Advertisement

மின்னோடு வானம் நீ….
மதியம் கொஞ்ச கொஞ்சமாக வெயில் ஏற தொடங்கியது… மாணவர்களும் மரங்களும் சரிபாதியான அந்த பெரிய கல்லூரி வளாகத்தில் எங்கும் புன்னகை முகங்கள்…
கோவையில் உள்ள… ஒரு டீம்டு யுனிவர்சிட்டி…. வளாகம்.
ஒரு சில அழுமூஞ்சி, சோக கீதங்கள்.. தவிர மற்ற எல்லோரின்    முகமும் ஏதோ ஒரு சந்தோஷத்தை சுமந்தது போல… பெரிய வேலையோ, சொந்த ஊர் செல்லும் எண்ணமோ… தனியாக பிசினஸ் செய்யும் பொலிவோ, அல்லது திருமணம் கைகூடிய நேரமோ…    இல்லை காதல் ஏற்றுகொண்ட நேரமோ…. இப்படி எல்லோர் முகத்திலும் வைரத்தின் ஜொலி ஜொலிப்பு….
MBA டிப்பார்மென்ட் கொண்டாட்டம் அது.
“ஸரா… ஸ்ஸரா…” என அவளின் பெயரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொலை செய்து… இழுத்தபடியே உச்சரித்து, வெறுப்பேற்றி… வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் அமர்…
அந்த கூட்டத்தில் அவன் மட்டும் தனியாக தெரிவான்… ஒட்டாத மாநிறத்துடன், ஓங்கி வளர்ந்து… அந்த டி- ஷர்ட்டில் அடங்காத உடற்தசைகள் என திமிரான அந்த உடல்மொழியால்.
அந்த உடல்வாகுக்கு சம்மந்தமே இல்லாத சிறிய கூர்மையான கண்கள்… அது இப்போது வேறு எங்கோ நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.
அவனின் அருகே சூழ்ந்திருந்த… கூட்டமாக நின்றிருந்த அவனின் நண்பர்களில் ஒருவன், இவனின் பார்வை வட்டத்தை மறைக்க….      “ச்சு…. தள்ளுடா” என சலித்தப்படியே சொல்லி, அவனை நகர்த்திய அமர்நாத் இன்னும் இன்னும் பார்த்துக் கொண்டிருந்தான்..
நண்பர்கள் ஒரு எழுட்டுபேர் இருப்பர் அந்த இடத்தில்… இவனின் குரலும் உடலும் இங்கிருக்க… ஆவி எங்கையோ இருப்பதை உணர்ந்த அந்த நண்பர்கள் கூட்டம் “என்ன டா… அ..து…” என கிண்டாலான குரலில் கோராசாக கேட்டு அவனின் பார்வை சென்ற புறம் பார்க்க….
இப்போது எங்கிருந்தோ ஒரு காற்று சின்னதாக, தயங்கி தயங்கி       வீச… அமரின் உள்ளுனர்வும் அடித்து ஏதோ சொல்ல… சந்தேகமாக பார்த்தவன், இப்போது கூர்ந்து பார்க்க… அவனை கடந்து அரை    பர்லாங்கு சென்ற காற்று.. ம்கூம் சென்றவள், கருத்தாக இவனை, கொஞ்சம் திரும்பி பார்த்தாள் போலும். அமர் இமைக்காமல் பார்த்திருந்தான் அவளை.  
அந்த அரைநொடி… இவனை மட்டும் நோக்கி உருளும் கோலிகுண்டு கண்களை… பார்த்தவனுக்கு… ‘ஏற்கனவே கண்ணு பெருசு இதுல மை வேற…’ என எண்ணி திரும்பிக் கொண்டான். அவனின் செயலில் அந்த கண்களும் வேறுபக்கம் திரும்பியது.
இங்கே அவனின் குழாம் எல்லாம்… இந்த காட்சியை கண்டுவிட்டு…
“அபி… அபி… அபிராமி… அபிராமி…
உன்னை நானறிவேன்….
