Advertisement

அவள் கீழிறங்கவும் அரவிந்த் அப்படியே நின்று விட ….இறங்கி வந்தவள் , கண்களில் கண்ணீர் வழிய அவன் விழிகளை சந்தித்தவள்…. அந்தக் காகிதத்தை அவனிடம் காட்டி விட்டு மகனைஅள்ளிக் கொண்டு முத்த மழை பொழிய ஆரம்பித்தாள். அது நாட்காட்டியிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதம் .

தாயின் அழுகையை கண்ட குழந்தையோ , ” ம்மா அழ வேணாம்…. காய்ச்சல் போச்சு … ஊசி வேணாம்…. ஸ்ரீ முத்தா தாறேன் …..” என்றவன் தன் பிஞ்சுக் கரங்களால் அவள் கண்ணீரைத் துடைத்து கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு தாய்க்கு இதைவிட சந்தோஷம் வேறு எங்குக் கிடைக்கும் …. மகனின் பிஞ்சுக் கரத்தில் முத்தமிட்டுக் கொண்டே ,

“இல்லடா செல்லம் … அம்மா அழல… அம்மாக்கு காய்ச்சல் சரியா போச்சு ….” என அழுதுக் கொண்டே மகனை நெஞ்சில் சாய்த்துக் கொள்ள ,

தன் மகனையும் மகளையும் கையில் ஏந்தி வந்த அனன்யா கண்ணீரோடு ,

“அண்ணி … ” என இருவரையும் அவளிடம் கண்களால் காட்ட , கீழே முட்டி போட்டு அமர்ந்தவள் அனன்யா மகனுக்கும் முத்தம் வைக்க , அவனும் தன் பங்கிற்கு “அத்த அழ வேண்டாம்….” என, குழந்தைகளின் அன்பில் பேச முடியாது போனவள் … அப்படியே தரையில் அமர்ந்து கரங்களால் முகம் மறைத்து ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

குழந்தைகளை பராமரிக்க இரண்டு மூன்று வேலையாட்கள் நியமித்திருக்க அவர்களை அழைத்து குழந்தைகளை ஒப்படைத்து விட்டு பெரியவர்கள் மட்டுமே அங்கு அமர்ந்து இருந்தனர். அரவிந்தும் அவளருகிலேயே அவளைத் தோளோடு அணைத்தவாறு தரையிலயே அமர்ந்து அவள் அழட்டும் என்று விட்டு விட்டான்.

பெண்கள் எல்லாம் அவளருகில் வந்து அமர்ந்து இருந்தனர். அழுது முடித்து தேம்பல் மட்டுமே இருக்க , அருகிலிருந்த நான்சியைக் பார்க்க ,

” ஜெனி… உனக்கு முதல் பிரசவம் ஆன நேரத்துலருந்து இப்ப வரைக்கும் என்ன நடந்ததுனு அண்ணன் சொல்வாங்க….’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்ன்ற ‘கதை தான் உனக்கும் … ” எனக் கண் சிமிட்டி சிரித்து அவளை இயல்புக்கு கொண்டு வர முயன்ற நான்சி….

“அந்த காணாம போன பக்கத்துல …. நாங்கல்லாம் இருக்கோம்” என்றவள் , மதர்…. அமுதா… எனக் கைகாட்டியவள்… உணர்வுகளை அடக்க முடியாது கண்ணீரைத் துடைத்துக் கொண்டே …” அந்த பக்கத்துல நீயும் … நானும் ….இவங்களும் ” என அமுதாவைக் காட்டியவள் ….

” எல்லோரும் நல்ல தோழிகள் …. அதுவும் அருமையான அழகான நாட்களே … மெது மெதுவா யோசிச்சு பார் ஞாபகம் வரலாம் ….. கொஞ்ச நாள் பழகுன எங்களுக்கே நீ எங்களைத் தெரியாதப் பார்வை பார்க்கும் போது அப்படி வலிக்குது ….அப்போ அரவிந்தண்ணா….. ஹி இஸ் கிரேட் …. உனக்காக எவ்வளவு வேதனைகளை தாங்கியிருக்கார் தெரியுமா …. நீ சொல்லுவ காதல்னு சொன்னாலே எனக்கு சந்தோஷமா இருக்கு ….அடிக்கடி காதல் அழகானதுனு யாரோ சொல்வாங்கனு ….. இப்ப அதை நீங்க ரெண்டு பேருமே மாத்தி மாத்தி நிரூபிச்சுட்டிங்க … ” என்றவள் ,

