Advertisement

 அழகு 7

        

      “தாயன்பிற்கே ஈடடேதம்மா….

 

        ஆகாயம் கூட அது போதாதது..…

 

       தாய் போலே யார் வந்தாலுமே….

 

        உன் தாயைப் போலே அது ஆகாது …..

தாயைக் கண்ட குழந்தை அதன் பாசம் முழுவதையும் அவள் முகத்தில் எச்சில் மழை பொழிந்து வெளிப்படுத்த , ஜெனியோ அந்த எச்சிலை அமிர்த மழையாக நினைத்து நனைந்துக் கொண்டிருந்தாள்.

எந்தப் பெண்ணுக்குமே இருக்கும் இயல்பான தாய்மை உணர்வில் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு, “ம்மா” என்ற வார்த்தை ஓர் புரியாத உணர்வை அளித்தது.தாய்மைக்கு ஏங்கும் பெண்ணின் உணர்வு அது….

குழந்தை முதன் முதலில் ‘அம்மா’ என்று அழைக்கும் போது உணரும் உணர்வை உணர்ந்துப் பார்த்தவர்களுக்கே புரியும்.

 யார் குழந்தையோ என்றுப் பார்த்தவளுக்கு ,அரவிந்தை ஆலய வாசலில் கண்டதும் , ஏதோ ஓர் நிம்மதி …மனதிலும்  மகிழ்ச்சியின் மழைச்சாரல் அடித்தது  , குழந்தையை தூக்கிக் கொண்டே மெல்ல அவனருகே வந்துக் கொண்டிருந்தாள்.

ஜெனியையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் , ” இவ்வளவு போராட்டம் உனக்கு தேவையா …. என்னால தான் அதை தாங்க முடியுமா …. உன்னைய எப்படி இப்படியே விட்டுட்டுப் போறது …… “

மனதினுள் பேசிக் கொண்டு இருந்தவன் அருகில் குழந்தையோடு வந்தவள், அவனிடம் ஏதோ கேட்க முயல …. குழந்தையோ தந்தையை அருகில் கண்டதும் , “ப்பா.. ப்பா …ம்மா” எனப் பேச ஆரம்பித்து அரவிந்திடம் தாவியது.

தன்னிடம் தாவிய குழந்தையை மகிழ்வுடன் தூக்கிக் கொண்டவன் , “போலாமா நாம ” எனக் கேட்டுக் கொண்டே திரும்பினான். குழந்தையோ அவள் துப்பட்டாவை இழுத்து ” ம்மா.. ம்மா” என்றது.

அவன் கிளம்புகிறான் என்பதும் , துப்பட்டாவைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் இருந்து துப்பட்டாவைப் பிரித்தவன் முகம் அருகில் இருக்க ,

“உங்க குழந்தையா சார் , பாப்பா … பாப்பா பேர் என்ன … ரொம்ப க்யூட்டா இருக்கா … ” எனத் திக்கிதிக்கிப் பேசியவள் விழிகளை ஊடுருவியவன் ,

” இருக்கா இல்ல இருக்கான் ….. பையன் .. ஸ்ரீ …. ஸ்ரீராம் “

“ஓ …. பையனா , மதர்.. பேபி இருக்கு உங்களுக்கு சொன்னாங்க , என்ன பேபினு தெரியாது” என்றவள் , “நான் கொஞ்ச நேரம் வச்சுக்கட்டுமா …” என்று கையை நீட்ட , ” ம்மா” என்றது குழந்தை.

வாங்கிக் கொண்டவள் மறுபடியும் முத்தம் பதிக்க , அவளை விட்டு  படிகளில் வேகமாக கீழே இறங்கிச் சென்றவன் , காரில் கதவை திறந்து வைத்து அமர்ந்திருந்த ஜானகியின் அருகில் அமர்ந்து அவர் கழுத்தில் தலை சாய்த்துக் கொண்டு ,

“ம்மா …. உங்க குழந்தையானு கேக்கிறாமா….. அதுவும் பெண் குழந்தைனு…..ம்மா முடியல மா…. என்றவன் அப்படியே அவர் மடியில் தலை கவிழ்ந்து கொண்டான். அனன்யா அழ ஆரம்பிக்க , ரமேஷ் அவளை தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தியவன் , நண்பனின் முதுகில் கை வைத்து, “மச்சான் … கன்ட்ரோல்  யுவர் செல்ஃப் ….இத்தனை நாள் பொறுத்தவன் ….இப்ப முடியாதா …. தங்கச்சி வர்றா … எழுந்திரி ” என்றான்.