மச்சி…. என்னையன்றி
வேறு… யாரறிவார்….” என அவனின் நண்பர்களின் ஒருவன் அலற…
அதற்குள் சுதாரித்த அமர்… ‘இவன்ங்க வேற இருக்கானுங்களா…’ என தன்னையே நொந்து கொண்டு…. அவசர அவசரமான குரலில் “ஸரா… நீ இவனோட ஒரு செல்பி எடுத்து, அத ஸ்டேடஸ்ல போடு…. தன்னைபோல… அந்த பீட்டர், உனக்கு போன் பண்ணுவான்…
அப்படியும் போன் பண்ணலைனா சொல்லு… நேர போய் ஒரே தட்டு… அப்புறம் உன் பக்கம் கூட வரமாட்டன்…” என்றான் தலையை கோதியபடியே கடைசி வார்த்தையை சின்ன குரலில் சொல்லியபடியும் சிரிப்பை அடக்கியபடியுமாக.
அவனால் ஸரா… என்று அழைக்கப்பட்ட… சாரா… “டேய்.. இடியட்… உங்ககிட்ட சொன்னேன் பாரு… உங்களையெல்லாம் எந்த பொண்ணு திரும்பி பார்த்துருக்கு…
எனக்கு யோசனை சொல்ல…” என புலம்ப தொடங்கினாள்.
அதற்கு பதிலாக கெளதம் “இதுக்குதான் சீனியரை லவ் பண்ண கூடாதுன்னு சொல்றது… பாரு கல்லேஜ் முடிஞ்ச உடனே.. உன்னை மறந்துட்டான்…” என்றான் நியாயவாதியாக.
சாரா… “போடா” என எழுந்து கொண்டாள், அவளுடனேயே இன்னும் இரண்டு தோழிகளும் எழுந்து சென்றனர்.  
இது இவர்களுக்கு கல்லூரி இறுதி வருடம்… முழுதான இரண்டு வருட தோழமை இன்னும் ஒரு சிலமணி நேரங்களில் பிரியபோகிறது…    கொஞ்ச கொஞ்சம் பொறுப்பு எட்டி பார்க்கிறதோ எல்லோரிடமும்.
அவளை திருட்டுத்தனமாக பார்த்தபோது வராத கோவம், இப்போது இவர்களின் பாடலிலும், கிண்டலில் வர… ‘எனக்கு எங்க போச்சு     அறிவு…
அதுதான் சின்ன பிள்ளைனா… நாம அதுக்கு மேலலைல இருக்கோம்…
நமக்கு இருக்கிற பிரச்சனையில…. ‘ என தன்போல் மீண்டும் அவள்  சென்ற வழி, வெறித்த தன் விழிகளை மூடி திருந்தவன் ‘போடி… நீ எனக்கில்ல… போ..’ என மனதில் அழுத்தி சொல்லிக் கொண்டான்.
இப்போது நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் தனது நபர்களை… உடனே அருகில் வந்த நரேன் “டேய்… சும்மா டா… நீ இனி எப்போ வரபோற சொல்லு… சும்மா…” என அமரின் தோளனைத்து… சமாதானம் செய்தான் அப்போதுதான் அடங்கியது அந்த பாட்டு சத்தம்.
வெகு நாட்கள் ஆகிறது இவர்கள் இது போல் கூடி… கடைசி வருடம் அளாளுக்கு கொஞ்சம் பிஸி… அதுவும் அமர், சந்தோஷ் கால்பந்து கோப்பைக்காக தமிழ்நாடு சார்பாக விளையாடி பதக்கத்துடன் வந்திருக்கிறான் இப்போதுதான்.
எனவே அவனை கண்ணில் கண்டே இரண்டு மாதம் ஆகிறது நண்பர்களுக்கு… எனவே பேசிக் கொண்டிருக்க… அவர்களின் பெண் தோழிகளும் அதில் சற்று நேரம் இருந்தனர். அவர்களையும் இவர்கள் ஓட்டியே தொரத்திவிட…. இப்போது முழுதான நண்பர்கள் கூட்டம்  மட்டும்.
இந்த பசங்களுக்கு பேச என்னதான் இருக்குமோ தெரியாது… டீக்கடை, மரத்தடி, குட்டிசுவர், மொட்டமாடி, பைக் மீது என கண் கண்ட இடமெல்லாம்… கூடி கூடி பேசுவது…
போர வர பொண்ணில், தொடங்கும் பேச்சு… ட்ரம்ப் வரை நீளும்… எங்கும் அவரவர் கருத்து… யாரையும் அடக்காத த்வனி… சில சமயம் அமிர்ஷாக்கே யோசனை சொல்வது என கல்லூரி நட்புக்கு கட்டுபாடு கிடையாதுதானே.

