Advertisement

அழகு 4

    பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு வந்த சக்திவேல் , தான் அவளைப் பார்த்த விவரங்களைக் கூறி விட்டு , ” அண்ணா ரொம்ப குளிருது, நாம காலையில வரலாம் , எப்படியும் இப்ப யாரையும் பார்க்க முடியாது”

ரமேஷும் , “ஆமா மச்சான் காலையிலயே கிளம்பிவரலாம் வா ….” எனக் கைப்பிடிக்க ,

“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க , நான் அவளப் பார்க்காம வர மாட்டேன்” என்று கார் மீது ஏறி அமர்ந்து கொண்டான். அவனருகில் வந்த ரமேஷ் , “சரி மச்சான் கோட் வேறப் போடல காருக்குள்ள உட்காரு , கைப்புண்ணுக்கு மருந்து மாத்திரை வேற எடுத்துக்கணும். ப்ளீஸ்டா நீ நல்ல உடம்போட இருந்தா தான் தங்கச்சிய பார்க்க முடியும் “

அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கவே, காரினுள் டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டான். “சக்தி உனக்கு இன்னைக்கு ரொம்ப அலைச்சல், நீ போய் பின் சீட்டில படுத்துக்கோ.. நான் முன்னாடி சீட்ல சாய்ந்துக்குவேன்.”

“சரிங்க மாமா…” என்றவன் பின்புறம் சென்றுப் படுத்துக் கொண்டான் .அரவிந்த் சீட்டில் தலை சாய்த்து வெளியே தெரிந்த தேவாலயத்தையே வெறித்துக் கொண்டிருந்தான். கண்களை மூடினானா தெரியாது , தேவாலய மணி ஓசை ஐந்தை அடிக்கவும் , அந்தக் குளிரிலும் எழுந்து செக்யூரிட்டி அருகே வந்து நின்றான்.

அவனைப் பார்த்தவர் , “தம்பி பார்த்தா பெரிய இடமா தெரியுது.. இங்கயே ராவெல்லாம் இருக்கிறீங்க ஒரு டீயாவது சாப்டுட்டு வாங்க. இப்ப எல்லாரும் வர ஆரம்பிப்பாங்க” என்றவாறே கதவுகளை திறந்து விடலானார்.

எதுவுமே சொல்லாமல் சின்னக் குன்றின் மேல் இருந்த தேவாலயத்தின் படிகளில் ஏறியவன் தேவாலய உள்ளே செல்லாமல் ,படியில் ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி ,மடித்தக் காலின் மீது முழங்கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் , தன் காதலிக்காக ,தன்னவளுக்காக குளிரையும் பொருட்படுத்தாது… உண்ணாமல் உறங்காமல் இரவிலிருந்து தவமிருந்தான் அந்த மிகப்பெரும் தொழிலதிபன்.

அரவிந்த் எழவுமே எழுந்த ரமேஷும் சக்தியும் செக்யூரிட்டியிடம் வாஷ் ரூம் எங்கு எனக் கேட்டுச் சென்றவர்கள் , முகம் கழுவி அங்கு அருகில் இருந்த டீக்கடையில் டீ அருந்தி விட்டு திரும்பி வரும்போது அவனிற்கும் ஒரு டீ கப் போடு வந்தார்கள்.

அவனெதிரே வந்தவர்களைக் கூடக் கவனிக்காது அந்த விடுதி பக்கமே கண்களைப் பதித்திருந்தான் . “ரதி வந்துரு டா… ப்ளீஸ் வந்துரு” என்று தான் உடல் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்தது.

ரமேஷ் அழைத்து அழைத்துப் பார்த்தவன் அவன் அசையவில்லை என்றதும் டீயை அப்படியே வைத்து விட்டு அவனுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான். சக்தியும் ஓர் ஓரமாக அமர்ந்து விட்டான்.