எழுந்தவன் முகத்தை முந்தானைக் கொண்டு துடைத்த ஜானகி , ” கடவுள் சோதிச்சுப் பார்க்குறாரு …. நான் நீ என் பிள்ளை இல்லைனு சொன்னப்ப தாங்கிகிட்ட தானே …. எப்படியும் அம்மா நம்புவாங்க அப்படிங்கிற நம்பிக்கை தானே என்னைப் பொறுத்துக்கிட்ட….இப்பவும் அதேப்போல ஒரு சோதனைக் காலம் ….. அது உன் காதலுக்கானது…… என் மருமக என் பிள்ளை மேல எந்தளவுக்கு , காதலும் உயிரும் வச்சுருந்தானு உயிரைக் கொடுத்து நிரூபிச்சுட்டா…….இப்ப நீ அவ மேல எந்தளவு காதல சுமக்கிற அப்படிங்கிறத நிரூபிக்கிற நேரம் …. நான் கும்பிடுற முருகனும் துணையிருப்பார், இதோ அவ கும்பிடுற கன்னிமரியாளும் துணை இருப்பார் … ” என்று தேவாலய கோபுரத்தின் மேலே இருந்த சிலையைக் காட்டினார்.

தாயின் வார்த்தைகளில் மன சஞ்சலங்கள் குறையப் பெற்றவன் , அவர்களருகில் குழந்தையோடு வந்த ஜெனிஃபரைப் பார்த்து விட்டு , காரிலிருந்து இறங்கி காரின் முன்புறம் சென்று சாய்ந்து நின்றுக் கைகளை கட்டிக் கொண்டான்.

அவனைப் பார்த்துக் கொண்டே அனன்யாவிடம் , “மேம்” என ஆரம்பித்தவளை , “ப்ளீஸ் ஜெனி நீங்க எனக்கு அண்ணி , நான் உங்களுக்கு அண்ணி… இந்த மேம்லாம் வேண்டாமே. அப்படி அண்ணினு என்னைக் கூப்பிட உங்களுக்கு பிடிக்கலன அனன்யானேக் கூப்பிடுங்க … நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதான் ….., இப்படி யாரோ போல மேம் மேம் சொல்றது ….. ப்ளீஸ் அண்ணி “

அப்பொழுது அங்கு வந்த அமுதா , ஜெனிஃபர் கையிலிருந்த குழந்தையைப் பார்த்ததும் கை நீட்டி அழைக்க , அவளைப் பார்த்ததும் ஜெனியின் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்டான் குழந்தை.

அமுதாவிற்கு சமாதானமாக , ” தெரியாதவங்க கிட்ட அவ்வளவு சீக்கிரம் போக மாட்டார் … கொஞ்ச நேரம் கழிச்சுக் கூப்பிடுங்க வருவார்” என அனன்யா சொல்லவும் ,

“அப்போ ஜெனி கிட்ட மட்டும் எப்படி” என்ற அமுதாவிற்கு பதில் சொன்னாலும் பார்வையை ஜெனியிடம் வைத்து , ” தாயைத் தெரியாம இருக்குமா குழந்தைக்கு , ஆறு மாசம் தாய்ப்பால் சாப்பிட்ட குழந்தைதானே.. அதுதான் …” என சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தவளை அரவிந்தின் , ” அனுமா” என்ற சத்தமான அழைப்பு நிகழ்வை எடுத்துச் சொல்ல ,

விழி விரிய அவள் பேச்சைக் கேட்டிருந்த ஜெனியிடம் , “அது இந்த ஆறு மாசமா நாங்க எடுத்த வீடியோஸ் டீவில போட்டு அண்ணிய ‘அம்மா ‘னு சொல்லிக் கொடுத்தேனா , அதுதான் ஜெனிக் கூட சட்டுனு ஒட்டிட்டான்”

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கையில் அமுதா , ” எல்லோரும் அங்க ஆஃபிஸ் ரூம் வாங்க , குழந்தைக்கு பனி ஒத்துக்காம போயிர போகுது”

அரவிந்த் , ” இல்லைங்க , நாங்க கிளம்புறோம் …. உங்க ஃபிரண்ட்க்கு எங்க மேல நம்பிக்கை எப்போ வருதோ … அப்போ நாங்க வாறோம் … கோவைக்கு கிளம்புறோம். அவங்க வரத் தயார்னா இப்பவேக் கூட்டிட்டுப் போறோம். யோசிக்கணும்னா , நாங்க மதியம் ரெண்டு மணிக்கு கிளம்புறோம். அதுக்குள்ள யோசிக்க சொல்லுங்க.”

