அழகு 9

    “டேய் மச்சான் … என்ன விளையாட்டு டா இது.உண்மைய சொல்லணும்னா தங்கச்சிய இங்க கூட்டிட்டு வந்ததுல எனக்கு உடன்பாடே இல்ல….எனக்கு நீ உன் பக்கத்துல எப்பவும் வச்சுப் பார்த்துகிறதுதான் சேஃபா தோணுது …. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டுக்கப் பாரு…” என்ற ரமேஷிடம் ,

“சரிடா , நான் அதற்கான முயற்சிகள் எடுக்க ஆரம்பிச்சிட்டேன் …குழப்பிக்காம ரெண்டு பேரும் தூங்குங்க … ” என்றவன் ஃபோனை வைத்து விட்டான்.

ஜெனியின் அருகில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென சிணுங்க ஆரம்பிக்கவும் , விழித்த ஜெனி அருகில் தயாராக வைத்து இருந்த பால் சிப்பரை எடுத்து குழந்தைக்கு கொடுக்க ஆரம்பித்தாள்.

வயிறு நிரம்பியதும் பாதியை வைத்து விட்ட குழந்தை மறுபடியும் அழ ஆரம்பிக்கவும் , தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றாள். அழுகை நின்றபாடில்லை … என்ன செய்ய என்றுத் தெரியாமல் , அறையைத் திறந்துக் கொண்டு, வேறு வழியில்லாது அனன்யா அறையைத் தட்டினாள்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு வெளியே வந்த அனன்யா , ஜெனியிடம் குழந்தையை வாங்கி சமாதானப்படுத்த முயன்றாலும் குழந்தை அழுகையை நிறுத்துவேனா என்றது.

வேறு வழியில்லாது அரவிந்துக்கு ஃபோன் அடித்து விவரம் கூற , ஸ்பீக்கர் போட்டு மகனிடம் பேச ஆரம்பித்தான். குரல் வந்த திசையை நோக்கி அழுகையை நிறுத்திக் கொண்டுப் பார்த்தக் குழந்தை தந்தையைக் காணாது மறுபடியும் “ப்பா… ப்பா ” என சொல்லி அழ ஆரம்பித்தது.

அனன்யாயாவும் ஜெனியும் ஒருவரை ஒருவர் பார்க்க , “பூவிலே….” என்று பாடத் தொடங்கியதும் குழந்தை அழுகையை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி ஜெனியின் மடியில் உறங்க ஆரம்பித்து விட்டான்.

குழந்தையைக் கட்டிலில் கிடத்தி விட்டு , ” இப்படித்தான் இவங்கப்பா குரல் கேட்டா தான் தூங்குவார் , சரி அண்ணி தூங்கு …ங்க”

” சாரி அனு”

“அண்ணி ” என்று ஆச்சரியமாகப் பார்த்தவளை, “அப்படிக் கூப்பிடலாம் தானே”

“என்ன கேள்வி இது ” , “அப்ப நீயும் ங்க… போடுறத நிறுத்து … என்னமோ ரொம்ப தள்ளி நிக்கிற ஃபீல்… “

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா”

“சொல்லு அண்ணி “,

” என்ன செய்றது தெரியாம டிஸ்டர்ப் பண்ணிட்டேன். எனக்கு எனக்கு… உங்கண்ணன் நம்பர் வேணும் … “

“உங்கண்ணன் நம்பர் தவிர வேறு யார் நம்பரும் என்மைன்ட்ல ஸ்டோர் ஆகவே இல்ல…. ஏன் என் நம்பர் கூடத் தெரியாது” என்று புன்னகைத்துக் கொண்டே சொன்ன ராதிகாவின் நினைவு வந்ததும் கண் கலங்கிய அனு , அவளது ஃபோனை வாங்கி அரவிந்தின் அலைபேசி எண்ணை பதிவேற்றம் செய்து தந்து விட்டுச் சென்றாள்

அந்த எண்களைப் பார்த்த ஜெனி ,”அத்தான்’ எனப் பதிந்துக் கொண்டாள். அதிகாலை கண் விழித்தவள் குழந்தை கண் விழிப்பதற்குள்ளாக குளித்து முடித்து சமையலறைச் சென்று பால் எடுக்கச் சென்றாள். சமீபமாக காலையில் எழுந்ததும் தேவாலயத்திற்கு சென்றப் பழக்கத்திற்கு அந்த வீட்டின் பூஜையறை சென்றவள் சிறிது நேரம் கண்மூடி நின்று விட்டேச் சென்றாள். அங்கு சமையல் செய்யும் தெய்வா , ஜெனியைப் பார்த்ததும் ,