வெளியிலிருந்தும் மக்கள் வழிபாட்டுக்கு வரத் துவங்கினர்.அப்போதுதான் கூட்டத்தோடு கூட்டமாக ஜெனிஃபரும் வெண்ணிற சுடிதாரில் , பிங்க் நிறத் துப்பட்டா அணிந்து அதனை தலையைச் சுற்றிப் போட்டுக் கொண்டே தேவாலய படியேறினாள்.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

 உயிரில் கலந்த உறவே ….”

 

உயிரில் கலந்தவள் விழிகளை அசைத்தால் காணாமல் போய் விடுவாளோ…. தன் உயிரை ..  … அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் ….. உடலில் ஏதோ மாற்றம்… மூளை ஏதோ சொல்கிறது … இதயம் படபடக்கிறது …. குளிரில் தவமிருந்தவனின் வரம் கிடைத்து விட்டதா … இல்லை கனவா …..

ரதி… ரதி… ரதி என துடித்துக் கொண்டிருந்த இதயம் வேகமாக துடித்தது.

தவத்திற்கான பலனைப் பெற்ற அரவிந்துக்கு அவன் தேவதையின் தரிசனம் கிடைக்கவும் , மெல்ல எழுந்து நின்றான். அரவிந்த் எழுந்து நிற்கவும் தான் ரமேஷும் சக்தியும் எழுந்தார்கள்.

அரவிந்த் இது கனவோ , நனவோ என்று பார்த்துக் கொண்டு இருந்தான் என்றால் , ரமேஷ் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் பேச இயலாது அரவிந்தின் தோளைப் பற்றிக் கொண்டான். இறங்க போன ரமேஷின் கையை இறுகப் பிடித்த அரவிந்தை, ‘என்ன’ என்றுப் பார்த்த ரமேஷிடம் ‘போக வேண்டாம்’ என்பது போல் தலையசைக்கவும் அவனும் யோசனையோடு நின்று விட்டான்.

ஜெனிஃபரும் இவர்களைப் பார்த்தவள் அருகில் வந்து நின்று , ” சார் நீங்க அந்த ….பேக்டரி மேனேஜர் தானே” என சக்தியைப் பார்த்துக் கேட்கவும் , அவனும் ரமேஷையும் அரவிந்தையும் பார்த்துவிட்டு,

“ஆ… ஆமா… மேடம்” என்று தடுமாறினான்.

“நீங்க காலையிலயே இங்க சர்ச்க்கு வருவீங்களா , பிரேயர் முடிஞ்சதும் ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார், உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”

அரவிந்தையும் ரமேஷையும் பார்த்துக் கை காட்டியவன் ,

” நோ ப்ராப்ளம் மேம்….இவங்கதான் எங்க கம்பெனி எம்.டி , அன்ட் இவர் கோ.எம்.டி , பிஸ்னஸ் விஷயமா ‘மதர் வெனிஸ்தா’ பார்க்கணும் , உடனே ஊர் கிளம்பிடுவாங்க அதான் காலையிலயே வந்தோம் “

“ஓ … அப்படிங்களா ” என்று அவர்கள் புறம் திரும்பியவள், “வணக்கம் சார் ,மதர் இப்ப வந்துடுவாங்க, நீங்க அதுவரை சர்ச்க்குள்ளயே வெய்ட் பண்ணுங்க. ரொம்ப குளிரா இருக்கே” என்றவள், மூவரிடமும் ஒரு தலையசைப் போடு சென்று விட்டாள்.

