திற்கு… ‘எனக்கு தெரியும் எல்லாத்தையும் சரி செய்வான்னு…’ என உள்ளம் பூரிக்க வந்தாள் அபி…  

அமர் ஆவலுடனே அமர்ந்திருந்தான்… ஒரு மூங்கில் நாற்காலியில், அவளை எதிர்பார்த்து… அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்… ஏதும் பேசவில்லை இருவரும்…

நிறைய கேட்க தோன்றியது அபிக்கு… “எப்படி வந்தீங்க… அண்ணன் ஒன்னும் சொல்லல, அப்பாகிட்ட என்ன பேசுனீங்க…” இப்படி நிறைய இருந்தது…

ஆனால் அதற்கெல்லாம் அவன் தந்த பதிலும் தராத பதிலும்… பார்வை மட்டுமே.. நம்பிக்கையாய், உரிமையாய், நேசமாய்… மண் வாசனையோடு விழும் தூறலாய்… மொழி புரியாத இசையில் கூட எதோ உணர்வு புரியும் காதலாய் இருந்தது அவன் பார்வை…

இப்போது அபிக்கு, பேச தோன்றவில்லை… ‘எனக்கு கோச் தந்திருப்பது நம்பிக்கையை… முழு நம்பிக்கையை… அதில் புள்ளி அளவு கூட குறையவில்லை… அதே நம்பிக்கையை.. நானும் தர வேண்டும்’ என மனம் செல்ல செல்ல… அவனை கண்களால் ஈர்க்க தொடங்கினாள்… மீட்கவே முடியாத பார்வையாக தன்னவனை அவளும் பார்க்க தொடங்க…

அமர் ஆசுவாசமானான், கண்ணில் பார்த்துவிட்டேன்… என்னுடையவளாக… ம்… ஷி ஸ் மைய்ன்… என சொல்லியபடியே தனதருகில் அமர்ந்தவளை ஆசையாக பார்க்க தொடங்கினான்..

வீட்டில் உள்ள நார்மல் ட்ரெஸ்… அதிலேயே  அவளின் அழகு அவனை இழுக்க… அமர், மெல்லிய புன்னகையால் அவளை தன்னுள் இழுக்க தொடங்கினான்…

அமருக்கு ‘வந்திடுவா… இன்னும் கொஞ்ச நாளில் என் வீட்டுக்கே வந்திடுவா…“ என மனம் சொன்னலும்.. அமரால், அந்த கனத்தை தாங்கமுடியவில்லை… “அபி… ப்ளீஸ் பாடு…” என்றான் அவளையே பார்த்தபடி… மொத்தமாக உணர்வின் பிடியிலிருந்தான்.. வார்த்தைகள் கரகரப்பாக வந்தது…

தட்டாமல் செய்தாள்… தன்னவனின் வேண்டுதலை… “ம்…

காட்டில் தொலைந்தேன்…

வழியாய் வந்தனை…

இருளில் தொலைந்தேன்…

ஒளியாய் வந்தனை…

எதனில் தொலைந்தால்…. ம்ம்….

எதனில் தொலை…ந்தால்…

நீயே வருவாய்….

மலர்கள் கேட்டேன்…

வனமே தந்தனை…” மெல்லியகுரலில் அபி பாட அமைதியாக அமர்ந்திருந்தான் அமர்… வேறேதும் பேச தோன்றவில்லை இருவருக்கும்.. இருட்ட தொடங்கியிருந்தது… மெல்ல பறவைகளின் சத்தம் மட்டுமே கேட்டது… இன்னும் அமரால் பேச முடியவில்லை… தடுக்கிறது…

மகா சிற்றுண்டி கொடுத்துவிட்டார் வேலையாட்களிடம்.. இருவரும் மிக சிரமப்பட்டு… ஒருநிலைக்கு வந்தனர்…

காளிப்லாவேர் பக்கோடா… அமர்க்கு, இறங்கவில்லை அது.. “நாம… உள்ள போலாமா…” என்றவன் எழுந்து அவளுடனேயே உள்ளே சென்றான்…

அடுத்த அரைமணி நேரத்தில் சபரியும், அமரும் விடைபெற்று வீடு வந்தனர். அவர்கள் வீடு வந்தவுடன் சபரிக்கு போன் வந்தது… முரளியிடமிருந்து…

Advertisement