வந்து குழந்தையை வாங்க , தர முடியாது என்பது போல் இறுக்கமாக பிடித்திருந்தவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு சென்றான். திடிரென்று பிடுங்கவும் , குழந்தையும் ” ம்மா” என்று அவளைப் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டது.

அவனருகில் சென்றவள் , “நீங்க மதியம் தானே கிளம்புறீங்க , அதுவரை என் கூட இருக்கட்டுமே , குழந்தை அழறான்” என்று அவள் அழுவது போல் சொல்லவும் , அவள் தவிப்பைப் பார்த்தவன் ,

“இல்லைங்க வேண்டாம்….அப்பவும் அழதான் செய்வாரு…. நாங்க சமாதானப்படுத்திக்கிறோம் .ரமேஷ் கிளம்பலாம்” எனவும், அனைவரும் காரில் ஏறிக் கிளம்பி விட்டனர்.

“அம்மு ” எனத் தேம்பியவளிடம் , ” உனக்காக ஒரு வாரமா தவங்கிடந்தாங்க … உனக்குத்தான் அவங்க மேல நம்பிக்கை வரலியே …. பாவம் அந்தக் குழந்தை போட்டோல, வீடியோல பார்த்தே உன்னைய அம்மானு அழுதுட்டுப் போகுது. சரி வா உனக்கு இருக்கவே இருக்கோம் மதர் , நாங்க… இந்த சர்ச் … அந்த கேண்டீன் …போதும்ல உனக்கு ” என்று பேசி அவளை எப்படியாவது அவர்களிடம் அனுப்பி வைக்க முயன்றாள்.

             பெட்டிகளை எல்லாம் காரில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.”தாயம்மா … எம்புள்ள  கஷ்டப்படுறத பார்க்கவே கஷ்டமாயிருக்கு”

“ஜானு கவலைப்படாதே நாம கும்பிடுற கடவுள் நம்மளை அப்படியே விட்டுறமாட்டார்.” அவர் சொல்லி முடிக்கவுமே , அந்த பங்களாவின் முன் ஒரு கார் வந்து நின்றது. உள்ளிருந்தவர்கள் சத்தம் கேட்டு வெளியே போகவும் , அங்கு செக்யூரிட்டி உள்ளே அமர்ந்திருந்த ஜெனியைப் பார்த்து சல்யூட் அடித்து உள்ளே அனுப்பவும் சரியாக இருந்தது.

அரவிந்தைத் தவிர அத்தனைப் பேரும் மலர்ந்த முகமாக இறங்கிச் சென்று காரிலிருந்து இறங்கிய ஜெனியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கூடவே வந்திறங்கிய மதர் வெனிஸ்தாவும், அமுதவள்ளியும் ஒருவரை ஒருவர் பார்த்து தாங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

கடைசியாக படியிறங்கிச் சென்ற அரவிந்த் மட்டும் ஜெனியைக் கண்டுகொள்ளாது மதரையும் , அமுதாவையும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான். அதன் பிறகே அவர்களை கவனித்த மற்றவர்கள் அவர்களை வரவேற்றனர்.

உள்ளே வந்தவள் கண்கள் குழந்தையைத் தான் தேடியது. கண்ணில் படவில்லை என்றதும் , அனன்யாவைப் பார்த்து , “அ… அண்ணி குழந்தை எங்கே “எனக் கேட்டாள்.

” வாங்கண்ணி உள்ளதான் தூங்கிட்டு இருக்காங்க ” என்று அவளைக் கைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

உள்ளே இரு குழந்தைகளும் அழகாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் முகத்தில் புன்னகைத் தோன்ற , அருகில் சென்றவள் குழந்தை அருகே அமர்ந்து குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.

அருகில் படுத்திருந்த குழந்தையைும் கன்னம் தொட்டு முத்தமிட்டவள் , ” அப்படியே அண்ணன் தான் ” என்றாள்.