அவள் ஆலயத்தில் நுழையும் வரை அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் , அருகில் பாறைகளுக்கு நடுவில் இருந்த கடவுள் உருவச்சிலை அருகே சென்றவன் அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து விட்டான். அவன் தோளைத் தொட்ட ரமேஷின் கையை பிடித்த அரவிந்த் , ” ர… ர… ரதி டா… என் ரதி டா…. என்னையவே யா.… யாரோ மாதிரி பேசிட்டுப் போறா பாரேன்” என்று குலுங்கியவனை இறுக அணைத்துக் கொண்ட ரமேஷ் ,

“மச்சான் …மச்சான்… தங்கச்சி தெரிஞ்சுக்குவாடா…. வா முதல்ல அவள இங்கயிருந்து கூட்டிட்டுப் போற வேலையப் பார்ப்போம். உங்க காதல் உன்னைய தங்கச்சியோட சேர்த்து வச்சுரும்னு எனக்குத் தெரியும் மச்சான் “

சட்டென்று ரமேஷை வேகமாக தள்ளி விட்டவன் …..”வேண்டாம் டா அந்தக் காதல்…. என் ரதி இன்னைக்கு இப்படி இங்க வந்து நிற்கவே அந்தக் காதல் தான் டா காரணம்….வேண்டாம்…. வேண்டாம்… வேண்டவே  … வேண்டாம் அந்தக் காதல்” என்றவன் அடிபட்ட கையால் தரையை ஓங்கி ஓங்கி அடிக்க … ரமேஷும் சக்தியும் வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள்.

அவனை எழுப்பி அங்கிருந்த கல் இருக்கையில் அமர வைத்தவர்கள்.செடிகளுக்கு தண்ணீர் விடும் குழாய் அருகிலிருக்க அங்கிருந்து தண்ணீர் பிடித்து வந்து அவன் முகம் கைகளை கழுவிட்டவன் ,

” ரிலாக்ஸ் மச்சான் … அடுத்து என்ன செய்யனு யோசிப்போம்…” என்ற ரமேஷிடம் ,

“மாமா … ரெண்டு பேரும் என்னப் பேசிக்கிறீங்கனேப் புரியல … இவங்க அண்ணியோட ட்வின் சிஸ்டர் இல்லையா…அண்ணி அமெரிக்காலதான இருக்காங்க … ” என்று திக்கித் திணறி அடுத்தவர் பர்சனலை கேட்கலாமா என்று சங்கடத்துடன் கேட்டான். அரவிந்தின் மாறுபட்ட உணர்ச்சிகள் அவனை அப்படிக் கேட்க வைத்தது.

சங்கடத்துடன் கேட்ட சக்திவேலை பார்த்த அரவிந்த் அவனை சைகையால் அழைத்து தன் அருகே அமரச் சொன்னான்..

அரவிந்த் அருகே அமர்ந்த சக்திவேலின் வலக்கையை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்த அரவிந்த் , “சக்தி … நீ நடைபிணமா இருந்த எனக்கு உயிர் கொடுத்துருக்க….என் உயிர … என் வாழ்க்கைய திருப்பி தந்துருக்க …. உனக்கு நன்றினு….”

கையை உருவ பார்த்தவனை விடாது பிடித்துக் கொண்ட அரவிந்திடம் , “ஐயோ…. ண்ணா என்ன பேசறீங்க”

“தேங்க்ஸ் டா , தேங்க்யூ வெரி மச்…” என்றப் பிறகே கையை விட்டான்.அருகில் வந்த ரமேஷ் , அரவிந்தின் நிலையையும் சக்திவேலின் நிலையையும் உணர்ந்து , “அரவிந்த் பிரேயர் முடியறதுக்குள்ள நானும் சக்தியும் கேன்டீன் போய் ஒரு டீ வாங்கிட்டு வந்துடுறோம்… நீ இங்கயே உட்கார்” என்றவன் சக்திவேலை அழைத்துக் கொண்டு சென்றான்.

போகும் வழியிலயே என்ன நடக்கிறது என்பதை சக்திவேலிற்கு ரமேஷ் தெளிவுப்படுத்தினான் , கேன்டீன் உள்ளே வந்து ஓர் மேசையில் அமர்ந்துக் கொண்ட சக்திக்கு மனம் வலிப்பது போல் இருந்தது.