“இனி நீ எனக்கு அடிக்கடி போன் செய்வியா தெரியாது…. எனக்கு பிறந்த வீடுனு ஒன்னுக் கிடையாது. ஆனா அப்படி இல்லனு எனக்கும் அமுதாவுக்கும் உங்க செயல்ல எங்களுக்கு காட்டினீங்க ….அப்போ அப்போ பேசு ஜெனி….” என்றவள் அவளைக் கட்டிப்பிடித்து அழுதுவிட்டு தன் கணவன் குழந்தையோடு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று விட்டாள். இப்படி அனைவரும் அவளிடம் பேசி ஆறுதலளித்து விட்டு … மறுநாள் காலையே அனைவரும் கிளம்புவதாகவும் தெரிவித்து விட்டுச் சென்றனர். சிவாவும் ரமேஷும் வந்தவர்களை சாப்பிட வைத்து அறை ஒதுக்கி விட்டு வந்தனர்.

சிவாவின் தந்தை , ” ராதிகா மா உங்க அத்தை சொல்லுவா … புருஷன் மேல இப்படி உயிரா இருந்த உங்கம்மாவும் உங்கப்பா இல்லனு தெரிஞ்ச அடுத்த நொடியே சுயநினைவை இழந்துட்டானு ….அவளாவது நடமாடிட்டு இருந்தா …. நீ….. ரொம்ப பெருமையா இருக்குமா …. மாப்ள மேல நீயும் … உன் மேல அவரும் உயிரா இருக்கிறது …. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்….”

மதரும் அருகில் வந்து ஆங்கிலத்தில் , “நடந்ததை அரவிந்த் சொல்லுவார் என ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.

வீட்டினர் மட்டுமே இருக்க , ரமேஷ் அரவிந்தைக் கை கொடுத்து எழுப்பி தோட்டத்திற்கு வர ,

அவனது ” மாப்ள ” என்ற ஒற்றை அழைப்பில் ரமேஷை இறுக்கமாக கட்டிக் கொண்ட அரவிந்த் ,

“மச்சான் …… மூச்சு முட்டுது டா ….. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் … நைட் அவ கண் முழிச்சப்பவே பழைய ஞாபகங்கள் திரும்பிருச்சுனு தெரியும் …. ஆனா .. திரும்பவும் ஏதாவது ஆகிடுமோனு பயந்து பயந்து பாதி உயிரோடதான்  திரிஞ்சுட்டு இருந்தேன்….. இப்ப இப்ப தான்டா முழுசா மூச்சு விடுறேன் ….”

அவனது முதுகை ஆதரவாக கட்டிக் கொண்ட ரமேஷ் , “இனி வாழ்க்கைல எல்லாம் நல்லதாவே நடக்கும் டா … நான் உன் தங்கச்சிய உயிருக்கு உயிரா விரும்புறேன் தான் …. ஆனா உங்கிட்ட காதல்ல ஜெயிக்க முடியாதுடா….. தங்கச்சிக்கு அப்படி ஆனதுலருந்து உன்னைப் பார்க்கிறேனே…..

அவ உணர்வில்லாம படுத்திருந்தா….. நீ உணர்வில்லாம நடமாடிட்டு இருந்த ….இது ரெண்டும் தானேடா உங்க ரெண்டு பேருக்கும் வித்தியாசம் …… மற்றபடி அவ நினைப்பு உன்னோட நின்னுப் போச்சுனா… உன் நினைப்பு அவளோட நின்னுப் போச்சு ….. எனக்குப் புரியாதா என்ன …….  உன் அன்பு , நேசம்… காத்திருப்பு எதுவுமே வீண் போகாம உங்க ரெண்டு பேர் காதலும் ஜெயிச்சிருக்கு…சரி வா நேரமாகுது … சாப்பிட்டுட்டு தங்கச்சிகிட்ட நடந்தத பக்குவமா எடுத்துச் சொல்லு…”

இவர்கள் உள்ளே செல்லும் போது , அனன்யா ஜானகி தாயம்மா மூவரும் அவளைச் சாப்பிட வைத்துக் கொண்டிருந்தனர்.ரமேஷ் கண்ணைக் காட்ட அதைப் புரிந்துக் கொண்ட அனன்யா , “சரி அண்ணி நேரமாகுது நீயும் அண்ணனும் சாப்பிட்டுட்டு படுங்க … அம்மா அத்தான் குளிச்சுட்டு சாப்பிடுறாராம்… நான் சாப்பாட ரூமுக்கு எடுத்துட்டுப் போறேன் …” என்றவள் ரமேஷ் மேலே சென்று விட , பின்னாலயே தேவையானதை எடுத்துக் கொண்டு சென்றாள்.