சேர்ந்த புதிதில்… UG முடிந்து வெவ்வேறு கல்லூரியிலிருந்து கொஞ்சம் தயக்கமாக சேர்ந்து கொண்ட நண்பர்கள்தான் கெளதம், அபிஷேக், மணி, இப்ராஹிம், சுரேன் என ஒரு பட்டாளம். இதில் நரேன், அமர் மட்டுமே… இதே கல்லூரி, தொடக்கத்திலிருந்தே…
மாணவர்கள் என சொல்லவே முடியாத தோற்றம்… கம்ப்ளிட் மேன் லுக் வந்திருந்தது… அதுவும் அமர் தன் விளையாட்டினால்… நல்ல திடமாகவும் பொலிவாகவும் இருந்தான். அவன் பந்தை கையாளும், ம்கூம்… காலால் உதைக்கும் அழகே.. தனிதான்.
ம்… அவனின் அடையாளம் அது. அவன் கால்பந்து விளையாட்டு வீரன். பிடித்ததை செய்கிறான்… அதென்னமோ அப்படிதான், இங்கு கல்லூரியில் சேர வரும்போதே…. அந்த ப்ரின்சிபளிடம் கேட்ட முதல் கேள்வி…”என்னை, உங்க புட்பால் டீம்மில் சேர்த்துக்கனும்” என்பதுதான். மார்க்கெல்லாம் பெரிதாக இல்லை அவனிடம், விளையாட்டு திறமை மட்டும் இருந்தது. எனவே காசு கொடுத்துதான் சீட்டே வாங்கினார் அமரின் அப்பா, முரளி. அதில் இவனிற்கு கேள்வி வேறு.. என நிர்வாகம் முணுமுணுத்தது என்னமோ உண்மை..
மற்றபடி படிப்பு என்பதெல்லாம் அவனின் தூர பார்வையில் கூட   இல்லை. அவனின் போதிமரம் சொல்லுவது போல… பிடிச்சதை செய்யவே… இங்கு வந்தான்.
அவர்தான் சொன்னார்… கல்லூரி சென்றால்தான் விளையாட முடியும் என அதை கொண்டே இந்த கல்லூரி படிப்பு…
வீட்டினரின் பேச்சு தாங்க முடியாமல்… சமஸ்ட்டருக்கு, ஒரு மாதம் முன்பு, உருண்டு புரண்டு படித்தாவது அரியர் இல்லாமல் பாஸாகி விடுவான்.. அதில் கல்லூரியின் பங்கும் இருக்கும் போல…
ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்… இவனை கல்லூரி விட மறுக்கிறது.. இப்போது. காரணம் சந்தோஷ் கோப்பை வென்ற முதல் தமிழக அணி இது. அதில் விளையாடிய இவனை எப்படி விடும் கல்லூரி. அதுவே இப்போது கல்லூரி முழுவதும் பேச்சாக இருக்கிறது.
முன்பு, அவனின் அப்பா கூட சொல்லுவதுண்டு… “போடா… வெளிநாடு போய்  படி… நான் பார்த்துக்கிறேன்…” என்பார்.
ம்கூம் அசையவில்லை அவன்.. “ப்பா… உங்க பிசினஸ் பார்க்க என்னை ரெடி பண்ணாதீங்க” என்பான் சிரித்தபடியே, சற்று திமிர் குரலில்.  அப்படியே நடந்து விடுமோ என பயம்தான் முரளிதரனுக்கு. நடந்தும்விட்டதோ.
ஒரு பெருமூச்சு விட்டு எழுந்தான் அமர். அபிஷேக் “டேய் என்னாங்கடா… கிளம்பிட்டீங்க… வெளிய எங்கையாவது போலாம்… ஈவ்னிங் கிளம்பனும் நாங்க” என்றான்.
இன்று கல்லூரி முடிந்து ப்ர்வெல்… எனவே சின்ன சின்ன கலட்டாக்களுடன் எல்லாம் முடிந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்து சில பல நண்பர்கள் பேசிக் கொண்டிருக்க… அதில் ஒன்றுதான் இந்த கூட்டம்.
