Advertisement

   அழகு 5

அந்த அறையில்  உள்ளவர்களில் மதர் வெனிஸ்தாவைத் தவிர அனைவரும் திகைத்துப் போய் அரவிந்தைப் பார்க்க , அரவிந்த் ஜெனிஃபரைப் பார்த்துக் கொண்டே , “நீங்க ரெண்டு பேரும் என் தாய் மாமா பொண்ணுங்க , இதோ இவன் உன் அண்ணன் , அதாவது பெரியப்பா பையன்…” ஜெனிஃபர் முழிப்பதைப் பார்த்து , விரக்திப் புன்னகையோடு பேசியவன் ….

“என் வொய்ஃப் அதாவது உன் அக்கா அவளுக்கு என்னாச்சு , உனக்கு என்னாச்சு , நீ எப்படி கொச்சின் வந்த , இதையெல்லாம் நான் மதர் கிட்ட சொல்லி அதற்கான ஆதாரங்களையும் காண்பிச்சுட்டேன் … ரொம்ப நாளா உன்னைத் தேடினோம் … சக்தி ….” என்று சக்தி வேலைக் காட்டியவன் ,

 “இவன் என் உடன் பிறவா தம்பி , அவன் அண்ணி போலயே ஒருத்தங்க இங்க இருக்காங்கனு சொன்னதும் உன்னைத்  தேடி வந்தோம் … இதுக்கு மேல மதர் தான் உன் கிட்ட எங்களைப் பத்தி சொல்லணும் … “

அவள் அப்போதும் மிரண்டு மதர் கைகளை இறுக்கமாகப் பிடிப்பதைப் பார்த்தவன் . கண்களை மூடி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “மதர் நாங்க இங்க தான் ரெண்டு நாளைக்கு இருப்போம். அவங்க எங்களை முழுமையா நம்பி எங்கக் கூட வரதா இருந்தா அவங்களை வரச் சொல்லுங்க. ” என்றவன் தன் கார்டை எடுத்து மதரிடம் தந்து விட்டு அவளைப் பார்த்து தலையசைத்துச் சென்றான்.

நடப்பதைப் பார்த்து அதிர்ந்து போய் நின்ற ரமேஷை தோளைப் பிடித்து திருப்பி அழைத்துப் போன அரவிந்திடம் , “மச்சான் என்னடா இது … என்னடா நடக்குது இங்க… நீ என்ன என்னமோ சொல்லிட்டு வாரே … மதரும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க . விடு நான் தங்கச்சிட்டப் பேசுறேன்…” என அவன் கையை தட்டிவிட்டு திரும்பி செல்லப் போனவன் கையை இறுகப் பிடித்து நிறுத்திய அரவிந்த் ,

“மாப்ள என் வாயாலயே என்ன சொன்னேன்னு கேட்ட தானே ….வா வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். இவளாவது உயிர் வாழட்டும்னு நினைச்சா வா …. இல்ல என்ன நடந்தாலும் பரவாயில்லைனு நினைச்சா உன் விருப்பம்” என்றவன் அவன் கையை விட்டு விட்டு வேகமாக வெளியேறினான்.

ரமேஷும் சக்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் அரவிந்தின் பின் செல்ல ஆரம்பிக்க , “சார் சார்” என்றவாறு அமுதா பின்னாலயே வந்தாள். இருவரும் நின்று என்னவென்று பார்க்க , ஒரு கார்டைத் தந்து , ” இது என் நம்பர் , ஜெனிய நான் எப்படியாவது கன்வின்ஸ் பன்றேன் , நீங்க வருத்தப்படாம போங்க ” என்றவள் சக்தி வேலை ஒரு பார்வை பார்த்து விட்டேச் சென்றாள்.

காரில் சென்று அமர்ந்து கண்களை மூடிக் கொண்ட அரவிந்துக்கு சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா என்றுத் தெரியவில்லை. சக்திவேல் தன் பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட , ரமேஷ் வந்து காரை இயக்கவும் , விழிகளைத் திறக்காமலே “ஃபோன் தாடா” என்றான்.

