Advertisement

அத்தியாயம் 40

        மறுநாள் காலையிலயே ராதிகாவிற்கு சிகிச்சை அளித்த அத்தனை மருத்துவர்களும் வந்து விட்டனர். அவளது உடல் பரிசோதனையோடு மன நல பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் ஜானகிக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவரும் அடக்கம். அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து அனைவரும் வெளியேறியதும் ,

“”என்ன பாஸ் இது இத்தனை டாக்டர்ஸ் … அனுவுக்கு இவ்வளவு பேர நான் பார்க்கலயே…. அதுவும் அத்தைக்கு ட்ரீட்மென்ட் எடுத்த சைக்யாட்ரிஸ்ட் லாம் வாறாங்க….”

முறுவலுடன் ” நீ வீட்டுக்குப் போகத் தயாரானு எல்லாரையும் வர வச்சு கேட்கிறேன்…. அப்போதான் எனக்கு திருப்தி அது தான். இன்னைக்கு ஈவ்னிங்கே ரிசல்ட் வந்துரும்… சோ நாம நாளைக்கு இல்லனா ஈவினிங்கே கிளம்பிடலாம் ஓகே…. நம்ம வீட்டு மகாலட்சுமிங்க ரெண்டு பேரும் எப்போ வருவாங்கனு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க…” என, அவன் மகள் பசிக்கு அழவும், மெல்லத் தூக்கி மனைவியிடம் தர…

” எப்படிங்க அழகா குழந்தையப் பிடிக்கிறிங்க… எனக்கே இன்னும் பிடிக்கத் தெரியல….” என வியந்துக் கொண்டே மகளை வாங்கி பசியமர்த்த ,

அவளது கேள்வியில் புன்னகைத்தவன் , “அப்பா ஆனதும் தானா எல்லாம் தெரிய ஆரம்பிச்சுருது ….சரி நீ ஃபீட் பண்ணு… நான் கொஞ்சம் ஃபோன் பேசிட்டு வாறேன் .. ” என வெளியே சென்று விட்டு துணைக்கு ஒரு செவிலியரை அனுப்பி விட்டுச் சென்றான்.

அவன் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து விட்டு அறைக்கு வர , ஜானகி ராதிகாவிடம் பேசிக் கொண்டிருந்தார். உள்ளே வந்தவனிடம் ,

“அத்தான் நீங்க வீட்டுக்குப் போய் ஃபிரஷ்யாகிட்டு வாங்க ….அத்தை என் கூட இருப்பாங்க … “

மனைவியின் அத்தானில் மறுபடியும் விழித்தவன் , ” ம்மா நீங்க ஏன் கஷ்டபடுறீங்க முட்டி ரொம்ப வலிக்குதுனீங்க ….இன்னைக்கு வீட்டுக்கு வந்துருவோம். நான் அப்புறம் வாறேன் … வாங்க உங்கள கார்ல உட்கார வச்சுட்டு வாறேன்.”

“அரு….என் பேத்தியப் பார்க்காம இருக்க முடியலப்பா …. எப்ப வீட்டுக்கு வருவாங்கனு இருந்துச்சு … நல்ல வேளை இன்னைக்கு கூட்டிட்டு வரனுட்ட…சரி மா நான் கிளம்புறேன் . ரெண்டு பேரும் கொஞ்சம் சாப்பிட்டுக்கோங்க” என்றவர் கிளம்பிவிட்டார். அறைக்குள் வந்தவனிடம் ,

“வீட்ல பசங்கள சமாளிக்க முடியலனு அத்தை சொன்னாங்க … யாருங்க சிவாண்ணா வந்துருக்காங்களா….”

“ம்… ஆமாம் நீ வீட்டுக்கு இன்னைக்கு வந்துருவனு சொன்னேன். அதான்…. ஆமா நீ என்ன அத்தான்னு கூப்பிடுற….”