அமர், தன் மனதை அவளிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டு.. அவர்களுடன் நடந்தான்… சின்ன சின்ன சண்டைகளுடனும் கலட்டாக்களுடனும்  பொழுது சென்றது.
எல்லோரையும் மாலையில்.. சென்ட்டாப் செய்து, ஒருவழியாக நரேனும், அமரும் வெளியே ஹைவேய்யில் உள்ள… தாபாவில் அமர்ந்தனர்.
வயிறு பசியால் கபா கபாவென பற்றி எரிய…. நரேன் எதையும் கவனிக்கவில்லை… அங்கு வந்த சர்வேரிடம், ஆடர் கொடுக்க தொடங்கினான்.
ஆனால் அமருக்கு அப்படி அல்ல போல, அமைதியாக இருந்தான். அவனிற்கும் சேர்ந்து இவனே, ஏதோ சொல்லிவிட்டு, அமர்ந்து கொண்டான்.
ஓரு குடில் போன்ற அமைப்புடன்… மெல்லிய ஒளியில் இருந்தது. மண்ணால் செய்த பாத்திரங்களில் உணவு பரிமாறப்பட்டது, அமைதியான சூழல்… மெல்லிய பேச்சு குரல்கள்.. குடும்பமாக அல்லாது  எங்கும் ஆண்களின் முகம்தான் அங்கு. அமரின் முகம் ஏனோ தெளியாமலே இருந்தது .
நரேன் “என்னடா இன்னைக்கு இப்படி இருக்க… ஜெயிச்சிட்டு வந்திருக்க…. கொஞ்சமாவது சந்தோசம் தெரியுதா பாரு முகத்தில்…
சொல்லு… பாருக்கு போலாமா…” என்றான் ஆற்றாமையாக, அப்போதும் லேசாக சிரித்து “இல்லை” என்பதாக தலையசைத்தான் அமர்…
சற்று கலகலப்பு பேர்வழிதான் அமர்… சுனங்கி அமரவெல்லாம்  மாட்டான்… சட்டு சட்டென கை நீளும்… கொஞ்சம் அராத்துதான்…   ஆனால் அதெல்லாம் இப்போது அவனிடம் இல்லையோ…. நரேனின் முகத்தில் கடுப்பு வந்தது. அமரின், இந்த சிரித்த முகத்தை பார்த்து.
மீண்டும் நரேனே.. “என்ன டா பிரச்சனை… சொல்லுடா… எனக்கு தலைய வலிக்குது…” என்றான் சலிப்பாக.
அமர் “சபரிண்ணா எங்கடா…” என்றான்
நரேன்னிடம் ஒரு தெய்வீக புன்னகை “எனக்கென்ன தெரியும், கூப்பிடு உன்னோட போதிமரத்துக்கு…. சரி, நான் கிளம்பவா….” என்றான் கான்டாக.
இருவரும் பக்கம் பக்கம் வீட்டு நண்பர்கள்..  நரேனின் அண்ணந்தான் அமரின் பெட், நரேன் சொல்லுவது போல் போதிமரம்… குரு… ரோல்மாடல் இப்படி எல்லாமே…

நரேனை விட சபரியைதான் அமருக்கு பிடிக்கும், ஆனால் அதெல்லாம் நரேனுக்கு தெரிந்தாலும் கூட… அமரை எந்த இடத்திலும் காயபடுத்தமாட்டான் நரேன், இன்னும் அப்படியே.
அமர் “இரு டா… போலாம்… ஊரில் இருக்காரான்னு கேட்டேன்” என்றான். தன் நண்பனை சாந்தப்படுத்தும் எண்ணத்துடன்.
இரு குடும்பங்களும் வேறு வேறு பூர்வீகம் கொண்டவர்கள். இங்கு ஆரம்பத்தில் வேலை தேடி வந்தவர்கள்தான் இவர்களின் தந்தைகள்.
அமரின் அப்பா முரளிதரன் டெக்ஸ்டையில்ஸ்… அதாவது துணிகளில் ப்ரிண்ட் செய்யும் தொழில். சொந்தமாக இரண்டு யூனிட் உள்ளது, இதை தவிர… இப்போது புதிதாக எம்பராய்டு யூனிட்டும், கூடவே குடோன்கள் வாடகைக்கு விடுவது என அதனை சுற்றிய தொழில்கள்.