“ராதிகாம்மா அதுக்குள்ள எழுந்துட்டீங்களா ” என்றவாறே அவளுக்கு காஃபியும் , குழந்தைக்கு பாலும் கலந்து தந்தவர் ,

“அமெரிக்காலருந்து எப்பங்கம்மா வந்தீங்க … பிள்ளை தவிச்சுப் போய்ட்டுங்கம்மா… வீட்ல இருக்கிற போட்டோவல்லாம் பார்த்து ‘ம்மா.. ம்மா ‘னு கூப்பிடும் போதெல்லாம் , அனும்மா கவலைப்பட ஆரம்பிச்சுடும்.”

என்றவாறே அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.ஜெனிக்குத்தான் ஒன்றும் புரியவில்லை . “என்ன ராதிகா அமெரிக்கால இருக்காங்களா… அவங்க உயிரோட இல்லனு சொன்னாங்க..” இவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வந்த அனன்யா ,

“அண்ணி மாடில ஸ்ரீ சத்தம் கேட்டது போல இருந்துச்சு … ” என்றவுடன் , “இதோ போறேன் ” என்று காஃபியையும் பாலையும் எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியே வர , வெளி வாசலிலிருந்து வேகநடையுடன் அரவிந்த் வீட்டுக்குள் வந்துக் கொண்டிருந்தான்.

வந்தவன் ஜெனியைப் பார்க்காது , ” அனுமா … ” என்றான். அவனை தினமும் அதிகாலையிலயே ஊட்டியில் பார்த்துப் பழக்கப்பட்டவளுக்கு இன்றும் அவனைக் கண்டதும் முகத்தில் தானாகவே புன்னகை மலர்ந்தது .அருகில் சென்றவள், “வாங்க அத்தான் ” என்றாள்.

“அத்தான் அத்தான்னு என்னை பித்தனாக்குறாளே” என நினைத்தவன் , ஒரு புன்னகை மட்டும் தந்து விட்டு , ” அனுமா …. அவர் எழுந்துட்டார்னா தூக்கிட்டு வா , நான் கிளம்பனும் “

“இதோ நான் தூக்கிட்டு வாறேன் , இந்தாங்க காஃபி , ” என அவளிடமிருந்ததை அவனுக்கு தந்தாள்.அதுவரை அவள் முகம் பார்க்காது பேசிக் கொண்டிருந்தவன் , காஃபி எடுக்கும் போது, ” இந்த காஃபிக்குத் தான் எத்தனை நாள் தவம் …. ” என நினைக்க ,

அந்தப் பார்வையைச் சந்திக்க இயலாது விழிகளை தாழ்த்திக் கொண்டு மாடிக்கு ஏறினாள். அங்கு அப்பொழுதுதான் புரண்டுக் கொண்டிருந்தக் குழந்தை ஜெனியைக் கண்டதும் , கட்டிலை விட்டு இறங்க முற்பட்டது. ஓடிச் சென்று அணைத்துக் கொண்டவள் ,

“உங்கப்பாவத் தேடுறீங்களா , அவர் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்துறீங்க , பாட்டுப் பாடுனதும் தூங்கறீங்க…. ரொம்பவும் க்யூட்டா இருக்கிறீங்க. … வாங்க வாங்க போகலாம்” என கொஞ்சிப் பேசிக் கொண்டே மாடியிறங்க , தந்தையைக் கண்டக் குழந்தையோ துள்ளி இறங்க முயல , மாடி படிகளில் தாவியேறி  மகனை வாங்கிக் கொண்டான் அரவிந்த்.

விந்தை என்று கையில் வந்தாயே

என் மனம் குளிர

தந்தை என்று பட்டம் தந்தாயே

நான் தலை நிமிர

தலை நிமிர…

தன்னருகிலே நின்றுக் கொண்டிருந்த தந்தை மகன் பாசப்பிணைப்பினைக் கண்டு கண் கலங்கியவள் , மெல்லப் படியிறங்கினாள். இவ்வளவு தூரம் மகனைக் காண ஓடி வந்த அரவிந்தைப் பார்த்தவள் , “எனக்காகத்தானே பிள்ளையை பிரிஞ்சு இருக்கார்… நான் செய்தது தப்போ…” என்று யோசிக்க ஆரம்பிக்க , அருகில் வந்து நின்ற அரவிந்தை கவனிக்கவில்லை.