“அத்தை முன்னாடி அப்படி தானே கூப்பிடுவேன்…. “

“ஓ” என்றவன் ஒரு நிமிடம் பயந்து தான் போனான்.பின் வீட்டினர் யாரும் இன்று வர வேண்டாம் என்றவன் தாங்களே இரவு வந்து விடுவதாக தெரிவித்து விட்டான். மற்றவர்களைச் சமாளித்தவனால் மகனைச் சமாளிக்க முடியவில்லை. எனவே மதியம் வீடு சென்று குளித்து கூடவே வருவேன் என்றவனை ஒரு வழியாக சமாளித்து மருத்துவமனை வர , ராதிகாவின் பரிசோதனை முடிவுகளும் வந்தன.

 அவள் உடலளவில் நல்ல ஆரோக்கியாமாக இருக்கிறாள்… வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றார்கள். ஆனால் மனதளவிலான மாற்றத்தை அவள் செய்கைகளைக் கொண்டு தான் கணிக்க முடியும் என்று விட்டார்கள்.

அன்று மாலையே மனைவியையும் மகளையும் மட்டுமல்லாது மருத்துவக் குழு ஒன்றையும் தனியாக ஒரு காரில் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

 வண்ண விளக்குகள்  கொண்டு அலங்கரிக்கப்பட்ட அவர்கள் வீட்டில் கார் நுழைய , ஒரு பெரிய கும்பலே ( ராதிகாவால் அப்படித்தான் நினைக்கத் தூண்டியது) இவர்களுக்காக வாசல் வந்துக் காத்திருந்தார்கள். அனன்யா கையில் ஆரத்தி தட்டுடன் நிற்க கண்ட ராதிகா  அவளைக் கண்டுப் புன்னகைத்துக் கொண்டே காரை விட்டு இறங்கினாள்.

அரவிந்தை அருகில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்த அனன்யாவிடம் , “எங்க என் மருமகன பொண்ணக் கூட்டிட்டு வந்துருக்கேன் அவரக் காணோம்.”

” அண்ணி இவ்வளவு நேரம் உனக்காக எதிர்பார்த்துட்டு இப்போ ரெண்டு பேரும் நல்ல தூக்கம் ” என்றவள் அண்ணன் மகளை கையில் வாங்கிக் கொஞ்ச ஆரம்பித்தாள்.

“ரெண்டா” என அவள் கேட்க , அரவிந்த் ”  வாங்க எல்லோரும் உள்ள போய் பேசுவோம்.” என உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல , அங்கு நின்றிருந்தவர்களை எல்லாம் பார்த்து தலையசைப் போடு ஒரு புன்னகையைத் தந்து விட்டு , அங்கு ஒரு ஓரமாக அமர்ந்திருந்த சிவாவின் தந்தையிடம் சென்று ,

“வணக்கம் பெரியப்பா “என்றவள், அருகிலிருந்த ராணியையும் சிவாவையும் பார்த்து விட்டு ,

” வாங்கண்ணா … வாங்கண்ணி … எங்க அண்ணி குட்டீஸ் …. ” என ,

அவர்கள் மூவரும் அவளைப் புரியாத பார்வைப் பார்த்தனர். ஏனெனில் அவர்கள் அருகே தான் குழந்தைகள் இருவரும் நின்றுக் கொண்டிருந்தனர்.

அவர்கள் மட்டுமல்ல ….அங்கு அவளைக் காண , அரவிந்தால் விமானத்திலும் காரிலும் அழைத்து வரப் பெற்றவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தனர் .

ரமேஷ் கையில் இருந்தப் பெண் குழந்தையைப் பார்த்துக் கொண்டே அரவிந்திடம் ,

“பாஸ் இவங்கல்லாம் யாரு ….இந்த மதர் … இவங்க  … குட்டிமா பிறந்ததுக்காக டொனேஷன் தர வரச் சொன்னீங்களா….”