அரவிந்த் அருகில் வந்து அமரவும் , தாயம்மா அவனுக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு ,

“கண்ணுங்களா சாப்பிட்டுட்டு சின்னவர தூக்கிட்டு ரூமுக்குப் போங்க … முழிச்ச உங்க ரெண்டு பேரையும் தேடுவார் “என்றவர்…

“ஜானு … நீயும் சீக்கிரம் வந்து மாத்திரைப் போட்டுட்டு படு … ” என்று நகர , மகனையும் மருமகளையும் பார்த்தவர் ,

“ராதாம்மா…. நான் எம் பிள்ளைய யார்னு தெரியாம அவனக் கஷ்டபடுத்தினத விட … நீ அவனத் தெரியாம முழிச்சப் பாரேன் ….” நாற்காலியில் அமர்ந்திருந்தவன் தலையை தன் வயிற்றோடு ஒட்டி அவனை ஆறுதலாக வருடியவர் …..

“எம்புள்ள முகத்தை பார்க்க முடியலமா…. ரெண்டு பேரும் இனி நல்லா இருக்கணும்…. பாப்பாவுக்கு முப்பது கழிஞ்சதும் எல்லாரும் குலதெய்வக் கோயிலுக்கு போய்ட்டு வருவோம்….இனியாவது என் குலம் செழிப்பா இருக்கணும்” என்றவர் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டார்.

மெளனமாக சாப்பிட்ட இருவரும் அறைக்குச் செல்லும் முன், அரவிந்த் மகனைத் தூக்கிக் கொண்டு மாடி செல்ல , வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்த அவளது பெற்றோர் படத்தின் முன் ராதிகா நின்று விட்டாள்.

மேலே அனன்யாவின் அறையில் கதவருகிலேயே காத்திருந்த ரமேஷ் , அவள் தட்டை உள்ளே வந்து வைக்கும் வரை காத்திருந்தவன் , அவள் வைத்த அடுத்த நொடி பின்னிருந்து அணைத்துக் கொண்டான். எப்போதும் திமிறி விவகுபவள் ….இன்று கணவனின் நெஞ்சிலேயே சாய்ந்துக் கொண்டாள். மனைவியைப் புரியாதவனா … இருந்தாலும் வேண்டுமென்றே ….

“ஹேய் பப்ளி என்ன அதிசயம் இன்னைக்கு என் கையிலருந்து ஓடாம இருக்க….”

அப்படியே திரும்பி அவன் நெஞ்சில் சாய்ந்துக் கட்டிக் கொண்டவள்…

” என் அத்தான் கையிலேயே வாழ்நாள் முழுசும் இருக்க ஆசைப்படுறேன் …”

” இருந்துட்டாப் போச்சு …” என அவளைக் கைகளில் ஏந்தி படுக்கையில் விட்டவன் , மனைவியின் முகவடிவை விரல்களால் அளக்க ஆரம்பித்தான்.

” பப்ளி பாப்பா பிறந்து மாசமாகிருச்சு ….”

“ம்…. ஆமாம் அத்தான் “

“நீ இப்படி கைக்குள்ள வந்தும் ரொம்ப நாளாச்சு ….”

ரமேஷின் பேச்சில் நாணம் கொண்டு சிவந்தவள் …..

“அத்தான் அண்ணிக்கு நினைவு திரும்பிருச்சு … அண்ணனும் அண்ணியும் இனி சந்தோஷமா இருப்பாங்கங்கிற நம்பிக்கையும் வந்துருச்சு….”