குழந்தையின் பிஞ்சுக் கரங்களை பிடித்து அவள் முகத்தில் தட்டி நிகழ்வுக்குக் கொண்டு வந்தவன் , ” பால் தரச் சொல்லுங்க குடிக்கலாம்” எனவும், அந்த சிப்பரை குழந்தையிடம் தர , தந்தைக் கரங்களில் அமர்ந்து அழகாகக் குடித்துக் கொண்டிருந்தான்.

” ண்ணா ஒரு அஞ்சு நிமிஷம் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்.அத்தானையும் எழுப்புறேன்”

“இல்லம்மா அவன் தூங்கட்டும் , நான் அங்கப் போய் சாப்பிட்டுக்கிறேன்… ஆஃபிஸ் போகணும் மா” என்றவன். மறுபடியும் ஜெனியிடம் குழந்தையைத் தந்து விட்டுக் கிளம்பி விட்டான்.

” என்ன அனு உடனே கிளம்பிட்டாங்க , நைட்டும் தூங்கல , காலையிலயே இவ்வளவு தூரம் வந்துட்டு , திரும்பவும் கிளம்பிட்டாங்க”

“என்ன அண்ணி செய்ய சொல்ற , இவருக்கு ஒன்பது மாசம் இருக்கும் … அண்ணன் உன்னைத் தே….ம்…. ஒருவேளை யா மும்பய் போனாங்க , தீடீர்னு தாய் பாலும் இல்லாம , அம்மா அப்பாவும் பக்கத்துல இல்லாம குழந்தைக்கு ரொம்ப உடம்பு முடியாம போயிருச்சு …. அதிலருந்து அண்ணன் இப்படித்தான் …. அதிகமா அவர பிரிஞ்சு இருக்க மாட்டாங்க , ஊட்டிக்கு கூட வர மனசில்லாம தான் கிளம்புனாங்க …. ஆனா கடவுள் உன்னை அங்க தான் கண்ல காட்டியிருக்கார். பாவம் அண்ணன் நீயில்லாம எவ்வளவு கஷ்டப்படுறார் தெரியுமா…. “அண்ணனின் நிலையை எண்ணி வருந்தியவளுக்கு என்னப் பேசுகிறோம் என்பதை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.

” அனு…. ” என்று அழைத்த ஜெனியைப் பார்த்தவள் , தான் சொன்னது ஞாபகம் வர , “அது…. நீயும் ராதிகாவும் ஒரே மாதிரி இருக்கீங்களா … ராதிகா கிட்டப் பேசுறதா நினைச்சு ….” அதற்குள் மகனைத் தூக்கிக் கொண்டு வந்த ரமேஷைப் பார்த்தவள் ,

” நான் போய் குடிக்க எடுத்துட்டு வாறேன்”

 என்றுக் கிளம்பி விட்டாள்.

அதன் பிறகு அனன்யா ஜெனியிடம் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஜெனிஃபராக ஏதாவது கேட்க வந்தாலும் குழந்தைகளைப் பற்றி மட்டும்  பேசிக் கொண்டார்கள். தான் எதுவும் உளறி விடுவோமோ என்று அனன்யா பயந்ததேக் காரணம்.

அரவிந்த் அனு எண்ணிற்கு அடித்து மகனிடம் பேசுவதும் , அதிகாலையில் கிளம்பி வந்து மகனைப் பார்த்துச் செல்வதுமாக இருந்தான். அவன் வந்தாலும் ஜெனிஃபரைப் பார்ப்பதுமில்லை , பேசுவதுமில்லை. குழந்தைகளிடமும் , அனன்யாவிடமும் பேசி விட்டுக் கிளம்பி விடுவான்.

அந்த வார இறுதியில் ஜானகியையும் தாயம்மாவையும் அழைத்து வந்தவன் அன்றைய நாள் முழுவதையும் திருப்பூர் வீட்டிலயே கழித்தாலும் , ஜெனிஃபரின் முகம் பார்க்கவுமில்லை , பேசவுமில்லை.