ஃபோனை வாங்கியவன் , ” அனுமா , நம்ம பெரிய வண்டில நீயும் அம்மாவும் , பிள்ளைங்களையும் தாயம்மாவையும் கூட்டிட்டு ஊட்டிக்கு வாங்க , ஒரு ரெண்டு மூணு நாள் இருக்கிறது  போல இருக்கும் … என்ன விஷயம்னு உன் அத்தான் சொல்லுவான்… இப்ப டிரைவ் பண்ணிட்டுருக்கான் , அவனே சொல்வாம்மா ” என்றவன் கைகளை கட்டி சீட்டில் சாய்ந்து கண்மூடிக்கொண்டான்.

வீட்டிற்கு வந்தும் அவனை எழுப்ப மனம் வரவில்லை ரமேஷிற்கு … இரவு முழுதும் அவன் சிறிது கூட கண் அயராது அந்த தேவாலய வாசலையேப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்திருந்ததால் அவன் மீது ஒரு கம்பளியைப் போட்டு கார் சீட்டை வசதியாக வைத்துவிட்டான்.

அனன்யாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லவும் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு உதகைக்கு கிளம்பினார்கள். புரண்டு படுக்க திரும்பிய அரவிந்த் கை வலிக்கவும் கண்களைத் திறந்துப் பார்த்தவன் இருக்கும் இடம் உணர்ந்து சோம்பல் முறித்துக் கொண்டே கீழிறங்க , ரமேஷ் அவனை முறைத்துக் கொண்டு வெளியே நின்றிருந்தான்,

அவனைச் சுற்றி சென்ற அரவிந்த் நேரே குளியலறைக்குள் புகுந்து கொண்டான். வெளியில் வந்தவன் சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு அறைக்குள் நுழைய ரமேஷ் கைகட்டி அவனையே முறைக்கவும் ,

“மாப்ள இந்த சுரணை சுரணை னு ஒன்னு சொல்வாங்களே அது எனக்கு வந்துருச்சுப் போல , கை வின்னு வின்னு தெறிக்குதுடா …பெய்ன் கில்லர் தந்துருப்பாங்க தானே அதைக் கொஞ்சம் கொடு … சாப்பிட்டதுக்கு தூக்கம் வருது…. நல்லா தூங்கி எழுந்திரிக்கணும்”

அரவிந்த் அங்கு பேசியதைக் கேட்டு கோபத்தில் இருந்த ரமேஷ் , அரவிந்தின் நெடு நாட்களுக்குப் பிறகான இந்த இலகுப் பேச்சில் கோபம் மறந்தவனாய் அவனுக்கு மாத்திரைகளை தந்து விட்டு ,

“தூங்கி எந்திரி உனக்கு இருக்கு … “என்றவாறு அறையை விட்டு வெளியேறினான். அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே கட்டிலில் துள்ளலோடு குதித்தவன் தலையணையை. அணைத்துக் கொண்டு உறங்கலானான் .

           அங்கோ ஜெனிஃபரை மதர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் அவர்களுடன் போகத் தயாராய் இல்லை. யார் என்றுத் தெரியாதவர்களுடன் தான் செல்லத் தயக்கமாக இருக்கிறது என்றுக் கூறியவள் . தான் கடைசி வரை அவர்களுடனேயே இப்படியே இங்கேயேஇருந்து விடுவதாகக் கூறிக் கொண்டிருந்தாள்.

அவளது பேச்சைக் கேட்டு அமுதவள்ளிக்கு மிகவும் வருத்தமாகப் போயிற்று. அறையில் அமர்ந்திருந்து யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு நான்சியிடமிருந்து

ஃபோன் வரவும் எடுத்துப் பேச ஆரம்பித்தாள். அவள் என்ன சொன்னாளோ , இங்கு அழுது கொண்டேப் பேசிய ஜெனிஃபரைப் பார்த்த அமுதவள்ளி மதர் வெனிஸ்தாவைச் சென்று சந்தித்தாள்.