“ஷ் … அவங்ககிட்ட அப்படிலாம் போய் கேட்டுறாதடா…”

மதர் வெனிஸ்தா ஜானகியுடனும் தாயம்மாவுடனும் பேசிக் கொண்டிருந்ததால் இவளை கவனிக்கவில்லை .ஆனால் நான்சியும் அமுதாவும் அப்படி இல்லையே …. குழந்தைகளை அவர்கள் கணவன்மார் வைத்திருக்க , ஆசையாகப் பார்க்க வந்த தோழியோ … யாரோ போல் தலையசைத்து வரவேற்றது  மனதிற்கு என்னவோ போல் இருக்க அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதற்குள் குழந்தை அழ , குழந்தையை வாங்கிக் கொண்டு மாடி ஏறப் போனவளின் கால்களை , ” ம்மா…” என்ற அழைப்போடு காலைக் கட்டிக் கொண்ட தன் கணவனின் சாயலில் இருந்த அழகு குழந்தையை கண்ணிமைக்காது பார்க்க ,

“ம்மா தூக்குங்க … பாப்பா காட்டுங்க” என ,புரியாது விழித்துக் கொண்டிருந்தவள் அருகே வந்த தாயம்மா ,

“சத்தம் கேட்டு எழுந்தவர் , அம்மா அம்மானு ஓடி வந்துட்டாரு கண்ணு … கொஞ்ச நேரம் அவரத் தூக்கிட்டு இறக்கி விடு கண்ணு… பிள்ளை உன்னைய பார்க்காம ஏங்கி போச்சு ……” அவள் விழித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அரவிந்த் அவளருகில் வரப் பார்க்க , அதற்குள் அங்கு வந்த அமுதவள்ளி ,

” ஜெனி ” எனக் குரல் கமற கண்களில் நீர் கோர்க்க அழைக்க, அவளைத் திரும்பிப் பார்த்த ராதிகா , புரியாத பார்வையில் , ” ஜெனி ” என திரும்ப சொல்லி , ” ஜெனி யா நான் ராதிகாங்க…. நீங்க … ” என நிறுத்த , வீடே அவர்களைத் தான் பார்த்தது …. ஒரு பக்கம் மகிழ்ச்சி , ஒரு புறம் துக்கம் என நின்றிருந்தவர்களின் மனநிலை இருந்தது.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க , அரவிந்த் அவளருகில் வந்து மகனைத் தூக்கிக் கொண்டு அமுதாவிடம் ஏதோ சொல்ல வருவதற்குள் , ராதிகாவின் மகன் ,

“ப்பா….அம்மாகிட்ட போகணும் … பாப்பா பாக்கணும் என ராதிகாவின் ஜடையை இழுக்க ,கையிலிருக்கும் மகள் ஒருபுறம் அழ , குழந்தையின் அப்பா அம்மா என்ற அழைப்பில் அதிர்ந்து நின்றவளிடம் ,

“போடி ….என்னைய தான் தெரியாம நின்ன ….இப்ப நீ பெத்த பிள்ளையையும் தெரியாம நிக்கிறியே டீ ….இந்தக் கொடுமை யாருக்கும் வரக்கூடாது ஜெனி ….இப்ப புரியுது அன்னைக்கு அரவிந்த் அத்தான் நிலைமை எப்படி இருந்துருக்கும்னு…..”  அரவிந்திடம் திரும்பி ,

“ஜெனிக்கு பழைய நியாபகம் வந்துருச்சா …. எங்களையெல்லாம் யாரோ போலப் பார்க்கிறா … ” ராணியைக் காட்டி , “அந்த அக்காவை அவளுக்கு நல்லா தெரியுது ….. இப்ப…. இப்பவாவது ….அவளுக்கு உங்களைத் தெரியுதுங்களாண்ணா…. இல்ல மறுபடியும் உங்களையும் யாருனு தான் கேட்கிறாளா ….” என்றவள் அழுதுக் கொண்டேஓடிச் சென்று சக்தி கையில் அழுது கொண்டிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு , அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று விட்டாள்.

ராதிகா இந்த நிலையை எதிர்கொள்ளும் போது அவளது உடலிலும் மனதிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களை கவனிப்பதற்காகவே வந்திருந்த மருத்துவர்கள் தேவையான மருந்து மாத்திரைகளோடு தயாராக வந்து நின்றனர்.