ஜெனிக்கு அது என்னவோ போல் இருக்க  , அவளாக வழிய சென்று பேச முயற்சித்தாலும் நகர்ந்து விடவும் , ஜெனிஃபருக்கு அழுகை வந்துவிட்டது.இவர்களையே கவனித்துக் கொண்டிருந்த ஜானகிக்கு அரவிந்தின் நடவடிக்கைப் புரியவில்லை. தங்கையோடு அமர்ந்திருந்த மகனை  பிடித்துக் கொண்டவர் ,

“அரு… நீ செய்றது சரியல்ல , புள்ளை கண்ணெல்லாம் கலங்கிப் போய் நிக்கிது. ஏன் இப்படி பண்ற , காலைல வந்ததுலருந்து ராதா கிட்ட நீ பேசல , பார்க்கல ,தானா வந்த புள்ளையையும்  தவிர்க்கிற … அது மனசு படுற வேதனை உனக்குப் புரியலயா…. பேசாம உண்மையச் சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்… அனுமா சொல்லுமா ….” என மகளையும் சேர்த்துக் கொண்டவரிடம் ,

“ம்மா…. ப்ளீஸ் பொறுமையா இருங்க ,நாம் கூட்டிட்டு போகாம , அவளே வரணும் சொல்லனும் , அதுக்குத்தான் இப்படில்லாம் பண்றேன். எனக்கு மட்டும் அவள இப்படிப் பார்க்கிறது சந்தோஷமாவா இருக்கு ….ம்மா நான் அவ கிட்ட நீ என் மனைவி ராதிகா தான் என் கூட வந்துருனு அன்னைக்கு சொல்லியிருந்தாலும் அவ வந்துருக்க மாட்டா ….  வந்தாலும் உடல் மட்டும் தான் ராதிகாவா இருக்கும்…. மனசு ராதிகாவா இருக்காது ….. அவள எனக்குத் தான் மா தெரியும் ….. “

ஜானகியும் அனன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் ,

“என்னமோ செய் , ஆனா சீக்கிரம் வர வை… ” என்று விட்டார்.

இரவு உணவை முடித்து அனைவரும் கிளம்பவும் , குழந்தையை தூக்கிக் கொண்டவன் , ” அனுமா நாங்க கிளம்பறோம் .ரமேஷ் நாளைக்கு கோவை வந்துட்டுப் போடா … ” என்று விட்டு காரில் சென்று ஏறிக் கொண்டான்.

தாயம்மாவும் , ஜானகியும் பின்னால் ஏறிக் கொள்ளவும், குழந்தையை அவர்களிடம் தந்து விட்டு காரை ஓட்டிச் சென்று விட்டான். எப்படியும் குழந்தையை தன்னிடம் தந்து விட்டுச் செல்வான் என்று நினைத்திருந்தவளுக்கு அவன் அப்படித் தராமல், திரும்பிக் கூடப் பாராமல் சென்றது , அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு ஓடியவள் , வாய் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

ரமேஷிடம் மகனைக் கொடுத்து விட்டுச் சென்ற அனன்யா , “அண்ணி ” எனவும் , அவள் கையைப் பிடித்துக் கொண்ட ஜெனி , ” ஏன் அனு உனக்கு என்னையப் பத்தி ஏதாவது தெரியுமா ….மதர் உங்க கிட்ட எல்லாம் என்ன சொன்னாங்க தெரியாது, ஆனா என் மனசுல அடைச்சுட்டு இருக்கிறதை யார்கிட்டயாது சொல்லணும் போல இருக்கு அனு…. ” என்றவள் தோளைத் தட்டி அவளை தன் மீது சாய்த்துக் கொண்டவள், தன் அலைபேசியில் இருந்து அரவிந்துக்கு அழைத்தாள் , அவன் அழைப்பை எடுத்தது தெரிய , அதை ஜெனி பேசுவது கேட்பது போல் வைத்து விட்டாள்.