காதல் , அன்பு ,பாசம் , நேசம் இதெல்லாம் ஒரு குடும்பத்தை இந்த அளவுக்கு புரட்டிப் போடுமா … தனியா வளர்ந்ததால எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கோ …. சக்தி இப்படித்தான் யோசித்துக் கொண்டு இருந்தான்.

அமைதியாக அமர்ந்திருந்தவன் எதிரே அமுதா வந்து நின்றதைக் கவனிக்கவில்லை. ரமேஷைப் பார்த்து தயங்கிக் கொண்டே , “குட் மார்னிங் சார் ” எனவும் நிமிர்ந்த சக்தி அவளை ரமேஷிற்கு அறிமுகப்படுத்தினான்.

“அப்படியா … ரொம்ப சந்தோஷம்ங்கண்ணா ” என்றுப் புன்னகைப் புரிந்தவள் , “அண்ணானு கூப்பிடலாங்கதானே … ஜெனிஃபர்க்கு அண்ணன் சொன்னதால தான் ….”

“பரவால்லமா, நீயும் எனக்கு தங்கச்சி தான் …. சொல்லுமா ஜெனி… அதாவது என் தங்கச்சி இங்க எப்படி வந்தா…”

“இங்க வரதுக்கு முன்ன கொச்சின்ல இருந்தா… மதர் வெனிஸ்தாவ போய்ப் பாருங்க அண்ணா. நான் இங்க ஜூனியர் செஃப் … என் வேலை ஆம்பிக்க டைம் இருக்கு… இவங்க அன்னைக்கு ஜெனிஃபர் பத்தி சில விஷயங்கள் சொன்னதால கேட்க வந்தேன்.என்னைப் போல இங்க நிறைய பேருக்கு குடும்பம் கிடையாது. ஜெனிக்கு கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க…. சரிங்க நீங்க பேசிட்டு இருங்க… நான் அப்புறம் வாறேன்” என்று எழுந்து சென்று விட்டாள்.

அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த சக்திவேலுவுக்கு “இவ என்ன எப்ப  பாரு இப்படியே பேசிட்டு இருக்கா…. எனக்கு குடும்பம் இல்ல குடும்பம் இல்லனு … குடும்பம் இல்லனா உருவாக்கிகனும் அத விட்டுட்டு …..” என எண்ணம் செல்ல , அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த சக்தியிடம் , டீ ஆர்டர் பண்ணினேன் … எடுத்துட்டு போவோமா ” என்றவாறே எழுந்தான் ரமேஷ்.

“இதோ நான் எடுத்துட்டு வாறேன் மாமா” என்றவன் , டீ எடுக்கும் இடத்திற்குச் செல்ல , அங்கு அப்போதுதான் தனது கையுறைகளை மாட்டிக் கொண்டிருந்த அமுதாவை , “எக்ஸ்க்யூஸ் மீ மேம்” என,

“எஸ்….” என திரும்பிப் பார்த்தவளிடம் , “சும்மா எனக்கு யாருமில்ல , குடும்பமில்ல அப்படிங்கிறத விட்டுட்டு ஒரு குடும்பம் அமைச்சிக்கப் பாருங்க ….அப்படி அமைக்கலாம்னு யோசிச்சா … அதுல என்னைய இணைச்சிக்க முடியுமா பாருங்க மேம்…” என்றவன் அவள் திகைத்து விழித்துக் கொண்டிருக்கும் போதே முறுவலோடு நகர்ந்து விட்டான்.

திரும்பி நடந்தவன், “அரவிந்தண்ணா காதல் கதையக் கேட்ட பிறகு எனக்கும் காதலிக்க ஆசை வருது… இது காதலானும் தெரியாது….ஆனா இப்படி ஒரு புரொபசல் யாரும் கொடுத்துருக்க மாட்டாங்க….சக்தி தேறிட்ட டா …. அவ கைல கத்தியோ கரண்டியோ எடுக்கிறதுக்கு முன்ன  திரும்பிப் பார்க்காம எஸ்ஸ்ஸ் … … இல்ல குப்பக்கா துடைப்பத்தோட வந்திரப்போறாங்க..”புன்னகையோடு ரமேஷுடன் சென்று இணைந்துக் கொண்டான்.