இங்கு வந்ததிலிருந்து ஜெனிஃபரை நன்கு கவனித்துக் கொள்ளும் அமுதாவை அவர் உணர்ந்திருந்ததால் அவளிடம் தனியாக அரவிந்த் கூறியது அனைத்தையும் கூறியவர் , தற்போது என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்து விட்டு அவளை அவர்களோடு அனுப்ப அவளால் ஆன முயற்சியையும் எடுக்கச் சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டவளுக்கு அப்படியொரு ஆச்சரியம் , இப்படியும் நடக்குமா … காதல் ஒருவர் உலகத்தை  இந்த அளவுக்கு மாற்றுமா…. யார் காதல் பெரியது, யார் நேசம் பெரியது … ஒருவருக்காக ஒருவர் இப்படியும்  வாழ்வார்களா… என்று சிந்தனையிலயே நடந்தவளது மொபைல் ஒலிக்கவும் எடுத்துப் பார்த்தவள் , பெயரில்லாது எண்கள் மட்டும் ஒளிரவும் ,

“ஹலோ” என்றாள். மறுமுனையில் ஓர் ஆண் குரல்” சாரி”, எனவும்

“சாரி ராங் நம்பர்” என வைக்கப் போனாள்.

“மேம் மேம் வச்சுராதீங்க , நான்… நான்.. சக்திவேல் பேசுறேன்” என்றான்.

“ம்…. சக்திவேல் ஓவர் நைட்ல பிரதமராவா , முதலமைச்சராவோ மிஸ்டர் சக்திவேலை தேர்ந்தெடுத்துட்டாங்களா என்ன…. யார் சார் நீங்க … என் நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது”

“சரியான ராங்கி ரங்கம்மாவா இருப்பா போல … மனுஷன கடுப்பேத்திட்டு ” என்று நினைத்தவன் ,

“மேடம் நான் … பேக்டரி ஜி.எம்.சக்திவேல் காலையில வந்தோமே…. “

சட்டென்று ஞாபகம் வந்தவள், “ஓ…. நீங்களா .. சாரி சார் உங்க பேர் ஞாபகமில்ல…. கொஞ்சம் டிஸ்டர்பா இருந்தேன்….அதான் … சொல்லுங்க ஃபோன் பண்ணிருக்கீங்க “

“இவ என்ன நான் காலையில சொன்னத கேட்டாளா இல்லையா… சாரி கேக்கலாம்னு போன் பண்ணினா இவ நார்மலா பேசுறா…ம் ….பேசாம அப்படியே விட்டுருவோமா ” என்று யோசிக்கவும் ,

“அதுங்க…. ஒன்னுமில்லைங்க … அண்ணிங்க … அதான்ங்க ஜெனிஃபர் ங்க ….”

“ஸ்டாப் … ஸடாப்..இந்த ‘ ங்க ‘ போட்டது போதும் … நேரா விஷயத்துக்கு வாங்க , காலையில பேசினதுக்கு சாரி கேக்கலாம்னு போன் போட்டு இருப்பீங்க …கரெக்ட்”

“ஆ….” என்று அதிர்ந்தவனிடம் , ” ஜெனிய அவ பேமிலியோட சேர்த்துட்டு  என்னோட டூல்ஸ் எல்லாம் ஷார்ப் பண்ணலாம்னு நினைச்சேன் …பட்…. இப்போ …. “

” என்ன … ” என்று பதட்டமானவனிடம் ,மறுமுனையில் அமுதா சிரித்துக் கொண்டே , ” காதல் , கல்யாணம் இதெல்லாம் இப்படி ஸ்வீட்டா இருக்குமானு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு… ம்…. சக்தி சார் …என்கிட்ட நிறைய பேர் புரபோஸ் பண்ணிருக்காங்க ,ஆனா உங்களப் போல யாரும் பண்ணதில்ல…. சோ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சேன் … ஆனா இப்போ முடிவு பண்ணிட்டேன்”

” என்ன முடிவு அ… அம்மு ” என்றான் மென்மையாக , அவனது அம்முவில் என்ன உணர்ந்தாளோ….