அமுதாவின் வார்த்தைகளை காதில் கேட்டு மூளைக்கு கொண்டு போனவளுக்கு தரையில் காலூன்றி நிற்கவே சிரமாமாக இருக்க , மாடிப்படி அலங்கார கைப் பிடியை ஆதாரமாக பற்றி இடது கையில் குழந்தையை வைத்திருந்தவள் எதுவும் பேச முடியாது படியிலேயே அமர்ந்து விட்டாள்.

அனைவரும் அவளருகில் வர , அவள் மகளோ தாயின் நெஞ்சை முட்டி முட்டி தன் தேவையை உணர்த்த , சட்டென்று உணர்வுக்கு வந்தவள் … மகளை நெஞ்சோடு அணைத்து தூக்கி மாடியேறி அவர்களது அறைக்குச் சென்று விட்டாள்.

பின்னாலயே செல்ல இருந்த அரவிந்தையும் மற்றவர்களையும் தடுத்து நிறுத்திய மனநல மருத்துவர் , அரவிந்திடம் வந்து….”மிஸ்டர் அரவிந்த் ஷி இஸ் பெர்பெஃக்ட்லி ஆல்ரைட்…. நீங்களே பார்த்தீங்களே அந்த பொண்ணுப் பேசினது எல்லாம் கேட்டதும் ஒரு அஞ்சு நிமிஷம் அவங்களால நம்ப முடியாத குழப்பம் வந்தது தான் … ஆனா குழந்தை பசிக்கு அழுகுது நாம கவனிக்கனும் அப்படிங்கிற எண்ணம் வந்ததும் உடனே ஃபீட் பண்ண எழுந்துப் போய்ட்டாங்க …. சோ இனி நீங்க என்ன சொன்னாலும் அதை முழுமையா ஏத்துக்க அவங்க உடலும் மனமும் தயாராகிருச்சுனு தான் அர்த்தம்.இனி கவலைப்பட வேண்டாம் …. மாத்திரை மருந்துகளும் இனித் தேவைப்படாது. இனி நீங்க எல்லாரும் அவங்க கிட்ட பக்குவமா பேசி நடந்துக்கிறதுல தான் இருக்கு ….. இனி நாங்க இங்க இருக்கிற அவசியம் இருக்காது ….. நாங்க கிளம்புறோம் மிஸ்டர் அரவிந்த் ….. ஆல் தி பெஸ்ட் …

இந்த மாதிரி கேஸ்ல மீள்றதுங்கிறது நிறைய ரிஸ்க்….ஆனா இதுல உங்க பங்கு அதிகம் உங்க காத்திருப்பு வீண் போகல…. நான் உங்களை தெரிஞ்சதால சொல்றேன்  உங்க காதல் மட்டுமே அவங்கள மீட்டுக் கொண்டு வந்திருக்கு… “

      மருத்துவர் கொடுத்த விளக்கத்தில் அனைவரும் மகிழ்ந்தாலும் ..இடைபட்ட காலங்களையும் அதனால் அவளுக்கு கிடைத்த புதிய உறவுகளையும் மறந்தது வருத்தத்தை அளிக்க , இனி அவளிடம் ஞாபகப்படுத்தலாம். ஞாபகப்படுத்த படுத்த ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொள்ள அவள் மனம் பக்குவப்பட்டு விட்டதால் … தாராளமாக நடந்த அத்தனையையும் சொல்லிவிடுங்கள் என மருத்துவர் பரிந்துரைத்ததால் சிறிது நிம்மதியாகினர்.

மருத்துவர் குழு சென்றதும் அரவிந்த் மகனை தூக்கிக் கொண்டு மாடிப்படியில் கால் வைக்க , கண்கள் சிவந்து போய் இருக்க ….இடக்கையில் குழந்தையையும் , வலக்கையில் ஒரு காகிதத்தையும் கையில் வைத்துக் கொண்டு மேலிருந்து கீழே ராதிகா இறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.

Advertisement