“அண்ணி பிரஜுல தெரியுதா உங்களுக்கு “

“பிரஜுல் …. இவர் பேரு பிரஜுலா … “

“அப்போ அவர தெரியலயா….” குரல் இறங்கி கேட்ட அனன்யாவிடம் ,

“அண்ணா … உங்க ஹஸ்பென்ட் அவங்க முகம் அப்படியே இருக்கு குட்டிபையனுக்கும் அதான் சொன்னேன்.”

“ஓ… ஆமா… அப்புறம் அண்ணி எங்கக் கூட வரீங்க தானே … திரும்ப மதர் கூட போயிர மாட்டீங்களே” என்று ஆவலாக கேட்டாள்.

அவளது ஆவலைப் புரிந்து கொண்ட ஜெனிஃபர் , “அப்பவே உங்கண்ணனுக்கு ஃபோன் பண்ணிட்டாங்களே மதர்….நானும் உங்கக் கூட வரப் போறத சொல்ல , உங்களுக்கு சொல்லலயா அவங்க ” என்றாள்.

“இல்லையே … ரொம்ப சந்தோஷம் அண்ணி…. நீங்க இங்க இருங்க , நான் இதோ வாறேன்”

அங்கு மதர் சில பைகளைக் கொடுத்து , சில கோப்புகளை காட்டி அரவிந்திடம் பேசிக் கொண்டிருந்தார். அனன்யாவின் ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தவள் சக்திவேல் என்றதும் மகிழ்ச்சியாக ,

“சக்திண்ணா… இங்க” என இவள் பேசுவதற்கு முன்பே , ” அனன்யா அண்ணி வீட்டுக்கு வாறேன்னு சொல்லிட்டாங்களாமே…. ரொம்ப சந்தோஷமாயிருக்கு , அண்ணனுக்கும் மாமாவுக்கும் போட்டேன் எடுக்கல , அதான் உனக்கு ஃபோன் பண்ணேன். அண்ணன்கிட்ட இங்க எல்லாமே முடிச்சிட்டேன்னு மட்டும் சொல்லிருமா”

“அது சொல்லிக்கலாம் …. ஏண்ணா ஒன்னு மட்டும் சொல்லுங்க … அண்ணி கூட வரப்போகிற விஷயம் எனக்கே இப்போதான் தெரிஞ்சது….ஆனா அதுக்குள்ள கோவைக்கு எப்படிப் போச்சு”

“ம்…. பறந்து வந்துச்சு”

“எந்தப் புறா பறந்து வந்துச்சாம்”

” கண்டுபிடிங்க மேடம்” என்று சிரித்தவனிடம் போலிக் கோபம் காட்டி வைத்து விட்டாள். அம்மாவுடனும் தாயம்மாவுடனும் பேசிக் கொண்டிருந்த அமுதாவிடம் சென்றவள், ஜெனிஃபர் எப்படி வர சம்மதித்தாள் என்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அண்ணி ” என்று ஆரம்பித்த அமுதாவிடம் , “அண்ணி ” என்று ஆச்சரியபட்ட அனன்யாவிடம் , “ஜெனிஃபர்க்கு அண்ணினா எனக்கும் அண்ணி தானே நீங்க… “

“ஆமாம் ஆமாம்…. ” என்றவளிடம் , ” நான் டெய்லி ஜெனி கிட்ட உங்களை பத்தி சொல்லி சொல்லி மனசுல உங்க யாரையும் மறக்க விடாம பண்ணிட்டேன். அதுலயே கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சா , அதுவும் இன்னைக்கு குட்டிபையன பார்த்ததும் மேடம் டோட்டலி பிளாட் …. சும்மா இருப்பேனா இன்னைக்கு எக்ஸ்ட்ரா ஏத்தி விட்டேன் ….என் கிட்ட இருந்து தப்பிக்க முடியல .. கிளம்பிட்டா….  அவ ஒருத்திக்காக நீங்க அத்தனை பேரும் காத்திட்டு இருக்கிறது ….. வாவ் கிரேட்… தெரியுமா… அதுவும் உங்கண்ணா கிட்ட பிஸ்னஸ் பேசறதுக்காக அங்க அத்தனை பேர் காத்துட்டு இருக்கும் போது , அவங்க ஜெனிக்காக எவ்வளவு நாள்தான் இங்கயே இருக்க முடியும் ….இப்படி ஒரு குடும்பம் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்.”