யோசனையுடன் தேவாலய வாசலையேப் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த் ராதிகா வெளியே வருவதையேப் பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே தோழிகளோடு பேசிக் கொண்டே வந்தவள் , தலையைச் சுற்றிப் போட்டிருந்த துப்பட்டாவை கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள். ” திரும்ப முடி வளர்ந்துடுச்சா ” என்றுப் புன்னகைத்துக் கொண்டான்.

“பாஸ் காலையில உங்கள டிஸ்டர்ப் பண்ணாம எழுந்திரிக்கலாம்னு பார்த்தா .. இந்த ஜடை உங்க முதுகுக்கு கீழ தான் இருக்கு … பேசாம கொஞ்சம் கட் பண்ணிரட்டா…..”

“ஐயோ டியர் …. நான் இன்னும் பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகத்த தீர்த்துக்கல….என் ஆயுசு வரை அந்த டவுட்ட டெய்லி செக்  பண்ணனும்… சோ அந்தப் பேச்ச விட்டுறு…. அப்படியே அது மேல படுக்கப் போய் தான் நான் சுகமா தூங்குறேன் டியர்…” என்று கூந்தலில் முகம் புதைத்தவனை தள்ளி விட்டுச் சென்றவளையே நினைத்தவன் தன்னால் கையால் தாடையை தடவி சிரித்துக் கொண்டான்.

நெடு நாட்களுக்கு பின் வந்த புன்னகை .. கண்ணாடி பார்க்க வேண்டும் போல் தோன்ற , அப்பொழுதுதான் தன்னை ஆராய்ந்தான்.

மண்ணில் அமர்ந்ததால் அழுக்காகி போயிருந்த நீல நிற ஜீன்ஸ் , நேற்று இரவு பார்ட்டிப் போனதால் போட்டிருந்த மஞ்சள் வண்ண டீ ஷர்ட் முழுதும் மணல் ஒட்டி இருந்தது. தன் நிலையைப் பார்த்து சிரித்துக் கொண்டவன் , “ஸ்வீட்டி இன்னும் உன்னையப் பார்க்காம இருந்தேன்னு வை…. இப்ப அழுக்கா இருக்கிறது  இன்னும் கொஞ்ச  நாள்ல  கிழிஞ்சுப் போயிருக்கும் …. பைத்தியக்காரனா அலைய விட்டியேடா…..”ரமேஷும் சக்தியும் வரவும் மதரைப் பார்க்கச் சென்றான்.

அவர் அறைக்கு வெளியே காத்திருக்கையில் அழைப்பு வரவும் , ரமேஷையும் சக்தியையும் பார்த்து கைக் காட்டியவன் , “நான் தனியா அவங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும் மாப்ள ” என்றதும் , ரமேஷ் தோள் தட்டி உள்ளே அனுப்பி வைத்தான்.

அதற்குள் அமுதாவைத் தேடி கேன்டினுக்குள் நுழைந்த ஜெனிஃபரைப் பார்த்த அமுதா , கண்கள் பளிச்சிட அவளருகில் வந்து , ” ஜெனி… ஜெனி… இங்க வா இன்னைக்குத் தான் உங்கிட்ட பேசவே நேரம் கிடைச்சிருக்கு.”