“ம்…. காதலிச்சு கல்யாணம் பண்ணனும்னு …. அரவிந்த் சார் மதர் கிட்ட சில விஷயங்கள் பேசியிருப்பாங்க போல … அதைக் கேட்டதிலிருந்து இப்படி ஒரு காதல் வாழ்க்கை எனக்கும் கிடைக்காதானு ஏக்கம் வந்துருச்சு …..” விளையாட்டாகப் பேச ஆரம்பித்தவள் சீரியஸாக  மென்மையாகப் பேசி முடித்தாள்.

“உனக்குத் தெரியுமா … அவங்க காதலக் கேட்டதுக்கப்புறம் தான் காலையில நானும் உன்கிட்ட காலையில அப்படிக் கேட்டது…. எனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை வேணும்கிற ஆசையில தான்  … ஆனாப் பாரேன் … உன்னை ஒரு ரெண்டு தடவை தான் பார்த்திருப்பேன்…. எப்படி இப்படி ஒரு பொண்ணுக்கிட்ட நாம இப்படி பேசலாம் அப்படினு கில்ட்டியா ஃபீல் பண்ணப் போய் தான் இப்ப சாரி கேட்க போன் பண்ணேன்”

” நான் யாருமில்லாதவள்னு அடிக்கடி சொல்றதால பரிதாபம் வந்து கேட்டீங்களா”

” பரிதாபம்…. அப்ப என் மேல உனக்கு பரிதாபம் இருக்கா … “

“ஷ் ….. அடடா போதும்…. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு போதுமா…. ஜெனிய அவ வீட்ல சேர்த்துட்டு நாம நம்மளப் பத்தி பேசலாம். இப்ப எப்படியாவது அவள கன்வின்ஸ் பண்ணனும் … அத யோசிப்போம்…”

புன்னகைத்துக் கொண்ட சக்தி , ” அன்னைக்கும் அவங்களுக்காக சந்தோஷப்பட்ட பார்த்தியா .. அது எல்லாருக்கும் வராது அம்மு …ஒரு வேளை இந்த குணம் தான் என்னை உன் பக்கம் ஈர்த்துச்சுப் போல … சரி அது அப்புறம் பேசலாம். எப்படியாவது அவங்கள சம்மதிக்க வை…நான் அப்ப அப்ப கால் பண்றேன்.” என்றவன் அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி அவளிடம் விவாதித்து விட்டு வைத்தான்.

தன் முகத்தில் பூக்கொண்டு யாரோ தட்டுவது போல் தோன்ற, கண்களை திறந்த அரவிந்தனது விழிகளில் பிங்க் நிற , கண்களும் மூக்கும் உதடுகளும் மட்டுமே தெரியக்கூடிய முயல் பொம்மை குல்லா அணிந்து, உடலில் அதே நிற கம்பளி ஆடை அணிந்து, அவன் மகன் தான் தந்தையை “ப்பா, ப்பா ” என எழுப்பிக் கொண்டிருந்தான்.

முகமெல்லாம் மலர மகனைத் தூக்கியவன் முத்தமிட்டுக் கொண்டே , ” எப்போ வந்தீங்க … ஊட்டிக்கு வந்துட்டீங்களா அப்பாவப் பார்க்க “

தந்தையை இரண்டு மூன்று நாட்கள் கழித்துப் பார்த்த குழந்தையோ அவன் முகத்தை கிள்ளுவதும் , அடிப்பதுமாக தன் அன்பைக் காட்டிக் கொண்டிருந்தது. இவர்கள் இருவரின் பாசப்பிணைப்பை அந்த அறையின் வாயிலில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஆனந்த கண்ணீரே வந்து விட்டது.

அருகில் வந்த ஜானகி , “அரூ…” என , தாயையைும் ஒரு கையால் அணைத்தவன் , அவரை கட்டிலில் அமர வைத்து வழக்கம் போல் அவர் மடியில் படுத்து , குழந்தையையும் தன் மீது அமர்த்திக் கொண்டான்.