அவள் கழுத்தில் வாசம் பிடித்துக் கொண்டிருந்தவன் , எழுந்து அமர, அவளும் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

” பப்ளி…. இருந்தாலும் உங்கண்ணன் போல பொண்டாட்டிய இவ்வளவு லவ் பண்ண முடியாது. இந்த தடவையும் தங்கச்சி கண் முழிக்கலனதும் …. உங்கண்ணன பார்த்து ரொம்ப பயந்துட்டேன் போ ….அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா அடுத்த நொடியே  அவனுக்கும் ஏதாவது ஆகியிருக்கும் …. சான்ஸ்லெஸ் … இப்படிக் காதல் கிடைச்ச ரெண்டு பேருமே கொடுத்து வச்சவங்க ….” எனப் புன்னகைக்க ,

அவளும் முகம் மலர்ந்து … “உண்மைதான் அவங்களப் போல லவ் பண்ண முடியாது தான். ஆனா நானும் ரொம்பக் கொடுத்து வச்சவ தான் …. முதல்ல உறவுதான் … ஆனா அதையும் மீறி உங்க ரெண்டு பேர் நட்பும் ….அப்பவே மனசு உடைஞ்சு போன எங்க அண்ணன இவ்வளவு தூரம் மீட்டுக் கொண்டு வந்ததே நீங்கதானே…. அண்ணன அண்ணியப் பார்க்க வச்சுட்டு …. வீட்டையும் பார்த்து … அவங்க பொறுப்பையும் சேர்த்து பார்த்து ….ராவும் பகலும் எங்க எல்லாருக்காகவும் ஓடி ஓடி பார்த்து பார்த்து செய்த என் புருஷன் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனு தெரியல ….அண்ணன் அண்ணிக் காதல் ஒரு வகையில அழகானதுனா ….. என்னோட காதலும் அப்படித்தான் …

என் காதலை நீங்களும் உணர்ந்தீங்கனு உங்க ஒவ்வொரு செயலும் சொல்லும்….நான் இருக்கேன்னு எனக்கும் உணர்த்திட்டே இருந்ததே … அப்ப உங்க காதலும் அழகானது தான்… அத்தான்…. “

அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு… “ஐ லவ் யூ மை டியர் அத்தான்…. ” என அழகாக புன்னகைத்த மனைவியின் இதழைச் சுவைக்காமல் இருக்க முடியுமா ரமேஷால்….

மெல்ல விடுவிக்க , “அத்தான் நம்ம வீட்டுக்கு  உங்கம்மாவ கூட்டிட்டு போகணும் ஓகே …. உங்க தாத்தா … பாட்டிலாம் கூட்டிட்டு போக வேண்டாமா…”

ஒரு நொடி புரியாது விழித்தவன் புரிந்தவுடன் , ” பப்ளி … இனி உன்னை அப்படிலாம் வலியோட பார்க்க முடியாது…. அவங்களலாம் நான் ஃபோட்டவுல பார்த்து மாலைப் போட்டு கும்பிட்டுக்கிறேன்…”

“அத்தா….. ன் .. அப்போ சரி நீங்க போய் குளிச்சுட்டு வந்து சாப்டுட்டு தூங்குங்க….” என தலையணையில் தலை வைத்துப் படுத்தவளை ,பின்னிருந்து அணைத்தவன் …

“ஏய் பப்ளி … எனக்கு எங்கப்பா எங்கம்மாவ தந்துட்டபோதும்…. இனி என் பொண்டாட்டி எனக்காக மட்டும் தான் வேணும்….”

” எப்படி முடியும் …. “

“ம்…. அப்படி முடியும் .. ” என்றவன் அதற்கு மேல் அவளைப் பேச விடவில்லை.

ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நண்பனுக்காக … அண்ணனுக்காக என தங்கள் மகிழ்ச்சியை மட்டும் பாராத ரமேஷ் அனன்யா காதலும் அழகானதே ……. அவர்கள் வாழ்வும் மகிழ்வோடு செல்லும் என்ற நம்பிக்கையில் …..

தன் பெற்றோரின் மாலை யிடப்பட்ட படங்களின் முன் நின்றவள் , ” ம்மா சாரி மா… நான் உங்கள எவ்வளவு திட்டியிருப்பேன் …. பெத்த பிள்ளைய இப்படி ஆனாதையா தவிக்க விட்டு காதல் தான் பெரிசு…. புருஷன் தான் பெரிசுனு … என்னை இப்படி ஆக்கிட்டியேனு கேட்டு …..இப்ப பாருங்களேன் அவருக்கு ஒன்னுனதும் நானும் இந்த உலகத்துலயே இருக்க மாட்டேன்னு போயிருக்கேன்… அதுவும்… அதுவும்….” எனக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்.

Advertisement