கேட்ட அனன்யா” அட இவங்க கிட்ட நான் அதிகம் பேசினதில்லை , அங்க பிஸ்னஸ் பேச காத்திட்டு இருக்கிறது இவங்களுக்கு எப்படி …..அத்தானும்…… ம்ம்ம் இப்ப புரியுது…..” என்று புன்னகைத்துக் கொண்டவள் ,

“தாயம்மா இப்ப அண்ணியும் நம்ம வீட்டுக்கு வந்தாச்சு , சக்தியண்ணா கல்யாணத்தையும் சீக்கிரம் முடிச்சிரணும். அந்த மதுரை பொண்ணையே முடிச்சிரலாம் …. நீங்களும் எம் பேரன் மெலிஞ்சிட்டான் மெலிஞ்சிட்டான்னு சொல்லிட்டுருக்கீங்க….” என அமுதாவை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு எழுந்து சென்றாள்.

ரமேஷ் அருகில் போய் அமர்ந்தவள் , “அத்தான் அண்ணி வாறேன்னு சொல்லிட்டாங்க ஆனா அண்ணன் முகமே சரியில்லயே ஏன் “

“அதுதான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன். ஆனா இனி எதுவானாலும் கோவைப் போய் பேசிக்கலாம்”

அனன்யாவின் கைப்பேசி ஒலிக்க எடுத்து காதில் வைத்தவளிடம் , “ஏ வாலு … எனக்கு மதுரைல பொண்ணு பார்த்து வச்சுருக்கியா ….. “

” எப்படிண்ணா உங்களுக்கு தெரியும். ரொம்ப வீரமான மதுரைக்கார பொண்ணு… “

“எனக்கு வீரமான பொண்ணல்லாம் வேண்டாம்”

“அப்ப … கோழையா இருக்கிற பொண்ணுதான் வேணுமா”

“பாச மலரே போதும் நான் அழுதுருவேன்”

“ஆமா நாங்க மதுரைல பொண்ணுப் பார்த்தது உங்களுக்கு எப்படித் தெரியும் …. புறா வந்து சொல்லிச்சோ… , அந்த புறாகிட்டயே வீரமான பொண்ணு வேண்டாம்னு எங்கண்ணன் சொல்லிட்டாருனு சொல்றேன்…. “

“ஐய்யோ அவ்வளவுதான் நான்… என்னை விட்டுறுமா தாயே”

“ம்ம்… பாவம் பிழைச்சுப் போங்கனு .. விடுறேன் ஒகே.. எப்…..பூடி நாங்களே கண்டுபிடிச்சிருவோம்ல….” என்று ஃபோனை வைத்துவிட்டு புன்னகைத்துக் கொண்டவள் ,

தாயம்மா அருகில் சென்று , வெளியே தோட்டத்தில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த அமுதாவைக் காண்பித்து , “தாயம்மா சக்தி அண்ணன் விரும்புற பொண்ணு இவங்கதான் , நல்லா பார்த்துக்கோங்க” என்று விவரங்களைப் பகிர்ந்துக் கொண்டாள்.

குழந்தை விழித்ததும் ஜெனிஃபரைக் கண்டு ” ம்மா” என்றுக் கட்டிக் கொள்ள ,அனன்யாவின் மகனும் டீவியில் மட்டுமே பார்த்த அத்தையை நேரில் கண்டதும் , ”அத்த… அத்த” என ஒட்டிக் கொண்டான்.

குழந்தைகளின் அன்பில்  அவர்களோடு செல்லவா … வேண்டாமா என்று இருந்த கொஞ்ச நஞ்ச மன சஞ்சலங்களும் குறைந்து விட்டது ஜெனிஃபருக்கு , மகிழ்ச்சியுடனே இரு குழந்தைகளையும் இரு கையில் தூக்கிக் கொண்டு அமுதாவிடம் வந்தவள் ,

“அம்மு இவர்  என்னை அம்மானு சொல்றார் , இவர் என்னை அத்தைனு கரெக்ட்டா சொல்றார் …. ச்சோ…. கியுட்ல ” என்று இரு குழந்தைகள் கன்னத்திலும் முத்தம் பதித்தாள்.