” ம்மா …. ஐ லவ் லவ் லவ்  யூ …..” என்று அவரிடம் சொல்ல…. மகனின் நெற்றியில் முத்தமிட்டவர்.” என் பிள்ளை சந்தோஷம் திரும்பி வர இவ்வளவு நாளாகிருச்சு… ஆனா அனு என்னன்னமோ சொல்றாளேப்பா”

“மாமா ..மாமா … ” என்று ஓடி வந்த  தங்கை மகனையும் எழுந்து மற்றொரு கையில் தூக்கிக் கொண்டவன், இருவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தங்கையைப் பார்க்க , இடுப்பில் கை வைத்து அண்ணனை முறைத்துப் பார்த்து விட்டு , ” ம்மா பாருங்கம்மா … நீங்களும் பசங்களும் மட்டும் கண்ணுக்கு தெரியரீங்க போல … “

இரு குழந்தைகளையும் தாயின் அருகில் விட்டவன் , சட்டென்று தங்கையை கைகளில் ஏந்தவும், அண்ணனைப் பிடித்துக் கொண்டவள் ,

இப்படி சிறு வயதில் அவன் தூக்கி வைத்துப் பாடும் பாடலான ,

அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி ,

  அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி “

என அனன்யா பாட

நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்

  வரமும் வேண்டி தினமும் தவமிருக்கும் ” என்று பாடிய அரவிந்த் அங்கு வந்து நின்ற ரமேஷிடம் சென்று தங்கையைக் கொடுக்க ,

கணவனின் கைக்கு மாறியதும் முகம் சிவந்த அனன்யாவை , அதுவும் நெடு நாட்களுக்குப் பிறகு இந்த முகச்சிவப்பை மனைவியிடம் கண்ட ரமேஷிற்கு அவளை இறக்கி விட மனமில்லை .அவளையே ஆசையோடு பார்க்க , கணவனின் பார்வையில் நெளிந்து கொண்டே “அத்தான் இறக்கி விடுங்க… “

சட்டென்று இருப்பிடம் உணர்ந்து இறக்கி விடப் போனவனை ,

“டேய் மாப்ள இறக்கி விட்ராத… அப்படியே அந்த வால தூக்கிட்டு உன் ரூமுக்குப் போய்டு… எங்கள டிஸ்டர்ப் பண்றாடா”

” ண்ணா” என்ற தங்கையை கவனிக்காமல் , “இறக்கி விட்ட நீ என் உண்மையான ஃபிரண்டே  இல்லைடா… அம்மா வாங்க நாம உங்க ரூம் போயிறலாம்” என்ற அரவிந்த் , நண்பனுக்கும் தங்கைக்கும் தனிமைக் கொடுத்து விட்டு குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியேறினான்.

நண்பனை அறியாதவனா ரமேஷ் , புன்னகைத்துக் கொண்டே மனைவியை இறுக அணைத்தவன் அறையை விட்டு வெளியேற , “அத்தான் என்ன செய்றீங்க இறக்கி விடுங்க….” என்று சினுங்கிய மனைவியை ,

“ம் நான் உண்மையான ஃபிரண்டுனு… உங்க அண்ணனுக்கு நிரூபிக்க வேண்டாமா …. நான் பெஸ்ட் ஃப்ரண்டாக்கும்.அப்புறம் பப்ளி…. இப்ப பப்ளியா இல்ல போல நீ …. கொஞ்சம் செக் பண்ணனும் ….அதான் நம்ம ரூமுக்கு போறேன்” பேசிக் கொண்டே அவர்கள் அறைக்குள் சென்றவன் அவளை கட்டிலில் கிடத்தி , தானும் அருகில் சரிய , “அத்தான் டோர் லாக் பண்ணல”

” பண்ணிட்டா போச்சு” என்று கிசுகிசுத்தவன் சென்று தாழிட்டு விட்டு மறுபடியும் அருகில் வந்து , அவள் காதருகே உதட்டைக் குவித்து … ” ரொம்ப நாளைக்கப்புறம் பப்ளி முகமெல்லாம் ரெட்டிஷ்ஷா இருக்கு … ம் “

அவன் டீ ஷர்டைப் பிடித்து , ” இங்க மட்டும் என்னவாம் ரொம்ப நாளைக்கப்புறம் பார்வை எல்லாம் வேற மாதிரி இருக்கு …”

“உங்கண்ணன் சந்தோஷமா கைல தூக்கித் தந்தான். அது உன் முகத்துல பிரதிபலிக்குது .. இத்தனை மாசத்துல இப்ப தானே இந்த சிவப்பு ….”