சிறிது நேரத்திலயே தங்கையின் அழைப்பைப் பார்த்தவன் , காரை ஓரமாக நிறுத்திவிட்டு , “அம்மா ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன்” என்றவன் , சற்று தள்ளி நின்று தங்கையிடம் பேசிவிட்டு வரலாம் என்று காதில் வைக்க , மறுமுனையிலோ ,

“நான் … நான் … யாருனே எனக்குத் தெரியாது அனு , என் பேர் தெரியாது , என்ன படிச்சேன் தெரியாது , எனக்கு குடும்பம் இருக்காத் தெரியாது …. எதுவுமே தெரியாது தெரியுமா … அது ரொம்பக் கொடுமை அனு…. ” என்று அழ ஆரம்பித்தவளை நன்றாக அணைத்துக் கொண்ட அனு , அவள் அழுகையை தடுக்கவில்லை,

“நல்லா அழுதுரு அண்ணி ப்ளீஸ் …. நல்லா அழுதுரு…” என்று மனதிற்குள்ளயே சொல்லிக் கொண்ட அனன்யா , அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

“ஒரு நாள் நைட் நல்லா இடி மழை ,எழுந்துப் பார்க்கிறேன் ஒரே இருட்டு , என்னால நிக்கவே முடியல அனு ,கை கால் எல்லாம் வலிக்குது, வெளிய இருட்டும் மழையும்… அந்த மழையப் பார்த்ததும் ஏதோ பயம் வந்துருச்சு , எங்க இருக்கேன்னேத்  தெரியல….நான் பாட்டுக்கு மழைல நடக்கிறேன் ….. யாரையுமே காணோம். யாரையோ தேடுறேன் …. ஆனா யாரைத் தேடுறேன் தெரியாது … “

அந்தப் புறம் கேட்டுக் கொண்டிருந்தவன் இதயமோ வலி எடுப்பது போல் தோன்றியது ….

”  யாரடாத் தேடுவ…நீ “

“அப்பதான் ஒரு சர்ச் தெரிஞ்சது , அது ஒரு கிறிஸ்மஸ் டைம்… அழகா ஸ்டார் … லைட் லாம் போட்டு அலங்கரிச்சு இருந்தாங்க….. அனு கிறிஸ்து பிறப்ப அறிவிக்கதானே நட்சத்திரம் வழிகாட்டுச்சு….. ஜெனிஃபரா பிறவி எடுத்த எனக்கும் அந்த நட்சத்திரம் தான் வழிகாட்டுச்சு….அந்த இருட்டுல ஒளியாத் தெரிஞ்ச அங்க போனேன். சர்ச் வாசல்ல உட்கார்ந்தது தான் தெரியும், கண் திறந்து பார்த்தா நிறைய சிஸ்டர்ஸ் (கன்னியாஸ்திரிகள் ) பெட்ல படுத்திருக்கிற என்னை சுத்தி நின்னுட்டு இருந்தாங்க … ஈரமா இருந்த என் டிரஸ் மாத்திவிட்டுருப்பாங்க போல ,

அவங்கப் பேசுறது மலையாளம்னு தெரிஞ்சதும் , தமிழ்ல பேசுறேன் , அவங்களுக்குப் புரியல … அப்புறம் இங்கிலீஷ்ல பேசினேன். நான் கேட்டது என்னத் தெரியுமா அனு ,

“இது கொச்சியானு தான்…. “

இரவில் ஜெனியின் பேச்சை  நின்று கேட்டுக் கொண்டிருந்த அரவிந்த் கால்கள் தளர அப்படியே அங்கிருந்த மின் கம்பத் தூணில் சாய்ந்து நின்று விட்டான்.

“ஏன்னா … கொச்சின் கொச்சின்னு நான் கடைசியா கேட்ட நினைவு …. அங்க இருந்தவங்கள்ல கொச்சின்ல வேலைப் பார்த்த மதர் வெனிஸ்தாவும் ஒருத்தங்க , அவங்க முன்னால வந்து , உன் பேர் என்ன,  ஊர் என்ன, எங்க இருந்து வர்றேனு கேட்கிறாங்க…. ம்ஹூம் ஒன்னுமே ஞாபகம் இல்லை … கொச்சின் மட்டும் கேட்ட நினைவுனு சொல்லிட்டு திரும்பவும் மயக்கத்துக்குப் போய்ட்டேன்.

ஆனா எழுந்தது ஒரு வாரம் கழிச்சு தான்னா பார்த்துக் கோ…..அங்க சமையல் வேலை செய்ற அக்கா கிட்ட என்னையக் காட்டி இந்த ஊர்காரப் பொண்ணானு கேட்டதுக்கு , இல்லனு சொல்லிட்டாங்களாம் அனு…. ஏன்னா அது திருவனந்தபுரம் பக்கத்துல இருக்கிற சின்ன கிராமமாம். டூரிஸ்ட் தான் அதிகம் வருவாங்களாம். நான் தமிழ் பேசுறதப் பார்த்து நானும் டூரிஸ்ட்னு முடிவு பண்ணிட்டாங்க.