முரளிதரன் சுமதி தம்பதியின் மூத்த மகன் அமர்நாத், அடுத்தது ஒரு மகள் பிரியதர்ஷினி. மகள் இப்போதுதான் கல்லூரி இரண்டாம் வருடம் B.Se கணிதம் படிக்கிறாள்.
நரேன் அப்பா விஸ்வநாதன், மோட்டார் தயாரிக்கும் யூனிட் வைத்திருக்கிறார். இருவரும் ஒரே இடத்தில் பக்கத்து பக்கத்து இடத்தில் நிலம் அமைந்தது, அதனை கொண்டு வளர்ந்து வரும் நட்பு…. முப்பது வருடங்களாக.
கிட்ட தட்ட சொந்தபோல… ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வீட்டில் எந்த நல்லது கேட்டதும் நடக்காது. இவர்களின் சொந்தத்தை அவர்களுக்கு தெரியும், அவர்களின் சொந்தத்தை இவர்களுக்கு தெரியும் அப்படியொரு பிணைப்பு.

இன்னமும் ஏதும் சொல்லாமல் இருக்கும் அமரை பார்த்து நரேனுக்கு கோவம் வர.. “சரி சாப்பிடு எங்கிட்ட ஏதும் சொல்லாத… நான் கேட்க மாட்டேன்… சாப்பிட்டு கிளம்பலாம்” என்றான் இன்னும் LKG நட்பாக.
அமர் “ச்சு… “ என சலித்தபடியே “இல்ல டா…. நம்ம காலேஜ் புட்பால் டீம்முக்கு கோச்சா கூப்பிடுறாங்க..” என்றான் முகத்தில் மருந்துக்கு கூட சந்தோசம் இல்லாமல்.
அவனிற்கு மாறாக நரேன் துள்ளினான்…. “ஹேய்… நைஸ்… யு மேட் இட்… மேன்… யெஸ்… யெஸ்… எப்போலிருந்து போகனம்…” என ஆர்பாட்டமாக கேட்க…
அமர் சோர்ந்து போனான்… ஏனோ அவனிற்கு பேசவே வரவில்லை…. என்ன செய்வது என தெரியவில்லை… லேசாக சிரித்தபடியே அமர்ந்திருந்தான்.
உணவு வந்தது… இருவரும் உண்ண தொடங்கினர்… நரேன் அதன் பிறகு “என்ன செய்ய போற, என்ன யோசனை… சொல்லு…” என பலவாறாக, கேள்விகளாக, வளைத்து வளைத்து கேட்டும், அழுத்தமான புன்னகை  தவிர வேறேதும் வரவில்லை அமரிடமிருந்து.
அமரின் போன் ஒலிக்க தொடங்கியது “அப்பா…” என்ற பெயர் தாங்கி.
அமரின் முகத்தில் அந்த புன்னகையும் தொலைந்து போனது. அமர் “போலாம் டா… அழைக்கிறார் முரளி…. இனி விட மாட்டார்…” என்றான் சட்டமாக நாடகபாணியில், ஒரு பெருமூச்சை விட்டபடி.
இருவரும் வீடு நோக்கி கிளம்பினர். நேரே நரேன் வீட்டிற்கு சென்றான் அமர். அங்கு நரேனின் தாய் ஜெயந்தி “வாங்கப்பா, சாப்பிடலாம்” என்க.
அமர் “இல்ல த்த, சாப்பிட்டோம்… எங்க சபரிண்ணா… தூங்கிட்டாங்களா” என்றான் காரியமே கண்ணாக….
ஜெயந்தி சிரித்தபடியே… “இல்ல டா… ஏதோ சத்தம் கேட்குது தூங்கலைன்னு நினைக்கிறேன்.. போய் பாரு” என மேலே பார்த்தபடியே சொன்னார்… அமரும் நிற்காமல் மேலே சென்றான்.
“காலம்மென்பது மாறும்…
வலி தந்த காயங்கள் ஆறும்…
மேற்கு சூரியன்… மீண்டும் காலையில்,
கிழக்கில் தோன்றிதான் தீரும்…
நதியோடு போகின்ற படகென்றால் ஆகாதா..
ஆனாலும், அழகாக… கரை சென்று சேராதா…
உயிரே… என் உயிரே…
ஒரு வாய்ப்பை தருவாயா..

Advertisement