கணவனை நெஞ்சோடு அணைத்தவள் , “சாரி அத்தான்… அண்ணன் இப்படி இருக்காங்களேனு நினைப்பு வந்ததும் …..”

அவள் உதட்டை கைகளால் மூடியவன் , ” நானும் சாரிதான் சொல்லணும்டா , உங்க அண்ணன் என் ஃபிரண்ட் … எனக்கும் அவன் ஞாபகம் வந்ததும் சாரிடா …. நானும் கொஞ்ச நாட்களா உங்கிட்ட வந்தது ரிலாக்சேஷனுக்குத் தான் … ஆனா இப்போ …..” என்றவன் உதடுகள் மனைவியின் முகத்தை வலம் வந்துக் கொண்டே …. “ஐ லவ் யூ பப்ளி” , ” ம்ம்”

“பையனுக்கும் ஒரு வயசு ஆகிப்போச்சு … “நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டேப் பேசியவனிடம் , ‘ம்’ என்பதைத் தவிர வேறு பதில் அனன்யாவிடத்தில் இல்லை.

“தங்கச்சியப் பார்த்தாச்சு … அடுத்து எங்கம்மாவப் பார்க்கணும் பப்ளி” என்றவன் அவளை அதன் பின் ‘ம் ‘கூட போட விடவில்லை.

அண்ணனின் மகிழ்ச்சியை தன் முகத்தில் பிரதிபலித்தவளும் , நண்பனின் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சியை மீட்டெடுத்தவனும் தங்களின் மகிழ்ச்சியை அந்தக் குளிரில் மீட்டுக் கொண்டனர்.

கணவனின் அணைப்பு அந்த அதிகாலை குளிருக்கு  சுகமாக இருந்தாலும்  .. எப்போதும் குழந்தைகளுக்காக விழித்துப் பழக்கப்பட்டதால் ரமேஷின் அணைப்பிலிருந்து விலக முயல , ” பப்ளி இருடா…. ” என்று தூக்கத்தில் அணைப்பை இறுக்கியவனிடம்,

“அத்தான் உங்க பையனும் .. உங்க மருமகனும் எழுந்து தேட ஆரம்பிச்சுடுவாங்க … அதுக்குள்ள குளிக்கணும் “

“முதல்ல என் தேடல முடிக்க விடு … ” என்றவன் கைகள் அவன் தேடலை துவங்கி முடித்ததும் தான் விட்டான்.

அதிகாலை பூஜையறையில் இருந்த தாயிடம் சென்ற அனன்யா கண்களை மூடி கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்தக் குளிரிலும் அதிகாலையிலயே ஈரக் கூந்தலுடன் தெய்வத்தின் முன் நின்ற மகளைப் பார்த்து மனங்குளிர்ந்தவர்,

“தெய்வமே என் மகன் சந்தோஷத்தையும் மீட்டுக் கொடுத்துடு” என்று வேண்டிக் கொண்டார். குழந்தைகளுக்கு பால் தயார் செய்துக்கொண்டிருந்த அனன்யா ,அதிகாலையிலயே குளித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு முகத்தில் சவரம் செய்து வந்த அண்ணனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

” ண்ணா … அண்ணியப் பார்க்க நீங்க காலையிலயே கிளம்பிட்டீங்க … நாங்க”

“ம்… நான் சர்ச்க்குப் போறேன்… நீங்க எல்லாம் சாப்பிட்டுட்டு வாங்க…. ம்மா நீங்க பார்க்க போறது உங்கண்ணன் பொண்ணு ராதிகாவ இல்ல … “

அதிர்ந்த ஜானகி , “என்னப்பா சொல்ற ” , ” ம்மா நீங்க பார்க்க போறது உங்கண்ணனோட இரட்டை பெண் குழந்தைல ஒருத்தரான ‘ ரதி’ய … சோ நீங்க ரதிய பார்க்க கிளம்பி வரீங்க..

                           காதல் அழகானது…..

Advertisement