அந்த ஒரு வாரத்துல என்னைய யாரும் தேடி வரலயாம் , தேடி வந்தவங்களும் அது நான் இல்லனு போய்ட்டாங்களாம். அதுக்கப்புறம் மதர் யார்கிட்ட என்ன பேசுனாங்களோ தெரியாது… எனக்கு ஜெனிஃபர்னு பேர் வச்சு …என்னைய தனியா விட்டுப் போக மனசில்லாம , நான் அந்த ஊர் பேரை சொன்னதால  என்னைய கொச்சின் கூப்பிட்டுட்டு போய்ட்டாங்க .”

அரவிந்தோ , ” உன்னையத் தேடி வராமலா இருந்தோம்…. விதிடா விதி …..” என்று மனதுள் புலம்பிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க,

அழுது கொண்டே பேசியவள் , “அங்க எனக்குப் பழகிப் போச்சு அனு … நான் என்னப் படிச்சேன் , ஏன் படிச்சேனாக்கூட தெரியாது … ஆனா இங்கிலிஷ் தமிழ் நல்லா பேசினதால நான் லைப்ரரி ஹெல்ப்பர் ஆனேன். இடையில எத்தனையோ பேர் தேடிவந்தாலும், சரியான விவரம் யாரும் தராததால என்னைய அனுப்பாத மதர், உங்கண்ணன் வந்துப் பேசினப் பிறகு தான் ,என்னைய உங்கக் கூடப் போகச் சொன்னாங்க” கண்களை துடைத்துக் கொண்டே ,

” உண்மையச் சொல்லட்டுமா அனு…. முதல்ல  உங்கண்ணனப் பார்த்ததும் எனக்கு ஒன்னும் தோணல….ஆனா தினம் தினம் வந்த உங்க அண்ணனப் பார்க்க பார்க்க ஏதோ ஒரு உள்ளுணர்வு என்னைய அவங்க கூடப் போனு சொல்லுது … இன்னொரு மனசு வேண்டாம் சொல்லுது… இரண்டுக்கும் நடுவுல நான் போராடுனது எனக்குத் தான் தெரியும்.

உங்கண்ணன் மட்டும் முதல்லயே நீ என் மனைவி ராதிகானு சொல்லிருந்தா நான் நிச்சியம் வந்துருக்க மாட்டேன் அனு ….. அப்படியே வந்தாலும் என் உடல் வந்துருக்கும் என் மனசு வந்துருக்காது….. ஏன்னா… நான் … நான்…. ” என்று வார்த்தைகள் தடுமாறியபடி இன்னும் ஏதோ சொல்லப் போக ,அனுவின் மகன் அழும் சத்தம் கேட்டதும் , நான் இதோ வாறேன் “என்று தன் ஃபோனை  எடுத்துக் கொண்டு வெளியேறிய ….அனன்யா ,

“அண்ணா உலகத்திலயே அதிர்ஷட்டசாலி நீதாண்ணா , இப்படி ஒரு காதல் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும் ” என்று கண் கலங்கியபடி சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டாள்.

பின்னே காலையில் அண்ணன் சொல்லிய அதே வார்த்தைகளை ஜெனியாக்கப்பட்ட ராதிகாவும் சொல்கிறாள் என்றால் ……

ஃபோனில் ஒரு முத்தம் பதித்தவன் ….. சட்டையில் வைத்து விட்டு ,கண்ணில் நீரோடு புன்னகைப் புரிந்துக் கொண்ட அரவிந்த் , ” உன்னைய எனக்குத் தெரியப் போய் தானடா  எந்த புருஷனும் செய்யாத ஒரு காரியத்தை செஞ்சேன் ….” இரண்டு கைகளாலும் தலையைக் கோதி….கண்களோடு முகத்தையும் துடைத்துக் கொண்டு ….

“உன்னை உயிரோட கொன்னுருக்கேன் …… ” எழுந்து காரினருகில் வந்தவன் ….

“ம்மா உங்க மருமகள ரொம்ப நாள் அங்க விட்டு வைக்க முடியும்னு தோணல … சீக்கிரம் அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற வேலைய பார்க்கப் போறோம்.….” என்றுப் புன்னகையோடு கூறியவன் மன நிறைவோடு கோவைக்கு வண்டியைச் செலுத்தினான்.

                         காதல் அழகானது…..