அவளது மலர்ந்த முகம் கண்டு , அங்கிருந்த அத்தனைப் பேரின் முகமும் மலர்ந்தது.

” இந்த முகத்தை திரும்ப பார்கணும்னு தானேடா நான் இவ்வளவு போராடுறேன்” என்பதாக அரவிந்தும் முறுவலித்துக் கொண்டவன் அனைவரையும் காரில் ஏறச் சொன்னான்.

மதரையும் அமுதாவையும் வழியனுப்புகையில் அழக்கூடாது என்று நினைத்தாலும் ஜெனியால் முடியவில்லை. குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்கலையே கண்ணீர் வர , குழந்தையோ “ம்மா நா நா ” என்று கண்ணீரைத் துடைத்தது. வேகமாக கண்களை துடைத்தவளிடம் ,

“ராதாம்மா , அவர் மொழில நாநா னா அழாதனு அர்த்தம்” என்று புன்னகைத்தார். “இல்லைங்க செல்லம் ….இனி நான் அழமாட்டேன் …. எனக்கு நீங்க இருக்கும் போது நான் ஏன் அழறேன்” எனக் குழந்தையிடம் பேசியவள் அதன் பிறகு மகிழ்ச்சியாகவே அவர்களுடன் கிளம்பினாள்.

ரமேஷும் அனன்யாவும் அவர்கள் குழந்தையோடு ஒரு காரில் ஏறிக்கொள்ள, அதேக் காரில் பின்னால் ஏறப் போனவளிடம்.. “கண்ணு எனக்கும் உங்கத்தைக்கும் கால்வலி இருக்கிறதால பின்னாடி படுத்துக்குவோம். நீ போய் அந்த வண்டில ஏறு கண்ணு” என தாயம்மா சொல்லவும் , அரவிந்த் முன்பக்கம் திறந்து வைத்து காத்திருந்த வண்டியில் ஏறிக் கொண்டாள்.

தாயம்மா உள்ளே அமர்ந்ததும் அவரருகில் சென்றமர்ந்த அரவிந்த் , அவரை கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டவனிடம் ” தேங்க்யூ தாயம்மா தேங்க்யூ” என்றவனிடம் ,

“போய்யா போய் கொடுக்க வேண்டியவளுக்கு கொடு” என்றுப் புன்னகைத்துக் கொண்டே சொல்லவும் , ரமேஷ் , “டேய் மச்சான் உன் தங்கச்சி பக்கத்துல இருக்கானு பார்க்கிறேன்…. இல்ல”

“மாப்ள நானும் என் தங்கச்சி பக்கத்துல இருக்கானு பார்க்கிறேன்…. இல்ல”

நண்பர்களின் இந்த புரியாத பேச்சைப் பார்த்த அனன்யாவையும் தாயம்மாவையும்  கண்டு ரமேஷும் அரவிந்தும் ஒருவருக்கு ஒருவர் ஹை- ஃபை கொடுத்து சிரித்துக் கொண்டு விலகினர். அண்ணனின் முகத்தில் மலர்ச்சியைக் கண்டு விழிகளில் நீரோடு அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவளை உணர்ச்சியின் பிடியிலிருந்து மீட்க , தாயம்மா அறியாவண்ணம் மகனுக்கு முத்தம் கொடுக்கும் சாக்கில் மனைவிக் கன்னத்தையும் நொடியில் தொட்டு மீண்டன ரமேஷின் இதழ்கள். திகைத்து விழித்தவளை கண்சிமிட்டி இதழ்குவித்து பறக்கும் முத்தத்தையும் அளித்து அவள் முகம் சிவந்ததைப் பார்த்து விட்டுத்தான் காரை எடுத்தான் அனன்யாவின் கணவன்.

நெடு நாட்களுக்குப் பிறகு  கிடைத்த இந்த அருகாமை அரவிந்தை பித்தம் கொள்ளச் செய்தது என்னவோ உண்மை. இதுநாள் வரை கண்களில் இருந்து மறைந்திருந்த ஊட்டியின் அழகு பன்மடங்காக தெரிந்தது. மலையை விட்டு இறங்க இறங்க மனப்பாரங்களும் இறங்கிக் கொண்டிருந்ததுப் போல் இருந்தது அரவிந்துக்கு .

                           காதல் அழகானது…..

A

Advertisement