“ஆமா அம்மு எனக்கும் தான் , நானும் உங்கிட்ட ஒன்னு சொல்லணும்”

” ஜெனி முதல்ல நான் உங்கிட்ட சொல்லிடுறேன்… அன்னைக்கு அந்த ஃபேக்டரி போனோமே அப்ப அந்த மேனேஜர் உன்னையவே பார்க்குறாரு சொன்னேன்ல…. அவருக்கு உன்னையத் தெரியுமாம். அவங்க அண்ணியோட ட்வின் சிஸ்டராம் நீ “

அதிர்ந்துப் போய் விழித்தவள் , “எ… எ… என்ன சொல்ற அம்மு “

அவளிடம் தான் கேட்டறிந்த விவரங்களை சொன்ன அமுதா , “ஏன் ஜெனி  … உனக்கு அவங்க பேமிலிய தெரியலயா”

“என்னையப் பத்தி உனக்கு நான் ஒன்னுமே உங்கிட்ட சொன்னதில்ல… ஐ ம் சாரி… அது நான் … ” என்று ஆரம்பிக்கவுமே, அங்கு வேலை செய்யும் பெண் அருகில் வந்து ஜெனிஃபரை மதர் வெனிஸ்தா அறைக்கு வரச் சொன்னதாக தகவல் தர , இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“அம்மு நீயும் என் கூட வா எனக்கு என்னவோ போல இருக்கு …, நானும் அந்த மேனேஜர் பத்தி பேச தான் வந்தேன். அவர் என் விஷயமா தான் வந்துருப்பாரோ … ” என்று ஒரு வித நடுக்கத்தில் பேசினாள்.

அவளது பயந்த முகத்தைப் பார்த்தவள் தானும் வருவதாக ஒத்துக் கொண்டு கிளம்பினாள். அங்கு சென்றால் ரமேஷும் சக்தியும் வெளியில் நின்றிருந்தார்கள். ரமேஷ் புன்னகையோடு அவளிடம் பேச வர அதற்குள் உள்ளே அழைப்பதாக சொல்லவும் அனைவரும் உள்ளே சென்றனர்.

அமுதாவின் கைப்பிடித்துக் கொண்டே அவர்கள் அனைவரையும் மிரண்டப் பார்வைப் பார்த்துக் கொண்டே மதர் அருகில் போய் நின்றவளிடம் அவர்கள் யார் என்பதையும் வந்தக் காரணத்தையும் தனியாக வேறொரு அறைக்கு அழைத்துப் போய் தெரிவித்தவர் , பயந்து போய் இருந்தவளை திரும்பவும் அங்கு அழைத்து வந்தார்.மீண்டும் ஆங்கிலத்தில்  விவரம் தெரிவித்தவர் ஜெனிஃபரிடம் ,

“மவளே ஜெனி இதன்னதின்டே பார்யயோடே இரட்டை சகோதரியானு நீ . … ஞான் நல்லது போலே அன்யோசிச்சு , நீ இவரோடொப்பம் போய் கொள்ளு …. ஒன்னும்  பேடிகன்டா.நின்னக்கு  நல்லதே வரு”

கேட்ட ரமேஷும் சக்தியும் அதிர்ந்து போய் அரவிந்தைப் பார்க்க , அவனோ  விழிகளில் பயத்தை தேக்கி தன்னை யாரோ எவரோ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்த  ஜெனிஃபராக அடையாளம் காட்டப்பட்டவளேயேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மலையாளத்தில் அவர் சொன்னாலும் புரிந்து கொள்ள கூடியதாக இருந்ததால் தான் அவர்கள் திகைத்தது. அதாவது இவரின் மனைவியின் இரட்டைச் சகோதரி தான் நீ … நான் நன்கு விசாரித்து விட்டேன். நீ அவங்களோட போகலாம் … பயப்படாதே ” என்பதே ….

அமுதா அவள் கையைப் பிடித்து ” ஜெனி ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள். இன்னும் பயம் அகலாது மதரிடம், “அப்ப அவங்க அவங்க வொய்ஃப் எங்க … “எனக் கேட்க ,

“அவ இறந்துட்டா….. என் மனைவி ராதிகா இறந்துட்டா” என்று இறுக்கமாக தொண்டை அடைக்க அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான் அரவிந்த்.

                   காதல் அழகானதே……

Advertisement